Monday, January 17, 2011

தேசியத் தலைவர் அம்பேத்கர்

(தலித் முரசு டிசம்பர் 2010 இதழில் எழுதிய கட்டுரை)


ம்பேத்கர் யார் என்று சமூக அரசியல் பிரச்சனைகளில் நாட்டமில்லாத மாணவர்களிடமோ இளைய சமூகத்தினரிடமோ அல்லது பெரியவர்களிடமே கூட கேட்டால் வரும் பதில் என்னவாக இருக்கும்? அம்பேத்கர் நமது அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர் என்பதைத் தாண்டி எதுவும் நமது வரலாற்றுப் பாடங்களில் கற்றுத்தரப்படவில்லை. அதையும் மீறிப் போனால் சட்ட அமைச்சராக இருந்தவர் என்பதுதான் வரலாற்றுப்பாடங்கள் கற்றுக்கொடுத்தவை.

அம்பேத்கர் என்கிற மாமனிதரின் மேன்மை, போராட்டமாகவே கழிந்த அவரது வாழ்க்கை, பெண்களின் முன்னேற்றத்தில் அவருடைய பங்கு, தீண்டத்தகாத மக்களின் அரசியல் உரிமைகளையும், சமூக அந்தஸ்தையும் நிலைநாட்ட தனது வாழ்நாளை ஒப்படைத்த அவருடைய அர்ப்பணிப்பு, ஆதிக்க சாதிகளின் அடிவேரை அசைத்துப் பார்த்த அவருடைய புரட்சிகர போராளித்தன்மை இவற்றையெல்லாம் முன்னிலைப்படுத்தாமல் அம்பேத்கரை அரசு என்கிற அதிகார வர்க்கத்திற்கும் அவருக்குமான தொடர்பை மட்டுமே முன்னிலைப்படுத்தி அவரது மற்றைய பணிகளை இருட்டடிப்பு செய்த தேசத்தில் வாழ்கிறோம் நாம்.

அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது முதன்முதலில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அம்பேத்கர் குறித்த பேச்சுப்போட்டிகளும் கட்டுரைப்போட்டிகளும் நடத்தப்பட்டன. அப்படியொரு கட்டுரைப்போட்டியில் கலந்து கொள்ள பள்ளிச் சிறுமியான நான் அம்பேத்கர் குறித்து நூல்கள் தேடியபோது அவரது வாழ்க்கை வரலாறை முதன்முறையாக அறிய நேர்ந்து அதிர்ந்து போனேன். இவையெல்லாம் என்னுடைய வரலாற்றுப்பாடத்திலோ வேறெதிலுமோ சொல்லப்படவில்லை. ஆனால் காந்தி தனது தாய்க்கு செய்து கொடுத்த வரலாற்றுக்கு எவ்விதத்திலும் சற்றும் தொடர்பில்லாத தனிநபர்விஷயமான மூன்று சத்தியங்களைக் கூட நான் பாடத்தில் படித்திருக்கிறேன். அம்பேத்கர் திட்டமிட்டு பாடத்திட்டம் உருவாக்கியவர்களால் மறைக்கப்பட்டிருக்கிறார் என்பதையெல்லாம் மிகத் தாமதமாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது.

பெண்களுக்கான சொத்துரிமை, விவாகரத்து, மறுமணம் போன்றவற்றைப் பற்றி அன்றைக்கு மிகத் தீவிரமான கருத்துகளைக் கொண்ட இந்து சட்ட மசோதாவை நிறைவேற்ற அம்பேத்கர் போராடினார். ஆனால் பார்ப்பன – பனியா கூட்டத்தின் சதியால் அவரால் அம்மசோதாவை நிறைவேற்ற இயலாத போது, மனம் வெறுத்து தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார். இன்றைக்கும் பார்ப்பனப் பெண்கள் உட்ப்ட அனைத்துப் பெண்களுக்குமான உரிமைகளுக்கு அன்றே குரல் கொடுத்தவர் அம்பேத்கர். எனக்கு தேசமொன்று ஒன்று இல்லைஎன்று பிரகடனப்படுத்திய அம்பேத்கர் எல்லா ஏற்றத்தாழ்வுகளோடு இருந்தாலும் கூட இச்சமூகத்தை மிகவும் நேசித்தார்.

இந்தியத் துணைக்கண்டத்திற்கான  அரசமைப்புச் சட்டத்தினை உருவாக்க அவர் செலவழித்த காலமும் உழைப்பும் அளப்பரியவை. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட குழுவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினால் இப்பணியில் ஈடுபட இயலாத சூழலிருக்க, அம்பேத்கர் ஒற்றை மனிதராய் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற வரலாறு. .ஆக நாடு முழுமைக்கும் தனது அறிவாலும் ஆற்றலாலும் நிர்வாகத்திறனை வளர்க்கும் சட்டதிட்டங்களை உருவாக்கிய ஒரு தேசிய தலைவரை இன்று தலித் மக்களின் தலைவராக மட்டும் பார்க்கும் போக்கு நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் தலைகுனிவு.

தன் வாழ்நாள் முழுவதும் பார்ப்பன – பனியாக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு தங்கள் செயல்பாடுகளை வடிவமைத்துக்கொண்ட காந்தி போன்றவர்கள் தேசம் முழுமைக்குமான தலைவர்களாகவும், அம்பேத்கர் தலித் மக்களுக்கு மட்டுமேயான தலைவராகவும் சுருக்கப்பட்டிருக்கிறார். அவர் அனைத்து மக்களுக்குமான தலைவர் என்பதை உரக்கச் சொல்ல வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. திட்டமிட்ட சதியின் மூலம் வட்டத்துக்குள் அடைபட்ட அம்பேத்கரின் பிம்பத்தை விடுவிக்க எடுக்கப்பட வேண்டிய பலகட்ட முயற்சிகளில் ஒரு பகுதியாகவே அம்பேத்கர்திரைப்படத்தை பார்க்க வேண்டும்.



இத்திரைப்படத்தை தமிழ்நாடு முழுதும் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் செய்யப்பட வேண்டும். ‘காந்திதிரைப்படம் வெளியானபோது ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் அத்திரைப்படத்தை மாணவர்களுக்கு திரையரங்குகளுக்கு அழைத்துச் சென்று காண்பித்தார்கள். அப்படியெல்லாம் ‘அம்பேத்கர்திரைப்படத்திற்கு நடந்ததாகத் தெரியவில்லை. இத்திரைப்படத்தை எடுத்திருக்கும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) இப்படத்தை குறுந்தகடாகவோ டி.வி.டி.யாகவோ விரைவில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அதனை அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அளித்து மாணவர்கள் திரைப்படத்தைப் பார்க்க வழிவகை செய்யப்படவேண்டும். இதற்கு தமிழக அரசு ஆவன செய்யவேண்டும். நேரம் ஒதுக்கி பல்வேறு திரைப்படங்களையும், திரைப்பட விழாக்களையும் கண்டுகளிக்க்கும் தமிழக முதல்வர் இதுவரை அம்பேத்கர் படம் தமிழில் வந்த பின்னர் படத்தைப் பார்த்ததாகத் தெரியவில்லை.

அம்பேத்கர் குறித்து பெரிதும் அறியாதவர்களுக்கு அற்புதமான தகவல் களஞ்சியமாக வந்திருக்கிறது அம்பேத்கர் திரைப்படம். இதனை தமிழில் கொண்டுவருவதற்குத்தான் எத்தனை தடைகள்? தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் படம் திரையிடப்படவில்லை என்று செய்தி வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் படத்தைத் திரையிட்டால் பிரச்சனை வர வாய்ப்புண்டு என்று பயப்படுவதாக தகவல்கள் வருகின்றன. தொண்ணூறுகளில் நடந்த தென் மாவட்ட சாதிக்கலவரங்களின் தலைநகரமாக விளங்கியது தேனி என்பதை நாம் மறந்து விட இயலாது. இங்கே அம்பேத்கர் திரைப்படத்தை திரையிட இயலவில்லை என்பது ஒரு சமூக அவலம்.

இந்த ஆதஙகங்களெல்லாம் ஒருபுறமிருந்தாலும், சில மாவட்டங்களில் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் பேசும் அம்பேத்கரைப் பார்க்கவே மகிழ்ச்சியாகவே இருக்கிறது. பத்தாண்டுகள் காத்துக்கிடந்த பின்னல்லவா அம்பேத்கர் நம் முன் தோன்றி திரையில் தமிழ் பேசுகிறார்? மொழியாக்கம் செய்ததில் சில இடங்களில் சற்றே நெருடுகிறது. முதல் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு திரைப்படத்திற்குள் பயணிப்பதில் இதனால் சிக்கல் ஏற்படுகிறது. தூய தமிழில் அம்பேத்கரும் மற்றவர்களும் உரையாடுவது பொருத்தமின்றி உள்ளது.

வாழ்நாள் முழுதும் மக்களுக்காய் பேசியும் எழுதியும் உழைத்த அம்பேத்கரின் வாழ்க்கையை படமாக்கும்போது இயல்பாகவே அவர் மக்களிடையேயும் மேடையிலும் பேசுவதுபோன்ற காட்சியமைப்புகள் சில நேரங்களில் நீளமானதாகத் தோன்றுகின்றன. இன்னும் வசனங்களைக் குறைத்து காட்சிகளைப் பேசவைத்திருந்தால் இது ஒரு முழுமையான கலைப்படைப்பாக மாறியிருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் காந்தி வந்தவுடன் காந்திக்கும் அம்பேத்கருக்குமான உரையாடல்களும், காட்சியமைப்புகளும் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. மேற்சொன்ன மிகச் சிறிய விமர்சனங்களெல்லாம் படம் பார்த்து முடிந்து வெளியே வருகையில் மனதில் நிற்காமல் அம்பேத்கர் என்கிற மிகப்பெரிய ஆளுமை கம்பீரமாக மனதில் மம்முட்டியின் வடிவில் வந்து குடியமர்ந்து நம் நினைவுகளை அலைக்கழிக்கிறார். அம்பேத்கர் மறு உருவெடுத்து வந்தது போல மம்முட்டிக்கு அத்தனை கச்சிதமாகப் பொருந்துகிறது வேடம்.

தன்னுடைய தகுதிகளையெல்லாம் சொல்லிவிட்டு என்னிடம் பாடம் கற்க விரும்பாதவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறலாம்என்று கம்பீரமாகச் சொல்லும்போதும், கூட பணியாற்றும் பேராசிரியர்கள் தான் குடிக்கும் தண்ணீரை குடிக்கமாட்டேனென்று சொல்லும்போது “உங்களுக்குத்தான் தீட்டுப்பட்ட நீரை புனிதமாக்கும் மந்திரம் தெரியுமே திரிவேதிஎன்று தீர்க்கமாகப் பார்த்துக்கொண்டே மந்திரத்தை உச்சரிக்கும்போதும், மனைவியிடம் பரிவு காட்டும்போதும், எப்போதும் கேலி இழையோடும் காந்தியுடனான உரையாடலிலும், வீறுகொண்டெழும் வேங்கையாக சீறும்போதும், “சங்கராச்சாரியின் இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரை அமர்த்தி அவர் கால்களில் பார்ப்பனர்கள் விழுவார்களா?என்கிற கேள்வி கேட்கும்போதும் மம்முட்டி அம்பேத்கராகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார்.




வட்டமேசை மாநாட்டில் கடுங்கோபமாக தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்துவிட்டு அணிந்திருக்கும் கோட்டை ஒரு முறை இழுக்கும் அந்த உடல்மொழி ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அடங்கிக்கிடந்த மக்களின் ஆவேசத்தை வெளிப்படுத்துகிறது..

டாக்டர் அம்பேத்கராக நடிக்க மம்முட்டியை தேர்வு செய்தது மிக பொருத்தமானது என்பதை நூற்றுக்கணக்கான தலித் மக்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மம்முட்டி பேசும் போது, அவர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட போதும் அவர்களிடம் கண்ணீரை வர வழைத்த போதும் உணர்ந்தோம். இதுவே திறமைமிக்க நடிகருக்கு மகத்தான வெற்றியாக அமைந்ததுஎன்கிறார் இயக்குநர் ஜாஃபர் பட்டேல்

இந்தியா பல தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடம். அதில் பல தளங்கள் உண்டு. ஆனால் மாடிப்படிகள் இல்லை. ஒருவன் எந்த்த் தளத்தில் பிறக்கிறானோ அந்த்த் தளத்திலேதான் மடிந்துபோகிறான்என்பது போன்ற அம்பேத்கரின் கூரிய சிந்தனைகள் படத்தில் வசனங்களாக இடம்பெறுகின்றன. எத்தனையோ நூல்களை வாசித்து திரட்டிக்கொள்ள வேண்டிய அறிவையும் தகவல்களையும் மூன்று மணி நேரம் இத்திரைப்படத்தைப் பார்க்க செலவழிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

காந்தி எரிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு
“காந்தி துறவியென்று யார் சொன்னது. அவர் சமயத்துக்குத் தகுந்தமாதிரி மாறிக்கொள்ளும் சந்தர்ப்பவாத அரசியல்வாதி
“காந்தியின் உயிருக்காக என் மக்களுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது
“பார்ப்பனர்கள் எவ்வளவு தந்திரமானவர்கள் என்பது உங்கள் பேச்சின் மூலம் தெரிகிறது
“மகாத்மாக்களின் மனதில் என்ன இருக்கிறது என்று சாதாரண மனிதர்களாகிய நமக்கெப்படித் தெரியும்?
என்பன போன்ற விமர்சனங்களையடக்கிய துணிச்சலான வசன்ங்களின்போது திரையரங்கில் எழும் ஆரவாரம் அடங்க நேரமாகிறது.

சாகு மகாராஜாவாக நடித்திருப்பவரின் முகத்தில் அம்பேத்கர் குறித்துப் பேசுகையில் தான் எத்தனை பெருமிதம்? அந்தப் பெருமிதம் நம்மையும் தொற்றிக்கொள்ளும் விதத்தில் அதனை வெளிப்படுத்துகிறார். அம்பேத்கரின் வாழ்க்கைத்துணைவியாய் வரும் சோனாலி குல்கர்னி தன் நுணுக்கமான முகபாவங்களால் தன் பாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

அம்பேத்கர் உணவு உண்ணாமல் பாத்திரத்தை திருப்பி அனுப்பியதும் அதனை எடுத்துக்கொண்டு அவரைத் தேடிவருகிறார் அவரது மனைவி; அதே நேரம் “இந்நேரம் காந்தி உண்ணாவிரதம் தொடங்கியிருப்பார்என்ற வசனம் மிக நுணுக்கமான பொருளை உள்ளடக்கியது. அதுபோலவே காந்தியின் சிறிய அளவிலான உருவச்சிலையை அம்பேதகர் தன் கைகளால் உருட்டுவது போன்ற ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் அந்த குறியீட்டுக் காட்சியும் மிக முக்கியமானவை. ஆயிரம் பக்க வசனங்கள் சொல்லாத செய்தியை அந்த ஒரு காட்சி சொல்கிறது. அது போலவே உண்ணாவிரதப் படுக்கையில் அம்பேத்கரிடம் காந்தி “இனி என் வாழ்நாள் முழுவதையும் தீண்டாமையை ஒழிக்கவே பாடுபடுவேன்என்று கூறிவிட்டு காந்தி இருமுவதாய்க் காண்பிக்கும் காட்சி. இதுபோன்ற காட்சிகளை முற்பாதியிலும் அமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

“பிறப்பால் மட்டுமல்ல கொண்ட கொள்கையாலும் விருப்பத்தாலும் கூட நானொரு இந்துதான்என்று காந்தி அம்பேத்கரிடம் தெளிவாகச் சொல்கிறார். வருணாசிரமத்தை ஆதரிக்கும் காந்தியை திரைப்படம் வெளிச்சம் போட்டுக்காண்பிக்கிறது. காந்தி குறித்த கதையாடல்களை அதிகம் கேட்டு வளர்ந்த ஒரு சாதாரண இந்தியக் குடிமகனுக்கு காந்தியின் மறுபக்கத்தை மிக நேர்மையுடனும் தெளிவாகவும் வரலாற்றின் துணைகொண்டு காட்டுகிறார் இயக்குநர் ஜாபர் பட்டேல். இப்படத்தின் மூலம் காந்தியின் பிம்பம் உடைபடுகின்றது. அதைக் காணச் சகியாமல் ஜெயமோகன்களும் சாவித்திரி கண்ணன்களும் காந்தியின் அருமையென்ன பெருமையென்ன என்று கூவிக்கொண்டிருக்கிறார்கள்..



படம் முழுவதிலும் பிராமணர் என்கிற சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. தமிழுக்கு மாற்றுகையில் பார்ப்பனர் என்கிற சொல்லை பயன்படுத்தியிருந்தால் அதில் கிடைக்கும் அடர்த்தி வேறுமாதிரியானதாக இருந்திருக்கும். படம் முழுவதிலும் அம்பேத்கரை பொது மக்கள் பல தருணங்களில் தேசத்துரோகிஎன்றும் “அம்பேத்கர் ஒழிகஎன்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அன்றைக்கு இருந்த நிலையில் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் ஒன்றுதான் முதல் குறிக்கோள் என்று மக்கள் இருந்த நிலையில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் விடுதலையை மனதில் வைத்து போராடிய ஒப்பற்ற தலைவரை சமூகம் எப்படிப் பார்த்தது அன்று; எத்தனை எதிர்ப்புகளையும் காழ்ப்புணர்ச்சிகளையும்  தாண்டி அவர் அந்த நம் அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கும் நிலையை அடைந்திருப்பார் என்பதை இக்காட்சிகள் பார்வையாளருக்கு நன்றாக உணர்த்துகின்றன.

அதிகாரமும் பார்ப்பனியமும் என்றென்றைக்கும் கூட்டாளிகளாகவே இருப்பவைதான். அது அடிமை பிரிட்டிஷ் இந்தியாவானாலும், சுதந்திர இந்தியாவானாலும் சரி.  தேரிழுக்கும் காட்சியில் தலித் மக்களை தேரிழுக்க விடாமல், பூணூல் அணிந்த பார்ப்பனர்களும் காவல்துறையும் இணைந்து அவர்க்ளை அடித்து நொறுக்கும் காட்சி இதனை மிகச்சரியாய் சித்தரிக்கிறது.

அம்பேத்கர் தனது வாழ்வின் பல்வேறு காலகட்டத்தில் விட்டுக்கொடுத்தும் அனுசரித்தும் போக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததையும் திரைப்படம் நேர்மையோடு பதிவு செய்கிறது. தனது ஆய்வுக்கட்டுரையை திருத்தச் சொல்லும் பேராசிரியரைப் பற்றி தோழியிடம் இரைந்து கோபமாகப் பேசிய அடுத்த நொடியே “என்ன செய்யப்போகிறீர்கள்?என்கிற தோழியின் கேள்விக்கு “திருத்துவேன்என்று வெறுப்புடன் கூறும் இடம் ஒரு எடுத்துக்காட்டு.

காந்தியாக நடித்த மோகன்கோகலேவிற்கும், காந்தியின் பாத்திரமுணர்ந்து மிகப் பொருத்தமாக காந்திக்கு தமிழில் குரல் கொடுத்தவருக்கும் முக்கியமாய் பாராட்டுதல்களை தெரிவிக்கவேண்டும். எந்த இடத்திலும் உறுத்தாத அளவான ஒளியமைப்பைக் கொண்ட ஒரு வரலாற்றுப் படத்துக்கேயுரிய பொருத்தமான அஷோக் மேத்தாவின் ஒளிப்பதிவு, உணர்வுகளுக்குத் தகுந்த ஆனந்த் மோடக்கின் இசை, காலகட்டத்தை கண்முன் நிறுத்தும் விருது பெற்ற நிதின் சந்திரகாந்த் தேசாயின் கலை இயக்கம என அனைத்தும் மிகச்சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது.

சவுதார் குளத்தில் இறங்குவதற்காக அம்பேத்கர் படகில் வந்திறங்கும் காட்சியின் பின்னணியில் வரும் பாடலும், அம்பேத்கர் தபேலா வாசிக்க, அவர் வாழும் பகுதியிலிருக்கும் மக்களிடையே பாடப்படும் பாடலும் மொழி புரியாவிட்டாலும் கூட மனதைக் கவர்கின்றன. பாடலில் பொருள் தேடச் சொல்கின்றன.

அம்பேத்கர் வாழ்நாள் முழுதும் நெடுங்காலம் பல மதங்களை அலசி ஆராய்ந்து அவற்றிலிருந்து தான் பவுத்தத்தை தனது நெறியாகத் தேர்ந்தெடுக்கிறார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலமும் முயற்சிகளும், மிக அழகாக படத்தில் கூறப்பட்டுள்ளது.  பொதுவாக ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக்கும்போது அவருடைய இறப்புக்காட்சியே உச்சகட்ட காட்சியாய அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் அம்பேத்கர் திரைப்படத்தில் லட்சோபலட்சம் மக்களுடன் அவர் பவுத்தத்தைத் தழுவும் காட்சியே இறுதிக்காட்சியாக்கப்பட்டு, அம்பேத்கரின் மறைவை எழுத்துக்களில் சொல்லி முடிப்பது மிகச் சரியான வித்தியாசமான அணுகுமுறை. காலத்தின் தேவையும் கூட.

காலமெல்லாம் சாதி ஒழிப்புக்காக அரும்பாடுபட்ட, இந்துவாகப் பிறந்துவிட்டேன். ஆனால் இந்துவாக சாகமாட்டேன் என்று சூளுரைத்த அம்பேத்கர் இந்து மதத்தைத் துற்ந்து பவுத்தம் தழுவும் சிலிர்க்க வைக்கும் காட்சியோடு நிறைவடைகிற்து படம்.

அம்பேத்கர் – தன் வாழ்நாளை சமூகத்திற்கென அர்ப்பணித்த பெருந்தலைவனின் வாழ்க்கை காவியம் இதுவரை அறியப்பட்ட வரலாற்று நூலை புரட்டுகையில் ஒன்றோடொன்று ஒட்டிகொண்டு நின்ற அல்லது ஒட்டவைக்கப்பட்ட பல தாள்களை பிரித்து, அறியப்படாத அந்தப் பக்கங்களை  மக்களுக்கு எளிதில் புரியும் வடிவத்தில் அளித்த மாயக்கரங்களுக்கு சொந்தக்காரர் இயக்குநர் ஜாஃபர் பட்டேல். அம்பேத்கரின் எழுத்துக்களூடே, அவர் வாழ்க்கை குறித்த குறிப்புகளூடே பயணப்பட்டு எவற்றையெல்லாம் நமக்கு காட்டவேண்டுமோ அவற்றையெல்லாம் நம்மை கைபிடித்து அழைத்துச் சென்று காட்டிய ஜாஃபர் பட்டேல் மற்றும் அவரது குழுவினருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.


1 comment:

  1. காந்தியை நாடெங்கிலும் இலவசமாக , பள்ளி மாணவர்களிடமும்
    வெளியிட்ட இந்திய , தமிழக அரசுகள் .
    அம்பேத்காருக்கு மட்டும் பாராமுகம் காட்டுவதேன் ?
    சாதீய கொடுமைகளை எதிர்த்த மாமனிதர்க்கு , இந்த மரியாதை
    கூட செலுத்தாத அரசுகள் , சாதீய சமத்துவம் பற்றிப் பேச அருகதையில்லை .

    இவண்
    இணையத் தமிழன் .
    http://inaya-tamilan.blogspot.com

    ReplyDelete