Saturday, March 28, 2015

பிகே - அன்புசெய்யக் கற்றுத்தந்தவன்





படம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். தடை எல்லாம் விதிக்க முடியாது இதுதான் பிகே திரைப்படத்திற்கு தடைகோரியவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கூறிய பதில்.


பிகேவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்குமென்று எதிர்ப்பார்த்தீர்களா?
ராஜ்குமார் ஹிரானி: நான் எதிர்ப்பார்க்கவில்லை. படம் நல்லிணக்கம் குறித்தது. அதைவிட நாம் அனைவரும் ஒன்றுதான் என்கிறது. ஆகவே இப்படம் மதத்துக்கு எதிரானது என்கிற குற்றச்சாட்டுகள் எங்களை வியப்படையச் செய்தன. உண்மையில் நாங்கள் மதத்துக்கு ஆதரவாளர்கள். அதைத் தவறாக பயன்படுத்துவதை விமர்சிக்கிறோம்.


இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும், திரைக்கதையில் இணைந்து பணியாற்றிய அபிஜித் ஜோஷியும் தங்களை இப்படி அறிவித்துக்கொள்வதில் வியப்பொன்றுமில்லை. உண்மையில் பிகே நாத்திகம் பேசுகிறதா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கமுடியும். ஆனால் நாத்திகர்கள் என்ன பேசுவார்களோ அப்படியே பெரும்பாலும் பேசுகிறது. முன்னாபாய் எம்பிபிபிஎஸ், 3 இடியட்ஸ் போன்ற படங்களின் கதாசிரியர்களான ராஜ்குமார் ஹிரானியும் அபிஜித் ஜோஷியும் இணைந்த மூன்றாவது திரைப்படம் இது. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்திய அளவிலான சாதனையை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது பிகே.


தமிழில் நவீன எழுத்தாளர்கள் பலரும் கடவுளோடும் சாத்தானோடும் சலிக்க சலிக்க உரையாடிவிட்டனர். ஆனால் இப்படத்தின் நாயகன் பிகே கடவுளின் உரையாட முயன்று முயன்று தோற்றுப் போகிறான். கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமான வேறுபாடு இது. கடவுளைத் தேடித் தேடி அலைகிறான். ஆனால் கடவுள் அவன் முன் தோன்றவே இல்லை. கடவுள் எனும் கருத்தாக்கம் குறித்த தத்துவ விசாரணைக்குள் படம் நம்மை எவ்வித எத்தனிப்புமின்றி, சிரமுமின்றி பயணிக்க வைக்கிறது. படத்திற்குத் தேவையான ஒளிப்பதிவு, உருக வைக்கும் பாடல்கள், காட்சியமைப்புகள், கூர்மையான வசனங்கள் என்று பிகே நம்மை அப்படியே கவர்ந்து இழுத்துக்கொள்கிறான்.


இவை எல்லாவற்றையும்விட கலையும் அரசியலும் சரியான கலவையில் இணைந்துள்ள அற்புதம் நமக்குள் மாயம் செய்கிறது. இதை கலைப் படங்களின் வரிசையில் வைக்க முடியாது. வணிக நோக்கில் எடுக்கப்படும் எத்தனையோ படங்கள் இருக்க பிகே வணிகத்தில் வென்றிருப்பது ஒரு முக்கியமான அறிகுறியே. இப்படத்தில் வணிக நோக்கில் காட்சிகளை வைக்க வாய்ப்புகள் இருந்தும் இயக்குநர் மிகக் கவனமாக அப்படி வைக்கவில்லை. ஒரு கதாநாயகி  அவளுக்குரிய தன்மையோடு இயல்போடு இருக்கிறாள். வலிந்து திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள் எதுவும் இல்லை. படத்துடன் தொடர்பில்லாத, படத்தின் கதைக்கு உதவாத ஒரு சிறு காட்சியும் இல்லை. ஒரு காட்சியையும் வெட்டியிருக்க முடியாது. அத்தனை கச்சிதம். கலையின் மகோன்னதமான நிலை இப்படத்தில் நம் கண்ணீரைக் கோருகின்றன. உணர்வுபூர்வமான காட்சியமைப்புகள் அல்ல நம் கண்ணீரைக் கோருபவை. இப்படியொரு வணிகப் பட சட்டகத்துக்குள் நின்று பார்வையாளர்களை சிந்திக்க வைக்க முடியுமா? பகடி செய்ய முடியுமா? இதையல்லவா ஓர் இந்திய சினிமா செய்யவேண்டும்? இப்படியல்லவா கலையும் அரசியலும் இணையவேண்டும் என்கிற இடம் நம் கண்ணீரைக் கோரும் இடம்.


படம் பார்க்க வரும் மிகச் சாதாரண ரசிகர்களையும் உள்ளிழுத்துக்கொள்ளும் கதையில், நாயகனின் பார்வையில் படத்தைப் பார்க்க வைப்பது இயக்குநரின் முதல் வெற்றி. உலகில் மதத்தின் பேராலும் கடவுளின் பெயராலும் நடக்கும் அத்தனை விநோதங்களையும் அக்கிரமங்களையும் கேள்வி கேட்கவேண்டுமெனில் அதுகுறித்து எதுவும் அறியாத வேற்றுகிரக கழுகொன்றின் பார்வை தேவை. அதற்காகவே அமீர்கான் வேற்றுகிரகத்திலிருந்து வருகிறார். அவரை இவ்வுலகுக்கு அப்பாற்பட்டவராகக் காட்ட முனைந்த கற்பனை வெகு புத்திசாலித்தனம். இப்பூலகின் மாந்தர் ஒருவருக்கு எழும்பாத, எழும்பினாலும் கேட்க முடியாத கேள்விகள் அவை. ஒரு மழலையின் குழந்தைமையுடன் அமீர்கான் கடவுளர்கள் குறித்து கேட்கும் கேள்வியில் பதில் சொல்ல இயலாமால் பூமியின் மனிதர்கள் திணறுகிறார்கள். உலகில் கடவுள் இல்லை என்று சொன்ன அறிஞர்களையோ தத்துவங்களையோ வாசித்தவன் இல்லை பிகே. அவன் புத்திசாலி இல்லை. வெகு சாமானியன். கொஞ்சம் அப்பாவி. அப்படியான அப்பாவியின் கேள்விகளாகவே இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தனது புத்திசாலித்தனமான கேள்விகளை சாமர்த்தியமாக வைக்கிறார். பிகேயின் குழந்தைமை அக்கேள்விகளோடு கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் ஒன்றச் செய்கிறது. சிரிக்கச் செய்கிறது. ‘பிகே சரியாகத்தானே கேட்கிறான்? என்று அவனுக்கு கைதட்டச் சொல்கிறது. நாம் பார்த்த ராங் நம்பர்கள் எத்தனை? என்று எண்ணிப்பார்க்கச் சொல்கிறது. எல்லாம் குழந்தைமையின் மகத்துவம். இதையே அறிவுமுலாம் பூசிய அமீர்கான் கேட்டிருந்தால் இப்படம் இத்தனை ரசிக்கப் பட்டிருக்குமா என்பது ஐயம்தான்.


படத்தின் துவக்கத்தில் அமீர்கான் பறக்கும் தட்டில் வந்திறங்கியதும் காணும் முதல் காட்சியிலேயே தன் ரிமோட் கண்ட்ரோலை ஒரு திருடனிடம் பறிகொடுக்கிறான். வேற்றுகிரகவாசிக்கு முதன் தரிசனம் இப்பூவுலகில் திருட்டுதான் என்பதில்தான் எத்தனை விஷயங்களைச் சொல்லிவிடுகிறார் இயக்குநர்! உலகின் மனிதர்கள் அணியும் உடை, பேசும் மொழி, அவர்களின் கற்பிதங்கள் எல்லாம் புரிய பிகேவுக்கு பல நாட்கள் ஆகின்றன. அமீர்கான் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது தேய்வழக்காகிவிட்டாலும் அப்படித்தான் சொல்லவேண்டி இருக்கிறது. தான் இனிமேல் வீடு திரும்பமுடியாது என்கிற முதல் காட்சியின்போது அவர் காட்டும் ஏலியன் முகபாவமும், கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குள் நுழையும் பூமி மனிதர்களின் முகபாவங்களும் எத்தனை விதமான அமீரை நமக்கு அடையாளம் காட்டுகின்றன! ஓடும்போதும் நடக்கும்போதும் கூட கைகளை ஒருமாதிரி நேராக வைத்துக்கொண்டு ஓடுவது, காதுகளை மடக்கிப் பார்த்துக்கொள்வது, தூரத்தே தெரியும் நட்சத்திரக்கூட்டங்களை நோக்கி வீடு திரும்பும் ஏக்கத்துடன் பார்ப்பது என்று அமீர் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார். நடனம் ஆடும்போதும் அந்த ஏலியன் தனத்துடனேயே தன் உடல்மொழியை வைத்துக்கொள்கிறார். ‘யாராவது வீடு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டால் தன்னால் பொறுக்கமுடியாதென்று நாயகியிடம் பணத்தை எடுத்து நீட்டும்போது காண்பிக்கும் முகபாவங்கள் கலங்கச் செய்பவை.


இருபுறமும் கடவுளர் சிலைகள் இருக்க அமீர்கான் அச்சிலைகளிடம் ‘தான் வீடுதிரும்பும் வழியைக்காட்டுமாறு இறைஞ்சும் காட்சியில், அக்கடவுளர்கள் போல கல் மனம் படைத்தவர்களும் உருகிவிடக்கூடும். அந்தக் காட்சியில் ‘அம்பாள் எப்போதடா பேசினாள்? என்று திரையரங்கத்தில் பிகேவை நோக்கிச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. 1952ல் பராசக்தியில் கலைஞர் மு.கருணாநிதி கேட்ட கேள்விதான் பிகே இப்போது கேட்பது. இந்தியில் பிகே வெளிவர இத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கிறது. தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்தான். பகுத்தறிவை சினிமாவில் ஐம்பதுகளிலேயே பரப்பியவர்கள் என்று. ஆனால் அந்தப் பகுத்தறிவுச் சங்கிலி எப்போது அறுபட்டது? இடையில் பகுத்தறிவுக்கு சற்றும் ஒவ்வாத அம்மன் படங்களும், கடவுளர் படங்களும் ஓடி வசூல் சாதனையை நிகழ்த்தியதும் இதே தமிழ்மண்ணில்தான் என்பதில் இருக்கிறது நம் வீழ்ச்சி.


இந்தியாவில் பாஜக என்கிற ஒரு மதவாதக் கட்சி ஆட்சியில் இருக்கையில் பிகே வெளியாகி வசூலில் சாதனை புரிந்திருப்பது மிகவும் முக்கியமானது. இந்த நாட்டு மக்கள் முஸ்லிம்களை கொன்றுகுவித்த மோடிக்கும் தனிப்பெரும்பான்மை தருகிறார்கள். முஸ்லிம்கள் குறித்த கட்டுக் கதைகளை உடைத்தெறியும் பிகேவையும் ரசிக்கிறார்கள். இந்த மனோபாவம்தான் என்ன என்று யாராவது ஆய்வில் இறங்கினால் குழம்பித்தான் போவார்கள். படத்தின் துவக்கத்தில் பெல்ஜியம் காட்சிகளில் நாயகி தன் காதலன் பாகிஸ்தான் இஸ்லாமியன் என்று தெரிந்ததும் அதை ஏற்க முடியாமல், அதுவரை முகத்தில் இருந்த சிரிப்பு மறையும். அக்காட்சியில் தொடங்கி, தில்லியிலிருந்து சாமியார் ஒருவர் ‘அந்த முசல்மான் உன்னை ஏமாற்றுவான் என்று சொன்னதை நம்பிவிடும் நாயகி என்று தொடரும் காட்சிகள்மூலம் பொதுபுத்தியை கேள்விகேட்கிறது படம். இப்படம் பேசும் நாத்திகம், பகுத்தறிவுவாதம் எல்லாவற்றையும்விட மிக இன்றியமையாததென்று நான் எண்ணுவது, இஸ்லாமியர் குறித்த வழமையான சித்தரிப்புகளையும், கற்பிதங்களையும்தான்.இப்படம் உடைத்தெறிந்திருப்பதைத்தான். பயணம்’, ‘உன்னைப் போல் ஒருவன், ‘ விஸ்வரூபம்என்று இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக இழிவாகக் காட்டும் சினிமாக்களுக்கு மத்தியில் பிகே அவற்றுக்கெல்லாம் பதிலடி தருவதுபோல வந்திருக்கிறது. பொதுபுத்தியில் பல விஷயங்கள சினிமா மூலமும் இன்னபிற ஊடகங்கள் மூலமும் ஏற்றப்படுவது நஞ்சுபோன்ற சித்தரிப்புகள் மூலமாகத்தான். அத்தகைய பிரபல வணிக சினிமா வகைமைக்குள் வந்துவிட்ட பிகே இஸ்லாமியன் வஞ்சிப்பான் என்று நாயகிக்கு கற்பிக்கப்படும் கூற்றுக்கு நேர்மாறாக அவளை நினைத்தபடி இருக்கிறான். அந்த நேரடி ஒளிபரப்புக் காட்சியில் ‘அஸ்ஸலாமு அலைக்கும் என்று அவன் பாகிஸ்தான் தூதரகத்துக்குப் பேசத் தொடங்கும்போது நாயகி அனுஷ்கா ஷர்மாவின் கண்களில் மட்டுமல்ல நம் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் அல்ல என்று கூட்டங்கள் போட்டும், பத்திரிகையாளர் சந்திப்புகள் வைத்தும், கதைகள் எழுதியும், கவிதைகள் எழுதியும் எத்தனையோ பேர் சொல்ல வந்தததை ஒரு காட்சி சொல்லிவிட்டது. சாதியும் மதமுமற்ற வேற்றுகிரகவாசி ஒருவன் வந்துதான் அதையும் நிரூபிக்கிறான். இவ்வுலகில் என்னதான் பகுத்தறிவுபேசினாலும் ஏதாவது ஒரு சாதி அல்லது மதத்தின் முத்திரையின்கீழ் வைத்துத்தான் இவ்வுலகம் பார்க்கும் என்பது கசக்கும் உண்மை. இந்த உண்மையை போகிறபோக்கில் சொல்லிவிடுகிறது படம்.


கடவுள் என்கிற ஒன்று உண்டா இல்லையா என்று தத்துவ விசாரணைக்குள் இறங்கும் இச்சினிமாவில் பூமியில் உள்ள பல்வேறு மதங்களும் அவை நிறுவனமயப்பட்டிருப்பதையும் புரிந்துகொள்ள ஒரு வேற்றுகிரகாவாசி முயல்வதும், அம்முயற்சியில் அவனுக்கு எழும்பும் நியாயமான கேள்விகளும், அவற்றை எதிர்கொள்ள் முடியாத மதவாதிகள் அவனை விரட்டுவதுமாக முற்பாதி செல்கிறது. கடவுளர் சிலையை விற்கும் கடைக்காரரிடம் ‘நீதான் கடவுளை உருவாக்கினாயா? அல்லது கடவுள் உன்னை உருவாக்கினாரா? என்று கேட்பதும், ‘கடவுளுக்கு நேரடியாகவே கேட்கும் என்றால் இந்தச் சிலை எதற்கு? என்று கேட்பதுமான காட்சியில் ‘கடவுளுக்கு பேட்டரி தீர்ந்துவிட்டது என்று கேட்கும் காட்சியிலும்தான் எத்தனை பகடியை பொதிந்து வைத்திருக்கிறார் இயக்குநர்! எந்தக் கடவுளை எப்படி வழிபடவேண்டும் என்று அறியாமல் சூடம் பத்தியுடன் தேவாலயத்துக்குச் செல்வதும், வைனுடன் மசூதிக்குள் செல்வதும், வெள்ளுடை அணிந்த இந்துப்பெண்ணை விதவை என்று அறிமுகம் செய்துவைக்க, வெள்ளுடை அணிந்த கிறிஸ்தவ மணப்பெண்ணை விதவை என்று நினைத்துக்கொண்டுபேசுவது, குழம்பிப்போய் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் உடலில் இன்ன் மதம் என்று ஏதாவத் சின்னமிருக்கிறதா என்று பார்ப்பது என ஒரு மனிதகுலத்திற்குள் நிலவும் பல்வேறு அர்த்தமற்ற பழக்கவழக்கங்களையெல்லாம் கேலியுடன் வெளிச்சம்போட்டுக் காட்ட பிகேயின் அந்நியத்தன்மை வசதியாக இருக்கிறது.


காந்தி படம் போட்ட காகிதத்தைத் தந்தால் பதிலுக்கு உணவு கிடைக்கும் என்று காந்தி படங்களாக சேமிக்கும் அவனுக்கு பணத்தைத் தந்தவுடன் மட்டும்தான் உணவு கிடைக்கிறது என்கிற உண்மை புரிந்தவுடன் காந்தியின் பிற படங்களை எல்லாம் தரையில் வீசும் காட்சி நுட்பமானது. உடைகள் குறித்த பிரக்ஞையை அவன் அடையும் தருணத்தில் ஓர் உடையை அணிந்தால் மாத்திரம் உணவு அவனைத் தேடி வருகிறது. அது காவல்துறையின் உடை. அதிகாரம் என்றால் என்ன என்பதை அவன் உணரும் தருணம் அது. வேற்றுகிரக வாசிக்கு அதிகாரத்தின் சக்தியை உணர்த்தும் அதே காட்சி நமக்கு பகடியையும் முன்வைக்கிறது. அதுபோலவே ‘அச்சமற்ற சிவனின் நடனம் என்று அறிவிக்கும்போது பயந்துபோய் சிவன் வேடம் போட்டவர் தலைதெறிக்க ஓடுவது, குழந்தைகளுக்கு பால் இல்லாதபோது கடவுளுக்கு ஊற்றுகிறார்கள் என்றும், பணம் உங்களுடையதா என்றால் என்னுடையது என்று வருகிறார்கள். காண்டம் உங்களுடையதா என்றால் என்னுடையது இல்லை என்று ஓடுகிறார்கள் என்று அமீர்கான் கேட்பதும், ‘இன்று நாங்கள் உறவு வைத்துக்கொள்ளப் போகிறோம் என்று ஏன் ஊரைக்கூட்டி திருமணம் என்கிற பெயரில் அறிவிக்கிறார்கள்? என்று கேட்பதுமாக அடுக்கடுக்கான கேள்விகளை பார்வையாளர்களை நோக்கி பகடியாக வீசியபடியே இருக்கிறான் பிகே.


ஆனாலும் பிற்பாதியில் திரைக்கதை கொஞ்சமாக தொய்வடைவதைக் குறிப்பிடத்தான் வேண்டும். குறிப்பாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த காட்சிகள். இந்த தொய்வை ஈடுகட்டுவது நேரடி ஒளிபரப்பில் பிகே சாமியாரை மடக்கி ‘முஸ்லிம்கள் அனைவரும் ஏமாற்றுபவர்கள்என்கிற அவரது கருத்தை உடைக்கும் காட்சிதான். அக்காட்சியில் வெறித்த பார்வையுடன் எதுவும் பேசாமால் அமர்ந்திருக்கும் அமீர்கான், இறுதியில் பேசுகையில் கேட்கிறார். “இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில், ஏதோ ஒரு கிரகமான பூமியில் உள்ள ஏதோ ஒரு ஊரில் உள்ள, ஒரு சிறிய தெருவில் உள்ள ஓர் இருப்பிடத்தில் அமர்ந்துகொண்டு நீதான் கடவுளைக் காப்பாற்றப் போகிறாயா? இப்பிரபஞ்சத்தையே படைத்த கடவுள் ஒருவர் உண்டு. நீங்கள் சொல்வதுபோல  பல கடவுள்கள் இல்லைஎன்கிறார். இத்தனை நேரம் இப்படம் பேசிய கருத்துக்கள் இந்தப் புள்ளியில் வந்து முடிவடைகின்றன. ஒரே ஒரு கடவுள் இருக்கிறார். அவர் இந்த இயற்கையை படைத்தவர். அவர் ஒருவர்தான். அவரை வழிபடுங்கள். கடவுளுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை. அவர்களை எல்லாம் வழிபடாதீர்கள்என்கிறார். ‘கடவுள் இல்லை; இல்லவே இல்லைஎன்று கூறிவந்த திராவிட முன்னேற்றக் கழகம் திடீரென்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று கூறத் தொடங்கியது போன்றது இக்காட்சி. கடவுள் என்கிற ஒருவரை மனிதனே படைத்தான் என்பதே பகுத்தறிவு. ஆனால் வேற்றுகிரகத்திலிருந்து வரும் ஒருவனும் கடவுள் என்கிற ஒருவர் உண்டு என்கிறான். ஆக அவருடைய கிரகத்திலும் கடவுள் என்கிற கருத்தாக்கம் இருக்கிறது என்று கொள்ளலாம்; மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ அங்கெல்லாம் கடவுளும் உருவாகிவிடுவார்தான் போலும் என்றும் ஒரு முடிவுக்கு நம்மால் வரமுடியாது. ஏனெனில் கடவுள் என்கிற ஒன்றை பிகே பூமிக்கு வந்தபின் தான் கேள்விப்படுகிறான்.


பிகேயிடம் நாயகி ஒரு காட்சியில் கேட்பாள். “உங்கள் கிரகத்தில் ஆடை இல்லாமலா எல்லோரும் இருப்பீர்கள். விநோதமாக இருக்காதா?அதற்கு பிகேயின் அற்புதமான பதில் ஒன்று உண்டு. “இந்தக் காக்கையை, விலங்குகளை எல்லாம் பார். அவை என்ன உடையா உடுத்துகின்றன? அவற்றுக்கு உடை உடுத்தினால் விநோதமாக இருக்காதா? அப்படித்தான் மனிதர்கள் உடுத்தினாலும் எங்களுக்கு விநோதமாக இருக்கும்”. இந்த உடை விஷயத்தையே கடவுளுக்கும் பொருத்தினால்? காக்கை, குருவி எல்லாம் கடவுளை நம்புவதில்லை. ஆனால் மனிதன் மட்டும் நம்புகிறான். எந்த கிரகத்திலும்! நியாயமாக பிகேவும் கடவுள் என்கிற ஒன்றை கேள்விப்படாத ஒருவன் தான்.ஆனால் இந்த உலகில் கால்வைத்த அவன் முதன்முதலில் ‘கடவுள்என்கிற சொல்லையும் அந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விப்படுகிறான். ‘கடவுள்தன் ரிமோட் கண்ட்ரோலை மீட்டுத்தந்து தன் கிரகத்துக்கு அனுப்புவார் என்று நம்பத் தொடங்குகிறான்.


படத்தின் இறுதியில் கண்ணீர் மல்கவைக்கும் காட்சி ஒன்று உண்டு. நாயகியின் மீதான காதலையும் கண்ணீரையும் மறைத்துக்கொண்டு பிகே விண்கலம் திரும்புகிறான். திரும்பும்முன் அவள் கேட்கிறாள். ‘நீ கொண்டுபோகும் கேசட்டுகளில் எல்லாம் என்ன இருக்கிறது?”. அதில் அவளுடைய குரலை மட்டுமே அவன் பதிவு செய்து எடுத்துப் போகிறான். ஆனால் அவன் அவளுக்கு ஒரு பொய்யை பதிலாகத் தருகிறான். “இவ்வுலகின் போக்குவரத்து சத்தங்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் குரல்கள் உள்ளனஎன்று பொய் சொல்கிறான். அவள் நமக்குச் சொல்கிறாள். “இவ்வுலகிற்கு வந்து அவன் பொய் சொல்லக் கற்றுக்கொண்டான். நமக்கு அன்பை கற்றுத்தந்துவிட்டுச் செல்கிறான்”. இக்காட்சியுடன் என்னைப் பொறுத்தவரை படம் முடிந்துவிட்டது. அத்தனை காவியத் தன்மையை அக்காட்சி இப்படத்திற்கு சேர்க்கிறது. அதன்பின் நீளும் காட்சிகள் வணிக சினிமாவுக்கானவை.  அவன் பொய்சொல்ல மற்றும் கற்றுக்கொள்ளவில்லை. கடவுளையும் கற்றுச் சென்றிருக்கிறான்!


(’காட்சிப்பிழை’ இதழில் வெளியானது)

Tuesday, February 10, 2015

எது மதச்சார்பின்மை?

ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை இனி கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்துக்குச் செல்லக்கூடாது என தமிழக அரசின் தலைமைச் செயலர் எச்சரித்துள்ள நிலையில் அதற்குக் கூறப்படும் காரணங்களில் ஒன்று. எல்லோருக்கும் பொதுவான ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதே. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இது குறித்து தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. உமா சங்கர் இதைச் செய்யக்கூடாது என்றால் இந்து மதத்தை மட்டும் மிக வெளிப்படையாக தூக்கிப் பிடிக்கும் நடவடிக்கைகளில் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் செயல்படுவது சரியா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அரசு ஊழியர் தொடங்கி மாநிலத்தின் உச்ச பதவியில் இருப்போர் வரை இந்துக் கடவுளர்களின் படங்களை அலுவலகத்தில் வைத்திருப்பது எந்த வகையில் சரி என்பது பலரின் வாதம். நம் அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு என்கிறது அரசியல் சாசனம். ஆனால் அதன்படிதான் அரசோ, அரசு அதிகாரிகளோ, அரசாங்கத்தின் அமைச்சர்களோ, அரசு ஊழியர்களோ நடந்துகொள்கிறார்களா? அரசு அலுவலகங்களில் புதிதாக எந்த மதத்தின் வழிபாட்டுச் சின்னமும் அமைக்கப்படக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின்  மதுரை கிளையின் உத்தரவை குறிப்பிட்டு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையை தமிழகத்தின் அரசு அலுவலகங்கள் மதித்ததாகத் தெரியவில்லை. மதச்சார்பற்ற அரசு என்பது எந்த மதமும் சாராத அரசு. ஆனால் ஆனால் அதற்கு நேர் எதிராக, இந்து மதம் சார்ந்த பூஜைகள் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படும் அரசு அலுவலகங்கள் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஆயுதபூஜையோ சரஸ்வதி பூஜையோ நடத்தாத அரசு அலுவலகங்கள் இல்லை.

காவல் நிலையங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. 28/05/2005 தேதியிட்ட டிஜிபி அலுவலகத்தின் அறிக்கை இப்படிக் கூறுகிறது: புதிதாக கட்டப்பட்ட காவல்துறை அலுவலகங்கள், காவலர்களின் குடியிருப்புப் பகுதிகளிலும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவை நம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இது தேவையற்ற வேறுபாட்டையோ பதட்டத்தையோ உருவாக்க வாய்ப்புள்ளது. காவல்துறையின் எந்த அலுவலகத்தில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் வழிபாட்டுத்தலங்கள் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.  நம்முடையது மதச்சார்பற்ற நாடு என்பதை நினைவில் வைத்து நம் கடமைகளை அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நிறைவேற்றவேண்டும். மேலும் காவலர் குடியிருப்புப் பகுதியில் இருக்கும் வழிபாட்டுத் தலத்தை பொதுமக்கள் பயன்படுத்த விரும்பினால் அவர்களை கட்டுப்படுத்த இயலாது. அத்துடன் ஓர் அலுவலகம் என்பது அலுவலகமாக மட்டுமே இருக்கவேண்டும். அதாவது வேலை செய்யும் இடமே வழிபடவேண்டிய ஒன்றுதான்.

ஆனால் இந்த அறிக்கைக்கு மாறாக, தமிழ்நாட்டில் பல காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடப்படுகிறது. (காவல் நிலையங்கள் மட்டுமல்ல அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது) தொடர்ந்து இதை எதிர்த்து பரப்புரை செய்துவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் இந்தியா டுடே பேசியபோது “உமாசங்கர் ஐஏஎஸ் மதப் பிரச்சாரம் செய்வதை நாங்கள் ஏற்கவில்லை. அது தவறுதான். ஆனால் அவரை மட்டும் கேள்வி கேட்கும் அரசு தன்னளவில் மதச்சார்பற்றதாக இயங்குகிறதா? அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்கள் பகவத் கீதை சொற்பொழிவுகள் செய்வதெல்லாம் எந்தக் கணக்கில் வரும்? ஏ.ஆர். தவே என்கிற உச்ச நீதிமன்ற நீதிபதி ‘கீதையை தேசிய நூலாக்கவேண்டும்’ என்று பேசுகிறார். இவர் எல்லாம் நீதியை ஆராய்ந்து தீர்ப்பு எப்படி கூறுவார்? உச்ச நீதிமன்றம் இரவு 10 மணிக்கு மேல் அமைதிநேரம் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் கோயில் திருவிழாக்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. அதில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இதையெல்லாம் ஏன் அரசு கேள்வி கேட்பதில்லை” என்று கேட்கிறார்.

அதிகாலையில் அரசு பேருந்துகளில் ஒலிக்கும் இந்து மத பக்திப் பாடல்கள் ஒலிப்பதையும் இந்து மதக் கடவுளர்களின் படங்கள் பேருந்துக்குள் மாட்டப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். நடத்துனரோ ஓட்டுனரோ இஸ்லாமியராகவோ கிறிஸ்தவராகவோ இருந்தாலும் தங்கள் மதப் பாடல்களை ஒலிக்கவிடுவதில்லை. ஆனால் இந்து மதம் சார்ந்த அனைத்துமே வெகு சாதாரணமாக நடைமுறைக்கு வந்துவிடுவது எப்படி என்பதே மதச்சார்பற்றவர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் இவை எதுவும் தவறில்லை என்கிறார் பாஜகவின் தேசிய செயலர் எச். ராஜா. “இந்தியாவில் இந்துக்கள் தான் பெரும்பான்மை. ஆகவே இது இந்துநாடுதான். பெரும்பான்மையானோர் செய்வதை அரசும் செய்கிறது. அதை குற்றம் என்று சொல்வது சரியல்ல. பூஜை செய்வது நம் நாட்டின் பண்பாடு. அதை மதம் மாறிய இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் கூட பின்பற்றவேண்டும்.” என்று வித்தியாசமாக விளக்கம் தருகிறார்.

அரசின் கடைநிலை ஊழியர்களைவிட அரசை ஆளும் மக்கள் பிரதிநிதிகளின் செயல்தான் இன்னும் அதிகமாக கேள்விக்குட்படுத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எழுத்தாளர் ரவிக்குமார் மதச்சார்பற்ற தமிழக அரசின் சின்னமாக ஒரு கோவில் கோபுரம் எப்படி இருக்கமுடியும் என்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். “உலகளாவிய அளவில் கி.மு, கி.பி என்று வரலாற்றைப் பிரிப்பதே ஒர் மதம் சார்ந்த விஷயமாக இருப்பதாகக் கருதி தற்போது சி.இ (Common Era) என்றும் பிசிஇ (Before Common Era) என்றும் பிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். நாமும் அதுபோல மதச்சார்பற்றவர்களாக ஒவ்வொரு விஷயத்திலும் நடந்துகொள்ளவேண்டியுள்ளது. அனைத்து மதத்தவருக்குமான தமிழக அரசின் சின்னமாக கோவில் கோபுரம் இருப்பது சரியல்ல.  அதற்கு பதிலாக ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும்’ என்று சொன்ன திருவள்ளுவரை சின்னமாக்குவதுதான் சரியாக இருக்கும். மற்ற எந்த மாநிலத்தின் சின்னமும் இத்தனை வெளிப்படையாக ஒரு மதம் சார்ந்து இல்லை. மேலும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் அரசு மருத்துவமனை வளாகங்களில் கோயில்கள் உள்ளன. இதுபோல பிற மதத்தினரும் வழிபாட்டுத்தலம் வேண்டுமென்று கேட்டால் கட்டித்தருவார்களா என்ன? ” என்கிறார்.

மதச்சார்பற்ற அரசின் ஓர் அங்கமாகிய அமைச்சர்கள் மண்சோறு சாப்பிடுவது தொடங்கி யாகம் வளர்ப்பது, அங்கப் பிரதட்சணம் செய்வது என்று அனைத்தையுமே செய்கின்றனர். இதை தனிப்பட்ட முறையில் செய்தால்கூட பிரச்சனை இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கும், அவர் சிறையிலிருந்தபோது பிணை கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அமைச்சர்கள் இவற்றைச் செய்து அவை பத்திரிகைகளில் செய்தியாகும்படியும் பார்த்துக்கொள்கையில் அது பொதுவான விஷயமாகி விடுகிறது. திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த அந்தியூர் செல்வராஜ் கோவில் திருவிழாவில் தீமிதித்தபோது, அப்போதைய முதல்வர் அவரைக் கண்டித்தார். ஆனால் அதிமுக ஆட்சியிலோ இத்தகைய செயலே விசுவாசத்தை அளவிடும் கருவியாகிவிட்டது. வனத்துறை அமைச்சரான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் திருப்பூரில் உள்ள ராகவேந்திரா கோவிலில்  கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நரசிம்ம ஹோமம் ஆகியவை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மேயர் அ.விசாலாட்சியும் கலந்துகொண்டார்.  ஈரோடு மேயரான மல்லிகா பரமசிவம் வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் ஜெ. விடுதலைக்காக அங்கபிரட்சணம் செய்து தன்  ‘பக்தி’யை நிலைநாட்டினார்.

அண்மையில் கோயம்புத்தூரின் உள்ள விவசாய ஆராய்ச்சி மையம், விவசாயிகளுக்காக மழை முன்னறிவிப்பு நாட்காட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த ஆண்டு, எந்த மாதத்தில் மழை எவ்வளவு பெய்யக்கூடும் என்று அறிவியல்ரீதியாக ஆராய்ந்து வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் பக்கம் 66 முதல் 80 வரை பஞ்சாங்கம் மூலம் கணிக்கப்பட்டு, மழை எப்போது பெய்யும் என்கிற தகவலும் வெளியிடப்பட்டுள்ளதாக கொளத்தூர் மணி கூறுகிறார். “அறிவியல்ரீதியான விஷயங்களை மட்டுமே செய்யவேண்டிய அரசு, பஞ்சாங்கத்தை ஏன் நாடவேண்டும்?” என்று கேட்கிறார். சென்ற ஆண்டு மழை பெய்யாமல் இருந்தபோது தமிழக அரசு சில கோயில்களை தேர்ந்தெடுத்து அங்கு மழைக்காக யாகம் நடத்த உத்தரவிட்டது. அதில் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். “இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மை (Secular) கொள்கைக்கும் 51A(h) பிரிவில் உள்ள அடிப்படை கடமைகளைப் பரப்புதல் என்ற தலைப்பில், ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மையை (Seientific Temper) கேள்வி கேட்கும் அறிவை மனித நேயத்தை, சீர்திருத்தத்தைப் பரப்புவது அடிப்படை கடமை என்று இருக்கும்போது,அதை செய்யத் தவறுவதைவிட பெருங் குற்றமும் உண்டோ?” என்கிறது திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அறிக்கை. 

2011 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றதால் வேண்டுதலை நிறைவேற்ற ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கே சரிதா தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள கவுரியம்மன் திருக்கோயிலில் தனது நாக்கை வெட்டி காணிக்கை செலுத்தியதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு வேலையை அளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மதம் சார்ந்த நம்பிக்கையை ஊக்கப்படுத்துவது மற்றும் கட்சி சார்ந்து செய்த செயலுக்கு அரசு வேலை தருவது என்று இரு தவறுகளை ஒரே நேரத்தில் செய்தார் ஜெயலலிதா. 

மத்தியில் ஆளும் பாஜகவோ மிக வெளிப்படையாக இந்துத்துவத்தை திட்டமாகக் கொண்டு செயல்படுகிறது. தன்னை திராவிடக் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அதிமுகவின் ஆட்சியில் நிர்வாகத்தின் செயல்பாட்டில், மதச்சார்பின்மையை பூதக்கண்ணாடி வைத்து தேடவேண்டி உள்ளது  “முன்பெல்லாம் அரசு புதிய கட்டடத்துக்கு அஸ்திவாரம் போட்டால் ‘அடிக்கல் நாட்டப்பட்டது’ என்பார்கள். எப்போதெல்லாம் ‘பூமி பூஜை’ என்கிறார்கள். இது எப்படி மதச்சார்பற்ற அரசாக இருக்கமுடியும்?உமாசங்கரை அரசு கேள்வி கேட்பதற்கு முன், அதற்கு முதலில் அது தன்னை தகுதிப்படுத்திக் கொள்ளட்டும் ” என்கிறார் கொளத்தூர் மணி.

(நன்றி :இந்தியா டுடே)











Wednesday, January 28, 2015

சென்னை திரைப்பட விழா

தன்னை கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்து அந்தப் பெண் வீட்டைவிட்டு தப்பிக்க எண்ணுகிறாள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவளுடைய போராட்டங்கள் அத்தனையையும் வீணாக பெற்ற தந்தையாலும் சகோதரனாலும் கொல்லப்படுகிறாள். The Paternal House திரைப்படத்தின் இந்தக் காட்சி ஓடிக்கொண்டிருந்த சென்னை ஐநாக்ஸ் திரையரங்கம் அதிர்ச்சியில் உறைந்தது. படம் முடிந்து வெளியே வந்து உடனே உட்லேண்ட்ஸ் அரங்கத்திற்கு விரைந்தால் அங்கே கண்ணீர் மல்க வைக்கிறது ஒரு படம்.  அப்படியே கேசினோ அரங்கத்திற்குச் சென்றால் அங்கே வயிறு நோக சிரிக்க வைக்கிறது இன்னொரு படம். பின் ரஷ்ய கலாசார மையத் திரையரங்கில் மனம் நெகிழ வைக்கும் ஒரு படம் என வித விதமான உணர்வுகளுக்குள் ரசிகர்களை மூழ்கடித்தது சென்னை சர்வதேச திரைப்படவிழா.
 டிசம்பர் 18 தொடங்கி 25 ந் தேதி வரை கொண்டாட்டமாக நடந்து முடிந்திருக்கிறது திரைப்பட விழா. அரங்கங்கள் இளைஞர்களால் நிரம்பி வழிந்தன. பலருக்கு எந்தப் படத்தைப் பார்ப்பது என்று குழப்பம். ஒரே நேரத்தில் நல்ல படங்கள் வெவ்வேறு திரையரங்களில் திரையிடப்பட்டதால் எதைப் பார்ப்பது என்கிற குழப்பம். ஒரே நேரத்தில் எந்தப் படமும் பிடிக்காமல் வெளியே வந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்த கூட்டத்தையும் காண முடிந்தது. விழாவில் திரை ரசிகர்களும் திரைத்துறையினரும் கலந்துகொண்டு திரைப்படங்கள் பார்த்தனர். அன்றாடம் இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சந்தானபாரதி, ராம் போன்றவர்களைக் காண முடிந்தது. 
55 நாடுகளிலிருந்து 170 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. ஹங்கேரி, இரான், ஃபிரான்ஸ், உலக சினிமா, டச்சு ரொமாண்டிக் படங்கள், சமகால ஜெர்மன் படங்கள், இந்தியன் பனோரமா, ரெட்ரோஸ்பெக்டிவ், தமிழ் திரைப்படங்கள், மாணவர்களின் படங்கள் ஆகிய வகைகளில் படங்கள் திரையிடப்பட்டன.
சென்ற ஆண்டு விழாவில் சிறந்த படமாக தேர்வுசெய்யப்பட்ட தங்கமீன்கள் படத்தின் இயக்குநர் ராம் இந்தியா டுடேயிடம் “இதுபோன்ற விழாக்களில் நான் இந்திய மொழி படங்களையே அதிகம் பார்க்க விரும்புகிறேன். உலக படங்கள் விசிடியில் கிடைக்கிறது. ஆனால் பிற மாநில மொழி படங்களைப் பார்க்க முடிவதில்லை. அக்குறையை இத்தகைய விழாக்கள்தான் போக்குகின்றன. 35 வயதிற்கும் குறைவான இளைஞர்களின் படங்களே இப்போதெல்லாம் அதிகமாக விழாக்களுக்கு வருகின்றன.  அவர்களுடைய சிந்தனையும் நம் சிந்தனையும் எப்படி இருக்கின்றன என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.  உலக நாடுகளின் அரசியல், பொருளாதாரம் பண்பாடு என்று எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள இவ்விழாக்கள் உதவுகின்றன. குறிப்பாக இடதுசாரி நாடுகளாக இருந்தவற்றில் உலகமயம் எப்படி இயங்குகிறது போன்றவற்றையெல்லாம் நாம் படவிழாக்கள் மூலமே தெரிந்துகொள்கிறேன்.” என்கிறார்.
படங்களின் தேர்வு குறித்து வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.  இயக்குநர் பாலாஜி சக்திவேல் “விழாவில் நான் பார்த்தவரை தனிமனித உணர்வுகளை சித்தரிக்கும் படங்களே அதிகம் இடம்பெற்றிருந்தன. அரசியல் படங்கள் மிகவும் குறைவாக இருந்தது. அந்தக் குறையை போக்க வந்த படமாக மராத்திய படமான ஃபன்ரி இருந்தது. அப்படத்திற்காக இந்தியா பெருமைப்பட்டுக்கொள்ளலாம். படவிழாவில் இதுபோன்ற அரசியல் படங்கள் சம அளவில் இருக்கவேண்டும். ஆனால் இருக்கும் ஒன்றிரண்டு படங்களும் கறுப்பர்களை மோசமானவர்களாக சித்தரிக்கும் படங்களாக இருந்தன. சென்ற ஆண்டு அதிக அளவில் பாலியல் சார்ந்த படங்கள் இருந்தன. இந்த முறை அப்படி அல்ல என்பது நல்ல விஷயம். ஏற்பாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டைவிட சென்ற ஆண்டு சிறப்பாக இருந்தது” என்றார். பல ரசிகர்களும் இதை வழிமொழிகிறார்கள். கேசினோ அரங்கத்தில் ஒவ்வொரு முறை செல்லும்போதும் அங்கு பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டி இருந்ததை பலர் சுட்டிக்காட்டினர். 

தொடர்ச்சியாக 12 வது ஆண்டாக நடைபெறும் விழாவுக்கு இந்த முறை வெளியூர்களில் இருந்தெல்லாம் ரசிகர்கள் வந்திருந்தனர். பாண்டிச்சேரியிலிருந்து வந்திருந்த அரவிந்த் கார்த்திக் “படங்களின் தேர்வு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். சில படங்கள் வணிகத் தன்மையுடன் இருந்தன. குறிப்பாக இவ்விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்படிருந்த தமிழ்ப்படங்களில் ஒன்றிரண்டு தவிர மற்ற படங்கள் இதில் திரையிட தகுதி இல்லாதவை. வெவ்வேறு மொழி திரைத்துறையினர் வரும் விழாவுக்கு சிறந்த தமிழ்ப் படங்களை தேர்வுசெய்யவேண்டாமா?” என்று கேட்கிறார். ”குற்றம் கடிதல் படம் விருதுக்குரிய படமாக தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி” என்கிறார் பாலாஜி சக்திவேல். 

இரண்டாம் பரிசு பெற்ற படம் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை. நடுவர் குழுவின் சிறப்புப் பரிசை கதை திரைக்கதை வசனம் இயக்கமும், பூவரசம் பீப்பியும் பெற்றன. மெட்ராஸ், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களை நடுவர் குழு கண்டுகொள்ளவில்லை என்பது வியப்பான விஷயம்தான். ஜிகர்தண்டா திரையிடப்படவே இல்லை. ஆனால் யூத் ஐகான் விருது அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குக் கிடைத்தது. விழாவில் பேசிய அவர் “ஜிகர்தண்டா இவ்விழாவில் நுழையவில்லை என்கிற வருத்தத்தை எனக்குக் கிடைத்த இந்த விருது ஈடு செய்கிறது” என்றார். 

எழுத்தாளரும், திரைத்துறையைச் சேர்ந்தவருமான லஷ்மி சரவணகுமார் “இவ்விருதுகளை தேர்ந்தெடுக்கும் நடுவர் குழுவில் உள்ளவர்கள் தமிழ் திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களாக இருக்கக்கூடாது. உலக படவிழாக்களில் எல்லாம் பிற மொழி கலைஞர்களைத்தான் நடுவர் குழுவில் வைத்திருப்பார்கள். சுகாசினி போன்றவர்கள் துபாய் படவிழாக்களுக்கெல்லாம் நடுவராகச் செல்கிறார்கள். ஆகவே அவர்களுக்குத் தெரியும்தானே பிற இடங்களில் உள்ள நடைமுறை? இங்குமட்டும் ஏன் நம் ஆட்களே விருதை தேர்ந்தெடுக்கவேண்டும்? இது பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது” என்கிறார்.

சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் கோவா திரைப்படவிழாவோ அல்லது கேரள திரைப்பட விழாவோ மிகவும் அபிமான விழாக்களாக உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து பலர் அங்கு செல்கின்றனர். இந்த முறை கேரள விழாவுக்கான அனுமதிச் சீட்டு பெற இணையத்தில் விண்ணப்பிப்பதில் பல கோளாறுகள். அதன் காரணமாக அங்கு செல்லமுடியாத பலரும் சென்னை விழாவை தவறவிடக்கூடாது என்று வந்தனர். ஆனால் அவர்கள் அந்த விழாக்களுக்கும் சென்னை விழாவுக்குமான வேறுபாட்டை சுட்டிக்காட்டுகின்றனர். “படம் முடிந்தவுடன் நடக்கும் கலந்துரையாடல் ஒரு விழாவின் முக்கியமான விஷயம். ஆனால் சென்னை விழாவில் அது நடப்பதே இல்லை.” என்கிறார் லஷ்மி சரவணகுமார். 

பிற படவிழாக்களில் ‘பார்வையாளர்கள் விருது’ என பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு படத்துக்கு விருது வழங்கப்படும். அப்படியொரு விருது இங்கு வழங்கப்படுவதில்லை. இது குறித்து கேட்டபோது இந்தியன் சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனின் தலைவர் தங்கராஜ் “இது நல்ல யோசனைதான். வரும் ஆண்டுகளில் இதை நடைமுறைக்குக் கொண்டு வர முயல்வோம்” என்கிறார். இந்த ஆண்டு ‘அம்மா’ விருது என்கிற பெயரில் இந்த விழாவுக்கு தன்னார்வலர்களாக வந்து பணியாற்றும் சென்னை எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய படங்களில் இருந்து ஒரு படத்திற்கு விருது அளிக்கின்ற்னர். இந்த ஆண்டு மனோஜ் இவ்விருதைப் பெற்றார். சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி, எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்களும் இவ்விழாவுக்காக தங்கள் பங்கை உழைப்பாக அளித்துள்ளனர். 

இவ்விழா சினிமா துறையிலிருக்கும் துணை இயக்குநர்களுக்கு முக்கியமானதாகவே இருக்கிறது. நண்பர்களை சந்திக்கும் ஒரு இடமாக, சினிமா குறித்து கலந்துரையாடும் இடமாக இவ்விழா அரங்க வளாகங்களை அவர்கள் மாற்றிக்கொண்டனர். ஒரு வாரம் வேறு எதைப் பற்றியுமே சிந்திக்காமல் சினிமா குறித்து மட்டுமே யோசிப்பதை இவ்விழா உருவாக்கியிருக்கிறது என்கிறார் லஷ்மி சரவணகுமார்.

இந்திய அரசு நடத்தும் சர்வதேச திரைப்படவிழா 1989-91 வரையிலான திமுக ஆட்சியில் சென்னைக்கு வந்தது. அப்போது 13 ஆண்டுகள் கழித்து சுழற்சியில் சென்னைக்கு வந்தது. இப்போது 24 ஆண்டுகளாக இந்த விழா சென்னையில் நடக்கவே இல்லை. 13 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த திமுகவின் தலைவர் கருணாநிதி அந்த விழாவில் கலந்துகொண்டபின் அவருடைய ஆட்சி மத்திய அரசால் கலைக்கப்பட்டது. அதன்பின் இந்த விழாவை நடத்த ஒருபோதும் கழக அரசுகள் விரும்பவில்லை என்கிற செவிவழி செய்தி ஒன்று உண்டு. இந்நிலையில்தான் திரை ரசிகர்களுக்கு ஒரு விருந்துபோல சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.

”எப்போதையும் விட இந்த ஆண்டு சிறப்பாக நடந்தது விழா. ஹலிதா ஷமீமுக்கு இந்த ஆண்டு பூவரசம் பீப்பி படத்துக்கான சிறப்பு விருது கிடைத்தது. அவர் 2ஆவது விழாவிலிருந்தே பத்தாண்டுகளாக கலந்துகொண்டிருக்கிறார். இத்திரைப்பட விழாதான் எனக்கு பட ஆர்வத்தைத் தூண்டியது. அதனால்தான் இந்தத் துறைக்கே வந்தேன் என்று கூறினார். இப்படி ஒரு சிலரையாவது உருவாக்கி இருக்கிறது இந்த விழா என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி” என்கிறார் தங்கராஜ்.

(நன்றி: இந்தியா டுடே)

Monday, January 19, 2015

இதுவே அர்த்தமுள்ள வாழ்க்கை

சேலத்தின் ஏற்காடு மலையடிவாரத்தில் இருக்கிறது அந்த இல்லம். உள்ளே நுழைந்தால் மனதில் துயரமும் கருணையும் நிரம்பி வழிகிறது. பல்வேறு வயதில் விதவிதமான மனிதர்கள்; இதுவரை பார்த்தறியாத மருத்துவ கருவிகள் என அங்கு நிலவும் சூழல் வித்தியாசமாக உள்ளது. கருவிகளின்மீது அமர்ந்து உடல் பாகங்களுக்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். அவனுடைய தாய் அவனுக்கு அருகில் நின்று கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். சற்று தள்ளி உள் அறையில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தவழ்ந்து சென்று ஒரு புத்தகத்தை எடுக்கிறார். அவரால் நடக்க முடியவில்லை. கால்களை அசைக்க முடியாமல் இன்னொருவர் என அங்கு எவரும் இயல்பாக இல்லை. இவர்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை? அனைவருமே தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

தசைச் சிதைவு நோய் என்றால் என்ன? நமக்கு பழைய செல்கள் இறந்து புது செல்கள் தோன்றுவது இயல்பு. இந்த தசைச் சிதைவு நோயாளிகளுக்கு பழைய செல்கள் அழிந்துபோகும். ஆனால் புது செல்கள் உருவாகாது. இவர்களுக்கு பிறர் உதவியின்றி செயல்பட முடியாது. ஒரு பொருளை வலுவாக பிடிக்கமுடியாது. நழுவி விழுந்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக நோய் தாக்கம் அதிகமானவுடன் நடமாட முடியாது. எழவும் அமரவும் பிறர் உதவி தேவைப்படும். குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் பிறர் உதவி வேண்டும். இந்நோய் தாக்கியவர்கள் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில்தான் இன்றைய மருத்துவம் இருக்கிறது. இதற்கான மருந்துகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை. சாமான்ய மக்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை.

இத்தகைய நோயாளிகளூக்கான இல்லம் ஒன்றைத்தான் இயல் இசை வல்லபியும் வானவன்மாதேவியும் தங்கள் ஆதவ் டிரஸ்ட் மூலம் நடத்துகிறார்கள். இவர்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள். தங்களைப் போலவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்படியான இல்லம் ஒன்று தொடங்கப்படவேண்டும் என்பதற்காக இந்த இல்லத்தைத் 2009 மார்ச் மாதம் துவங்கினர் இச்சகோதரிகள். இவர்களை சந்திப்பதற்காக சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அவர்களுடைய வீட்டிற்குச் சென்றபோது, முகம் நிறைய சிரிப்புடன் வரவேற்றனர் அச்சகோதரிகள். நோயின் தாக்கம் சிறிதும் முகத்தில் தெரியாமல் ஒருபோதும் வாட்டமுறாமல் எப்போதும் சிரிப்புடனும் சந்தோஷத்துடனும் வாழ்க்கையை வாழத் தெரிந்த இச்சகோதரிகளிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளதுதான். ”பத்து வயதில் இந்த நோய் தாக்கியது. பள்ளிக்குச் செல்லும்போது திடீரென்று கீழே விழுந்துவிடுவேன். காரணம் தெரியவில்லை. அப்புறம் மருத்துவரிடம் காட்டியபோதுதான் இப்படியொரு நோய் இருப்பது குறித்து தெரியவந்ததுஎன்கிற இயல் இசை வல்லபியைத் தொடர்கிறார் வானவன் மாதேவி. “அடுத்த கொஞ்ச காலத்திற்குள் இந்நோய் எனக்கும் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அடுத்தவரின் உதவியில்லாமல் இருக்க முடியாது என்கிற நிலையை அடைந்தோம்என்கிறார்.

எழுத்தாளர் ஜெயமோகன் நடத்தும் முகாம்களில் கலந்துகொண்டிருக்கின்றனர். எழுத்தாளர் யூமா வாசுகி தன்னுடையசாத்தானும் சிறுமியும்நூலை இவர்களுக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறார். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களுடன் தொடர்ந்து பயணிக்கிறார். செல்போனில்கூட தொடர்ச்சியாக பேச முடியாத நிலையில் இருந்தாலும் இச்சகோதரிகளின் சமூக அக்கறை பிரமிக்கவைக்கிறது. மூலையில் முடங்கிவிடவில்லை இவர்கள். இவர்களை நன்கறிந்த எஸ்.ராமகிருஷ்ணன் இந்தியா டுடேயிடம்நோய்க்கு சவால்விடும் இவர்களின் மனோதிடம்தான் நான் இவர்களிடம் பிரமிப்பது. சமூக அக்கறைகொண்ட இவர்கள் நடத்தும் மருத்துவ முகாம்களுக்குச் சென்றிருக்கிறேன். நோயாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கி உதவும் அவர்கள் நடத்தும் விழாக்களுக்குச் சென்றிருக்கிறேன். இவர்கள் சமூகத்துடனான நேரடி தொடர்பில் இருப்பதும் அதற்காக உழைப்பதும் அபூர்வமானது. நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் தொடர்பான கூட்டங்களுக்கு வருவது, சுற்றுச்சூழல் தொடர்பான பணிகளில் ஈடுபடுவது என தொடர்ந்து இவர்கள் இயங்குகிறார்கள். என் அனுபவத்தில் இப்படி யாரையுமே சந்தித்ததில்லை. இத்தனை தன்னம்பிக்கையுடன் இருப்பது மட்டுமல்லாமல், இவர்களின் வாசிப்பு அற்புதமானது. புதிய நூல்கள் எல்லாவற்றையும் வாசித்துவிட்டு எழுத்தாளர்களிடம் அழைத்து விமர்சனம் செய்வதை தொடர்ந்து செய்கின்றனர். இந்த மன உறுதி வியக்கவைப்பதுஎன்கிறார்.

அண்மையில் இவர்களைக் குறித்த ஆவணப் படம் ஒன்றை எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன்எனக்கு முதலில் இவர்கள் குறித்து கேள்விப்பட்டபோது ஆவணப்படம் எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் வந்தது. ஆனால் நோயை வெளிச்சம்போட்டுக் காண்பித்து பச்சாதாபம் வரவைத்துவிடக்கூடாதே என்கிற கவலை இருந்தது. அவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்ததும் அந்தக் கவலை பறந்துவிட்டது. சராசரி மனிதர்கள் கூட அத்தனை மகிழ்ச்சியாக ஜாலியாக இருக்கமாட்டார்கள். நமக்கெல்லாம் பல குறைகள் உண்டு. ஆனால் அவர்கள் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து கொண்டாட்டமாக வாழ்கிறார்கள். என் படம் குறித்து எனக்கு நம்பிக்கை வந்தது. ‘நம்பிக்கை மனுஷிகள்என்கிற பெயரில் நான் எடுத்த படம் பலருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்பதே மகிழ்வூட்டுகிறதுஎன்கிறார்.

ஆதவ் அறக்கட்டளை மூலம் நோயாளிகளுக்கு இவர்கள் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை கையாண்டு சிகிச்சை அளிக்கின்றனர். இல்லத்தில் தங்கியும் இருக்கலாம். தினமும் வந்து இல்லத்தில் உள்ள கருவிகளை பயன்படுத்திக்கொள்ளலாம். சேலத்தில் பல இளைஞர்கள் தன்னார்வமாக இவர்களின் அறக்கட்டளைக்கு உதவுகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்துகின்றனர். சேலத்தை அடுத்த அனுபூரில் மருத்துவமனையுடன் கூடிய ஆராய்ச்சி மையம் ஒன்றை தொடங்கவேண்டும் என்பது இவர்களின் கனவு. இதற்காக நிலம் வாங்கிவிட்ட இவர்கள் கட்டடம் கட்டுவதற்கான தொகையைத் திரட்டும் முயற்சியில் உள்ளனர். ”இலக்கியம்தான் எங்களுக்கு வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுத்தந்ததுஎன்கின்றனர் இவர்கள். இசை, ஓவியம் என்று இவர்களின் ஆர்வங்கள் விரிகின்றன. வீட்டில் ஒரு நூலகம் இருக்கிறது. பெரிய புத்தகமாக இருந்தால் அதைக் கையில் வைத்து வாசிக்க சிரமப்படுகிறார்கள்.

இவர்கள் குறித்து கேள்விப்பட்டு ஒரு பெரிய மருத்துவமனை சிகிச்சை அளிக்க முன்வந்தபோதுஎங்களைப் போல இன்னும் பலர் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சிகிச்சை அளித்துவிட்டு இறுதியாக எங்களிடம் வாருங்கள்என்று கூறிவிட்டனர். அதுபோலவே ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனம் இவர்களுடைய மருத்துவச் செலவுகளை ஏற்க முன்வந்தபோதுஉங்கள் நிறுவனம்போன்ற பன்னாட்டு நிறுவனங்களால்தான் இந்தியா போன்ற நாடுகளுக்குக் கேடு. ஆகவே உங்கள் பணம் வேண்டாம்என்று மறுத்துவிட்டனர். ”அந்த நிறுவனத்தின் பெயரைக் கூடச் சொல்லி விளம்பரம் தேடித்தர விரும்பவில்லைஎன்கிறார் வானவன் மாதேவி.

இவர்களின் தாய் கலையரசியும் இளங்கோவனும் இவர்களின் உற்ற துணை. வெளியூர் பயணங்களில் எல்லாம் இவர்களே துணை நிற்கின்றனர். “பெண்ணாக உடல்ரீதியான சில சிரமங்கள் இவர்களுக்கு உண்டு. அப்போதெல்லாம் இவர்கள் சிரமப்படுவதைப் பார்க்க வேதனையாக இருக்கும்என்று சொல்லும்போதே கண்ணீர்விடுகிறார். கனத்த இதயத்துடன் சகோதரிகளை நோக்கித் திரும்பிய மறுநொடியே அவர்களின் மலர்ந்த முகம் மனதை லேசாக்குகிறது.

 “ஆறு மாத காலத்திற்கு இயங்கும் பலத்தை இவர்களின் ஒரு சந்திப்பின்மூலம் பெறுகிறேன்என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். எந்த நோயுமின்றி வாழும் நமக்கே வாழ்வின்மீது எத்தனை புகார்கள்! எபப்டி அலுத்துக்கொள்கிறோம்! ஆனால் தங்கள் துயரங்களை ஒரு புன்னகையில் கடந்துவிடும் இவர்கள் வாழ்க்கையை அத்தனை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு பிறருக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்கள். வாழ்வின் மீது எத்தனை அவநம்பிக்கை கொண்ட மனிதரும் கூட ஒரு முறை இவர்களை சந்தித்தால்,  இவர்களின் உற்சாகம் அவரையும் தொற்ற அவரை புது மனிதராய் மாற்றிவிடும் ரசவாத வித்தை அறிந்த இந்த இளவரசிகளின் வாழ்வும் பணியும் பிறருக்கு ஒரு பாடம். அவர்களிடம் விடைபெற்று வெளிவந்தபோது காணும் மனிதர்கள் அனைவரும் அழகானவர்களாக அன்பானவர்களாகவே தெரிந்தனர். வாழ்வின் பொருள் விளங்கியது.