Tuesday, October 18, 2011

நீளும் கனவு


சின்னு வந்திருக்கிறாள். அவளுக்கு அனுவின் சமையல் என்றால் ரொம்ப இஷ்டம். அனு அவளுக்காக மீன் குழம்பு வைத்திருந்தாள் .  காரம் கொஞ்சம் அதிகமாகி விட்டது. ஆனாலும் என்ன? சின்னுவுக்குப் பிடிக்கும் தான். இரண்டு தட்டுகளை கழுவி எடுத்து வந்தாள். சின்னு சாப்பிட அமர்ந்தாள். தன் சின்ன கைகளால் மெல்ல தட்டிலிருந்து ஒரு பிடி எடுத்து உருட்டினாள். “நம்பி சாப்பிடலாமா? ஆம்புலன்ஸுக்கு சொல்லி வச்சுட்டு வாய்ல வைக்கவா?’’ என்று கேலி செய்தவாறே ஒரு கவளத்தை வாய்க்குள் வைத்தவள் சாப்பிட்ட வாயாலேயே அனுவின் கன்னத்தில் ஒரு முத்தமிட்டாள்.

‘’நல்லாருக்கு!..உப்பு காரம் எல்லாம் சரியாய் இருக்கு!’’ என்றவாறே ரசித்து  சாப்பிட்டாள். சோறு கொஞ்சம் குழைவாய் வடித்திருந்தது நன்றாகவே இருந்தது. அனு தனக்கும் கொஞ்சம் எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.. நல்ல சாப்பாடு சில சமயம் மனதை ரசனையாக்கி விடுகிறதுதான். சின்னு பெரும்பாலும் சமைப்பதில்லை. வெளியில் ஹோட்டலில் தான் சாப்பிடுகிறாள். அதனால் அவளுக்கு சோற்றை அள்ளி நிறைய வைத்தாள் அனு. 

‘’இப்படி யாராச்சும் தினமும் சமைச்சு வச்சா நல்லா சாப்பிடலாம்!’’ என்றாள் சின்னு. அவள் வாய் பேசிக்கொண்டே இருந்தது. ஏதேதோ பேசினாள். இடையிடையே சாப்பிட்டாள். பேசியதில் பாதி மீன்குழம்பின் ருசி பற்றியே இருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் கையைத் துடைத்துக் கொண்டே வந்தவள் அருகில் வந்து நின்று தலையை சாய்த்து சொன்னாள்

“அனு! சாப்பாடு ரொம்ப நல்லாருந்தது. ரொம்ப நாளைக்குப் பிறகு ரசிச்சு சாப்பிட்டேன்….’’

’’சமைக்கும்போது வெறும் எண்ணெய், மிளகாய் மட்டுமா போட்டேன். அன்பும் ஒரு துளி கலந்து தானே சமைச்சேன்?’’

‘’ஒரு துளி தானா?’’

‘’சமைக்கும்போது ஒரு துளிதான்...பரிமாறும்போது நிறைய…....ஒரு பொன்மொழி தெரியுமா...?

’எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள். ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்’..கேள்விப்பட்டிருக்கியா?’’

”இல்லையே! நல்லாருக்கு..!’’” என்றவள் உண்ட மயக்கத்தில் அருகில் இருந்த பாயை எடுத்து விரித்துப் போட்டுப் படுத்தாள்.

னவில் தான் செந்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். கனவும் நனவுமான வாழ்க்கை அவனுக்குப் பிடிக்கவில்லை. கனவு மட்டுமே போதுமானதாகத் தோன்றியது. காணும் கனவு அப்படியே வாழ்நாளின் இறுதி வரை நீடிக்காதா என்று ஆசையாய் இருந்தது. இப்போதும் கனவு கண்டு கொண்டிருக்கிறான். இந்தக் கனவு இப்படியே நீளாதா? என்ன ஆச்சரியம்? அவன் கனவு நீடித்தது. உறக்கத்தில் கால்களை நீட்டிக்கொள்வதை அவன் உணர்கிறான். ஆனாலும் தொடர்ந்து கனவு கண்டுகொண்டிருக்கிறான்.

பாட்டி அடிக்கடி ‘உனக்குன்னு ஒரு ராஜகுமாரி எங்கே வளர்ந்த்துக்கிட்டு இருக்காளோ?’ என்று சிறுவயதிலிருந்து சொல்வதைக் கேட்டிருக்கிறான் செந்தில். அந்த ராஜகுமாரி ஒருமுறை கூட அவன் கனவில் வருவதில்லை. கனவில் அம்மா, அப்பா, பாட்டி, பக்கத்து வீட்டு ஜேம்ஸ், எதிர்வீட்டு சீனு  என்று எல்லோரும் வந்தார்கள். ஆனால் ராஜகுமாரி மட்டும் வரவேயில்லை.

செந்திலுக்கு நிறைய முடி..சுருள் சுருளாக நெற்றியில் புரளும். காற்றில் ஆடும் அவன் முடிக்கென்றே சின்ன வயதிலிருந்தே அவன் வயதையொத்த பையன்கள் ரசிகர்கள். ‘உனக்கு மட்டும் எப்படி இப்படி வந்து விழுது?’’ என்று தொட்டுத் தொட்டுப் பார்ப்பார்கள். அவனுக்கு உள்ளூர பெருமையாக இருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ள மாட்டான். அவனைப் பார்த்து பையன்கள் அந்த ஒரு விஷயத்தில் தான் பொறாமைப் படுவார்கள். அதனால் சரியாய் முடியை முன்னும் பின்னும் கத்தரித்து நெற்றியில் மட்டும் வந்து சரிந்து விழும்படி த்ன்னுடைய தலையலங்காரத்தை வைத்துக் கொள்வான். பையன்கள் பொறாமைப்படும்போதெல்லாம் அவனுக்கு சந்தோஷம் தாங்காது.

இப்போது கனவிலும் பையன்கள் நிறைய பேர் வந்து சுற்றி சுற்றி வருகிறார்கள்.. இவனுடைய முடியை தொட்டுப் பார்க்கிறார்கள். இவனுக்கு சற்றுக் கூச்சமாக இருக்கிறது. ஒருவன் வந்து செந்திலின் கரங்களைத் தொட்டுப் பார்த்துக் கேட்கிறான். ‘’உன் கை ரொம்ப அழகு! உன் கையைப் பிடிச்சுக்கவா கொஞ்ச நேரம்?’’ இவன் தலையாட்ட கைகளை கெட்டியாகப் பற்றிக்கொள்கிறான். இன்னொருவன் வந்து ‘’உனக்கு அழகான கண்ணுடா!’’’’ என்றான். இவனுக்குப் பெருமையாய் இருந்தாலும் கூச்சமாக இருக்கிறது.. வெளிக்காட்டிக் கொள்ளாமல் படபடப்போடு நிற்கிறான் எதிர்வீட்டு சீனு இப்போது வருகிறான். ‘’செந்தில்! உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். தெரியுமா உனக்கு?’’ என்றபோது செந்தில் கனவில் மட்டுமில்லாமல் நிஜமாகவே தன் உடல் சிலிர்த்ததை உணர்ந்தான்.

கனவில் இன்னும் ஏதேதோ காட்சிகள்!. ஒரு சர்ச், மசூதி, கோவில் என்று எங்கெல்லாமோ சுத்துவது போலவும், வகுப்புப் பையன்களோடு சேர்ந்து சிகிரெட் குடிப்பது போலவும் விதவிதமாய் கனவுகள்.

கனவுகளுக்குத்தான் எத்தனை விதமான கால்கள்? சில நீளமானவை. சில குட்டையானவை. சில வேகமாய் ஓடக்கூடிய கால்கள். சில அன்னநடை போடும் கால்கள். அவை எப்படியிருந்தாலும் மெலிதான ஏதோவொரு இடப்பெயர்ச்சி அல்லது அசைவு மட்டும் கனவில் உத்தரவாதமாய் இருக்கிறது.

அப்பா இப்போது செந்திலின் கனவில் வருகிறார். அப்பா! அவனுக்கு முதல் நண்பன் அப்பா தான். ஒரு நாளின் அத்தனை நிகழ்வுகளையும் சொல்லும்போது அப்பா விழுந்து விழுந்து சிரிப்பார். அப்பாவுக்கு செந்திலின் நகைச்சுவை உணர்வு ரொம்பவே பிடிக்கும். இருவருமாய் சேர்ந்து அம்மாவையும் தம்பியையும் கிண்டல் செய்வது, தொலைக்காட்சி பார்ப்பது, கடைத்தெருவுக்குப் போவது என்று ஒன்றாகவே திரிவார்கள். அப்பாவை அண்ணனா என்று பலர் கேட்பதுண்டு. அப்பா அத்தனை இளமை. ஆனால் கொஞ்ச நாட்களாக அப்பா அவனோடு பேசுவதில்லை.  கனவில் இப்போது வருகிறார். நிஜத்தில் இப்போது இருப்பது போலவே கனவிலும் அப்பா பேசவில்லை. அவருடைய முகம் வாடியிருக்கிறது. “ஏன்பா?’’ என்கிறான் செந்தில். ‘’நீ போறது கஷ்டமாவும் பயமாவும் இருக்கு செந்தில்’’ என்றார். ‘’அய்யோ! நான் எங்கப் போகப்போறேன். இதோ இருக்குற மெட்ராஸுக்குத் தான படிக்கப் போறேன். இதுக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க?’’ என்றவாறே அப்பாவின் அருகில் சென்று அமர்ந்து கொள்கிறான் செந்தில். அப்பா அவனையே பார்த்துவிட்டு சொல்கிறார் ‘’உனக்கு இது புரியாதுடா!’’ என்கிறார். அப்பாவின் கண்கள் கலங்கி இருந்தன. ஆண்பிள்ளை அழக்கூடாது என்று எவனோ சொல்லி வைத்ததை நம்பி அப்பா அழுகையை அடக்கிக் கொள்வது தெரிகிறது. அவன் அப்பாவையே பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

அப்பா சிறிது நேரத்திலேயே கனவிலிருந்து போய்விடுகிறார். பின்னாடியே அம்மா வந்து கனவிற்குள் நுழையும்போதே பெரிதான ஓலத்தோடு அழுதவாறே வருகிறாள். அப்பாவைப் போல அவளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண்கள் அழலாம். பெண்கள் அழுதுதான் ஆகவேண்டும். இல்லாவிட்டால் பெண்ணேயில்லை என்று எவனோ சொன்னது அம்மாவுக்கு வசதியாய்ப் போய்விட்டது. அழுகை வந்தால் மறைக்க வேண்டியதில்லை. அப்பா போல அம்மா கண்ணீரை உள்ளுக்குள் உறைய வைக்கவில்லை. உருகி உருகி அழுகிறாள். இவனுக்குத்தான் எரிச்சலாக இருக்கிறது. என்ன இது? எல்லோரும் வந்து அழுதால் எப்படி? கனவிலேயே அம்மாவை அழாமலிருக்கும்படி மன்றாடுகிறான். அம்மா கேட்கவில்லை. இந்தக் கனவு பிடிக்கவில்லை. நீண்ட கனவு வேண்டும் என்று நினைத்ததால் தானே இந்தப் பிரச்சனை? கனவு நின்று போக்க்கூடாதா?

என்ன ஆச்சரியம்! கனவு கலைந்து போனது. கண்களைத் திறந்தான். அப்பா கண் முன்னால் நின்றார். ஒரு வார்த்தையும் பேசாமல் கண்களால் மட்டுமே வெறுப்பைக் கொட்டும் வித்தை அப்பாவுக்குத் தெரிந்திருந்தது.  அவனுக்கு ஆயாசமாய் இருந்தது. 

கனவு மட்டும் இல்லையென்றால் வாழ்க்கை ரணமாகி இருக்கும். துன்பத்தையும் துயரங்களையும் கரைத்து மனிதர்களை புது மனிதர்களாக்கும் சக்தி கனவுகளுக்கு உண்டு. மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். இந்த முறை அவனுக்கு அவ்ன் நினைத்த நேரத்தில் கனவு வரவில்லை.

னு புரண்டு படுத்தாள். சின்னு அருகில் படுத்திருந்தாள். சின்னுவிடமிருந்து  இளங்குறட்டை வந்தது. அவளுடைய சின்னப் புருவங்களும், கூர்மையான நாசியும் அவளுடைய அழகுக்கு மெருகூட்டின. சின்னுவோடு வாழப்போகிறவன் கொடுத்து வைத்தவன். சின்னு சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தவள். அன்பைத் தேடித் தேடி அலைபவள். சின்னதாய் அன்பு செலுத்தும் ஜீவனையும் பாய்ந்து பாய்ந்து நேசிப்பவள். அன்பைக் கண்டறியாத சின்னுவுக்கும், அன்பு என்பதே மறந்துபோன அனுவுக்கும் இடையேயான நட்பு அவர்களுக்குத் தந்த ஆறுதல் போல வேறெதுவும் தரவில்லை. சாப்பிடும்போது சின்னு கொடுத்த முத்தம் நினைவுக்கு வந்தது. அனுவுக்கு கண்களில் நீர் திரண்டது. பதிலுக்கு இப்போது அவளை முத்தமிட வேண்டும்போல் தோன்றியது அவள் உறக்கத்தைக் கலைக்க மனமில்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள்.

ஆனால் மனம் அனபை எப்படியாவது வெளிப்படுத்தச் சொல்லி அலறியது. தன் கரங்களால் மெல்ல அவள் உறக்கம் கலையாதபடிக்கு அவள் தலையைக் கோதினாள். லேசாகப் புரண்டு படுத்தாள் சின்னு. ‘’என்னைப் பிடிச்சிருக்கா?’’ என்று சன்னமாக அவள் இதழ்கள் முணுமுணுத்தன. கனவு காண்கிறாள் போலிருக்கிறது. கனவில் வந்த ராஜகுமாரன் யாரோ? அனுவின் முகத்தில் புன்னகை அரும்பியது. தானும் அவள் அருகில் படுத்துக்கொண்டாள். ஆனால் உறக்கம் மட்டும் வரவில்லை.  கண்கள் திறந்தபடியே இருந்தன. மனம் மட்டும் எங்கெங்கோ சென்று விட்டு   மீண்டு, பின் மறுபடி மறுபடி எங்கோ சென்று மீண்டு வந்தது.

செந்தில் கண்களை மீண்டும் மூடிக்கொண்டான். உறங்குவது போலும் சாக்காடு. இப்படியே போய்விட்டால் நன்றாக இருக்கும். நீண்ட கனவு வருவது போலவே நீண்ட தூக்கமும் வந்து விட்டால் இனி ஜென்மத்துக்கும் எழ வேண்டியதில்லை. அம்மா, அப்பாவின் கோபக்குரல்களையும் ஒப்பாரிகளையும் கேட்கவோ பார்க்கவோ வேண்டியிருக்காது. கனவே! வா! வந்துவிடு! என் துயர் துடைக்க வந்து விடு! என்னை இந்த உலகை விட்டு நீங்க வைத்து எங்காவது அழைத்துச் சென்று இந்த பிரபஞ்சத்தை சுற்றிக் காண்பிப்பாயா? மானுட துன்பம் நீங்கி, என் ஆசை, காதல்,  காமம், உடல் குறித்த பிரக்ஞையற்ற ஒரு வெளிக்குள் என்னை திணிப்பாயா? உடல் கரைந்து உருகி...எலும்புகள் உடைந்து நொறுங்கி, உறுப்புகள் தூள் தூளாக சிதறி வெறும் மனம் மட்டுமே உலவும் இடமென்று எங்கேனும் இருந்தால் என்னை அங்கே கொண்டு சேர்ப்பாயா கனவே! – அவன் மனம் அரற்றியது. அவன் உறக்கம் கனவைத் தேடித் திரிந்து...இதோ..கண்டடைந்தும் விட்டது. கனவு அவனை நெருங்கியது.

கனவில் வகுப்புப் பையன்கள் அவனைக் கண்டதும் தெறித்து ஓடுகிறார்கள். அசூயையாய் விலகிச் செல்கிறார்கள். இவன் அழுகிறான். கனவிலுமா? இங்குமா? இங்குமா? வேண்டாம்! கனவைத் துரத்த முயன்று தோற்றுப் போகிறான். கனவு அவனைத் துரத்தியபடியே இருந்தது. இந்தக் கனவில் அவளாவது வரக்கூடாதா? அவள்..அவள்..என்றால்..அவள் பெயர் செல்வி. இவன் வகுப்பின் ஒரே மாணவி.. அவள் மனதை வெல்வது யார் என்பதில் பையன்கள் மத்தியில் கடும் போட்டி  இவனுக்கு மட்டும் அவளிடம் அப்படியெதுவும் தோன்றியது இல்லை. ஆனால் செல்வியை அவனுக்குப் பிடிக்கும். ’நீயாவது வா செல்வி! வந்து என்னைக் காப்பாற்று இந்தக் கொடுமையிலிருந்து...’ இதோ.... இதோ.. வந்துவிட்டாள். அவன் ஓடிச் சென்று அவள் கரம் பற்றுகிறான். அவளோ பயந்து உதறுகிறாள். அவன் அவளை விடாமல் பற்றிக்கொண்டு நிற்கிறான். அவள் பதட்டம் தணிந்து நடுக்கம் குறைந்து மெலிதாய் புன்னகைக்கிறாள். இவன் நிம்மதியடைகிறான். ’’செல்வி..! முடியல செல்வி...எதெல்லாம் நடக்க்க்கூடாதுன்னு நினைக்கிறேனோ அதெல்லாம் கனவுலயும் நடந்தா எப்படி. அதான்.. நீ வந்தா நல்லாருக்குமேன்னு நினைச்சேன். வநதுட்டே..கிளாஸ்ல யார் கிட்டயும் பேசப்பிடிக்கலை உன்னைத் தவிர.  சீனு, ஜேம்ஸ்கிட்டக் கூட பேசுறது குறைஞ்சு போச்சு. எப்பவும் நீ என் ஃபிரண்டா இருப்பியா?’’ – இவன் செல்வியிடம் அரற்றினான். அவள் ஆதரவாய் அவன் கரம் பற்றுகிறாள். ‘’நான் இருக்கேன் உனக்கு!’’ என்கிற மூன்று சொற்கள் அவள் கரங்களின் வழியே அவனுக்குள் இறங்குகின்றன.

சட்டென்று செல்வி காணாமல் போகிறாள். மீண்டும் அம்மாவும் அப்பாவும் வந்து அழுகிறார்கள். அவன் அவர்களை துரத்துகிறான். செல்வியின் வருகைக்காக காத்திருந்தான். அவள் வரவில்லை. பதிலுக்கு சீனு வந்தான். சீனுவைப் பார்த்ததும் நிஜத்தில் வரும் படபடப்பை இப்போதும் கனவிலும் உணர்கிறான் செந்தில். சீனு கருப்புக்கும் சிகப்புக்கும் நடுவில் மாநிறம். சிரித்தால் கன்னத்தில் குழி விழும். சீனு ஒரு அழகன். சிறு வயதிலிருந்து ஒன்றாக விளையாடித் திரிந்த இருவருக்குள் ஏதோ ஒரு திரை விழுந்தது போலாகி விட்டது இப்போதெல்லாம். அவனைப் பார்த்தாலே செந்திலுக்கு லேசான படபடப்பு தோன்றி விடுகிறது. இயல்பாக அவனோடு பேச முடியவில்லை. இந்த விலகல் ஏன் என்பது சீனுவுக்குத் தெரியுமா? தெரியாது என்றுதான் தோன்றியது செந்திலுக்கு. அவனிடம் பேச முடியவில்லை என்றாலும் அவனைப் பார்ப்பதே கூட போதுமானதாக இருந்தது

சீனு அவனருகே வருகிறான். ‘’ஏண்டா! இப்போவெல்லாம் சரியா பேச மாட்டேங்குற? என்னாச்சு?’’  என்கிறான். இவன் தலைகுனிந்து நிற்கிறான். இந்த வார்த்தையை நிஜத்தில் அவன் கேட்க மாட்டானா என்று துடித்திருக்கிறான் செந்தில். ஆனால் ஒருபோதும் அவன் கேட்டதில்லை. இவன் விலக விலக அவனும் விலகியே சென்றான். ஆனால் இப்போது கனவில் வந்து கேட்கிறான். அவனிடம் எதைச் சொல்வது? மௌனமாய் நிற்கிறான். அருகில் வந்த சீனு மெதுவாய் அவன் கைகளைப் பற்றி தன் கைகளுக்குள் வைத்துக்கொள்கிறான். செந்தில் உடலுக்குள் மெலிதான மின்சாரம் பாய்ந்து நரம்புகளில் ஏற...வெடுக்கென்று கையை எடுத்துக் கொள்கிறான். கனவு இங்கே தடைப்பட... திடுக்கிட்டு விழித்தவன் தன் உடல் நடுங்குவதை உணர்ந்தான். வியர்த்துக் கொட்டியது. அந்தக் கணம், அடிக்கடி இப்போதெல்லாம் தோன்றுகிற அதே உணர்வு. மிக அந்தரங்கமாய் தன் தொடைகளுக்கிடையே அனாவசியமான இடைச்செருகலொன்றை உணர்ந்தான்.

எப்போது இப்படியான ஒரு உணர்வு தோன்றியது என்று யோசித்துப் பார்த்தான் செந்தில். சரியாய்த் தெரியவில்லை. உடலின் ஒவ்வொரு அணுவிலும அவன் தன் ஆண்தன்மையின் மிச்ச சொச்சம் அழிந்து கொண்டிருப்பதை உணர்ந்து ஆண்டுகளாகி விட்டன. அப்பாவும் அம்மாவும் எப்போது எப்படி கண்டுபிடித்தார்கள் என்று இவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இவனை வெறுக்க ஆரம்பித்த்தை மட்டும் அவன் உணர்ந்து கொண்டான். ஆனால் அதிலிருந்து அவனை அப்பா பார்க்கிற பார்வையில் அசூயையும், அம்மா பார்க்கிற பார்வையில் துயரமும் அவனைக் கொன்றன. பெண்ணுடலோடு இருக்கும் மனிதர்களைப் பார்க்கையில் பொறாமை வந்த்து. ஏக்கம் தின்றது. எந்த அழகான பெண்ணைப் பார்த்தாலும் அவள் அணிந்திருக்கும் உடையைப் போன்றதொரு உடையை தான் அணிந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி கற்பனையில் மிதந்தான். சினிமா பார்க்கும்போது கதாநாயகியின் இட்த்தில் தன்னை வைத்துப் பொருத்திப் பார்த்து “என் கிட்ட யாராவது இப்படி நடந்துக்கிட்டா அவன் அவ்வளவுதான்’’ என்று பெண் பாத்திரத்தோடு மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான். அழகான ஆண்களைப் நிரம்பப் பிடித்த்து. தன் பாலியல் விழைவுகளை சமூகத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே அடக்கக் கற்றுக்கொண்டான். பெண்மையின் நெருப்பு அவனுக்குள் கொழுந்து விட்டெரிந்த்து. அதன் தீப்பிழம்புகள் அவனைச் சுடத் தொடங்கியபோது அவன் செய்வதறியாது திகைத்தான். யாரிடம் சொல்ல? எப்படி சொல்ல? என்னவென்று சொல்ல?

ஜேம்ஸ் வந்தான் ஒரு நாள். “உனக்குள் ஒரு பெண் இருக்கிறாள்!’’ என்றான். அவனையே பார்த்தான் செந்தில். ஒரு துளி நீர் விழிகளிலிருந்து வெளிப்பட்டு நதியாகி கடலானது. என்ன இது? எது அவன் அந்தரங்கமோ, எதற்கு அவன் பயப்பட்டானோ, எதைச் சொல்ல எண்ணியும் சொல்ல முடியாமலும் தவித்தானோ, அதை சர்வசாதாரணமாகச் சொல்கிறான் ஜேம்ஸ். செந்தில் கதறினான். ஜேம்ஸ் அருகில் வந்து அவன் தோளைப் பற்றி தன் மார்போடு அணைத்துக்கொண்டான். இப்போது செந்திலின் கரங்கள் சீனு தொடும்போது நடுங்குவது போல் நடுங்கவில்லை. மனம் படபடக்கவில்லை. சீனு தொட்டால் மட்டுமே அத்தகையதொரு உணர்வு. அதற்குப் பெயரென்ன? தெரியவில்லை. ஆனால் ஜேம்ஸின் அணைப்பில் தன்னுடலை ஒப்படைத்துவிட்டு செந்தில் நிர்வாணமாய் நிற்பவன் போல் நின்றான்

செந்தில் இதுநாள் வரை வெளியே தெரியாமல் பொத்திக் காப்பாற்றிய பெண்மை உள்ளுக்குள் உறங்கிப் போக, உலகம் அவனைப் பார்த்த ஆண்மையும் மறைந்து போக, ஜேம்ஸின் மனிதம் விழித்துக்கொண்டு செந்திலை அரவணைக்க, பால்பேதமற்ற இரு உடல்கள் தழுவிக்கொண்டன. ஜேம்ஸ் கண்டறிந்த உண்மையை அவன் எந்த ஆரவாரமுமின்றி சொன்னை விதத்தில் ஒரு கண்ணில் ஆனந்தக் கண்ணீரும், ஒரு கண்ணில் துயரக்கண்ணிருமாய் வழிய, கண்ணீரைத் துடைக்காமலும் கூட அவனைக் கட்டிக்கொண்டு கதறினான் செந்தில். அந்தக் கண்ணீரில் அவனுக்குள் மிச்சமிருந்த ஆண்மையை துளித்துளியாய் வெளியேற்றினான். அவன் அழுது தீரும் வரை அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு, முதுகில் ஆதரவாய்த் தட்டிக்கொடுத்தான் ஜேம்ஸ். ‘’ஒண்ணுமில்ல! சரி பண்ணிடலாம்!’’ என்பதே அவன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள். “இந்த உடம்பு வேணாம் ஜேம்ஸ்’’ – கதறிக்கொண்டே இருந்தான் செந்தில்.  

னுவின் புகைப்பட ஆல்பத்தையெடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள் சின்னு. தோழிகளோடு கடற்கரையில் எடுத்தது, ம்காபலிபுரத்தில் சிற்பங்களுக்கு மத்தியில் நின்று எடுத்துக்கொண்டது, மும்பையின் தாராவி பகுதியில் உள்ள தமிழர்களோடு எடுத்தது என்று விதவிதமாய் புகைப்படங்கள்....பார்த்துக்கொண்டே வந்தவள் ஒரு புகைப்படத்தைப் பார்த்ததும் நிமிர்ந்து இவளைப் பார்த்தாள். அது கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு குரூப் போட்டோ. அதில் ஒரே ஒரு முகத்தின் மேல் மட்டும் கருப்பு மை பூசப்பட்டிருந்தது. சின்னு நிமிர்ந்து புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.

”ஏன் இப்படி கிறுக்கி வச்சுருக்கே?’’

‘’அது எதுக்கு இனிமே? பழசை நினைவுபடுத்தும் எதுவுமே வேணாம்  அதான் கருப்புப்பேனாவால் கிறுக்கி முகத்தை மறைச்சு வச்சிருக்கேன். கிழிச்சுப் போட்டுடலாம்னு நினைச்சேன். ஆனா மத்தவங்க முகத்தை நான் பார்க்கணுமில்லையா? அதனால தான் வச்சிருக்கேன்’’

அனு சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டு கொஞ்ச நேரத்தில் உறங்கிப் போனாள்.  

கனவு காணத் தொடங்கினாள் அனு. கனவில் ஜேம்ஸ் தூரத்தில் புள்ளியாய்த் தெரிய, செல்வி சற்று தொலைவில் நிற்கிறாள். சீனு இவளைப் பார்த்து புன்னகைத்து அருகில் வந்து அவள் கரத்தை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திக் கொள்கிறான். ஒரு வெப்பக்கடத்தி போல அவன் கைகளின் சூடு இவள் உடலில் பரவ, நிஜத்தில் இவள் உடல் சிலிர்த்தது. சட்டென்று சீனு காணாமல் போய்... அம்மாவும் அப்பாவும! இவளைக் கண்டதும் வழக்கம் போல அழுகிறார்கள். 

கனவு நீண்டு கொண்டிருக்கிறது!

4 comments:

  1. நர்த்தகி பட கரு போல!!!

    ReplyDelete
  2. எதோ குடும்ப பாசமோ என்று பிந்தொடர்ந்தால் மிகப்பெரிய அடிகத்திருக்கிறது.அடர்த்தியான கதை.

    ReplyDelete
  3. ரொம்ம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு அக்கா:)

    ReplyDelete