Thursday, June 02, 2011

பாதல் சர்க்கார்

மே 13 - பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிமாற்றத்திற்கான அச்சாரம் இடப்பட்ட நேரம் ஓர் அற்புதமான நாடக ஆளுமை நம்மை விட்டுப் பிரிந்தார். பாதல் சர்க்கார் - வீதி நாடகம் என்ற பெயரை நாடெங்கும் பிரபலப்படுத்தியவர். இந்தியாவின் மிகப்பெரும் நாடக ஆளுமைகளில் ஒருவர். தனது 86வது வயதில் உடல்நலம் குன்றி கல்கத்தாவில் காலமானார். தேர்தல் முடிவுகளின் பரபரப்பில் அந்த மாமனிதரின் மரணம் கவனிக்கப்படாமலேயே போயிற்று. ஊடகங்களில் பெரிதாய் வந்திருக்க வேண்டிய அவரது மரணச்செய்திக்கு இடமே இல்லாத அளவு அன்று தேர்தல் முடிவுகள் குறித்த செய்திகள் ஆக்ரமித்தன.

பாதல் சர்க்கார் இந்திய நாடகத்துறையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். சாலைகளின் சந்திப்பில், தெருவோரத்தில், பேருந்துநிலையத்தில் என்று எங்கு வேண்டுமானாலும் வீதிநாடகங்கள் நிகழ்த்தப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சாலையில் போவோர் வருவோர் அங்கேயே நின்று வேடிக்கை பார்த்து அவர்களும் நாடகத்தில் ஒரு அங்கமாகும் தன்மை வீதிநாடகங்களில் உண்டு. இத்தகைய திறந்தவெளி நாடகங்களை இந்தியாவெங்கும் பிரபலமாக்கியவர்.ஒரு வரலாற்று ஆசிரியரின் மகனாகப் பிறந்து, சிவில் இஞ்சினியரிங் படித்து இங்கிலாந்து, நைஜீரியா போன்ற நாடுகளில் நகர்நிர்மாண நிபுணராக பணியாற்றினாலும் பாதலை இந்தியாவெங்கும் அறிமுகம் செய்து வைத்தவை அவர் இறுதிமூச்சு வரை நேசித்த நாடகங்கள் தான்.

நாடகங்களில் பலவகை உண்டு. முதல் வகை மரபுவழி நாடகங்கள். இவை பெரும்பாலும் பிற்போக்கு கருத்துக்களையே அடிப்படையாகக் கொண்டிருந்ததாக பாதல் சர்க்கார் நினைத்தார்.இவற்றை பாதல் முதலாம் அரங்கு என்கிறார். ஐரோப்பிய பாணியிலான மேடை நாடகங்கள் பார்வையாளருக்கும் நாடகத்திற்குமான தொடர்பை அறவே துண்டிக்கின்றன என்று கருதும் பாதல் இவற்றை இரண்டாம் அரங்கு என்றழைத்தார். இந்த இரண்டு அரங்குகளையும் நிராகரித்த பாதல் ‘மூன்றாம் அரங்கு‘ என்ற பெயரில் திறந்தவெளி நாடகங்களை எழுதி இயக்கத் தொடங்கினார். இவை மக்களோடு நேரடியாக பேசுபவை. முக்கியமாக நாடகம் நிகழ்த்தப்படும் இடம் இதுவாகத்தானிருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை உடைத்தவர் பாதல். வீதி நாடகத்தை எங்கு வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். அதுவே அதன் சிறப்பு. பெரிதாய் ஒப்பனைகளின்றி, கதைமாந்தர்களே நடிப்பிடத்தை உருவாக்குவது, உருவங்களை உருவாக்குவது போன்ற தன்மைகளே இதன் சிறப்பு. ஒளியமைப்பு, அரங்கம் என்று தேடி அலையவேண்டியதில்லை. ஆகவே ஒரு நாடகம் உருவாவதற்கான பொருட்செல்வு குறைந்தது. எல்லாவற்றையும் விட மூன்றாம் அரங்கு நாடகங்கள் மக்கள் பிரச்சனைகளைப் பேசின. சமூக சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. மேற்குவங்கம் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் இவரது தாக்கத்தால் நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. பல நாடகக்குழுக்கள் உருவாகின.

ஆனால் பாதல் முதல் இரண்டு வகை நாடகங்களையும்கூட நிகழ்த்தியிருக்கிறார். அதில் திருப்தியடையாமல் அவற்றை நிராகரித்தபின்னர் திறந்தவெளி நாடகங்களை இயக்கத்தொடங்கினார். இந்திரா காந்தி கொண்டுவந்த எமர்ஜென்ஸியை எதிர்த்து நாடெங்கிலும் நாடகங்கள் நிகழ்த்தப்பட முக்கிய காரணமாய் இருந்தார் பாதல். இவரது ’பிறிதொரு இந்திரஜித்’ நாடகம் மிக அதிகமாக மொழிமாற்றம் செய்யப்பட்ட நாடகம். ஏறத்தாழ இருபது நாடகங்களை இயக்கியிருக்கும் இவரது நாடக ஆக்கஙகள் நூலாகவும் வெளிவந்திருக்கின்றன.



‘‘கர்நாடகாவின் ‘சமுதாயா‘ குழுவினருடன் இணைந்து பாதல் உருவாக்கிய ‘ஓ சாசானா‘ என்ற நாடகத்தை முதன் முதலாக பார்த்தேன். அவரது நாடகங்களால் உந்தப்பட்டு வீதிநாடகத்திற்குள் வந்தவன் நான். பாதல் மூன்று முறை தமிழகத்திற்கு வந்து பயிற்சிப்பட்டறைகள் நடத்தியிருக்கிறார். நாடகவியலாளர் பிரசன்னா, நிஜநாடக இயக்குநர் மு.ராமசாமி போன்றவர்கள் அவரிடம் பயின்றவர்கள் தான். பாதல் இந்திய நாடக எல்லையை விஸ்தீரணப்படுத்தியவர். இந்திய நாடகத்தின் முகத்தையே எழுபதுகளில் மாற்றியமைத்து யார் வேண்டுமானாலும் நாடகம் பண்ணலாம் என்கிற நிலையை உருவாக்கியவர்.‘‘ என்கிறார் தமிழகத்தில் 28 ஆண்டுகளாக வீதிநாடகங்களை நிகழ்த்திவரும் சென்னை கலைக்குழுவின் இயக்குநர் பிரளயன்

பாதலுக்கு 1972ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது மத்திய அரசு.  ‘சதாப்தி‘ என்ற நாடகக்குழுவை தொடங்கி நடத்தி வந்தார் பாதல். சங்கீத நாடக அகாதமி விருது, சங்கீத நாடக அகாதமி ஃபெல்லோஷிப் விருது என்று விருதுப்பட்டியல் தொடர்ந்தது. 1997ல் அரசு அவருக்கு பத்மபூஷன் விருது கொடுத்தபோது ஏற்கனவே தான் சாகித்ய அகாதமி விருது பெற்றுவிட்டபடியால், அதுவே ஒரு எழுத்தாளருக்குக் கிடைக்கும் உயரிய அங்கீகாரம் என்று கூறி பதமபூஷனை மறுத்தார்.தமிழகத்திற்கு வந்து பல பயிற்சி பட்டறைகளையும் நடத்தி இருக்கிறார் பாதல் சர்க்கார். அந்த பயிற்சிப் பட்டறைகளில் பயின்றவர்கள் பலர் இன்று நாடகத்துறையில் புகழ்பெற்று விளங்குகிறார்கள். அவரது ’ஸ்பார்டகஸ்’, ’பிறிதொரு இந்திரஜித்’, ’ஊர்வலம்’ போன்ற நாடகங்கள் தமிழில் வரவேற்பு பெற்றவை. திரைத்துறையிலும் நாடகத்துறையிலும் அவரது தாக்கத்துடன் ஸ்கிரிப்ட் எழுதும் பலருண்டு.

ஒரு மிகப்பெரிய நாடக ஆளுமை மறைந்து விட்டார் என்று கூறுவதை விட எங்கோ தெருவோரத்தில் நடக்கும் வீதிநாடகத்தின் ஆன்மாவில் பாதல் சர்க்கார் வாழ்கிறார் என்று சொல்வதே சரியாக இருக்கும்.


No comments:

Post a Comment