Tuesday, July 08, 2014

முண்டாசுப்பட்டி

பெயருக்கேற்றவாறு முண்டாசு அணிந்திருக்கும் ஆண்கள், நிழற்படம் எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கை, விண்கல்லின் ஒரு பகுதி விழுந்ததை வானமுனி என கடவுளாக்கி வழிபடும் மக்கள், பள்ளிக்கூடம் பக்கம் போனால் ரத்தக் காட்டேரி அடிக்கும் என நம்பும் அப்பாவிகள் என இந்த முண்டாசுப்பட்டியில் வாழ்பவர்களுக்கு ஒரு விதமான மூட நம்பிக்கைகள். இந்த மூட நம்பிக்கைகளை ஜல்லியாக்கி உடைத்து அதன் மேல் ஒரு ராஜபாட்டையைப் போட்டு கம்பீரமாக நடக்கிறார் இயக்குநர்.



இரண்டரை மணி நேரம் தன்னை மறந்து சிரிக்க உத்தரவாதம் உண்டு. திரையரங்கம் சில காட்சிகளில் சிரிப்பால் அதிர்வதால் அடுத்த காட்சியின் நகைச்சுவை தவற விடுகிறோம். திரைக்கதையிலும் வசனங்களிலும் இழையோடும் நகைச்சுவை படத்துடன் பார்வையாளர்களை ஒன்றச் செய்கிறது. ஒரு கட்டத்தில் ஒரு வசனத்தையும் தவற விடக்கூடாதென்று செவிகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறோம். அந்தளவுக்கான நகைச்சுவை விருந்து முண்டாசுப்பட்டி.

மனிதர்களின் மூட நம்பிக்கைகளை இதைவிட அழகாக யாரும் பகடி செய்துவிட முடியாது. கொஞ்சமும் பிரச்சார நெடியில்லாத ஒரு நாத்திகம் படத்தின் அடிநாதம். ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நாயகன், ஃபோட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையுடைய ஊரில் வாழும் நாயகி என்று வித்தியாசமான இணை. படம் முழுவதும் விஷ்ணுவும் அவருடைய நண்பர் காளி வெங்கட்டும் செய்யும் கலாட்டாக்கள் களைகட்டுகின்றன. ஆனால் படத்தின் துவக்கத்தில் வரும் ஃபோட்டோ ஸ்டுடியோ காட்சிகள் மட்டும் சற்று மெதுவாக நகர்கின்றன. அந்தக் காட்சிகளை மட்டும் மற்றவற்றைப் போல புதிதாக யோசித்திருக்கலாம். பள்ளிக்கூடத்துக்கு படம் எடுக்கச் சென்றவுடனேயே பறக்கத் தொடங்கும் படம். இறுதிவரை தரையிறங்கவே இல்லை.

‘விடிஞ்சாலும் விடிஞ்சிரும்’ என்கிற படத்தில் நடிக்கும் முண்டாசுப்பட்டியைச் சேர்ந்த முனிஸ்கானாக நடிக்கும் ராமதாஸுக்-க்கு மட்டும் ஃபோட்டோ பிடித்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கை இல்லை. அவர் பண்ணும் அட்டகாசங்களில் முண்டாசுப்பட்டி மக்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் கலகலத்துப் போகிறார்கள். மிகக் கூர்மையான வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம். ஆனால் அதே சமயத்தில் வசனமே இல்லாமல் பல காட்சிகள் சிரிப்பை அள்ளித் தெளிக்கின்றன. உதாரணமாக பறவையி ஒற்றைச்சிறகை நந்திதாவின் மேல் போடும் காட்சியில் அது வழிமாறி அவருடைய அப்பாவின் நாசி அருகே சென்று குறட்டை விடுகையில் மீண்டும் நந்திதாவுக்கே வரும் காட்சியைச் சொல்லலாம்.

இசையும் பாடல்களும் படத்தில் எங்கும் உறுத்தாதவண்ணம் வருகின்றன. ஆனால் விஷ்ணு நந்திதாவைப் பார்க்கும் ஆரம்பக் காட்சிகளில் வரும் பின்னணி இசை ‘நீர்ப்பறவை’ யின் ‘பற பற பறவையொன்று’ பாடலைப் போன்றே இருப்பது உறுத்தல். அதிலும் விஷ்ணு. இதிலும் விஷ்ணு. அதற்காகவாவது வேறு பின்னணி இசை முயன்றிருக்கலாம். சாவு வீட்டில் பாடப்படும் பாடலில் புதிய இசையமைப்பாளர் சியான் ரோல்டன் வெல்கிறார்.

80களில் நடப்பதாக வரும் கதையில் கலை இயக்குநரின் பங்குதான் அதிகம். வீடுகளில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் வைக்கக்கூடிய ஸ்டாண்ட், சுவர்க் கடிகாரம் முதல் கேமிரா, திரையரங்கம் வரை எல்லாமே பார்த்துப் பார்த்து கவனமாக செயல்பட்டிருக்கிறார்கள்.  வசனங்களில் 80களில் புழக்கத்தில் இல்லாமல் இப்போது மட்டுமே புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் சிலவும் வருகின்றன.

விஷ்ணுவைவிட அவருடை நண்பர் பாத்திரத்தில் வரும் காளிவெங்கட் கவர்கிறார். படத்தின் இறுதிக் காட்சி யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் அபாரமான க்ளைமாக்ஸ்தான். அதிலும் ஃபோட்டோ மூடநம்பிக்கை அற்ற ராமாதாசின் முகம் மட்டும் ஃபோட்டோவுக்குத் தெரிவதுடன் படம் முடிகிறது.

மனம் விட்டு சிரிக்க ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம் என்று சுருக்கி விடாதபடிக்கு உள்ளீடாக மூடநம்பிக்கைக்கு எதிரான படமாகவும் விளங்குகிறது. கலையும் அரசியலும் சரியான கலவையில் சேரும் படைப்பாகவும் மிளிர்கிறது.

(நன்றி : இந்தியா டுடே)




No comments:

Post a Comment