Tuesday, November 16, 2010

இரவில் கரையும் நிழல்கள்

இப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதும் அவள் நினைவு தவறாமல் வந்து போகிறது. அப்போதுகூட அவள் இப்போதிருக்கும் உருவத்தில் எனக்கு நினைவுக்கு வர மறுக்கிறாள். கருநீல பாவாடை தாவணியுடனும் வெள்ளை ஜாக்கெட்டுடனும் மட்டுமே நினைவுக்கு வருகிறாள். அந்தப் பள்ளிச் சீருடையில் நாங்கள் ஊரை சைக்கிளிலேயே வலம் வந்த நாட்கள் நெஞ்சில் இன்னும் பசுமையாய் நினைவிருக்கின்றன

அவள் வீட்டிலிருந்து என் வீடுவரை வந்து என்னை அழைத்துக்கொண்டு இருவரும் ஒன்றாகத்தான் பள்ளிக்குப் புறப்படுவோம். அவள் கொஞ்சம் சிவப்பாகவும் நான் கருப்பாகவும் இருப்பதால் பையன்கள் எங்களுக்கு பிளாக் அண்ட் வொய்ட் என்று பெயர் வைத்து அழைத்தார்கள். ரெட்டைப்புறா, நீலக்குயில்கள், அதிசயப் பிறவிகள், ஏசியன் புரொடக்ஷன்ஸ் - இப்படி எத்தனையோ பெயர்கள் எங்களுக்கு. இதில் இந்த ’ஏசியன் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட்டப்பெயருக்கு மட்டும் இந்த நொடிவரை எனக்கு காரணம் விளங்கவில்லை. நாங்கள் போகும்போது பின்னால் வரும் பையன்கள் இந்தப் பெயரிட்டு சத்தமாக அழைத்து கலாட்டா செய்வதும் நாங்கள் சாலையில் செல்லும்போதே சிரித்துக்கொண்டு சைக்கிளோட்டிச் செல்வதும் நேற்று நடந்ததுபோலிருக்கிறது.

கயல் எப்போதிருந்து எனக்கு தோழியானாள் என்று யோசித்துப் பார்க்கிறேன். சரியாய் நினைவு வரவில்லை. ஆறாவது படிக்க பள்ளியில் சேர்ந்தபோது இரட்டை சடை மடித்துக்கட்டி ஸ்கர்ட் சட்டையில் கயலைப் பார்த்த நினைவு. ஒன்பதாம் வகுப்பில்தான் நெருங்கிப் பேசி தோழிகளானோம் என்று நினைக்கிறேன். அதன் பின் வேறு யாரையும் நாங்கள் சட்டை செய்யவில்லை. வகுப்பில் நாங்கள் சிரித்து திட்டு வாங்காத நாளே இல்லை என்றானது
எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும்வரை நடந்தது அத்தனையும் என்னிடம் ஒப்பிப்பாள். நானோ தூங்கியபிறகானவற்றையும் அவளிடம் சொல்லுவேன்.

“3 மணிலேர்ந்து 4 மணிவரை படிச்சேண்டி, ஒரு உப்பு பெறாத விஷயத்துக்கு 4 மணிக்கு அம்மா வந்து என்னைத் திட்டினாங்க, 4 டூ 5 அழுதேன். அப்புறம் 5 மணிக்கு அப்பா வந்திட்டாங்க. அவங்ககிட்ட பேசிட்டு திரும்பவும் படிக்க 6 மணிக்கு உட்கார்ந்தேன். 10 மணிவரை சயின்ஸ் படிச்சேன். தூக்கம் சொக்குச்சு. அப்படியே தூங்கிட்டேன்”.

இப்படி அவள் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்பிப்பாள். பள்ளியிலும் வெளியிலும் எங்களைப் பற்றிப் பேசாதவர்களே கிடையாது.
ஒரு பையனால் எனக்கு ரொம்பத் தொல்லை. வகுப்பறையின் டெஸ்கில் வந்து என்னிடத்திற்கு நேரே “ஐ லவ் யூ” என்று எழுதி வைப்பான். யாராவது பார்த்துவிட்டால் என்னாவது என்று நான் பயந்து நடுங்குவேன். எரிச்சலாய் இருக்கும். என்னை எங்காவது சாலையில் பார்த்தால்கூட அவனுடைய நண்பர்கள் அவன் பெயரைச் சொல்லி அவனுடைய ஆள் என்பார்கள். ஒரு குரங்குக் கூட்டம்போல பின்னாலேயே சைக்கிளில் வந்து தொல்லை கொடுப்பார்கள். அதேபோல அவளுக்கும் ஒருத்தன் வாய்த்தான். எங்கள் பின்னால் இரு கூட்டங்கள் வரத் தொடங்கின. முதலில் பயந்த நாங்கள் அதற்குப் பின் அவர்களைப் பற்றி எங்களுக்குள் கிண்டலடித்து சிரிக்கத் தொடங்கினோம். எங்கள் ஊரின் சாலைகளின் பள்ளங்களை எங்கள் சைக்கிள்கள் கடக்கும்போதெல்லாம் எங்கள் சிரிப்பால் அவற்றை நிரப்பினோம்.

எங்கள் சிரிப்பு மிகவும் பிரசித்தி பெற்றதாயிற்று. வீட்டில், வெளியில், சாலையில், டியூஷனில், வகுப்பில், கடைத்தெருவில், சைக்கிள் கடையில் என்று நாங்கள் சிரிக்காத இடமேயில்லை. “போங்கடி! சிரிப்பா சிரிக்கப்போறீங்க” என்று வேறு ஸ்கூல் பையன்கள் சாபம் விடுவார்கள். “அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு” என்று எங்களை கைகாட்டி பையன்கள் பாடுவார்கள். எங்கள் சிரிப்பு எல்லோரையும் உறுத்தியது என்பது மிகத் தாமதமாகத்தான் உணர்ந்துகொண்டோம்.

நாங்கள் சாலையில் ஒருவர் பின் ஒருவராக ஒருபோதும் சென்றதில்லை. இருவரின் சைக்கிள் சக்கரங்களும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்படி போவோம். போகிறவர்கள் வருகிறவர்களெல்லாம் பல நேரங்களில் திட்டிவிட்டுப் போவார்கள். ஆனாலும் அதிலொரு சந்தோஷம். அப்போதுதானே பேச முடியும். வகுப்பறையில் நடந்தது, முருகன் சார் சொன்ன ஜோக், வீட்டில் நடந்தது, வெளியில் நடந்தது என்று எதையாவது பேசி ஓயாமல் சிரித்துக்கொண்டேயிருந்தோம். நாங்கள் எங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டாலும் சாலையைப் பார்த்து சைக்கிள் ஓட்ட வேண்டிய கட்டாயமிருந்ததால் நேரே பார்த்துக்கொண்டே வாய் மட்டும் பேசிக்கொண்டும் ஜோக் அடித்துக்கொண்டும் சிரித்துக்கொண்டுமிருக்கும். அப்போது எதிர்ப்படும் வேறு ஸ்கூல் பையன்களெல்லாம் நாங்கள் ஏதோ அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம் என்று தப்பாக நினைத்துக்கொண்டு பின்னால் வரத் தொடங்கினார்கள். எங்களுக்குக் குழப்பமாக இருக்கும். ”இவன் யாருக்காக வர்றான்” என்று புரியாமல் விழிப்போம் முதலில். அப்புறம் அவன் பார்வை யார் மேல் இருக்கிறதென்பதை வைத்து கண்டுபிடிப்போம். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம். அவளுக்காக எவனாவது வந்தால் அவனைத் திட்டும் வேலையை நானெடுத்துக்கொள்வேன். எனக்காக எவனாவது வந்தால் அவள் திட்டுவாள். ஆனால் மறந்தும் வாயெடுத்து மற்றவர் ஏதும் பேசிவிட மாட்டோம். இதை நாங்கள் சொல்லியெல்லாம் வைத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் எப்படியோ கடைபிடித்தோம்.

ஒருமுறை ஆளா பையனா என்று தெளிவாக சொல்ல முடியாத வயதுடைய ஒருவன் வந்தான். வழக்கமான முதல் குழப்பத்திற்குப் பின் அவன் கயலுக்காக வருகிறான் என்பதை கண்டுபிடித்தோம். வழக்கம்போல நான் திட்டத் தொடங்கினேன். "அறிவேயில்லையா? ஏனிப்படி தொல்லை செய்றீங்க” என்று. "நான் உங்க பிரண்டை லவ் பண்றேன்” என்றான்.

ஒரு வாரம் இப்படியே போனபின் கயல் அவனைத் திட்டத் தொடங்கினாள். நான் மவுனமாகி விட்டேன். அவன் திடீரென்று என்னைப் பார்க்க ஆரம்பித்தான். எனக்காக வருவதுபோல் தெரிந்தது. எது அவனை அப்படி மாற்றியது என்று தெரியவில்லை. இரண்டாவது வாரமே எப்படி ஒருவன் இப்படி மாறுவான் என்று எனக்கு விளங்கவில்லை.

“இவன் என்ன லூஸாடி?” என்றேன்.

“நீ திட்டிய அழகு அவனுக்குப் பிடிச்சிருக்குபோல” என்றாள்.

மறுநாள் ஒரு கடிதத்தை எடுத்து வந்து என்னிடம் நீட்டினான். நான் அதைத் தொடக்கூட இல்லை. நாங்கள் இருவருமே சுயமரியாதை பாதிக்கப்பட்டதுபோல் உணர்ந்தோம். “திருட்டுப்பய! என்கிட்டயே வந்து உன்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு இன்னைக்கு வந்து என்னை லவ் பண்றேன்னு சொன்னா என்ன திமிர்; ஆணவம். ஆம்பிளைங்கிற கொழுப்பு” - நான் அவனைத் திட்டிக்கொண்டேயிருந்தேன் கயலிடம்.
இப்போதும் ஊருக்குப் போகும்போது அவனைப் பார்ப்பேன். தன் மனைவியோடு குழந்தையோடு கடைவீதிகளில் பார்ப்பதுண்டு. ஏனோ அவனைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது இப்போதெல்லாம்.

கயலுடைய அப்பாவும் என்னுடைய அப்பாவும் தமிழாசிரியர்கள் என்பதால் எங்களுக்கு தமிழ்ப் பெயர் வாய்த்தது. “சுடர்மொழி - கயல்விழி” என்று நாங்கள் இரட்டைப் பிறவிகள் போலவேதான் அறியப்பட்டோம். நாங்கள் இருவருமே நன்றாகப் பாடுவோம். அதனால் பள்ளி அசெம்பிளியில் பாடுவோம். அந்த இரண்டொரு நிமிடங்களிலும் கூட்டத்தில் யாரோ ஒரு பையன் அல்லது பெண் முகத்தில் ஏதாவதொரு ஜோக்கைத் தேடி சிரித்து வைப்போம். ஒருமுறை இருவருமே சிரிப்பை அடக்க முடியாமல் பாடமுடியாமல் தவித்து நிறுத்தி விட, கூடப் பாடிய மாணவி ஒற்றை ஆளாய் பாடி முடித்தாள். அன்று ராபர்ட் சாரிடம் திட்டு வாங்கினோம். அப்போதும் சிரித்தோம். சிரிப்புத்தான். எப்போதும் சிரிப்புத்தான்.

எங்கள் படிப்பும், சிரிப்புமாக நாங்கள் விளையாட்டுத்தனமாக இருக்கையிலேயே பிளஸ் டூ பரிட்சை வந்தது. ரிசல்ட் வந்தபோது நான் மட்டும் பாஸாகியிருந்தேன். இடிந்து போனேன். அவளுக்கு கணக்குப் பாடத்தில் போய்விட்டது. அழுதாள். அழுதாள். அழுதுகொண்டேயிருந்தாள். எனக்கு அவள் பெயிலான சோகத்தைவிட அவள் என்னுடன் இனி படிக்க முடியாது என்பதே உறுத்தியது. நான் கல்லூரியில் கணிதம் சேர்ந்தேன். அவள் அக்டோபர் தேர்விற்குப் படிக்கலானாள். தனியாக டியூஷன் சென்று படித்தாள்.

அப்போதுதான் எங்கள் இருவர் வீடுகளிலும் தொலைபேசி வந்த புதிது. தினமும் பார்த்துக்கொள்ள இயலாத சூழலில் மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசுவோம். நான் பேசும் விதத்தை வைத்தே அப்பா “கயலா?” என்பார். போனை கையிலெடுத்ததும் ஆரம்பிக்கும் சிரிப்பு ஒரு மணிநேரத்திற்குக் குறையாது. “என்னதான் பேசுவீங்களோ? இப்படி சிரிக்க” என்று அம்மா அலுத்துக்கொள்வது பெரிதாக அவளுக்கு கேட்கும். “என்னடி சொல்றாங்க?” என்பாள். “நீ பேசு! கண்டுக்காதே!” என்று சொல்லி மீண்டும் தொடங்குவோம். எங்களுக்கு சிரிக்க நிறைய விஷயங்கள் இருந்தன. நான் கல்லூரியில் நடப்பவற்றையெல்லாம் சொல்ல, அவள் டியூஷனில் நடப்பவற்றையெல்லாம் சொல்ல சிரிப்போம்.

அக்டோபர் தேர்வெழுதி பாஸ் செய்தாள் கயல். அடுத்த ஆண்டு எனக்கு ஜூனியராக வந்து எங்கள் கல்லூரியில் சேர்ந்தாள். எனக்கு காலை எட்டரையிலிருந்து ஒன்றரை வரை. அவளுக்கு ஒன்றரையிலிருந்து மாலை ஐந்தரை வரை. அதனால் பார்த்துக்கொள்ளும் நேரம் குறைந்தாலும் தினமும் மாலையில் வீட்டுக்கு வந்து என்னைப் பார்க்காமல் போக மாட்டாள். அப்போதும் நாங்கள் சிரித்தோம். சிரிப்பதற்கு எங்களுக்கு விஷயங்களிருந்தன.

எனக்கு கல்லூரியில் புதிதாக சில தோழிகள் கிடைத்தார்கள். என் தோழிகளெல்லோரும் வெவ்வேறு வகுப்புகளில் இருந்தோம். பாட்டு, பேச்சு, கட்டுரை என்று போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் நிறைய வாங்குவேன். என் பாட்டுக்கு கல்லூரியில் மாணவர்கள் முதல் பிரின்சிபால் வரை ரசிகர்கள். கூட்டம் அடங்காமல் கத்திக்கொண்டிருந்தால் என்னைக் கொண்டுபோய் ஒலிவாங்கி முன்னால் நிறுத்திவிடுவார்கள். நான் பாட ஆரம்பித்தவுடன் அமைதியாகிவிடும் கூட்டம். கல்சுரல்ஸில் நான் பாட, என்னோடு வந்த மற்றவர்கள் நடனம் அது இது என்று பரிசுகளை அள்ளிக்கொண்டு வருவோம். இப்படி கல்சுரல்ஸூக்குப் போய்ப் போயே ஒரு தோழிகள் வட்டம் சேர்ந்தது எனக்கு. நாங்கள் 7 பேர் அதிலுண்டு. 7 ஸ்டார் குரூப் என்று கல்லூரியில் எங்களை செல்லமாய் அழைத்தார்கள். ஓரளவிற்கு எனக்கு அவர்களோடு பழக்கமாகி நட்பாகி விட்டேன். கயல் கொஞ்சம் என்னை அவர்களோடு பார்த்தால் எரிச்சலாவாள். அதுபோலவே அவளுடைய வகுப்பில் உள்ளவர்களோடு அவளைப் பார்த்தால் நான் எரிச்சலாவேன். சின்னச் சின்னதாய் சண்டைகள் எங்களுக்குள் வந்தன. ஆனாலும் நாங்கள் எங்கள் சிரிப்பைத் தொடர்ந்தபடி நட்பு மேலும் இறுகிப்போயிருந்தது. 

இப்படியே இறுதியாண்டு வந்துவிட்டது எனக்கு. கல்லூரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு விடை கொடுக்கும் ஃபேர்வெல்டே வந்தது. அதற்கு பச்சை நிறத்தில் ஒரே போல 7 ஸ்டார் குரூப்பில் புடவை எடுத்துக் கட்டினோம். அதற்கு பிரண்ட்ஸ் ஸாரி என்று பெயர். எங்களை கும்பலாய் பச்சை நிறச் பிரண்ட்ஸ் ஸாரியில் பார்த்த கயல் பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு மறைவிடம் நோக்கி ஓடினாள். நான் விக்கித்துப் போனேன். பின்னாலேயே ஓடி அவளை சமாதானப்படுத்தினேன். 
“இது ஒரு நாளைக்குத்தானே.. எல்லோரும் ஆசைப்பட்டாங்க. அதான்” 
“எதுக்கு எல்லோரும் ஒரே கலர்ல ஸாரி எடுத்துருக்கீங்க?”
“இது பிரண்ட்ஸ் ஸாரி கயல்”
அவ்வளவுதான். பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். நான் விழித்தேன். இந்த அன்பிற்கு நான் என்ன செய்யப் போகிறேன்? 
கல்லூரியை விட்டு வெளியேறும் நாளில் எல்லோரிடத்திலும் ஆட்டோகிராப் வாங்கினேன். அவளிடமும் போய் நீட்ட முறைத்தாள். 
“நானும் போடணுமா?”
“ஆமாம்! போடு” - எனக்குள் ஒரு ஆவல் இருந்தது என்னதான் எழுதுகிறது இந்தப் பிசாசு. பார்ப்போம் என்று. 
நெடுநேரம் எழுதிக்கொடுத்து "வீட்டுக்குப்போய் வாசி” என்றாள்.
வரும் வழியிலேயே வாசித்துக்கொண்டே வந்தேன். “நாம் ஒருவருக்குள் ஒருவர் வாழ்கிறோம். இந்த ஆட்டோகிராப் கூடத் தேவையில்லை” என்று தொடங்கி பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாள். “பிரண்ட்ஸ் ஸாரி” என்கிற வார்த்தை அவளை எப்படி துடிதுடிக்க வைத்தது என்றெழுதியிருந்தாள். வாசிக்கையில் கண்ணில் எனக்கு நீர் முட்டியது.
வீட்டுக்குள் நுழைந்தேன் தொலைபேசி மணி அடிக்க..மறுமுனையில் கயல். “என்ன? படிச்சிட்டியா? நீ எவ கூட வேணும்னாலும் பிரண்ட்ஸ் ஸாரி எடுத்துக்கோ. கட்டிக்கோ. நான்தான் உனக்கு பிரண்ட். தெரியுதா?” என்றாள். நான் சிரித்தேன். சிரித்தோம். சிரித்துக்கொண்டேயிருந்தோம். அப்பா வழக்கம்போல வந்து “கயலா?” என்று கேட்டு விட்டுப் போனார்.

*********************************
சுடரு! சாப்பிடவா! - அழைத்தாள் கயல். 

டைனிங் டேபிளில் அமர்ந்தேன். சூடான இட்லி வைத்தாள். காலடியில் அவள் மகன் வந்து என் காலை சுரண்டினான். “சாப்பிடும்போது இப்படியெல்லாம் டிஸ்டர்ப் பண்ணாதே!  ஓடு! போய் டிவி பாரு போ!” - துரத்தினாள் மகனை. 

இப்போது நான் அவள் வீட்டில்தானிருக்கிறேன்.

“டெல்லியில் இருந்தப்போ நீ நடிச்ச நாடகம் பத்தி உன் பேட்டி ஏதோ ஒரு சேனல்ல பார்த்தேன். பயங்கர மெச்சூரிட்டியா பேசுற. ரொம்ப பெருமையா இருந்துச்சு. அவர்கிட்ட சொல்லிக்கிட்டேயிருந்தேன்” என்றாள்.

வளசரவாக்கத்தில் சொந்த வீடு. கணவர் வெளிநாட்டில் இருந்தார். அவளுக்குத் துணைக்கு அவளுடைய மாமியார் இருந்தார். இடையில் மணமான புதிதில் டெல்லி சென்று விட, அவளோடு பேசாமலிருக்கப் பழகிக்கொண்டேன். அவள் வாரமொரு முறையாவது என்னை அழைத்து பேசுவாள். அதன்பின் அவள் கணவர் திடீரென்று வெளிநாட்டுக்குச் செல்ல நேர்ந்தபோது அவளையும் கூட்டிக்கொண்டு போய்விட அதன்பின் என்றைக்காவது பேசுவது, ஈமெயில், சாட்டிங் என்றானது. நாடு திரும்பி அவளும் குழந்தையும் இங்கிருக்க, அவள் கணவர் மட்டும் வெளிநாட்டிலிருந்தார். நானோ பல வேலைகள் செய்து மாறி மாறி இறுதியில் எனக்குப் பிடித்த ஒரு வேலையில் சேர்ந்து விட்டேன்.

அவ்வப்போது கைபேசியில் அழைப்பாள். எனக்கும் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் அடிக்கடி பேசிக்கொள்ள இயலாமல் போனது. ஆனால் தினமும் அவளை நினைத்துக்கொள்வேன்.  வீட்டு உரிமையாளர் திடீரென்று இரண்டு மடங்காக வாடகை கேட்க உடனே காலி செய்ய வேண்டிய நிலையில் அவளிடம் பேச, “இங்கே வர வேண்டியதுதானே? என்ன யோசனை உனக்கு” என்று கடிந்துகொள்ள பெட்டி படுக்கையோடு அவள் வீட்டுக்குச் வந்துவிட்டேன்.. உடனே ஒரு வீடோ, ஹாஸ்டலோ பார்க்கவேண்டும். பார்க்கும்வரை இங்கிருக்கலாம்.

வீடு தேடும் படலம் ஆரம்பமானது. என் ஏழாயிரம் ரூபாய் சம்பளத்தில் வீட்டுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்தான் ஒதுக்க முடியும். ஒரு லோன் வேறு கட்ட வேண்டி இருந்ததால் விழி பிதுங்கியது எனக்கு. தினமும் வீடு பார்க்கையில் அட்வான்ஸ் ஒத்துவராது அல்லது வாடகை இடிக்கும் அல்லது வீடு பிடிக்காமல் போகும். இப்படியே பதினைந்து நாட்கள் போனது. 

அலுவலகத்தில் வேலை முடிய இரவு பத்துக்கு மேலானது அன்று. அவசரமாக ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். மணி 11. அழைப்பு மணியை அழுத்தினேன். உள்ளே குழந்தை வீறிட்டுக் கத்தும் சப்தம் கேட்டது.

“இன்னைக்கு வேல முடிய நேரமாயிடுச்சு கயல்”

“சரி வா! சாப்பிடு!” - அவள் அன்பை கரைத்து தோசை வார்த்துத் தந்தாள். சாப்பிடும்போது தூக்கக்கலக்கத்துடன் கயலின் அத்தை படுக்கையறையின் வாசலில் நின்று கேட்டார்

”வீடு பாத்தியாம்மா? 

“பார்த்துக்கிட்டுத்தானிருக்கேன். ஒண்ணும் செட்டாகலைம்மா”

"மெட்ராஸில் ரெண்டாயிரம் மூவாயிரத்துக்கு வீடு கிடைக்கிறது கஷ்டமாச்சே. கொஞ்சம் பட்ஜெட்டை கூட்டி வீடு தேடு. அப்பத்தான் சட்னு கிடைக்கும்”

“இல்லம்மா.. இதுக்கு மேலே வச்சா லோன் கட்ட முடியாம போயிடும்”

“அப்படியா? சரி.”

அன்றைக்கு எனக்கு உறக்கம் வரவில்லை. அத்தை என் அப்படி கேட்கவேணும்? நினைவை உதறி மாடியறையில் புரண்டு படுத்தேன். கீழே குழந்தை அழும் சத்தம். சின்னச் சின்ன சத்தத்திற்குக்கூட விழித்துக்கொள்கிறது குழந்தை. இரவெல்லாம் தூங்காமல் கஷ்டப்படுகிறாள் கயல்

மறு நாள் ஒரு கூட்டத்திற்காக மறைமலைநகர் வரை போக வேண்டி இருந்தது. போய்விட்டேன். கூட்டம் முடிய அங்கேயே ஒன்பதேமுக்காலானது. அதற்கு மேல் கிளம்பி வளசரவாக்கம் வந்தால் கண்டிப்பாக 11 மணிக்கும் மேலாகிவிடும். குழந்தை அழும் சத்தம் எனக்கு இப்போதே கேட்பது போலிருந்தது. என்ன செய்யலாம்? மறைமலை நகரில் கூடப் படித்த விஜி இருப்பது நினைவுக்கு வர அவள் கைபேசியை எடுத்து எண்களை அழுத்த, அவள் ”நான் ஊரில் இருக்கேன்” என்றாள். இப்போதென்ன செய்ய? கைகளைப் பிசைந்தேன். நடு ராத்திரியில் போய் தொந்தரவு செய்ய வேண்டுமா? பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. ஒரு சாலையோரக் கடையில் 4 இட்லிகளை தின்றவாறே யோசித்தேன். எப்.எம்.ரேடியோவில் பாட்டு பாடிக்கொண்டிருந்த்து. “உனக்கென இருப்பேன்... உயிரையும் கொடுப்பேன்..” காதல் படப்பாட்டு. பளீரென மின்னல் அடித்தது. திருவண்ணாமலை பேருந்தை கைகாட்டி ஏறினேன். குளிரான அந்த மழை இரவில் பயணம் ஒரு நிராதரவான மனநிலையை எனக்கு அடையாளம் காட்டியது. திருவண்ணாமலைக்கு ஒரு டிக்கெட் எடுத்துவிட்டு ஆயாசமாய் அமர்ந்தேன். பேருந்து முடிவற்றுப் போய்க்கொண்டே இருந்தது. கண்களை மூடி தூங்க முயற்சித்தேன். முடியவில்லை. பையில் இருந்த புத்தகத்தை படிப்பதற்காக எடுத்தேன். பிரித்த அடுத்த இரண்டாவது நிமிடம் விளக்குகள் அணைக்கப்பட்டன. விழித்தபடியே இருளுக்குள் வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தேன். முடிவற்ற அந்தப் பயணம் என்னை பயமுறுத்தியது. எங்கு போகிறேன்? எதற்குப் போகிறேன்? இலக்கில்லாத பாதையில் அந்தப் பேருந்து என்னை இட்டுச் சென்றது.

சுற்றிலும் கவனித்தேன். ஒரு பெண் தன் கணவனின் தோளில் சாய்ந்து தூங்கிக்கொண்டு வந்தாள். அவள் கயல் சாயலில் இருப்பது போலிருந்தது. இடையில் கயல் குண்டாகி இருக்கிறாள். இரண்டு குழந்தைகளானவுடன் நன்றாய்த்தான் பெருத்திருக்கிறாள். எப்படி இவ்வளவு சதை வைத்தது அவளுக்கு? எத்தனை ஒல்லியாய் இருப்பாள் முன்பு! ஒட்டடைக்குச்சி என்று எங்கள் பள்ளித்தோழனொருவன் அவளுக்கு பட்டப்பெயர் வைத்திருந்தது நினைவுக்கு வந்தது.

கயலுக்கு அழகான குரல். பாடினால் நன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு தாலாட்டு கூட சினிமா பாட்டுதான் பாடுகிறாள். தூங்க வைக்க பாடுவது எனக்கு மாடிக்கு சன்னமாய் கேட்கும். ரசித்துக்கொண்டே நானும் தூங்கிப் போவதுண்டு. அப்படி ஒரு நாள் தூங்கிப்போய்விட, திடீரென வந்து எழுப்பினாள். 

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நீ ஏன் இப்படி இருக்கே?”

“எப்படி இருக்கேன்?”

“ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை?”

”ஏன் பண்ணனும்?”

என்னை மவுனமாய்ப் பார்த்தாள். ”சரிதான் நீ சொல்றது. நான்கூட ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னு நினைச்சுருக்கேன்”

“நீ படிச்ச படிப்பென்ன? உன் திறமை என்ன. நீ ஏன் இப்படி வீட்டில் அடைஞ்சு கிடக்கணும்?”

“இருந்தாலும் அப்பா அம்மாவுக்குப் பிறகு யார் உன்னைப் பார்த்துப்பாங்க. அதுக்காவது புருஷன் புள்ளை வேணுமில்லையா?”

"இப்போதைக்கு எனக்கு அது தேவையில்லைன்னு தோணுது. விட்டுடு ப்ளீஸ்!”

அவள் என்னையே பார்த்தாள். கண்கள் கலங்கி கொட்டத் தயாராய் நின்றன. 

“உன்னை நினைச்சா பயமா இருக்கு!” - பொல பொலவென உதிர்ந்தது கண்ணீர்.

“ஒண்ணும் ஆகாது. செத்தா போயிடுவேன்? தனியா வாழ்ந்துடுவேன். பின்னாடி கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணினா பண்ணிக்குவேன். சரியா? போய்த்தூங்கு கயல்”

எனக்காக கண்ணீர் விட்ட ஜீவன் அவள். கயல்! என் பிரியமான சிநேகிதியே!  மனம் குழைந்து அவளுக்காய் பொங்கி விழிகளில் வழிந்தது.

“திருவண்ணாமலை இறங்கு” - நடத்துனரின் குரல் கலைத்தது என்னை. இறங்கிக்கொண்டேன். ஒரு தேநீர் குடித்தால் நன்றாயிருக்குமென்று தோன்றியது. தேநீர்க்கடையில் தேநீர் வாங்கி பருகினேன். “மெட்ராஸ்.. மெட்ராஸ்..” கூவி அழைத்தார் நடத்துனர். ஓடிப்போய் ஏறிக்கொண்டேன். இந்தப் பேருந்தில் மூட்டைப் பூச்சி உயிரை எடுத்தது. உடலெல்லாம் அரிக்க எரிச்சல் மண்டியது. வண்டி என் மனத்தைப் போலவே எதையோ அசை போட்டுக்கொண்டு மெதுவாக பயணித்துக்கொண்டிருந்தது. மீளா இரவா இது? விடியாதா? இத்தனை நீண்ட நெடியதா இரவு? எத்தனையோ நாள் புத்தகம் வாசிக்க விடிய விடிய விழித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீளாத இரவு மலைப்பாம்பைப் போல நீண்டு நெளிந்து என்னை விழுங்கி ஏப்பம் விட்டது. கிண்டி நெருங்கியபோது விடிந்திருந்தது. 
வீட்டு வாசலில் அழைப்பு மணியை அழுத்தினேன். கயல் வந்து கதவைத் திறந்தாள். “என்னாச்சு?” என்றாள். 

“ஆபீஸிலேயே தங்கிட்டேன்”

என்னைப் பார்த்தாள். “ஆபீசிலா? பயமாயில்லையா உனக்கு?” 

“என்ன பயம்? எல்லாரும் மனுசங்கதானே?” - கூறியவாறு மாடிப்படியேறினேன்.

அன்று அலுவலகம் கிளம்புகையில் அத்தை என்னைப் பார்த்த பார்வை ஏனோ தொந்தரவு செய்தது.. 

அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது திடீரென பொறி தட்டியது. நேற்றிரவு கயல் எனக்கு போன் பண்ணவில்லை என்பது உறைத்தது. இரவு முழுதும் வரவில்லை. நான் என்ன ஆனேனென்று அவள் ஏன் என் என்னை அழைத்துக் கேட்கவில்லை? மனது தவித்தது. கேள்விக்கு விடை தெரியாத வரை வேலை செய்ய முடியாது போலிருந்தது. பர்மிஷன் போட்டுவிட்டு மெரினாவிற்குச் சென்றேன். கடல் அலைகள் படாத தூரத்தில் அமர்ந்துகொண்டு கடலை வெறித்துப் பார்த்தேன். திடீரென சுனாமி நினைவு வந்தது. விருட்டென எழுந்தேன். விடுவிடுவென சாலைக்கு வந்து கிடைத்த பேருந்தில் ஏறினேன். ராணிமேரிகல்லூரிக்கு அருகே பேருந்து வந்தபோது செல்வத்தின் அறைக்குச் சென்று அவரைப் பார்த்தாலென்ன என்று தோன்றியது. செல்வம் நல்ல நண்பர். அவருடைய அறைக்கு வந்தேன். தூங்க வேண்டும் போலிருந்தது. படுத்துவிட்டு எழுந்தவுடன் மணி பார்த்தேன். எட்டாகி இருந்தது. சீக்கிரம் போகவேண்டும். கிளம்பினேன். வீட்டிற்குப் போனபோது பத்து மணியாகியிருக்கவில்லை. அப்பாடா என்றிருந்தது. கயல் தூங்கிப் போயிருந்தாள். நானாகச் சென்று சாப்பாடு எடுத்துச் சாப்பிட ஏனோ தயக்கமாக இருந்தது. அத்தை டிவி பார்த்தவாறிருக்க, நான் படியேறி வந்து படுக்கையில் விழுந்தேன்.

எழுகையில் வெயில் சுள்ளென அடித்தது. இரண்டு மணிக்குப் போனால் போதும் அலுவலகத்திற்கு. ஆனாலும் சீக்கிரம் கிளம்பினேன். கயல் சமையலைறையில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். 

”இன்னிக்கு சீக்கிரம் போகணும் கயல். வர்றேன்.”

”சாப்பாடு சுடர்!” 

“பசியில்லை. வேணாம். மொத்தமா சேத்து மதியம் சாப்பிட்டுக்குறேன்”

சாலையில் இறங்கி நடந்தேன். கொலை பசி. ஆனால் எதுவும் சாப்பிடப்பிடிக்கவில்லை. அலுவலகத்தை அடைந்தேன். அலுவலகத்திலேயே தங்கியிருக்கும் மோகன் அப்போதுதான் விழித்து உட்கார்ந்திருக்க.. “என்னங்க அதுக்குள்ள வந்துட்டீங்க. இத்தனை சீக்கிரமா?” - ஆச்சரியப்பட்டான்.

”சும்மாத்தான்..”

கைபேசியில் கயல் குரல் ஒலித்தது.

“சொல்லு”

“அடுத்த வாரம் நாத்தனார் வீட்லேர்ந்து வர்றாங்க”

“ஓ! எப்படி இருக்காங்க அவங்க எல்லாம்?”

“அவங்களுக்கென்ன? நல்லாத்தானிருக்காங்க. அவங்க கொஞ்சம் பழைய ஆளுங்க சுடரு. அதனால தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்பாங்க. நீ ஏன் இங்கே இருக்கேன்னு கேட்பாங்க. ஹாஸ்டலோ வீடோ ஒரு வாரத்துக்குள்ள பாத்துற முடியுமா?”

கையில் காசில்லாமல் எங்கே போவதென்ற இயலாமை ஒரு புறமும் அவளிடமிருந்து நான் எதிர்பார்க்காத வார்த்தைகள் ஒருபுறமும் வந்து தாக்க நெஞ்சு படபடவென அடித்துக்கொண்டது. மயக்கம் வருவது போலிருந்தது.

“பார்த்துடலாம் கயல்”

கைபேசியை அணைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தேன். உடல் பலகீனமாய் உணர்ந்தேன். 

“மோகன் கொஞ்சம் தண்ணி..”

தண்ணிரைக் குடித்துவிட்டு கவிழ்ந்து மேஜையில் படுத்தேன். காகிதங்களை கண்ணீர் நனைக்க மோகன் என்னை விநோதமாய்ப் பார்த்தான்.

“என்னாச்சு? யார் போன்ல?”

“ஒண்ணுமில்லை”

”இல்லை. சொல்லுங்க.” அருகில் வந்து கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டான். 


பற்றிய அவன் கைகள் நனைந்தன. இன்றிரவிலிருந்து கயல் வீட்டுக்குப் போக முடியாது. என்ன செய்யலாம்? செல்வத்திடம் கேட்கலாமா ”செல்வம்! 
இன்றிரவு உங்கள் அறைக்கு வருகிறேன். கயல் அவசரமாய் ஒரு சாவுக்காக ஊருக்குப்போயிருக்கிறாள். அவசரத்தில் சாவி வைக்க மறந்துவிட்டாள்” 
என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி பதிலுக்காகக் காத்திருந்தேன்.

“தாராளமா வாருங்கள்” என்று பதில் வந்தது.

இரவு பத்தரை மணிக்கு செல்வத்தின் அறையிலிருந்தபோது கைபேசி ஒலித்தது. 

“எங்கே இருக்கே? இன்னும் காணலை?” - கயலின் குரலில் மெலிதான தடுமாற்றமும் நடுக்கமும்.

“இங்கே ஆபிஸிலேயே தங்கிக்கிறேன். இன்னும் வேலை முடியலை.”  செல்வம்  என்னை விநோதமாய்ப் பார்த்தார்.

“சுடர், காலையில நான் சொன்னதுக்கு வருத்தப்படுறியோன்னு எனக்கு பயமாயிருக்கு. அதனால் நீ வரலையோன்னு கஷ்டமாயிடுச்சு எனக்கு”

“இல்லை கயல். நிஜமாவே எனக்கு வேலையிருக்கு. அதான்”

பேசிமுடித்த அடுத்த நிமிடத்தில் கயலிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது 

“என் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. நான் உன்னை கஷ்டப்படுத்திட்டேன். ஆனால், எனக்கு வேற வழியில்லாமல்தான் அப்படிச் சொல்ல நேர்ந்தது. எனக்கு ஏனோ மனசஞ்சலமாய் இருக்கிறது. என்னைப் புரிந்துகொள். ப்ளீஸ். நான் ஒரு சூழ்நிலைக்கைதி. நாத்தனார் வீட்டில் ஒரு வாரம் கழித்துதான் வருகிறார்கள். நீ நாளைக்கு வீட்டுக்கு வா. நான் காத்திருப்பேன்”

எனக்குத் தெரியும் நான் இனி அங்கு போகப்போவதில்லையென.

நான் அவளுக்கு பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன்.

“எனக்கு உன்னைத் தெரியும். உன்னைப் புரியும்.”

திடீரென உறைத்தது. .அவள் வீட்டில் இருந்த இத்தனை நாட்களிலும் ஒருமுறைகூட நாங்கள் இருவரும் சிரிக்கவேயில்லை என்பது.

(நவம்பர் மாத 'உயிர் எழுத்து' இதழில் வெளியான என் சிறுகதை)

37 comments:

  1. uyrimaiyil ithai vaasiththullen. arumaiyaana kathai. pakirvukku vaalththukkal

    ReplyDelete
  2. kankalil neerai varavazhaithu vittathu ungal kathai.

    ReplyDelete
  3. இதயம் கனத்துப் போனது. இது ஒரு கற்பனைக் கதையாக மட்டுமே இருக்க வேண்டும் என மனது துடிக்கிறது. எல்லோரும் ஒரு சூழ்நிலையில் உயிர் நண்பர்களை ஏதோ ஒரு காரணத்திற்காகவோ, காரணமில்லாமலோ பிரிந்து ஒரு தழும்போடுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த்ப் பதிவு அந்தத் தழும்பை மீண்டும் தடவிப்பார்க்க வைத்துவிட்டது.

    வாழ்த்துக்கள்.

    குட்டிமானு.

    ReplyDelete
    Replies
    1. உணர்வுகள் தாண்டிய எதார்த்தங்களை..
      தாங்கிக்கொள்வது.....
      கடினம்......

      Delete
  4. தயவு செய்து இதை கற்பனை கதை என்றே சொல்லுங்கள். நட்பு மனங்களில் மட்டுமாவது வாழட்டும்
    duglas

    ReplyDelete
  5. நட்பு எவ்வளவுதான் நெருக்கமானதாய் இருந்தாலும் அதற்குஒருஎல்லை உண்டு. எந்த ஒரு உதவியும் நண்பர் தானாகசெய்தால்தான் உண்டு. அதே நேரத்தில் ஒரு உறவினரிடம் நாம்உதவியை கேட்பதற்கான உரிமை நமக்கு உள்ளது. அந்தஉறவினர்அதை செய்யாமல்கூட போகலாம். அது வேறு விஷயம். நட்பு இனிமையாக இருப்பதற்கு காரணமே எவ்வித பொறுப்பும் இல்லாததே. நண்பர்களே தானாக முன்வந்து தன்னால் இயலக்கூடிய பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதுகட்டாயத்தின் பேரில் அல்ல. இக்கதையில் கயல்விழி செய்வது நமக்குஉறுத்தலாய் தெரிந்தாலும் அதுவே இயல்பானது.

    ReplyDelete
  6. ஜெமோ அவரது தளத்தில் இந்தச் சிறுகதையைப் பற்றி எழுதியிருக்கிறார். வாழ்த்துகள் கவின்மலர்...

    http://www.jeyamohan.in/?p=9338

    ReplyDelete
  7. FRIENDSHIP AND ECONOMIC/SOCIAL INTERESTS ARE NOT FRIENDS..!!!

    ReplyDelete
  8. fine kavin. nalla kathia.innum konjam serivaka eluthi irkalam. vazhthukal

    ReplyDelete
  9. மிக மிக அருமையான் கதை கவின். ஒவ்வொரு வரியும் யதார்த்தமும் இயல்பாகவும் இருந்தது. மனம் நெகிழ்ந்து கரைந்தது. என்னுடைய நெருக்கமான தோழிகள் சுமதியையும், கீதாவையும் இன்று நினைத்துக் கொண்டேன்.

    தொடர்ந்து அற்புதமான கதைகள் எழுத வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. மதுரை சரவணன், guru, குட்டிமானு, maria duglas, T.Duraivel, சென்ஷி, Shan Nalliah, டங்கு டிங்கு டு, உமாஷக்தி

    விமர்சித்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  11. நன்றாய் இருக்கிறது.

    ReplyDelete
  12. சுடர், கயல் இருவரது நிழலாக இருந்து பார்த்ததுபோல
    வரிக்கு வரி உணர்வுபூர்வமாக ஈர்த்தது உங்கள் நடை.
    துள்ளித் திரிந்த பள்ளிக் காலத்தின் நிகழ்வுகள்...
    தோழியின் வீட்டில் தங்கியிருத்தலின் மனப்போராட்டம்..
    இவற்றின் விவரிப்பில் அனுபவத்தின் அடர்த்தி அபாரம்!
    ’தமிழ்ச்சிறுகதை உலகின் புதிய வெளிச்சம்’ கவினுக்கு
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. @அதிரன், @உதயா
    மிக்க நன்றி!

    ReplyDelete
  14. வார்த்தைகள் மட்டுமே சிறுகதையை ஆண்டு கொண்டிருக்கிற இன்றைய சூழலில் சிந்தனை இந்த சிறுகதையை ஆள்கிறது . ..
    வாழ்த்துக்கள் கவின்மலர் . செல்வம் - சுடர் நட்புக்கு இருக்கிற பலம் கூட கயல் - சுடர் நட்புக்கு இல்லாமல் போனது மாதிரியான இன்றைய நிலைமை கொஞ்சம் கவலை தான் ..

    நெல்சன்

    ReplyDelete
  15. வார்த்தைகள் மட்டுமே சிறுகதையை ஆண்டு கொண்டிருக்கிற இன்றைய சூழலில் சிந்தனை இந்த சிறுகதையை ஆள்கிறது . ..
    வாழ்த்துக்கள் கவின்மலர் . செல்வம் - சுடர் நட்புக்கு இருக்கிற பலம் கூட கயல் - சுடர் நட்புக்கு இல்லாமல் போனது மாதிரியான இன்றைய நிலைமை கொஞ்சம் கவலை தான் .. நெல்சன்

    ReplyDelete
  16. @நெல்சன்
    ந்ன்றி!

    ReplyDelete
  17. mirunalini11:25 pm

    migavum unarvu poorvamai irukiradhu... vaazhthukkal... mirunalini...

    ReplyDelete
  18. அன்பினிய தோழருக்கு வணக்கம். உயிரெழுத்தில் படித்தபோது மனதிற்குள் நீண்டதொரு உரையாடல் வெகுநேரம் நிகழ்ந்தது. அப்போதே தனியாக ஒரு கடிதமாக எழுதவேண்டும் என நினைத்தேன். அப்புறம் எழுதலாம் என தள்ளி தள்ளிப்போனது. இப்போது சொல்லாவிட்டால் பிறகு எப்போதும் சொல்லமுடியாமல்போவதற்கான வாய்ப்பும் உள்ளது. நண்பர்களுக்கு இடையே உரையாடுவது, பேசுவது, சுற்றுவது, தனித்திருப்பது, கோவித்துக்கொள்வது, கவலைப்படுவது, வீடுகளுக்கு செல்வது, பர்சனல் விசயங்களை பகிர்ந்துகொள்வது இவைகளூடே திருமணத்திற்கும் பின்பும் உறவை தொடர்வது என இவையெல்லாம் ஆண்களுக்கு மட்டுமெ நிகழும் என்பதை உடைத்து எறிந்துள்ளீர்கள். இயல்பான போக்கில் யதார்தமான வார்த்தைகள் தெறித்து விழுகின்றது. நமது சொந்த வாழ்க்கையையும் கூட திரும்பி பார்க்கச் செய்கின்றது. எனக்கும் சரி, என்னுடைய மனைவிக்கும் சரி எங்களுடைய் எனது பள்ளி-கல்லூரி நண்பர்கள் யாருடனும் தற்போது எந்தவித தொடர்பும் இல்லாம் போனது. அடுத்தடுத்து மாறுகின்ற வாழ்நிலை, சூழலும் கூட காரணமாக இருந்தாலும், முயற்சிக்கவில்லை என்பதையும் உணரமுடிகின்றது. இதையெல்லாம் தங்கள் சுடர், கயல் இருவரும் யோசிக்க வைக்கின்றார்கள். இப்போதுள்ள நண்பர்களுடன் நமது பள்ளி-கல்லூரி காலத்தின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதைப்போன்று பகிர்வதில் தயக்கம் இருக்கவே செய்கின்றது. புதிய தலைமுறையில் தொடர்ந்து படிக்கின்றேன். வாழ்த்துகள். நன்றி

    ReplyDelete
  19. கவின் மலர்1:02 am

    மிருணாளினி!, சிவா, முருகப்பன்
    மிக்க நன்றி..

    ReplyDelete
  20. சிறிது நேரம் மௌனம் ஆனேன் .....

    ReplyDelete
  21. எனது உணர்வுகளையும் பழைய பள்ளிச்சாலைகளுக்கே இட்டுச்சென்று விட்டீர்கள். வரப்புகளில் நடந்தும்,கொஞ்சம் வசதிவந்தவுடன் சைக்கிளில் சென்றதும்....கருப்பும்,கொஞ்சம் சிவப்புமான தோழிகளின் பார்வைகளுக்காக ஏங்கித்தவித்த நாட்களும் நினைவிற்கு வருகிறது. டெஸ்க்கில் கிறுக்குவதும், ஓரே கடித்தை இரண்டுபேருக்குக் கொடுப்பதும்,உன்னோட ஆள்,என்னோட ஆள் என்று பேசிவைத்து நாயாய் அலைவதும் எல்லா ஊர்ப்பசங்களுக்கும் உள்ள ஒற்றுமைபோல.பசங்களோட நட்பில் பல பிரிந்தும் , சிலமட்டும் காலம்முழுவதும் ஒட்டியும் வருவதுண்டு. எங்கோ எப்போதாவது கண்டால் சிலமணித்துளிகள் மட்டும் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்காய் பேசிவிட்டு,மறைந்துபோவதுதான் இன்றைய வாழ்க்கை. பெண்களின் பால்ய நட்பு தொடர்வது அதிக சிரமம். அவர்களுக்கு அமையும் வாழ்க்கை, இடம் எல்லாம் அவர்களை மனதளவில் இடப்பெயர்ச்சி செய்துவிடுகிறது. பழைய ஞாபகங்களை அசைபோடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்தக் கதை கற்பனையென்றாலும்- பள்ளி,கல்லூரி நட்பு இதுவரை நீடித்து வந்ததே அதிசயம்தான்.அதுபோல ஒரு பெண்தனியாக சென்னைபோன்ற நகரங்களில் போதுமான வருமானமின்றி சஞ்சலப்படுவதை மிக யதார்த்தமாக, மிகையில்லாமல் சொல்லியுள்ளீர்கள்.நன்று!
    இந்தக்கதை என்னை, அம்பாசமுத்திரத்து ஒரு கிராமத்திலிருந்து பால்யகாலம் தொட்டு கல்லூரியைக் கடந்து சென்னைவரை கொண்டுவந்து நிறுத்தியது போன்ற உணர்வைத்தந்தது. வாழ்த்துக்கள்.! மேன்மேலும் எழுதி வெல்ல வாழ்த்துக்கள்! இந்தக் கதையை இன்று(19/3)தான் படித்தேன்.பின்னூட்டம் மற்றும் விமர்சனங்களில் நேரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேதியையும் குறிப்பிடலாமே. நவம்பரில் இட்ட இடுகையானால் நான் படித்ததுதான் தாமதமோ? tm.frank

    ReplyDelete
  22. நெஞ்சை பிசைந்த உண்மை.
    நாம் உறவாய் இருக்கும் போது இல்லமால்
    நமக்கான உறவுகள் வரும்போது ஏற்படும் சங்கடங்கள்

    ReplyDelete
  23. நெஞ்சை பிசைந்த உண்மை.
    நாம் உறவாய் இருக்கும் போது இல்லமால்
    நமக்கான உறவுகள் வரும்போது ஏற்படும் சங்கடங்கள்

    ReplyDelete
  24. நெஞ்சை பிசைந்த உண்மை.
    நாம் உறவாய் இருக்கும் போது இல்லமால்
    நமக்கான உறவுகள் வரும்போது ஏற்படும் சங்கடங்கள்

    ReplyDelete
  25. Arumaiyaka ullathu.. Karpani kathai enru sollividunkal please...

    ReplyDelete
  26. Arumaiyana kathai karpani kathai enru solli vidunkal please...

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள். அருமையான கதை.சற்றே தள்ளிப்போன தோழியையும் வெகுதூரம் விலகிப்போன நட்பையும் நினைவுபடுத்தி,மனதை என்னவோ செய்கிறது உங்கள் எழுத்து.

    ReplyDelete
  28. Touching Story .. 👌

    ReplyDelete
  29. Touching Story 👌

    ReplyDelete
  30. Unmayil Chennai val Makkal Ellam Maximum Pilaipu Thedi vanthavanga than ... Ellarukullayum Kayal Pola oru Nigalvu .. irukum .... irunthlaum ungal kathaiyai keatkumpothu .. nenjam konjam ganthu than ponathu .... valga valamudan

    ReplyDelete
  31. உங்கள் " இரவில் கரையும் நிழல்கள்" ப்ற்றி ஜெயமோகன் அவரது தளத்தில் முன் எழுதியதை தற்செயலாக படிக்க நேர்ந்தது உடனே உங்கள் கதையை படித்தேன் அருமை இன்னும் நினைவில் அசை போட்ட படியேயிறுக்கிறேன்.
    தலைப்பே மொத்த கதையின் கருவை சொல்லி விடுகிறது. எப்படி இரவு வந்தால் நிழல் இல்லாமல் போகுமோ? அது போல் திருமணதிற்க் பிறகு எவ்வளவு நட்பாகயிருந்தாலும அந்த நட்பை தொடர முடியாமல் போய்விடுகிறது.
    கணவன், அல்லது மாமியார் ரூபத்தில் இரவு வருகிறது.
    எவ்வளவு பிரச்சனையிலும் சிரித்துக் கொண்டு இருப்பவர் , கயல் வீட்டில் சிரிக்கவேயில்லை என்று சுடர் நினைக்கும் இடம் சிலிர்த்தது.
    சுடர் நீங்களா? ஏன்னென்றால் நீங்களும் நல்லா பாடுகுதிர்கள்.

    ReplyDelete
  32. மிக அற்புமான சிறுகதை.

    ReplyDelete
  33. ஜெயமோகன் அவர்களின் வலை பக்கத்தில் இந்த கதையைப் பற்றி எழுதியிருந்ததை படித்துவிட்டு, இதை படித்தேன். நல்ல நடை. சில தேய்வழக்கு வார்த்தைகளை தவிர்த்திருந்தால், மேலும் மெருகேரியிருக்கும். Weldon. வாழ்த்துக்கள்

    ReplyDelete