Thursday, May 02, 2013

கடல் மேல் தொடரும் துயரம் - தமிழக மீனவர்கள் Vs இலங்கை கடற்படை



‘’கோடியக்கரைக்கு பக்கத்துல மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோம்அப்போ விடியக்காலை 3 மணி இருக்கும். திடீர்னு வந்துச்சு அந்த போட். என் மேல் நீளமான அரிவாளை வீசினாங்க..அடிபட்டு தண்ணிக்குள்ள விழுந்துட்டேன்என்ன நடக்குதுன்னு சுதாரிக்கிறதுக்குள்ளே அடுத்த ஆள் மேல அடி. வரிசையா அடிச்சாங்க. போட்ல இருந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு மீன், வலைன்னு எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. நாங்க போட்ல மயங்கி விழுந்துட்டோம். வேற போட்ல வந்தவங்கதான் எங்களை கரைக்குக் கொண்டு வந்து ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. என் விரல் துண்டாகிடுச்சு. இப்போ ஒட்ட வச்சுருக்காங்க’’ என்று காண்பிக்கிறார் பொன்னுசாமி.

மீன்கள், வலைகள் மட்டுமல்லாது, திசை கட்டும் ஜி.பி.எஸ். கருவியையும் சிங்கள கடற்படை எடுத்துக்கொண்டு போய்விட்டதாகத் தெரிவிக்கிறார் கண்ணையன். ‘’ஜி.பி.எஸ். இருந்தா நாங்க நம்ம எல்லையிலதான் மீன்பிடிச்சோம்ங்கிறது தெரிஞ்சுபோயிடுமில்லையா? அதனால அதை எடுத்துட்டுப் போயிட்டாங்க’’ என்கிறார். இந்த நால்வரில் கண்ணையனும் சசிகுமாரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடலுக்குச் சென்றுவிட்டு வந்தால் மட்டுமே வீட்டில் சாப்பாடு. இருவருமே முழு சிகிச்சை முடிந்து எழ 6 மாதங்கள் வரை ஆகும் என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் நிற்கிறது குடும்பம். ‘’ராமேஸ்வரம் பக்கத்துல துப்பாக்கியால சுடுறது மாதிரி சுட்டிருந்தா இன்னைக்கு எங்க வீட்டுல ரெண்டு உயிர் போயிருக்கும். ஆனா மறுபடி இந்தக் கையால வெயிட் தூக்க முடியுமா..வேலைக்குப் போக முடியுமான்னு தெரியலைதஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ்ல வச்சுப் பார்த்தோம். சரியாகலை. அதனால் ப்ரைவேட்ல வச்சு பார்த்து செலவுதான் ஆச்சு. அரசாங்கம் எதுவும் செய்யலை’’ என்கிறார் கண்ணையனின் மனைவி மடத்தம்மா. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகே வந்து பார்த்தார் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மீனவர்கள். ’’மாணவர் போராட்டம் இங்கே முழு வேகத்துல நடந்ததைப் பார்த்து சிங்களக்காரனுக்கு கோபம் வந்து எங்க மேல பாயுறான்’’ என்கிறார் பொன்னுசாமியின் மகன் வீராசாமி. இவரும் கடல்தொழில் செய்பவர்தான். கண்ணையன்(45), சசிகுமார்(21), பொன்னுசாமி(50), செல்வகுமார்(21) ஆகிய நம்பியார் நகர் மீனவர்கள் தோப்புத்துறை தாண்டி மார்ச் 20 அன்று மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டார்கள்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் முனுசாமியை தொடர்புகொண்டபோது ‘’இப்போது 45 நாட்கள் கடல் தொழிலுக்கு விடுமுறை என்பதால், இதை பயன்படுத்தி, பாதுகாப்பாக மீன் பிடிப்பது எப்படி என்று லைஃப் ஜாக்கெட் உடுத்துவது, ஜி.பி.எஸ். பயன்படுத்துவது, எல்லை தாண்டாமல் இருப்பது வரை எல்லாவற்றையும் குறித்த புரிதலை ஏற்படுத்தவிருக்கிறோம். சிகிச்சையைப் பொறுத்தவரை அரசு செலவிலேயே மீனவர்கள் சிகிச்சை பெறலாம். மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்  மூலம் 20 லட்சம் செலவாகும் அறுவை சிகிச்சைகளைக் கூட இலவசமாக செய்துகொள்ளலாம்.’’ என்றார்.

நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை ஒட்டிய மீனவ கிராமங்களில் பயமும் சோகமும் அப்பிக் கிடக்கின்றன. வேறு தொழில் கைவசம் இல்லாத நிலையில் கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களின் வாழ்க்கை நிரந்தரமின்றி, உயிருக்கு உத்தரவாதமின்றி இருக்கிறது. கடலுக்குள் சென்றால் எப்போதுவேண்டுமானாலும் இலங்கை கடற்படை தாக்கலாம் என்கிற நிலையில் தன் குடும்பத்தைக் காப்பாற்றச் செல்லும் ஒவ்வொரு மீனவனுக்கும் காற்றில் ஆடும் படகைப்போல வாழ்க்கை தள்ளாடுகிறது. நாகையை ஒட்டிய கடற்கரைப் பகுதிக்குச் சென்றபோது, ஓர் அசாதாரண சூழல் நிலவுவதை உணரமுடிந்தது. இப்போது இலங்கை கடற்படை துப்பாக்கிக்கு பதில் வீச்சரிவாள், பெட்ரோல் குண்டுகள், கத்தி, இரும்பு மற்றும் ஸ்டீல் ராடுகள் போன்ற ஆயுதங்களை கையில் எடுத்திருக்கிறது . இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் சில மீனவர்களை சந்தித்தேன். கொதிப்புடன் பேசுகிறார்கள். மறுநொடி கண்ணீர் விடுகிறார்கள்.

 மீனவ கிராமமான வானவன்மாதேவியில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற காளிமுத்து, ரவிச்சந்திரன், கலைமணி, ரங்கையன் ஆகிய 4 பேரையும் இலங்கை கடற்படை தாக்கியிருக்கிறது. ‘’விடியக்காலை 4 மணி இருக்கும், இலங்கை நேவி வந்துச்சுஅதுல ரெண்டு பேர் யூனிபார்ம்ல இருந்தாங்க. மத்தவங்க சாதாரண டிரஸ்ல இருந்தாங்கபெரிய கம்பி ராடால என் இடுப்பில் குத்தினாங்க. நான் கத்தினேன். இடுப்புல சரியான அடி. சுருண்டு போட்ல விழுந்து கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினேன். கேக்கலையே..எல்லாரையும் அடிச்சாங்க..சிங்களத்துல பேசினாங்க.. பாதி இங்கிலீஷ்ல பேசினாங்க. கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சது. அடிவாங்குறதுக்கு பாஷை புரியாட்டிதான் என்ன..எங்ககிட்ட இருந்ததெல்லாம் அப்பிக்கிட்டு போயிட்டாங்க. அரை மயக்கத்துல கரைக்கு வந்து சேர்ந்தோம். ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. கலெக்டர் வந்து பார்த்தாரு.’’ என்றவாறே இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்ட காயத்தை முதுகில் காண்பித்தார் கலைமணி. வெள்ளப்பள்ளத்திலும் இதுபோன்றே 4 மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அரிவாள் கொண்டு தாக்கபப்ட்டிருக்கிறார்கள். இந்தத் தாக்குதல்களை அடுத்து முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார். ‘’18.8.2012 அன்று வெள்ளப்பள்ளம் பகுதி அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது டி146 எனும் படகில் அந்த இடத்திற்கு வந்த இலங்கை கடற்படையினரால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கியதோடு அல்லாமல் அவர்களுடைய ஐஸ் பெட்டிகள், உணவு மற்றும் இதர மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்று கடலில் வீசியுள்ளனர். மீனவர்களின் மீன்வலைகளையும் அவர்கள் அறுத்தெறிந்துள்ளனர். ராமையா என்பவரின் மகன் குப்பு சாமி எனும் ஒரு மீனவர் படுகாய மடைந்துள்ளார். அவரது வலது மணிகட்டில் கத்தியால் வெட்டப்பட்டுள்ளது. மேலும் 7 மீனவர்கள் ரப்பர் கம்பால் அடிக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர்வாழ்வாதாரத்திற்காக மீன் பிடிப்பதில் ஈடுபடும் தமிழகத்தை சேர்ந்த ஏழை அப்பாவி மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறி நடந்து கொண்டு வருவதற்கான மற்றொரு உதாரணமாக இது அமைந்துள்ளது. இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தடையில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை வேதனையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய அரசு, இந்தப் பிரச்சனையை மென்மையாக கையாளுவதால்  துணிவு பெற்றுள்ள இலங்கை  ராணுவமானது இந்திய மீனவர்களை தாக்குவதையும், சித்ரவதை செய்வதையும் எந்தவித அச்சமும் இன்றி மேற்கொண்டு வருகிறது. இரு நாட்டு தூதரக அதிகாரிகள் அளவிலான கூட்டத்தின் போது வெளியிடப்படும் மீனவர்கள் மீதான தாக்குதல் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது எனும் அறிவிப்புகள் காகித அளவிலேயே இருக்கின்றன. மேலும் இலங்கை கடற்படை இதனை மீறுவதிலேயே கவனம் செலுத்தி ராஜாங்க அளவிலான பேச்சுக்களை நகைப்புக்கு இடமாக்கி வருகிறது.’’ என்கிறது கடிதம்

காரைக்கால் பகுதி மீனவர்களையும் விட்டுவைக்கவில்லை இலங்கை ராணுவம்கிளிஞ்சல் மேடு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், வீரப்பன், சக்திநாதன், செல்வம், ராஜ், வேதநாயகம், வீரபாகு ஆகிய 7 பேர் ஏப்ரல் 12 அன்று மீன்பிடிக்கச் சென்றனர்.  ’’கோடியக்கரை பக்கத்துல இருந்தோம். நாங்க. சின்ன போட்ல  சிங்களம் பேசுறவங்க வந்தாங்க. எங்ககிட்ட சாப்பாடு கேட்டாங்க. சாப்பாடுதானே? ஒருத்தருக்கொருத்தர் கொடுத்துக்குறதுதான்னு கொடுத்தோம். வாங்கிட்டுப் போனாங்க. ஆனா எங்கள வேவு பார்க்க வந்தாங்கன்னு அப்புறமாத்தான் தெரிஞ்சுது. ராத்திரி 11 மணி இருக்கும். திடீர்னு வெளிச்சம் வந்துச்சு. எங்க முகத்துல டார்ச் அடிச்சுக்கிட்டே எங்களை விரட்டி வந்து  நீட்ட அரிவாளால வெட்டினாங்க. அவங்க போட்லேர்ந்தே எங்களை வெட்டுற அளவுக்கு நீளமான அரிவாள் அது. நாங்க கீழே விழுந்துட்டோம். வலியில துடிச்சோம். எங்க போட்ல இருந்ததையெல்லாம் எடுத்துக்கிட்டு பெட்ரோல் பாம் போட்டுட்டு போயிட்டாங்க  போட் பத்திக்கிச்சு. தண்ணி ஊத்தி அதை அணைக்க படாதபாடு பட்டோம். போன்ல விஷயத்தை சொன்னோம். ஒருவழியா காரைக்காலுக்கு வந்து சேர்ந்தப்போ எவ்வளவு பேர் எங்களை வரவேற்க கூடி நின்னாங்க தெரியுமா?பத்திரிகைக்காரங்க..சொந்தக்காரங்க..அக்கம்பக்கத்து கிராமம்னு அவ்வளவு பேர் நின்னாங்க.அவங்களையெலலம் பார்த்ததும் எல்லாரும் அழுதோம்.பேச்சே வரலை..’’ என்று தழுதழுத்தவர் சில நொடிகளில் சுதாரித்து ஆவேசமாகஅடிவாங்கத்தான் நாங்க பொறந்தோமா..சொல்லுங்க?’’ என்று கேட்கிறார் அப்போதுதான் காரைக்கால் அரசு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ரமேஷ். வேதநாயகம், வீரபாகு இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கோடரி கொண்டு தாக்கியதில் சத்தியநாதனுக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் மீது மார்ச் மாதம் மட்டும் இருமுறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு முறை துப்பாக்கியால் சுட்டதில் செண்பகம் என்ற மீனவர் படுகாயம் அடைந்தார். ஏப்ரல் 3 அன்று  காரைக்கால்மேட்டை சேர்ந்த 4 மீனவர்கள், பட்டினச்சேரியை சேர்ந்த 22 மீனவர்கள்நள்ளிரவு 1.30 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 8 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர்,  26 பேரையும் 5 படகுகளுடன் பிடித்துச் சென்று இலங்கை சிறையில் அடைத்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்துவது போக, ஆயுதங்களைக் கொண்டு மீனவர்களை மிரட்டுகிறது இலங்கை கடற்படை. காரைக்கால் மேடு பகுதியைச் சார்ந்த மீனவர்களிடம் பேசியபோது ‘’இப்போ..இந்த நேரம் இதே காரைக்காலுக்கு கிழக்கால எத்தனை சிங்களப் படகுங்க மீன்பிடிச்சுக்கிட்டு இருக்கும்னு எங்களுக்குத்தான் தெரியும். ஒரிஸா வரைக்கும் அவங்க சுதந்திரமா வந்து மீன்பிடிக்கிறாங்கமுந்தாநேத்துகூட வேளாங்கண்ணி பக்கத்துல சிங்கள போட் ஒண்ணு பார்த்தோம். நம்ம நேவி இவங்களை கண்டுக்குறதில்லை. அப்படியே ஒண்ணு ரெண்டு போட்டை பிடிச்சாலும் அவங்கள பத்திரமா கொண்டு போய் ஜெயில்ல வச்சு முறையாத்தான் நடத்துறாங்க. அவங்கள மாதிரி மனுஷத்தன்மையே இல்லாம நடந்துக்குறது கிடையாது. ஆனா நம்ம எல்லைக்குள்ள வந்து நம்ம போட்டையே கொள்ளையடிச்சு நம்மளையே அடிக்கிறாங்க’’ என்று கொதிக்கிறார்கள். காரைக்காலைச் சேர்ந்த சில மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றிவளைக்க, இந்திய கடற்படை சரியான நேரத்தில் அங்கே வர அவர்களை மீட்டுக்கொண்டுவந்த செய்தியும் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

ஏப்ரல் 23 அன்று புதுச்சேரி முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து தாக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்களின் குடும்பங்களும் நிவாரணத்தொகையைப் பெற மறுத்துவிட்டன. ’’.இலங்கையில் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் ஜாமீனில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார். ஆனால் அனைவரும் 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அப்பொழுதும் அவர்களை மீட்க மத்தியமாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்பொழுது மேலும் ஒரு வாரகாலத்திற்கு அவர்களது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுவிட்டது. அரசின் நிவாரணத்தொகை எங்களுக்கு வேண்டாம். எங்கள் மீனவர்களை மீட்டுத்தந்தால் போதும்’’ என்றனர் அவர்கள்.

‘’ராமேஸ்வரம் மீனவர்களுக்கு வேறு வழியில்லை. அவர்களுக்கான கடற்பரப்பு மிகச் சிறியது. ஆகவே எல்லை தாண்டினால்தான் அவர்களுக்கு சோறு. ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. ஆகவே நாங்கள் எல்லை தாண்டுவது இல்லை. ஆனால் நம் எல்லைக்கு வந்து இலங்கை கடற்படை எங்களை அடிப்பதை மத்திய மாநில அரசாங்கங்கள் வேடிக்கை பார்க்கின்றன’’ என்பதே நாகப்பட்டினம் பகுதி மீனவர்களின் குரலாக இருக்கிறது.

ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கும் நாகப்பட்டினம் பகுதி மீனவர்களுக்கும் உள்ள பிரச்சனைகள் வெவ்வேறானவை என்பது அவர்களிடம் பேசும்போது தெளிவாகத் தெரிகிறது. ராமேஸ்வரத்தைச் சேர்ந்த வரதராஜனை சந்தித்தபோது ‘’1983ல் இலங்கையில் நடந்த ஜூலை கலவரத்துக்குப் பிறகுதான் இந்தப் பிரச்சனை தொடங்கியது. முதன்முதலில் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர் ஏறக்காட்டைச் சேர்ந்த முனியசாமி என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.. ஆனால் அதற்கு முன்பே பாம்பனில் அந்தோணிதான் முதல் பலி. இங்கிருந்து 18 கடல்மைல் தொலைவில்தான் இலங்கையின் தலைமன்னார் இருக்கிறது. கச்சத்தீவு 13 கடல் மைல்கள்தான். 20 ஆண்டுகளுக்கு முன்னால் கச்சத்தீவுக்குச் செல்ல 3 மணிநேரத்துக்கு மேலாகும். இப்போது ஒரு மணி நேரத்தில் செல்கிறோம். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. மீன்பிடி முறையிலும் நவீன தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஆனால் இந்த தொழில்நுட்பத்துக்கு ஈடுகொடுக்கும் மீன்வளம் இந்தப் பகுதியில் இல்லை.’’ என்கிறார்.

இலங்கை கடற்படையிடம் சிக்கிவிட்டால் வயர்லெஸ் கருவிகள், ஜிபிஎஸ், எக்கோ சவுண்டர், வலைகள் போன்ற எல்லாவற்றையும் கொள்ளையடித்துவிடுவது தொடர்கதையாகி விட்டது. 2009ல் விடுதலைப் புலிகளை போரில் வெல்லும் வரை தொடர்ந்த இந்த அட்டூழியங்கள் அதன்பின் சிறிதுகாலம் நின்றிருந்ததென்றும், பின் மீண்டும் தொடர்வதாகவும் தெரிவிக்கின்றனர் மீனவர்கள். ‘’தனி ஈழம் அமைவதுதான் ஒரே வழி. இலங்கை தமிழ் மீனவர்களுக்கும் எங்களுக்கும் தொழில் போட்டி இருந்தாலும், தமிழனுக்குத் தமிழன் நாங்க பார்த்துப்போம். இப்படி சிங்களவர்கள் மாதிரி மனுஷத்தன்மை இல்லாம நிச்சயமா தமிழர்கள் நடந்துக்க மாட்டாங்க’’ என்கிறார் வரதராஜன்.

முதல் 3 கடல்மைல்களுக்கு நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடிக்கவேண்டும் என்கிற நடைமுறை இருக்கிறது. அதன்பின் 6 கடல்மைல்களுக்கு பாறைகள் மிகுந்திருப்பதால் வலைகள் அறுபட்டுவிடும் என்பதால் விசைப் படகுகள் இந்தப் பகுதியில் மீன்பிடிக்க முடியாது. 9வது கடல்மைலில் இருந்துதான் மீன்பிடிக்கத் தொடங்க வேண்டும். ஆனால் 11 கடல்மைல்கள் வரைதான் இந்திய எல்லை. ஆகவே அதற்குள் மட்டுமே மீன்பிடிக்கவேண்டும் என்பதற்கான எந்த சாத்தியமும் இல்லை. எல்லையை கடந்தால்தான் தொழில்நடத்த முடியும் என்கிற நிர்பந்தம். குறுகிய பரப்பளவு என்பதால் சர்வதேச கடல் எல்லை என்பதெல்லாம் இங்கே இல்லை. இந்திய எல்லை முடிந்தவுடன் இலங்கை எல்லை தொடங்குகிறது.

முதல் 3 கடல்மைல்களுக்கு இங்கே விசைப்படகுகளுக்கு அனுமதி இல்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் தங்களுக்குள் இந்த விதிமுறையை கடைபிடிக்கின்றனர்அத்துடன் வாரத்தில் 3 நாட்கள் விசைப்படகு மீனவர்களும், 3 நாட்கள் நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்வார்கள்.இருக்கும் மிகக்குறுகிய பரப்பளவில் எல்லோருக்கும் மீன் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

இலங்கை மீனவர்களிடம் நம் மீனவர்களிடம் இருப்பதுபோன்ற நவீன தொழில்நுட்பம் இல்லை. அவர்கள் பாரம்பரிய முறையிலேயே இன்னமும் மீன்பிடிக்கின்றனர். ஆகவே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீன்பிடிக்கும் நம் மீனவர்களைக் கண்டு அவர்களுக்கு பயம் வருவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். கன்னியாகுமரி, மங்களூர், போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் பயன்படுத்தும் இரட்டை மடி வலை, சுருக்கு வலை போன்றவற்றை ராமேஸ்வரம் மீனவர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வது எப்படி சரி எனக் கேட்கிறார்கள் இவர்கள். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பத்து நாட்கள்கூட சேர்ந்தாற்போல மீன்பிடிக்கச் செல்வது வழக்கம். ஆனால் குறுகிய கடல்பகுதி என்பதால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை.

’’இலங்கை நேவியின் கெடுபிடி அதிகமானவுடன், மீன்வளத்துறை அதிகாரிகள் எங்ககிட்டஉங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வித்தியாசம் தெரியாம இலங்கை நேவி உங்களை சுட்டுடும். அதனால் அவங்க கேட்டா காண்பிக்க .டி.கார்டு தர்றோம். ஒவ்வொரு முறை மீன்பிடிக்க போகும்போதும் எங்க கிட்ட சொல்லிட்டு பதிவுபண்ணிட்டு, யாரை தொழிலுக்கு கூட்டிட்டுப் போறோம்னு பதிஞ்சிட்டுப் போகணும்னு சொன்னாங்க அதிகாரிங்க. முதல்ல எதிர்த்தாலும் நமக்கும் பாதுகாப்புதானேன்னு ஒப்புக்கிட்டோம். ஆனால் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. .டி. கார்டையெல்லாம் யார் மதிக்கிறாங்க. பார்த்தவுடனேயே சுடுறாங்க. இப்ப நாகப்பட்டினம் மீனவர்களை ஆயுதம் வச்சு அடிக்கிறாங்க’’ என்கிறார் தமிழக கடலோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் மாவட்டச் செய்லாளர் சேசுராஜா.

இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகவே பார்க்கிறது. விடுதலைப் புலிகள் இருந்தவரை சுடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த கடற்படை இப்போதும் அதைத் தொடர்வது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையின் தொடர்ச்சி என்கிறார்கள் ராமேஸ்வரம் மீனவர்கள். ‘’அப்போ அடிச்சாங்க..இப்பவும் அடிக்கிறாங்கன்னா என்ன அர்த்தம்? தமிழன்னு ஒருத்தன் இருக்கக்கூடாதுன்னு நெனைக்குறாங்களா?’’ என்கிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெரோம். தகாத வார்த்தைகளைப் பேசுவதையும் இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ‘’சொல்லவே முடியாத வாய்கூசுற வார்த்தைகள், சித்திரவதைகள், ஊசியால் குத்துறது, பச்சை மீனை திங்க வைக்கிறது, மசாலாபொடியை கரைச்சுக் குடிக்க வைக்கிறது, ஊசியால் குத்துறது, நிர்வாணப்படுத்துவது, தேசியக்கொடியை இடுப்பில் கட்டச் சொல்வதுன்னு எல்லாத்தையும் எங்க மீனவர்கள் அனுபவிக்கிறாங்க’’என்கிறார் சேசுராஜா. இதுபோன்ற நடவடிக்கைகள் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறுவது என்பதை மனதில் வைத்து மனித உரிமை அமைப்புகள் இந்த விஷயத்தை கையிலெடுக்கவேண்டிய கட்டாயத் தேவை இருக்கிறது.

2004ல் குண்டடிப்பட்டு இறந்த ராமுவின் வீட்டுக்குச் சென்றபோது அவருடைய புதல்வர்கள் திவ்யாவும் இருளேஸ்வரனும் வரவேற்றனர். ‘’அம்மாதான் கட்டடவேலைக்குப் போறாங்க இப்போ. நான் பத்தாவது படிக்கிறேன். அண்ணன் பன்னிரண்டாவது படிக்கிறான்’’ என்று சொல்லிக்கொண்டே அதிவேகமாக சிற்பிகளை நரம்பில் கோர்த்து மாலையாக்கி அழகு பொருள் செய்கிறாள் திவ்யா. ‘’ஒருநாளைக்கு இதுமாதிரி பத்து செய்வா. ஒண்ணு செஞ்சு குடுத்தா கடையில ஆறு ரூபா குடுப்பாங்க’’ என்கிறான் இருளேஸ்வரன். இப்படித்தான் வாழ்கின்றன குண்டடிப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்கள்.

மார்ச் 13 அன்று கடலுக்குச் சென்ற 19 ராமேஸ்வரம் மீனவர்களை கைதுசெய்து சிறைபிடித்தது இலங்கை. விடுதலை செய்யப்பட்டு முதல்நாள்தான் ராமேஸ்வரம் வந்து சேர்ந்த சூசையை சந்தித்தபோது ‘’இழுவை போட்ல மீன் பிடிச்சிட்டிருந்தோம். திடுப்னு வந்து .தலைமன்னார் துறைமுகத்துக்குப் பிடிச்சிட்டுப் போனாங்க. மன்னார் கோர்ட்ல எங்களை ஒப்படைச்சுட்டாங்க. 14 நாள் ரிமாண்ட் பண்ணினாங்க. வவுனியா ஜெயில்ல 5 நாள் இருந்தோம். அப்புறம் அநுராதபுரம் ஜெயிலுக்கு மாத்தினாங்க. நம்ம கமுதியிலேர்ந்து அங்கே விமானத்துல போய் ஜவுளி வியாபாரம் பண்ணுற ஒருத்தரைப் பார்த்தேன். அவரையும் காரணமே இல்லாம ஜெயில்ல புடிச்சுப் போட்டுட்டதா சொல்லி வருத்தப்பட்டார். கடலூர் எம்.எல்.. கே.எஸ்.அழகிரி எங்ககிட்ட போன்ல பேசினார். இங்கேர்ந்து ஆறுமுகம் தொண்டைமானுக்கு போன்பண்ணி எங்கள வந்து பார்க்க ஏற்பாடு பண்ணினார். ஆறுமுகம் தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ரெண்டுபேரும் வந்து பார்த்தாங்க. எங்களுக்குத் தேவையான பொருளெல்லாம் வாங்கிட்டு வந்தாங்க. அவங்க முயற்சியிலதான் எங்களுக்கு விடுதலை கிடைச்சுது. ஆனா கிட்டத்தட்ட 500 கிலோ மீன் போயிடுச்சு. நீதிபதி அதைத் தரணும்னு தீர்ப்பு சொன்னார். ஆனா நேவி தரலை’’ என்றார்.

அவ்வபோது கச்சத்தீவை மீட்போம் என்று தமிழக முதல்வர் குரல் கொடுக்கிறார். கச்சத்தீவை மீட்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வருமா என்கிற கேள்வியை முன்வைத்தபோது ‘’இல்லை. கச்சத்தீவை பயன்படுத்துவது நாங்க மட்டும்தான். ஆனால் நாகப்பட்டினம் மீனவர்களையும் இலங்கை நேவி தாக்குவதைப் பார்க்கிறோம்.அதனால் கச்சத்தீவை மீட்டாலும் ஒரு பயனும் இல்லை’’ என்கிறார் ஜெரோம்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலை தொடர்புகொண்டபோது ‘’குண்டடிபட்டு இறந்தவங்களுக்கு 5 லட்சம் ரூபாய், குழந்தைகளின் பட்டப்படிப்பு, மேற்படிப்பு போன்றவற்றை அரசே ஏற்றுக்கொள்கிறது. இது அந்நிய நாடு தொடர்பான பிரச்சனை. இதனால் நான் கருத்து சொல்ல முடியாது. அம்மா கடிதம் எழுதியிருக்காங்க.’’ என்று முடித்துக்கொண்டார்.

‘’489 பேர் துப்பாக்கிச்சூட்டுல இறந்துருக்காங்க. 800 பேருக்கு கைகால்கள்ல அடி, 135 பேர் காணாமப் போயிருக்காங்க. 250 படகுகள் சிறைபிடிக்கப்பட்டிருக்கு. சிறை பிடிச்ச படகுகளை சேதப்படுத்தித்தான் அனுப்புவாங்க. என்னோட படகு ஒரு வருஷம் அங்கே கிடந்துச்சு. அப்புறம்தான் மீட்டுட்டு வந்தேன். பத்து லட்சம் செலவாச்சு. கொழும்புல ரெண்டு தடவை ரெண்டு நாட்டு மீனவர்களை வைச்சு பேச்சுவார்த்தை நடந்துச்சு. ஞாயிற்றுக்கிழமை அவங்க மீன்பிடிக்கமாட்டாங்க. அந்த 52 நாளோட கூட ஒரு 20 நாள்...வருஷத்துல 72 நாள் மட்டும் நாங்க அவங்க எல்லையில் மீன்பிடிச்சுக்கிறோம்னு கேட்டோம். ஒருமுறை சென்னையில வச்சு நடந்துச்சு. அதுலயும் ஒரு முடிவும் வரலை. நூத்துக்கணக்கான வருஷமா பாரம்பரியமா நாங்க மீன்பிடிக்கிறோம்நாங்க அங்க போறதும் அந்த மீனவர்கள் இங்க வர்றதும் காலங்காலமா நடக்குது. மாமன் மச்சான் மாதிரிதான் எங்க உறவு. 83க்குப் பிறகு என்னமோ புதுசா சட்டம் போட்டா எப்படி? 1974ல் இந்திரா காந்தி - பண்டாரநாயகா ஒப்பந்தம் குடியரசுத் தலைவர் முன்னிலையில் கையெழுத்தாச்சு. அதில் ரெண்டு நாட்டு மீனவர்களும் எல்லைதாண்டி மீன்பிடிக்கலாம்னு  ஒப்பந்தமாச்சு. அதுக்குப் பின்னால 1976ல் கழிச்சு ரெண்டு அரசுச் செயலாளர்களும் கூடி எல்லை தாண்டக்கூடாதுன்னு ஒரு ஒப்பந்தம் போடுறாங்க. ரெண்டு பிரதமர் குடியரசுத்தலைவர் போட்ட ஒரு ஒப்பந்தம் பெரிசா? ரெண்டு அரசுச் செயலாளர்கள் சேர்ந்து போட்ட ஒப்பந்தம் பெரிசா?’’ என்று கேள்வி எழுப்பும் சேசுராஜா ‘’பாரம்பரிய உரிமைன்னெல்லாம் கேட்டா ஒண்ணும் கிடைக்காது போலிருக்கு. அதனால் இப்போ கவர்மெண்ட்ல ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் போகச் சொல்றாங்க. எங்களுக்கு அதுல பழக்கமே இல்லை. பத்துநாள் வரை கடலுக்குள்ள இருக்கணும். எங்களுக்கு அது புதுசு. பயிற்சி குடுக்குறதா கவர்மெண்ட் சொல்லுது. அப்படி ஆழ்கடல் மீன்பிடிப்புக்குப் போனா நாங்க இலங்கைப் பக்கம் போகமாட்டோம். இந்தியப் பெருங்கடல் பக்கம்தான் போவோம். அப்போ இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வரும்னு அரசு சொல்லுது..ஆனாலும் பழக்கமில்லாத ஒரு தொழிலுக்கு போக பயமாத்தான் இருக்கு.’’என்கிறார் சேசுராஜா

உயிரழப்புகளையும் பிரச்சனைகளையும் தவிர்க்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்களை அரசு பழக்கலாம். ஆனால் பத்து நாட்கள் ஆழ்கடலில் தங்குமளவுக்கு வசதியான விசைப்படகு உரிமையாளர்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் இருப்பார்கள். எஞ்சியவர்களின் நிலை கேள்விக்குறியே. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.நந்தகுமாரை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ‘’இப்பிரச்சனை குறித்து நிர்வாகம் தீவிர கவனம் செலுத்துகிறது. இந்த விடுமுறை காலத்துக்குள் ஒரு தீர்வு நிச்சயம் எட்டப்பட்டுவிடும். இரண்டு மூன்று சுற்று பேச்சுவார்த்தைகள் மீனவர்களுடன் நடத்தியாகிவிட்டது. இலங்கையுடனான பிரச்சனையை தவிர்ப்பதற்கான அத்தனை வழிகளையும் ஆராய்கிறோம். அந்தத் திட்டங்களை இப்போது வெளியில் சொல்ல இயலாது. காத்திருங்கள்’’ என்கிறார் நந்தகுமார்.

எப்படி ஆதிவாசிகள் மலைகளையும் வனங்களையும் பாதுகாக்கிறார்களோ அப்படியே மீனவர்கள் கடல்வளத்தைக் காக்கும் பழங்குடிகள். அவர்களுடைய மீன்பிடி உரிமை என்பது மீனவ சமுதாயம் தோன்றிய காலந்தொட்டு இருந்துவருவது. இயற்கை தந்த வளங்கள் மனிதர்களுக்குப் பொதுவானவை. நாட்டு எல்லைகள் அண்மையில்தான் வகுக்கப்பட்டன. ஆனால் மீனவர்களின் மீன்பிடி உரிமை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்புடையது. இப்போதும்கூட தாய்லாந்தில் இருந்து வந்து வங்காள விரிகுடா பகுதியில் மீன்பிடிப்பதும் நடக்கிறது. அதனை எந்த நாடும் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அங்கெல்லாம் எல்லை கடக்கும் பிரச்சனை இல்லை. எந்த இருநாடுகளுக்கு இடையே பிரச்சனை இருக்கின்றனவோ அங்கே மீனவர்களை பணயம் வைப்பது நடக்கிறது. இந்தியாவும் இலங்கையும் நட்புநாடுகள் என்று பறைசாற்றிக்கொண்டாலும்கூட, தமிழ்நாட்டை நட்பாக இலங்கை பார்க்கவில்லை என்பதிலிருந்துதான் பிரச்சனை தொடங்குகிறது. இனவெறியின் இன்னொரு வடிவமாகவே இலங்கை இப்படி நடந்துகொள்கிறது என்கிற உண்மையை வெறுமனே எல்லை தாண்டுகிறார்கள் என்கிற காரணத்தை வைத்து மறைத்துவிட முடியாது. மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. நிலத்தில் அகப்பட்ட இடங்களை சுருட்டிக்கொண்டு உரிமைகொண்டாடும் ரியல் எஸ்டேட் முதலாளிகள் போல நாடுகள் மாறுவது சரியல்ல. மீனவர்களின் பாரம்பரிய உரிமை காக்கப்படும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு தீர்வுகள் எட்டப்படவேண்டும். ஏனெனில் எல்லைதாண்டுவது மட்டுமல்ல பிரச்சனை என்பது எல்லைக்குள் மீன்பிடிக்கும் நாகப்பட்டினம்-காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.


No comments:

Post a Comment