சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ள ஸ்பேசஸ் அரங்கில் பார்வையாளர்கள் உறைநிலையில் அமர்ந்திருக்கிறார்கள். பலருடைய விழிகளில் கண்ணீர். சற்று முன் நடந்துமுடிந்த அந்த நாடகத்தின் பாதிப்பை அனைவருடைய முகங்களிலும் காண முடிந்தது. பன்மை வழங்கிய ‘கலர் ஆஃப் டிரான்ஸ்” நாடகத்தின் முதல்
அளிக்கைக்குப் பின்னான காட்சிகள் இவை.
ஸ்மைலி என்கிற
லிவிங் ஸ்மைல்
வித்யா, ஏஞ்சல் கிளாடி, வினோதினி ஆகியோர் நடித்த
இந்த நாடகம்
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் வலிகளைப் பேசுகிறது. டிவைசிங் தியேட்டர் என்று
அழைக்கப்படும் முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த
நாடகம் ஒன்றரை
மணி நேரம்
நடக்கிறது. “டிவைசிங் தியேட்டர் என்றால், இதில் நடிக்கும் ஒவ்வொருவரும் அவரவருடைய பகுதியை அவரவரே
இயக்கவேண்டும். தனியாக இயக்குநர் என்று
ஒருவர் கிடையாது” என்று விளக்குகிறார் லிவிங் ஸ்மைல்
வித்யா. இந்த முறையில் நாடகத்தை உருவாக்கவேண்டும் என்கிற
எண்ணம் லிவிங்
ஸ்மைல் வித்யாவுக்கு தோன்றியபோது அவர்
லண்டனில் இருந்தார். “லண்டனில் அரங்கக் கலை தொடர்பான படிப்புக்காகச் சென்றிருந்தபோது அங்கு பாலியல் சிறுபான்மையினருக்கான விழாக்கள் பலவற்றுக்குச் சென்றேன். ஆனால் அங்கு
திருநங்கைகளும் திருநம்பிகளும் குறித்து விவாதிப்பது குறைவாக இருந்தது. சமபாலின ஈர்ப்புகொண்டோர் குறித்த பிரச்சனைகளே அதிகம் பேசப்பட்டன. ஆகவே இந்தியா திரும்பியதும் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான நாடகம்
ஒன்றை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம்
எனக்குள் இருந்தது.” என்கிறார்.
இந்தியா திரும்பியதும் அப்போது தென்கொரியாவுக்குச் சென்று அங்குள்ள நாடகக் குழுவினருடன் இணைந்து நாடகங்களில் நடித்த அனுபவம் பெற்று வந்த
ஏஞ்சல் கிளாடி
மற்றும் பல நாடகங்களில் நடித்த
அனுபவம் உள்ள
வினோதினி ஆகியோருடன் இணைந்து ஸ்மைலி
இந்த நாடகத்தை உருவாக்கியிருக்கிறார். ஸ்மைலி இயக்குநர் மிஷ்கினிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர். ஏஞ்சல் கிளாடி மிஷ்கினின் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் நடித்தவர். வினோதினி ‘எங்கேயும் எப்போதும்’, வருத்தப்படாத வாலிபர் சங்கம்,
ஜிகர்தண்டா போன்ற
படங்களில் நடித்தவர். இவர்களுக்கு இருக்கும் திரை அனுபவம் இந்நாடகத்திற்கு பயன்பட்டிருக்கிறது.
“என் கதையை நானே நடிப்பதென்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது” என்கிறார் ஏஞ்சல் கிளாடி.
பொதுவாக கதைகளை
அந்த கதாபாத்திரங்கள் சொல்லும். ஆனால் இந்நாடகத்தில் ஸ்மைலியின் கதையை அவருடைய தந்தை சொல்வதாக ஸ்மைலியே அப்பாத்திரமாகவும் ஒரு காட்சியில் மாறுகிறார். அதுபோல கிளாடியின் சகோதரர் சொல்வதுபோல கிளாடியே சகோதரர் பாத்திரமேற்றும் கிளாடியாகவும் மாறி
மாறி நடிக்கிறார். நாடகத்தின் தொடக்கத்தில் வரும் ராப்
பாடல் ஒன்றை
எழுதியவர் வினோதினி. “கூத்துக் கலையில் வந்தனம் பாடுவதுபோல இந்த நவீன
நாடகத்தில் பார்வையாளர்களை வரவேற்க பாடலை
ராப் பாணியில் எழுதினேன்.” என்கிறார் வினோதினி.
“சிவப்பு அந்த
நாளுக்கு முன்பு
வரை எனக்குப் பிடித்த நிறமாக
இருந்தது” என்று கிளாடி விவரிக்கும் அந்தக் காட்சி
வலி நிறைந்தது. பூனாவில் நேர்ந்ததை விவரிக்கும் காட்சியிலும் அதற்கு முந்தைய பாடலுக்கு ஸ்மைலி
காட்டும் முகபாவங்களிலும் நடிப்புத்திறன் அநாயாசமாக வெளிப்படுகிறது. கைத்தட்டல்களை அள்ளும் காட்சி
இது. ஒரு தீவிரமான வலி நிறைந்த கதைக்குள் பார்வையாளர்களை தன் இயல்பான நடிப்பின்மூலம் சிரிக்க வைக்கிறார் வினோதினி. ஸ்மைலியும் கிளாடியும் திருநங்கைகளாக நடிக்க, வினோதினி ஏற்ற பாத்திரம் திருநம்பியுடையது. ஒரு சில காட்சிகளுக்கு ஸ்பாட் லைட்
இருந்திருந்தால் காட்சிகள் இன்னும் உணர்வுபூர்வமாக இருந்திருக்கும். காணொளிகளை பயன்படுத்தியவிதமும் மேடையில் நடிகர்களின் உற்சாகமான பங்கேற்பும் கூடுதல் வலுசேர்ப்பவை.
தவறான அறுவைசிகிச்சையால் பரிசோதனை எலிகளாக மாற்றப்படுவதை, ஒரு வார்த்தைகூட பேசாமல் ஸ்மைலி மௌனமாகவே தன் துயரத்தை பார்வையாளர்களுக்குக் கடத்தும் காட்சியுடன் நிறைவடைகிறது நாடகம். மேடையில் திரை விழுமுன்னே நமக்கு கண்ணீரே திரையாகி மேடையை
மறைக்கிறது.
(நன்றி : இந்தியா டுடே)
நாடகத்தை பார்க்க இயலாத குறையை உங்கள் பதிவு நீக்கம் செய்து விட்டது கவின்
ReplyDelete