உறுமும் அலைகளுடன் பரந்து விரிந்து கிடக்கிறது வங்காள விரிகுடா. அந்த அலைகளின் சப்தத்துக்கு நடுவே இலங்கை அகதிகளின் விசும்பல் ஒலிகளும் நாம் அறியாமல் ஒலித்துக்கொண்டிருக்கக்கூடும். கடல் சூழ்ந்த தீவிலிருந்து அகதியாய் இந்தியாவுக்கு வந்தவர்களின் கண்ணீரையும் சுமந்துகொண்டிருக்கிறது கடல் என்பதன் சாட்சியே அண்மையில் நடந்த அந்த சம்பவம்.
’’அந்த இரவை மறக்க இயலாது. ஏப்ரல் 5 இரவு 11 மணிக்கு வேளாங்கண்ணியில எங்க ஆட்கள ஒரு வண்டில ஏத்தி, ஒன்றரை மணிநேரம் பயணம் போனோம். எங்கயோ காட்டுக்குள்ள எறக்கிவிட்டாங்க. சின்ன படகு ஒண்ணு..கடற்கரையில... பதினைஞ்சு பதினைஞ்சு பேரா கூட்டிட்டுப் போய் கடலுக்குள்ளால தூரத்துல இருந்த பெரிய படகுல ஏத்திவிட்டாங்க. ஏத்திவிட்டுட்டு எங்க ஆட்கள கூட்டிட்டு வந்தவங்க வேற போட்ல போயிட்டாங்க. நான் என் பையில் டிரஸ் கொஞ்சம், சாப்பிட சாக்லேட், கிட்கேட், பிஸ்கட் இப்படி வச்சிருந்தேன். எல்லாரும் அப்டித்தான். நல்லாத்தான் போட் போய்க்கிட்டே இருந்துச்சு..திடீர்னு நின்னுப்போச்சு. ஓவர்லோட்னாங்க.செயின் அறுந்து ஸ்டியரிங் லாக் ஆயிடுச்சாம். ரெண்டுதரம் ஆட்டம் காணுச்சு.. பயந்து கத்தி..ஆராச்சும் காப்பாத்துங்கன்னு எல்லாரும் கத்தவும்..நான் வீட்டுக்குப் பேச ஒளிச்சு வச்சிருந்த செல்லை எடுத்து வீட்டுக்குக் கூப்டு தகவல் சொன்னேன். அப்புறம் எல்லாரும் என் போன்லேர்ந்தே அவங்கவங்க வீட்டுக்குத் தகவல் சொன்னாங்க. அப்றம்தான் நேவி வந்து காப்பாத்துச்சு’’ என்றார் தென்காசி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதி.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கிளம்பி வேளாங்கண்ணி வந்து சேர்ந்தனர் அவர்கள். திருநெல்வேலி, தென்காசி, சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, குடியாத்தம், வேலூர், கும்மிடிப்பூண்டி என்று தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் பலரும் அவர்களில் அடக்கம். எத்தனை பேர் வருவார்கள் என்று அவர்களுக்கு அப்போது தெரியாது. தலா ஒவ்வொருவருக்கும் 1 முதல் 1.5 லட்சம் வரை அந்த நபருக்குக் கொடுத்திருந்தார்கள். அவர்களின் கனவு ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது. அவர்களில் பெண்கள், குழந்தைகளும் உண்டு. ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் உண்டு.
60 அடி நீளமுடையது அந்த விசைப்படகு. 78 ஆண்கள், 20 பெண்கள், பதினான்கு வயதுக்குட்பட்டவர்கள் 5 பேர், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 8 பேர் என்று 120 பேரைக்கொண்ட அந்தக் குழு கண்களின் கனவுகளுடன் தங்கள் பயணத்தைத் துவக்கியது.
நடுக்கடலில் தத்தளித்த அந்தப் படகில் இருந்த இலங்கை அகதிகளுக்கு மீண்டும் ஒருமுறை தாங்கள் அகதிகளாக்கப்பட்டதை உணர நெடுநேரம் பிடிக்கவில்லை. ஏஜெண்டின் பெயர் ஒருவருக்கும் தெரியாது. செல்போன் எண்ணும் தெரியாது. தென்காசி வாலிபர் ஒருவருடைய செல்போனில் சிக்னல் இருக்கவே, அவர் தனது உறவினர் ஒருவரை அழைத்து நடுக்கடலில் ஏமாற்றப்பட்ட விவரத்தைச் சொல்லவே அவர் மூலம் கடலோரக் காவல்படைக்குத் தகவல் சென்றது. அதன்பின், கடலோரக் காவல்படையின் ராஜ்ஸ்ரீ 82 கப்பல் 10 கடல்மைல்களுக்கு அப்பால் தவித்துக்கொண்டிருந்த அவர்களை கரைசேர்க்க வந்தது. படகில் இருந்தவர்கள் கப்பலில் ஏற்றப்பட்டு, காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காரைக்கால் துறைமுகத்துக்கு ஏற்கனவே வந்திருந்த நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமியின் ஏற்பாட்டின்பேரில் அவர்கள் அனைவரும் நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள ராஜா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ’’அங்கே மணவிழா நடைபெற இருந்ததால் பின்னர் அவர்களை வேளாங்கண்ணி சாலையில் உள்ள புத்தூர் சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தோம். மாவட்ட நிர்வாகம் அவர்களுடைய அடிப்படை தேவைகளை கவனித்துக்கொண்டது. நடுக்கடலில் அவர்களை கைவிட்டுவிட்டுச் சென்ற ஏஜெண்ட் மீது ஏமாற்றுதல், கிரிமினல் சதி செய்தது ஆகிய குற்றங்களுக்காக 420, 120 ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டிருக்கிறது. பெண்கள் குழந்தைகளைத் தவிர்த்து 78 ஆண்கள் மீதும் பாஸ்போர்ட் இன்றி சட்டவிரோதமாக பயணித்த குற்றத்துக்காக பாஸ்போர்ட் சட்டம் 12ஏ பிரிவின்கீழ் வழக்கு தொடரப்பட்டது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு மாவட்டத்தின் கடலோரப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.’’ என்று மாவட்ட ஆட்சியர் முனுசாமி என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோதே இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட 4 மீனவர்கள் நாகை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற செய்தி வரவே விடைபெற்றுக்கொண்டு உடனடியாகக் கிளம்பிச் சென்றார்.
‘’எங்களை கைது செஞ்சு புழலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க வச்சிருந்து திரும்ப நாகப்பட்டினம் கொண்டுவந்தாங்க. அப்புறம் விடுதலை பண்ணி அனுப்பிட்டாங்க. கேஸ் நடத்தி பணத்தை மீட்டுத் தருவோம்னு கடலோர காவல்படையில சொன்னாங்க.’’ என்கிறார் இன்னொரு தென்காசி முகாம்வாசி.
120 பேரையும் ஏற்றிக்கொண்டு சென்ற படகு நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் படகு. ஆறுமுகத்தையும் அவருடைய தம்பி முருகானந்தத்தையும் கைது செய்திருக்கிறது காவல்துறை. ஆனால் இவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் படகை முதல்நாள்தான் மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டதாகவும் கூறுகிறது ஆறுமுகம் தரப்பு. இதை மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் சிபிச் சக்கரவர்த்தியும் ஆமோதிக்கிறார். ‘’அவர்களுக்கு எதுவும் தெரியாது. இது சாதாரணமான நெட்வொர்க் இல்லை. நாங்கள் குற்றவாளிகளை கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம். கடலோர காவல்படையிடமிருந்து கைமாறி வழக்கு எங்களிடம் வந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் ஒரு பிரஸ் மீட் வைத்து குற்றவாளிகள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிடுவோம்.’’ என்றார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரத்துக்கு தமிழ்நாட்டில் உள்ள வேளாங்கண்ணியில் இருந்து விமானம் மூலம் செல்வதாக இருந்தால் 5375.86 மைல்கள் தூரத்தை மணிக்கு 500 மைல்கள் என்கிற கணக்கில் பயணித்தால் 10.75 மணி நேரத்தில் அடையலாம்.
ஒரு படகில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட முடியுமா என்கிற கேள்விதான் இப்பொழுது அனைவரின் முன்னும் உள்ள மிகப்பெரிய கேள்வி. ‘’எவ்வளவு வேகமாக செலுத்தினாலும் விசைப்படகின் மூலம் மணிக்கு 11 கி.மீ.தான் போக முடியும். அப்படி இருக்கையில் ஆஸ்திரேலியாவின் கரையைத் தொட 3000 மைல்களுக்கு அப்பால் பயணிக்க வேண்டும். கணக்கிட்டால் 20 நாட்களுக்கு பயணிக்க வேண்டி இருக்கும். ஆகவே இத்தனை பேருக்கும் சமைப்பதற்கான பொருட்களை எடுத்துக்கொண்டு, இவ்வளவு தூரம் பயணிப்பதற்கான 20,000 லிட்டர் டீசலை எடுத்துக்கொண்டு பயணிப்பதென்பது இயலாத காரியம். 20 நாட்கள் தொடர்ந்து விசைப்படகின் என் ஜின் இயங்காது. 10 நாட்கள் வரை தாங்கும். அதன்பின் ஓய்வு கொடுத்தே ஆகவேண்டும். ஆகவே படகிலேயே ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது என்பது முடியவே முடியாது. இப்போது நடுக்கடலில் கைவிடப்பட்ட படகில் 120 பேர் உட்காரலாம். ஆனால் படுத்துத் தூங்க முடியாது.’’ என்றனர் மீனவர்கள்.
‘’இந்தியா மட்டுமல்ல, பிற நாடுகளின் கடலோரக் காவல்படையின் கண்களுக்கு சிக்காமல் அவ்வளவுதூரம் பயணிக்க முடியாது. ஆகவே ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் செல்ல முடியும். அந்தத் தொலைவுக்கு ஆஸ்திரேலியக் கப்பல் நடுக்கடலில் வந்து அவர்களை அழைத்துச் சென்றுவிடும். இவர்கள் சென்ற படகின் சீ கார்க்கை திறந்துவிட்டுவிட்டு படகை மூழ்கடித்துவிட்டு அந்தக் கப்பலிலேயே படகை ஓட்டுபவர் ஏறிக்கொள்வார். அவர் தனியாக திரும்பி அவ்வளவுதூரம் வருவது ரிஸ்க். எங்கே சென்றுவிட்டு வருகிறாய் என்று எந்த நாட்டு நேவி கேட்டாலும் பதில் சொல்ல முடியாது என்பதால் இப்படி படகை மூழ்கடித்துவிட்டு கப்பலில் ஏறிச் சென்றுவிடுவார்கள். படகுக்கான தொகையையும் சேர்த்துத்தான் வசூலித்திருப்பார்கள். அப்புறம் திரும்பி வருவதும் வராததும் அவர்கள் இஷ்டம். இதுதான் இங்கே நடக்கிறது. அடிக்கடி நடக்கிறது. இப்போது ஏஜெண்ட் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டதால் விஷயம் வெளியே வந்திருக்கிறது.’’ என்கிறார் பெயர் ஊர் வெளியிட விரும்பாத ஒரு மீனவர்.
அகதிகளிடம் விசாரித்தபோது ‘’ஆமாம்! நாங்க வர்றது ரேடார்ல ஆஸ்திரேலியா நேவிக்குத் தெரியும். அவங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. எங்களைக் கூட்டிட்டுப் போவாங்க. அது மக்கள் தொகை குறைவா உள்ள பெரிய நாடு. அதனால் வேலைக்கு ஆட்கள் வேணும். அதனால் எங்கள எடுக்குறாங்க.’’ என்கின்றனர்.
‘’எனக்கு வவுனியா, தவசிக்குளம். நான் ஒரு வயசுல 1990ல இங்கே அம்மா அபபாவோட வந்தேனாம். எனக்கு இலங்கையே தெரியாது. நான் இங்கதான் படிச்சேன். பி.எஸ்சி(ஐ.டி) படிச்சேன். ஆனா என் சர்டிபிகிகேட்ல அகதின்னு போட்டிருக்கும். அதனால் இங்க வேலை கிடைக்கல. பசங்கள்ட்ட சொல்லிவச்சேன். மூவாயிரம் ரூவாயில ஒரு வேல கிடைச்சுது. இதுல எப்டி குடும்பத்த காப்பாத்த முடியும். என் மச்சினன் நியூஸிலாந்துக்கு இப்டித்தான் காசுகட்டி போனான். அவன் தான் போன்ல சொன்னான். வேளாங்கண்ணி கோயில்ல நில்லு. அவர் இந்தக்கலர் சட்டை போட்டிருப்பார்னு அடையாளம் சொல்லி போய்ப் பாருன்னான். 95,000 குடுத்தேன். அவங்காங்க வசதிக்கேத்த மாதிரி காசு குடுப்பாங்க. முடியாதவங்கன்னா அம்பதாயிரம் மட்டும் கூட வாங்கிப்பாங்க. அதனால நானும் போனேன். போனா இங்க ரூபாய்க்கு எப்டியும் எண்பதாயிரம் சம்பாரிப்பேன்னு பார்த்தேன். இப்படியாவும்னு நினைக்கல’’ என்று கலங்கி பின் சுதாரித்துத் தொடர்கிறார்.’’எங்களுக்கு இந்தியால குடியுரிமை குடுக்கக்கூடாதா? குடுத்தா எங்களயும் மதிப்பாங்க இல்லையா? அப்டி இலலாததாலதானே நாங்க வேற நாட்டுக்கு ஓடவேண்டியிருக்கு? ஏமாற வேண்டியிருக்கு’’ என்று கேட்கிறார்..
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிர் அகதிகள் முகாம் தமிகத்திலேயே மிகப்பெரிய திறந்தவெளி முகாம். இங்கு 999 குடும்பங்களைச் சேர்ந்த 3,438 பேர் வசித்து வந்தனர். இந்த முகாமில் பல தமிழர்கள் குடும்பத்தோடு காணவில்லை தகவல் ஏப்ரல் 1, 2013 அன்று வெளியானது. முகாம் பதிவில் உள்ளவர்கள் அனுமதியின்றி வெளியிங்களுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கும்மிடிப்பூண்டி முகாமில் இருந்து சிலர் கடல் வழியே ஆஸ்திரேலியா சென்றிருக்கலாம் என்ற தகவல் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையின் அறிக்கை நாளிதழ்களில் வெளிவந்தது. இதேபோல் கடந்த வரும் ஆகஸ்ட் மாதம் கும்மிடிப்பூண்டி முகாமில் இருந்து கடல் வழியே ஆஸ்திரேலியா செல்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு என்ற மீனவ கிராமத்தில் தங்கி இருந்த 9 பெண்கள் உள்ப 19 பேரை கியூபிரிவு போலீசார் பிடித்து மீண்டும் கும்மிடிப்பூண்டி முகாமிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நாகையைச் சேர்ந்த மீனவர்களிம் விசாரித்தபோது பல தகவல்கள் கிடைத்தன. என்னை அழைத்துச் சென்று கடலோரத்தில் கிடந்த ஒரு படகைக் காண்பித்து ’’இது என்ன தெரியுமா?’’ என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்ப்பார்க்காமல் சொல்லத் தொங்கினார்கள். ‘’6 மாதத்துக்கு முன்னால் இதுபோலவே ஒரு குழு ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இந்தப் படகில்தான் கிளம்பினார்கள். கரைக்கு சற்று தூரத்திலேயே படகு பழுதாகிவிட நலல்வேளையாக உடனடியாக கரைக்குத் திரும்பி வந்தனர். ஒரு லாரியில் ஏறி அவர்கள் சென்றதை நாங்கள் பார்த்தோம். ஆனால் பலர் வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் அவர்கள் என்று நினைத்தனர். விடிந்ததும்தான் இந்தப் படகைப் பார்த்தோம். அவசரமாக வெளியேறியதில் பாதி பொருள் எடுத்தும் எடுக்காமலும் படகில் கிந்தன. அப்போதிருந்து கேட்பார் யாருமற்று இந்தப் படகு இங்கேதான் கிடக்கிறது’’ என்றனர். நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமியும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். ’’6 மாதங்களுக்கு முன் ஒரு நாள் காலை ஒரு படகுமட்டும் கடலோரத்தில் அநாதையாய் இருந்தது. அதில் சில சாமான்கள் இருந்தன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அந்தப் படகிலும் இப்படி ஆஸ்திரேலியா செல்வதற்காகக் கிளம்பி படகு பழுதாகியதால் கரைக்குத் திரும்பியதாக பின்னர் அறிந்துகொண்டோம்’’ என்றார். மண்ணில் புதைந்த இந்தப் படகைப் போல்தான் ஆகிவிட்டது அகதிகளின் நிலைமையும்
தமிழகம் மொத்தம் உள்ள 115 முகாம்களில் 67,117 அகதிகள் வசிக்கிறார்கள். இவற்றில் இரண்டு சிறப்பு முகாம்கள். 1,00,000 க்கும் மேற்பட்ட அகதிகள், முகாம்களுக்கு வெளியே வசிக்கிறார்கள். முகாம்களில் பத்துக்குப் பத்து வீடு. எங்கு சென்றாலும் 6 மணிக்குள் முகாமுக்குள் நுழைந்துவிடவேண்டும் என்கிற க்யூ பிரான்ச்சின் உத்தரவு இவர்களை சுதந்திர மனிதர்களாக ஒருபோதும் உணரச் செய்வதில்லை. வேலைக்குச் செல்பவர்களும் இந்த 6 மணி உத்தரவை நிறைவேற்ற வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு வரவேண்டிய நிர்பந்தம். கல்லுடைப்பது, பெயிண்டிங் வேலை, பழைய கட்டடத்தை உடைக்கும் வேலை, மண் தோண்டும் வெலை இப்படியான வேலைகளே தினசரி இவர்கள் செய்யும் வேலைகள். ’’அஞ்சு கிலோமீட்டர் தாண்டிப்போக, க்யூ பிரான்ச் அதிகாரி லெட்டர் குடுத்து, அதை தாசில்தார், வி.ஏ.ஓ, ஆர்.ஐ. கிட்ட காமிச்சு கையெழுத்துவாங்கி..அப்புறம்தான் போக முடியும்’’ என்கிறார்கள் முகாம் மக்கள். அகதிகள் என்று தெரிந்தால் வேலை மறுக்கப்படும் அபாயம். இத்தனையையும் தாண்டி சிரமப்பட்டு குழந்தைகளை படிக்கவைத்தால் வேலைவாய்ப்பு கிடையாது. சட்டமோ, மருத்துவமோ அகதி மாணவர்கள் படிக்கலாம். ஆனால் வழக்கறிஞராகவோ மருத்துவராகவோ பணிபுரிய முடியாது என்பது எத்தகைய முரண்பாடு! அரசு அளிக்கும் உதவித்தொகையும் மிகச் சொற்பம் எனும் சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் வாழ்க்கையே தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளுக்கு வாய்த்திருக்கிறது. விலைவாசி உயர்ந்துவிட்ட இந்நாட்களில் அரசு அளிக்கும் தொகை போதாது என்பதால் கூலி வேலைகளுக்குச் செல்கிறார்கள். உதவித்தொகையாக குடும்பத் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு 1000, பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 750, பன்னிரண்டு வயதுக்குட்பட்டவர்களுக்கு 400 என்று தமிழக அரசு வழங்குகிறது. அதாவது, குடும்பத் தலைவருக்கு வழங்கப்படும் அதிகபட்சத் தொகையின் ஒருநாள் சராசரி 33 ரூபாய்தான். இப்போதிருக்கும் விலைவாசியில் இதில் என்னதான் வாங்க முடியும்?
தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காக போராட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் கூட அங்கிருந்து அகதியாய் வந்தவர்களின் நலனின் போதுமான அக்கறை காட்டுவதில்லை என்கிற கசப்பான உண்மைதான் இவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்கின்றன. ’’எங்கட முகாமுக்கு அரசியல்வாதிகள் யாரும் வர்றதில்லை’’ என்கிறார்கள் தென்காசி முகாம் மக்கள்.
முகாம்களில் வாரத்தில் மூன்று நாட்கள் சோதனை நடக்கும்.. அப்போது யாராவது முகாமில் இல்லை என்றால், அவர்களது அடையாள அட்டை பறிமுதல் செய்யப்படும். இதனால் வெளியூர்களுக்குச் சென்று வேலை செய்வதை நினைத்துப் பார்க்கவே முடியாது என்கிற நிலை. ஒரு முகாமில் உள்ளவர் இன்னொரு முகாமில் திருமணம் செய்வதும் நடைமுறையில் இருக்கிறது. ஆகவே உறவினர்கள் எல்லா முகாம்களிலும் இருப்பதால் ஒரு நல்லது கெட்டது என்று எதற்குப் போனாலும் அனுமதி வாங்க அதிகாரிகள் முன்பு நிற்கவேண்டும். அதற்கே இரண்டு நாட்கள் ஆகிவிடும். ஆகவே சிறைவைக்கப்பட்ட கைதிகளாகவே அகதிகள் இங்கே கருதப்படுகிறார்கள். அகதிகள் வந்திறங்கும் கடலோரப் பகுதிகளான நாகப்பட்டினம், கோடியக்கரை போன்ற பகுதிகளில் முகாம்கள் இல்லை. ஆனால் அவரக்ளை தர்மபுரி, திருநெல்வேலி, குடியாத்தம், வேலூர் என்று சம்பந்தமே இல்லாத பகுதிகள் ஏன் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார் என்பதற்குக் காரணம் இருக்கிறது. அவர்களால் தினக்கூலி வேலைகளுக்கு எந்தப் பகுதியில் செல்ல முடியுமோ அங்குதான் இலங்கை அகதிகளுக்கான முகாம்கள் அமைக்கப்படுகின்றன. ஆகவே இந்திய அரசு அவர்கள் தினக்கூலிகளாகவேனும் இங்கே இருந்து பிழைத்துக்கொள்ளட்டும் என்று எண்ணுகிறது எனலாம். ஆனால், அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் தங்கள் சொந்த குடிமக்களுக்குள்ளேயே பாரபட்சம் காட்டுபவர்கள் அல்லவா? அகதிகளை நடத்தும் விதம் பற்றிச் சொல்லத் தேவையில்லை.
வெளியூர் செல்வதற்கு அனுமதி பெறவே இரண்டு நாட்கள் ஆகுமென்றால், இவர்கள் தாய்நாடு திரும்ப எண்ணினால், மலைக்கவைக்கும் ஆயிரத்தெட்டு நடைமுறைகள். அத்தனை அதிகாரிகளின் அனுமதியை பெற்றாக வேண்டும். அத்தனையையும் மீறி தாய்நாட்டுக்குச் சென்றால், அங்கே சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கி தன் அடையாளத்தை இழக்கவேண்டும்.
‘’உங்களுக்குத் தெரியுமா? இலங்கையிலிருந்தும் ஆஸ்திரேலியாவுக்குத்தான் செல்கிறார்கள்’’ என்கிறார்கள் அகதி மக்கள். சொந்த ஊரில் அகதியாவது அடுத்த ஊரில் அகதியாவதைவிட வலி மிகுந்தது. ஆஸ்திரேலியா இவர்களை வாழ வைக்கும் என்று இவர்கள் நம்புகிறார்கள். பல அகதிகள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று நிம்மதியாக குழந்தைகளை படிக்கவைத்து வாழ்வதை கண்கூடாக பார்க்கும்போது நாமும் போனால் என்ன என்கிற எண்ணம் வருகிறது. தன் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் கொட்டிக்கொடுத்து இன்று ஏமாந்து நிற்கிறார்கள். பாஸ்போர்ட் இல்லாமல் சட்டவிரோதமாக பயணித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார்கள் இவர்கள். நெஞ்சில் கைவைத்து ஒவ்வொருவரும் மனசாட்சியைக் கேட்போம்? தாய்நாடும் இல்லை. தந்தையர் நாடும் இல்லை என்றானபின் கண்டம் விட்டு கண்டம் பயணம் செல்ல தீர்மானித்த இவர்கள் குற்றவாளிகள் என்றால் இவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?
- கவின் மலர்
நன்றி : இந்தியா டுடே
- கவின் மலர்
நன்றி : இந்தியா டுடே
No comments:
Post a Comment