Thursday, October 10, 2013

மறைக்கப்பட்ட சகாப்தங்கள் - இந்திய சினிமா நூற்றாண்டு விழா

சினிமா நூற்றாண்டு விழா நடந்து முடிந்திருக்கிறது. பல்வேறு முணுமுணுப்புகள், சர்ச்சைகள், கருத்துவேறுபாடுகள் இவற்றுடன் கடந்த இந்த விழாவின் காட்சிகள் அனைத்தையும் தமிழக மக்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். திரைத்துறை பிரபலங்கள் பலரையும், சினிமா வரலாற்றில் மிக முக்கியமானவர்கள் பலரையும் விட்டுவிட்டதாகவும் சரியான முறையில் கௌரவப்படுத்தவில்லை என்பதும் பலருடைய வாதமாக இருக்கிறது. முழுவதும அரசியல் விழாவாக நடந்த இவ்விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார். கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்துகொண்டார். கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை. 1916ம் ஆண்டு தமிழின் முதல் சினிமாவான கீசகவதம் வெளியானதை வைத்து கணக்கிட்டால் 2016ல்தான் தமிழ்சினிமா நூற்றாண்டு வரும். இப்போது கொண்டாடப்பட்டது இந்திய சினிமாவின் நூற்றாண்டு. ஆனால் இந்திய சினிமாவை இவ்விழா பிரநிதித்துவப்படுத்தியதா என்பது கேள்விக்குறி. குறைந்தபட்சம் தமிழ் சினிமாவை சரியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

திரையில் தோன்றும் முகங்களுக்கு மட்டுமே இங்கே மதிப்பு அளிக்கப்படுகிறது; திரைக்குப் பின்னாலிருக்கும் கலைஞர்களை புறக்கணிப்பது சரியல்ல என்கிறார் திரைப்பட விமர்சகர் தியோடர் பாஸ்கரன்.  ’’இதுவும் இன்னொரு சினிமா கலை நிகழ்வாக மட்டும் முடிந்துபோனது. சினிமாவின் தரத்தை மேம்படுத்த அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. சினிமாவை பாதுகாக்க திட்டங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. சினிமாவின் மிகச் சிறந்த முன்னோடிகளை மறந்து, சிறந்த தமிழ்ப் படங்களை மறந்து வெறும் அரசியல் விழா எதற்கு? ஏதாவது விமர்சித்தால் இந்தக்கட்சிக்கு ஆதரவானவர் என்று முத்திரைகள் வேறு குத்தப்படுகிறது. கட்சிக்கு அப்பாற்பட்டு, தன் வசனம் மூலம் சினிமாவுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய கருணாநிதியை ஏன் மறந்தார்கள்? வெறும் நடிகர்கள் மேல் மட்டும்தான் கவனம் இருக்கிறது. ஆரம்பகால இயக்குநர்கள் ஒரு படத்தை எடுக்க என்ன பாடுபட்டிருப்பார்கள் தெரியுமா?’’ என்று வினவும் தியோடர் பாஸ்கரன் பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறையையும் தணிக்கையையும் தாண்டி படமெடுத்து தமிழ் சினிமாவை வளர்த்ததில் அன்றைய இயக்குநரகளுக்கு இருக்கும் பங்கை யாரும் அங்கீகரிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார். ராஜா சாண்டோ, நடராஜ முதலியார், ஏ.நாராயணன் போன்றோரின் சிறப்புகளை இந்த நூற்றாண்டுவிழாவின் மூலம் இன்றைய தலைமுறை அறிந்துகொள்ளச் செய்திருக்கவேண்டாமா என்கிறார். ’’இத்தனை ஆண்டுகளில் தேசிய விருது கிடைத்தது காஞ்சிவரம், மறுபக்கம் ஆகிய படங்களுக்குத்தான். சிறந்த இயக்குநர் விருது அகத்தியனுக்கும் லெனினுக்கும்தான் கிடைத்தது. ஆனால் இதுகுறித்து ஒரு குறிப்பும் இல்லை. அஞ்சல் துறை தமிழ் சினிமாவில் இதுவரை 50 பேருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இதுபோன்ற அரிய தகவல்களை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய விழாவாக நடந்திருக்கவேண்டிய விழா இது. நடனம், பாடல்கள் எல்லாம் சினிமாவின் கூறுகள்தான். ஆனால் அவை மட்டும் சினிமா அல்ல எனும்போது ஏன் இந்த விழாவில் இவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம்?’’ என்கிறார் தியோடர் பாஸ்கரன். இதையே எடிட்டர் லெனினும் கேட்கிறார். ‘’சினிமாவில்தான் நடனமும் பாடல்களும் வருகிறதே. இந்த மேடையிலும் அதேதானா? 20 நாட்கள் ரிகர்சலுக்கு ஆகும் செலவு எவ்வளவு? ஏன் இப்படி வீணாக செலவழிக்கவேண்டும்? அரசு அளித்த 10 கோடியில் என்ன செலவுகள் செய்யப்பட்டன என்று கணக்கு யாராவது சொல்வார்களா என்ன?’’ என்கிறார் கோபமாக.

தமிழ்சினிமா எப்போதுமே நாயக பிம்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த விழாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அதற்குள்ளும் கூட பழைய நடிகர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்கிறார் தியோடர் பாஸ்கரன். ‘’நடிப்புத் தொழிலை கேவலமாக நினைத்த காலத்தில் இந்தத் தொழிலை ஏற்றுக்கொண்டு சினிமாவின் வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு உரிய மரியாதை தரவேண்டாமா?’’ என்கிறார். கலை இயக்குநர் டிராட்ஸ்கி மருதுவும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார்.  ‘’இந்த சினிமா விழா தன்னிச்சையாக நடக்கவில்லை.  நடிகர்களை மட்டும் முன்னிறுத்துவது சரியான முறை அல்ல. திரைக்குப் பின்னால் உழைக்கும் மற்ற துறையினரை ஏன் கண்டுகொள்ளவே இல்லை. சினிமா என்றால் நடிகர்கள் மட்டும் இல்லையே? ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், கலை இயக்குநர்கள் என்று ஒரு படத்தின் வெற்றிக்கு உழைப்பவர்களை மறந்துவிட்டு இது என்ன விழா? ‘’ என்கிற டிராட்ஸ்கி மருது புதுமைப்பித்தன், வாசன் போல திரைத்துறைக்கு பங்களிப்பு செய்தவர்களையும் ஏதோ ஒரு வகையில் கௌரவித்திருக்கவேண்டும் என்கிறார். ”சினிமாவுக்கு வந்து சிறப்பான பங்களிப்பைச் செய்த ஜெயகாந்தன் போன்றோரை ஏன் அழைக்கவில்லை? சிறந்த படங்களை பாதுகாத்து வைக்க இங்கே எந்த ஏற்பாடும் இல்லை. அதற்காக ஏதாவது திட்டங்கள் இந்த நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்டதா? சினிமா குறித்த புத்தகங்களை சேமிக்கும் ஒரு அருங்காட்சியகம் இல்லை. சங்கீதத்துக்கும் இலக்கியத்துக்கும் இருப்பது போன்றதொரு ஆவணப்படுத்தும் ஏற்பாடு ஏன் சினிமாவுக்கு இல்லை?’’ என்று கேட்கிறார் தியோடார் பாஸ்கரன். உண்மையில் சினிமாவை ஆவணப்படுத்தி வைக்க அரசு எந்த ஈடுபாடும் காட்டவில்லை. பாலுமகேந்திராவின் வீடு, சந்தியாராகம் போன்ற படங்களின் மாஸ்டர் காப்பி வீணாகிவிட்டதாகக் கூறினார் பாலுமகேந்திரா. புத்தகங்களைக் காப்பாற்ற இருக்கும் நூலகங்கள் போல திரைப்படங்களைக் காப்பாற்ற எந்த ஏற்பாடும் இல்லை. சிறை படத்தின் இயக்குநர் ஆர்.சி.சக்தியை அண்மையில் சந்தித்த தியோடர் பாஸ்கரன் அவருடைய தற்போதைய நிலை குறித்து கவலைப்பட யாருமில்லை என்கிற சூழலில் இந்தக் கொண்டாட்டங்களுக்கு பதில் அவர்களுக்கான திட்டங்கள் எதையாவது இந்த 10 கோடியை வைத்து செய்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார். அண்மையில் இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் துணை இயக்குநர்களுக்கு ஊதியத்தை முறைப்படுத்த பரிந்துரைக்கப் போவதாக அறிவித்திருந்ததையடுத்து வறுமையில் வாடும் துணை இயக்குநர்களின் மீட்சிக்கும் வழி ஏதும் அறிவிக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பும் பொய்யானது. திரைப்பட ஆய்வு நூல்களை எழுதி தேசிய விருது பெற்ற அறந்தை நாராயணன், தியோடர் பாஸ்கரன், ஜீவானந்தன், ரூபா சுவாமிநாதன் ஆகியோரையும் இவ்விழா புறக்கணித்திருக்கிறது.

‘’தமிழர் வாழ்வியலை தமிழ் சினிமா எப்படி எல்லா காலத்திலும் காண்பித்தது என்பது குறித்த புரிதலை இந்த விழாவின் மூலம் இச்சமூகத்திற்கு விளக்க கிடைத்த வாய்ப்பு தவறவிடப்பட்டது. ஒருவருக்கு ஒருவர் தாஜா செய்வதுதான் இங்கே நடந்திருக்கிறது. திமுக, அதிமுக என்று மட்டுமே சுருக்கிப் பார்க்க முடியுமா சினிமாவை?’’ என்கிறார் டிராட்ஸ்கி மருது.

’’இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பாரபட்சமாக நடக்கிறது. சினிமாவுக்காக கடுமையாக உழைத்த நாங்கள் என்ன முட்டாள்களா? என் தாத்தா இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.சுப்பிரமணியம். அவர் பிலிம் சேம்பரை தோற்றுவித்தவர்களில் ஒருவர். என் தந்தை புகழ்பெற்ற நடன இயக்குநர். 50 ஆண்டுகளாக 1600 படங்கள் வரை நடன இயக்கம் செய்திருக்கிறார். அவருடைய பெயரை நடன இயக்குநர்கள் சங்கம் விருதுக்காக பரிந்துரை செய்து அனுப்பியதாக விழா ஏற்பாட்டாளர்களிடமிருந்து கடிதம் வந்தது. விருது பெற தயாராக வருமாறு தகவல் வேறு வந்தது. ஆனால், விழாவுக்கு அழைப்பு கூட இல்லை’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் காயத்ரி ரகுராம். நடன இயக்குநர்கள் பிருந்தா, கலா ஆகியோரும் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. கலா கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி நடத்துவதுதான் புறக்கணிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது

‘’கோளாறுகள் அனைத்திற்கும் பிலிம் சேம்பரையும், தயாரிப்பாளர் கவுன்சிலையும்தான் கேள்வி கேட்கவேண்டும்.  இந்த வயதிலும் கருணாநிதி எழுதுகிறார். வைரமுத்து, பா.விஜய், அப்துல் ரகுமான் போன்ற அவருக்கு நெருக்கமானவர்கள் கூட அவரை புறக்கணித்தது குறித்து கேள்வி கேட்கவில்லை. நான் கேயாரிடம் கேட்டால், அந்த ஆட்சியிலும்தான் விழா நடந்தது என்கிறார். அது ஒன்றும் நூற்றாண்டு விழா இல்லையே? ஆட்டம் பாட்டம் என்று  10 கோடி அரசுப்பணம் வீணானதுதான் மிச்சம். நான் சினிமாக்காரன் மட்டுமில்லை. பொறுப்புள்ள மனிதனாக என்னால் பல கேள்விகளைக்கேட்க முடியும். 10 கோடியை இதற்குத் தந்ததற்கு ஏதாவது ஒரு பகுதியில் சரியான முறையில் சாலைகளைப்போட செலவு செய்திருந்தால் உருப்படியாய் இருந்திருக்கும்’’ என்கிறார் லெனின்.

(நன்றி : இந்தியா டுடே)




1 comment: