Tuesday, January 31, 2012

விட்டு விடுதலையாகி..

கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி வேறு தாங்கவில்லை. வயிற்றை ஒரு கையால் தடவிக்கொண்டே கொஞ்சம் பொறுத்துக்கோ! சுதா வந்துரட்டும் என்று வயிறோடு பேசினாள். வயிறோ பலவித சப்தங்களை எழுப்பி தன் எதிர்ப்பைத் தெரிவித்தது.

ஏதாவது நொறுக்குத்தீனி அல்லது வாழைப்பழம் இருக்கிறதா என்று அறைக்குப்போய் பார்த்தாள். அறைக்குள்ளே  காலையில் ஐம்பது பைசா சில்லறையில்லாமல் இல்லாததால் பக்கத்துக் கடைப்பையன் கொடுத்த ஒரே ஒரு ஹால்ஸ் மிட்டாய் மட்டுமே தேடியதில் தட்டுப்பட்டது.

மஞ்சு கட்டிலில் அமர்ந்து ஷிட்னி ஷெல்டன் நாவலை வாசித்துக்கொண்டிருந்தாள்.

மஞ்சு! பழம் வச்சிருக்கியா?

ஒண்ணுதாண்டி வச்சிருந்தேன். இப்போதான் அதையும் சாப்பிட்டேன். முன்னமே கேட்டிருக்கலாமே. ஷேர் பண்ணியிருக்கலாமே

சரி விடு! இந்த சுதா பாரேன்..தினமும் நைட் லேட்டா வர்றா. எனக்கு பசி தாங்க மாட்டேங்குது.

நீ எதுக்கு அவளுக்காக வெயிட் பண்றே? நீ பாட்டுக்கு சாப்பிடவேண்டியதுதானே? 8 மணிக்கு வாங்கி வைக்கிற சாப்பாட்டை தினமும் பத்தரை பதினோரு மணிக்கு சாப்பிட்டா ஆறி அவலா போயிடாதா? நீ வெயிட் பண்ணுவேன்னு அவளுக்குக் கொஞ்சமாவது பொறுப்பிருக்கா?. தினமும் லேட்டாத்தான் வர்றா. ஹாஸ்டல்ல பத்துமணிக்கு கேட் மூடிடுவாங்கன்னு தெரிஞ்சும் ஆடி அசைஞ்சு வர்றா. தினம் வார்டன் ஆண்ட்டி கிட்ட திட்டும் வாங்குறா. அப்படி எங்கத்தான் போயிட்டு வர்றா?

மஞ்சுவுக்கு சொல்லும்போதே கோபம் கொப்பளித்தது. சிவந்த அவளது கன்னங்கள் மேலும் சிவந்துபோயின. அவ சரியில்ல கவிதா. நீ கேட்க மாட்டேங்குற! என்றாள்

அவ ராஜ் கூட ஆன்லைன்ல சாட் பண்ணிட்டு வர்றா. நம்ம என்ன சொல்ல? அவளும்தான் என்ன செய்வா? அவன் எங்கேயோ இருக்கான். இவ இங்கே இருக்கா? எப்படித்தான் பேசிப்பாங்க பின்னே. அதனால்தான் நான் ஒண்ணும் சொல்றதில்ல.- கவிதா பெருமூச்சு விட்டாள்.

அப்போ காத்துக்கிட...! என்கிட்ட வந்து பசிக்குதுன்னு புலம்புனே...மகளே கொன்னுடுவேன்..

கவிதா அறையை விட்டு வெளியே வந்து ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சி சேனலை மாற்றிக்கொண்டே வந்தவள் பிடித்த பாட்டு வர கொஞ்சம் ஒலியளவைக் கூட்டினாள்.

கேன் யூ ப்ளீஸ் ரெட்யூஸ் வால்யூம் ப்ளீஸ்?
- ஏதோ ஒரு அறைக்குள்ளிருந்து ஒரு குரல் கேட்க, இவளுக்கு எரிச்சல் வந்தது. பட்டென்று டிவியை அணைத்தாள்.

இதே எழவு எப்பப்பார்த்தாலும் இவளுகளோட.. இவளுகளுக்கு தூக்கம் வந்துரும் 9 மணிக்கெல்லாம். இழுத்துப்போர்த்திட்டு படுத்துருவாளுக. அதுக்கு மத்தவங்களும் ஒண்ணும் பண்ணக்கூடாது..சே..! என்ன ஜென்மங்களோ? ஒரு பிடிச்ச பாட்டை நிம்மதியா கேட்க முடியுதா? இந்த டிவில பத்து மணிக்கு மேலதான் பிடிச்ச பாட்டா வேற போட்டுத்தொலைப்பானுங்க. - மனசுக்குள் திட்டியவாறே மணியையும் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள். பக்கத்து அறை நிர்மலா எட்டிப்பார்த்தாள்.

நல்ல பாட்டு பாடுச்சே! ஏன் நிப்பாட்டுனே கவிதா?

நானெங்கே நிப்பாட்டுனேன். எவளோ நிப்பாட்டச் சொன்னா. நிப்பாட்டுனேன். நீ வேற கடுப்பைக் கிளப்பாதே! போய்த் தூங்கு போ- எரிந்து விழுந்தாள் கவிதா..

லூஸாடி நீ? எவ நிப்பாட்ட சொன்னது?

தேவி குரல் மாதிரி இருந்துச்சு

இங்க கொண்டாங்குறேன்..ரிமோட்டைக் குடு.. பாய்ந்து வந்து கவிதாவின் கையிலிருந்த ரிமோட்டைப் பிடுங்கி டிவியை ஆன் செய்தாள் நிர்மலா. என்ன சத்தம் இந்த நேரம்? பாடிக்கொண்டிருந்தது.

என்ன அருமையான பாட்டு! ரசனை கெட்ட முண்டங்க.. - நிர்மலா திட்டிக்கொண்டே ரிமோட்டை முடுக்க, எஸ்.பி.பியின் குரல் பெரிதாக ஒலிக்கத் தொடங்கியது.

மீண்டும் கேன் யூ ப்ளீஸ் ரெட்யூஸ் தெ வால்யூம்? என்று அசரீரி ஒலித்தது.

முடியாது. ஐயம் ஸாரி. எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும். பார்க்கணும். நிர்மலா விடைத்துக்கொண்டு சொன்னாள். தேவி அறையிலிருந்து வெளியே வந்தாள். ப்ளீஸ். திஸ் ஈஸ் டூ மச். வால்யூம் ரெட்யூஸ் பண்ணுங்க ரெண்டுபேரும் என்றாள்.

முடியாது! இந்தப் பாட்டு முடிஞ்சாத்தான் என்றாள் நிர்மலா. மஞ்சு அமைதியாய் உள்ளிருந்து ஷிட்னி ஷெல்டனிலிருந்து தலையை எடுக்காமல் காதுகளை மட்டும் தீட்டி வைத்துக்கொண்டாள். கவிதா கலவரமாய் பார்த்தாள். நிம்மி! சண்டை போடாதே! விட்டுரு. எத்தனை தடவை ‘என்ன சத்தம் இந்த நேரம்’ கேட்டிருப்போம். இன்னிக்கு விட்டுக்குடு. என்றாள் கவிதா

போடீ இவளே! என்று அழிச்சாட்டியமாய் நின்ற நிர்மலா பாட்டு முடிந்தவுடன் தான் ஒலியளவைக் குறைத்தாள். கவிதா மீண்டும் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தேமுக்கால். சுதா வரவில்லை இன்னும். என்னதாள் பேசுவாள் ராஜூவிடம்?. இப்படி பேசுகிறாளே? பிரவுஸிங் செண்டரே கதியென்று கிடக்கிறாள். இப்படி  நினைத்துக்கொண்டிருந்தபோதே அழைப்பு மணி ஒலிக்க சென்று கதவைத் திறந்தாள். சுதாதான். சாப்டியாடி? என்றாள் நுழைந்தவுடன்.

இல்லை. உனக்காகத்தான் வெயிட்டிங்

அச்சச்சோ..! சரி வா! சாப்பிடுவோம்

சாப்பாட்டை எடுத்து வந்து அமர்ந்தாள் கவிதா. மஞ்சு உள்ளிருந்து கேட்டாள்.. என்ன பிரிட்ஜ்ல வச்சது மாதிரி ஜில்லுன்னு ஆயிடுச்சா?

இருவரும் பதில் சொல்லாமல் சாப்பிட்டார்கள். மஞ்சு உள்ளிருந்து கேட்டாள். சுதா! தினமும் உன்னால இவ சாப்பிடாம பட்டினி கிடக்கிறா? கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா? சுதா பதிலேதும் சொல்லவில்லை. அறைக்குள் நுழைந்து மின்விளக்கை அணைத்து உடை மாற்றத்தொடங்கினாள்.

படிக்கிறேன்ல..நீ பாட்டுக்கு லைட் ஆஃப் பண்ணினா என்ன அர்த்தம்

டிரஸ் மாத்துறது தெரியலையா?

கவிதாவுக்கு இதற்கொரு சண்டை வந்துவிடுமோ என்று பயமாய் இருந்தது. இந்த ஹாஸ்டலில் எடுத்ததற்கெல்லாம் சண்டையாய்த்தான் கிடக்கிறது. காலையில் எழுந்து குளிக்கப் போகையில் நான் தான் முன்னாடியே பக்கெட் வைத்தேன் என்று சண்டை. டாய்லெட் போய்விட்டு சரியாய் பிளஷ் பண்ணவில்லை என்று ஒரு சண்டை. தலையை சீவி முடியை அறைக்குள்ளேயே போட்டுவிடுவதற்கு, சாப்பாட்டுக்கு கியூவில் நிற்கையில், டிவி பார்க்கையில் சேனலுக்கு, தூக்கம் வந்தால் லைட்டை ஆஃப் பண்ணச்சொல்வதற்கு, கும்பலாக அமர்ந்து பேசினால் வரும் ஹோவென்ற சிரிப்புக்கூச்சலுக்கு என்று எல்லாவற்றுக்கும் சண்டைதான்.

தொலைபேசி மணி ஒலிக்க, எடுத்தாள் கவிதா. வார்டனின் குரல். கவிதா! சுதாவுக்கு கால். மணி பத்தேமுக்கால். பத்து மணிக்கு மேல கால் வரக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்? சுதா கிட்ட சொல்லு. சரியா? என்றாள் வார்டன் அதட்டலாக.

சுதா வந்து ரிசீவரை வாங்கினாள். ம்..சாப்பிட்டுட்டேன் ராஜூ. நீ...?.....ம்....சரி...சரி...டேக் கேர்...

கவிதா அவளையே பார்த்துக்கொண்டிருந்தாள். இப்பத்தானே சாட்ல பேசிட்டு வர்றே? அப்புறமென்ன திரும்ப கால்? ஆண்ட்டி வேற கன்னாப்பின்னான்னு திட்டுது. மொபைல்ல கூப்பிட்டாத்தன் என்ன?

இல்ல கவிதா! பிரான்ஸ்லேர்ந்து இங்கே லேண்ட்லைனுக்குப் பேசினா ஃப்ரீ. மொபைலுக்குப் பேசினால் பைசா அதிகம். அதான் ராஜூ லேண்ட்லைனுக்கு பண்றான். சரி விடு! எல்லாம் இன்னும் நாலு நாள் தானே? நான் தான் பிரான்ஸ் போயிடுவேன்ல என்றாள்.

கவிதாவுக்கு சட்டென்று முகம் வாடியது. சுதா போகப்போகிறாள். ராஜூ இருக்கும் பிரான்ஸுக்கே போகப்போகிறாள். எல்லா ஏற்பாடுகளும் முடிந்தன. ராஜூ பிரான்ஸ்  போவதற்கு முன் சுதாவை பதிவுத் திருமணம் செய்துவிட்டுத்தான் போனான். ஹாஸ்டலில் கவிதாவைத்தவிர யாருக்கும் தெரியாது. இவள் தான் சுதா தரப்பில் சாட்சிக்கையெழுத்து போட்டாள். பரம ரகசியமாய் இருவரும் இதை வைத்திருந்தனர். ஒருத்திக்குத் தெரிந்தாலும் அவ்வளவுதான். ஏனோ திடீரென மனம் கனத்துப்போனது கவிதாவுக்கு.

நீ போயிட்டா நான் என்ன பண்ணுவேன் சுதா?

சுதா சிரித்தாள். கொஞ்ச நாள் கஷ்டப்படுவே..அப்புறம் போகப்போக வேற எவளாவது ஹாஸ்டலுக்கு புதுசா வருவா. அவ பிரண்டானவுடன் என்னை மறந்துடுவே! என்றாள். சுதா கவிதாவிடம் ஏன் அப்படி ஒட்டிக்கொண்டாள்? இருவருக்குமே தெரியாது. அவள் ஹாஸ்டலில் சேர்ந்து ஆறு மாதங்கள் தான் ஆகின்றன. ஆனால் நெடுநாள் பழகியவள் போல் கவிதாவிடம் எல்லா விஷயஙக்ளையும் சொன்னாள். ராஜுவை காதலிக்கும் விவரம் தெரிந்து அப்பா அடித்தது முதல், அம்மா அவளை இரண்டு செட் துணிகளோடு எங்காவது அவனோடு போய் பிழைத்துக்கொள் என்றதையும், அண்ணன் - அண்ணி அவளை கரித்துக்கொட்டியதையும், அண்ணனின் குழந்தையை பிரிய முடியாமல் பிரிந்து வந்த்தையும் அழுதுகொண்டே கதைகதையாய் ஒரு நாள் அவள் கூறியபோது கவிதா அவள் கைகளைப் பிடித்து ஆறுதல் சொன்னாள். அன்று பிடித்த கையை இன்று வரை விடவில்லை அவள்.

ராஜூதான் அவளை இந்த ஹாஸ்டலில் வந்து சேர்த்துவிட்டான். அவன் தான் அட்வான்ஸ் கொடுத்து, துணிமணிகள், வாளி, சோப்பு, சீப்பு, கண்ணாடி, எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்தான். சுதா  ஹாஸ்டலில் சேர்ந்து ஒரே மாதத்தில் ராஜூவை அவன் வேலை பார்த்த கம்பெனி பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு  அனுப்பியது. அவனுக்கு அவளை விட்டுவிட்டுப் போக மனசில்லை. இருவருமே ரகசியமாய்  மணமுடிக்க முடிவெடுத்தார்கள். திருமணத்தை பதிவு செய்யக்  கிளம்புகையில் அறைக்குள் அமர்ந்து அழுதாள் சுதா. அவளைத் தேற்றி அழைத்துக்கொண்டு போனாள் கவிதா. பதிந்து முடிந்ததும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றார்கள்.

சுதாவை பார்த்துக்கோங்க..அவளுக்கு யாருமில்லை. என்னை மட்டும் நம்பி வந்தா இவ. நானும் அவளை விட்டுட்டு நாளைக்குக் கிளம்புறேன். எவ்வளவு சீக்கிரம் அவளை அங்கே அழைச்சுக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அழைச்சுப்பேன். ஆனாலும் எனக்கு கஷ்டமா இருக்கு. நீங்கதான் அவளைப்பார்த்துக்கணும் ராஜூ கவிதாவிடம் கெஞ்சுவது போல் தழுதழுத்த குரலில் சொன்னான்.

அவனை வழியனுப்ப விமானநிலையத்திற்கு கவிதாவும் போயிருந்தாள். அவன் மீண்டும் மீண்டும் சுதாவை கவனமாக பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டான். அன்றிலிருந்து சுதாவுக்கு கவிதாதான் எல்லாம். ஒரு நாள் இரவு கவிதா யதேச்சையாய் கண்விழித்தபோது தன் கட்டிலில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள்  சுதா. அருகில் சென்று அவள் தலையைக் கோதி விட்டாள். வெடித்து அழுதாள் சுதா. என் அண்ணன் குழந்தை மகி...என் மேல் எத்தனை பாசமா இருப்பான் தெரியுமா? அவளைக்கூட விட்டுட்டு வந்துட்டேன் கவிதா! அவன் பிறந்த நாள் இன்னிக்கு. எனக்கு மகி ஞாபகமாவே இருக்கு என்று அக்குழந்தையின் படத்தை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள். இப்படி அடிக்கடி மகியின் படத்தை எடுத்துப்பார்த்து கண்ணீர் விடுவது சுதாவின் வழக்கமாகி இருந்தது.

குடும்பத்தைப் பிரிந்தது அவளை ரொம்பவே வாட்டியதாக கவிதாவுக்குப் பட்டது. எவ்வளவு பாசமிருக்கிறதோ அதேபோல குடும்பத்தினர் மிது பயமும் அவளுக்கிருப்பதாக கவிதா நம்பினாள். அதற்கேற்றவாறு ஒரு நாள் சுதாவும் கவிதாவும் தி.நகருக்கு சுடிதார் வாங்கச் சென்றபோது நன்றாகப் பேசிக்கொண்டே வந்த சுதா திடீரென முகம் இருண்டாள். கவிதாவின் கைகளை அவசரமாகப் பற்றினாள். அருகிலிருந்த கடை ஒன்றினுள் நுழைந்தாள். அது பெர்ஃப்யூம்கள் விற்கும் கடை. கவிதா விழித்தாள். அண்ணன்...அண்ணன்.. ரகசியமாய் கிசுகிசுத்தாள் சுதா. எங்கடி.? .எங்கே? பரபரத்தாள் கவிதா. வெளிய ரோட்டில் பார்த்தேன். அதான் இங்க இந்தக் கடைக்குள்ள நுழைஞ்சிட்டேன்.. - சுதாவின் குரல் நடுங்கியது. பயத்தில் நா குழறியது. வியர்வை ஆறாய் ஓடியது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. என்னை மறைச்ச மாதிரி நின்னுக்கோ ப்ளீஸ்..! பயமா இருக்கு..! - இந்த வார்த்தைகளைத்தான் அவள் சொல்லியிருப்பாள் என்று கவிதா யூகித்தாள். அந்தளவிற்கு நாக்கு குழறியது அவளுக்கு. அவளை மறைத்தமாதிரி நின்றுகொண்டு பெர்ஃப்யூம் பயன்படுத்தும் பழக்கமேயில்லாத கவிதா அடைக்கலம் தந்த கடைக்கு நன்றிக்கடனாக ஒரு பெர்ஃப்யூம் வாங்கினாள். சுதாவின் கைகள் கவிதாவின் தோள்களை இறுகபற்றியிருந்தது. மிகவும் அசாதாரணமாக அச்சம் அந்த ஸ்பரிசத்தில் இருந்ததை உணர்ந்தாள் கவிதா.

அவள் கண்கள் அலைபாய்ந்துகொண்டிருந்தன. கால்கள் தள்ளாடின. அதோ போறார்...! பதறினாள் சுதா. அவள் காட்டிய திசையில் நீலநிற சட்டை அணிந்த இளைஞனொருவன் போய்க்கொண்டிருந்தான். ஒண்ணுமில்ல....பதட்டப்படாதே.! அவர் உன்னைப் பார்க்கலை.. என்று அவளை ஆசுவாசப்படுத்தினாள் கவிதா. கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு புள்ளியாய் நீலநிற சட்டை மறையும் வரை காத்திருந்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வந்த வேகத்தில் ஒரு ஆட்டோவைப் பிடித்து ஆட்டோவுக்குள் பாய்ந்தாள் சுதா. ஆட்டோ ஹாஸ்டலுக்குப் பறந்தது. அன்று முழுவதும் படபடப்பு அடங்கவில்லை சுதாவிற்கு. அப்போதிலிருந்து வெளியே வருவதை அறவே தவிர்த்தாள். அருகில் உள்ள கடைக்கு வரவே கூட பயந்தாள். அவள் இப்படி பயப்படுவது தேவையற்றது என்றே தோன்றியது. ஏதோ ஒரு நாள் அவளுடைய அண்ணனை சாலையில் பார்க்க நேர்ந்ததால் தினமுமா அப்படியாகுமென்று சில சமயம் சுதா மீது கவிதாவுக்கு கோபம் கூட வந்தது. எத்தனை சொன்னாலும் கேட்காமல் சுதா ஹாஸ்டலுக்குள் ஹவுஸ் அரெஸ்ட் ஆனவள் போல் கிடந்தாள். வெளியே வர மறுத்தாள். பிரான்ஸ் போவத்ற்குள் தன் வீட்டார் கண்ணில் பட்டுவிட்டால் தன் கதி என்னாவது என்று அரற்றிக்கொண்டே இருந்தாள். ஆனால் மாலையானதும் பக்கத்திலுள்ள பிரவுஸிங் செண்டருக்கு போவதற்கு மட்டும் தவறுவதேயில்லை அவள்.

ஒரு நாள் கோடம்பாக்கம் பகுதி முழுவதும் மின்சாரமில்லை. அன்றைக்கு அவள் தவித்த தவிப்பைக் கண்டு கவிதாவுக்கு ஒருபுறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் பாவமாய் இருந்தது.

ஒருநாள் தானே சுதா? ராஜூவோடு ஒருநாள் பேசாம இருக்க முடியாதா?

உனக்குப் புரியாது கவிதா. ஒரு நாள் பேசலைன்னாலும் ரொம்ப கஷ்டம். ஹூம். என்னை காப்பாத்தி கொண்டு வந்து வச்சிருக்கான் அவன் இல்லேன்னா நான் என்னிக்கோ தற்கொலை பண்ணிக்கொண்டு செத்துருப்பேன் தெரியுமா? - சொல்லும்போதே கண்களின் பயமும் மிரட்சியும் தெரிந்தன அவளுக்குள்.

ஏன் இவள் இப்படி சொல்கிறாள். அவள் வீட்டில் அப்படியென்ன கொடுமை அவளுக்கு? அன்றைக்கு அண்ணனைக்கண்டு அப்படி பயந்து நடுங்கினாள். இன்றைக்கு இப்படிச் சொல்கிறாள். பெற்ற பெண்ணை அப்படி யாராவது கொடுமைப்படுத்துவார்களா? கவிதா அவள் முகத்தையே பார்த்தாள். பால்வடியும் இந்த முகத்தைப் பார்த்தால் எப்படி கொடுமைப்படுத்தத் தோன்றும்? என்ன மனிதர்கள்?

என்னதான் ஆச்சு உன் வீட்டுல? சொல்லேன்!

இப்போ வேணாம். அப்புறமா சொல்றேன்

அந்த அப்புறமா அவள் பிரான்ஸ் புறப்படும்வரை வரவேயில்லை. ஆனால் தினமும் ஏதோ சொல்ல எத்தனிப்பதுமாய் சொல்ல இயலாமல் உள்ளுக்குள் விழுங்குவதுமாய் அவள் தவிப்பதாய்ப் பட்டது கவிதாவுக்கு. ஆனாலும் புறப்படும் நாள் வரை அவள் எதுவும் சொல்லவேயில்லை. விமானநிலையத்தில் நிற்கையில் அடக்கவியலாமல் கண்ணீர் விட்டனர் இருவரும். சுதாவை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தபின்னர் கவிதாவிற்கு அறை வெறுமையாய்த் தெரிந்தது. சாப்பிடப்பிடிக்கவில்லை.

மறுநாள் அருகிலிருந்த எஸ்.டி.டி.பூத்திற்கு சில்லறை மாற்றச் சென்றபோது அங்கிருந்த பையன் கேட்டான் உங்களத்தேடி ரெண்டுபேர் ஹாஸ்டலுக்கு வந்திருப்பாங்களே? அவங்களைப் பார்க்காம நீங்க இங்கே வந்துட்டீங்களேக்கா?

யாரு? என்னை யாரு பாக்க வந்தாங்க?

சுதாக்கா போட்டோவைக் காமிச்சு கடையாண்ட வந்து ஒரு அம்மாவும் இன்னொருத்தரும் கேட்டங்கக்கா. அவங்க எங்கேயோ வெளிநாடு போயிட்டாங்க. கூட ஒரு அக்கா எப்பவுமிருக்கும். அத்தப் போயிப் பாருன்னு உங்க பேரு சொல்லி அனுப்பிச்சேன். இந்த ஹாஸ்டல்தான்னு சொல்லியனுப்பினேன். வரலயா?

கவிதாவிற்கு ஒரு நொடி உலகமே ஸ்தம்பித்தது. ஹாஸ்டல் நோக்கி ஏறத்தாழ  ஓடினாள். அவள் உள்ளே நுழைந்தபோது விசிட்டர்ஸ் ரூமில் ஓர் அம்மாளும், இன்னுமொரு பெரியவரும் நின்றிருந்தனர். சுதாவின் அதே சாயல். பார்த்தவுடன் சொல்லிவிடலாம் அது சுதாவின் தாயென்று.

இதோ.. இவதான் கவிதா” -  மஞ்சு அடையாளம் காண்பித்துவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.

அந்த அம்மாள் மெல்ல இவளை நெருங்கினாள். அம்மாடி! நீதான் சுதாவோட ஃபிரண்டாம்மா?

ஆமாம்..நீங்க..?

நான் சுதாவோட அம்மா. அவ இப்போ எங்கேம்மா? சொல்லு!அதட்டலாய் கேட்டாள் அந்த அம்மாள்.

கவிதாவுக்கு எரிச்சல் வந்த்து. அமைதியாய் “தெரியாதுஎன்றாள்.

“இங்கே யார்கிட்ட கேட்டாலும் எனக்குத்தெரியாதுங்குறாங்க.. பேசி வச்சிருக்கீங்களா சொல்லக்கூடாதுன்னு  அந்தம்மாள் கத்தினாள்.

“இங்க பாருங்கம்மா! இது ஹாஸ்டல். இங்க கத்தி கூப்பாடு போடாதீங்க

நான் திருநெல்வேலிலேர்ந்து கெளம்பி வந்துருக்கேன்மா. அவ எங்கே? எங்கேயோ வெளிநாடு போயிட்டதா அந்த எஸ்.டி.டி.பூத் பையன் சொன்னான். கட்டையில போறவ.. நாறச்சிறுக்கி. இப்படி பண்ணிட்டுப் போயிட்டாளே..எங்க போனா அவ? சொல்லும்மா சொல்லு! எங்க குடும்ப மானத்தையே வாங்கிட்டு அவ எங்க போனா? அவ பண்ணின காரியத்துக்கு அவ கையில் கிடைச்சா கண்டந்துண்டமா வெட்டிப்போட்ருப்பான் அவ அண்ணங்காரன்" - சொல்லும்போதே அழுதுகொண்டே சொன்னாலும் குரலில் வன்மம் தெரித்தது.

அந்த ஓடுகாலி சிறுக்கி ஓடுனாளே..பெத்த புள்ளையை விட்டுட்டுல்ல ஓடிட்டா. அதெப்புடி ஒரு தாய்க்கு இப்புடி செய்ய மனசு வரும்?

அதிர்ந்து நின்றாள் கவிதா. அவளுக்கு அந்த வாக்கியத்தின் அர்த்த்த்தை தான் சரியாகப் புரிந்து கொண்டோமா அல்லது அந்த அம்மாள் வேறு ஏதாவது சொல்லி தன் காதில் வேறு மாதிரி விழுந்துவிட்டதோ என்று குழப்பமாய் இருந்தது. என்ன சொல்கிறாள் இந்த அம்மாள்?

“அம்மா! என்ன சொல்றீங்கம்மா? யாரு குழந்தை? குழந்தை இருக்கா? சுதாவுக்கா?

அந்தம்மாள் ஒரு புகைப்படத்தை எடுத்து வீசினாள். கழுத்தில் தாலி. கையில் குழந்தை. சுதாவேதான். குழந்தை...இது..இது..அவள் அண்ணன் குழந்தை சுகி என்றல்லவா சொன்னாள்? இந்தக் குழந்தையின் படத்தைத்தானே அவள் எடுத்து வைத்துக்கொண்டு அழுதுகொண்டிருப்பாள். அருகில் யார்? இந்த முகம் கவிதாவுக்குத் தெரிந்த முகமாகத்தோன்றியது...யாரிது?

“அம்மா! இது யாரு?” என்றாள் சன்னமான குரலில்.

“அவ புருஷன்” என்றாள் அம்மாள். சட்டென்று நினைவுக்கு வந்தது.  இந்த முகத்தைத்தான் தி.நகரில் பார்த்து அன்றைக்கு மிரண்டாள் சுதா. அவளால் நம்ப முடியவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயமாக கணவன் - மனைவி தான் என்பதை படத்தில் தெரிந்த அவர்களின் நெருக்கம் சொல்லியது. அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். சில நொடி மௌனத்திற்குப் பிறகு அந்தம்மாள் கேட்டாள். “அவ எங்கேம்மா போயிருக்கா? அட்ரஸ் தர்றியா? போன் நம்பர்” ஏதாச்சும் இருக்கா?

“அம்மா! அவ ஏன் வீட்டை விட்டு வந்தா?

அந்தம்மாள் அழ ஆரம்பித்தாள். “கிளி மாதிரி வளர்த்தேன் எம்பொண்ணை. ஒரு குரங்கு கையில புடிச்சுக் குடுத்தேன். அவ அப்பவே இந்த மாப்பிள்ளை வேணாம்னா. ஆனால் நல்ல வசதியான எடம்னு சொல்லி கட்டி வச்சோம். அந்த படுபாவி அவளை படாதபாடு படுத்தினான். சிகிரெட்டால மார்ல சுட்டுருக்கான். அவ மேல எப்பவும் சந்தேகம் தான். யார்கிட்ட பேசினாலும் சந்தேகந்தான். தினமும் குடிதான். கண்ணுமண்ணு தெரியாம அடிப்பான். எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டா குழந்தைக்காக. ஒரு தடவ அவளை அடிச்சதுல கை ஒடஞ்சு பிராக்சர் ஆயிடுச்சும்மா.. நான் எதச் சொல்வேன்...எத விடுவேன்..என்புள்ளய சின்னாபின்னாப்படுத்திட்டான்மா. அடிச்சு அவள வீட்டை விட்டுத்தள்ளி கதவ சாத்திட்டான். அப்போ அந்த வழியா போன ஒருத்தன் தான் அவளை கூட்டிட்டுப் போயி ஆஸ்பத்திரில சேத்தான்.” அப்படித்தான் அந்தப் பையனோட பழக்கம் அவளுக்கு. ஒரு நா திடீர்னு மாப்பிள்ளை குடிச்சிட்டு வந்து அவளை அடிச்சப்போ அடிவயித்துல பட்டு மயங்கிட்டா. அன்னைக்கு அவளுக்கு உயிர்ப்பயம் வந்துடுச்சு. செத்துப்போயிட்டா என்ன செய்றதுன்னு நெனச்சு கெளம்பிட்டா. குழந்தை அவ மாமியார் ரூம்ல இருந்துச்சு போலருக்கு  அன்னைக்கு. போய் எடுத்துட்டு போறதுக்கு அவளுக்கு பயம் மாட்டிப்போமோன்னு. அப்படியே கிளம்பிட்டா.. கிளம்பினவ இங்கே எங்க வீட்டுக்கு வரவேண்டியதுதானே?.. நேரா அவனைப் பார்க்கப் போயிட்டா

கண்ணீர் வழிய பேசிக்கொண்டிருந்த அந்தம்மாள் திடீரென ஆவேசமானாள். ”ஆனா இந்த முண்டை நாயி.. அதுக்காக அவன் பின்னாடி போயிரலாமா?..அந்த நாறநாயை  இந்த மூதேவிக்குப் பிடிச்சிருச்சி.  கல்யாணம் ஆயிடுச்சே;. புள்ளை வேற இருக்கேன்னு யோசிக்க வேணாமா? அந்தப் பயதான் ஆம்பள பல்ல இளிச்சுக்கிட்டு வருவான். இவளுக்கு எங்க போச்சு புத்தி.? களவாணி சிறுக்கி!..” வாயில் வரக்கூடாத கெட்டவார்த்தை சொல்லி திட்டினாள் அந்தம்மாள்.

அதுவரை அமைதியாய் இருந்த கூட வந்திருந்த அந்த மனிதர் கோபம் கொப்பளிக்கப் பேசினார். “சாதிசனம் முன்னாடி தல குனிய வச்சுட்டாம்மா! அவளை ஒனக்கு இப்பத்தானே தெரியும். இந்தக் கதையெல்லாம் சொன்னாளா உங்கிட்ட?

இல்லை..! கல்யாணம் ஆனதெல்லாம் எனக்குத் தெரியாது. சொல்லலை. ரொம்ப ஷாக்கா இருக்கு”

“எப்புடி சொல்வா? இதெல்லாம் தெரிஞ்சா மூஞ்சி குடுத்து பேசுவீங்களா யாராச்சும். அதான் களவாணி முண்டை.. சொல்லியிருக்கமாட்டா.”

“அவள எந்த ஊர்ல கட்டிக்குடுத்தீங்க? குழந்தை எங்க இருக்கு?

“இந்த மெட்ராஸ்ல தான். ஆவடியில தான் வீடு. ஓடுகாலி பெத்ததா இருந்தாலும் நம்ம குடும்ப வாரிசாச்சேன்னு...இவ போனபிறகு நான் போய்க் கேட்டேன். குடுக்கலை. இவளும் போன் பண்ணி புள்ளயைக் கேட்டிருக்கா...குடுக்க மாட்டேன்னுட்டாங்க. அந்தாள் மறுகல்யாணம் ஒடனே பண்ணிக்கிட்டான். இவள தேடாத எடமில்ல. அவ அண்ணங்காரன் ஆத்திரத்துல குதிக்கிறான். எங்க இருக்கான்னே தெரியல. எங்க சொந்தக்காரரு ஒருத்தர் இந்த ரோட்டுல அவள ஆட்டோவுலப் பாத்ததா நேத்து சொல்லி அட்ரஸ் சொன்னாரு. சனியன அடிச்சு இழுத்துக்கிட்டுப் போயிருவோம்னு நெனச்சு வந்தோம். ஆனா நாட்டை விட்டே அவன்கூட ஓடிட்டா!.... ........ ..........” மறுபடி கெட்ட வார்த்தை.

“அம்மா! நீங்க பாத்து கல்யாணம் பண்ணிவச்ச ஆளுதான் அத்தனை கொடுமக்காரனாயிருக்கானே..அதான் இப்ப அவளா பாத்துக்கிட்டா...நீங்க அதுக்கு ஏன் அவளத் திட்டுறீங்க?

“அவனோட வாழப்புடிக்கலைன்னு ரத்து பண்ணிட்டு வந்தா எங்க சாதியில நாங்க கல்யாணம் பண்ணி வச்சிருப்போம்ல.”

கவிதா அவர்கள் இருவரையும் எதுவும் பேசாமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள்.

எங்கத்தான் போயிருக்கா அவ! சொல்லும்மா!”

“தெரியாது! எனக்குத் தெரியாது அழுத்தமாகச் சொன்னாள்.

அந்த அம்மாள் பட்டென்று அவள் காலில் விழுந்தாள். பதறி பின்வாங்கினாள் கவிதா.  

“என்னதிது! இவ்வளவு பெரியவங்க...என் காலில் விழுந்துக்கிட்டு.. எழுந்திருங்கம்மா!

“அட்ரஸ் போன் நம்பர் ஏதாச்சும் குடும்மா...இந்த காரியம் பண்ணிட்டுப் போயிருக்காளே...அவள....” கவிதாவின் காலைப் பிடித்துக் கண்ணீர் விட்டுக் கெஞ்சினாள் அந்தம்மாள். கண்களிலிருந்து மாலை மாலையாய் நீர் வழிந்தோட கெஞ்சிக்கொண்டே இருந்தாள் அவள். அந்த அம்மாள் பேசியது எதுவுமே அவள் காதில் விழவில்லை. அழுத முகம் மட்டுமே தெரிந்தது.

ஒருகட்டத்தில் தாங்க முடியாமல் “அம்மா! ப்ளீஸ்என்றாள் சத்தமாக. “இவ்வளவு பெரியவங்க நீஙக. உங்கள யாருன்னே தெரியாத என் கால்ல விழ வச்சுட்டாளே அவ. நீங்க உங்க நம்பர் குடுங்க.. ஊருக்குப் போங்க இப்போ. அவ எனக்கு நிச்சயமா போன் பண்ணுவா. பண்ணினா அவளோட நம்பர் வாங்கி உங்களுக்குத்தர்றேன். சரியா?

அந்த அம்மாளின் முகம் பிரகாசமாகியது. கவிதா தன் கைப்பையைத் திறந்து ஒரு சின்ன டைரியைப் எடுத்துக் கொடுக்க அந்த அம்மாள் தன் கைபேசி எண்ணை எழுதிக்கொடுத்தாள்.

உன் நம்பர் சொல்லும்மா! அந்த மனிதர் கேட்டார். அவள் சொல்ல தன்னுடைய கைபேசியை எடுத்து அதிலிருந்து இவள் எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் செய்தார்.

“என்னை நம்புங்கம்மா! அவ கண்டிப்பா கூப்பிடுவா. கூப்பிட்டா நான் பேசி அவள் அட்ரஸும் போன் நம்பரும் வாங்கித்தரேன்

“அவ எந்த ஊருக்குப் போயிருக்கா?

“சிங்கப்பூர்”

“சிங்கப்பூரா! சொந்தக்காரங்கள்ளாம் இருக்காங்க. பாத்துருவோம். கண்டுபிடிச்சுருவோம். போன் நம்பர் இருந்தாக்கூட போதும். ஒன்ன நம்பிப் போறேம்மா அவ போன் பண்ணினா நாங்க வந்துட்டுப்போனதை சொல்லாதே. உஷாராயிடுவா..”

அந்தம்மாள் கையெடுத்துக்கும்பிட்டாள்.

“சரிம்மா! நீங்க போயிட்டு வாங்க......”!

அந்தம்மாளும், அவரும் புறப்படடனர். அறைக்குள்ளிருந்து நிர்மலா வந்து  கேட்டாள்.  “யார் கவிதா அவங்க?” ஏதோ சத்தமா பேசினமாதிரி இருந்துது. காதுல சரியா விழலை. என்ன விஷயம்?
“எனக்கு தூரத்து சொந்தம். சும்மா என்னப் பார்க்க வந்தாங்க”. சொந்தக்காரங்க சண்டைதான். வேறேன்ன. இவங்களுக்கு வேற வேலையில்ல.நகர்ந்தவள் நின்றாள். “அப்புறம் நிம்மி! என் ஆபீஸ்மேட்ஸ் 3 பேரு வீடு எடுத்து தங்கியிருக்காங்க. ஹாஸ்டலை காலி பண்ணிட்டு அங்க வரச்சொல்லிக்கிட்டு இருந்தாங்க ரொம்ப நாளா. கவிதாவும் போயிட்டா இல்லையா? அதனால நான் நாளைக்கு காலைல ஹாஸ்டலை வெகேட் பண்றேன். சொல்லிக்கொண்டே வெளியேறிய கவிதா தன் செல்போனிலிருந்த சிம்கார்டை கழற்றி குப்பைத்தொட்டியில் எறிந்தாள். செல்போனை கைப்பைக்குள் வைக்கையில் கண்ணில் தட்டுப்பட்டது அந்த புகைப்படம்

கவிதாவும் சுதாவும் ஒரு மாலைப் பொழுதில் ஹாஸ்டல் மொட்டைமாடியில் எடுத்துக்கொண்டது. கலைந்த தலையுடனும்,  வியர்வை வழிந்த முகத்துடனும் இருக்கும் அந்தப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் “இந்தப் படத்தில் நான் நல்லாவே இல்ல. வேற போட்டோ ஒண்ணு எடுப்போம் கவிதா” என்று சொல்லிக்கொண்டேயிருப்பாள் சுதா. ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது.

அப்படத்தை இப்போது உற்றுப்பார்த்தாள் கவிதா. சுதா இப்பொழுது எப்போதையும் விட அழகாக இருப்பது போல் தோன்றியது

ன்று இரவு.. கவிதாவுக்கு லேண்ட்லைனில் அழைப்பு வந்தது. மறுமுனையில் சுதா.

“சுதா! நல்லபடியா போய்ச் சேர்ந்தியா? ஒண்ணும் பிரச்சனையில்லையே”?

“இல்ல கவி! இந்த ஊர் பிடிச்சிருக்கு. ராஜூ மட்டும்தான் இங்க எனக்குத் தெரியும். ஆனாலும் பிடிச்சிருக்கு. இவன் கூட இருக்குறதே எனக்கு சந்தோஷமா இருக்கு. நீ எப்பிடி இருக்கே”?

“இருக்கேன். உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..”

“என்ன?

“உங்கம்மாவும் அப்பாவும் ஹாஸ்டலுக்கு வந்தாங்க
இரண்டி விநாடிகள் மௌனத்திற்குப் பிறகு துண்டிக்கப்பட்டது இணைப்பு.

அதன்பின் சுதாவிடமிருந்து ஒருபோதும் கவிதாவுக்கு தொலைபேசி அழைப்பு வரவேயில்லை.

7 comments:

 1. Anonymous6:52 pm

  அருமை, யதார்த்தத்தின் உச்சம்!!

  ReplyDelete
 2. Anonymous6:53 pm

  அருமை, யதார்த்தத்தின் உச்சம்!! - அரவிந்த்

  ReplyDelete
 3. சுதா மீண்டும் ஒரு நாள் கவிதாவை அழைப்பாள். அன்று கவிதாவின் மகிழ்ச்சியை சுதா புரிந்து கொள்வாள். அன்புடன்... கவின் மலர்! அப்படின்னு உங்க கையெழுத்தைப் போட்டு முடிச்சிருந்தா ஒரு டைரக்‌ஷன் டச் கிடைச்சிருக்கும். ச்சும்மா கிண்டலுக்கு! (:P)
  நல்லாயிருந்துச்சுக்கா... அருமை!

  ReplyDelete
 4. புரிய வைக்க முடியாத சுதாவின் எச்சரிக்கை உணர்வு தான் கவிதாவின் போனைக் கட் செய்ய வைத்தது...! உண்மையில் அந்த இடத்தில் ஒரு படபடப்பு தொற்றிக் கொண்டது. ஏனு தெரியல... இப்போ வரை!

  ReplyDelete
 5. மனதை மிக ஆழமாக பாதிக்கிறது. ஒரு தாய் கூடவா தன் மக எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு நினைக்க மாட்டங்க?

  ReplyDelete
 6. சொ.பிரபாகரன்12:51 pm

  மிகவும் அருமையான சிறுகதை. யதார்த்த முடிவு இப்படிதான் இருக்கும். இச்சிறுகதை உண்மையாக இருக்கக்கூடும் என நம்புகிறேன். அதனால்தான் truth is stranger than fiction என்கிறார்கள்.

  சொ.பிரபாகரன்

  ReplyDelete
 7. Anonymous8:25 pm

  முடிக்கும்போது கவிதாவின் நிலை அழுகை வந்துவிட்டது. அந்த வெற்றிடம் தொந்தரவு செய்கிறது. சுதாவின் அம்மாவைபோல் அம்மாக்களையும் ஊரில் பார்த்திருக்கிறேன். கதை மிக யதார்த்தம். ஒன்றும் கூடுதல், குறைவு இல்லை. - வித்யா.

  ReplyDelete