பாசிசத்தின் கூறுகள் எப்படி இருக்குமென உணர்த்துகிறது
நம்மைச் சுற்றியுள்ள இருள். குஜராத் முதல்வராய் இருந்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக
அறிவித்து நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற பின்னரான இந்தியாவில் வசிக்கும்
ஒவ்வொருவரும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உச்சமாக, தமிழ்நாட்டில் தற்போது நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்துமே மக்களுக்கு
ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இருண்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை தமிழக
மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த இருண்ட காலத்தின் வெளிச்சக்கீற்று என்று நாம் எதைச் சொல்ல
முடியும்? இருண்ட காலத்தில் இருக்கிறோம் என்பதை மக்களுக்கு
உணர்த்தும் படைப்புகளைத்தான். அப்படியனா ஒரு படைப்புதான் காலா.
போராடும்
மக்களை சிறைக்குத் தள்ளும், துப்பாக்கியால் சுட்டுத் தள்ளும் அரசு நமக்கு வாய்த்திருக்க,
நமக்கு இன்றைக்கு நேர்வதை ஒரு திரைப்பட இயக்குநர் குறைந்தபட்சம் ஓராண்டு முன்னரே தீர்க்கதரிசி
போல் உணர்ந்து ஒரு திரைப்படத்தைத் தந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது காலா.
வெறும்
திரைப்படம்தான் என்று ஒதுக்கிவிட முடியாத படம். ஒரு திரைப்படமாக காலா நமக்குள் ஏற்படுத்தும்
சிந்தனைகளும் காட்சியனுபவமும் அலாதியானவை. இதற்கு முன்னான பா.இரஞ்சித்தின் திரைப்படமான
‘மெட்ராஸில்’ அப்படத்தை ஒரு வெகுஜன சினிமாவாகவும் ரசிக்கமுடியும். அரசியல் சினிமாவாகவும்
ரசிக்க முடியும். ’கபாலி’யில் ரஜினி என்கிற உச்ச நடிகருக்கான சில விஷயங்களும் இருக்கும்.
அதே சமயத்தில் இரஞ்சித் நம்பும் தலித் அரசியலுக்கான வசனங்களும் காட்சிகளும் இருக்கும்.
தலித் அரசியல் என்றால் என்னவென்றே அறியாதோரும்கூட கபாலியை ரசிக்கலாம். ஆனால் காலா அப்படியல்ல.
இப்படத்தின் அடிநாதமாக இழையோடும் ‘நிலம் எங்கள் உரிமை’
என்கிற விஷயத்தைப் புரிந்துகொள்ள முடியாதவர்களால் இப்படத்தின் அரசியலோடு ஒன்றிப்போக
முடியாது. குறிப்பாக அதிகாரத்திற்கு அடிபணியும் குணமுள்ளவர்களும், வளர்ச்சி என்கிற
பெயரால் அரசு சொல்லும் அத்தனைத் திட்டங்களும் நம்மை உய்விக வந்தவை என நம்புபவர்களும்,
அத்தோடு அத்திட்டங்கள் எவ்வளவு அபாயகரமானவை என்று தெரிந்திருந்தாலும் சொந்த ஆதாயங்களுக்காகவும்,
கொண்ட தவறான கொள்கைகளுக்காகவும் முட்டுகொடுப்போரும் காலாவை எதிர்க்கவே செய்வர்.
மக்கள்
பிரச்சனையைப் பேசுகிறது என்பதற்காகவே ஒரு படத்தை சிறந்தபடம் என்று சொல்லிவிட முடியாது.
திரைப்படம் என்கிற கலை கோரும் விஷயங்கள் பல்வேறு வகைப்பட்டவை.
பார்வையாளர்களை உணர்வுரீதியாக தாக்கவேண்டும். மக்களுக்கான சினிமா எத்தனையோ வந்திருந்தாலும்
எல்லாவற்றையும் நாம் கொண்டாடுவதில்லை. ஏனெனில் அவை சினிமாவாக இருந்தனவா என்பது முக்கியம்.
வெகுசில படங்களே கலையும் அரசியலும் சரியான கலவையாகி நிற்பவை. அந்த வகையில் காலாவின்
கச்சிதமான கதை சொல்லும் பாங்கும், அழகியல் மிகுந்த காட்சிகளும் வெறும் அரசியல் சினிமா
என்பதைத் தாண்டி ஒரு செவ்வியல் தன்மையுடன் அமைந்திருப்பதே காலாவுக்கான இத்தனை கொண்டாட்டங்களுக்கும்
பின்னணியில் இருப்பது.
திரைப்படங்களின்
ஓர் அங்கமாகவே ஆகிவிட்ட நாயக பிம்பம் இத்திரைப்படத்தில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் அறிமுகக் காட்சி மிக சாதாரணமாக அமைக்கப்பட்டிருப்பதை ஓர் எடுத்துக்காட்டாகச்
சொல்லலாம். இந்நாயகன் வழக்கமான ரஜினி பட நாயகன் இல்லை என அக்காட்சியில் மிடில் ஸ்டம்ப்
எகிற அவுட் ஆகி, அதற்கும் நோ பால் கேட்கும் காலா சொல்லாமல் சொல்கிறார், தொடரும் காட்சியில்
பூமி பூஜை நடைபெறும் இடத்துக்கு வரும் காலா, போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்ணை அடித்தது
யார் எனக் கேட்கிறார். சராசரி ரஜினி ரசிகர்கள் இந்த இடத்தில் ‘தலைவர் அவனை அடி பின்னப்
போகிறார்’ என்று எதிர்பார்த்தவாறே அமர்ந்திருக்க, காலாவோ, அப்பெண்ணை அழைத்து ‘அவனைத்
திருப்பி அடி’ என்கிறார். நாயகன் அல்லவா அடிக்கவேண்டும்? ஆனால் காலா ஏன் அப்படிச் செய்கிறார்
என குழம்புகிறார்கள் ரசிகர்கள். பின் அடுத்துடுத்து வரும் காட்சிகளில், தாம் பார்த்துக்கொண்டிருப்பது
வழக்கமான ரஜினியை அல்ல என்று அவர்களுக்குப் புரிகிறது,. முழுக்க முழுக்க இயக்குநருக்காக
தம்மை ஒப்புக்கொடுத்த ஒரு நடிகரைத்தான் காலாவில் பார்க்க முடிகிறதேயொழிய, ரஜினியைக்
காணவில்லை. கபாலியிலும் சரி, காலாவிலும் சரி, அதற்கு முன்
காணாமல் போயிருந்த ஒரு மகாகலைஞனை நம்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இரஞ்சித்.
ரஜினியை அவருடைய அரசியல் தாண்டி நாம் இப்படத்தில் ரசிக்க முடிந்ததற்குக்
காரணமே அவர் முழுமையான நடிகராக
தன்னை வெளிப்படுத்தி இருப்பதுதான். ரஜினி தன் வயதுணர்ந்து முதிர்ந்த பாத்திரத்தில்
தோன்றுவதும், தன் முதுமையை அவரே ஒரு வசனத்தில் ஒப்புக்கொள்வதும் மாற்றத்தை நோக்கிய
பயணம். ‘நீ மட்டும் எப்படி சின்னப்பொண்ணாவே இருக்கே? என்னைப் பாரு. வயசாகி தலையெல்லாம்
வெள்ளையாகி..’ என்கிற அந்த இயல்பான அந்த வசனம்கூட ரஜினி
பேசுவதால் நமக்கு முக்கியமாகத் தெரியும் அளவிற்கு இதுவரையிலான ரஜினி படங்கள் இருந்திருக்கின்றன
என்பதும் உண்மை.
’நிலம்
எங்கள் உரிமை’ என்கிற முழக்கத்தை முன்வைக்கும் காலா திரைப்படத்தின்
வெளியீட்டுக்கு முன்பும் பின்பும் தமிழ்நாட்டில் நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும்
உக்கிரமான போராட்டங்கள் எல்லாம் நிலம் தொடர்புடையவை. சேலம் – சென்னை எட்டுவழிச்சாலையில்
பறிக்கப்படும் விளைநிலங்களும் கதறும் மக்களுமாக, காண்போரை ஆக்ரோஷம் கொள்ளச் செய்யும்
அரசியல் அநியாயங்கள் நடைபெறும் இக்காலகட்டத்தில் ஒடுக்கப்படுவோரின் உரிமைக்குரலை உரத்து
ஒலித்திருக்கிறது காலா.
நிலம்,
நீர், காற்று என அனைத்தும் கொள்ளை போகின்றன. இக்கொள்ளையை முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசின் துணையோடு நடத்துகின்றன. அவை
எந்தெந்த உருகொண்டு வரும் என்பதைக் காலாவில் காணலாம். அடுக்குமாடிக் குடியிருப்பு என்று
ஆசை காட்டும். என்.ஜி.ஓ.க்கள் மூலமாக உடன்
நிற்பதான பாவனை காட்டும். அதை நம்பும் மக்கள் எவ்வாறெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள்
என்பதையும் நாம் நிஜத்தில் காண்கிறோம். இவை அப்படியே காலாவில் காட்சிகளாக வருகின்றன.
நிலம் கையகப்படுத்தவேண்டும்; ஆனால் மக்கள் அதற்குத் துணைபோகவில்லை எனில் அரசு என்னவெல்லாம்
செய்யும்? மின்சாரத்தைத் துண்டிப்பது, குடிநீர் இணைப்பைத் துண்டிப்பது என அதிகார துஷ்பிரயோகத்தில்
ஈடுபடும். அப்படியும் அவர்கள் மசியவில்லை எனில் அவர்களின் குடிசைக்கு அரசே தீ வைக்கும்.
இது சென்னை மாநகரில் நாம் கண்ட உண்மை. சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு
எதிரேயுள்ள மர்கீஸ் கார்டன் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டது.
எப்படி தீப்பிடித்தது என்றே தெரியாது. தீடீர் தீயில் குடிசைகள் எரிந்து சாம்பலாகும்.
இப்படித்தான் அடிக்கடி விபத்துகளை நடத்தி அம்மக்களை மாநகருக்கு வெளியே பெரும்பாக்கம்,
கண்ணகி நகர், செம்மஞ்சேரி என தொலைவான பகுதிகளுக்குக் குடியமர்த்திவிடுகிறது அரசு. இத்தீவிபத்துகளுக்கு
அப்போதைய அமைச்சராக இருந்த பா.வளர்மதியையே மர்கீஸ் கார்டன் பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
மர்கீஸ் கார்டன் மட்டுமல்ல சென்னை மாநகரின் ஏராளமான ‘திடீர்
நகர்’களுக்கு இந்த நிலைதான். இந்த நிஜங்கள் எல்லாம் காலாவில் காட்சிகளாக வருகின்றன.
2015ல் நாம் பார்த்த மெரினா போராட்டம், அதில் காவலர்களின் வன்முறை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு
என அனைத்தையும் நாம் திரையில் பார்க்கிறோம்.
காலாவின்
வசனங்கள் மிகக் கூர்மையானவை. நானறிந்தவரை ’பாசிசம்’ என்கிற சொல் முதன்முறையாக தமிழ்
சினிமாவில் வருகிறது. ‘எதிர்த்து கேள்வி கேட்டால் கொலைன்னா அது பாசிசம்’ என்கிறாள்
சரீனா. அதுபோலவே ‘ஜெய்பீம்’ முழக்கம் ஒலித்த முதல் படம் இதுதான்.
”வந்துட்டாங்க என்.ஜி.ஓ. மேடம்” என பின்னணியில்
ஒலிக்கும் சமுத்திரகனியின் குரல் கூட ஓர் அரசியல் பேசுகிறது. “ஏ… காக்கி டவுசரு…ஓடிரு”
என்பது இன்னொரு எடுத்துக்காட்டு. மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, பா.இரஞ்சித் ஆகியோரின்
பங்களிப்பில் இயல்பான ஆனால் எதிராளியை வீழ்த்திவிடும் வசனங்கள் குறிப்பிடத்தக்கவை.
அது போராட்டக் காட்சியாக இருந்தாலும் சரி. காதல் காட்சியாக இருந்தாலும் சரி.
சரீனாவுக்கும்
காலாவுக்குமான காதலைச் சொன்னவிதமும், அந்த ‘கண்ணம்மா’ பாடலும் உமாதேவியின் ’ஊட்டாத
தாயின் கனக்கின்ற பால்போல் என் காதல் கிடக்கின்றதே’ போன்ற வரிகளும், காலா-சரீனா இணைக்கான சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும்.
இப்படத்திற்குள் இன்னொரு சினிமாவை ஒளித்துவைத்திருக்கின்றன.
எப்படி பல ஆண்டுகளுக்கு முன் சிம்னி விளக்கின்
வெளிச்சத்தில் முதன்முதலில் சந்தித்தார்களோ அதே போல ஆண்டுகள் பல கடந்தபின் அதே போன்றதொரு
மின்சாரமில்லா நாளில் விளக்கு வெளிச்சத்தில் சந்திக்கிறார்கள்
சரீனாவும் காலாவும். சரீனாவைப் பார்த்தபின் மாறும் காலாவின் முகபாவமும், சரீனாவின்
மகளை தலைகோதும்போதும் கண்ணில் தெரியும் வாஞ்சையுமாக ரஜினிக்குள் இருக்கும் காதலன் மிகச்
சரியாக சில நொடிகளுக்கு திரையில் மின்னி மறைகிறார்.
காலா தன் முன்னாள் காதலியை சந்தித்துவிட்டு வந்தபின், ‘திருநெல்வேலிக்கு ஒரு டிக்கெட் போடு. நானும் ஒரு எட்டு பார்த்துட்டு வாரேன்’ என்று சொல்லும் செல்வி பாத்திரம் தமிழுக்குப் புதிது. ஆணின் பழைய காதலை ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண்ணின் முன்னாள் காதலை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ‘அழகி’ திரைப்படத்தில் நாயகன் தன் முன்னாள் காதலியை தன் வீட்டிலேயே வேலைக்கு வைத்துக்கொள்வதுபோல ஒரு நாயகியால் செய்ய முடியுமா தமிழ் சினிமாவில்? அநேகமாக அடுத்தடுத்த பா.இரஞ்சித் படங்களில் இது சாத்தியமாகக் கூடும் என்பதற்கு சாட்சியாய் இந்த ஒரு காட்சி இருக்கிறது.
சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் காட்சியொன்று உண்டு. ‘‘கைகொடுத்துப் பழகுங்க சார். அதுதான் ஈக்வாலிட்டி. கால்ல விழச் சொல்றது இல்லை” என்று கூறி சமத்துவம் என்றால் என்னவென காட்டுகிறாள் சரீனா. படத்தின் இன்னொரு பாத்திரமான புயல் கலகக்காரியாக வருகிறாள். ‘இவங்களுக்கு திருப்பி அடிக்கத் தெரியாது’ என்று சொல்லும்போது வந்து திருப்பி அடித்துவிட்டு ‘கொடி பிடிக்கவும் தெரியும், திருப்பி அடிக்கவும் தெரியும்’ என்கிறாள். வன்முறையின்போது காக்கி அணிந்த காவலர்களால் அவளுடைய உடை உருவப்பட்டு தரையில் கிடக்கிறது. அந்த உடைக்கு அருகிலேயே லத்தி ஒன்று கிடக்கிறது. கணநேரத்தில் அவள் முடிவுசெய்து உடையை விட்டுவிட்டு லத்தியை எடுத்து அவர்களைத் தாக்கத் துவங்குகிறாள். பெண் எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்கிற தெளிவோடு இருக்கிறாள் புயல். இதுவரையிலான தமிழ்த் திரைப்படங்களில் இப்படியான காட்சிகளில் நாயகன் வந்து அவன் போட்டிருக்கும் உடையை தூக்கியெறிய நாயகி அதை அணிந்து கொண்டு பயந்து நடுங்கிக்கொண்டு நிற்பாள். நாயகன் வில்லன்களிடம் சண்டையிடுவான். இந்தக் காட்சிகளைக் கண்டு சலித்த கண்களுக்கு பெண் விஸ்வரூபமெடுக்கும் இக்காட்சி எத்தனை பெரிய ஆறுதல்! தொன்றுதொட்டு பெண்ணை பலவீனமாக்க அவளது
நடத்தை பற்றி அவதூறு கிளப்புவதோ அல்லது பொதுவில் அவளை துகிலுரிவதோதான் நடக்கிறது. உடையில்
எதுவுமில்லை என்கிறாள் புயல். ’நீ என்னை அவமானப்படுத்த என் உடையை உருவினால் அது என்
மயிருக்குச் சமம்’ என்று அதை உதறிவிட்டு ஆயுதத்தை கையிலெடுத்து திருப்பித் தாக்குகிறாள்.
’பெண்ணிய நோக்கில் காலா’ என்பது தனியே எழுதப்படவேண்டிய கட்டுரை.
தமிழ் சினிமா வரலாற்றில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பு என்பது 1992க்கு
முன்னும் பின்னும் என பிரிக்கலாம். இஸ்லாமியர்களை இயல்பாக காட்டிய படங்கள் மிகவும்
குறைவு. அதிலும் அண்மைக்காலத்தில் இந்தப் போக்கு ‘விஸ்வரூபம்’ எடுத்தது. கடும் நெருக்கடிக்கும்,
ஒடுக்குமுறைக்கும் ஆளான ஒரு சமூகமாக இஸ்லாமியர்கள் உள்ளனர். வில்லன்களாகவும் தீவிரவாதிகளாகவுமே
பெரும்பாலும் காட்டப்பட்டு வந்த தமிழ் சினிமா வரலாற்றில் இப்படம் அவர்களை இயல்பானதாகக்
காட்டுகிறது. காலாவின் முன்னாள் காதலியான சரீனா பத்தமடையிலிருந்து சென்று மும்பையில்
குடியேறிய இஸ்லாமியக் குடும்பத்தின் பெண். ஃபிளாஷ்பேக்கில் காட்டப்படும் அவர்களின்
காதல் கதை அனிமேஷனாக விரிவது ஒரு நல்ல யுக்தி. அவர்களின் திருமண மேடை ஹரிதாதா செய்த
கலவரத்தில் எரிய அவர்கள் அன்றோடு பிரிகிறார்கள்.
இஸ்லாமியர்களும் இந்துக்களும் தாராவியில் ஒன்றுகலந்து வாழ்வதை பதிவு
செய்கிறது படம். அதற்கான எந்த மெனக்கெடலும் இல்லாமல் மிக இயல்பாகவே பாத்திரங்கள் உருவாக்கப்படிருப்பது
ஒரு பெரும் ஆறுதல். காலாவின் மணிவிழாவில் பாடல் பாடும் இஸ்லாமியர்கள் மனதைக் கவர்கிறார்கள்.
தாராவியில் கலவரத்தை மூட்ட முயலும் ஹரிதாதாவின் ஆட்கள் மசூதியில் தொழுகை வேளையில் பன்றிக்கறியை
எறிவதும், அதே நேரத்தில் இந்து கோயில் ஒன்றில் குண்டு வெடிப்பதும் இரு தரப்பினரும்
ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடிவரும்போது அவர்கள் ஹரிதாதாவின் ஆட்கள் என்பதை கண்டுகொள்ளும்
காலா மக்களிடம் அவர்களைப் பற்றி சொன்னதும் மக்கள் அவர்களை துரத்தி அடிக்கிறார்கள்.
காலாவுக்காக இஸ்லாமியர் ஒருவர் நெஞ்சில் குண்டு பாய்ந்து இறக்கிறார். இப்படி சமத்துவம்
என்பதை வார்த்தைகளில் சொல்லாமல் காட்சிவழி சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குநர். ‘எஜமான்
காலடி மண்ணெடுத்து நெத்தியில் பொட்டு வைத்த’ தமிழ் சினிமாவில் நாயகன் வரும்போது எழுந்து
நிற்கும் மக்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு பேசும் காலாவும், நலம் விசாரிப்பவரை கட்டி
அணைத்துக்கொள்ளும் காலாவின் நண்பன் வாலையப்பனும்தான் இன்றைய தேவை.
“சோஷலிசம் என்பது நம் முன்னோர்களின் திட்டத்தை அப்படியே நகல் எடுப்பது அல்ல. கொள்கைகளை அப்படியே நகல் எடுத்ததுதான் 20-ம் நூற்றாண்டில் நாம் செய்த மிகப்பெரிய தவறு. தனித்தன்மையோடு, இப்போதுள்ள வேறுபாடுகளோடு ஒவ்வோர் இனத்தில் இருந்தும் உருவாகும் மக்கள் சக்தியில் இருந்தும் நாம் அந்தந்தப் பகுதி சார்ந்த, மண் சார்ந்த சோஷலிச சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்கிறார்
வெனிசுலாவின் முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ். அவரை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.
“புத்தகத்தைப் படிச்சிட்டு
மக்களோட மனசைப் படிக்காமலிருக்கும்” மகனைத் திட்டும் காலாவின் விமர்சனமும் சாவேஸ் வைக்கும்
அதே விமர்சனம்தானே? அதை ஏற்பதில் என்ன பிரச்சனை? இங்கு நட்பு முரணா பகை முரணா என்பதையும்
கணக்கிலெடுக்கவேண்டியுள்ளது. இது நட்பு முரண்தான் என்பதற்கு சாட்சியாக காலா சொல்லும்
இன்னொரு வசனம் உண்டு. தாராவியிலிருந்து வெளியேற நினைக்கும் தன் மகன்களுக்கு லெனினைக்
காட்டி “அவன் இந்த மண்ணு மேலயும், மக்கள் மேலயும் வச்சிருக்கிற பற்றுமேல துளிகூட சந்தேகம்
இல்ல” என்கிறார். எனக்கு இந்த வசனமே முக்கியமாகப் பட்டது.
படத்தின் பாடல்கள் அனைத்தும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை. குறிப்பாக
‘நிலமே எங்கள் உரிமை’ பாடலின் வரிகளிலும் காட்சிகளிலும் அத்தனை நேர்த்தி. அக்காட்சிகளில்
இடிந்தகரை தொடங்கி தமிழகத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு போராட்டங்களும் நம் நினைவில்
வந்துபோகின்றன. காவல்துறை செய்யும் கலவரத்தில் நீருக்குள்ளிருந்து வெளியே வரும் போராட்டக்காரர்களை
மீண்டும் லத்தியால் அடித்து மூழ்கடிக்கும் காட்சியில் மாஞ்சோலை நினைவில் மோதுகிறது.
எரிந்த வீடுகளில் எஞ்சியவற்றைப் பார்த்து வாலையப்பன் அழும் காட்சியிலும், ‘என் பாடப்புத்தகங்கள்
எரிஞ்சுபோச்சு’ என்று பெண்குழந்தையொன்று கண்ணீர் விடும் காட்சியிலும் தர்மபுரியில்
நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி என எரிந்த ஊர்களின் மிச்சங்கள் புகைந்துகொண்டிருந்த
காட்சி நினைவில் நிழலாடி கண்ணீரை வரவழைக்கின்றன.
மிகப்பெரும்
பலம் ராமலிங்கத்தின் கலை இயக்கம். எது செட், எது நிஜ தாராவி என்று கண்டறிய முடியாதபடியான
அவரது குழுவினரின் உழைப்புக்கு வாழ்த்துகள். பெரியார் சிலை, புத்தர் கோயில் என தாராவியை
கண்முன் நிறுத்துகிறார். உழைக்கும் மக்களின் நிறமாகிய கருப்பும், தூய்மையின் தூதாகப்
போற்றப்படும் வெள்ளையும் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதம் அபாரமானது. வில்லன் ஹரிதாதாவின்
வீட்டில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அத்தனை வெண்மை. அப்பழுக்கில்லாத வெண்மை, அங்கிருக்கும்
கடவுள் சிலை உட்பட எல்லாமே சுத்தமாக தூய்மையாக இருக்கின்றன.
அந்த வெண்மைக்கும் தூய்மைக்கும் நடுவில் காலாவின் கருப்பு
முகமும், உடையும் கம்பீரமாக அமரும்போது தனித்துத் தெரிகிறது. கருப்பு நிறத்தின் அரசியல்
குறித்து காலா பேசும் வசனத்துக்கு அப்படியானதொரு தனித்துவ வெண்மை பின்னணியில் தேவைப்படுகிறது. அதன் காரணமாகவே காலா ஹரிதாதாவின்
வீட்டுக்கு இயக்குநரால் வரவழைக்கப்பட்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட கலை இயக்கம்.
இத்திரைப்படத்தோடு
‘அலைபாயுதே’ திரைப்படத்தில் வரும் ‘பச்சை நிறமே’ பாடல் காட்சியை ஒப்பிட்டுப் பார்த்தது
மனம். இயக்குநர் மணிரத்னம் அப்பாடல் காட்சியில் ஒவ்வொரு நிறமாக திரையில் காண்பித்தார்.
அந்த நிறங்கள் சொன்ன செய்தி என்ன? அவை வெறும் அழகோடு நின்றுவிட்டன. காதலுணர்வைச் சொன்னதோடு
நின்றுவிட்டன. ஆனால் காலாவில் வரும் வண்ணங்கள் அரசியல்மயமானவை. ஒவ்வொரு நிறத்துக்குப்
பின்னும் ஒரு வரலாறு உண்டு என்கிறது காலா. கருப்பை உழைப்பின் வண்ணமாக்கி, வெண்மையை
ஆளும் கும்பலின்அசிங்கத்தோடு தொடர்புபடுத்துகிறது. வெண்மைக்கும் காவி நிறத்துக்குமான
தொடர்பை கோடிட்டுக் காண்பிக்கிறது.
வாள் போன்ற
நீண்ட ஆயுதம் ஒன்றில் இருக்கும் அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்
ஹரிதாதா. அப்போது காலா அங்கே வருவது என காட்சி அமைத்த நுட்பம் அபாரம். ஹரிதாதாவின்
பேரக்குழந்தை அவரிடம் ‘He seems to be a nice person. Don’t kill him’ என்று சொல்லுமிடம்
வன்முறையின் அழகியல் எனலாம். எல்லாவற்றையும் தூய்மையாக வெண்மையாக வைத்திருக்கும் ஹரிதாதாவின்
வீட்டுக் குழந்தை மூலம் பாசிசத்தின் கொலைவெறியைச் சொல்லவைக்கும் காட்சி மிக நுட்பமானது.
குழந்தை வந்து தாத்தாவிடம் காலாவை கொல்லாமல் விட்டதற்கு நன்றி
சொல்கிறாள்.
ஹரிதாதாவும்
காலாவும் சந்திக்கும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பதட்டம் நம்மைத் தொற்றிக்கொள்கிறது.
சந்தோஷ் நாராயணின் நடுக்கமூட்டும் பின்னணி இசையும், நானா படேகரின் அசரவைக்கும் நடிப்பாற்றலும்
இப்படத்தின் உன்னதங்களில் இடம்பிடிப்பவை. நானா படேகரின் உடல்மொழி, ’காலாசேட் நான் போலாமா?’
என கேட்கும்போதான முகபாவம், காவல் நிலைய பஞ்சாயத்து காட்சியில் உயிர்பிச்சை இடுவதான
தொனியில் கையை ஆட்டுவது, ‘மரணம்தான் பரிசு’ என அலட்டாமல் எச்சரிப்பது என திரையில் அவர்
மீதான பார்வையை எடுக்கமுடியாமல் நாம் திணறுகிறோம்.
கிளைமாக்ஸில்
முதலில் திரையை வியாபிக்கும் கருப்பு நிறத்தைக் கண்டு மனம் ஒருவித புளங்காகிதம் அடைவதை
உணர்ந்தேன். ஹரிதாதாவின் முகத்தில் வீசப்படும் அந்த பொடியால், அவர் முகம் கருக்கிறது.
வெண்மையை சிலாகித்து கருப்பைப் பழித்த ஒருவரின் முகத்தில் பூசப்படும் கரி எத்தனை உயர்வானது!
அந்த கரிய நிறப் பொடிதான் ஹரிதாதாவை ஒரு பிடி மண்ணையும் அங்கிருந்து எடுக்க விடாமல்
செய்கிறது. இதை முதலில் தொடங்கிவைப்பது ஒரு பெண் குழந்தை. பின் திரை சிவக்கிறது. நரம்புகள்
புடைக்கின்றன நமக்கு. பின்னணியில் ஆக்ரோஷக் குரல் ஒலிக்க ஆண்களும் பெண்களுமாய் களிநடனம் புரிகிறார்கள். இறுதியில் வரும் நீலத்தின்போது உடல்
சிலிர்க்கிறது. கருப்பு, சிவப்பு, நீலம் என நிறங்கள் இணைந்து இதுவல்லவோ நாம் நினைத்த
அரசியல். நாம் இதுநாள் வரை ஏங்கியது இதற்கல்லவோ என விம்முகிறது மனம். பின் பல்வேறு
நிறங்கள் நாலாபக்கமிருந்தும் ஒரு புகைமண்டலம் போல் கிளம்பிவர திரையை வண்ணங்கள் நிரப்புகின்றன.
ஹரிதாதாவின் கதை முடிகிறது. மக்கள் இணைந்து தங்கள் எதிரியின் கதையை முடிப்பதை இப்படியும்
சொல்ல முடியுமா? ஒரு வன்முறைக் காட்சியையும் காட்டாமல், ரத்தமில்லாமல், ஆயுதமில்லாமல்
இதைச் சொல்லமுடியுமா? இத்தனை அழகியலாய் மக்கள் கிளர்ச்சியில்
நடந்த ஒரு கொலையைக் காட்டமுடியுமா? எத்தனையோ படங்களின் கிளைமாக்ஸை நாம் பார்த்திருக்கிறோம்.
இதற்கு ஈடான ஒரு காட்சி தமிழில் இல்லை எனலாம்.
அது போலவே,
காலாவின் உயிர் பிரியும் காட்சியும். அதை நேரடியாகக் காட்டவில்லை என்றாலும் மிக நுட்பமாக
படம் உணர்த்துகிறது. மக்கள் போராட்டம் எப்போதும் ஒரு தனிநபரை நம்பி இல்லை என்பதையும்
படம் நுட்பமாகச் சொல்லிவிடுகிறது. நூற்றுக்கணக்கான காலாவின் முகமூடிகள் நடத்தும் ஹரிவதம் அதைச் சொல்லிவிடுகிறது. மிகக் குறிப்பாக,
சற்றே நடிப்பில் பிசகினாலும் அக்காட்சியின் பொருள் பிசகிவிடும் எனும் நிலையில், மணிகண்டன், நானா படேகர், ரஜினி, ஆகியோரின் முகபாவங்கள் அக்காட்சிக்கு
பொருள் தருவதாக உள்ளன.
காலா முன்வைக்கும்
மிக நேரடியான துணிவான பா.ஜ.க. எதிர்ப்பு இக்காட்சிகளில் வெளிப்படுகிறது. ராமாயணத்தை
மறுவாசிப்பு செய்வதுபோன்ற உணர்வை உண்டாக்கும் அந்த கதாகாலட்சேபக் காட்சியும், மறுபுறம்
காண்பிக்கப்படும் வன்முறை வெறியாட்டங்களும் திரைப்படத்தை மென்மேலும் உயரத்துக்கு இட்டுச்
சென்றுவிட்டது. ’ராமன் ராவணனின் ஒவ்வொரு தலையாய் துண்டிக்கத் துண்டிக்க வேறொரு தலை
முளைத்தது’ என கதை சொல்லப்படும்போது இங்கே காலாவின் தூண்களாய் இருக்கும் ஒவ்வொருவரும்
தாக்கப்படுகிறார்கள். இறுதியில் வஜ்ராயுதம் போன்றதொரு ஆயுதத்தை வைத்துத்தான் காலாவை
தாக்குகிறது ஹரிதாதாவின் அடியாட்படை. காவிகள் சிலாகிக்கும் ராமாயணத்தை வைத்தே ராவண
காவியம் தீட்டியிருக்கிறார் இரஞ்சித்.
- கவின் மலர்
No comments:
Post a Comment