Monday, September 23, 2013

ஒரு பக்க நீதி - பெண்களின் பாதுகாப்பு குறித்த நீதிபதி கிருபாகரனின் கருத்து

பெருகி வரும் பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் போக்கு பொதுச்சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. பெண் அணியும் உடை சரியில்லை; அவள் சென்ற நேரம் சரியில்லை; அவள் சென்ற இடம் சரியில்லை; என்று எல்லாவற்றையும் பெண்கள் மீது பழிபோட்டுவிடுவது தவறு செய்த ஆண்களை தப்பவிடுவதற்கு சமம். சாமானியர்கள் இப்படி சிந்திப்பதில் வியப்பில்லை. ஏனெனில் காலங்காலமாக அனைத்து பாலினத்தவருக்கும் ஊட்டப்படும் ஆணாதிக்கத்தின் விளைவுதான் இது. ஆனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரனும் இதே கருத்தை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. நாடு முழுவதுமிருந்து பெண்ணியவாதிகள் இவருடைய கருத்துக்கு கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் பெண்களுக்கான நீதிமன்றத்தை திறந்துவைத்துப் பேசிய நீதிபதி கிருபாகரன் ‘’வீட்டில் மனைவி, சகோதரியை விரும்பும் ஆண் வெளியில் செல்லும்போது மிருகமாகி பெண்கள் மீதான பாலியல் வன்முறையைச் செய்கிறான்’’ என்று அத்தோடு நிறுத்தாமல் அடுத்துப் பேசியதே சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது. ‘’ஆண்கள் மட்டுமே நடக்கும் தவறுகளுக்கு காரணம் என்று சொல்ல முடியாது. சில சூழல்களில் பிரச்சனை வரும் என்று தெரிந்தே ஏன் அந்தச் சூழலுக்குச் சென்று தானாக மாட்டிக்கொள்ள வேண்டும்? டில்லி மாணவி தவறான நேரத்தில் பயணம் செய்ததும் அக்குற்றம் நிகழ காரணம். பெண்கள் தாங்களே சிக்கலை வரவழைத்துக்கொள்ள வேண்டாம்.’’ என்றார்.

இந்தச் செய்தி வெளிவந்தவுடன் பெண்ணியவாதிகளும், பெண்கள் இயக்கங்களும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தன. அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உ.வாசுகி நீதிபதி கிருபாகரனுக்கு கண்டனக் கடிதம் எழுதினார். இந்தியாவின் முதல் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரலான இந்திரா ஜெய்சிங், நீதிபதிகள் ஆணாதிக்கக் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று அறிவுரை வழங்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவத்திக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ’’நீதிமன்றங்களில் கூட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு நடத்தும்போது சில சமயங்களில் ஆண் நீதிபதிகள் ஆணாதிக்கத்துடன் பேசுவதும்,  ஒரு வேளை நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவற்றை பெண் வழக்கறிஞர்கள் பொறுத்துக்கொள்வதும் நடக்கிறது’’ என்று நீளும் அக்கடிதத்தின் நகல் சட்ட அமைச்சர் கபில் சிபலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பெண் வழக்கறிஞர்களை மரியாதையாக நடத்தும் நீதிபதி கிருபாகரன் பொது இடத்தில் இன்னும் கூடுதலான சமூக அக்கறையுடன் பேசியிருக்க வேண்டும் என்கிறார் வழக்கறிஞர்  அருள் மொழி. ‘’சில நீதிபதிகள் பெண்கள் குறித்து மோசமான கமெண்ட்டுகளை சொல்வதும் ஆனால் அவர்களே பெண்கள் குறித்த வழக்கில் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்வதும் உண்டு. அதுபோலவே பெண்களுக்கு ஆதரவாக உள்ள சிலர் தீர்ப்பில் பாதகமாகச் சொல்வதும் உண்டு. நீதிபதி பொது இடத்தில் கருத்து தெரிவிக்கையில் பிரச்சனையின் வீரியத்தை தெரிந்துகொண்டு கருத்து தெரிவிப்பது நல்லது. பொதுச் சமூகத்தில் வெளிப்படும் ஒரு மேம்போக்கான கருத்தை நீதிபதி பிரதிபலித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான கருத்துக்களால், நீதிமன்றத்தில் பெண்களுக்காக நல்ல தீர்ப்புகளைச் சொல்லும்போது அவை எடுபடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது’’ என்று இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.

’’பெண்களுக்கான நீதிமன்றத்தை திறந்துவைத்துப் பேசும் நீதிபதி! அச்சமில்லாமல் பெண்கள் தங்கள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து புகாரளிக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, தவறான நேரத்தில் வெளியே போகாதே என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? இந்திய அரசியலமைப்புச் சட்டம் நம்மை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் எந்த நேரத்திலும் பயணம் செய்யும் உரிமையை வழங்கி இருக்கிறது. ஆனால் இதை மறுக்கும் வகையில் நீதிபதி பேசியிருக்கிறார். இது குற்றவாளிகளுக்கு துணை போகும் பேச்சு. பெண்கள் பொது இடத்துக்கு தைரியமாகச் செல்லும் வகையில் அந்த இடத்தை பாதுகாப்பாக ஆக்கித்தருவது சமூகத்தின் கடமை. ஆனால் ஓரிடத்துக்கு, இந்த நேரத்தில் போகாதே என்று கூறுவது அபத்தம். பெண்கள் செல்போன் வைத்துக்கொள்ளகூடாது. சூரிய அஸ்தமனத்துக்குப் பின் வெளியே வரக் கூடாது போன்ற கருத்துக்கள் எல்லாமே பெண்ணின் உரிமையான தகவல் தொடர்பை பாதிக்கின்றன.’’ என்று உ.வாசுகி இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.

டில்லி, மும்பை சம்பவங்களில் ஊடகங்கள் கூட அப்பெண்கள் ஆண் நண்பருடன் வெளியில் சென்றதாகவே தெரிவிக்கின்றன. ‘நண்பர்’ என்று சொல்லாமல் ‘ஆண் நண்பர்’ என்று கூறுவதன் மூலம் பொதுமக்களின் உளவியலுக்குள் இந்தப் பெண்கள் அங்கே இன்னொரு ஆணுடன் சென்றது தவறு என்கிற கருத்தை மறைமுகமாக கொண்டு சேர்க்கின்றன. ஒரு தோழியோடு அப்பெண்கள் போயிருந்தால் ‘பெண் நண்பருடன்’ என்று எழுத மாட்டார்கள் அல்லவா? இப்படியான செய்திகள் வெளிவருவதும், நீதிபதி கூறியது போன்ற கருத்துக்களும் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும். பிரச்சனைகளை உலகுக்குச் சொல்லும் ஊடகங்களும், நீதித்துறை ஜாம்பவான்களும் பெண்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் ஜாக்கிரதையாக சமூகப் பொறுப்புடன் தெரிவிக்கவில்லையெனில் கடுமையான கண்டனங்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

(நன்றி : இந்தியா டுடே)





2 comments:

  1. அவர் என்ன தவறாக கூறிவிட்டார்??? பெண்கள் உடல்ரிதியகாகவும் மனரிதியாகவும் பலவினமானவர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.... பெண்கள் சூழ்நிலை அறிந்து... நேரம் அறிந்து செல்லுங்கள் என அறிவுரை கூறுவது தவறா????

    ReplyDelete
  2. Nagarajan11:12 am

    வணக்கம்.

    முதலில் ஒரு வேண்டுகோள். உங்கள் கட்டுரைக்கு மறுப்பு தெரிவிப்பதால் 'ஆணாதிக்கவாதி' என்ற முத்திரை குத்திவிட வேண்டாம்.

    எனக்குத் தோன்றும் சில முரண்பாடுகளை இங்கு பட்டியலிடுகிறேன். முடிந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.

    1. பாலியல் குற்றங்கள் பெருகி வரவில்லை. பெண்களை ஒரு வஸ்துவாய் மனித குலம் பாவிக்கத் தொடங்கியது முதல் - அதாவது ஆதி காலம் முதல் - பாலியல் குற்றங்கள் என்பது தொடர்கதையாகத்தான் உள்ளது. அவை குற்றங்கள் என இனங்காணப்படுவதும், அவற்றை வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதும்தான் அதிகரித்துக் கொண்டு வருகிறது.

    2. பாதிக்கப்பட்ட பெண்களும் குற்றம் நடைபெறுவதற்கு ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக ஒருசில உண்மைகளைக் கூறினால், அதற்கு அந்த பெண்களைக் குற்றவாளிகள் என்று கூறுவதாக அர்த்தமா?
    அப்படியென்றால் கட்டுக்கட்டாய் பணத்தை, பார்த்தாலே தெரிகிற மாதிரி பையில் எடுத்துக்கொண்டு, பேய்கூட உதவிக்கு வரமுடியாத நள்ளிரவில், அசட்டையாய் அலைவதில் தவறில்லையா? அந்த கோட்டை (விட்ட) சாமியை யாரும் ஒரு வார்த்தை கூட கேட்கக் கூடாதா?

    (கற்பையும், பணத்தையும் ஒப்பிடுவதாக நினைக்க வேண்டாம். வேறு வழியில்லை, இந்த இரண்டுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் வேறு எதற்கும் இல்லை)

    சுதந்திரத்துக்கும், பாதுகாப்பு உணர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சுதந்திரத்துக்கு முன்பு 'பெண்' என்ற வார்த்தையை சேர்த்துவிட்டால், பாதுகாப்பு உணர்வே தேவையில்லை என்று அர்த்தமில்லை.

    எல்லோரும் இவ்வளவு படித்திருத்திருக்கிறீர்கள், உலகிலுள்ள எல்லா ஆண்களும் 100 சதவீதம் நல்லவர்களாக மாறுவது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது ஏன் யாருக்கும் புரியவில்லை.

    ஆடை சுதந்திரம் ஒருபுறம் இருக்கட்டும், எல்லோரும் சுடிதார் அணிந்திருக்கும் கூட்டத்தில் ஒரே ஒரு பாவாடை தாவணிப்பெண் திரும்பிப் பார்க்க வைப்பதில்லையா? இதுதான் கலாச்சாரம் என்ற மனதில் ஆழமாக வேரூன்றிய எண்ணங்களை க் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற வேண்டும், தாவணியிலிருந்து சுடிதாருக்கு மாறியது போல!

    எனக்குத் தெரியும்.., பெண்கள் objects-ஆக பார்க்கப்படும்வரை அவர்கள் இழுத்துப் போர்த்திக்கொண்டு வீட்டுக்குள் இருந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லைதான்.

    இருந்தாலும் 'இந்தப் பெண் சராசரிக்கும் அப்பாற்பட்டவள்' என்கிற எண்ணத்தை உண்டாக்கும் உடைகளுடன், தவறுகள் செய்வதற்கு தைரியம் கொடுக்கும் அரவமில்லாத இரவுகளில் பெண்கள் திரிவது, பசியிலிருக்கும் பூனைமுன் பால் கிண்ணத்தை வைத்துவிட்டு, பக்கத்தில் கூட நிற்காமல் சென்று விடுவதைப் போலத்தான்.

    தினம் ஆயிரக்கணக்கானவர்கள் கடந்து செல்லும் பொதுவழியில், அமைதியாகப் படுத்திருக்கும் நாய் கூட, இரவு 11:30-க்கு மேல் (வாட்ச் வைத்திருக்குமோ?) பக்கத்துத் தெரு ஆள் போனால் கூட பாதுகாப்பான தூரத்துக்கு ஓடிப்போய் பயங்கரமாய்க் குலைக்கிறதே அது ஏன்?

    பாதுகாப்பு உணர்வுதான்.

    பாதுகாப்பாக இருப்பதிலும், இருக்கச் சொல்வதிலும் தவறே இல்லை. உலகின் எல்லா பூனைகளையும் சைவமாகச் சொல்லி கட்டளையிடுவதைவிட அது எவ்வளவோ மேல்.

    எனது இந்தக் கருத்துக்கள் எடுபடும் என்ற நம்பிக்கையில் இவற்றை எழுதவில்லை. (நீதிபதி கிருபாகரனால் முடியாததா என்னால் முடிந்துவிடப் போகிறது) சும்மா ஒரு எழுத்து (தட்டெழுத்து?) பயிற்சிக்காகத்தான்!

    நன்றி.

    ReplyDelete