Thursday, October 09, 2014

சுவர் எழுதும் சித்திரம் - மெட்ராஸ்

ஒரு சுவர், அதைச் சுற்றிய அரசியல், இழப்புகள், ரத்தம், காதல், கண்ணீர் என வடசென்னைக்கு உயிர் கொடுக்கும் கதை. 


கலை-இலக்கியத்திலும் வளர்ச்சியிலும் எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கும் வடசென்னையின் அசலான முகத்தை, அவர்களின் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாகச் சொல்கிறது ’மெட்ராஸ்’. அம்மக்களின் வாழ்முறை, காதல், கொண்டாட்டம், நடனம், இசை, விளையாட்டு, கல்வி என்று பலவற்றைப் பேசுகிறது படம். அவர்களை துருப்புச்சீட்டுகளாக பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்டு அரசியல்வாதிகளை நம்பும் அப்பாவி மக்களும் அவர்தம் எழுச்சியும் மிகத் துல்லியமாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஒரு வணிக படத்திற்குள் இத்தனை செய்ய முடியுமா என்று வியக்க வைக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.


வடசென்னை இளைஞனாக வரும் கார்த்தியின் உடல்மொழியும் பேச்சும் நடிப்பும் அபாரம் என்றாலும் பிறருடைய மொழிக்கும் இவருடைய மொழிக்கும் சற்றே வித்தியாசம் தெரிகிறது. கதாநாயகிதான் நமக்கு அந்நியமாகவே தெரிகிறார். காதல் காட்சிகள் கவிதை வாசிக்கும் இதத்தைத் தருகின்றன. நடிகர்கள் தேர்வில் முதிர்ச்சியால் மேரியும் அன்புவும் மாரியும் என்றென்றைக்கும் மறக்க முடியாத பாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள். இவர்களுக்கு இணையாக அந்த பிரம்மாணட சுவரும் ஒரு பாத்திரமாகி இருக்கிறது. அச்சுவரின் மீது காளி ஊற்றும் நீலநிற வர்ணம் பேசும் அரசியல்தான் எவ்வளவு நுட்பமானது!


வடசென்னை குறித்த இத்தனை நுட்பமான செய்திகளை காட்சியாக்கியதில் இப்படத்தை மிஞ்ச வேறு படமில்லை. ’சென்னை வடசென்னை’ பாடலில் கபிலனின் கொடி உயரப் பறக்கிறது. படத்தில் கானாபாலாவின் மரண கானா உண்டு. சந்தோஷ் நாரயணனின் பின்னணி இசை மிரட்டுகிறது. குறுகிய குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கிடையே புகுந்து வரும் கேமிரா படத்தின் தூண்களில் ஒன்று. நுண்ணரசியல் அறிந்தவர்களுக்கு இது ஓர் அரசியல் படம். அறியாதவர்களுக்கு இது ஒரு கார்த்தி படம் என்று ஒரு வணிகப் படத்தினூடாக அரசியலை மிக நுட்பமாக பிரச்சாரம் இல்லாதவாறு சொல்லும் அரிய கலையில் கைதேர்ந்திருக்கிறார் இயக்குநர்.அதற்கு சாட்சிதான் ஹோட்டல் காட்சியில் வரும் புத்தர் சிலை, நாயகியின் தந்தை அம்பேத்கர் நூல் வாசிப்பது, தீபாராதனையை மறுக்கும் நாயகி, ‘படைபலம் முக்கியம்’ என்ற வசனம் போன்றவை.  இறுதியில் குழந்தைகளிடம் நாயகன் பேசும் வசனம் மட்டும் விதிவிலக்கு. அட்டகத்தியிலிருந்து மெட்ராஸ் மூலம் பல மைல்களை கடந்து முன்னே சென்றிருக்கிறார் ரஞ்சித்.

(நன்றி : இந்தியா டுடே)

1 comment: