Thursday, June 23, 2011

அவன் - இவன்


என் மனதுக்கு நெருக்கமான அபிமான இயக்குநர்களாக நான் வரித்திருந்த அத்தனை பேரையும் ஒரே படத்தில் தூக்கி எறிந்தார் பாலா. ’சேது’ என்றொரு படம் வந்ததே தெரியாமல் இருந்தது. தோழர் பாரதி கிருஷ்ணகுமார் “சேது என்றொரு படம். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். பார்த்து மனம் கனமாகி விட்டது” என்று கூறினார்.  அதன்பின்னர் தான் அப்படியொரு படம் வந்ததே எனக்குத் தெரியும். திரையரங்கிற்குச் சென்று ’சேது’ பார்த்துவிட்டு அந்த உச்சகட்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து விடுதி வரை எதுவும் யாரோடும் பேசாமல் வீடு திரும்பியது இன்னும் நினைவில் இருக்கிறது. அதே அதிர்ச்சியைத்தான் இன்று “அவன் - இவன்’’ கொடுத்திருக்கிறது. எந்த வகையிலும் தேறாத ஒரு படத்தைக் கொடுக்க பாலாவால் முடியுமா?

“அவன் - இவன்” படம் தனியாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் திரைக்கு வெளியே தனியாக இருக்கிறோம். ஒரு காட்சியில் கூட ஒன்ற முடியவில்லை. இடைவேளை வந்தபோது “இந்தப் படத்தை இயக்கியது பாலாதானா?” என்கிற சந்தேகம் வந்தது. காமெடி சுத்தமாக கைகூடவில்லை. இடைவேளைக்குப் பின்னரான வழக்கமான பாலா படத்தில் வரும் வில்லனை கதாநாயகனுக்கு நெருக்கமான ஒருவரை கொடூரமாகக் கொல்வது. அதற்கு கோரமாக பழிவாங்குவது என்கிற ஃபார்முலா வந்து இது பாலா படம் தான் எனக் காட்டிக் கொடுக்கிறது. 

எங்கே இப்படியொரு கிராமம் இருக்கிறதோ? எல்லாம் அந்நியமாய் இருக்கிறது. பாத்திரப்படைப்பில் இருந்து எல்லாமே...! யுவன் சங்கர் பாவம்..அவரும் என்ன செய்வார்..? இப்படியொரு படத்தில் ஸ்கோர் செய்ய அவருக்கு இடமே இல்லை. காட்சிகளெல்லாம் வழ வழாவென்று போய்க்கொண்டிருப்பதால் அவரும் அலுப்பில் எதையோ அடித்து வைத்துள்ளார். என்னதான் ஆர்யா, விஷால், ஜி.எம்.குமார் எல்லோரும் உயிரைக்கொடுத்து நடித்திருந்தாலும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர். அதிலும் அந்த அகரம் ஃபவுண்டேஷன் காட்சியில் விஷால் அப்படி நடித்தும் அந்தக் காட்சி துருத்திக்கொண்டு தெரிவதால் ஒட்டவே முடியாமல் போகிறது. 

மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்றால் அத்தனை கேவலமா உங்களுக்கு? மாட்டுக்கறி விற்பவர் தான் வில்லன். அவர் தொழிலில் மண் அள்ளிப் போடுபவர் நல்லவர். அப்படித்தானே? இந்த கோமாதா பாலிடிக்ஸ் பார்க்கையில் வயிறு பற்றி எரிகிறது. ப்ளூகிராஸ் பாணியில் பிராணிகளை சித்திரவதை செய்யக்கூடாது என்றுதான் சொல்லி இருக்கிறேன் என்றெல்லாம் சமாதானம் சொல்ல முடியாது. அப்படியான ஒரு வசனமோ காட்சியோ படத்தில் இல்லை. படத்தில் மாட்டிறைச்சி விற்பவரைக் காட்டிக்கொடுப்பவர் வாழ்ந்து கெட்ட ஒரு ஜமீன்தார். அவரிடம் போய் கிராமத்து மக்கள் கொஞ்சிக்குலாவுகிறார்கள். இந்த வெட்டி ஜமீன் பரம்பரை பாசம், அவருக்காக பொங்குவது எல்லாமே கடும் எரிச்சலூட்டும் விஷயங்கள். 

அத்தோடு ஒரு வசனம்..”ஏதோ கோட்டாவில் இந்த வேலை கிடைச்சு வந்திருக்கேன்’’ அன்று போலீஸ் வேலைக்கு சற்றும் பொருந்தாமல் திருடியவனிடம் வந்து கெஞ்சும் கையாலாகாத பெண் போலீஸ் சொல்கிறார். போகிற போக்கில் என்னமாய் இடஒதுக்கீட்டை கிண்டல் செய்கிறார் பாலா?!!! எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்களின் மூலம்?  கோட்டா என்று ஒன்று இருப்பதே தெரியாத, முதல் தலைமுறையாக கல்வி கற்காத தலித் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

’சேது’ வந்தபோதே ”நந்தன்” இதழில் “ஆனா ரூனா” எழுதினார். ’ஒரு பாப்பாத்தியை காதலித்தவன் ஐயோ என்று போவான் என்று தான் படம் சொல்கிறது’ என்றார். இந்தளவுக்கு யோசிக்கணுமாஎன்று அன்றைக்கு யோசித்தேன். ஆமாம். யோசித்திருக்க வேண்டும் என்று “நான் கடவுள்” வந்த போது நினைத்தேன். நந்தாவில் ஈழத்தமிழருக்கு ஆதரவான குரல் தருகிறார் பாலா என்று சந்தோஷப்படும் அதே சமயத்தில் ராமேஸ்வரம் கடற்கரையில் ஒலிக்கும் சமஸ்கிருத மந்திர உச்சாடனங்கள் நெருடிக்கொண்டிருந்தன. ஆனாலும் பாலாவின் perfect shots வாயடைக்கச் செய்தன. ஜெயமோகனோடு சேர்ந்து கொடுத்த  “நான் கடவுள்” என்கிற ஆபத்தான படத்திலும் கூட ஒவ்வொரு ஷாட்டும் செதுக்கியது போன்றிருந்தது. இந்த அவன் - இவன் படத்தில் shot perfection கூட இல்லை.

’அவன் - இவன்’ - மிக மிகத் தவறான படம்.  ஆபத்தான படமும் கூட,  அழகியலிலும் அரசியலிலும்!

இனி...பாலாவிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்! 

6 comments:

  1. Anonymous1:37 pm

    பாத்திரங்களின் மனநிலையில் விமர்சனம் எழுதப்படுமா?
    -லியோமேடி

    ReplyDelete
  2. --’சேது’ பார்த்துவிட்டு அந்த உச்சகட்ட காட்சி கொடுத்த அதிர்ச்சியில் உறைந்து விடுதி வரை எதுவும் யாரோடும் பேசாமல் வீடு திரும்பியது இன்னும் நினைவில் இருக்கிறது.--


    *விடுதி* வரை எதுவும் யாரோடும் பேசாமல் *வீடு* திரும்பியது - இந்த வாக்கியம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.

    ReplyDelete
  3. //கோட்டா என்று ஒன்று இருப்பதே தெரியாத, முதல் தலைமுறையாக கல்வி கற்காத தலித் மக்கள் இன்னமும் இருக்கிறார்கள்//

    சென்னை நகரத்திலேயே உள்ளனர்.... ஹவுஸிங் போர்ட்டுகளிலும் மற்றும் கூவமோர குடிசைகளிலும்...

    காலுகாசு பாத்துட்டா மெசேஜ் சொல்ல வந்துருவாங்க

    ReplyDelete
  4. @krishna prabu
    appodhu naan vidudhiyil irundhen...podhuvaaga thirumbudhalai 'veedu thirumbudhal'endru sollum vazhakkathil ezhudhi vitten.

    ReplyDelete
  5. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
  6. இந்த மாதிரி விமர்சனத்தை இளையராஜா மேல கோடா சொல்லலாம், ஒரு கருத்த அப்படியே மாத்திக்காம இருக்க பாலா என்ன ஹாட் டிஸ்கா?

    ஸ்ரீனி

    ReplyDelete