Friday, April 05, 2013

’பூவுலகு’ இதழ் - சில கவிதைகள்


வனமாகி...

வனத்தின் புன்னகையை
காட்சியாக்கிய
பசும் இலையொன்று
சருகாகி வீழ்ந்தது.
அப்போது எழுதியது
வனத்தின் கண்ணீரை.

பறவைகளின் இசையும்
விலங்குகளின் அரவமும்
மரங்களும் அற்ற
நிலத்தை எப்படி வனமென்பது?
பாலைவனம் என்றது
வனதேவதையின் குரல்
இனி அவளுக்கும்
பாலைவன தேவதை என்று பெயர்

****
நந்தவனம்

இப்போதெல்லாம்
நந்தவனத்துக்கு காதலர்கள்
வருகை தருவதில்லை
எப்போதாவது மலர்கள் மலர்கையில்
வீசுகிறது கந்தக மணம்
இலை தழைகளை உண்ட கால்நடைகள்
போதையில் தள்ளாடி நடக்கின்றன
நந்தவனத்து மரங்களே
சுள்ளிகளானதை திகைக்கின்றனர் ஆட்டிடையர்கள்
காற்று வாங்க வந்தோருக்கு
இதுவரை வந்து சென்ற காதலர்களின்
பெருமூச்சுகள் தொகுத்துத் தரப்படுகின்றன
கவியெழுத வந்தோருக்கு
கருகிய புல்வெளி பரிசளிக்கப்பட்டது
நந்தவனம் ஆளரவமற்றுப் போகிறது

பசுந்தளிரின் மின்னும் வண்ணத்தை
மனதிலிருத்தி வருகிறதங்கே
ஒரு மழலைக்கூட்டம்
சருகுகள் காற்றில் சலசலக்க
கருஞ்செடியொன்றைத் தொடுகிறதொரு குழந்தை
புல்வெளியில் தன் கால்பதித்து
நடக்கிறதொரு மழலை
பிறிதொரு பிள்ளை
புல்லின் நுனியொன்றைத் தொட
அங்கே முளைக்கிறது
புத்தம்புது பனித்துளியொன்று
மகரந்த மணம் பரவி
பூக்கத் தொடங்குகிறது நந்தவனம்

*****

தனித்தலையும் ஒற்றைமேகம்

முகிற்கூட்டத்திலிருந்து
தனித்தலையும் ஒற்றை மேகம் நான்
மேகக்கூட்டம் நோக்கி பயணிக்கிறேன்.
அவையோ வேறு திசை நோக்கி விரைகின்றன
சந்திரனை நோக்கி
வேகத்தைக் கூட்டி நகர்கிறேன்
நெருங்கிய நொடியில் தொடங்கியது
என் வருகை சந்திரனை மறைக்கிறதென்ற குற்றச்சாட்டு
சந்திரனை கடந்து போகிறேன்
தனிமையிருள் படர
கருமுகிலாய் உருவெடுக்கிறேன்..
காற்று மோத
கலைந்து நீர்த்திவலைகளாகி
பாதாளம் நோக்கிப் பாய்கிறேன்.
ஆதராவாய்த் தாங்கி எனை உள்ளிழுத்து
பாதுகாத்துப் பொத்தி வைக்கிறது பூமி.

3 comments:

  1. அனைத்தும் அருமை...

    நந்தவனம் மிகவும் பிடித்தது...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இனி நந்தவனங்கள் நமக்கு இல்லை
    மரங்கள் மனிதருக்கு மட்டுமல்ல
    விலங்குகளுக்கும் இல்லை
    அருமையான கவிதைகள்
    வாழ்த்துக்கள்

    சௌந்தர மகாதேவன்

    ReplyDelete
  3. இனி நந்தவனங்கள் நமக்கு இல்லை
    மரங்கள் மனிதருக்கு மட்டுமல்ல
    விலங்குகளுக்கும் இல்லை
    அருமையான கவிதைகள்
    வாழ்த்துக்கள்

    சௌந்தர மகாதேவன்

    ReplyDelete