Friday, October 07, 2011

வாச்சாத்தி வலி!

நின்று வென்ற நீதி!

ர்மபுரி மாவட்ட நீதிமன்ற வளாகம். அந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் கூடியிருந்த வாச்சாத்தி கிராம மக்களின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. காலம் கடந்து தீர்ப்பு வந்திருந்தாலும், 19 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்ததாகவே அவர்கள் எண்ணினர்.

 ''அந்தக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா, துயர நினைவுகளால் உருவான கண்ணீரா என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தோம்'' என்கிறார் 19 ஆண்டுகளாகப் பல வகைகளிலும் போராடி இந்தத் தீர்ப்பைப் பெற்றுத் தந்திருக்கும் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான பெ.சண்முகம்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 269 பேர். இவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். எஞ்சிய 215 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து, அவரவர் செய்த குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே இருக்கிறது வாச்சாத்தி. சந்தனக் கட்டைகளைத் தேடப் போன வனத் துறையினரும் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரோடு கூட்டணி அமைத்துக்கொண்டு, 1992-ம் ஆண்டு ஜூன் 21, 22, 23 தேதிகளில் இங்கு நடத்திய கொடூரத் தாக்குதல்களும் பாலியல் வன்முறைகளும் அச்சில் ஏற்ற முடியாதவை. சாட்சியம் கூறிய பெண்களின் வாக்குமூலங்களை வாசிக்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு வக்கிரத்தை அரங்கேற்றியது அரச அதிகாரம்.

''இந்திய நீதித் துறை வரலாற்றிலேயே இப்படி ஒரு தீர்ப்பு வந்தது இல்லை. இதில் புலனாய்வு செய்த சி.பி.ஐ-யின் பங்கு மிக முக்கியம். அதனாலேயே சி.பி.ஐ-க்கு சிறப்புத் தொகையாக ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது. இதுவும் நீதித் துறைக்குப் புதியதுதான். ஒரே ஒரு ஏமாற்றம், பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களைத் தவிர, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை'' என்று மகிழ்ச்சிக்கு இடையே சின்ன ஆதங்கம் தெரிவிக்கிறார் சண்முகம்.


''1992-ல் அந்தக் கொடூரம் அரங்கேறி 25 நாட்களுக்குப் பிறகுதான் நாங்கள் கிராமத்துக்குள் சென்றோம். மயானம்போல் இருந்தது கிராமம். ஒருவர்கூட ஊரில் இல்லை. எல்லா வீடுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஊரே இருக்கக் கூடாது என்கிற வெறியோடு அங்கே ஒரு கொடூர தாண்டவம் நடந்திருப்பதை உணர முடிந்தது. ஒரு சந்தில், ஒரே ஒரு பெண் மட்டும் ஒளிந்து இருந்தார். எங்களைப் பார்த்ததும், நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று உணர்ந்ததும் எங்கள் அருகில் வந்தார். அவர் சத்துணவு ஆயா என்பதால், அவரைச் சிறையில் அடைத்தால் பிரச்னையாகிவிடும் என்று அவரை மட்டும் வெளியே விட்டு வைத்திருந்தது காவல் துறை. அவர் தான் காட்டுக்குள் 25 நாட்களாக ஒளிந்திருந்த ஊர் மக்களில் 40 பேரை அழைத்து வந்து எங்களிடம் உண்மை நிலையைச் சொல்ல வைத்தார்.

தேடுதல் வேட்டைக்கு வந்த காவலர்கள் ஒரு மரத்தடிக்கு இழுத்து வந்து எல்லோ ரையும் அடித்து உதைத்து இருக்கின்றனர். அவர்களில் சில பெண்களை மட்டும் வண்டியில் ஏற்றி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று சிதைத்து இருக்கிறார்கள். அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக மீண்டும் ஊருக்குள் வந்தபோது, உறவினர்களிடம் ஒப்படைக்காமல் வனத் துறை அலுவலகத்தில் அடைத்துவிட்டனர். அதனால், அவர்களுக்கு நேர்ந்த கொடுமை ஊருக்குள் எவருக்கும் தெரியாமலேயே போய் விட்டது.

அங்கும் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வக்கிரக் கொடுமைகளும் தொடர்ந்தபடியே இருந்திருக்கின்றன. காவலர்கள் முன்னிலையிலேயே பெண்களைச் சிறுநீர் கழிக்கச் சொல்வது, சாப்பிட்டு முடித்த எச்சங்களைக் கொடுத்து உண்ணச் செய்வது என்று இயல்பான மனித மனம் யோசிக்க முடியாத வன்முறைகள் அவை!

அப்படியே சத்தம் காட்டாமல் அவர் களை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்கள். அந்தப் பெண்களைப் பார்க்க நாங்கள் சிறைக்குச் சென்றபோது, அங்கிருந்த பெண் வார்டன் ஒருவர் மனம் பொறுக்காமல் நடந்த கொடுமைகளை எங்களிடம் விவரித்தபோதுதான், சம்பவங்களின் தீவிரம் எங்களுக்கு உறைத்தது!

அந்த 18 பெண்களில் ஒரு பெண் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்கு சிறையிலேயே பிறந்த குழந்தைக்கு 'ஜெயில் ராணி’ என்று பெயர்வைத்தார். முதிய பெண் ஒருவர், உடல் ஊனமுற்ற பெண் எனப் பலவீனமான பலர் அந்தக் கும்பலில் அடக்கம். அதில் எட்டாம் வகுப்பு மாணவியான 13 வயதே ஆன செல்வி என்கிற சிறுமி, 'அன்னிக்கு எனக்கு ஸ்கூல் லீவு சார். அன்னிக்கு மட்டும் எனக்கு ஸ்கூல் இருந்து இருந்தா, எனக்கு இப்படி ஆகியிருக்காது’ என்று கேவிக் கேவி அழுதபோது, அதிர்ச்சி யில் உறைந்துவிட்டோம் நாங்கள்.  எல்லாக் குழந்தைகளுக்கும் விடுமுறை என்பது சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால் அவளுக்கு மட்டும்...'' என்று நிறுத்தியவர், அதற்கு மேல் பேச முடியாமல் குரல் உடைந்து கண்ணீர்விட்டார்.

''வழக்குத் தொடுத்தோம். உயர் நீதிமன்றமோ 'அரசு அதிகாரிகள் இப்படி எல்லாம் நடந்துகொண்டு இருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை’ என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. கீழ்வெண்மணி வழக்கில் 'கோபாலகிருஷ்ண நாயுடு காரில் போகிறவர். சமூக அந்தஸ்து உள்ளவர். அவர் கொலை செய்திருக்க மாட்டார்’ என்று சொன்ன நீதித் துறைதானே? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலா ளராக இருந்த தோழர் ஏ.நல்லசிவன் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்குத் தொடந்தார்.

எங்குமே இல்லாத அதிசயமாக இந்த வழக்கில்தான் இன்று வரை காவல் துறை எஃப்.ஐ.ஆர். என்ற ஒன்றைப் போடவே இல்லை. 1,345 பேரை நிறுத்தி 1995-ல் நடந்த பிரமாண்ட அடையாள அணிவகுப்பில் ரகளை செய்தார்கள். நீதிபதியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் அடையாள அணிவகுப்பு ரத்தானது. அதன் பின் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அடையாள அணிவகுப்பு நடத்தியாக வேண்டும் என்று கண்டிப்பாகச் சொன்னது. வேறு வழி இன்றி, 50... 50 பேராக அணிவகுப்பு நடத்தப் பட்டு, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்கள்.

உயர் நீதிமன்றத்தில் வழக்கைக் கையாண்ட வழக்கறிஞர்கள் வைகை, சம்கிராஜ், இளங்கோ ஆகியோரின் பங்கு மகத்தானது. இந்த வழக்கை நடத்தக் கூடாது என்று பலப் பல கொலை மிரட்டல் கள், கொலை முயற்சிகள், தாக்குதல்களுக்கு இடையில் நாங்கள் கரை சேர்ந்திருக்கிறோம்.

அன்றைய அ.தி.மு.க. அரசில் வனத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இந்தக் கொடூரங்களை மூடி மறைத் தார். தமிழகமே கொதித்து எழுந்தபோதும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அது குறித்துச் சலனமே இல்லாமல் இருந்தார். இப்போதும் தீர்ப்பு வந்த பின்னர் அது குறித்துப் பெரிதாக அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை!'' என்று முடித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது எப்படி இருக்கிறார் கள்?

''வாச்சாத்திக் கொடூரங்களைப் பொது மேடைக்குக் கொண்டுவந்தால், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்கிற உறுத்தல் இருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் இன்று திருமணமாகி நல்ல நிலையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார் சண்முகம்.

அவர்களில் ஒருவரான பரந்தாயியிடம் பேசியபோது, ''தீர்ப்பு கிடைச்சப்போ எல்லாரும் கண்ணீர்விட்டோம். தண்டனை குறைவா இருக்குறதாத்தான் நாங்க நினைக்கிறோம். ஏன்னா, நாங்க அத்தனை கொடுமைகளை அனுபவிச்சு இருக்கோம். அவங்கள்லாம் ஜாமீன்ல வெளில வந்துட் டதாச் சொல்றாங்க. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 15,000 ரூபாய் தர்றதா சொல்லி இருக்காங்க. எங்க 20 வருஷக் கஷ்டத்தை இந்தக் காசு சரிபண்ணிடுமா?'' என்று கேட்கிறார்.

பாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணான அமரக்கா, ''இந்தத் தண்டனை பத்தாது. எங்க ஊர் அத்தனை பாடுபட்டு இருக்கு. நான் இப்போ உள்ளாட்சித் தேர்தல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பா நிக்கிறேன். எதிர்த் தரப்புல ஓட்டுக்குக் காசு கொடுக்குறதா பேச்சு இருக்கு. மக்கள் காசுக்கு ஆசைப்படாம இருந்தா நான்தான் ஜெயிப்பேன்'' என்கிறார் உறுதியுடன்.

பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஊர் மக்களில் ஒருவராக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலில் ஒரு பதவியைப் பெறுவதற்கு அமரக்காவுக்கு எத்தனை இடர்பாடுகள்? ஆனால், வாச்சாத்தி விவ காரத்தையே மூடி மறைத்த அப்போதைய அமைச்சர் செங்கோட்டையன் இப்போதும் அமைச்சர் என்பது எத்தனை முரண்!

பரமக்கா ஜெயிக்கிறாரோ இல்லையோ, போராடி அநீதியை வென்ற வாச்சாத்தி மக்களுக்கு ஒரு சல்யூட்!

நன்றி : ஆனந்த விகடன்

1 comment:

  1. Shame if people accept money for vote even after this..

    ReplyDelete