Wednesday, October 29, 2014

ராஜம் கிருஷ்ணன் - சலனமடைந்து அணைந்த தீபம்


அக்டோபர் 19, 2014  அன்று நம்மை விட்டு மறைந்தார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்இறுதிக்காலத்தில் மிகவும் சிரமப்பட்டார் உடலாலும் உள்ளத்தாலும் அவர் அடைந்த இன்னல்கள் பல உண்டு. கணவர் இழந்தவுடன் அவருடைய வீடு உள்ளிட்ட சொத்துகள் அபகரிக்கப்பட்ட நிலையில் அனாதரவாக நின்றவர் விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில்தான் இருந்தார். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் நோயால் பாதிக்கப்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மருத்துவமனை நிர்வாகம்தான் அவருக்கென உணவளித்து அவருக்கென்று ஓர் அறையை ஒதுக்கி செவிலியர்களையும் ஒதுக்கி பார்த்துக்கொண்டது. மருத்துவமனையின் டீன் இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தார். அவ்வபோது அவருடைய எழுத்து நண்பர்களும் வாசகர்களும் அவரை சந்திக்கச் செல்வதுண்டு. யாராவது சந்திக்க வந்தால் அவருடைய முகம் மலர்ந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக பேசவே முடியாமல் போய்விட்ட அவருடைய நிலை சில நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் செய்தியாக வந்தது.

1925ல் பிறந்தவருக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்தது. கணவரின் ஒத்துழைப்பால் நூல்களை வாசிக்கத் தொடங்கி எழுத வந்தார். இடதுசாரிகளுடன் நெருக்கமாக இருந்தவர் ராஜம் கிருஷ்ணன். அவருடையபாதையில் பதிந்த அடிகள்நாவலில் இன்றைய இளம் தலைமுறை இடதுசாரி இளைஞர்களுக்கே தெரியாத மணலூர் மணியம்மா குறித்து எழுதியிருக்கிறார். இன்றைய நாகப்பட்டினம் மாவட்டமான அன்றைய கீழத்தஞ்சை மாவட்டத்தில் நிலச்சுவான்தாரை எதிர்த்ததற்காக மர்மமான முறையில் இறந்துபோன மணலூர் மணியம்மா பற்றிய ஒரேயொரு பதிவு இவருடைய நாவல் மட்டுமே. அதில் ஷாயாஜி போன்ற இடதுசாரி இயக்கப் பெண்கள் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். பெண்களின் பிரச்சனைகள், மீனவர் துயரம் என அவருடைய எழுத்து மக்கள் பிரச்சனைகளைப் பேசியதால் இடதுசாரிகளுக்கு நெருக்கமானார். எத்தனை விருதுகள் பெற்றிருந்தாலும் அவருடைய இறுதிக்காலம் துயரத்தில்தான் கழிந்தது. எந்த நாவலை எழுதவும் களம் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து எழுதுபவர் ராஜம் கிருஷ்ணன். சாகித்ய அகாடமி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்

சில மாதங்களுக்கு முன் ஒரு பொது நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் ராஜம் கிருஷ்ணன். வந்திருந்தார் என்று சொல்வது பொருத்தமாக இருக்காது. அவரை அங்கு கொண்டுவந்து சேர்த்திருந்தது ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம். ராஜம் கிருஷ்ணன் படைப்புகள் குறித்த கூட்டம் அது. வாழும் காலத்தில் ஓர் எழுத்தாளரை கொண்டாடாத இச்சமூகத்தில் அவருடைய இறுதி நாட்களில் அவர் உயிருடன் இருக்கையிலேயே அந்நிகழ்வை நடத்தவிடவேண்டும் என்று அவருடைய எழுத்தை நேசிப்பவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சென்னை அடையாறில் உள்ள டி.என்.ராஜரத்னம் அரங்கத்தில் அந்நிகழ்வு நடந்தது. நிகழ்வில் அவர் தூர்தர்ஷனுக்கு அளித்த நேர்காணல் ஒளிபரப்பானது. அந்த உருவம்தானா இது என்கிற அதிர்ச்சியை அளித்தது அங்கு ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பது போலவே அமர்ந்திருந்த ராஜம் கிருஷ்ணனின் உருவம். இளைத்துக் குறுகி ஒரு குழந்தையைப் போல் இருந்தார். அவர் குறித்து ஒவ்வொருவரும் மேடையில் பேசப் பேச அவருக்குப் புரிகிறது. ஆனால் எதுவும் பேச முடியவில்லை. ஒரு மழலையைப் போல் அவர் தேம்பி அழுத ஒலி அந்நிகழ்வு முழுக்க கேட்டுக்கொண்டே இருந்தது. ராஜம் கிருஷ்ணனின் அந்த துயரம் தோய்ந்த விசும்பும் குரல், அடையாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள அந்த அரங்கத்தைச் சுற்றிய காற்றோடு கலந்துவிட்டிருந்தது.

(நன்றி : இந்தியா டுடே)

Wednesday, October 22, 2014

வலிகளுக்கு அப்பால்

சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பேசஸ் அரங்கில் பார்வையாளர்கள் உறைநிலையில் அமர்ந்திருக்கிறார்கள். பலருடைய விழிகளில் கண்ணீர். சற்று முன் நடந்துமுடிந்த அந்த நாடகத்தின் பாதிப்பை அனைவருடைய முகங்களிலும் காண முடிந்தது. பன்மை வழங்கியகலர் ஆஃப் டிரான்ஸ்நாடகத்தின் முதல் அளிக்கைக்குப் பின்னான காட்சிகள் இவை.

ஸ்மைலி என்கிற லிவிங் ஸ்மைல் வித்யா, ஏஞ்சல் கிளாடி, வினோதினி ஆகியோர் நடித்த இந்த நாடகம் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் வலிகளைப் பேசுகிறது. டிவைசிங் தியேட்டர் என்று அழைக்கப்படும் முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த நாடகம் ஒன்றரை மணி நேரம் நடக்கிறது. “டிவைசிங் தியேட்டர் என்றால், இதில் நடிக்கும் ஒவ்வொருவரும் அவரவருடைய பகுதியை அவரவரே இயக்கவேண்டும். தனியாக இயக்குநர் என்று ஒருவர் கிடையாதுஎன்று விளக்குகிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. இந்த முறையில் நாடகத்தை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கு தோன்றியபோது அவர் லண்டனில் இருந்தார். “லண்டனில் அரங்கக் கலை தொடர்பான படிப்புக்காகச் சென்றிருந்தபோது அங்கு பாலியல் சிறுபான்மையினருக்கான விழாக்கள் பலவற்றுக்குச் சென்றேன். ஆனால் அங்கு திருநங்கைகளும் திருநம்பிகளும் குறித்து விவாதிப்பது குறைவாக இருந்தது. சமபாலின ஈர்ப்புகொண்டோர் குறித்த பிரச்சனைகளே அதிகம் பேசப்பட்டன. ஆகவே இந்தியா திரும்பியதும் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான நாடகம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்தது.” என்கிறார்.

இந்தியா திரும்பியதும் அப்போது தென்கொரியாவுக்குச் சென்று அங்குள்ள நாடகக் குழுவினருடன் இணைந்து நாடகங்களில் நடித்த அனுபவம் பெற்று வந்த ஏஞ்சல் கிளாடி மற்றும் பல நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ள வினோதினி ஆகியோருடன் இணைந்து ஸ்மைலி இந்த நாடகத்தை உருவாக்கியிருக்கிறார். ஸ்மைலி இயக்குநர் மிஷ்கினிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர். ஏஞ்சல் கிளாடி மிஷ்கினின்ஓநாயும் ஆட்டுக்குட்டியும்படத்தில் நடித்தவர். வினோதினிஎங்கேயும் எப்போதும்’, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்தவர். இவர்களுக்கு இருக்கும் திரை அனுபவம் இந்நாடகத்திற்கு பயன்பட்டிருக்கிறது.

என் கதையை நானே நடிப்பதென்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதுஎன்கிறார் ஏஞ்சல் கிளாடி. பொதுவாக கதைகளை அந்த கதாபாத்திரங்கள் சொல்லும். ஆனால் இந்நாடகத்தில் ஸ்மைலியின் கதையை அவருடைய தந்தை சொல்வதாக ஸ்மைலியே அப்பாத்திரமாகவும் ஒரு காட்சியில் மாறுகிறார். அதுபோல கிளாடியின் சகோதரர் சொல்வதுபோல கிளாடியே சகோதரர் பாத்திரமேற்றும் கிளாடியாகவும் மாறி மாறி நடிக்கிறார். நாடகத்தின் தொடக்கத்தில் வரும் ராப் பாடல் ஒன்றை எழுதியவர் வினோதினி. “கூத்துக் கலையில் வந்தனம் பாடுவதுபோல இந்த நவீன நாடகத்தில் பார்வையாளர்களை வரவேற்க பாடலை ராப் பாணியில் எழுதினேன்.” என்கிறார் வினோதினி.



சிவப்பு அந்த நாளுக்கு முன்பு வரை எனக்குப் பிடித்த நிறமாக இருந்ததுஎன்று கிளாடி விவரிக்கும் அந்தக் காட்சி வலி நிறைந்தது. பூனாவில் நேர்ந்ததை விவரிக்கும் காட்சியிலும் அதற்கு முந்தைய பாடலுக்கு ஸ்மைலி காட்டும் முகபாவங்களிலும் நடிப்புத்திறன் அநாயாசமாக வெளிப்படுகிறது. கைத்தட்டல்களை அள்ளும் காட்சி இது. ஒரு தீவிரமான வலி நிறைந்த கதைக்குள் பார்வையாளர்களை தன் இயல்பான நடிப்பின்மூலம் சிரிக்க வைக்கிறார் வினோதினி. ஸ்மைலியும் கிளாடியும் திருநங்கைகளாக நடிக்க, வினோதினி ஏற்ற பாத்திரம் திருநம்பியுடையது. ஒரு சில காட்சிகளுக்கு ஸ்பாட் லைட் இருந்திருந்தால் காட்சிகள் இன்னும் உணர்வுபூர்வமாக இருந்திருக்கும். காணொளிகளை பயன்படுத்தியவிதமும் மேடையில் நடிகர்களின் உற்சாகமான பங்கேற்பும் கூடுதல் வலுசேர்ப்பவை.


தவறான அறுவைசிகிச்சையால் பரிசோதனை எலிகளாக மாற்றப்படுவதை, ஒரு வார்த்தைகூட பேசாமல் ஸ்மைலி மௌனமாகவே தன் துயரத்தை பார்வையாளர்களுக்குக் கடத்தும் காட்சியுடன் நிறைவடைகிறது நாடகம். மேடையில் திரை விழுமுன்னே நமக்கு கண்ணீரே திரையாகி மேடையை மறைக்கிறது.

(நன்றி : இந்தியா டுடே)

Thursday, October 16, 2014

மக்களின் கதைசொல்லி - பா.இரஞ்சித்



சென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவரை, தூரிகை, பிரஷ், சிற்பம் என்றிருந்தவருக்கு, சினிமாவில் கலை இயக்குநராகவேண்டும் என்கிற சிந்தனையுடன் இருந்த அவருக்கு சினிமா என்கிற அற்புத கலை மனதைத் தொட்டது. அப்போது இடப்பட்டது அவர் இயக்குநராவதற்கான முதல் வித்து.
மெட்ராஸ் திரைப்படம் பாராட்டுகளுக்கு இணையான வசூலையும் திரட்டுவதால் பா. ரஞ்சித்தின் அலுவலகம் களைகட்டி உள்ளது. ஒரு சினிமா இயக்குநருக்கான எந்த பகட்டும் இன்றி இருக்கிறது அவருடைய அறை. மேஜை மேல் அம்பேத்கர் படம். அருகில் அவருடைய துணை இயக்குநர்கள். சிரிப்பும், கொண்டாட்டமுமாக அந்த இடம் அதிகாரத்தின் நிழல்கூட படாதபடி இருக்கிறது. “படம் நன்றாகப் போகிறது. பலரும் பாராட்டுகிறார்கள். மிகவும் மதிக்கும் பல இயக்குநர்களுக்கு படம் பிடித்திருக்கிறது” என்கிறார் ரஞ்சித். ரஞ்சித் ‘தகப்பன் சாமி’ படத்தில் சிவ.சண்முகத்திடமும் சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் வெங்கட் பிரபுவிடமும் துணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். “துணை இயக்குநர்களை அடிமைகள் போல் நடத்தும் சினிமாவில் வெங்கட் பிரபு அவ்வளவு நட்புணர்வுடன் பழகுவார். சுதந்திரமாக இருப்பதாக நம்மை உணரவைப்பார். அவருக்கு படிநிலைகளின் நம்பிக்கை கிடையாது” என்கிறார் ரஞ்சித்.
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் அசலான சென்னை மொழி புளித்துப்போன நாடகத்தனமான சென்னை மொழியைக் திரையில் கேட்ட காதுகளில் தேனாய் பாய்கின்றன. சென்னை மொழி என்று இதுவரை மக்களுக்கு அறிமுகமாகியிருந்த லூஸ் மோகன், சோ தொடங்கி கமல்ஹாசன் வரை திரையில் பேசிய கற்பனையான மொழிக்கும் இந்த அசல் மொழிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு தெரிகிறது. “படத்தின் எல்லா வசனத்தையும் என் அம்மா பேசினால் எப்படி பேசுவார்களோ அப்படி யோசித்துத்தான் எழுதினேன்.” என்கிறார் ரஞ்சித்.
திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் 1982ல் பிறந்தவர் ரஞ்சித். “எங்கள் பகுதியை காலனி என்றுதான் சொல்வார்கள். அதை மாற்றவேண்டும் என்பதற்காகவே அஞ்சல் முகவரியில் ‘அம்பேத்கர் நகர்’ என்பதை பயன்படுத்தி பயன்படுத்தி அந்தப் பெயரை மக்களின் புழக்கத்துக்குக் கொண்டுவந்தோம்” என்று ஊர்ப்பெயரின் காரணம் கூறுகிறார் ரஞ்சித். ஐந்தாம் வகுப்பு வரை படித்தது பஞ்சாயத்து யூனியன் பள்ளியில். அதன்பின் பாண்டேஸ்வரம், ஆவடி, வெங்கல், வெள்ளியூர் என்று பல ஊர்களில் பள்ளிப்படிப்பை தொடர்ந்துவிட்டு சென்னை கவின்கலை கல்லூரியில் இணைந்தார். “மாமாவின் பிரஷ்ஷை திருடி நான் பாட்டுக்கு வரைவேன். அப்போதெல்லாம் ஓவியம் வரைவது, கிரிக்கெட் விளையாடுவது இரண்டும்தான் எனக்கு எல்லாமே” என்கிறார். ரஞ்சித் வாழ்ந்த பகுதிகளிலெல்லாம் சுவரெழுத்து கலைஞர்கள் அதிகமாக வாழும் பகுதிகள். அவர்களைப் பார்த்துதான் ஓவியக் கல்லூரியில் சேரும் எண்ணமே தோன்றியதாகக் கூறுகிறார். திரும்புமிடமெல்லாம் அரசியல் தலைவர்களின் படங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் என்று வளர்ந்த ரஞ்சித் போன்ற ஒருவரால்தான் மெட்ராஸ் படத்தில் சுவரையும் ஒரு பாத்திரமாக்க முடியும்.
“ஓவியர் சந்துரு என்னை செதுக்கினார். செந்தில் அண்ணன் என்னை இலக்கியத்தின்பால் இழுத்துச் சென்றார். காலச்சுவடு, உயிர்மை, தலித் முரசு என்று வாசிக்கத் தொடங்கினேன். அரசியல் கருத்துக்களை உள்வாங்கினேன். சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா, ஷோபா சக்தி, எஸ்.ராமகிருஷ்ணன் என்று பலரையும் வாசிக்கத் தொடங்கினேன். யமுனா ராஜேந்திரனின் சினிமா விமர்சனக் கட்டுரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு படத்தை இப்படியும் பார்க்கமுடியுமா என்று வியக்க வைத்தவர்ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களின் கட்டுரைகளை விரும்பி வாசித்திருக்கிறேன். ” என்கிறார் ரஞ்சித். கல்லூரியில் படிக்கும்போதே மூன்றாண்டுகளும் வீதி நாடகங்கள், நவீன நாடகங்கள் என பல நாடகங்களை எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. ஒரு மீனவ கிராமத்திற்கு அவர்களைக் குறித்த நாடகம் போடச் சென்றபோது நான் அதில் நடித்தேன். அப்போது சினிமாவில் நமக்கு கற்பிக்கப்பட்ட மெட்ராஸ் பாஷை பேசிதான் நடித்தேன். ஒரு வயதான மூதாட்டி என்னை அழைத்து ‘நாங்க இப்படித்தான் பேசுவோம்னு தெரியுமா உனக்கு. இது எங்க பாஷை இல்லை” என்றார். அந்தக் கேள்விதான் என்னை அசல் சென்னை மொழியுடன் படம் எடுக்கச் செய்கிறது.” என்று சொல்லும் ரஞ்சித்துக்கு மணமாகி ஒரு குழந்தையும் உண்டு.”என்னை ஊக்கப்படுத்தி என் ஸ்கிரிப்ட் குறித்த நம்பிக்கையை அளிப்பவர் அனிதாதான்” என்று மனைவி குறித்து கூறும் ரஞ்சித் “பெரியார் மீது மிகுந்த மதிப்பு உண்டு. பெண் விடுதலை குறித்து அவரைவிட யார் பேசிவிட முடியும். மெட்ராஸில் பெரியார் குறித்த காட்சி ஒன்று உண்டு. ஆனால் அந்தக் காட்சியையே எடுக்கவேண்டி வந்ததில் வருத்தம்தான்” என்கிறார்.
“அவரிடம் பணியாற்றுவது சுதந்திரமாக ஜாலியாக இருக்கும். எல்லோர் மேலும் அவருக்கு அப்படியொரு அன்பு இருக்கும். படப்பிடிப்பு நடக்கும் இடம் அவ்வளவு நட்புக்குரியதாய் இருக்கும்போது தானாகவே திறமைகள் கொட்டும். அவருக்கு புகழோ பணமோ முக்கியம் இல்லை. சாப்பாடும், தங்க ஒரு இடமும் போதும் என்பதுதான் அவருடைய கொள்கை. கலையும் அரசியலும்தான் முக்கியம். ஆகவே சமூகம் விரும்பும் நல்ல சினிமாவைத் தருகிறார்” என்கிறார் அட்டகத்தி, குக்கூ படங்களின் நாயகன் தினேஷ். ”அட்டகத்திக்கு ஆடிஷன் வைக்கும்போது தினேஷ் கையில் உயிர்மையை பார்த்தபோதே முடிவு செய்துவிட்டேன். அவர்தான் கதாநாயகன் என்று” என்கிறார் ரஞ்சித்.
வடசென்னையின் விளிம்பு நிலை மக்களின் காதல், கண்ணீர், விளையாட்டு என்று காட்சிப்படுத்தும் ரஞ்சித்தின் அட்டகத்தியில்தான் கானாபாலா பிரபலமானார். வயதில் சிறியவரென்றாலும் ரஞ்சித்தை கானாபாலா அண்ணன் என்றே விளிக்கிறார். “அறிவில் அவர் என்னைவிட மூத்தவரில்லையா? அதான்” என்கிறார். “பூவை மூர்த்தியார் இறந்தபோது பாடிய மரண கானாவைத்தான் மெட்ராஸில் பயன்படுத்தினோம். திரையில் வருவேன் என்று கேட்டு நடித்தேன். எங்கள் மகக்ளைக் குறித்த 100 கதைகள் இருக்கிறது ரஞ்சித்திடம். அவர் 2 படம்தான் எடுத்திருக்கிறார். இன்னும் 98 படம் வரும். பாருங்க. அவர் கமர்ஷியல் படம் எடுத்தாலும் அதில் உண்மை இருக்கும்” என்கிறார்.
“மதுரை, கோவை கதைக்களத்தில் எக்கச்சக்கமான படங்கள் வந்துவிட்டன. அவை எல்லாம் ஒட்டுமொத்த தமிழர் அடையாளமாக மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் எங்கள் அடையாளம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான தமிழர்களுக்கான அடையாளமாய் மாற்றவேண்டும். அதிகம் சொல்லப்படாத ஒன்றைச் சொல்லவேண்டுமென நினைத்தேன். என் வாழ்க்கையில், என்னைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்வில் நடப்பவை என்று அதிலிருந்துதான் நான் கதையை உருவாக்குகிறேன். எங்கள் வாழ்க்கையை இதுவரையில் பெரும்பாலும் வறுமையையே எங்கள் பண்பாட்டு அடையாளமாக நிறைய காட்டிவிட்டார்கள். எங்கள் வாழ்வு கொண்டாட்டமானது. கலை மிகுந்தது. ஆட்டம் பாட்டம் நிறைந்தது. அவற்றையெல்லாம் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் கதைக்களமாக சென்னையை ஒட்டிய புறநகரை வைத்துக்கொள்கிறேன். இன்னும் சிறுவயதில் நண்டுபிடித்தது, நத்தை பிடித்தது என்று பிரத்யேகமான சில விஷயங்கள் எல்லாம் சினிமாவுக்குள் வைக்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் வைப்பேன் ” என்கிறார் ரஞ்சித்துக்கு இசை மிகவும் விருப்பமானது. இளையராஜா, பாப் மார்லி, இமேனி என்று இவருடைய விருப்பப் பட்டியல் நீள்கிறது.
மெட்ராஸ் ஒளிப்பதிவாளரான முரளி “நானும் ஒவியக்கல்லூரியில் பயின்றவன் என்பதால் எனக்கும் ரஞ்சித்துக்கும் இடையே ஒரு விஷயத்தை காட்சிரூபமாக எப்படிச் சொல்வது என்பதில் சிக்கலே வந்ததில்லை. இருவருடைய கருத்தியலும் பல விஷயங்களிலும் ஒன்றுபோலவே இருப்பதால் அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதாக இருந்தது. திரைக்கதையை நோக்கி ஓடிவ்ந்து ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரையும் பணியாற்றச் செய்வதில் வல்லவர் ரஞ்சித்” என்கிறார்
கலைஞர்களின் இரு வகை உண்டு. மக்களின் கதையைச் சொல்பவர்கள். ஏதோ ஒரு கதையை மக்களுக்குச் சொல்பவர்கள். இயக்குநர் பா.ரஞ்சித் முதல் வகை.
(நன்றி : இந்தியா டுடே)

Thursday, October 09, 2014

சுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்

ஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. 


கலை-இலக்கியத்திலும் வளர்ச்சியிலும் எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கும் வடசென்னையின் அசலான முகத்தை, அவர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாகச் சொல்கிறது ’மெட்ராஸ்’. அம்மக்களின் வாழ்முறை, காதல், கொண்டாட்டம், நடனம், இசை, விளையாட்டு, கல்வி என்று பலவற்றைப் பேசுகிறது படம். அவர்களை துருப்புச்சீட்டுகளாக பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்டு அரசியல்வாதிகளை நம்பும் அப்பாவி மக்களும் அவர்தம் எழுச்சியும் மிகத் துல்லியமாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஒரு வணிக படத்திற்குள் இத்தனை செய்ய முடியுமா என்று வியக்க வைக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.


வடசென்னை இளைஞனாக வரும் கார்த்தியின் உடல்மொழியும் பேச்சும் நடிப்பும் அபாரம் என்றாலும் பிறருடைய மொழிக்கும் இவருடைய மொழிக்கும் சற்றே வித்தியாசம் தெரிகிறது. கதாநாயகிதான் நமக்கு அந்நியமாகவே தெரிகிறார். காதல் காட்சிகள் கவிதை வாசிக்கும் இதத்தைத் தருகின்றன. நடிகர்கள் தேர்வில் முதிர்ச்சியால் மேரியும் அன்புவும் மாரியும் என்றென்றைக்கும் மறக்க முடியாத பாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள். இவர்களுக்கு இணையாக அந்த பிரம்மாணட சுவரும் ஒரு பாத்திரமாகி இருக்கிறது. அச்சுவரின் மீது காளி ஊற்றும் நீலநிற வர்ணம் பேசும் அரசியல்தான் எவ்வளவு நுட்பமானது!


வடசென்னை குறித்த இத்தனை நுட்பமான செய்திகளை காட்சியாக்கியதில் இப்படத்தை மிஞ்ச வேறு படமில்லை. ’சென்னை வடசென்னை’ பாடலில் கபிலனின் கொடி உயரப் பறக்கிறது. படத்தில் கானாபாலாவின் மரண கானா உண்டு. சந்தோஷ் நாரயணனின் பின்னணி இசை மிரட்டுகிறது. குறுகிய குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கிடையே புகுந்து வரும் கேமிரா படத்தின் தூண்களில் ஒன்று. நுண்ணரசியல் அறிந்தவர்களுக்கு இது ஓர் அரசியல் படம். அறியாதவர்களுக்கு இது ஒரு கார்த்தி படம் என்று ஒரு வணிகப் படத்தினூடாக அரசியலை மிக நுட்பமாக பிரச்சாரம் இல்லாதவாறு சொல்லும் அரிய கலையில் கைதேர்ந்திருக்கிறார் இயக்குநர்.அதற்கு சாட்சிதான் ஹோட்டல் காட்சியில் வரும் புத்தர் சிலை, நாயகியின் தந்தை அம்பேத்கர் நூல் வாசிப்பது, தீபாராதனையை மறுக்கும் நாயகி, ‘படைபலம் முக்கியம்’ என்ற வசனம் போன்றவை.  இறுதியில் குழந்தைகளிடம் நாயகன் பேசும் வசனம் மட்டும் விதிவிலக்கு. அட்டகத்தியிலிருந்து மெட்ராஸ் மூலம் பல மைல்களை கடந்து முன்னே சென்றிருக்கிறார் ரஞ்சித்.

(நன்றி : இந்தியா டுடே)