மீளாத்துயர்க்கடலில்
திக்கறியாமல் தத்தளிக்கிறேன்
துயரத்தின் நீலம் சுற்றிச்சூழ
கரங்களை துயர்நீரில் தடைபடாமல்
காற்றின் குறுக்கே வீச முயன்று தோற்கிறேன்.
கரை தென்படாமல்
தொடுவானம் வரை
துயரத்தின் உவர்ப்பு நீலநிறத்தில்
பேரலையாய் நினைவுகள் எழும்பி மோத
நினைவிழக்கிறேன்.
கண்விழிக்கையில்
சமதளத்தில் என் உடல்
கரங்களை வீசுகிறேன்.
துயர்நீர் தட்டுப்படவில்லை.
காற்றில் அலைகின்றன கரங்கள்
கோப்பையில்
துயரக்கலப்படமில்லா
நீலநிறமற்ற நீர்
பாய்ந்து பருகுகிறேன்.
அடைத்த செவிகளில்
இதுவரை ஒலித்த ரீங்காரம்
காணாமல் போன நொடியில்
பேரிரைச்சலொன்று செவிப்பறையைத் தாக்க
சுற்றிலும் துயரத்தின் பேரலைகள்
நினைவுகளாய் மோதும் பெருஞ்சத்தம்
நீலநிற கண்ணீரின் ஆழத்தில்
கண்ணாடி அறையில் நான்
சுவர்களை துளைத்து துயரைக் கடந்து ஊடுருவும்
என் விழிகளுக்கு
கரை தென்படவில்லை
இம்முறை தொடுவானமும்கூட.
பேரலை பொங்கி மோத
மீண்டும் நினைவிழக்கிறேன்.
இப்போது கண்விழிக்கையில்
மண் தரையில் என் உடல்
துயரத்தின் உவர்ப்பில்லை
நினைவுகளாய் பேரலைகள் இல்லை
கரங்களை அசைக்கிறேன்
காற்றில் சப்தமெழுப்பி அலைகின்றன அவை
மகிழ்ச்சி பொங்க
எழுந்து கால்களை ஊன்ற எத்தனிக்கிறேன்
நிலைதடுமாறி வீழ்கிறேன்
ஒரு உயிரற்ற உடல்மீது
நாசிக்குள் மயிர் கருகிய மணம்
குருதியின் வாடை
தொடுவானம் வரை மனிதஉடல்க்ளும் சதைக்கூழமும்
தொலைவிலே துப்பாக்கிகளின் ஓசை
மனிதர்களின் பேரவலக் குரல்கள்
காலடியில் குண்டுகளின் அதிர்வு
துப்பாக்கிகள் மௌனிக்கும் ஓசையும்
துல்லியமாய் கேட்கிறது
கூடுகளிலிருந்து உயிர்பறவை சிறகடிக்கும் சப்தமும்
செவிவழி பாய்ந்து இதயத்தை தைக்கிறது
கண்ணெதிரே துயர்நீரின் கடல்
இப்போது செந்நிறத்தில்
நீலநிறத்தினதைவிடப் பெரியதாய்
கண்ணீர் நதியாயய் பெருக்கெடுத்து
நிறபேதமின்றி செங்கடலோடு கலக்கிறது.
உள்ளிருந்தும் புறத்தேயிருந்தும்
துரோகத்தின் நாற்றம்
காற்றில் பரவி மூச்சையடைக்க
இம்முறையும் நினைவிழக்கிறேன்
மீண்டும் கண்விழிக்கையில்
அதே பழைய நீலநிற துயர்நீர்
இப்போதும் பேரலையாய் துன்ப நினைவுகள்
இம்முறையும் திக்கறியாமலிருக்கிறேன்.
இனி
விழிகளால் ஊடுருவி
தேடப்போவதில்லை
தொடுவானத்தையோ கரையையோ.
செங்கடலைப் போலல்ல
நீலக்கடலில் ஒரு துரும்பாயினும்
கிட்டிவிடும் தப்பிக்க!
- கவின் மலர்
(’தலித் முரசு’ மே, 2010 இதழில் வெளியானது)
நன்றாக எழுத முயற்சிக்கவும், முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDelete/////சைதை ஜெ,
//செங்கடலைப் போலல்ல
ReplyDeleteநீலக்கடலில் ஒரு துரும்பாயினும்
கிட்டிவிடும் தப்பிக்க!//
கவிதை அருமை.வாழ்த்துக்கள்
@ சைதை ஜெ
ReplyDeleteநன்றி தோழர்! முயற்சிக்கிறேன்.
@ மதுரை சரவணன்
மிக்க ந்ன்றி!!!