Monday, August 08, 2011

எதிரொலிக்கும் கரவொலிகள்!




ண்களால், பெண்களால் நுழைய முடியாதது திருநங்கைகளின் உலகம். சமூகத்தில் திருநங்கைகள் குறித்த பார்வை முற்றாக மாறிவிடவில்லை. எனினும், ஆங்காங்கே நடக்கும் சில அபூர்வ நிகழ்வுகள் மாற்றம் குறித்த நம்பிக்கைத் தருகின்றன. அதில் ஒன்றுதான் கடந்த வாரம் கன்னிமரா நூலக அண்ணா சிற்றரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்து இருந்த 'திருநங்கையர் படைப்புலகம்’ என்ற நிகழ்வு. திருநங்கைகளின் எழுத்துக்கள், அவர்களைப் பற்றிய பதிவுகள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்ட இந்நிகழ்ச்சி, தமிழ்ச் சூழலில் முதல் முயற்சி.
 நிகழ்ச்சியில் சுபாஷ் இயக்கிய 'காந்தள் மலர்கள்’, சி.ஜெ.முத்துக்குமார் இயக்கிய 'கோத்தி’ ஆகிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக வேலை தர மறுக்கும் நிறுவனங்களின் போக்கை காந்தள் மலர்களும், பெற்றோர் வெறுத்து ஒதுக்கிய நிலையில், வாழ வழியின்றி கடைகளில் காசு கேட்கச் செல்லும் நிலைக்குத் தள்ளப்படுவதை கோத்தியும் படம் பிடித்துக்காட்டின.

மறைந்த எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய 'வாடாமல்லி’ நாவல் குறித்தும், நாடக இயக்குநர் அ.மங்கை எழுதிய 'எதிரொலிக்கும் கரவொலிகள்’ நூல் குறித்தும் பிரியா பாபு ஆய்வுரை நிகழ்த்தினார். தமிழ் இலக்கியத்தில் ஒரு திருநங்கையை முக்கியக் கதாபாத்திரமாக வைத்துப் படைக்கப்பட்ட முதல் நாவல் 'வாடாமல்லி’. சு.சமுத்திரம் அந்த நாவலை எழுதக் காரணமாக இருந்த மூத்த திருநங்கை நூரியும் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தார்.

'அ.மங்கை 'கண்ணாடிக் கலைக் குழு’ என்று திருநங்கைகளைக்கொண்டு ஒரு கலைக் குழுவைத் தொடங்கி 'மனசின் அழைப்பு’ என்கிற நாடகத்தின் மூலம் திருநங்கைகள் குறித்த விழிப்பு உணர்வை உண்டாக்கியவர். அவருடைய நூலில் சமபாலின ஈர்ப்புகொண்டவர்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையேயான வேறுபாடு நுட்பமாக விளக்கப்பட்டு இருக்கிறது. திருநங்கைகள் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள் அந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்!'' என்றார் பிரியா பாபு.
திருநங்கைகள் குறித்து தமிழ் இலக்கியத்தில் உள்ள பதிவுகள் குறித்துப் பேசிய கவிஞரும், அரங்கக் கலைஞருமாகிய 'லிவிங் ஸ்மைல்’ வித்யா, சங்க காலத்தில் இருந்தே திருநங்கையர் குறித்த பதிவுகள் தமிழ் இலக்கியத்தில் உள்ளதைச் சுட்டிக்காட்டினார். ''எஸ்.பாலபாரதியின் 'அவன்-அது=அவள்’ நாவல் முதன்முதலில் திருநங்கைகளின் காதல் குறித்து நுட்பமாகப் பேசியது. கி.ராஜநாராயணன் 1960-ல் எழுதிய 'கோமதி’ திருநங்கைகள் குறித்தான முதல் சிறுகதை. 1995-ல் ஹவி எழுதிய 'தீட்டு’, இரா.நடராசனின் 'மதி என்னும் மனிதனின் மரணம்’, திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் 'ஆச்சிமுத்து’, லட்சுமண பெருமாளின் 'ஊமாங்கொட்டை’, 1997-ல் வெளியான 'வக்கிரம்’, 2009-ல் வெளியான பாரதி தம்பியின் 'தீராக் கனவு’ ஆகிய கதைகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை.

திருநங்கைகளோடு ஒப்பிடுகையில் திருநம்பிகள் குறித்தான பதிவுகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை. (பெண் உணர்வுகொண்டு பெண்ணாக மாறும் ஆணை திருநங்கை என்பதுபோல, பெண் ஆணாக உணர்ந்து மாறினால் அவர்கள் திருநம்பிகள்!) இது மிகவும் வருத்தத்துக்கு உரியது. அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக உள்ளவர்கள்!'' என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார் 'லிவிங் ஸ்மைல்’ வித்யா.
இவரின் 'நான் சரவணன் வித்யா’, ரேவதியின் 'உணர்வும் உருவமும்’, ப்ரியாபாபுவின் 'மூன்றாம் பாலின் முகம்’ ஆகிய மூன்று நூல்கள் குறித்து பேராசிரியை சந்திரா தன் கருத்துக்களைப் பதிவு செய்தார்.

நிகழ்ச்சி முடிந்த பிறகும் 'லிவிங் ஸ்மைல்’ வித்யா மேடையில் வாசித்த அவரது கவிதை மட்டும் செவிகளில் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.

'அப்போது நான்
முழுக்கை சட்டையும், கால் சராயும்
அணிவது வழக்கம்
அப்போது நான்
மாதம் ஒருமுறையென
சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்
பள்ளியில்தான் படித்தேன்
இருந்தாலும் அவர்கள்
கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லை என
இப்போது நான்
புடவை கட்டி
ஒத்தசடை பின்னி
பூ முடிந்து
பாந்தமாக வளைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களாம்
'நான் பெண் இல்லை’என்று.!’


4 comments:

  1. நல்ல பதிவு.

    ReplyDelete
  2. சமூக அக்கறையுள்ள கட்டுரை வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
  3. Anonymous9:13 am

    மிக அழுத்தமான கருத்து சகோதரி. என்னதான் திரைப்படங்கள், குறும்படங்கள், கட்டுரைகள் என வந்தாலும், சமூகம் திருநங்கைகளை அங்கீகரிக்கும் அளவுக்கு முதிர்வு பெறவில்லை. அது இந்த சமூகத்தின் சாபக்கேடு.

    எனினும் பிச்சை எடுப்பது, தவறான தொழில், வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு என சில திருநங்கைகள் செய்யும் செயல்களின் எதிரொலிப்பும் சமூகத்தின் அலட்சியத்திற்கு ஒரு காரணமாக இருக்கத்தான் செய்கிறது.

    சமூகம் - திருநங்கைகள்: இரு புறமும் மாற்றம் தேவை.

    இவன்
    வில்சன் குணாநிதி

    ReplyDelete
  4. ஆழமான வரிகள் அக்கா...
    இப்போது தான் வாசிக்க கிடைத்தது.

    ReplyDelete