“படம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். தடை எல்லாம் விதிக்க முடியாது” இதுதான் பிகே திரைப்படத்திற்கு தடைகோரியவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கூறிய பதில்.
பிகேவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு இருக்குமென்று எதிர்ப்பார்த்தீர்களா?
ராஜ்குமார் ஹிரானி: நான் எதிர்ப்பார்க்கவில்லை. படம் நல்லிணக்கம் குறித்தது. அதைவிட நாம் அனைவரும் ஒன்றுதான் என்கிறது. ஆகவே இப்படம் மதத்துக்கு எதிரானது என்கிற குற்றச்சாட்டுகள் எங்களை வியப்படையச் செய்தன. உண்மையில் நாங்கள் மதத்துக்கு ஆதரவாளர்கள். அதைத் தவறாக பயன்படுத்துவதை விமர்சிக்கிறோம்.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியும், திரைக்கதையில் இணைந்து பணியாற்றிய அபிஜித் ஜோஷியும் தங்களை இப்படி அறிவித்துக்கொள்வதில் வியப்பொன்றுமில்லை. உண்மையில் பிகே நாத்திகம் பேசுகிறதா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கமுடியும். ஆனால் நாத்திகர்கள் என்ன பேசுவார்களோ அப்படியே பெரும்பாலும் பேசுகிறது. முன்னாபாய் எம்பிபிபிஎஸ், 3 இடியட்ஸ் போன்ற படங்களின் கதாசிரியர்களான ராஜ்குமார் ஹிரானியும் அபிஜித் ஜோஷியும் இணைந்த மூன்றாவது திரைப்படம் இது. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்திய அளவிலான சாதனையை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது பிகே.
தமிழில் நவீன எழுத்தாளர்கள் பலரும் கடவுளோடும் சாத்தானோடும் சலிக்க சலிக்க உரையாடிவிட்டனர். ஆனால் இப்படத்தின் நாயகன் பிகே கடவுளின் உரையாட முயன்று முயன்று தோற்றுப் போகிறான். கற்பனைக்கும் யதார்த்தத்துக்குமான வேறுபாடு இது. கடவுளைத் தேடித் தேடி அலைகிறான். ஆனால் கடவுள் அவன் முன் தோன்றவே இல்லை. கடவுள் எனும் கருத்தாக்கம் குறித்த தத்துவ விசாரணைக்குள் படம் நம்மை எவ்வித எத்தனிப்புமின்றி, சிரமுமின்றி பயணிக்க வைக்கிறது. படத்திற்குத் தேவையான ஒளிப்பதிவு, உருக வைக்கும் பாடல்கள், காட்சியமைப்புகள், கூர்மையான வசனங்கள் என்று பிகே நம்மை அப்படியே கவர்ந்து இழுத்துக்கொள்கிறான்.
இவை எல்லாவற்றையும்விட கலையும் அரசியலும் சரியான கலவையில் இணைந்துள்ள அற்புதம் நமக்குள் மாயம் செய்கிறது. இதை கலைப் படங்களின் வரிசையில் வைக்க முடியாது. வணிக நோக்கில் எடுக்கப்படும் எத்தனையோ படங்கள் இருக்க பிகே வணிகத்தில் வென்றிருப்பது ஒரு முக்கியமான அறிகுறியே. இப்படத்தில் வணிக நோக்கில் காட்சிகளை வைக்க வாய்ப்புகள் இருந்தும் இயக்குநர் மிகக் கவனமாக அப்படி வைக்கவில்லை. ஒரு கதாநாயகி அவளுக்குரிய தன்மையோடு இயல்போடு இருக்கிறாள். வலிந்து திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள் எதுவும் இல்லை. படத்துடன் தொடர்பில்லாத, படத்தின் கதைக்கு உதவாத ஒரு சிறு காட்சியும் இல்லை. ஒரு காட்சியையும் வெட்டியிருக்க முடியாது. அத்தனை கச்சிதம். கலையின் மகோன்னதமான நிலை இப்படத்தில் நம் கண்ணீரைக் கோருகின்றன. உணர்வுபூர்வமான காட்சியமைப்புகள் அல்ல நம் கண்ணீரைக் கோருபவை. இப்படியொரு வணிகப் பட சட்டகத்துக்குள் நின்று பார்வையாளர்களை சிந்திக்க வைக்க முடியுமா? பகடி செய்ய முடியுமா? இதையல்லவா ஓர் இந்திய சினிமா செய்யவேண்டும்? இப்படியல்லவா கலையும் அரசியலும் இணையவேண்டும் என்கிற இடம் நம் கண்ணீரைக் கோரும் இடம்.
படம் பார்க்க வரும் மிகச் சாதாரண ரசிகர்களையும் உள்ளிழுத்துக்கொள்ளும் கதையில், நாயகனின் பார்வையில் படத்தைப் பார்க்க வைப்பது இயக்குநரின் முதல் வெற்றி. உலகில் மதத்தின் பேராலும் கடவுளின் பெயராலும் நடக்கும் அத்தனை விநோதங்களையும் அக்கிரமங்களையும் கேள்வி கேட்கவேண்டுமெனில் அதுகுறித்து எதுவும் அறியாத வேற்றுகிரக கழுகொன்றின் பார்வை தேவை. அதற்காகவே அமீர்கான் வேற்றுகிரகத்திலிருந்து வருகிறார். அவரை இவ்வுலகுக்கு அப்பாற்பட்டவராகக் காட்ட முனைந்த கற்பனை வெகு புத்திசாலித்தனம். இப்பூலகின் மாந்தர் ஒருவருக்கு எழும்பாத, எழும்பினாலும் கேட்க முடியாத கேள்விகள் அவை. ஒரு மழலையின் குழந்தைமையுடன் அமீர்கான் கடவுளர்கள் குறித்து கேட்கும் கேள்வியில் பதில் சொல்ல இயலாமால் பூமியின் மனிதர்கள் திணறுகிறார்கள். உலகில் கடவுள் இல்லை என்று சொன்ன அறிஞர்களையோ தத்துவங்களையோ வாசித்தவன் இல்லை பிகே. அவன் புத்திசாலி இல்லை. வெகு சாமானியன். கொஞ்சம் அப்பாவி. அப்படியான அப்பாவியின் கேள்விகளாகவே இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தனது புத்திசாலித்தனமான கேள்விகளை சாமர்த்தியமாக வைக்கிறார். பிகேயின் குழந்தைமை அக்கேள்விகளோடு கடவுள் நம்பிக்கை உள்ளவர்களையும் ஒன்றச் செய்கிறது. சிரிக்கச் செய்கிறது. ‘பிகே சரியாகத்தானே கேட்கிறான்?’ என்று அவனுக்கு கைதட்டச் சொல்கிறது. ’நாம் பார்த்த ராங் நம்பர்கள் எத்தனை?’ என்று எண்ணிப்பார்க்கச் சொல்கிறது. எல்லாம் குழந்தைமையின் மகத்துவம். இதையே அறிவுமுலாம் பூசிய அமீர்கான் கேட்டிருந்தால் இப்படம் இத்தனை ரசிக்கப் பட்டிருக்குமா என்பது ஐயம்தான்.
படத்தின் துவக்கத்தில் அமீர்கான் பறக்கும் தட்டில் வந்திறங்கியதும் காணும் முதல் காட்சியிலேயே தன் ரிமோட் கண்ட்ரோலை ஒரு திருடனிடம் பறிகொடுக்கிறான். வேற்றுகிரகவாசிக்கு முதன் தரிசனம் இப்பூவுலகில் திருட்டுதான் என்பதில்தான் எத்தனை விஷயங்களைச் சொல்லிவிடுகிறார் இயக்குநர்! உலகின் மனிதர்கள் அணியும் உடை, பேசும் மொழி, அவர்களின் கற்பிதங்கள் எல்லாம் புரிய பிகேவுக்கு பல நாட்கள் ஆகின்றன. அமீர்கான் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வது தேய்வழக்காகிவிட்டாலும் அப்படித்தான் சொல்லவேண்டி இருக்கிறது. தான் இனிமேல் வீடு திரும்பமுடியாது என்கிற முதல் காட்சியின்போது அவர் காட்டும் ஏலியன் முகபாவமும், கொஞ்சம் கொஞ்சமாக அவருக்குள் நுழையும் பூமி மனிதர்களின் முகபாவங்களும் எத்தனை விதமான அமீரை நமக்கு அடையாளம் காட்டுகின்றன! ஓடும்போதும் நடக்கும்போதும் கூட கைகளை ஒருமாதிரி நேராக வைத்துக்கொண்டு ஓடுவது, காதுகளை மடக்கிப் பார்த்துக்கொள்வது, தூரத்தே தெரியும் நட்சத்திரக்கூட்டங்களை நோக்கி வீடு திரும்பும் ஏக்கத்துடன் பார்ப்பது என்று அமீர் கண்ணுக்குள்ளேயே நிற்கிறார். நடனம் ஆடும்போதும் அந்த ஏலியன் தனத்துடனேயே தன் உடல்மொழியை வைத்துக்கொள்கிறார். ‘யாராவது வீடு திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டால் தன்னால் பொறுக்கமுடியாதென்று நாயகியிடம் பணத்தை எடுத்து நீட்டும்போது காண்பிக்கும் முகபாவங்கள் கலங்கச் செய்பவை.
இருபுறமும் கடவுளர் சிலைகள் இருக்க அமீர்கான் அச்சிலைகளிடம் ‘தான் வீடுதிரும்பும் வழியைக்காட்டுமாறு இறைஞ்சும் காட்சியில், அக்கடவுளர்கள் போல கல் மனம் படைத்தவர்களும் உருகிவிடக்கூடும். அந்தக் காட்சியில் ‘அம்பாள் எப்போதடா பேசினாள்?’ என்று திரையரங்கத்தில் பிகேவை நோக்கிச் சொல்லவேண்டும் என்று தோன்றியது. 1952ல் பராசக்தியில் கலைஞர் மு.கருணாநிதி கேட்ட கேள்விதான் பிகே இப்போது கேட்பது. இந்தியில் பிகே வெளிவர இத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கிறது. தமிழர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்தான். பகுத்தறிவை சினிமாவில் ஐம்பதுகளிலேயே பரப்பியவர்கள் என்று. ஆனால் அந்தப் பகுத்தறிவுச் சங்கிலி எப்போது அறுபட்டது? இடையில் பகுத்தறிவுக்கு சற்றும் ஒவ்வாத அம்மன் படங்களும், கடவுளர் படங்களும் ஓடி வசூல் சாதனையை நிகழ்த்தியதும் இதே தமிழ்மண்ணில்தான் என்பதில் இருக்கிறது நம் வீழ்ச்சி.
இந்தியாவில் பாஜக என்கிற ஒரு மதவாதக் கட்சி ஆட்சியில் இருக்கையில் பிகே வெளியாகி வசூலில் சாதனை புரிந்திருப்பது மிகவும் முக்கியமானது. இந்த நாட்டு மக்கள் முஸ்லிம்களை கொன்றுகுவித்த மோடிக்கும் தனிப்பெரும்பான்மை தருகிறார்கள். முஸ்லிம்கள் குறித்த கட்டுக் கதைகளை உடைத்தெறியும் பிகேவையும் ரசிக்கிறார்கள். இந்த மனோபாவம்தான் என்ன என்று யாராவது ஆய்வில் இறங்கினால் குழம்பித்தான் போவார்கள். படத்தின் துவக்கத்தில் பெல்ஜியம் காட்சிகளில் நாயகி தன் காதலன் பாகிஸ்தான் இஸ்லாமியன் என்று தெரிந்ததும் அதை ஏற்க முடியாமல், அதுவரை முகத்தில் இருந்த சிரிப்பு மறையும். அக்காட்சியில் தொடங்கி, தில்லியிலிருந்து சாமியார் ஒருவர் ‘அந்த முசல்மான் உன்னை ஏமாற்றுவான்’ என்று சொன்னதை நம்பிவிடும் நாயகி என்று தொடரும் காட்சிகள்மூலம் பொதுபுத்தியை கேள்விகேட்கிறது படம். இப்படம் பேசும் நாத்திகம், பகுத்தறிவுவாதம் எல்லாவற்றையும்விட மிக இன்றியமையாததென்று நான் எண்ணுவது, இஸ்லாமியர் குறித்த வழமையான சித்தரிப்புகளையும், கற்பிதங்களையும்தான்.இப்படம் உடைத்தெறிந்திருப்பதைத்தான். ’பயணம்’, ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘ விஸ்வரூபம்’ என்று இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகளாக இழிவாகக் காட்டும் சினிமாக்களுக்கு மத்தியில் பிகே அவற்றுக்கெல்லாம் பதிலடி தருவதுபோல வந்திருக்கிறது. பொதுபுத்தியில் பல விஷயங்கள சினிமா மூலமும் இன்னபிற ஊடகங்கள் மூலமும் ஏற்றப்படுவது நஞ்சுபோன்ற சித்தரிப்புகள் மூலமாகத்தான். அத்தகைய பிரபல வணிக சினிமா வகைமைக்குள் வந்துவிட்ட பிகே ’இஸ்லாமியன் வஞ்சிப்பான்’ என்று நாயகிக்கு கற்பிக்கப்படும் கூற்றுக்கு நேர்மாறாக அவளை நினைத்தபடி இருக்கிறான். அந்த நேரடி ஒளிபரப்புக் காட்சியில் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று அவன் பாகிஸ்தான் தூதரகத்துக்குப் பேசத் தொடங்கும்போது நாயகி அனுஷ்கா ஷர்மாவின் கண்களில் மட்டுமல்ல நம் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. ‘இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் அல்ல’ என்று கூட்டங்கள் போட்டும், பத்திரிகையாளர் சந்திப்புகள் வைத்தும், கதைகள் எழுதியும், கவிதைகள் எழுதியும் எத்தனையோ பேர் சொல்ல வந்தததை ஒரு காட்சி சொல்லிவிட்டது. சாதியும் மதமுமற்ற வேற்றுகிரகவாசி ஒருவன் வந்துதான் அதையும் நிரூபிக்கிறான். இவ்வுலகில் என்னதான் பகுத்தறிவுபேசினாலும் ஏதாவது ஒரு சாதி அல்லது மதத்தின் முத்திரையின்கீழ் வைத்துத்தான் இவ்வுலகம் பார்க்கும் என்பது கசக்கும் உண்மை. இந்த உண்மையை போகிறபோக்கில் சொல்லிவிடுகிறது படம்.
கடவுள் என்கிற ஒன்று உண்டா இல்லையா என்று தத்துவ விசாரணைக்குள் இறங்கும் இச்சினிமாவில் பூமியில் உள்ள பல்வேறு மதங்களும் அவை நிறுவனமயப்பட்டிருப்பதையும் புரிந்துகொள்ள ஒரு வேற்றுகிரகாவாசி முயல்வதும், அம்முயற்சியில் அவனுக்கு எழும்பும் நியாயமான கேள்விகளும், அவற்றை எதிர்கொள்ள் முடியாத மதவாதிகள் அவனை விரட்டுவதுமாக முற்பாதி செல்கிறது. கடவுளர் சிலையை விற்கும் கடைக்காரரிடம் ‘நீதான் கடவுளை உருவாக்கினாயா? அல்லது கடவுள் உன்னை உருவாக்கினாரா?’ என்று கேட்பதும், ‘கடவுளுக்கு நேரடியாகவே கேட்கும் என்றால் இந்தச் சிலை எதற்கு?’ என்று கேட்பதுமான காட்சியில் ‘கடவுளுக்கு பேட்டரி தீர்ந்துவிட்டது’ என்று கேட்கும் காட்சியிலும்தான் எத்தனை பகடியை பொதிந்து வைத்திருக்கிறார் இயக்குநர்! எந்தக் கடவுளை எப்படி வழிபடவேண்டும் என்று அறியாமல் சூடம் பத்தியுடன் தேவாலயத்துக்குச் செல்வதும், வைனுடன் மசூதிக்குள் செல்வதும், வெள்ளுடை அணிந்த இந்துப்பெண்ணை விதவை என்று அறிமுகம் செய்துவைக்க, வெள்ளுடை அணிந்த கிறிஸ்தவ மணப்பெண்ணை விதவை என்று நினைத்துக்கொண்டுபேசுவது, குழம்பிப்போய் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளின் உடலில் இன்ன் மதம் என்று ஏதாவத் சின்னமிருக்கிறதா என்று பார்ப்பது என ஒரு மனிதகுலத்திற்குள் நிலவும் பல்வேறு அர்த்தமற்ற பழக்கவழக்கங்களையெல்லாம் கேலியுடன் வெளிச்சம்போட்டுக் காட்ட பிகேயின் அந்நியத்தன்மை வசதியாக இருக்கிறது.
காந்தி படம் போட்ட காகிதத்தைத் தந்தால் பதிலுக்கு உணவு கிடைக்கும் என்று காந்தி படங்களாக சேமிக்கும் அவனுக்கு பணத்தைத் தந்தவுடன் மட்டும்தான் உணவு கிடைக்கிறது என்கிற உண்மை புரிந்தவுடன் காந்தியின் பிற படங்களை எல்லாம் தரையில் வீசும் காட்சி நுட்பமானது. உடைகள் குறித்த பிரக்ஞையை அவன் அடையும் தருணத்தில் ஓர் உடையை அணிந்தால் மாத்திரம் உணவு அவனைத் தேடி வருகிறது. அது காவல்துறையின் உடை. அதிகாரம் என்றால் என்ன என்பதை அவன் உணரும் தருணம் அது. வேற்றுகிரக வாசிக்கு அதிகாரத்தின் சக்தியை உணர்த்தும் அதே காட்சி நமக்கு பகடியையும் முன்வைக்கிறது. அதுபோலவே ‘அச்சமற்ற சிவனின் நடனம்’ என்று அறிவிக்கும்போது பயந்துபோய் சிவன் வேடம் போட்டவர் தலைதெறிக்க ஓடுவது, குழந்தைகளுக்கு பால் இல்லாதபோது கடவுளுக்கு ஊற்றுகிறார்கள் என்றும், ’பணம் உங்களுடையதா என்றால் என்னுடையது என்று வருகிறார்கள். காண்டம் உங்களுடையதா என்றால் என்னுடையது இல்லை என்று ஓடுகிறார்கள்’ என்று அமீர்கான் கேட்பதும், ‘இன்று நாங்கள் உறவு வைத்துக்கொள்ளப் போகிறோம் என்று ஏன் ஊரைக்கூட்டி திருமணம் என்கிற பெயரில் அறிவிக்கிறார்கள்?’ என்று கேட்பதுமாக அடுக்கடுக்கான கேள்விகளை பார்வையாளர்களை நோக்கி பகடியாக வீசியபடியே இருக்கிறான் பிகே.
ஆனாலும் பிற்பாதியில் திரைக்கதை கொஞ்சமாக தொய்வடைவதைக் குறிப்பிடத்தான் வேண்டும். குறிப்பாக அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த காட்சிகள். இந்த தொய்வை ஈடுகட்டுவது நேரடி ஒளிபரப்பில் பிகே சாமியாரை மடக்கி ‘முஸ்லிம்கள் அனைவரும் ஏமாற்றுபவர்கள்’ என்கிற அவரது கருத்தை உடைக்கும் காட்சிதான். அக்காட்சியில் வெறித்த பார்வையுடன் எதுவும் பேசாமால் அமர்ந்திருக்கும் அமீர்கான், இறுதியில் பேசுகையில் கேட்கிறார். “இத்தனை பெரிய பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில், ஏதோ ஒரு கிரகமான பூமியில் உள்ள ஏதோ ஒரு ஊரில் உள்ள, ஒரு சிறிய தெருவில் உள்ள ஓர் இருப்பிடத்தில் அமர்ந்துகொண்டு நீதான் கடவுளைக் காப்பாற்றப் போகிறாயா? இப்பிரபஞ்சத்தையே படைத்த கடவுள் ஒருவர் உண்டு. நீங்கள் சொல்வதுபோல பல கடவுள்கள் இல்லை” என்கிறார். இத்தனை நேரம் இப்படம் பேசிய கருத்துக்கள் இந்தப் புள்ளியில் வந்து முடிவடைகின்றன. ”ஒரே ஒரு கடவுள் இருக்கிறார். அவர் இந்த இயற்கையை படைத்தவர். அவர் ஒருவர்தான். அவரை வழிபடுங்கள். கடவுளுக்கு இடைத்தரகர்கள் தேவையில்லை. அவர்களை எல்லாம் வழிபடாதீர்கள்” என்கிறார். ‘கடவுள் இல்லை; இல்லவே இல்லை’ என்று கூறிவந்த திராவிட முன்னேற்றக் கழகம் திடீரென்று ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறத் தொடங்கியது போன்றது இக்காட்சி. கடவுள் என்கிற ஒருவரை மனிதனே படைத்தான் என்பதே பகுத்தறிவு. ஆனால் வேற்றுகிரகத்திலிருந்து வரும் ஒருவனும் கடவுள் என்கிற ஒருவர் உண்டு என்கிறான். ஆக அவருடைய கிரகத்திலும் கடவுள் என்கிற கருத்தாக்கம் இருக்கிறது என்று கொள்ளலாம்; மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ அங்கெல்லாம் கடவுளும் உருவாகிவிடுவார்தான் போலும் என்றும் ஒரு முடிவுக்கு நம்மால் வரமுடியாது. ஏனெனில் கடவுள் என்கிற ஒன்றை பிகே பூமிக்கு வந்தபின் தான் கேள்விப்படுகிறான்.
பிகேயிடம் நாயகி ஒரு காட்சியில் கேட்பாள். “உங்கள் கிரகத்தில் ஆடை இல்லாமலா எல்லோரும் இருப்பீர்கள். விநோதமாக இருக்காதா?” அதற்கு பிகேயின் அற்புதமான பதில் ஒன்று உண்டு. “இந்தக் காக்கையை, விலங்குகளை எல்லாம் பார். அவை என்ன உடையா உடுத்துகின்றன? அவற்றுக்கு உடை உடுத்தினால் விநோதமாக இருக்காதா? அப்படித்தான் மனிதர்கள் உடுத்தினாலும் எங்களுக்கு விநோதமாக இருக்கும்”. இந்த உடை விஷயத்தையே கடவுளுக்கும் பொருத்தினால்? காக்கை, குருவி எல்லாம் கடவுளை நம்புவதில்லை. ஆனால் மனிதன் மட்டும் நம்புகிறான். எந்த கிரகத்திலும்! நியாயமாக பிகேவும் கடவுள் என்கிற ஒன்றை கேள்விப்படாத ஒருவன் தான்.ஆனால் இந்த உலகில் கால்வைத்த அவன் முதன்முதலில் ‘கடவுள்’ என்கிற சொல்லையும் அந்தக் கருத்தாக்கத்தையும் கேள்விப்படுகிறான். ‘கடவுள்’ தன் ரிமோட் கண்ட்ரோலை மீட்டுத்தந்து தன் கிரகத்துக்கு அனுப்புவார் என்று நம்பத் தொடங்குகிறான்.
படத்தின் இறுதியில் கண்ணீர் மல்கவைக்கும் காட்சி ஒன்று உண்டு. நாயகியின் மீதான காதலையும் கண்ணீரையும் மறைத்துக்கொண்டு பிகே விண்கலம் திரும்புகிறான். திரும்பும்முன் அவள் கேட்கிறாள். ‘நீ கொண்டுபோகும் கேசட்டுகளில் எல்லாம் என்ன இருக்கிறது?”. அதில் அவளுடைய குரலை மட்டுமே அவன் பதிவு செய்து எடுத்துப் போகிறான். ஆனால் அவன் அவளுக்கு ஒரு பொய்யை பதிலாகத் தருகிறான். “இவ்வுலகின் போக்குவரத்து சத்தங்கள், பறவைகள் மற்றும் விலங்குகளின் குரல்கள் உள்ளன” என்று பொய் சொல்கிறான். அவள் நமக்குச் சொல்கிறாள். “இவ்வுலகிற்கு வந்து அவன் பொய் சொல்லக் கற்றுக்கொண்டான். நமக்கு அன்பை கற்றுத்தந்துவிட்டுச் செல்கிறான்”. இக்காட்சியுடன் என்னைப் பொறுத்தவரை படம் முடிந்துவிட்டது. அத்தனை காவியத் தன்மையை அக்காட்சி இப்படத்திற்கு சேர்க்கிறது. அதன்பின் நீளும் காட்சிகள் வணிக சினிமாவுக்கானவை. அவன் பொய்சொல்ல மற்றும் கற்றுக்கொள்ளவில்லை. கடவுளையும் கற்றுச் சென்றிருக்கிறான்!
(’காட்சிப்பிழை’ இதழில் வெளியானது)
அருமை..
ReplyDeletehttp://swthiumkavithaium.blogspot.com/