Friday, April 16, 2010

எவரது முதுகையும் சொரிந்து கொடுக்க நகம் வளர்க்கவில்லை நான்

  • ஆதவன் தீட்சண்யா
ஏப்ரல் 15 ஆம் தேதி நடந்த “எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற தலைப்பில் இக்‌ஷா மையத்தில் நடந்த கூட்டத்தில் வாசிக்கப்பட்ட ஆதவன் தீட்சண்யாவின் உரை:

புறக்கணிப்பு, அவமானம், அச்சுறுத்தல், வன்முறை, வறுமை ஆகியவற்றை ஒருசேர எதிர்கொள்ள நேர்ந்திடாத சாதிகளில் பிறந்து ஓரளவுக்கு பாதுகாப்பான வாழ்க்கைப் பின்புலத்தையும் கொண்டவர்களாக சமகால ஆண் கவிஞர்களில் பெரும்பாலானவர்கள் இருக்கின்றனர். குடும்பம், பணியிடம், பொதுவிடங்களில் தனிமனிதனாகிய தான் யார் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏற்படுகிற சிக்கல்களிலிருந்தே இவர்கள் கவிதை எழுதுவதற்கான மனவெழுச்சி அல்லது உளவியல் நெருக்கடியை எய்துகிறார்கள். நிலவும் சமூகச்சூழலோடு பொருந்திப்போக முடியாத அல்லது சமரசம் செய்துகொள்ள முடியாத தனித்துவப் பிறவியாக தம்மை கற்பனை செய்துகொள்வதன் மூலம் ஏற்படுகிற ஒருவித மயக்கநிலை இவர்களை தரையிறங்கவிடாமல் அந்தரத்தில் சுழற்றியடிக்கிறது.எனவே சமகாலத்திய சமூக அவலங்கள், அவற்றிலிருந்து விடுபடுவதற்கான எத்தனங்கள், அதன் பொருட்டு ஏவப்படும் அடக்குமுறைகள் எதுவும் இவர்களது பார்வைக்குப் படுவதில்லை. அல்லது அதைச் சொல்வது கவிஞனின் வேலையல்ல என்று நிலைபாட்டை பேசத் தொடங்குகிறார்கள். பத்திருபதாண்டுகள் கழித்து 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தை மதிப்பீடு செய்ய இவர்களது கவிதைகளை முதன்மைத் தரவுகளாகக் கொண்டு ஒருவர் ஆராயத் தொடங்குவாரெனில் கட்டற்ற காமம், மட்டில்லாத குடி, கடவுள் நிந்தனை, சாத்தானைக் கொண்டாடுதல், புனிதங்களை பகடி செய்தல் ஆகிய புள்ளிகளை மையங் கொண்டே தமிழ்ச் சமூகம் இயங்கியது போலும் என்ற முடிவுக்கே வர முடியும். கட்டற்ற காமம், மட்டற்ற குடி வழியாக வருவித்துக்கொள்ளும் மிகையான கொண்டாட்டம் இறுதியில் ஒரு பெண்ணை தன்னிஷ்டம்போல் கையாள்வதற்கான உரிமையைக் கோருவதிலேயே நிறைவு கொள்கிறது. பாலின அரசியல் சார்ந்து சமகாலத்தில் மேலெழுந்து வந்திருக்கும் விவாதங்களை உள்வாங்காமல் வெற்று ஆண்களாய் தேங்கி நின்றுவிட்ட இவர்களின் கவிதைகள் குறித்து நேர்மையானதொரு விமர்சனத்தை முன்வைப்பதற்கான தேவை அதிகரித்து வருகின்றது.






மறுதலையாக தம் மீதான கற்பிதங்கள், மதிப்பீடுகள், தாய்மை உள்ளிட்ட பொறுப்புகள் வழியாக நிகழ்த்தப்பெறும் பாலியல் ஒடுக்குமுறை மற்றும் உழைப்புச்சுரண்டலை அம்பலப்படுத்தியும் தமது சுயத்தை நிறுவியும் பெண் எழுத்தாளர்களின் கவிதைகள் வெளிப்பட்டு வருகின்றன. ஏற்கனவே நிறுவப்பட்டு இயல்பானதுபோல செயற்பட்டு வருகிற ஆண்மையவாத சிந்தனையிலிருந்து தன்னையும் அதன்வழியே சமூகத்தையும் விடுவித்துக் கொள்வதென்ற பாலின சமத்துவத்திற்கான நெடியப் போராட்டத்தின் விளைபொருட்கள் என்றே இந்தக் கவிதைகளை இனம் காண வேண்டியுள்ளது. கல்வியறிவு மறுக்கப்பட்டிருந்த நிலையை முறித்துக்கொண்டு ஒரு பெண் எழுதத் தொடங்குவதே ஆண்மையவாதத்திற்கு எதிரானதுதான் என்ற முடிவுக்கு வருவோமேயானால், பெண்கள் எழுதுவதெல்லாமே பெண்ணியக்கவிதைகளா என்ற கேள்வியே இடக்கானது என்பதை புரிந்துகொள்ள முடியும். பெண்ணாய் பிறந்தது குறித்து புகாரிடும் தொடக்கநிலை உணர்விலிருந்து தான் ஒரு பெண் என்று சுயமரியாதையோடு முழங்குவது வரையான வெவ்வேறு மட்டங்களில் தொழிற்படும் இவர்களது எழுத்துகள்தான், எவ்வளவு பெரிய ஆளுமையாக இருப்பினும் சமூகத்திற்கு அவரது பங்களிப்பு எத்தகையதாய் இருப்பினும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரை வெற்று ஆணாகவே மிஞ்சிவிடுகிற குரூரத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, எது அல்லது எப்படியானது பெண்ணியம் என்று ரெடிமேடாய் முன்வைக்கும் சட்டகங்களையும்கூட ஒவ்வொரு பெண்ணும் திருத்தியமைக்கிறார், தேவைப்பட்டால் உடைத்தும் எறிகிறார். இதன்பொருட்டு அவர்கள் பயன்படுத்தும் மொழி, உருவகங்கள், வெளிப்பாட்டு வடிவங்கள் உள்ளிட்ட எதுவுமே ஏற்கனவே நிலவுகின்றவையுடன் பொருந்திப்போக மறுக்கின்ற புள்ளியை மறித்து நின்றுகொண்டுதான் ஆபாசம் அருவருப்பு என்கிற கூப்பாடு கிளம்புகிறது.

எதையாவது எழுதி இடையிடையே மலம், மூத்திரம் போன்ற சில வார்த்தைகளைத் தெளித்துவிட்டால் அது தலித் கவிதை, யோனி, ஆண்குறி என்று தெளித்துவிட்டால் அது பெண்ணியக் கவிதை என்ற அபத்தமான புரிதல் வாசகர்களிடம் மட்டுமல்லாது எழுதுகிறவர்களிடமும் இருக்கிறது. சொல்ல வரும் விசயத்தை அதன் வீரியத்தோடு வெளிப்படுத்திட தேவைப்படுமாயின், மிகுந்த அரசியல் புரிதலோடு பயன்படுத்தப்படும் சொற்களை யாந்திரீகமாக ஒரு மசாலாவைப்போல தூவிவிடுகிற ஜிகினாத்தனங்கள் விரைவில் உதிர்ந்துவிடும் என்று தெரிந்தேயிருந்தாலும்கூட அப்போதைய பரபரப்புக்காக அவிழ்த்துக் கொட்டுகிற மலினமான உத்திகள் இங்கு இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அப்படியான எழுத்துகள் மீது எனது கருத்தைச் சொல்லத்தான் எனக்கு உரிமையுண்டேயொழிய தீர்ப்பெழுதும் அதிகாரத்தை எதன்பேராலும் நான் கைக்கொள்ள முடியாது.



எது அசலானது, போலச்செய்தது எது என்பதை காலம்தான் தீர்மானிக்கும் என்று கடந்தகாலத்தில் சாசுவதம், சாகாவரம் என்று பேசி வந்தவர்கள் ஒடுக்கப்பட்ட சமூக அடுக்கினராகிய தலித்துகள், பெண்களது எழுத்துகளுக்கு அந்த அளவுகோலை நீட்டிக்க விரும்பாமல் உடனடியாகவே தீர்ப்பெழுத விரும்புகின்றனர். அவ்வகை எழுத்துகள் தமது இருப்பையும் ஒளிவட்டத்தையும் கேள்விக்குள்ளாக்கி சமகாலத்தின் அதிகார அடுக்குகளை கலைத்துப் போட்டு விடும் என்று பதற்றமடைகிற இவர்கள், தந்திரமாய் எழுப்பும் கேள்விதான் இப்படி பச்சைபச்சையா எழுதணுமா? என்பது. ஆபாசம் என்று இவர்கள் கிளப்பிவிடுகிற செய்தி கலை இலக்கியத்திற்கு வெளியே வேறுதுறை சார்ந்து இயங்குகிறவர்களின் கவனத்தையும் ஈர்க்கிறபோது, அதன் பிறகான விவாதம் இலக்கியம் பற்றியதாக அல்லாமல் ஒழுக்கம் அறம் பற்றியதாக திசைமாற்றி எடுத்துச் செல்லப்படுகிறது. நாடகப்பிரதியை தம்மிடம் காட்டி முன்னனுமதி பெறவேண்டுமென்ற காலனீய காலத்து சட்டங்களை இன்னும் கையில் வைத்துக்கொண்டிருக்கிற காவல்துறையின் கண்காணிப்புக்கு கலை இலக்கிய ஆக்கங்களை முழுமையாக கீழ்ப்படுத்தும் ஆபத்திற்கே இப்போக்கு இட்டுச்செல்லும் என்று அஞ்சவேண்டியுள்ளது.

இப்படியான பின்புலத்துடனேயே லீனா மணிமேகலையின் கவிதைகளையும் அவற்றை பற்றிய விமர்சனங்களையும் விமர்சனம் என்ற பெயரிலான அருவருப்பான வசவுகளையும் புரிந்துகொள்கிறேன். அவரது கவிதைத் தொகுப்பை தடைசெய்ய வேண்டும் என்று கோரும் இந்து மக்கள் கட்சியின் நடவடிக்கையை எதிர்த்த இந்த ஒன்றுகூடலுடன் எனது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதற்கும் இந்தப் புரிதலே காரணமாய் இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிகழ்வொன்றில் பெரியாரின் பெயர் உச்சரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவாவினர் ரகளை செய்தனர். போரூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறுக்கே பாய்ந்து ரகளை செய்த அதேகும்பல் சென்னை கலைக்குழுவினரின் நாடகத்தை தடுத்து நிறுத்தியது. அவற்றின் தொடர்ச்சி என்று சொல்லமுடியாவிட்டாலும் அச்சுறுத்தல் என்ற வகையில் லீனாவின் கவிதைகள் மீதான புகாரை கண்டிக்க வேண்டியுள்ளது. லீனாவின் கவிதைகள் மீதான விமர்சன உரிமையை தக்கவைத்துக் கொள்வதும் அவரது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் கண்டிப்பதும் ஒன்றுக்கொன்றுக்கு முரணானதல்ல.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதானது லீனாவின் கவிதைகள் மீதான மதிப்பீட்டின் அடிப்படையிலானது அல்ல. அல்லது அவரது செயல்பாடுகள் கருத்துகள் எல்லாவற்றுடனும் இணக்கம் தெரிவிப்பதற்குமானதும் அல்ல. அவரல்லாமல் பிறிதொருவராய் இருப்பினும் அவர் மற்றும் அவரை விமர்சிக்கிற யாவருடைய கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்குமான வெளியை தக்கவைத்துக் கொள்வதென்ற அக்கறையிலிருந்தே இந்த ஒன்றுகூடலில் பங்கெடுக்கிறேன். தவிரவும், நாலாந்தரமான மொழியில் சில கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் தமது இணையதளங்களில் வெளியிட்டு தமிழ்நாட்டில் யாருக்காக யார் கூட்டம் நடத்தவேண்டும், அதில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் அல்லது கூடாது என்று தம்மால் தீர்மானித்துவிட முடியும் என்று நம்புகிற சிலர் தமது அகங்காரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காகவும் கூட இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது சரியானது என்று நம்புகிறேன்.

32 comments:

  1. கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான உங்களின் பதிவிற்கு நன்றிகள்.

    ஆனால் கருத்து சுதந்திரம் சட்ட பூர்வமாக மாறுவதற்கு வழி செய்ய வேண்டும். தணிக்கையற்ற எழுத்து உரிமைக்கு எழுத்தாளர்கள், பதிவர்கள் ஒன்று கூடி ஆட்சியாளர்களை அணுகி சட்ட திருத்தம் கொண்டு வர முயல வேண்டும், அதை விடுத்து பதிவு எழுதி என்ன பயன் விளையப் போகிறது.

    நீங்கள் சொல்வது போல இங்கு மலம், ஆண் பெண் பிறப்பு உறுப்புக்கள் இன்னமும் கவிஞர்களால் ஜிகினா வேலைக்கும், கவன ஈர்ப்புக்கு மட்டுமே பயண படுத்த படுகிறது என்பது நிதர்சனம்..

    ReplyDelete
  2. @@@ தவிரவும், நாலாந்தரமான மொழியில் சில கட்டுரைகளையும் பின்னூட்டங்களையும் தமது இணையதளங்களில் வெளியிட்டு@@@

    எந்த விமரிசனும் இல்லாம நாலாந்தரம் என்று சொல்றது தீர்ப்பு சொல்றது ஆதவன் தீட்சின்யாவுக்கு மட்டுமான கருத்து சுதந்திரம் இல்லயா கவின்மலர்???

    ReplyDelete
  3. ஏழர!

    அவதூறுக்கும் கருத்து சொல்வதற்கும் வேறுபாடு உண்டு. அவதூறையும் தனிமனிதத் தாக்குதல்களையும் அப்படித்தான் சொல்லவேண்டும். சொல்ல முடியும். கவிதையை விமர்சனம் பண்ணுவதை விட்டுவிட்டு எழுதியவரின் வாழ்க்கையைப் பற்றியும், அவரது புகைப்படங்கள் குறித்தும், அவரது இயக்குநர், கணவர் என்று அனைவரையும் இழுத்தும் கட்டுரை எழுதுவதற்கு என்ன பெயர் வைப்பீர்கள்? எதையாவது கேட்கவேண்டும் என்பதற்காக கேட்கக்கூடாது.

    ReplyDelete
  4. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதானது லீனாவின் கவிதைகள் மீதான மதிப்பீட்டின் அடிப்படையிலானது அல்ல. அல்லது அவரது செயல்பாடுகள் கருத்துகள் எல்லாவற்றுடனும் இணக்கம் தெரிவிப்பதற்குமானதும் அல்ல.
    this should have been made clear when the meeting was called for.

    ReplyDelete
  5. டாகடர் ருத்ரன்!

    நிகழ்ச்சியில் பங்குபெறுபவர்களுக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சியை சார்ந்தது அது.

    உன் கவிதை எனக்கு பிடிக்காமல் இருக்கலாம். உன்னையும் பிடிக்காமல் இருக்கலாம். உன் கருத்துக்களையும் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் உன் கருத்துக்களை சொல்லும் சுதந்திரம் உனக்கு வேண்டும். அதற்காக நான் குரல் கொடுப்பேன் என்று கூறி அதற்காக முனையும் முதிர்ச்சி நிறைய பேருக்கு இல்லை.

    ”தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்”

    - இவைதான் அறிவிப்பில் உள்ள வாக்கியங்கள். எங்காவது லீனா மணிமேகலையின் கவிதையில் உடன்பாடுள்ளவர்கள் மட்டும் வரவும் என்று போட்டிருக்கிறதா என்ன? அல்லது லீனாவின் அத்தனை செயல்பாடுகளையும் ஆதரிப்பவர்களுக்கான கூட்டம் இது என்றிருக்கிறதா?

    ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அல்லது குறிப்பிட்ட பிரச்சனையில் அப்பிரச்சனை சார்ந்து அவ்வபோது முடிவெடுத்து சேர்ந்து இயங்குவது தவிர்க்கவியலாதது. அப்படித்தான் இயங்கமுடியும்.

    அப்படித்தான் நாங்கள் (ஆதவன் உட்பட) நிகழ்வில் பங்குபெற்றோம். கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கூட கவிதையை விமர்சித்துப் பேசினார்கள். இது ஆரோக்கியமான போக்கு.

    ReplyDelete
  6. Anonymous3:37 pm

    கவின் மலர், கருத்து சுதந்திரம் என்பது லீனாவுக்கு மட்டும்தானா? பால் சக்காரியாவிற்கு இல்லையா? இந்த ம்திப்பீடுகளின் அடிப்படையில் சக்காரியவைப் பற்றியும் நீங்கள் சொல்லியிருந்தால் உங்களது தார்மீகத்தை எண்ணி மகிழ்ந்திருக்கலாம். இது அப்பட்டமான இரட்டை நிலைப்பாடு.

    ReplyDelete
  7. கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் கூட கவிதையை விமர்சித்துப் பேசினார்கள்//

    யாரெல்லாம் விமர்சித்தார்கள்.. என்னவெல்லாம் விமர்சித்தார்கள் என்று கூற முடியுமா தோழர்

    ReplyDelete
  8. அதிஷா!

    லதா ராமகிருஷ்ணன் பேசியதை நீங்க கேட்கலையா?

    ReplyDelete
  9. அனானி!

    நல்ல கேள்வி கேட்டுள்ளீர்கள். உங்கள் நிஜப்பெயரிலேயே வரலாமே!

    பால் சக்காரியாவிற்கு கண்டிப்பாக கருத்து சுதந்திரம் வேண்டும். அதை யார் தடுத்தாலும் கண்டனத்திற்குரியதே.

    இது என் கருத்து. இதற்காக கூட்ட ஏற்பாட்டாளர்களை போய் நான் இந்த அஜெண்டாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கூற முடியாது. கூட்டத்தின் நோக்கத்தில் எனக்கு உடன்பாடு இருந்ததால் நான் கலந்துகொண்டேன்.

    அதோடு..இதற்கு கூட்டம் போடுகிறீர்களே. அதற்கு ஏன் போடவில்லை என்பது அபத்தமாய் இருக்கிறது. இந்தக்கூட்டத்தில் உடன்பாடு உள்ளதா இல்லையா என்பதுதான் கேள்வி. இதில் என்ன இரட்டை நிலைப்பாட்டை கண்டீரோ?

    ReplyDelete
  10. தோழர்!

    எல்லாவற்றையும் விடுங்கள்.

    லீனாவின் அந்த கவிதையை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

    மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்களின் புகழ் அக்கவிதையால் பரவும் என்று நம்புகிறீர்களா?

    இதற்கு மட்டும் நேரடி பதில் சொல்லுங்கள்!

    ReplyDelete
  11. மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ, பெரியார், அம்பேத்கர் இப்படி யாருடைய புகழையும் பரப்புவது என் வேலையல்ல. புகழை பரப்பி என்ன செய்யப்போகிறோம்? அவர்களுடைய கருத்துக்களில் எவை உடன்பாடு உடைய கருத்துக்களோ அவற்றை பரப்பலாம். யார் சொன்னதற்காகவும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

    நீங்கள் குறிப்பிடுவது எந்தக்கவிதையை என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  12. தோழர்!

    கண்ணை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டுவிட்டதாக சொல்கிறீர்களே?

    ஒரு புணர்தலின் உச்சியில் விலகி

    அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி

    தோழர் என்றெழுதினாய்

    உடலை உதறி கொண்டு எழுந்து

    உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்

    என்று பிதற்றினாய்

    கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்

    உபரி என யோனி மயிரை விளித்தாய்

    உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்

    லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்

    பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்

    முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்

    மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்

    பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்

    இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்

    மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்

    குறியை சப்ப குடுத்தாய்

    பெர்லின் சுவர் இடிந்தது

    சோவியத் உடைந்தது

    எழுச்சி என்றாய்

    அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

    கீழே இழுத்து

    உப்பை சுவைக்க சொன்னேன்

    கோகோ கோலா என்று முனகினாய்

    மயக்கம் வர புணர்ந்தேன்

    வார்த்தை வறண்ட

    வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்

    இது கட்டவிழ்ப்பு என்றேன்


    - இந்த கவிதையில் இடையிடையே மார்க்சிய பேராசான், புரட்சித்தலைவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிறதே?

    இதற்கு பொதுவுடைமை சித்தாந்தத்தை பின்பற்றும் தங்கள் கருத்து என்ன?

    நேரடியாக ஒரே வார்த்தையில் சொல்லுங்கள். இக்கவிதையை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?

    ReplyDelete
  13. Anonymous5:40 pm

    எது அபத்தம் தோழர்? உங்களது தோழர்கள் பால் சாக்காரியாவை அடித்து அதை நாங்கள் கேள்வி கேட்டல் அபத்தம். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத புகார் மீது நீங்கள் கூட்டம் நடத்தினால் அது நல்ல விஷயம். வேடிக்கை. உண்மையான பிரச்னையை விட்டுவிட்டு ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதி பெருசாக்குவதற்கு பெயர் இரட்டை நிலைப்பாடு மட்டுமல்ல... உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நான் அனானியாகவே இருந்து விட்டு போகிறேன்.

    ReplyDelete
  14. கிருஷ்ணா! உங்களுக்கான பதிலை ஆம் இல்லை என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. கொஞ்சம் பொறுங்கள்! பொறுமையாய் டைப் பண்ணிவிட்டு போஸ்ட் செய்கிறேன்

    ReplyDelete
  15. அனானி தோழர்!

    பால்சக்காரியா விஷயத்தில் நீங்கள் கேள்வி கேட்டாலே அபத்தம் என்று எப்போது சொன்னேன்?

    நல்ல கேள்வி கேட்டீர்கள் என்றுதான் சொன்னேன்.

    இந்தக்கூட்டம் நடத்தும்போது, அதற்காக ஏன் கூட்டம் நடத்தவில்லை என்று கேட்பதுதான் அபத்தம் என்றேன். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு தோழரே!

    இன்னும் நடவடிக்கை எடுக்காத ஒன்றுமில்லாத புகாரை ஊதி பெரிசாக்குகிறீர்கள் என்கிறீர்கள். இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லைதான். ஆனால் புகார் கொடுக்கப்பட்டாயிற்று. அதை மனதில் வைக்கவும்.

    நீங்களே ஒரு கவிதையோ கட்டுரையோ இந்துத்வாவை எதிர்த்து எழுதும்போது அவர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கலாம். அப்போது நீங்கள் கைதுசெய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் எழுத்துக்களுக்கு தடை ஏற்படுத்தும் அபாயமும் நேரலாம். அப்படி இருக்கையில், லீனாவின் கவிதையில் உங்களுக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால் இதை இப்படியே விடுவதோ, எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பதோ அவர்களுக்கு துணிச்சலைக் கொடுக்கும். இது கதை, கவிதை மட்டுமல்ல, எல்லாவிதமான கலைவடிவங்களுக்கும், இலக்கிய வடிவங்களுக்கும் நீளும். இப்படிப்பட்ட சிக்கல்களை முளையிலேயே கிள்ளி எறியும் முகமாகத்தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

    நிஜப்பெயரில் வரலாமே என்று நான் உங்களை கிண்டலடிக்கக் கேட்கவில்லை. கேள்வி நியாயமாய் இருக்கையில் ஏன் பெயரிலியாய் இருக்க வேண்டும் என்றே வினவினேன். எனினும் அது உங்கள் இஷ்டம். உங்களுக்கான தனிப்பட்ட சங்கடங்கள் இருக்கலாம். புரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  16. Anonymous9:01 pm

    "புகார் கொடுக்கப்பட்டாயிற்று. அதை மனதில் வைக்கவும்." என்ன செய்ய? நான் கூட நாளை உங்கள் மீது புகார் கொடுக்க முடியும். அல்லது நீங்கள் என் மீது கொடுக்க முடியும். இது தனி மனித சுதந்திரத்தை வலியுறுத்தும் நாடு. யார் வேண்டுமானாலும் யார் மீதும் புகார் கொடுக்க முடியும். புகாருக்கு முகாந்திரம் இருக்கிறதா இல்லையா என்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறையின் வேலை. அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் எதிர்வினைகள் சாதாரணமாக இருக்கும். இது அடிப்படை. நான் கேட்ட கேள்வி, இதற்கு நீங்கள் கூட்டம் போடும் போது இதை விட மோசமான கருத்துரிமை மீறல்களுக்கு ஏன் போடவில்லை என்பதுதான். இதில் என்ன அபத்தத்தை நீங்கள் கண்டீர்கள்? இது ஒரு நியாயமான, அடிப்படையான கேள்வி. அதற்கு நீங்கள் பதில் சொல்ல மறுக்கிறீர்கள். உங்களிடம் நேரடியாகவே கேட்கிறேன். பிடல், சே, உள்பட நாம் (அல்லது நான்) அதிகம் மதிக்கும் மார்க்சியவாதிகளை ஒரு ஆண்குறிக்குள் அடைத்து வைத்த கவிதைக்கு வந்த அச்சுறுத்தலைவிட அதிகமான அச்சுறுத்தல் தனி மனித உரிமைக்கு ஆதரவாக பேசியதற்காக பால் சக்காரியாவிற்கு நேர்ந்தது. கலைவடிவங்களுக்கு ஏற்படும் சிக்கலை முளையிலேயே கிள்ளி எறிய முனையும் நீங்கள் வாழ்வியல் சிக்கல்களை ஏன் அப்படி நினைக்கவில்லை? இது கருத்துரிமை மீறலாக தோன்றும் உங்களுக்கு அது ஏன் தோன்றவில்லை? இந்த கேள்வியை அபத்தம் என்று ஒதுக்காமல் தயவு செய்து பதில் சொல்லுங்கள். அபத்தம் என்று சொல்லி ஒளிந்துக் கொள்ளாதீர்கள். ஒரு விஷயம் தெரியுமா? இந்து மக்கள் கட்சி ஸ்ரேயா சரண் தொடங்கி சானியா மிர்சா வரை பலர் மீது புகார் கொடுத்திருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட். அவர்களுக்கு மட்டுமா என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும்.

    ReplyDelete
  17. Anonymous7:08 am

    லீனாவின் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பவர்களின் வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு ம.க.இ.க.வினர் வந்து கேட்கப்போகிறார்களாம். கூட்டத்திலும், இணையத்திலும் லீனாவுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ம.க.இ.க.வினர் வரும்போதும், 'ஆமாம். இது லீனாவின் கருத்து சுதந்திரம் அதை சொல்ரதுக்கு அவருக்கு உரிமை இருக்கு. அதை எதிர்ப்பது அடிப்படைவாதம்' என்றே சொல்வார்கள் என எதிர்ப்பர்போம். ம்.க.இ.கவினர் முதலில் சுகுணா, கவின்மலர் தேடிவரப்போவதாக கேள்வி.

    ReplyDelete
  18. About this matter, first we should forget the name LEENA MANIMEKALAI.

    ReplyDelete
  19. Anonymous7:34 pm

    /பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன//

    if u write somthing through media, is it democratic way or not.
    who decide that which one is critique. Based on that how u decide that is fundamentalism. who gave the rights to decide that. is it fascist approach.

    ReplyDelete
  20. //லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.//

    அய்யா கொஸ்டீன் மார்க்கு! (?)

    வேற வேலை இருந்தா பாருங்களேன்.

    ReplyDelete
  21. மெய்யாலுமே கருத்து லேதா..

    ReplyDelete
  22. எனக்கு வேறு வேலை இருக்கிறது. யாரென்று தெரியாத கேள்விக்குறி.. ஆச்சரியக்குறி....போன்றவற்றோடு உரையாட முடியாது.

    ReplyDelete
  23. எழுத்தைத்தானே பார்க்க வேண்டும். எழுதியவனை ஏன் பார்க்கின்றீர்கள்.

    ReplyDelete
  24. //எழுத்தைத்தானே பார்க்க வேண்டும். எழுதியவனை ஏன் பார்க்கின்றீர்கள்.//

    இது எல்லோருக்கும் பொருந்தும் தானே. நீங்கள் எழுத்தை மட்டுமா விமர்சித்தீர்கள். எழுதியவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு செய்தீர்களே. அப்போது இந்த வியாக்கியானம் எங்கே போயிற்று. நமக்கென்றால் ஒரு நியாயம். மற்றவர்களுக்கென்றால் ஒரு நியாயமா? சொல்லுங்கள் மிஸ்டர் கேள்விக்குறி!

    ReplyDelete
  25. நான் மிஸ்டரா மிசஸான்னு தெரியாம முடிவு எடுக்குறீங்க• அப்புறம் அது என்னங்க ஆசிரியன் தனக்கும் பிரதிக்குமான உறவை சொன்ன பிறகு குற்றம் சொல்பவர் யார் என தெரிந்தால்தான் பதில் சொல்வேன் என்பது பால் சக்காரியா வ எப்படி னாலும் உதைக்குணும்கிறது மாதிரி இருக்கு. அப்புறம் நீங்க கேக்குறது படைப்பாளி மொழியிலா அல்லது மார்க்சிய மொழியிலா. எனவும் அவ்வப்பது விளக்கினால் புரிந்து கொள்வேன்

    ReplyDelete
  26. //எழுதியவனை ஏன் பார்க்கின்றீர்கள்.//

    இது நீங்கள் எழுதியது. நீங்களே ஆண் என்று ஒப்புக்கொண்டு இருக்கிறீர்கள். அப்புறம் மிஸ்டர் போட்டால் கேள்வி வேறு.

    ReplyDelete
  27. எழுத்துப் பிழை குறித்த உங்களது அக்கறை கருத்துக்களில் அல்லாமல் சென்றது எப்படி அம்மா

    ReplyDelete
  28. ம‌ரபு சார்ந்த ஆணாதிக்க வடிவ எழுத்தின் விகுதி என்னுள் இருந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடுதான் ன் விகுதி. மாற்றிக் கொள்கிறேன். இந்த அடிமைத்தனத்திற்காக சுயவிமர்சனம் செய்து கொள்கிறேன்.

    ReplyDelete
  29. To day Leena Manimehalai talking like a democrat and criticizing Yamuna Rajendran that he did not publish her comments for the past two days in their blog..I too would like to inform you that i had posted two comments (one my district committee resolutions and another one comment on Vinavu comment)..Till date she did not publish those two comments in her blog..Leena has no intellectual honesty..

    ReplyDelete
  30. Anonymous3:13 pm

    //கிருஷ்ணா! உங்களுக்கான பதிலை ஆம் இல்லை என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. கொஞ்சம் பொறுங்கள்! பொறுமையாய் டைப் பண்ணிவிட்டு போஸ்ட் செய்கிறேன் //

    இன்னும் டைப்ப் பண்ணி முடிக்கலையா?

    ReplyDelete
  31. அனானி!

    முடிக்கலை

    ReplyDelete
  32. Anonymous11:02 am

    Anonymous said...

    //கிருஷ்ணா! உங்களுக்கான பதிலை ஆம் இல்லை என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. கொஞ்சம் பொறுங்கள்! பொறுமையாய் டைப் பண்ணிவிட்டு போஸ்ட் செய்கிறேன் //

    இன்னும் டைப்ப் பண்ணி முடிக்கலையா?
    3:13 PM
    கவின் மலர் said...

    அனானி!

    முடிக்கலை

    ---

    இத்தனை மாதமாகி இன்னும் டைப் செய்து முடிக்கவில்லையா? அல்லது முடிக்க விரும்பவில்லையா?

    ReplyDelete