மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்
துவக்கத்தில், தொடங்கிய மாணவர்கள் உட்பட யாருமே அது இவ்வளவு பெரிதாக உருவெடுக்கும்
என்று நினைத்திருக்கவில்லை. ஆனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் சாரைசாரையாக
இப்போராட்ட இடங்களுக்கு வந்தவண்ணம் இருந்தனர். மிக நேர்மையாகச் சொல்லவேண்டுமெனில் என்
போன்றோருக்கு இப்போராட்டம் முதலில் புரிபடவில்லை. தினமும் சென்னையில் நடந்த போராட்டத்திற்கு
மெரினாவுக்குச் சென்று வந்தாலும் அதில் பங்கேற்கும் மனநிலையுடன் செல்லவில்லை. ஒரு பார்வையாளராக
என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்தான் சென்றேன். ஏனெனில் உணர்வுரீதியாக
இப்போராட்டத்தில் என்னால் பங்கேற்க இயலவில்லை. இதற்குக் காரணங்கள் உண்டு.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாசாரம்
என்றும் அதற்காகவே இந்தப் போராட்டம் என்கிற அறைகூவலை ஏற்றுக்கொள்வதில் எனக்கிருந்த
சிக்கல்கள் பலவேறு வகைப்பட்டது. முதலில் தமிழ்ப்பெண்ணாகிய என்னுடைய கலாசாரத்தில் ஜல்லிக்கட்டு
என்கிற ஒன்றே இல்லை. ஆகவே எந்த அடிப்படையில் இது தமிழ்க் கலாசாரம் ஆகிறது என்பதே எனக்குள்
எழுந்த பிரதானமான கேள்வி. நான் பிறந்து வளர்ந்த டெல்டா மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு
என்கிற இந்த மாடு பிடிக்கும் விளையாட்டு இல்லை. மாட்டுப்பொங்கல் அன்று தஞ்சை பகுதிகளில்
காளைகளுக்கு அழகாக ஜோடித்து, கொம்புகளுக்கு புதுச் சாயம் பூசி, அலங்காரமாக மாடுகளை
ஊர்வலம் விடுவார்கள். சிறுவயதில் இதைத்தான் நாங்கள் ‘ஜல்லிக்கட்டு’ என்று சொன்ன நினைவிருக்கிறது.
அசலான ஜல்லிக்கட்டைப் பார்த்ததெல்லாம் என் குழந்தைப் பருவ ஞாபகத்தில் ‘முரட்டுக் காளை’
திரைப்படத்தில் மட்டுமே. ஆக சில மாவட்டங்களில் சில சாதிகள் மட்டுமே விளையாடும் ஜல்லிக்கட்டை
ஒட்டுமொத்த தமிழர் பாரம்பரியாக தூக்கி நிறுத்துவதில் இந்தப் போராட்டம் முனைப்புடன்
இருப்பது கண்டு இதிலிருந்து விலகி சற்றே தள்ளி நின்றுகொண்டேன். நான் இதில் பங்கேற்க
இயலாமல் இருந்தேனே தவிர ஒரு சோதனைக்களமாக அதில் என்ன நடக்கிறது என்று பார்த்தறிய விரும்பினேன்.
இத்தனை பேர் கூடும் ஒரு களம்,
இதுவரை என் வாழ்நாளில் நான் பார்த்தறியாதது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து
அப்போது தஞ்சை சரஃபோஜி கல்லூரியில் மாணவராய் இருந்த என் தந்தை சொல்லக் கேட்டிருக்கிறேன்,
வாசித்திருக்கிறேன். ஆனால் அப்படியான, அதைவிட பெருங்கூட்டம் கூடிய ஒரு போராட்டத்தை
முதன்முறை கண்ணால் பார்க்கும்போது எழுந்த உணர்வு பல்வேறு வகையான கலவையாய் இருந்தது.
முதலில் திராவிடர் கழகத்திலும் என் பால்யத்திலும், பின் இடதுசாரி இயக்கத்திலும் நான்
பங்குகொண்ட போராட்டங்கள் அல்லது நான் உதிரியானபின், நண்பர்களோடு இணைந்து ஏற்பாடு செய்த
போராட்டங்களுக்கு இவ்வளவு பேர் ஏன் வரவில்லை அல்லது வரவைக்க முடியவில்லை என்கிற கேள்வியே
பிரதானமாக இருந்தது. இத்தனைக்கும் ஜல்லிக்கட்டைவிட அதிமுக்கிய விசயங்கள்தான் அவை. சாதி ஆணவக் கொலைகளோ, செல்லாக்காசு விவகாரமோ அல்லது
அண்ணா நூலக விவகாரமோ, பரமக்குடி படுகொலைகளோ இப்படி மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்சனைகளுக்கு
வராத மக்கள் இந்தப் போராட்டத்தில் மட்டும் பங்குகொண்டதை எப்படியாவது புரிந்துகொள்ள
முயன்றேன். முகநூலில் டி.தர்மராஜ் தொடர்ந்து எழுதியவற்றை வாசித்துக்கொண்டிருந்தேன்.
வெகுசனப் போராட்டம் குறித்த ஒரு குறிப்பை அவர் எழுதியதை வாசித்துக்கொண்டே வந்தபோது
அதில் ஊடகவியலாளரும் தோழருமான விஜய் ஆனந்த் எழுதியிருந்த பின்னூட்டம் ஒன்றை வாசித்ததும்
கண்ணீர் பொங்கியது.
”வாழ்க்கையில்
எல்லாவற்றையும் எதன்
பெயரால் இழந்தார்களோ
அதன் பெயரால்
எதிர்ப்புரட்சியாளனாக வசைபாடப்படுவது
வருத்தமளிக்கிறது.
கண்களில் மின்னி மறையும் குரோதம் குத்திக் கிழிக்கிறது, தருணம் பார்த்து கிடந்த அது”
கண்களில் மின்னி மறையும் குரோதம் குத்திக் கிழிக்கிறது, தருணம் பார்த்து கிடந்த அது”
ஆம்! ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தை விமர்சித்தாலே
துரோகி என்று தூற்றுவதை எப்படித்தான் விளங்கிக்கொள்ள? பெரும்பான்மையோடு ஒத்துப்போகாவிட்டால்
துரோகியா? ஆனாலும் எதன்மீதும் அதீத பற்று இருக்கும்போது அதை விமர்சிப்பவர்கள் துரோகியாகத்
தெரிவது சகஜம்தான். ஆனால் நாம் பற்றுகொண்ட விஷயம் எவ்வகையானது, அது ஜனநாயகபூர்வமானதா,
அதில் சமத்துவம் இருக்கிறதா, அது பாரம்பரியம் என்கிற பெயரில் மீண்டும் நம்மை பின்னோக்கி
அழைத்துச் செல்கிறதா என்றெல்லாம் எண்ணிப் பார்த்தல் மிகத் தேவையாக இருக்கிறது. தலித்துகள் உட்பட, சாதி ஒழிப்பையே முழுமூச்சென எண்ணி
செயல்படுவோரில் பலர் இப்போராட்டத்தில் பங்குகொள்ளாமல் அமைதியாய் கவனித்தனர். பலர் அப்போராட்டத்தை
விமர்சித்தனர். பலர் கலந்தும்கொண்டனர். இம்மூன்று பிரிவினரும் உண்டு இப்போராட்டத்தைப்
பொறுத்தவரை.
இந்தப் போராட்டத்தை முற்றிலும்
நிராகரிக்க இயலாமல், அதே சமயத்தில் பங்குகொள்ளவும் இயலாமல் இரண்டுக்குமிடையே நிற்பது
என்கிற என் மனநிலை எனக்கு சற்று வலி மிகுந்ததாகவே இருந்தது. போராட்டத்தில் பங்குகொள்ளாமல்
இருப்பது குறித்த கவலை இல்லை அது. ஆனால் ஜல்லிக்கட்டுக்காக கூடும் கூட்டம் நியாயமான
வேறு விஷயங்களுக்குக் கூடுவதில்லை என்கிற வலி அதிகம் இருந்தது. பங்குகொள்ளாமல் இருந்ததற்கான
நியாயமான காரணங்கள் இருந்ததுபோலவே முற்றிலும் நிராகரிக்க இயலாததற்கும் எனக்குக் காரணங்கள்
இருந்தன
ஒரு கட்டத்தில் இது ஜல்லிக்கட்டுக்காக
மட்டும் கூடிய கூட்டமல்ல என்று சொல்லப்பட்டதையும் புரிந்துகொள்ள முயன்றேன். ஆம்! இருக்கலாம்.
ஏனெனில் கூட்டத்தில் பலர் பீட்டாவுக்கு எதிராக மட்டும் முழக்கமிடவில்லை. மோடிக்கெதிராக
சசிகலாவுக்கு எதிராக, முதல்வருக்கு எதிராக முழக்கமிட்டனர். அவ்வப்போது முழக்கங்கள்
நாகரிகமாக இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் வந்தன. சில காது கூசும் முழக்கங்களும் உண்டுதான்.
ஆனால் ஒரு வெகுஜனத் திரள் பங்குகொள்ளும் போராட்டத்தின் தன்மை இப்படியாகத்தான் இருக்கமுடியும்
என்கிற யதார்த்தமும் உறைக்கவே செய்கிறது.
என் பள்ளித் தோழி ஒருத்தி, தானுண்டு
தன் குடும்பமுண்டு என்று இருப்பவள். தன் முகநூலில் திடீரென ‘மெரினாவுக்குச் செல்கிறேன்.
போராட்டத்தில் கலந்துகொள்ள’ என்று எழுதி இருந்தாள். உண்மையில் வியப்பின் உச்சிக்கே
சென்றுவிட்டேன். அன்று இரவு அவள் முகநூலில் தன் குழந்தைகள், சகோதரி, அம்மா சகிதம்
‘வீழ்வேனென்று நினைத்தாயோ’, ‘வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்றெழுதப்பட்ட பதாகையை கையிலேந்தி மெரினாவில் நின்றிருக்கும்
படத்தை வெளியிட்டிருந்தாள்.
இவளை இப்போராட்டத்திற்கு இழுத்து
வந்தது எது? நிச்சயம் ஜல்லிக்கட்டு அல்ல. ஏனெனில் ஜல்லிக்கட்டுக்கும் அவளுக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை. அது தமிழர் பாரம்பரியம் என்று சொல்லப்பட்டதுதான். இன்னுமொரு நண்பர்
- போராட்டக் களங்களுக்கு அவரே வந்ததில்லை. ஆனால் தன் மனைவி போராட்டத்திற்கு வரவேண்டுமென
ஆசைப்பட்டதால் அழைத்து வருவதாகத் தெரிவித்தார். ஒரு முறை கோடம்பாக்கம் சந்திரபவன் சிக்னலில்
நின்றுகொண்டிருந்தபோது ஒரு ஆட்டோவுக்குள் ஒடிசலான மெல்லிய உருவமுடைய இளம்பெண்கள் நான்கைந்து
பேர் அமர்ந்திருந்தார்கள். அதிலொருத்தி திடீரென ‘வேண்டும் வேண்டும்’ என கத்த, ‘ஜல்லிக்கட்டு
வேண்டும்’ என மற்றவர்கள் முழக்கமிட சிக்னலில் நின்றிருந்த மொத்த பேரும் திரும்பிப்
பார்த்தனர்.
பொது இடத்தில் இப்படி ஐந்து பேர்
மட்டும் இருந்தாலும் எதுகுறித்தும் கவலைப்படாமல் முழக்கமிடும் இத்தகைய காட்சியை, இடதுசாரி
கட்சிகளிடம்தான் பார்த்திருக்கிறேன். இப்பெண்களின் இம்முழக்கம் குறித்து நான் வெகுநேரம்
யோசித்துக்கொண்டிருந்தேன். நாகப்பட்டினத்தில் சுனாமி தாக்கிய அன்று இரவு 8 மணிக்கு
பேருந்து நிலையம் செல்லும் சாலையின் ஓரத்தில் அப்பா அம்மாவோடு அமர்ந்திருந்தேன். அப்போது
பிரட் விநியோகம் செய்யும் வண்டி வர, அருகில் இருந்த எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் ஓடோடிச்
சென்று அதை வாங்கி வந்து பசியுடனிருந்த தன் குழந்தைக்குத் தந்தார். அப்போது நாங்கள் பேசிக்கொண்டோம் ‘சாதாரண நாட்களில்
இப்படி சாலையோரத்தில் அமர்ந்தால் நம்மை லூசு மாதிரி பார்ப்பார்கள். வேறு நாட்களில்
இப்படி இலவசமாக ஏதேனும் யாராவது கொடுத்தால் போய் அடித்துப் பிடித்து வாங்குவோமா? எத்தனை
வெட்கப்படுவோம்? ஆனால் இன்று அகதி போல் வீடில்லாமல் ரோட்டில் கிடக்கிறோம். குழந்தையின்
பசிக்காக அடுத்தவரிடம் கைநீட்டி நிற்கிறோம்” என்று கண்ணீரோடு பேசிக்கொண்டது நினைவில்
வந்தது. ஆம்! ஒர் அசாதாரண சூழலில் நம் வெட்கம், உடற்கூச்சம், பயம் என எல்லா உணர்வுகளும்
போய் அன்றைக்கு அப்போதைக்கு எது தேவையோ அதைத்தான் செய்வோம். ஆட்டோவில் நான் அன்றைக்குப்
பார்த்த பெண்கள் போராட்டத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்று
யூகிக்கிறேன். ஏதோ ஒரு மனவெழுச்சியை அவர்களுக்கு அது ஊட்டியிருக்கிறது. அதை வெளிப்படுத்தினார்கள்
அவர்கள். ஜல்லிக்கட்டு நல்லது அல்லது கெட்டது என்பதையெல்லாம் தாண்டி இப்பெண்கள் போல
பலரை, போராட்டம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களையெல்லாம் முழக்கமிட வைத்தது
இப்போராட்டம். அதை மிக சாதகமாகவே பார்க்கிறேன். ஒருவேளை இவர்கள் பின்னாளில் அரசியல்
முக்கியத்துவம் வாய்ந்த செல்லாக்காசு விவகாரம் போன்ற அதிமுக்கிய பிரச்சனைகளுக்குக்
குரல்கொடுக்க ஒரு போராட்டம் தொடங்கப்பட்டால் அதில் கலந்துகொள்ள மனரீதியான தயக்கங்களை
இப்போராட்டம் களைந்திருக்கும் என்றே நான் அன்றைக்கு நம்பினேன்.
இசை, நடனம், நாடகம் என ஒரு கொண்டாட்டமாக
மெரினாவில் போராட்டம் தொடர்ந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கைகளில் பிரிந்திருந்தனர்.
சிலருக்கு ஜல்லிகட்டே பிரதானம். சிலருக்கு கோக் பெப்சியும் பிரதானம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு
எதிராக இடதுசாரிகள் நரசிம்மராவ் காலத்திலிருந்து போராடி வருகிறார்கள். ஆனால் அப்போதெல்லாம்
முடியாத ஒன்றை இப்போராட்டம் சாத்தியமாக்கி இருக்கிறது. வணிகர் சங்கங்கள் கோக், பெப்சி
விற்கப் போவதில்லை என அறிவித்திருப்பதை இப்போராட்டத்தின் முக்கியமான பலனாகப் பார்க்கிறேன்.
இத்தனை பெண்கள் வந்த முதல் போராட்டக்
களம் இதுவாகத்தான் இருக்கும். பெற்றோரை மீறி, அல்லது அவர்களே அனுப்பி வைத்து என இப்போராட்டத்தில்
இளம்பெண்கள் பலர் பங்குகொண்டனர். சில பெண்கள் குடும்பத்துடன் குழந்தைகளுடன் வந்திருந்த
காட்சியைப் பார்த்து அதிசயிக்கவே முடிந்தது. இரவு ஒன்றரை மணிக்கு மெரினா மணற்பரப்பில்
காலடி வைத்த இஸ்லாமியப் பெண்களைப் பார்த்தேன். நிறைய இஸ்லாமியர்கள் இப்போராட்டத்தில்
பங்குகொண்டனர். இஸ்லாமியர்களுக்கும் தலித்துகளுக்கும் ஜல்லிக்கட்டிற்கும் சம்பந்தம்
எதுவும் இல்லை. ஆனால் அவர்கள் ஏன் களத்திற்கு வருகின்றனர்? சிறியவர்களும் பெரியவர்களும்
இளைஞர்களுமாக ஏராளமான இஸ்லாமியர்கள் வந்துகொண்டே இருந்தனர். குஜராத்தும் பாபர் மசூதி
இடிப்பும் ஆறா ரணமாக மனங்களில் தங்கிவிட்டபின் இச்சம்பவங்களுக்கான எதிர்வினையை பெரியளவில்
காட்டுவதற்கான களம் இல்லாமல் இருந்தது. தேக்கிவைத்த கோபத்தைச் சுமந்தவாறு அவர்கள் மெரினாவில்
கூடியதை உணரமுடிந்தது. மோடிக்கெதிரான பதாகைகளை ஏந்தியபடி சென்ற இஸ்லாமியப் பெண்களைப்
பார்த்ததும் இப்போராட்டத்தை அவர்களுக்கான வடிகாலாகப் பார்க்கிறார்கள் இஸ்லாமியர்கள்
என்று தோன்றியது.
தலைமையற்ற ஒரு போராட்டத்தில் சிக்கல்கள்
இருந்தாலும், ‘இஸ்லாமியர்கள்’ எப்படி இங்கே வரலாம்?’ என்று குரலெழுப்ப பொன்.ராதாகிருஷ்ணன்
போல ஒரு தலைவர் அங்கில்லை. ஆகவே ஒவ்வொரு பிரிவினரும் அவரவருக்கேற்ற முழக்கங்களை இட்டனர்.
பதாகைகளை ஏந்திக்கொண்டனர். ஒரு விதத்தில் ஜனநாயகமாகத் தெரிந்த இவ்விஷயமே போராட்டத்தை
இறுதியில் முடிவெடுக்க ஆளில்லாமல் சிக்கலாகவும் மாறியது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
பாபர் மசூதி இடிக்கப்பட்டத்தை எதிர்த்தனர். கடவுள் நம்பிக்கை உள்ளவன் தான் அதை இடித்தான்.
அதுபோலவே இப்போராட்டத்தை ஆதரிக்காதவர்கள் அல்ல, ஆதரித்தவர்களே மாணவர்களுக்கு துரோகம்
செய்தனர். காவல்துறை அராஜகத்தில் இறங்கியதற்கு முந்தைய நாள் இரவு நடத்தப்பட்ட பத்திரிகையாளர்
சந்திப்பே இதற்கு சாட்சி.
ஒவ்வொரு நாள் மெரினாவுக்குப் போகும்போதும்,
மோடிக்கு, பாஜகவுக்கு எதிராக முழக்கமிடும் மக்களைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது
என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆகவே கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே உள்ள
சாம்பல் போல, என் மனம் ஒருவித ஊசலாட்டத்திலேயே இருந்தது. அந்நாட்களில் என் மனதிற்குள்
ஒரு சாம்பல் நிறப் பறவை சிறகடித்துக்கொண்டிருந்தது. ஏனெனில் இப்போராட்டத்தால் சில நன்மைகளும்
விளைந்திருக்கின்றன என்பதே அதன் காரணம்.
போராட்டத்தின் துவக்க நாட்களில்,
ஓர் இயக்கத்தின் தலைவர் ஒருவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட ஒரு தகவல் மிகவும் பீதியூட்டுவதாக
இருந்தது. ‘காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும்
வந்து கூடிய ஏபிவிபியின் (பாஜகவின் மாணவர் அமைப்பு) நிர்வாகிகள் இப்போராட்டத்தில் ஊடுருவவேண்டும்
என்று திட்டம் தீட்டி இருக்கிறார்கள். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நாளையில்
இருந்து இந்த ஊடுருவல் நடக்கும். இப்போராட்டம் எந்த வகையிலும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு
எதிராகவோ அல்லது மோடிக்கு எதிராகவோ போய்விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்ற திட்டங்கள் என்னவென்று தெரியவில்லை” என்று பதட்டமாகப் பேசினார். எனக்கென்னவோ போராட்டத்திற்குப்
பிறகு நடக்கும் அத்தனை வன்முறைகளுக்கும் அச்சாரம் அந்த காஞ்சிபுரம் கல்லூரியிலிருந்துதான்
துவங்கி இருக்குமோ என்கிற ஐயம் இருக்கிறது. மருத்துவர் கீர்த்தியின் முகநூல் பதிவு
இதை இந்த ஐயத்தை மேலும் உறுதி செய்தது.
“நேற்று நள்ளிரவில் இருவர் தங்களை அட்மிட் செய்யக்கோரி வந்தனர். எதற்காக அட்மிட் செய்ய வேண்டுமென்று கேட்டபோது போராட்டத்திற்கு தேசிய கொடியை தூக்கிச் சென்றதாகவும் அதைப் பார்த்த ஒரு கும்பல் தங்களை தாக்கியதாகவும் தெரிவித்தனர். அதற்கு ஏன் தாக்கினார்கள் என்று கேட்டபோது தேசிய கொடி வைத்ததால் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். சரி சிகிச்சை அளிக்கலாம் என்று எதுவும் காயங்கள் ஆகி விட்டதா என்று கேட்டபோது அதை பற்றி அவர் எதையும் சொல்லவில்லை.
AR ரிப்போர்ட் மட்டும் வேண்டும் என்று கூறினர்.
AR ரிப்போர்ட் மட்டும் வேண்டும் என்று கூறினர்.
ஆக்ஸிடண்ட்
கேஸ் அடிதடி போன்ற காயங்களுக்கு அந்த சம்பவத்தை வைத்து ஒரு FIR போல Accident register Entry எழுத வேண்டும். ஆனால் அவருக்கு காயங்களே கண்ணுக்கு தெரியவில்லை. சிகிச்சை வேண்டாம் AR ரிப்போர்ட் மட்டும் வேண்டும் என்றார்.
அப்படியெல்லால் தர முடியாது என்று அனுப்பி வைத்தோம். அதைத் தொடர்ந்து அவரைப் போலவே நான்கு பேர் AR போட வேண்டும் என்று வந்தனர். காயங்களே இல்லாத காரணத்தால் முடியாது என்று அனுப்பி வைத்தோம்.
இன்று நியூஸ் பார்த்தபோது தான் விளங்கியது. பிரிவினைவாதிகள் வன்முறையை கையில் எடுத்தனர் என்று பரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. வன்முறையை பிரிவினைவாதிகள் கையிலெடுத்தனர் என்பதை பரப்ப நேற்று இரவிலிருந்தே திட்டங்கள் துவங்கியது என்பது மட்டும் புரிந்தது”
இதுதான் அவருடைய பதிவு.
*
ஜனவரி 22ஆம் தேதி இரவு பத்துமணி
வாக்கில் நண்பர் ஒருவர் என்னிடம் இப்படித் தெரிவித்தார் - ”டிஜிபி அலுவலகத்தில் எனக்கு நண்பர்கள் உண்டு. நாளை
காலை மாணவர்களை அப்புறப்படுத்திவிடும் போலீஸ் என நண்பர்கள் கூறுகிறார்கள்’ என்றார்,
மெரினா போராட்டத்தில் இருக்கும் ஓர் இடதுசாரி தோழரிடம் மட்டும் இத்தகவலை பகிர்ந்துகொண்டேன்.
இது உண்மையா என்கிற சந்தேகம் எனக்கிருந்ததால் இதை மேலும் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால்
ஓர் இனம் புரியாத பயம் கவ்விய அந்த இரவில் வெகுநேரம் உறக்கம் வரவில்லை. காலையில் எழுந்து
தொலைக்காட்சியில் நேரலையைப் பார்த்தபோது இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் முத்தமிட்ட
கைகளாலேயே காவலர்கள் அவர்களை பலவந்தமாக அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார்கள். ஜல்லிக்கட்டு
போராட்டத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ இந்த அராஜகத்தைப் பொறுத்துக்கொள்ளவே
முடியாது என அந்த நொடியில் என் ஊசலாட்டம் நின்றுவிட்டது. என் சாம்பல் பறவை முழுவதும்
கருப்பு நிறமாகி விட்டது அக்கணத்தில்.
கோவையில், அலங்காநல்லூரில், சென்னையில்
என்று காவல்துறையின் அராஜகங்களை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு அலைபேசியில் அழைத்து
பதட்டத்தோடு பேசிய, கண்ணீர் விட்ட தோழர்களில் பலர் இப்போராட்டத்தை எதிர்த்தவர்கள் அல்லது
ஒதுங்கிக்கொண்டவர்கள். ஒருபோதும் கற்பனை செய்துவிட முடியாததொரு கொடூரத்தை காவல்துறை
அரங்கேற்றியது.
23 ஆம் தேதி மாலை இருசக்கரவாகனத்தில்
வன்முறை நடந்த இடங்களுக்குச் செல்ல முற்பட்டபோது, பல இடங்களில் காவல்துறை அனுமதிக்கவில்லை.
சந்துகளுக்குள் நுழைந்து நுழைந்து சென்றபோது பார்த்த காட்சிகள் அச்சமூட்டுபவையாகவே
இருந்தன.
மயிலாப்பூர் சிட்டி சென்டர் அருகில்
உள்ள ரூதர்புரம் டாக்டர் அம்பேத்கர் பாலம் அருகே அப்போதும் எரிந்துகொண்டிருந்தது காவல்துறையினர்
வைத்த தீ. ஒரு காவலர் ஆட்டோவுக்கு தீவைக்கும் காட்சியின் காணொளியைப் பார்த்துவிட்டபடியால்
அந்த இடம் இதுவே என அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சண்முகம்பிள்ளைத் தெருவில் இருந்த
மக்கள் ஒட்டுமொத்தமாக சாலையில் நின்றிருந்தனர். ‘போலீஸ் வந்துச்சு. வீட்டுக் கதவை உடைச்சுட்டாங்க.
எல்லாரையும் அடிச்சாங்க’ என்று கண்ணீரோடு பகிர்ந்துகொண்டர். ரூதர்புரத்திற்குச் சென்றபோது
சூழ்ந்துகொண்ட மக்கள், குறிப்பாக பெண்கள் கிட்டத்தட்ட கதறினர். “கர்ப்பிணிப்பெண்ணை
அடித்தனர். பள்ளியில் படிக்கும் சிறுமிகளை பெண் போலீஸார் அத்தனை தகாத வார்த்தைகளைக்
கேட்டனர். கண்ணில் படுவோரையெல்லாம் அடித்தது போலீஸ். எங்க ஏரியாவில் இருந்து அழைத்துச்
செல்லப்பட்ட ஐந்து பேரைக் காணவில்லை. எங்கே இருக்கிறார்கள் என்கிற விவரமும் சொல்லவில்லை”
என்று அழுதனர். அவர்கள் எடுத்த விடியோவையும் தந்தனர். ராஜி என்கிற இளைஞரை போலீஸ் கையை உடைத்து தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டது. இவரோடு சேர்த்து விமல், கிருபா, மணி, விக்கி என ஐவரை காவல்துறை இழுத்துச் சென்றுள்ளது. அவர்கள் எங்கிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பலவந்தமாக வீட்டுக் கதவுகளை உடைத்து அவர்களை மிரட்டியுள்ளனர். 'போ..போ..போய் தீக்குளிச்சுடு' என்று அடிக்கடி சொல்லி இருக்கின்றனர். தங்கள் வாகனங்களை போலீஸ் அடித்து நொறுக்கியும் எரித்தும் விட்டதென கதறினார்கள்.
எல்லோரையும் அடித்து துவம்சம் செய்தவுடன் 'நைட் திரும்ப வருவோம்' என்றும் மிரட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர். கல்கொண்டு தாக்கியதால் ஒரு பெண்ணுக்கு தலையில் கூரிய கல் பாய்ந்து ஆழமான காயம். காவலர்கள் எறிந்த கற்கள், தாக்கியபோது உடைந்த லத்திகள் என அவர்கள் சேகரித்து வைத்திருந்தனர்.
அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் இதே நிலைமை.
நடுக்குப்பம் பகுதிக்குள் செல்ல அன்று அனுமதி இல்லை. எரிந்த ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய வாசலில்
காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். திருவல்லிக்கேணி ரயில் நிலையம் அருகேயுள்ள பார்த்தசாரதி
கோயில் நுழைவுவாயில் அருகே கடற்கரைக்குள் நுழைய அனுமதி கிடைத்தது. கடலில் இறங்கிப்
போராட்டம் நடத்திய மாணவர்கள் கடற்கரையில் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலரை சந்தித்துப்
பேச முடிந்தது. ஒருவித பதட்டத்தில் அவர்கள் இருப்பதை உணரமுடிந்தது. இரவு பத்துமணி வாக்கில்
கடற்கரை சாலைக்கு வந்தபோது வழக்கறிஞர் ரஜினிகாந்த் குழுவினர் மாணவர்களோடு பேசுவதற்காகச்
சென்றனர். பாரதி சாலை வழியாக இருசக்கரவாகனத்தை செலுத்தியபோது அதிர்ச்சியாக இருந்தது.
அந்த இடமே போர்க்களமாகக் காட்சியளித்தது. எங்கு நோக்கினும் கற்களாகக் கிடந்தன. பெல்ஸ்
சாலையின் வளைவில் பல இருசக்கர வாகனங்கள் தீயில் கருகிக் கிடந்தன.
மறுநாள் இரவு பத்து மணிவாக்கில் நடுக்குப்பத்திற்குச்
சென்றபோதுதான் நிலைமையின் தீவிரம் உணரமுடிந்தது. ரோட்டரி நகர், துலுக்காணம்
தோட்டம் போன்ற பகுதிகளில் மக்கள் தெருக்களில் அமர்ந்திருந்தனர். “போலீஸ்
மிரட்டுது. வந்து அடிப்பாங்களோன்னு பயமா இருக்கு. நைட் வருவோம்னு சொல்லிட்டுப்
போனாங்க” என்று பெண்கள் குமுறினர். ஓர் இளைஞர் கையில் தடியடியால் பட்ட காயத்தைக்
காண்பித்தார். ரத்தம் தோய்ந்து சதை பிய்ந்து வந்திருந்தது. ஒரு பெண் கண்ணீரோடு சொன்னார். "பயமா இருக்குங்க. எதுவுமே செய்யாம நாங்க தினம் பயந்து சாகுறோம். அவரைப் போலீஸ் கூட்டிட்டுப் போனா, நான் தீக்குளிச்சிருவேன்" என்று அழுதார். பின் "இல்லேன்னா அவர் கூடவே வண்டியில குழந்தையோட ஏறிடுவேன். ஜெயில்ல போய் அங்கேயே சாப்புட்டு, அங்கேயே பேண்டு, அங்கேயே தூங்கி அங்கேயே சாகுறோம்" என்றார். காவல்துறை கண்ணில்பட்டவர்களை அடித்து இழுத்துப் போகிறது என்றனர் மக்கள்.
நடுக்குப்பம் பகுதிக்கு அன்று செல்ல
முடிந்தது. போராட்டம் நடந்தபோது அதில்
கலந்துகொண்ட பெண்கள் கழிப்பறை வசதிக்காக மீனவ மக்களின் வீடுகளுக்கு வந்து
சென்றபோது உதவியிருக்கின்றனர் நடுக்குப்பம் பகுதி மக்கள். ஒரு நாள் ஆயிரம் பேருக்கான
சாப்பாடு தயார் செய்து போராட்டத்தில் வழங்கியும் இருக்கிறார்கள். அதில்
காவல்துறையினரும் சாப்பிட்டிருக்கின்றனர். அதே காவல்துறை இப்பகுதியைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப்பெண்ணை ஜனவரி 23 அன்று தாக்கியதில் அவரது கரு கலைந்துவிட்டதை எல்லோரும் துயரத்துடன் பகிர்ந்துகொண்டனர். அவர்களில் பலருக்கும் ”போலீசு அடிச்சு மண்டை உடைஞ்சு கை உடைஞ்சு
கால் உடைஞ்சு ரத்தம் சொட்டச் சொட்ட பயந்து போய் புள்ளைங்க ஓடி வருதுங்க. அதுங்களை
அப்படியே போகச் சொல்லிற முடியுமா? நாங்கதான் தண்ணிகுடுத்து உள்ளே கூட்டிட்டு வந்து
காயத்துக்கு மருந்து போட்டோம். கருப்பு சட்டை போட்டிருந்தா அடிக்கிறாங்கன்னு,
போட்டிருந்த கருப்பு சட்டையைக் கழட்டி வேற சட்டை குடுத்து டூவீலர்ல பசங்களை
கூட்டிட்டுப் போகச் சொல்லி அனுப்பிச்சோம். எங்க சொந்தக்காரங்க, உடம்பு
சரியில்லன்னு பொய் சொல்லி ஏரியாவைத் தாண்டி ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம்.
சில கொழந்தைங்களை இங்கேயே தங்கவச்சு மறுநாள் போய் கோயம்பேட்டுல பஸ்ல
ஏத்திவிடுறதுன்னு செஞ்சோம். கொழந்தைங்க ஊர் போய் சேர்ந்து போன் பண்ணுச்சுங்க..
பத்திரமா வந்துட்டோம். நீங்க பத்திரமா இருங்கன்னு சொன்னிச்சுங்க…….ஆபத்துன்னு ஓடி
வர்ற கொழந்தைங்களுக்கு உதவுறது எப்படி தப்புங்குறாங்க…? கேட்டா தீவிரவாதிங்களுக்கு
ஆதரவு குடுத்தோம்னு சொல்லுது போலீஸ். அதே பசங்களுக்குத்தானே முதல்நாள் வரைக்கும்
பாதுகாப்பு குடுத்தாங்க இவங்க. அப்பத் தெரியலையா தீவிரவாதின்னு” என்று
குமுறுகிறார்கள்.
நடுக்குப்பத்தில் ஒரு பெண் மிளகாய்ப்
பொடியைக் கரைத்து தயாராய் வைத்திருந்து, ஒரு காவலர் வீட்டுக்குள் புகுந்து தாக்கத்
தொடங்கியதும் முகத்தில் ஊற்றிவிட வெறிகொண்ட காவலர்கள் அப்பெண்ணை கண்மண் தெரியாமல்
அடித்திருக்கிறார்கள்.
நடுக்குப்பம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்
முழுவதும் எரிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையினரே எரித்ததாக மக்கள் கூறினர். “ஏதோ
பவுடர் மாதிரி தூக்கிப் போடுறாங்க. உடனே பத்திக்குது. நாங்க எல்லாம் மார்க்கெட்
எரியும்போது உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு வீட்டுக்குள்ளே கிடந்தோம்.
கண்ணெல்லாம் எரிச்சல்” என்றனர். பேராசியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும்
குழு அறிக்கையில் இது ஒருவேளை பாஸ்பரஸாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னால் டெல்டா மாவட்டங்களிலும் சென்னையிலும் குடிசைகள்
தானாக தீப்பற்றிக்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. அப்போதும் பாஸ்பரஸை கூரை மீது வைத்திருக்கலாம்
என சந்தேகங்கள் இருந்தன. (டெல்டா மாவட்ட கிராமங்களில் சாணி உருண்டைக்குள் பாஸ்பரஸை
வைத்து உருண்டையாக்கி கூரைகளில் வைத்துவிடுவார்கள் சமூக விரோதிகள். சாணி உருண்டை
காய்ந்து வெயிலில் வெடித்து உடையும்போது பாஸ்பரஸ் வெளிப்பட்டு கூரை
பற்ற்க்கொள்ளும்)
பெண் ஒருவர், எரிந்த மார்க்கெட்டுக்குள்
தங்கள் கடை இருந்த இடத்தில் ஏதாவது மிச்சமிருக்கிறதா என்று தேடி தீய்ந்துபோன பெரிய
சட்டி ஒன்றை மட்டும் எடுத்து வந்தார். மீன் மார்க்கெட்டுக்கு அருகில் இருந்த பெரிய
மரமும் சேர்ந்து எரிந்திருக்கிறது. ஒவ்வொரு கடையிலும் இருபதாயிரம் ரூபாய்
மதிப்புள்ள மீன்கள் இருக்குமென்று தெரிவித்தனர் மக்கள். சில பெரிய கடைகளில்
ஐம்பதாயிரத்தைக்கூட தொடலாம் என்றனர். அப்படிப் பார்த்தால் பல லட்ச ரூபாய்க்கு
நஷ்டம் இருக்குமென அனுமானிக்க முடிந்தது.
மீன்கள் எல்லாம் கருகி நாற்றமெடுக்கத்
தொடங்கிவிட்டன. புழு வைத்து அந்தப் பகுதியே ஒரு கெட்டநெடி வீசும் இடமாகி இருந்தது.
உடனடியாக இவற்றையெல்லாம் சுத்தம் செய்யவேண்டிய மாநகராட்சி இந்தப் பக்கம் எட்டிப்
பார்க்கவில்லை. அருகிலேயே ஆட்டோக்களும் எரிக்கப்பட்டிருக்கின்றன. பல வாகனங்களின்
கண்ணாடிகள் நொறுக்கப்பட்டு அந்தச் சாலை முழுவதும் கண்ணாடித் துகள்களும்
கற்களுமாகக் கிடந்தன.
மெரினாவை ஒட்டிய பகுதிகள் இவை. ஆனால் சற்றும் சம்பந்தமே இல்லாமல், வடசென்னைப் பகுதிகளான யானைகவுனியில், புளியந்தோப்பு எஸ்.எம்.காலனியில் என மீனவர்கள் மற்றும் தலித்துகள் வாழும் பகுதிகளிலேயே தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாக நடுக்குப்பம் பகுதி மக்களே தெரிவித்தனர். இதிலிருந்தே காவல்துறையின் திட்டங்களை யூகிக்க முடிகிறது மக்களால்.
“ஏதாவது
பிரச்சனைன்னா போலீசுகிட்ட போகலாம். போலீசே பிரச்சனை பண்ணினா நாங்க எங்க போறது’
என்று கேட்கின்றனர் இவர்கள். மார்க்கெட் எரிந்ததால் வாழ்வாதாரம் போயிற்று.
பிரச்சனை தொடங்கிய நாளிலிருந்து கடற்கரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாலும்,
அசாதாரணச் சூழல் நிலவுவதாலும் ஆண்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஆகவே
பிழைப்பில் மண் விழுந்துவிட்டதென குற்றம்சாட்டினர். மக்கள். ஒவ்வோர் இயக்கமாக
மெரினாவை ஒட்டியுள்ள தலித் மற்றும் மீனவ கிராமங்களுக்கு வரத் தொடங்கியுள்ளன.
எல்லோரிடமும் மக்கள் சளைக்காமல் நடந்தவற்றைச் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்ட
இடங்களைக் காட்டுகிறார்கள். இக்கிராமங்களில் உள்ளோர் தாங்களே வன்முறை செய்ததாக
எழுதித் தரவேண்டுமென்று காவல்துறை கேட்பதாகச் சொல்கின்றனர். ‘ஒருபோதும் அதை
மட்டும் செய்யமாட்டோம். போராட்டத்தில் செத்தாலும் சரி. அதைச் செய்யமாட்டோம். இவங்க
எரிப்பாங்க. நாங்க ஒத்துக்கிட்டு கையெழுத்துப்போடணுமா?” என்று கொதிக்கின்றனர்.
குடியரசு தினத்தன்று தமிழகம்
காவல்துறை வன்முறைக்கு பழிதீர்த்தது. மக்கள் பலரும் தேசிய கொடியைக்
குத்திக்கொள்ளவில்லை. சென்னையில் நடந்த குடியரசு தினவிழா முற்றிலும் பொதுமக்கள்
புறக்கணித்த விழாவாக நடந்தேறியது. அன்றைக்கு விழா முடிந்ததும் மெரினா சாலைகள்
திறந்துவிடப்பட்டிருந்தன. நான் மெல்ல காந்தி சிலையைத் தாண்டி இருசக்கரவாகனத்தில் வந்தபோது
வன்முறைகளுக்கு சாட்சியாக இருக்கும் அந்தக் கடற்கரையின் மணலில் பழையபடி கடைகள்
முளைத்திருந்தன. அலைகள் ஆர்ப்பரித்தாலும் மெரினா பேரமைதியாகவே இருந்தது. அவ்வை
சண்முகம் சாலையில் வாகனத்தைத் திருப்பி நடுக்குப்பத்திற்குச் சென்றேன். பிரகாஷ்
காரத், தொல்.திருமாவளவன் ஆகியோர் வந்து சென்றதாக சொன்னார்கள் மக்கள். பல
இயக்கங்களின் தோழர்களை, ஊடகவியலாளர்களை அன்று காண முடிந்தது.
“ஒரு பையனை அடிச்சு ரத்தம்
சொட்டச் சொட்ட வந்தான். அவனை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் துணியால
துடைச்சுவிட்டு உட்கார வச்சிருந்தேன். அவனைத் தேடிக்கிட்டு வந்து இருபது
போலீஸ்காரங்க அடிஅடின்னு அடிச்சாங்க. அவன் அங்கேயே செத்துட்டான்னு நினைச்சேன். ஒரு
கோணியில தூக்கிப்போட்டு இழுத்துட்டுப் போனாங்க. அவன் உயிரோட இருக்கானான்னு தெரியல”
என்று அழுத 85 வயது மூதாட்டி ஒருவர் மூத்தவர் என்று கூட பாராமால் தன்னையும் காவல்துறை
அடித்ததாக முட்டியில் காயத்தைக் காட்டினார்.
இந்த மொத்த வன்முறையிலும்
காவல்துறையின் ஒரு நடவடிக்கையை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியிருக்கிறது. அவர்கள்
அடித்து யாரேனும் மயங்கி விட்டால் அவர்களை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடவில்லை.
தூக்கிக்கொண்டு போய் தங்கள் வாகனத்தில் ஏற்றுவதை எல்லோருமே பார்த்திருக்கிறார்கள்.
அவர்கள் யார், எத்தனை பேர், மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டார்களா அல்லது
எங்கேனும் இறக்கி விடப்பட்டார்களா, தூக்கிவீசப்பட்டார்களா என எந்தத் தகவலும்
தெரியவில்லை.
நடுக்குப்பம் மக்கள் ஒரு
வாளியில் காவல்துறை பயன்படுத்திய கற்கள், அடித்த லத்திகள், உடைந்தவை, ரப்பர்
குண்டுகள், கண்ணீர்ப் புகைக்குண்டுகள் என எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக்
காண்பித்தனர். ஒரு துணியைக் காண்பித்து, “இதைத்தான் போலீஸ்காரங்க முகத்தில்
கட்டிக்கிட்டு வந்தாங்க” என்று காட்டினர். அன்றைக்கு எரிந்த மார்க்கெட்டில் இருந்த
மீன்களைக் காணவில்லை. “யார் வந்து சுத்தம் செய்தது?” என்று கேட்டதற்கு, “யார்
வருவாங்க. அவங்கவங்க கடையில் இருந்த மீனையெல்லாம் அவங்கங்க எடுத்துப்
போட்டுட்டோம். நாத்தம் தாங்கலை” என்றார். 23 அன்று காலை நடுக்குப்பம் மீது
தாக்குதல் தொடங்குவதற்கு முன்னாலேயே நடந்த தடியடியில் சில மீன்பெட்டிகளில் கீழே
விழுந்துவிட, அதிலிருந்து ஒவ்வொன்றும் 20000 ரூபாய் மதிப்புள்ள மீன்களை காவல்துறை
திருடிச்சென்றதாகவும் கூறினர்.
காவல்துறையினரே தீவைத்த
விடியோக்களைப் பார்த்து தமிழகம் அதிர்ந்துதான் போயிருக்கிறது. சிலர் காவல்துறை
முதன்முறையாக தீவைப்பு சம்பவங்களில் ஈடுபடுவது போல் எண்ணுகின்றனர். அப்படியல்ல.
இப்போது ஆயிரம் கேமராக்கள் செல்போன் வடிவில் காவல்துறையினரை சுற்றி இருக்கின்றன.
ஆகவே கையும் களவுமாகப் பிடிபடுகிறார்கள். இதற்கும் முந்தைய எத்தனையோ கலவரங்களை
காவல்துறையே தூண்டிவிட்டிருக்கலாம் என்பதையும் நாம் ஒதுக்கிவிடமுடியாது. அரசு
எதுவும் செய்யும். பயங்கரவாதம் உட்பட.
”போராட்டத்துக்கு செலவு
செய்திருக்கேன். ஆகவே நான் மேடையேறுவேன்” என்று அசிங்கமாக அரசியல் செய்தவர்களோ,
தமிழ் தமிழ் என்று உணர்வுகளைத் தூண்டிவிட்டு, ஜல்லிக்கட்டு என்கிற ஒற்றைக்
கோரிக்கைக்கு அவசரச் சட்டம் இயற்றப்பட்டவுடன், ’காவிரியா? விவசாயியா? மரணமா?
மோடியைத் திட்டுவதா? அதெல்லாம் இங்கே கூடாது. போராட்டத்தை திசைதிருப்பக் கூடாது’
என்று சொல்லி கைவிட்டவர்களோ யாரும் இறுதிவரை மாணவர்களோடு நிற்கவில்லை. பாதுகாப்பு
அரணாக, உணவிட்டு, உறைவிடம் தந்து, குழந்தையைப் போல் பாதுகாத்து அனுப்பிவைத்த
எளியமக்களோடுதான் தாங்கள் நிற்கவேண்டும் என்பதை போராடியவர்கள் இன்று
உணர்ந்திருப்பார்கள். தங்களுக்கு உதவிய எளிய மக்கள் அதற்காக பழிவாங்கப்படும்
செய்தியைக் கேட்டும் பார்த்தும், தொலைவில் தங்கள் ஊர்களில் வீடுகளில்
இச்செய்தியைப் பார்த்து கண்ணீர் விட்டிருக்கக்கூடும் என்றே நான் நம்புகிறேன்.
மெரினாவை ஒட்டிய பகுதிகளில்
நிலைமை இப்படியிருக்க, ஜனவரி 23 அன்று வடபழனியில் நடந்த துப்பாக்கிச் சூடு அதிர
வைத்தது. வானத்தை நோக்கி காவலர்கள் சுடுவதை மூன்று வெவ்வேறு காணொளிகளில் வெவ்வேறு
கோணத்தில் காண முடிந்தது. ஆனால ஓரிரு செய்தி சேனல்களைத் தவிர எந்த ஊடகத்திலும்
இதுகுறித்த செய்தி வெளியாகவில்லை. அன்றிரவு வடபழனியில் காவல் நிலையத்துக்கு எதிரே
இருந்த இஸ்லாமியர் குடியிருப்பில் முகத்தில் துணி கட்டிக்கொண்டு அடையாளம் தெரியாத
நபர்கள் தெருவில் இருந்த வாகனங்களையெல்லாம் அடித்து எரித்து சேதப்படுத்திவிட்டு,
கண்ணில் படுவோரையெல்லாம் அடித்துத் தாக்கியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த
நண்பரொருவர் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
மெரினாவில் நடக்கவேண்டிய போலீஸ்
வன்முறை அங்கிருந்து இஸ்லாமியர்கள் நிரம்பிய ஐஸ் ஹவுஸ் பகுதி உள்ள
திருவல்லிக்கேணிக்குத் திரும்பியதும், வடபழனி சம்பவங்களும் தற்செயலானதென நம்ப
முடியவில்லை. இதற்கிடையே பொன்.ராதாகிருஷ்ணன் வேறு இஸ்லாமியர்களுக்கு பொது இடத்தில்
என்ன வேலை என்கிறார். காஞ்சிபுரத்தில் கல்லூரியில் ஏபிவிபி கூட்டம் நடக்கிறது.
நடுக்குப்பம் பகுதி வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு ஒன்றிருக்கிறது.
‘போலீஸ்காரன் ஏன் முகத்தில் துணி கட்டிக்கிட்டு, ஹெல்மெட் போட்டுக்கிட்டு
வர்றாங்க. எங்களுக்குத் தெரிஞ்சாகணும்’ என்கின்றனர். ஹிப்ஹாப் ஆதி உட்பட சிலர்
நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு மத்திய மாநில அரசுகளின் ஏற்பாட்டில்தான்
நடந்ததென குழந்தைகூட அறியும். அவர்கள் டெல்லி சென்று பாஜக அமைச்சர்களை
சந்தித்துவிட்டு வந்தபின் தான் இப்பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது என்பதை
மறந்துவிடக் கூடாது.
மிக அமைதியாக போராடிய மாணவர்களை
வன்முறை பிரயோகித்துக் கலைத்த காவல்துறையை ஒருபோதும் மன்னிக்க முடியாது.
மெரினாவில் தடியடி நடத்தவில்லை என்று சொல்லிக்கொண்டே வெளியே வந்த மாணவர்களை
சாலைகளின் முடிவில் தடுப்புகள் போட்டுவைத்து வியூகமிட்டு கடலுக்கும் நகரத்திற்கும்
இடையேயான பகுதியில் அடித்து நொறுக்கிய காவல்துறையின் படுபாதகச் செயலைக் கண்ணுற்ற
எவருக்கும் இந்நாட்டின் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை போயிருக்கும்.
அக்காட்சிகளைக் கண்ணுற்ற எவரும்
தங்கள் பிள்ளைகளை இனி போராட்டத்துக்கு அனுப்ப மாட்டார்கள். குடும்பம் குடும்பமாக
வந்தவர்கள் தனியாகக்கூட வருவார்களா இனி என சந்தேகமாக இருக்கிறது. இதையே
காவல்துறையும் மாநில அரசும் மத்திய அரசும் விரும்புகின்றன. அதற்காகவே இந்தத்
திட்டமிட்ட தாக்குதலும் வன்முறைகளும். State sponsored terrorism என்றால் எப்படி
இருக்கும் என முழுமையாக தமிழகம் உணர்ந்துகொண்ட நாட்கள் இவை. அத்தோடு போராடிய
மாணவர்கள் தங்கள் நண்பர்கள் யார், எதிரிகள் யார், துரோகிகள் யார் என எல்லோரையும்
அடையாளம் காட்டிய நாட்கள் இவை.
அருமையான பதிவு.
ReplyDeleteமிகவும் நன்று ...
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News