Sunday, November 18, 2012

சொந்த ஊர்லயே அகதி ஆவோம்னு நினைக்கலையே...- தர்மபுரி சந்தித்த பேரவலம்

முள்ளிவாய்க்காலைப் போலவே மிகமோசமான தாக்குதல் இது. தர்மபுரி மாவட்டத்தின் ஒதுக்குப்புறமான கிராமத்தில் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்டுள்ளதால், அந்தத் திட்டமிட்ட தாக்குதலே மெள்ளமெள்ள அமுக்கப்படுகிறது. 

தர்மபுரியில் நத்தம், அண்ணா நகர், கொண்டம்​பட்டி கிராமங்களில் நடந்திருக்கும் வன்முறை வெறியாட்டங்களை எழுதுவதற்கு வார்த்தைகள் போதாது. தமிழகத்தில் இதுவரை நடந்த கொடூரச் சம்பவங்களான கீழ்வெண்மணி, வாச்​சாத்தி, கொடியங்குளம் ஆகியவற்றை இது மிஞ்சி விட்டது. ஒரு காதலைக் காரணமாகக் காட்டி, மூன்று ஊர்களை மொத்தமாகக் கொளுத்தி, அந்த மக்க​ளின் 50 ஆண்டு கால வாழ்​வாதாரத்தை முழுமையாக அழித்திருக்கும் கொடுமையை இந்த அரசாங்கம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தலித் இளைஞரான இளவரசனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த திவ்யாவும் செய்துகொண்ட காதல் திருமணம் மட்டும்தான் இந்த தலித் கிராமங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு தீயால் அழிக்கப்​பட்டதற்குக் காரணமா? நிச்சயமாக அது மட்டும் அல்ல. ஏனென்றால், அண்ணா நகரில் தீ வைத்த பிறகு, '30 வருடங்களுக்குப் பிறகு இன்னைக்குத்தான் தீபாவளி கொண்டாடுகிறோம்’ என்று கும்மாளம் போட்டபடி சென்றிருக்கிறது வன்முறைக்கும்பல். அதென்ன 30 வருடங்கள்?


தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கங்களின் மூலமாக பொதுவுடைமைத் தத்துவம் ஆழ வேரூன்றிய பகுதி தர்மபுரி. 1984-ல் தர்மபுரியில் அப்பு, பாலன் ஆகியோரைக் காவல்துறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதன் நினைவுச் சின்னம் இருக்கும் ஊர்தான் இந்த நாய்க்கன்கொட்டாய். அந்த நினைவுச் சின் னத்தின் வலப்புறம் நான்கு கிலோ மீட்டர் சென்றால், கொண்டம்​பட்டி. இடப்புறம் திரும்பினால், கூப்பிடு தூரத்தில் அண்ணா நகர். நாய்க்கன்கொட்டாயின் மறுமுனையில் வலப்புறம் திரும்பினால் இருக்கிறது நத்தம். இந்தக் கிராமம்தான் இளவரசனின் சொந்தக் கிராமம்.

இந்த மூன்று கிராமங்களிலும் ஒரு வீடுகூட, வாழ்​வதற்கு ஏதுவாக இல்லை. அந்த அளவுக்கு வீடுகள் சேதமாக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு ஊரிலும் மாலை 4.30 மணியளவில் தாக்குதல் தொடங்கி இருக்கிறது. வந்தவர்களில் பெண்களும் பள்ளி மாணவர்களும் இருந்தனர் என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி. வந்த பெண்கள், வன்முறையில் ஈடுபடவில்லை என்றாலும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகவும் தலித் பெண்களை ஆபாச அர்ச்சனைகள் செய்ததாகவும், அண்ணா நகரைச் சேர்ந்த பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

''ரவி, சின்னத்தம்பின்னு நத்தம் கிராமத்தில் சிலர் கலப்புத் திருமணம் செய்து இருக்காங்க. அதெல்லாம் அவங்​களுக்குப் பிடிக்கலை. நக்சல்பாரிகளுக்குப் பயந்து எங்ககிட்ட எந்த வம்புதும்பும் இல்லாம இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்​டாங்க' என்கிறார் அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா. இதுதான் 30 ஆண்டு வன்மத்தின் காரணம்.

இந்த வன்மத்துக்கு, மாமல்லபுரத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு, 'மற்ற சாதியைச் சேர்ந்த யாராவது நம் சாதியைச் சேர்ந்தவர்களை காதலித்தால் கையை வெட்ட வேண்டும்’ என்று தூபம் போட்டார். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய காடுவெட்டி குரு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் தொடுத்த வழக்கை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் பணித்ததன் பேரில் அவர் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. தர்மபுரி கிராமங்களைப் பார்வையிட வந்த வழக்கறிஞர் ரஜினிகாந்தை சந்தித் தோம்., ''தாக்கப்பட்ட மூன்று கிராமங்களுக்கும் அருகில் இருக்கும் கிருஷ்ணாபுரம் அரியமங்கலத்தில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நடந்த கூட்டத்தில் மாமல்லபுரத்தில் பேசியது போலவே வன்முறையைத் தூண்டும் வகையில் காதல் திருமணங்களுக்கு எதிராகப் பேசி இருக்கிறார் காடுவெட்டி குரு. அக்டோபரில் இளவரசன் - திவ்யா திருமணம் நடக்கிறது. நவம்பரில் மூன்று கிராமங்கள் கொள்ளை அடித்துக் கொடூரமாகத் தாக்கப்படுகின்றன. இந்த மூன்றையும் ஒரே நேர்க்கோட்டில் நடந்த சம்பவங்களாகவே பார்க்க வேண்டும். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பேச்சு தூண்டுகோலாக அமைந்துள்ளன. எனவே, குருவைக் கைது செய்யவேண்டும்' என்றார் ஆவேசமாக.

மூன்று கிராமங்களிலுமே சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்பட்டு உள்ளன. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சாதி மறுப்புத் திருமணம் செய்து​கொண்ட நேதாஜி என்பவர் இப்போது எங்கிருக்கிறார் என்பது அவரது வீட்டுக்கே தெரியாது. இன்னமும் அவர் வெளியூரில் தலை மறைவாக வசிக்கிறார். அவரது வீடு இருக்கும் கொண்டம்பட்டிக்குச் சென்றபோது சின்னாபின்னமான வீட்டில் அவரது தாய் வேடியம்மாள் கதறி அழுதுகொண்டு இருந்தார். நேதாஜியின் தம்பி ராமச்சந்திரன் நம்மிடம் பேசுகையில் ''இந்த ஊரில் கலப்பு மணம் செய்தவங்க வீடுங்களைத் தேடித்தேடி எரிச்சிருக்காங்க. மத்த வீடுகள்ல பீரோவை உடைச்சு பணம், நகையை கொள்ளை அடிச்சிருக்காங்க. எங்க ஊர்க்காரங்களை சொந்த ஊர்லயே அகதிங்க மாதிரி கவர்ன்மென்ட் தர்ற சோத்துக்கு வரிசையில் தட்டு ஏந்த வெச்சுட்டாங்க. ஈழத்து அகதிகளைப் பார்த்து கண்ணீர் விட்டிருக்கோம். ஆனால், நாங்களே இப்படி அகதி ஆவோம்னு நினைக்கலை' என்று கண்ணீர் விட்டார்.

அதிகமாக பாதிக்கப்பட்ட நத்தம் கிராமத்தில் எந்த வீடும் பாக்கி இல்லை. இளவரசனின் வீடு சூறையாடப்பட்டு நொறுக்கப்பட்டது. மிக்ஸி, கிரைண்டர், ஃபிரிட்ஜ், டிவி, பீரோ, வாஷிங் மெஷின், ஃபேன், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் என்று ஒன்றையும் விடாமல் எரித்து இருக்கின்றனர். திவ்யாவின் தந்தை உடலை இளவரசனின் வீட்டு முன் வைத்து, இளவரசனின் வீட்டை அடித்து நொறுக்கியதுதான் முதல் தாக்குதல். அதன்பிறகு, ஒரு கும்பல் நெடுஞ்சாலைக்குச் சென்று உடலை வைத்து சாலை மறியல் செய்து இருக்கிறது. 42 மரங்களை வெட்டி நடுவில் போட்டு போக்குவரத்தைத் தடை செய்த பின், கிராமங்களுக்குள் ஒருவரையும் விடாமல் தங்கள் வேட்டையைத் தொடங்கி இருக்கின்றனர். ஒவ்வொரு கிராமத்துக்கும் 1,000 பேர் வந்ததாக மக்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கும் 50 பேர் வந்திருக்கின்றனர். அவர்களது நோக்கம் மிகத் தெளிவானது. உயிர்ச்சேதம் இல்லாமல், பொருட்சேதம் செய்து தலித் மக்களின் வாழ் வாதாரங்களைச் சிதைத்து இருக்கிறார்கள். பணம், நகை, கேஸ் சிலிண்டர் போன்றவற்றைக் கொள்ளை அடித்து கையோடு கொண்டு வந்திருந்த வண்டியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் பெட்ரோல் குண்டுகளை வீட்டில் எறிந்து இருக்கின்றனர். முதல் வீடு எரியத் தொடங்கியதுமே தலித் மக்கள் உயிருக்குப் பயந்து ஓடி, தப்பித்து இருக்கின்றனர். இரவு 9.30 மணி வரை நீண்ட இந்த கோரத்தாக்குதல்களின்போது கைபேசி மூலம் காவல்துறையையும், தீயணைப்புத் துறையையும் தொடர்புகொண்டு உதவி கேட்டிருக்கின்றனர். ஆனால், காவல் துறை உதவிக்கு வரவில்லை. .

தாக்கியவர்களின் தரப்பு விளக்கத்தை அறிவதற்காக திவ்யாவின் ஊரான செல்லன்கொட்டாய்க்குச் சென்றபோது, பூட்டிய வீடுகளே வரவேற்றன. காவல் துறையினரைத் தவிர வேறு யாரும் அந்த ஊரில் இல்லை.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க், ''இதுவரை 127 பேரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறோம். மற்றவர்​கள் தலைமறைவாக இருக்கிறார்கள். வெகு விரை​வில் அனைவரையும் பிடித்து விடுவோம். நான்கு எஃப்.ஐ.ஆர்-கள் ஊரை எரித்ததற்கும், சாலை மறியல் செய்ததற்கும், மரங்களை வெட்டி பொதுச்சொத்துக்​களுக்கு சேதம் விளைவித்ததற்கு தலா ஒன்றுமாக ஆறு எஃப்.ஐ.ஆர்-கள் போடப்பட்டு உள்ளன' என்கிறார்.

அமைதி திரும்புவது மட்டுமல்ல... நிரந்தரமான நியாயம் வேண்டும்!

- கவின் மலர், படங்கள்: செந்தளிர்

நனறி  : ஜுனியர்  விகடன்