Tuesday, October 12, 2010

வகுப்பறை தண்டனைகள் தேவையா?

வகுப்பறையில் தண்டனைகள் தேவையா என்பது குறித்த விவாதத்திற்காக கல்வியாளர் வசந்திதேவியை நான் எடுத்த நேர்காணலின் மையக்கருத்துக்கள் இவை. 


வகுப்பறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் அவர்களை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ பாதிக்கின்றன. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். குழந்தைகளுக்கென்று தனிப்பட்ட உரிமைகள் இருக்கின்றன. எனவே இதை குழந்தை உரிமை மீறல் என்றும் கூறலாம்.

இந்தியாவில் தொடர்ந்து வகுப்பறைகளில் குரூரமான தண்டனைகளை அளிப்பது நடந்து வருகிறது. ஆனால் எப்போது விஷயம் பெரிதாகிறதோ, அப்போதுதான் வெளியுலகத்திற்கு தெரியவருகிறது. அதாவது குழந்தைக்கு கை, கால், கண் என உடலுறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ மட்டுமே பிரச்சினை வெளியே தெரிகிறது. குற்றம் செய்த ஆசிரியர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இல்லாவிட்டால் பள்ளிநிர்வகமோ, பெற்றோரோ மற்றவர்களோ இதனை கண்டுகொள்வதில்லை. 2007இல் தமிழக அரசு இதற்கென்று சட்டம் போட்டும் பரவலாக இந்தப் பழக்கம் போகவில்லை.

குழந்தைகளுக்கு தரப்படும் தண்டனைகள் விதவிதமாக இருக்கின்றன. மாணவர்களை இருட்டறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு தனியாக விட்டுவிடுவது, அடிப்பது, இரட்டை சடை போட்டு வரவில்லை போன்ற அற்பக்காரணங்களுக்காகக் கூட அடித்து சித்திரவதை செய்வது, பீரோவில் பிள்ளைகளை அடைத்துவைப்பது, நல்ல வெயிலில் பிள்ளைகளை மண்டியிடச் செய்வது, மைதானத்தைச் சுற்றி ஓடச்சொல்வது இப்படி  நிறைய தண்டனைகள். இவற்றினால் உயிர் போன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

வகுப்பறைகளில் வழங்கப்படும் தண்டனைகள் ஐ.நா.சபை வெளியிட்ட சித்திரவதை தடுப்புப் பிரகடனத்திற்கு எதிரானது. தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தக் கொடுமை நடக்கிறது. வசதி படைத்தவர்கள் பயிலும் பணக்கார பள்ளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதற்கு என்ன காரணம் என்றால் முதலில் ஒவ்வொரு குழந்தையும் தனிநபர் என நாம் நினைப்பதில்லை. அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என நாம் எண்ணுவதில்லை. நம் சமூகத்தில் 40 வயதானாலும் பிள்ளைகள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்களே அதிகம். அடித்தால் படிப்பு வரும் என்பதற்கு எந்த நிரூபணமும் இதுவரை கிடையாது. ‘அடியாத மாடு படியாது’ என்பார்கள். அப்படியென்றால் குழந்தைகள் மாடுகளா? மாடுகளைக் கூட அடிக்கலாமா? அது குற்றமில்லையா? அடித்தால்தான் படிப்பு வருமா? – இப்படி பல கேள்விகளை நாம் கேட்கமுடியும். நம் ஏழை பெற்றோர்கள் பிள்ளைகள் எப்ப்டியாவது படித்து முன்னேறினால் போதும் என நினைத்து பள்ளிக்கு வரும்போதே ஆசிரியர்களிடம் பிள்ளைகளை அடிப்பதற்கு லைசன்ஸ் வழங்கிவிடுகிறார்கள். வசதியானவர்கள் அவ்வளவு வெளிப்படையாகச் சொல்லாமல் ‘என்ன செய்தாவது படிக்க வையுங்கள்!’ என்கிறார்கள். ராசிபுரம், நாமக்கல் போன்ற இடங்களில் 11, 12 வகுப்புகளுக்கு மட்டுமென்று பள்ளிகள் இருக்கின்றனர். வேறெங்காவது இப்படி வெறும் 2 வகுப்புகளுக்கு மட்டும் நடத்தப்படும் பள்ளிகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தப் பள்ளிகளில் சமுதாயத்தின் உச்சாணிக்கொம்பில் உள்ளவர்களின் வீட்டுப் பிள்ளைகள்தான் பயில்கிறார்கள். அந்த இரண்டு ஆண்டுகளில் அந்தப் பிள்ளைகளின் பேச்சு, மூச்சு, சாப்பாடு, உறக்கம் எல்லாமே படிப்புத்தான். அவர்களை தீபாவளி, பொங்கல் என இரண்டே இரண்டு முறைதான் ஊருக்கு அனுப்புகிறார்கள். நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை அவர்கள் பெறவில்லையென்றால் அங்கே கொடுக்கும் தண்டனைகள் மிக மோசமானதாக இருக்கின்றன. இவையெல்லாம் ஐநா சபை  நிர்ணயித்த குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரானது.

2006ஆம் ஆண்டு துவக்கத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய ஒரு தீர்ப்பில் ’குழந்தைகளின் நன்மைக்குத்தான் தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆகவே பள்ளிகளில் தண்டனை இருக்க வேண்டும்’ எனக் கூறியது. இதை எங்களைப் போன்றவர்கள் கடுமையாக எதிர்த்தோம். அதன்பிறகுதான் தமிழ்நாடு அரசு இதற்கென தனிச்சட்டம் கொண்டு வந்தது.

பிள்ளைகளை ஏன் அடிக்கிறார்கள்? அவர்களை ஏன் தண்டிக்கிறார்கள் எனறு ஆராய்ந்தால் நம் கல்வி அமைப்பைத்தான் நாம் குற்றம் சொல்ல வேண்டிவரும். அத்தனை குறைகள் உள்ளன. பாடத்திட்டச் சுமை அதிகமாக இருக்கிறது. 1994இல் வெளியான யஷ்பால் கமிட்டி அறிக்கை சுமைகளில்லாமல் மாணவர்களை கற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்றது. ஆனால் குருவித்தலையில் பனங்காயை அல்ல நாம் பாறாங்கல்லையே வைக்கிறோம். அதன் பாரம் அழுத்துகிறது. நாம் எல்லாவற்றையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளும் அமெரிக்காவில் இவ்வளவு பாடத்திட்டம் கிடையாது. இந்த விஷயத்தில் ஏன் நான் அமெரிக்காவை உதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது? அங்கிருந்து வந்த ஆசிரியர்கள் சிலர் நம் கல்விமுறையை கவனித்துவிட்டு “எங்கள் நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நாங்கள் கற்றுத்தருபவற்றை நீங்கள் 7,8 வகுப்புகளிலேயே கற்றுத்தருகிறீர்கள். ஏன் இவ்வளவு சுமைகளைக் கொடுக்கிறீர்கள்?” என்று கேட்டுவிட்டுப் போனார்கள்.  இவ்வளவு சுமை ஏன் கொடுக்கப்படுகிறது என்று பார்த்தால் இவையெல்லாமே வசதி படைத்தவர்களின் தேவைக்காகவே முன்னெடுக்கப்படுகின்றன என்பது புரியும். பிள்ளைகளை பிறந்ததிலிருந்தே திட்டமிட்டு வளர்க்கிறார்கள். இந்த கோர்ஸுக்கு மவுசு அதிகம். நம் பிள்ளையை இதில் எப்படியாவது சேர்த்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்காகவே குழந்தைகளை தயார் செய்கிறார்கள். தனியாக டியூஷன் அனுப்புகிறார்கள். உலகத்திலேயே இந்த டியூஷன் முறை இங்கேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். வேண்டுமானால் இந்தியாவின் சகோதர நாடு என்பதால் பாகிஸ்தானில் இருக்கலாம். இந்த டியூஷன் அனுப்பும் நேரத்தில் பிள்ளைகளை அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு, இசை, ஓவியம் இப்படி அவர்கள் என்ன இஷ்டப்படுகிறார்களோ அந்த வகுப்பிற்கு அனுப்பலாம். ஆனால் கட்டாயப்படுத்தி டியூஷனுக்கு அனுப்புகிறார்கள். ஏன் ஆசிரியர்கள் தனியாக டியூஷன் எடுக்கிறார்கள் என்று பார்த்தால் மீண்டும் பாடத்திட்ட சுமைதான் காரணமாக இருக்கிறது. வகுப்பு நேரத்திற்குள் எல்லா பாடங்களையும் எடுத்து முடிக்க முடியாது. அதனால் பிள்ளைகளுக்கும் சரியாகப் புரிவதில்லை. அதனால் தனியாக டியூஷன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் இலவசக்கல்வி என்பதே கேலிக்கூத்தாகிவிட்டது. வறுமையில் வாடும் குடும்பங்களின் நிலைதான் பரிதாபமாக இருக்கிறது.

குழந்தைகளின் வயதுக்கேற்ற பாடங்கள் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை தரமற்ற கல்வி என்றுதான் சொல்லவேண்டும். உலகளாவிய அளவில் போட்டி போடும் அளவிற்கு தன் பிள்ளை வரவேண்டும் என நினைக்கும் வசதிபடைத்த பெற்றோரின் கனவுகளுக்கேற்ப இங்கே பாடத்திட்டம் நிர்ணயிக்கப்படுவதால் எல்லா குழந்தைகளாலும் அவற்றை பின்பற்ற முடியாது. வறிய குழந்தைகளுக்கு வீட்டில் கற்றுக்கொடுக்க முடியாத கல்வியறிவு அற்றவர்களாக பெற்றோர் இருப்பார்கள். அல்லது படித்திருந்தாலும் நாள் முழுதும் உழைத்துவிட்டு வரும் அவர்களுக்கு பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தருவதற்கான சூழல் இருக்காது. தனியாக டியூஷன் அனுப்பவும் பணமிருக்காது. இப்படிப்பட்ட பிள்ளைகள் வகுப்பறையில் நன்றாகப் படிக்கவில்லை எனக் காரணம் கூறி தண்டிக்கப்படுகிறார்கள். நம் நாட்டில் 70% பிள்ளைகள் இப்படித்தான் அடி வாங்குகிறார்கள். உடலில் வாங்கும் அடியை விட நாவினால் சுட்ட வடுவிற்குத்தான் பாதிப்பு அதிகம். ‘நீ உருப்பட மாட்டே!, பாஸ் பண்ணமாட்டே!” போன்ற வசவு மொழிகள் பிள்ளைகளின் மனதை பெருமளவு பாதிக்கும்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? மனிதாபிமானமுடைய கல்விச்சூழல் உருவாக வேண்டும். குழந்தைகளின் உரிமைகளை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். முக்கியமாக அவர்களுக்கும் உரிமைகள் உண்டு என குழந்தைகளுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும். அந்த உரிமைகளுக்கு பங்கம் நேருமானால் அதை எதிர்க்கும் துணிவை எல்லா குழந்தைகளுக்கும் ஊட்ட வேண்டும். ஒரு குழந்தையை வகுப்பறையில் அடித்தால் வகுப்பில் உள்ள அத்தனை குழந்தைகளும் அதை எதிர்க்கவேண்டும். அதற்கான வாழ்க்கைக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் முதலில் அளிக்கப்படவேண்டும். வகுப்பறை உறவுகள் அதிகார உறவுகளாக இருத்தல் கூடாது. ஆசிரியர் ஒரு சர்வாதிகாரியைப் போல குழந்தைகளிடம் நடந்துகொள்ளக்கூடாது. ஆசிரியரைச் சுற்றியே இப்போதைய கல்விமுறை இருப்பது மாற வேண்டும். வாயில்லா பூச்சிகளாக, குழந்தைகள் வகுப்பில் மிரண்டுபோய் அமர்ந்திருக்கும் அச்சுறுத்தும் சூழல் மாறவேண்டும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமிடையே நிலவும் இறுக்கம் விலகி நெருக்கம் அதிகமாக வேண்டும். இப்போது நடைமுறைக்கு வந்திருக்கும் செயல்வழி கற்றல் முறையில் ‘ஆசிரியர்கள் நாற்காலியில் அமரக்கூடாது. குழந்தைகளோடுதான் அமரவேண்டும்’  போன்ற சில நல்ல விஷயங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.  ஆனாலும் இது நான்காம் வகுப்பு வரைதான் கடைபிடிக்கப்படுகின்றது. 5ஆம் வகுப்பு வந்தவுடன் வழக்கம்போல கையில் பிரம்பெடுத்து விடுகிறார்கள்.  மாணவர்களை அன்போடு அரவணைத்துச் செல்லும் போக்கு வேண்டும். தவறு செய்யும் மாணவர்களை  கவுன்சிலிங் முறையில் பேசி நல்வழிப்படுத்தவேண்டும். ஆசிரியர் தனக்கு வகுப்பறைக்கு  வெளியில் உள்ள கஷ்டங்களையெல்லாம் வந்து பிள்ளைகள் மேல் காட்டக்கூடாது. சில மாணவர்கள் தற்கொலை வரை கூட சென்று விடுகிறார்கள். இதையெல்லாம் தடுக்க சட்டம் போட்டாலும், இவற்றை கண்காணிக்கும் ஏற்பாடு இல்லை. தனியார் பள்ளிகளுக்கென்று ஒரு இயக்குநரை நியமித்தார்கள். அந்த அலுவலகத்தில் மிகக் குறைச்சலான அளவிற்கே ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களால் நிச்சயமாக தமிழ்நாடு முழுவதையும் கவனிக்க முடியாது. அரசுப் பள்ளிகளுக்கென்றால் மாட்டந்தோறும் கல்வி அலுவலர் இருக்கிறார். அப்படி ஒரு ஏற்பாடு தனியார் பள்ளிகளுக்குக் கிடையாது.

உலகில் மற்ற பகுதிகளில் 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதமே உள்ளது. இங்கே அனுமதிக்கப்பட்டதே 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதம். ஆனால் நடைமுறையில் 70 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என்ற விகிதமே உள்ளது. ஆகவே ஆசிரியர் கண்டிப்பாக ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் அக்கறை செலுத்த முடியாது. ஆகவே அதிகளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஒரு பள்ளியின் தரத்தை அந்தப் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தைக் அளவுகோலாகக் கொண்டு கணக்கிடக்கூடாது. ஏனெனில் சமூக ஏற்றத்தாழ்வு அதிகம் இருக்கிறது மேட்டுக்குடி மக்களின் பிள்ளைகள் பயிலும் பள்ளியின் விகிதமும் அரசு பள்ளியின் விகிதமும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்?. ஆகவே தேர்ச்சி விகிதத்தை வைத்து பள்ளியின் தரத்தை நிர்ணயிக்கக் கூடாது. 

நன்றி : புதிய தலைமுறை

No comments:

Post a Comment