Tuesday, August 31, 2010

பணிக்குச் செல்லாத பெண்கள் பிச்சைக்காரர்களா?

ரு சராசரி இந்தியப் பெண் ஒரு நாளில் எவ்வளவு வேலை செய்வாள்? பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண் என வைத்துக்கொள்வோம். காலையில் எழுந்து, பாத்திரம் துலக்கி, காபி போட்டு, சமைத்து, கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி, வீட்டை சுத்தம் செய்து, மீண்டும் மதிய உணவு சமைத்து, துணி துவைத்து, உலர்த்தி, மீண்டும் இரவு உணவு சமைத்து.. அப்பாடா..!  ஒரு நாளின் பெரும்பகுதி உழைத்துக்கொண்டே இருக்கும் இவர்களை மிக எளிதாக “வீட்டில் சும்மாதான் இருக்கா” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரேணு அகர்வால் என்ற 39 வயது பெண், சாலை  விபத்தில் உயிரிழந்தார்.. அவருடைய கணவர் அகர்வால் இரு சக்கர வாகனத்தை  ஓட்டிக்கொண்டிருக்கும்போது பின்னால் அமர்ந்து செல்கையில் விபத்து ஏற்பட்டது. இது குறித்த இழப்பீட்டு வழக்கை விசாரித்த வாகன விபத்து இழப்பீடு நடுவர் மன்றம் மற்றும் அலகாபாத் மேல் நீதிமன்றம் ஆகியவை இரண்டரை லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்தன.

இல்லத்தரசியாக இருந்த ரேணுவின் மாத வருமானம் 1250 ரூபாய் என்று கணக்கிட்டு அவருடைய கணவரின் வருமானத்துடன் ஒப்பீடு செய்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரேணுவின் கணவர் அகர்வால் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை நீதிபதிகள் ஏ.கே.கங்குலி, சிங்வி ஆகியோர் அடங்கிய குழு விசாரித்தது. இந்த வழக்கு விசாரணையின்போது 2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியா முழுவதும் 36 கோடி இல்லத்தரசிகளை பிச்சைக்காரர்கள்,  பாலியல் தொழிலாளிகள் மற்றும் சிறைக் கைதிகள் என பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது நீதிபதிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எல்லோருக்கும் உணவளிப்பது உட்பட அனைத்து வேலையை செய்து கொண்டு தான் செலவழிக்க தொகை வேண்டுமென்றால் கணவனை எதிர்பார்த்திருப்பதால் பிச்சைக்காரர்களென்றும் கணவனின் உடல்தேவையை பூர்த்தி செய்வதால் பாலியல் தொழிலாளிகளென்றும் நாள் முழுதும் வீட்டிலேயே அடைபட்டுக் கிடப்பதால் சிறைக்கைதிகளென்றும் நினைத்துவிட்டார்களோ என்னவோ?

தங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளனர். ”இந்தியா முழுவதும் இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் அனைவரும் குழந்தைகளை பெற்றுத் தருவது, வேலைகளை செய்வது, வீடுகளில் உணவு தயாரிப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள குடும்பப்
பெண்களால் செய்யப்படும் வேலையின் ஆண்டு மதிப்பு ரூ. 30 இலட்சத்து 66 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இல்லத்தரசி ஒருவர் பலியானால் அவருடைய பணியின் மதிப்பைக் கொண்டு இழப்பீட்டுத் தொகையை கணக்கிடுவது சரியாக இருக்காது. எனவே, உயிரழந்த ரேணுவின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 6 இலட்சம் ரூபாயாக அதிகரிக்க உத்தரவிடப்படுகிறது. மேலும் வழக்குச் செலவுக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும்.”

தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பிலாவது தவறு திருத்தப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், விபத்து காப்பீடு மற்றும் சொத்தில் பாகம் பிரித்தல் போன்றவற்றில் இல்லத்தரசிகளுக்கு தேவையான பங்கை உறுதி செய்யும் விதத்தில் பல்வேறு சட்டங்களிலும் பாராளுமன்றம் மூலமாக திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது

கேரளாவில் தேசிய இல்லத்தரசிகள் சங்கம் ஆரம்பித்து அதனை தொழிற்சங்கமாக பதிவு செய்ய அரசை அணுகியபோது வீட்டு வேலை செய்யும் பெண்களை தொழிலாளர்களாக கணக்கிலெடுக்க முடியாது என்றார் பதிவாளர். இச்சங்கத்தில் மாநிலத்தலைவர் சுலோசனா “ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தைகளை பராமரிக்க, வீட்டு வேலைகளை செய்ய என்று 273 நிமிடங்களை அன்றாடம் செலவு செய்கிறாள். பெண்களின் பங்கு என்பது சுற்றுச்சூழல், தண்ணீர் பற்றாக்குறை போன்ற சமூக விஷயங்களோடு தொடர்புடையது. ஆனாலும் நம் பெண்கள் தங்கள் உழைப்பு ஊதியத்திற்குரியது என்கிற உண்மையை அறியாமல் தானிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயமாக வயதான் காலத்தில் ஓய்வூதியம் கூட வழங்கவேண்டும்” என்கிறார்.

ஏற்கனவே வெனிசுலாவிலும், உக்ரைனிலும் இல்லத்தரசிகளுக்கு தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. வெனிசுலா நாட்டில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு கணிசமான தொகையை ஊதியமாக அளிக்கின்றது அந்நாட்டு அரசாங்கம். சென்ற ஆண்டு இரான் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட மோசன் ரெசேல் தான் பதவிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவதாக வாக்குறுதியளித்து பிரச்சாரம் செய்தார். இப்படியெல்லாம் நம் நாட்டில் சம்பளம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கேவலப்படுத்தாமல் இருக்கலாமில்லையா?