Tuesday, August 06, 2013

கூடங்குளம் - மக்கள் மீதான வழக்குகள் - ‘மற்றும் பலர்’ விடுபடுவார்களா?

இடிந்தகரையைச் சேர்ந்த கிஷன் பாலிடெக்னிக் படித்து வந்த மாணவன். 2012 செப்டம்பர் 10 அன்று கூடங்குளம் அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் காவல்துறை கண்ணீர்ப்புகை வீசியது. பலரை கைது செய்தது. அன்றைக்கு நடந்த களேபரங்களுக்கிடையில் சிக்கி ஒரு வீட்டில் பயத்தில் ஒளிந்துகொண்டிருந்த கிஷனை காவல்துறை கைது செய்தது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட கிஷன் சில நாட்கள் கழித்து பிணையில் வந்தான். ’’நாங்க அணு உலை வேணாம்னு உண்ணாவிரதம் இருந்தோம். அரசாங்கத்துக்கு எதிராக போராடினோம். அது எப்படி தேச துரோகம்? நிஜமாவே எனக்குத் தெரியல. கைது பண்ணின பின்னால் மன உளைச்சல் அதிகமாச்சு. படிக்க முடியலை. இப்போ அப்பாகூட சேர்ந்து கடல் தொழிலுக்குப் போறேன்.’’ என்கிறான்.

படிக்கும் வயதில் ஒரு மாணவனை படிக்கவிடாமல் கடலுக்கு துரத்தியது எது? கடந்த ஆண்டு செப்டம்பரில் காவல்துறை ஊருக்குள் நுழைந்ததை அடுத்து நடந்த நிகழ்வுகளால் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை மாணவர்கள். இடிந்தகரை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது. பேருந்து இல்லை. உணவுப்பொருட்கள் இல்லை என்று ஒரு சகஜமான நிலைமை இல்லாமல் இருந்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் மற்ற மாணவர்கள் கல்வியைத் தொடர, கிஷனுக்கு மட்டும் ஏன் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலைமை? காவல்துறை போட்ட வழக்கும், கைது நடவடிக்கையும், சிறைவாசமும் கிஷனை மீன்பிடி தொழிலுக்கு அனுப்பிவிட்டது.

கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் அந்தப் பகுதி மக்கள் மீது போடப்பட்டுள்ள இதுபோன்ற வழக்குகளை திரும்பப் பெறுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அணு உலை திறக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது தமிழக அரசு மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கவேண்டும் என்று கூறியது உச்ச நீதிமன்றன். மேலும் 15 பரிந்துரைகள் செய்திருந்தது. அதையெல்லாம் நிறைவேற்றிவிட்டுத்தான் அணு உலை திறக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தது. சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கவேண்டும் என்பது உட்பட 15 கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லியிருந்தது உச்ச நீதிமன்றம். ஆனால் இவற்றை நிறைவேற்றாமலேயே அணு உலை செயல்படத் தொடங்கியதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு வழக்குகளை திரும்பப் பெறப்போவதில்லை என்று கூறியது. மனுவை தள்ளுபடி செய்தாலும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து என்ன நினைக்கிறார்கள் கூடங்குளம் பகுதி மக்கள்?

வழக்கு தொடுக்கப்பட்டவர்களில் வயது முதிர்ந்தவர் குட்டப்புளியைச் சேர்ந்த சந்திரபோஸ். இவருக்கு வயது 71. ’’வயசான காலத்துல கூடங்குளம் போலிஸ் ஸ்டேஷன்ல போய் கையெழுத்து போடுறேன். நோய் வேற ஒரு பக்கம். ஒரே அலைச்சல். நான் படிக்காத பாமரன். என்மேல் என்னென்ன கேஸ் இருக்குன்னுகூட எனக்கு தெரியாது’’ என்கிறார் முதியவரான சந்திரபோஸ்.

கொலை முயற்சி, தேசத்துரோகம், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது, அரசுக்கு எதிரான யுத்தம் என்று விதவிதமான வழக்குகள். இப்படி 325 விதமான வழக்குகளில் எல்லோரையும் கைது செய்திருக்கிறது அரசு. ஒரே பகுதியைச் சேர்ந்த  2,27,000 பேர் மீது வழக்கு போடுவது உலகில் வேறெங்காவது நடந்திருக்குமா என்பது சந்தேகமே. 2012 மார்ச் மாதத்திலும் செப்டம்பரிலும் இரண்டு முறை கைதுகளும் வழக்கு போடுவதும் நடந்தன. குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டது உட்பட 266 பேரை கைது செய்தது காவல்துறை. இதில் 186 பேர் ஆண்கள். 51 பேர் பெண்கள். சிறுவர்கள் 4 பேர். இளைஞர்கள் 24 பேர். மனநலம் பாதித்த ஒருவரையும் கூட கைது செய்தது காவல்துறை.

‘’இப்படி எல்லாம் நடக்குமா என்றுகூட புதிராக இருக்கும் வகையில் இங்கே பல விஷயங்கள் நடந்துள்ளன. எடுத்துக்காட்டாக கணேசன் என்பவரின் மீது வழக்கு தொடுத்து கைது செய்தது காவல்துறை. அவரை பிணையில் எடுத்து 50 நாட்கள் அவர் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்ட நிலையில் மீண்டும் 25 வழக்குகளில் கைது செய்தது. அவரை பிணையில் எடுத்தால் மீண்டும் வேறு வழக்குகளில் கைது செய்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. ஆகவே கைது செய்தால் எல்லா வழக்குகளிலும் கைது செய்துகொள்ளட்டும் என்கிறோம். நினைத்து நினைத்து கைது செய்து சித்தரவதை செய்வதை காவல்துறை தொடர்ந்து செய்கிறது’’ என்கிறார் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்குழுவில் இருக்கும் முகிலன். ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையிலும் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயருடன் சேர்த்து ‘மற்றும் பலர்’ என்று 2000 பேர் அல்லது 150 பேர் என்றுதான் இருக்கிறது. ஆகவே எப்போதுவேண்டுமானாலும் யாரைவேண்டுமானாலும் இந்த ‘மற்றும் பலர்’ என்கிற வகைக்குள் கொண்டுவந்து விடலாம் காவல்துறை என சுட்டிக்காட்டுகிறார் முகிலன்.

போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் சுந்தரி, செல்வி, சேவியரம்மா உள்ளிட்டோரை திருச்சி சிறையில் அடைத்தது அரசு. அங்கே அவர்களை நடத்திய விதம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்கிறார்கள் இந்தப் பெண்கள். ‘’6 மாசம் ஜெயிலில் இருந்தோம். இப்போதும் ஸ்டேஷன்ல கையெழுத்து போடுறோம். நான் மாவட்ட கலெக்டரை கடத்தியதாக வழக்கு போட்டிருக்கிறார்கள். யாராவது நம்புவார்களா? நான் கோர்ட்டில் நீதிபதியிடம் கேட்டேன். ஒரு சாதாரண மனுஷியான நானே மாவட்ட கலெக்டரை கடத்திவிட முடியுமென்றால், அந்தளவுக்குத்தான் அவருக்கே பாதுகாப்பு. அப்படியென்றால் இந்த அரசாங்கம் எப்படி எங்களைப் போன்ற சாமான்ய மக்களை காப்பாற்றும் என்று கேட்டேன்.’’ என்கிறார் சுந்தரி.

லூர்துமாதா ஆலயத்துக்கு முன்னால் சட்டவிரோதமாக கூடியது, அணு உலைக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியது, கலைந்து போக மறுத்தது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது என்று அநேகமாக பல முதல் தகவல் அறிக்கைகளிலும் இவை இடம்பெற்றுள்ளன. ’’பொது மக்களாகிய நாங்கள் அத்தனை பேரும் அங்கேதான் இருக்கையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது என்று வழக்கு தொடுப்பது எப்படி சரியாகும்’’ என்கிறார்கள் பகுதி மக்கள். மக்கள் மீது மட்டுமல்லாமல் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் போன்ற தலைவர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு இந்த விஷயத்தில் மௌனம் காப்பதில் வியப்பில்லை என்கிறார் இடிந்தகரையில் மளிகைக் கடை வைத்திருக்கும் ஆண்டனி கெபிஸ்டன் ஃபெர்னாண்டோ. ’’வழக்குகளை வாபஸ் பெறச் சொல்லி நீதிமன்றம்தான் உத்தரவிட்டிருக்கிறது. அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இப்போது அரசு எதுவும் செய்யாது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீனவ மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் என்று அறிவித்து மீனவ மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று ஒருவேளை திட்டமிடலாம். இது தெரியாதா என்ன? அத்துடன் அரசு போட்ட வழக்குகளை வாபஸ் பெற்றாலும், தனியாரை வைத்து போட்ட பல வழக்குகள் உள்ளன. அவற்றை என்ன செய்வது’’ என்று கேட்கிறார்.

அரசு தரப்பு என்ன செய்யப் போகிறது என்று அறிய உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது கூடங்குளம் வழக்குகள் தொடர்பான கேள்விகள் என்றவுடனேயே பிறகு தொடர்புகொள்வதாகக் கூறியவரை பிறகு தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த இதழ் அச்சேறும் வரை அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

(Courtesy : 'India Today')


No comments:

Post a Comment