Tuesday, February 10, 2015

எது மதச்சார்பின்மை?

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை இனி கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்துக்குச் செல்லக்கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலர் எச்சரித்துள்ள நிலையில் அதற்குக் கூறப்படும் காரணங்களில் ஒன்று. எல்லோருக்கும் பொதுவான ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதே. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. உமா சங்கர் இதைச் செய்யக்கூடாது என்றால் இந்து மதத்தை மட்டும் மிக வெளிப்படையாக தூக்கிப் பிடிக்கும் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் செயல்படுவது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அரசு ஊழியர் தொடங்கி மாநிலத்தின் உச்ச பதவியில் இருப்போர் வரை இந்துக் கடவுளர்களின் படங்களை அலுவலகத்தில் வைத்திருப்பது எந்த வகையில் சரி என்பது பலரின் வாதம். நம் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு என்கிறது அரசியல் சாசனம். ஆனால் அதன்படிதான் அரசோ, அரசு அதிகாரிகளோ, அரசாங்கத்தின் அமைச்சர்களோ, அரசு ஊழியர்களோ நடந்துகொள்கிறார்களா? அரசு அலுவலகங்களில் புதிதாக எந்த மதத்தின் வழிபாட்டுச் சின்னமும் அமைக்கப்படக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின்  மதுரை கிளையின் உத்தரவை குறிப்பிட்டு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையை தமிழகத்தின் அரசு அலுவலகங்கள் மதித்ததாகத் தெரியவில்லை. மதச்சார்பற்ற அரசு என்பது எந்த மதமும் சாராத அரசு. ஆனால் ஆனால் அதற்கு நேர் எதிராக, இந்து மதம் சார்ந்த பூஜைகள் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் அரசு அலுவலகங்கள் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஆயுதபூஜையோ சரஸ்வதி பூஜையோ நடத்தாத அரசு அலுவலகங்கள் இல்லை.

காவல் நிலையங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 28/05/2005 தேதியிட்ட டிஜிபி அலுவலகத்தின் அறிக்கை இப்படிக் கூறுகிறது: புதிதாக கட்டப்பட்ட காவல்துறை அலுவலகங்கள், காவலர்களின் குடியிருப்புப் பகுதிகளிலும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவை நம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இது தேவையற்ற வேறுபாட்டையோ பதட்டத்தையோ உருவாக்க வாய்ப்புள்ளது. காவல்துறையின் எந்த அலுவலகத்தில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.  நம்முடையது மதச்சார்பற்ற நாடு என்பதை நினைவில் வைத்து நம் கடமைகளை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிறைவேற்றவேண்டும். மேலும் காவலர் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் வழிபாட்டுத் தலத்தை பொதுமக்கள் பயன்படுத்த விரும்பினால் அவர்களை கட்டுப்படுத்த இயலாது. அத்துடன் ஓர் அலுவலகம் என்பது அலுவலகமாக மட்டுமே இருக்கவேண்டும். அதாவது வேலை செய்யும் இடமே வழிபடவேண்டிய ஒன்றுதான்.

ஆனால் இந்த அறிக்கைக்கு மாறாக, தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடப்படுகிறது. (காவல் நிலையங்கள் மட்டுமல்ல அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது) தொடர்ந்து இதை எதிர்த்து பரப்புரை செய்துவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இந்தியா டுடே பேசியபோது “உமாசங்கர் ஐஏஎஸ் மதப் பிரச்சாரம் செய்வதை நாங்கள் ஏற்கவில்லை. அது தவறுதான். ஆனால் அவரை மட்டும் கேள்வி கேட்கும் அரசு தன்னளவில் மதச்சார்பற்றதாக இயங்குகிறதா? அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்கள் பகவத் கீதை சொற்பொழிவுகள் செய்வதெல்லாம் எந்தக் கணக்கில் வரும்? ஏ.ஆர். தவே என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதி ‘கீதையை தேசிய நூலாக்கவேண்டும்’ என்று பேசுகிறார். இவர் எல்லாம் நீதியை ஆராய்ந்து தீர்ப்பு எப்படி கூறுவார்? உச்ச நீதிமன்றம் இரவு 10 மணிக்கு மேல் அமைதிநேரம் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அதில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இதையெல்லாம் ஏன் அரசு கேள்வி கேட்பதில்லை” என்று கேட்கிறார்.

அதிகாலையில் அரசு பேருந்துகளில் ஒலிக்கும் இந்து மத பக்திப் பாடல்கள் ஒலிப்பதையும் இந்து மதக் கடவுளர்களின் படங்கள் பேருந்துக்குள் மாட்டப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். நடத்துனரோ ஓட்டுனரோ இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ இருந்தாலும் தங்கள் மதப் பாடல்களை ஒலிக்கவிடுவதில்லை. ஆனால் இந்து மதம் சார்ந்த அனைத்துமே வெகு சாதாரணமாக நடைமுறைக்கு வந்துவிடுவது எப்படி என்பதே மதச்சார்பற்றவர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் இவை எதுவும் தவறில்லை என்கிறார் பாஜகவின் தேசிய செயலர் எச். ராஜா. “இந்தியாவில் இந்துக்கள் தான் பெரும்பான்மை. ஆகவே இது இந்துநாடுதான். பெரும்பான்மையானோர் செய்வதை அரசும் செய்கிறது. அதை குற்றம் என்று சொல்வது சரியல்ல. பூஜை செய்வது நம் நாட்டின் பண்பாடு. அதை மதம் மாறிய இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கூட பின்பற்றவேண்டும்.” என்று வித்தியாசமாக விளக்கம் தருகிறார்.

அரசின் கடைநிலை ஊழியர்களைவிட அரசை ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்தான் இன்னும் அதிகமாக கேள்விக்குட்படுத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எழுத்தாளர் ரவிக்குமார் மதச்சார்பற்ற தமிழக அரசின் சின்னமாக ஒரு கோவில் கோபுரம் எப்படி இருக்கமுடியும் என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். “உலகளாவிய அளவில் கி.மு, கி.பி என்று வரலாற்றைப் பிரிப்பதே ஒர் மதம் சார்ந்த விஷயமாக இருப்பதாகக் கருதி தற்போது சி.இ (Common Era) என்றும் பிசிஇ (Before Common Era) என்றும் பிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமும் அதுபோல மதச்சார்பற்றவர்களாக ஒவ்வொரு விஷயத்திலும் நடந்துகொள்ளவேண்டியுள்ளது. அனைத்து மதத்தவருக்குமான தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் இருப்பது சரியல்ல.  அதற்கு பதிலாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்’ என்று சொன்ன திருவள்ளுவரை சின்னமாக்குவதுதான் சரியாக இருக்கும். மற்ற எந்த மாநிலத்தின் சின்னமும் இத்தனை வெளிப்படையாக ஒரு மதம் சார்ந்து இல்லை. மேலும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் அரசு மருத்துவமனை வளாகங்களில் கோயில்கள் உள்ளன. இதுபோல பிற மதத்தினரும் வழிபாட்டுத்தலம் வேண்டுமென்று கேட்டால் கட்டித்தருவார்களா என்ன? ” என்கிறார்.

மதச்சார்பற்ற அரசின் ஓர் அங்கமாகிய அமைச்சர்கள் மண்சோறு சாப்பிடுவது தொடங்கி யாகம் வளர்ப்பது, அங்கப் பிரதட்சணம் செய்வது என்று அனைத்தையுமே செய்கின்றனர். இதை தனிப்பட்ட முறையில் செய்தால்கூட பிரச்சனை இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கும், அவர் சிறையிலிருந்தபோது பிணை கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அமைச்சர்கள் இவற்றைச் செய்து அவை பத்திரிகைகளில் செய்தியாகும்படியும் பார்த்துக்கொள்கையில் அது பொதுவான விஷயமாகி விடுகிறது. திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ் கோவில் திருவிழாவில் தீமிதித்தபோது, அப்போதைய முதல்வர் அவரைக் கண்டித்தார். ஆனால் அதிமுக ஆட்சியிலோ இத்தகைய செயலே விசுவாசத்தை அளவிடும் கருவியாகிவிட்டது. வனத்துறை அமைச்சரான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருப்பூரில் உள்ள ராகவேந்திரா கோவிலில்  கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சியும் கலந்துகொண்டார்.  ஈரோடு மேயரான மல்லிகா பரமசிவம் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் ஜெ. விடுதலைக்காக அங்கபிரட்சணம் செய்து தன்  ‘பக்தி’யை நிலைநாட்டினார்.

அண்மையில் கோயம்புத்தூரின் உள்ள விவசாய ஆராய்ச்சி மையம், விவசாயிகளுக்காக மழை முன்னறிவிப்பு நாட்காட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த ஆண்டு, எந்த மாதத்தில் மழை எவ்வளவு பெய்யக்கூடும் என்று அறிவியல்ரீதியாக ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் பக்கம் 66 முதல் 80 வரை பஞ்சாங்கம் மூலம் கணிக்கப்பட்டு, மழை எப்போது பெய்யும் என்கிற தகவலும் வெளியிடப்பட்டுள்ளதாக கொளத்தூர் மணி கூறுகிறார். “அறிவியல்ரீதியான விஷயங்களை மட்டுமே செய்யவேண்டிய அரசு, பஞ்சாங்கத்தை ஏன் நாடவேண்டும்?” என்று கேட்கிறார். சென்ற ஆண்டு மழை பெய்யாமல் இருந்தபோது தமிழக அரசு சில கோயில்களை தேர்ந்தெடுத்து அங்கு மழைக்காக யாகம் நடத்த உத்தரவிட்டது. அதில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Seientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படை கடமை என்று இருக்கும்போது,அதை செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ?” என்கிறது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அறிக்கை. 

2011 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றதால் வேண்டுதலை நிறைவேற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கே சரிதா தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் திருக்கோயிலில் தனது நாக்கை வெட்டி காணிக்கை செலுத்தியதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு வேலையை அளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மதம் சார்ந்த நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது மற்றும் கட்சி சார்ந்து செய்த செயலுக்கு அரசு வேலை தருவது என்று இரு தவறுகளை ஒரே நேரத்தில் செய்தார் ஜெயலலிதா. 

மத்தியில் ஆளும் பாஜகவோ மிக வெளிப்படையாக இந்துத்துவத்தை திட்டமாகக் கொண்டு செயல்படுகிறது. தன்னை திராவிடக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அதிமுகவின் ஆட்சியில் நிர்வாகத்தின் செயல்பாட்டில், மதச்சார்பின்மையை பூதக்கண்ணாடி வைத்து தேடவேண்டி உள்ளது  “முன்பெல்லாம் அரசு புதிய கட்டடத்துக்கு அஸ்திவாரம் போட்டால் ‘அடிக்கல் நாட்டப்பட்டது’ என்பார்கள். எப்போதெல்லாம் ‘பூமி பூஜை’ என்கிறார்கள். இது எப்படி மதச்சார்பற்ற அரசாக இருக்கமுடியும்?உமாசங்கரை அரசு கேள்வி கேட்பதற்கு முன், அதற்கு முதலில் அது தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளட்டும் ” என்கிறார் கொளத்தூர் மணி.

(நன்றி :இந்தியா டுடே)