சென்னை கவின்கலை கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்த அந்த இளைஞரை புரட்டிப்போட்டது அங்கு மூன்று நாட்கள் நடந்த உலக திரைப்படவிழா. அதுவரை, தூரிகை, பிரஷ், சிற்பம் என்றிருந்தவருக்கு, சினிமாவில் கலை இயக்குநராகவேண்டும் என்கிற சிந்தனையுடன் இருந்த அவருக்கு சினிமா என்கிற அற்புத கலை மனதைத் தொட்டது. அப்போது இடப்பட்டது அவர் இயக்குநராவதற்கான முதல் வித்து.
மெட்ராஸ் திரைப்படம் பாராட்டுகளுக்கு இணையான வசூலையும் திரட்டுவதால் பா. ரஞ்சித்தின் அலுவலகம் களைகட்டி உள்ளது. ஒரு சினிமா இயக்குநருக்கான எந்த பகட்டும் இன்றி இருக்கிறது அவருடைய அறை. மேஜை மேல் அம்பேத்கர் படம். அருகில் அவருடைய துணை இயக்குநர்கள். சிரிப்பும், கொண்டாட்டமுமாக அந்த இடம் அதிகாரத்தின் நிழல்கூட படாதபடி இருக்கிறது. “படம் நன்றாகப் போகிறது. பலரும் பாராட்டுகிறார்கள். மிகவும் மதிக்கும் பல இயக்குநர்களுக்கு படம் பிடித்திருக்கிறது” என்கிறார் ரஞ்சித். ரஞ்சித் ‘தகப்பன் சாமி’ படத்தில் சிவ.சண்முகத்திடமும் சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் வெங்கட் பிரபுவிடமும் துணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். “துணை இயக்குநர்களை அடிமைகள் போல் நடத்தும் சினிமாவில் வெங்கட் பிரபு அவ்வளவு நட்புணர்வுடன் பழகுவார். சுதந்திரமாக இருப்பதாக நம்மை உணரவைப்பார். அவருக்கு படிநிலைகளின் நம்பிக்கை கிடையாது” என்கிறார் ரஞ்சித்.
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் அசலான சென்னை மொழி புளித்துப்போன நாடகத்தனமான சென்னை மொழியைக் திரையில் கேட்ட காதுகளில் தேனாய் பாய்கின்றன. சென்னை மொழி என்று இதுவரை மக்களுக்கு அறிமுகமாகியிருந்த லூஸ் மோகன், சோ தொடங்கி கமல்ஹாசன் வரை திரையில் பேசிய கற்பனையான மொழிக்கும் இந்த அசல் மொழிக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு தெரிகிறது. “படத்தின் எல்லா வசனத்தையும் என் அம்மா பேசினால் எப்படி பேசுவார்களோ அப்படி யோசித்துத்தான் எழுதினேன்.” என்கிறார் ரஞ்சித்.
திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் நகரில் 1982ல் பிறந்தவர் ரஞ்சித். “எங்கள் பகுதியை காலனி என்றுதான் சொல்வார்கள். அதை மாற்றவேண்டும் என்பதற்காகவே அஞ்சல் முகவரியில் ‘அம்பேத்கர் நகர்’ என்பதை பயன்படுத்தி பயன்படுத்தி அந்தப் பெயரை மக்களின் புழக்கத்துக்குக் கொண்டுவந்தோம்” என்று ஊர்ப்பெயரின் காரணம் கூறுகிறார் ரஞ்சித். ஐந்தாம் வகுப்பு வரை படித்தது பஞ்சாயத்து யூனியன் பள்ளியில். அதன்பின் பாண்டேஸ்வரம், ஆவடி, வெங்கல், வெள்ளியூர் என்று பல ஊர்களில் பள்ளிப்படிப்பை தொடர்ந்துவிட்டு சென்னை கவின்கலை கல்லூரியில் இணைந்தார். “மாமாவின் பிரஷ்ஷை திருடி நான் பாட்டுக்கு வரைவேன். அப்போதெல்லாம் ஓவியம் வரைவது, கிரிக்கெட் விளையாடுவது இரண்டும்தான் எனக்கு எல்லாமே” என்கிறார். ரஞ்சித் வாழ்ந்த பகுதிகளிலெல்லாம் சுவரெழுத்து கலைஞர்கள் அதிகமாக வாழும் பகுதிகள். அவர்களைப் பார்த்துதான் ஓவியக் கல்லூரியில் சேரும் எண்ணமே தோன்றியதாகக் கூறுகிறார். திரும்புமிடமெல்லாம் அரசியல் தலைவர்களின் படங்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் என்று வளர்ந்த ரஞ்சித் போன்ற ஒருவரால்தான் மெட்ராஸ் படத்தில் சுவரையும் ஒரு பாத்திரமாக்க முடியும்.
“ஓவியர் சந்துரு என்னை செதுக்கினார். செந்தில் அண்ணன் என்னை இலக்கியத்தின்பால் இழுத்துச் சென்றார். காலச்சுவடு, உயிர்மை, தலித் முரசு என்று வாசிக்கத் தொடங்கினேன். அரசியல் கருத்துக்களை உள்வாங்கினேன். சுந்தர ராமசாமி, சாரு நிவேதிதா, ஷோபா சக்தி, எஸ்.ராமகிருஷ்ணன் என்று பலரையும் வாசிக்கத் தொடங்கினேன். யமுனா ராஜேந்திரனின் சினிமா விமர்சனக் கட்டுரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை. ஒரு படத்தை இப்படியும் பார்க்கமுடியுமா என்று வியக்க வைத்தவர்ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்களின் கட்டுரைகளை விரும்பி வாசித்திருக்கிறேன். ” என்கிறார் ரஞ்சித். கல்லூரியில் படிக்கும்போதே மூன்றாண்டுகளும் வீதி நாடகங்கள், நவீன நாடகங்கள் என பல நாடகங்களை எழுதி இயக்கிய அனுபவம் உண்டு. ஒரு மீனவ கிராமத்திற்கு அவர்களைக் குறித்த நாடகம் போடச் சென்றபோது நான் அதில் நடித்தேன். அப்போது சினிமாவில் நமக்கு கற்பிக்கப்பட்ட மெட்ராஸ் பாஷை பேசிதான் நடித்தேன். ஒரு வயதான மூதாட்டி என்னை அழைத்து ‘நாங்க இப்படித்தான் பேசுவோம்னு தெரியுமா உனக்கு. இது எங்க பாஷை இல்லை” என்றார். அந்தக் கேள்விதான் என்னை அசல் சென்னை மொழியுடன் படம் எடுக்கச் செய்கிறது.” என்று சொல்லும் ரஞ்சித்துக்கு மணமாகி ஒரு குழந்தையும் உண்டு.”என்னை ஊக்கப்படுத்தி என் ஸ்கிரிப்ட் குறித்த நம்பிக்கையை அளிப்பவர் அனிதாதான்” என்று மனைவி குறித்து கூறும் ரஞ்சித் “பெரியார் மீது மிகுந்த மதிப்பு உண்டு. பெண் விடுதலை குறித்து அவரைவிட யார் பேசிவிட முடியும். மெட்ராஸில் பெரியார் குறித்த காட்சி ஒன்று உண்டு. ஆனால் அந்தக் காட்சியையே எடுக்கவேண்டி வந்ததில் வருத்தம்தான்” என்கிறார்.
“அவரிடம் பணியாற்றுவது சுதந்திரமாக ஜாலியாக இருக்கும். எல்லோர் மேலும் அவருக்கு அப்படியொரு அன்பு இருக்கும். படப்பிடிப்பு நடக்கும் இடம் அவ்வளவு நட்புக்குரியதாய் இருக்கும்போது தானாகவே திறமைகள் கொட்டும். அவருக்கு புகழோ பணமோ முக்கியம் இல்லை. சாப்பாடும், தங்க ஒரு இடமும் போதும் என்பதுதான் அவருடைய கொள்கை. கலையும் அரசியலும்தான் முக்கியம். ஆகவே சமூகம் விரும்பும் நல்ல சினிமாவைத் தருகிறார்” என்கிறார் அட்டகத்தி, குக்கூ படங்களின் நாயகன் தினேஷ். ”அட்டகத்திக்கு ஆடிஷன் வைக்கும்போது தினேஷ் கையில் உயிர்மையை பார்த்தபோதே முடிவு செய்துவிட்டேன். அவர்தான் கதாநாயகன் என்று” என்கிறார் ரஞ்சித்.
வடசென்னையின் விளிம்பு நிலை மக்களின் காதல், கண்ணீர், விளையாட்டு என்று காட்சிப்படுத்தும் ரஞ்சித்தின் அட்டகத்தியில்தான் கானாபாலா பிரபலமானார். வயதில் சிறியவரென்றாலும் ரஞ்சித்தை கானாபாலா அண்ணன் என்றே விளிக்கிறார். “அறிவில் அவர் என்னைவிட மூத்தவரில்லையா? அதான்” என்கிறார். “பூவை மூர்த்தியார் இறந்தபோது பாடிய மரண கானாவைத்தான் மெட்ராஸில் பயன்படுத்தினோம். திரையில் வருவேன் என்று கேட்டு நடித்தேன். எங்கள் மகக்ளைக் குறித்த 100 கதைகள் இருக்கிறது ரஞ்சித்திடம். அவர் 2 படம்தான் எடுத்திருக்கிறார். இன்னும் 98 படம் வரும். பாருங்க. அவர் கமர்ஷியல் படம் எடுத்தாலும் அதில் உண்மை இருக்கும்” என்கிறார்.
“மதுரை, கோவை கதைக்களத்தில் எக்கச்சக்கமான படங்கள் வந்துவிட்டன. அவை எல்லாம் ஒட்டுமொத்த தமிழர் அடையாளமாக மாற்றப்பட்டுவிட்டன. ஆனால் எங்கள் அடையாளம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான தமிழர்களுக்கான அடையாளமாய் மாற்றவேண்டும். அதிகம் சொல்லப்படாத ஒன்றைச் சொல்லவேண்டுமென நினைத்தேன். என் வாழ்க்கையில், என்னைச் சுற்றியுள்ளவர்கள் வாழ்வில் நடப்பவை என்று அதிலிருந்துதான் நான் கதையை உருவாக்குகிறேன். எங்கள் வாழ்க்கையை இதுவரையில் பெரும்பாலும் வறுமையையே எங்கள் பண்பாட்டு அடையாளமாக நிறைய காட்டிவிட்டார்கள். எங்கள் வாழ்வு கொண்டாட்டமானது. கலை மிகுந்தது. ஆட்டம் பாட்டம் நிறைந்தது. அவற்றையெல்லாம் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் கதைக்களமாக சென்னையை ஒட்டிய புறநகரை வைத்துக்கொள்கிறேன். இன்னும் சிறுவயதில் நண்டுபிடித்தது, நத்தை பிடித்தது என்று பிரத்யேகமான சில விஷயங்கள் எல்லாம் சினிமாவுக்குள் வைக்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் வைப்பேன் ” என்கிறார் ரஞ்சித்துக்கு இசை மிகவும் விருப்பமானது. இளையராஜா, பாப் மார்லி, இமேனி என்று இவருடைய விருப்பப் பட்டியல் நீள்கிறது.
மெட்ராஸ் ஒளிப்பதிவாளரான முரளி “நானும் ஒவியக்கல்லூரியில் பயின்றவன் என்பதால் எனக்கும் ரஞ்சித்துக்கும் இடையே ஒரு விஷயத்தை காட்சிரூபமாக எப்படிச் சொல்வது என்பதில் சிக்கலே வந்ததில்லை. இருவருடைய கருத்தியலும் பல விஷயங்களிலும் ஒன்றுபோலவே இருப்பதால் அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதாக இருந்தது. திரைக்கதையை நோக்கி ஓடிவ்ந்து ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரையும் பணியாற்றச் செய்வதில் வல்லவர் ரஞ்சித்” என்கிறார்
கலைஞர்களின் இரு வகை உண்டு. மக்களின் கதையைச் சொல்பவர்கள். ஏதோ ஒரு கதையை மக்களுக்குச் சொல்பவர்கள். இயக்குநர் பா.ரஞ்சித் முதல் வகை.
(நன்றி : இந்தியா டுடே)
god of sc peoples
ReplyDeleteGood one
ReplyDeleteமகிழ்ச்சி!
ReplyDeleteஉண்மையான பதிவு.
ReplyDeleteMakkalin naayagan
ReplyDeleteஇவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். தெளிவான கட்டுரை. நன்றி.
ReplyDelete