Wednesday, December 08, 2010

மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும்

கடந்த இரு இதழ்களில் வெளிவந்த பேராசிரியர் காஞ்சா
அய்லைய்யா அவர்களின் பேட்டி, இந்த இதழிலும் தொடர்கிறது


தலித்முரசு காஞ்சா அய்லய்யா நேர்காணல் பகுதி III

இந்தியாவின் அறிவுத்தளம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து சொல்லுங்கள்.

இந்தியாவின் அறிவுத்தளம் என்பது, மேற்கோள்களாகச் சுருங்கிவிட்டது. நாம் மக்களின் வாழ்க்கையிலிருந்து ஆய்வுகளைச் செய்யும்போது, மேற்கோள் காட்ட வேண்டிய அவசியமில்லை. அம்பேத்கர், புலே போன்றோரின் மேற்கோள்களை எடுத்தாளலாம். ஆனால், எப்போதும் மக்களிடமிருந்துதான் முதன்முதலில் நிரப்பப்பட வேண்டும். அதனால்தான் நான் மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்ட எழுத்துகளை நிராகரித்தேன். பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், ஏன்? மார்க்ஸ், அம்பேத்கர் இவர்களில் யாருடைய அனுபவங்களையாவது வரித்துக் கொண்டு எழுதப்படும் எழுத்துகளையும் நிராகரித்தேன். இவர்களில்யாருடைய நூல்களையாவது பாருங்கள்! மேற்கோள்களை அடிப்படையாகக் கொண்டா எழுதியிருக்கிறார்கள்? மார்க்ஸின் "கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யோ, அம்பேத்கரின் "சாதி ஒழிப்பு' நூலோ மேற்கோள் சார்ந்தவை அல்ல. எனவே, மக்களின் மனங்களுக்குள் சென்று அவற்றிலிருந்து ஒரு தத்துவார்த்த பிரதி உருவாவதையே நான் விரும்புகிறேன்.
மக்களின் வாழ்க்கை முறை, உற்பத்தி, அறிவியல், தொழில்நுட்பம், உணவுப் பண்பாடு ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. மரக்கறி உணவையே இந்திய உணவு என இந்து மதம் கட்டமைத்தபோது, நாம் ஆற்றலிழந்து போனோம். நம்மிடையே கால்பந்து வீரர்கள் இல்லை. ஏன்? மரக்கறி உணவை மட்டும் உண்பவர் கால்பந்து வீரராக முடியாது; ஒலிம்பிக் சாம்பியனாக முடியாது. ஆக, உணவுப் பண்பாடு  ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. தலித் – பெரும்பான்மை உணவுப் பண்பாடு, சங்கராச்சாரியின் வருகைக்குப் பிறகு இந்து மதத்தால் அழிக்கப்பட்டது. ஆகவே, மக்களின்  அனுபவங்களின் மூலம் இந்து மதம் தகர்க்கப்பட வேண்டும் என்று நினைத்தேன்.

எனவே, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைத்து Post Hindu India என்ற நூலை  உருவாக்கினேன். பார்ப்பன அறிவாளிகள் கூறும் தேசியம் என்கிற கருத்துருவாக்கத்தையும் அழிக்க விரும்பினேன். ஏனென்றால், பார்ப்பனியம் ஒரே வடிவத்தில் இல்லை. அது மார்க்சியம், தேசியம், பெண்ணியம் உட்பட பல்வேறு வடிவங்களில் வருகிறது. நம்மிடையே போதுமான பெண் அறிவாளிகள் இல்லை. நானேகூட கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று விட்டு வரவில்லை. மாறாக, உள்ளூர் சரக்குதான். இதுவே என் பலமும் பலவீனமுமாக இருக்கிறது. ஆனால், என் பலவீனத்தை நான் பலமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென விரும்பினேன்.

ஆகவே, "பாப்புலர் பிரஸ்ஸி'ல் பல மணி நேரங்களை எழுதுவதிலும், படிப்பதிலும் செலவழித்தேன். மேலும், கிராமங்களுக்குச் செல்வதன் மூலம், மக்களின் உற்பத்தி வாழ்க்கை குறித்த பெரும் தகவல்களை சேகரித்து வந்தேன். கருவிகளின் பெயர்கள், மக்களிடையே புழங்கும் பழமொழிகள், உணவுப் பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பின்னணி போன்ற பல தகவல்களை சேகரித்தேன். அதிலிருந்து சிந்திக்கத் தொடங்கினேன். என்னுடைய சமீபத்திய நூல் Weapon of the other இது குறித்ததே. இப்படித்தான் தலித்தியம் # பார்ப்பனியம் என்கிற கருத்தாடலுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தேன். ராஜாராம் மோகன்ராயின் தேசியத்திற்கு எதிராக புலேயின் தேசியம், கவுடில்யருக்கும் மநுவுக்கும் எதிரான புத்தரின் தேசியம் போன்றவற்றை நீங்கள் அறிவீர்கள்.
நேரு நினைவு அருங்காட்சியகத்தையும் நூலகத்தையும் பார்வையிட்டபோது நேரு, காந்தி, ராஜாராம் மோகன்ராய் எல்லோரும் அங்கே இருக்கிறார்கள். ஆனால் அம்பேத்கர், புலே, பசவா, பெரியார் ஆகியோர் இல்லை. இந்த அறிவுஜீவி வாழ்க்கை ஒரு துன்புறுத்தலாகவும், ஓய்வற்றதாக வும் இருந்தாலும்  – நான் அதை கடின உழைப்புக்குரியதாகவும், முடிந்தவரை வெகுமக்களுக்குரியதாகவும் ஆக்கிக் கொள்ள முனைந்தேன். ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக அறிவாளிகளுக்காகவும், வெகுமக்களுக்காகவும் எழுதுவது என்பது கடினமானது. எடுத்துக்காட்டாக, என்னுடைய Buffalo Nationalism என்கிற தலைப்பை நான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ இந்து பரிஷத்தின் பசு தேசியத்தை எதிர்த்துதான் வைத்தேன். ஆனால் என்னுடைய நண்பர்களே, ""இதென்ன தலைப்பு?'' என்று சிரித்தார்கள். ""நான் ஏன் இந்து அல்ல'' எழுதியபோது அதைக் கொஞ்சம் போல ரசித்தவர்கள்கூட, இந்தத் தலைப்பைப் பிடிக்கவில்லை என்றார்கள்.

அவர்களிடம் நான் சொன்னேன் : இது என்னுடைய மூளையில் உதித்ததல்ல. எருமைøய ஒவ்வொரு வீட்டின் விலங்கு என்று சொல்லலாம். இந்தியாவில் பால் உற்பத்தி, எருமை மாடுகளிடமிருந்துதான் வருகிறது; பசுக்களிடமிருந்து அல்ல. இந்த பாழாய்ப்போன படைப்பாற்றலற்ற பார்ப்பனிய மூளையோ – ஒன்றுக்கும் உதவாத ஒரு விலங்கை தெய்வமாக்கியும், கருப்பாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்திற்காக – உற்பத்திக்கு உதவும் ஒரு விலங்கை எமனுக்கு வாகனமாகவும் மாற்றி விட்டிருக்கிறது. ஆனால், அது கொடுக்கும் பாலின் நிறம் வெள்ளை என்பதால் மட்டும் பருகுகிறார்கள் என்றேன்.

ஆகவே, புதியதாய் எதையாவது செய்ய வேண்டி இருக்கிறது. சில வேளைகளில் அதற்காக எள்ளி நகையாடப்படுவதையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலருக்கு இருக்கும் பார்ப்பனிய தாக்கம்; கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில் பயின்று விட்டுத் திரும்பியவர்களிடம் இருக்கும் மேற்கோள்களால் நிரப்பப்பட்ட ஆய்வு மனப்பான்மை மற்றும் மேலைநாட்டு சிந்தனைகள் ஆகிய எல்லாவற்றோடும் போராட வேண்டி இருக்கிறது. சிலர் நம்மை ஏற்றுக் கொள்வார்கள். சிலர் நம்மை மறுப் பார்கள். ஆனால் இறுதித் தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது. இயக்கங்கள்தான் இத்தகைய பணிகளை கைக்கொள்ள வேண்டும். என்னுடைய நூல்களைப் பொருத்தவரையில் வெகுமக்கள் இயக்கங்கள், அறிவுத்தளம் இரண்டிலுமே நல்ல வரவேற்பைப் பெற்றன. பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டவையெல்லாம் சூடான விவாதங்களைக் கிளப்பவில்லை.

இந்தியாவில் தற்பொழுது ஆங்கிலம் பேசக்கூடிய அறிவாளிகள் குழு ஒன்று உருவாகியுள்ளது. இத்தகைய ஓர் ஆக்கம் வெளிவரும்போது, ஆதிக்க சாதிகளிலிருந்து மிகப்பெரிய அளவில், கலவையான எதிர்வினைகள் வந்தன. சிலர் அதனை வரவேற்றாலும், பார்ப்பனர்கள் மிகவும் எரிச்சலுக்குள்ளானார்கள் என்று சொல்லலாம். "நான் ஏன் இந்த அல்ல?' நூல் வெளிவந்தபோது, நூல் குறித்து நிறைய திறனாய்வுகள் வந்தன. தற்போதைய பதிப்பில் அனைத்து திறனாய்வு களையும் இணைத்துள்ளேன்.  என்னுடைய நூலுக்கு ராஜ்தீப் சர்தேசாய், ஒரு விமர்சனம் எழுதியிருந்தார். அவருடைய மனைவி சகரிகா கோஷ், இந்நூலால் கவரப்பட்டு என்னை ஒரு நீண்ட நேர்காணல் எடுத்தார். குடும்பத்தில் ஒரு தத்துவப் போரே நடைபெற்றது அப்போது. இந்நூல் பல குடும்பங்களிற்குள் சண்டையை உண்டாக்கியது. எனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால், இந்நூல் ஒரு விவாதத்தை தோற்றுவித்தது.

Post Hindu India வந்தபோது ஒரு பெரிய தாவல் நடந்தது. எடுத்துக்காட்டாக, ""இந்நூலில் தீவிரத்தன்மை இல்லை. ஆய்வுத்தன்மை இல்லை. முடிவுக்கு வர உதவிய தரவுகள் குறித்த குறிப்புகள் இல்லை'' என்று "ஹிமால்' இதழில் மீரா நந்தா எழுதியிருந்தார். அதற்கு நான் ஒரு பதில் எழுதினேன் : ஆய்வுத்தன்மை, தரவுகள் என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? என்னுடைய நூலில் அடிக்குறிப்புகளும், தரவுகளும் இல்லையென்பதற்காக நீங்கள் அதன் தீவிரத்தன்மையை குறைத்து மதிப்பிடுவீர்களானால் – பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், மார்க்ஸ் போன்றவர்களுடையதையும் நீங்கள் அப்படி சொல்லிவிட முடியுமா? பார்ப்பனிய அறிவுஜீவி குண்டர்த்தனம் எதை நிராகரிக்கச் சொல்கிறதோ, அதனை நிராகரிக்க வேண்டுமாம். எதைப் புகழ வேண்டுமெனச் சொல்கிறதோ அதை மற்றவர்களும் புகழ வேண்டுமாம். இது என்ன நியாயம்? எந்தவொரு மானுடவியலாளரின் நூலிலாவது, அவர்களை ஒரு முடிவுக்கு வரவைத்த தரவுகள் குறித்த குறிப்புகள் இருக்கின்றனவா?

மானுடவியல் என்பது, ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் உணவுப் பழக்கம், கருவிகள், உற்பத்தி உறவுகள் குறித்தான ஆய்வுகள் தானே? அவற்றை எல்லாம் எங்காவது போய் இதெல்லாம் உண்மைதானா என்று கள ஆய்வு செய்து பார்த்துதான் ஒப்புக் கொள்கிறார்களா? வெறும் பார்ப்பனியத்திற்கும் தலித்தியத்திற்கும் இடையேயானதல்ல இது. இதில் அறிவியல், தொழில்நுட்பம், மதங்கள் எல்லாமே கலந்திருக்கின்றன. இந்து, முஸ்லிம், தலித் – பெரும்பான்மை மக்கள், பழங்குடியினர் ஆகியோரிடையே அறிவியலும் தொழில்நுட்பமும் உள்ளன. ஆனால், இந்து மதம் இதனை அழித்துவிட்டது. இதனாலேயே நாம் அறிவியலுக்கு உலகளவிலான எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்றாகிப் போனது.

பவுத்த உலகமான சீனா, அறிவியல் துறையில் உலகத்தின் அங்கீகாரத்தைப் பெற்று விட்டது. கோபர் நிக்கஸ் முதல் சிப் உருவாக்கம் வரை, கிறித்துவ உலகம் நிறையவே பங்களித்து விட்டது. இவற்றில் "சர்ச்சு'கள் பெரிய பங்கு வகித்தன. இஸ்லாமிய உலகத்தை எடுத்துக் கொண்டால், நபிகள்கூட அறிவியல் அறிவுடன் இருந்தவர். துணிகளைத் தைப்பது, ஆண் – பெண் உறவுகள் குறித்த கருத்தாக்கங்கள், மணற்பாங்கான பகுதிகளில் எண்ணெய் வளத்தைக் கண்டுபிடித்தது போன்ற பல விஷயங்களைச் சொல்லலாம். இதுபோன்ற எதையாவது இந்து உலகம் தந்திருக்கிறதா? ஆர்யபட்டாவைச் சொல்வார்கள். பூஜ்யத்தை கண்டு பிடித்ததை, இந்து மதத்தின் பங்களிப்பாகச் சொல்வார்கள். நான் என்னுடைய நூலில் இதை ஒரு "நான்சென்ஸ்' என்று நிரூபித்திருக்கிறேன். இடையர்கள்தான் பூஜ்யத்தை கண்டுபிடித்தார்கள். ஆர்யபட்டா 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நம் இடையர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அதற்கு முன்னரே கணக்கு வைத்து எண்ணிக் கொண்டுதானே இருந்தார்கள், அதுவும் நூற்றுக்கணக்கில்! பூஜ்யம் இல்லாமல் எப்படி நூறு வரும், 5 ஆம் நூற்றாண்டுக்கு முன்னால்?

இதனைத் தவறு என்றால் ராமாயணம், மகாபாரதம் எல்லாமே தவறுதான். அதில் தலைகளின் எண்ணிக்கை, நபர்களின் எண் ணிக்கை, ஆடுகளின் எண்ணிக்கை எல்லாம் வருகிறதே? என்ன கொடுமையென்றால் இடையர்கள் இவற்றைப் பற்றி எழுதுவதற்கான அனுமதி இன்றி இருந்தனர். அவர்களுடைய விரல்கள் துண்டிக்கப்பட்டன. அறிவியல், தொழில்நுட்ப, கணித சூத்திரங்களை எல்லாம் ஒரு நூலாகப் பதிவு செய்ய முடியாமல் போனதன் விளைவு, ஆர்யபட்டா பூஜ்யத்தை கண்டுபிடித்தவராகிவிட்டார். இவர் ஒரு பார்ப்பனர் என்பதால், ""நான்தான் பூஜ்யத்தைக் கண்டுபிடித்தேன்'' என்று முந்திக் கொண்டார்.

நம்மிடையே இன்று மிகப்பெரிய பண்பாட்டு அரசியல் இயக்கங்கள் இருக்கின்றன. மக்களின் அறிவைக் கொண்டு உருவான நூல்கள் அதிகமõக வெளிவர இயக்கங்கள் முயல வேண்டும். இவற்றை சிறந்த முறையில் செய்ய வேண்டும். இல்லையெனில், ஆக்ஸ்போர்டு, ஹார்வார்ட், கேம்பிரிட்ஜிலிருந்து வரும் பார்ப்பனர்கள் நம்மைப் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள். நான் இப்படிச் சொல்வதால், நம் பிள்ளைகள் இப்பல்கலைக் கழகங்களுக்குச் சென்று பயிலக்கூடாது என்பதில்லை. எனக்கெல்லாம் அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை. டெல்லிக்குச் சென்று பயில்வதைக்கூட என்னால் கற்பனை செய்து பார்க்க இயலாத நிலையில் இருந்தேன்.

அறிவு சார்ந்த விஷயங்களைப் புதிய முறையில் கூறுவது, புதிய சொற்களை உருவாக்குவது, தத்துவம் சார்ந்த கருத்துருவாக்கம். பல்கலைக்கழக கல்வியையும், மக்கள் போராட்டங்களையும் இணைப்பது போன்றவை மக்கள் போராட்டங்களிலிருந்தே சாத்தியப்படும். எடுத்துக்காட்டாக, ""இந்தியா தலித்மயமானது; சமஸ்கிருதமயமானதல்ல'' என்று சொன்னபோது, எம்.என். சீனிவாசன் போன்றவர்கள், கேம்பிரிட்ஜ் வரை சென்று பயின்றுவிட்டு இந்தியாவுக்கு வந்து இந்திய கிராமங்கள் பார்ப்பனமயமாக்கப்பட்டிருக்கின்றன என்றார். பார்ப்பனர்கள் வெளியே சொல்லாமல் தங்கள் கொல்லைப்புறத்தில் மாமிச உணவு உண்ண முயற்சி செய்து கொண் டிருப்பதை அறியாமல் அவர்கள் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள். விஸ்கி, பிராந்தி மற்றும் இன்னபிற குடிவகைகள் அனைத்தையும் வெளியே தெரியாமல் குடிக்கும் பார்ப்பனர்கள் இல்லையா என்ன? பார்ப்பனப் பெண்களிடையே புகைக்கும் பழக்கமும்கூட அந்த சமயத்தில் இருந்தது. இவையெல்லாம் தலித்துகளின் பழக்கங்கள் என்று நீங்கள் சொல்வதானால், பார்ப்பன குலம் தலித்மயமாகி விட்டது என்றுதானே பொருள் கொள்ள வேண்டும்? ஆனால் அவரோ, இந்திய கிராமங்கள் பார்ப்பன மயமாகி விட்டன என்றார். ஆகவே நான், "இந்தியா தலித்மயமாகியிருக்கிறது' என்று கூறியது உலகின் கவனத்தை ஈர்த்தது. ரவுட்லட்ஜ் பதிப்பகம், பின் – காலனிய இலக்கியங்களை தொகுத்தபோது, அதில் என்னுடைய அத்தியாயம் ஒன்று இருந்தது. அய்லைய்யா இருந்தார். மார்க்ஸ் இருந்தார். மாவோ இருந்தார். பிராங் பனான் இருந்தார் ஆனால் எம்.என். சீனிவாசன் இல்லை!
இந்திய பார்ப்பனர்கள் எங்களை ஓரங்கட்ட நினைத்தனர். ஆனால் அங்கீகாரமளிக்க உலகம் தயாராக இருக்கிறது.

ஆக, இந்த போர்க்களமே மிகுந்த மன அழுத்தத்தைத் தரக்கூடியது. அதிலும் கல்விப்புலத்தில் தேர்ந்தெடுத்தவர்களைத்தான் முன்னேற அனுமதிப்பார்கள். நம்முடைய நூல்களைப் புறக்கணிப்பார்கள். அவர்கள் நினைப்பதையெல்லாம் பாடமாக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வரலாறை எடுத்துக் கொண்டால், இப்போது இருவகை வரலாற்று நூல்கள் நம்மிடையே உள்ளன. புத்தர் முதல் இன்று வரையிலான தலித் – பெரும்பான்மை மக்களின் போராட்டங்கள் அடங்கிய வரலாறு ஒன்று; கவுடில்யர் முதல் இன்று வரையிலான அவர்களின் வரலாறு மற்றொன்று. ஆனால், நம்முடைய வரலாறை பாடமாக நடத்துவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆகவே, பார்ப்பனியத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க மிக கவனமாகவும், போட்டி மனப்பான்மையுடனும் நாம் இலக்கியங்களை உருவாக்க வேண்டும். போட்டி மனப்பான்மை மிகவும் முக்கியமானது.

– அடுத்த இதழிலும்

சந்திப்பு : டாக்டர் பி.டி. சத்யபால்,
ஆர்.ஆர். சீனிவாசன்
தமிழில் : கவின் மலர்

No comments:

Post a Comment