சென்ற
ஆண்டு மரணமடைந்த தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் முதலாண்டு
நினைவஞ்சலி நிகழ்வுக்காக ஊர் மக்கள் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆயுதங்கள்
வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 6 பேரையும் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டம்
பாய்த்தில் கைது செய்திருக்கிறது தர்மபுரி மாவட்ட காவல்துறை. அவர்கள் உள்ளூரில்
உள்ள வன்னிய சாதி தலைவர்களைக் கொல்லும் நோகக்த்தில் தலைமறைவாய் இருக்கும்
மாவோயிஸ்ட் இயக்கத்தினரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்று காவல்துறை குற்றம்
சாட்டுகிறது. ‘துடி’ இயக்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் அவர்கள்
அரக்கோணத்திலும், சென்னை மெரினா கடற்கரையிலும் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள்
என்றும் காவல்துறை கூறுகிறது.
அரக்கோணத்தில்
ஆயுதப் பயிற்சி எடுத்ததாக தர்மபுரி மாவட்ட காவல்துறை கூறுவதுகுறித்து அரக்கோணம்
உள்ள வேலூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் இந்தியா டுடே
பேசியபோது “இத்தகவலை உறுதிப்படுத்தவேண்டும். உறுதிப்படுத்தாமல் என்னால் எதுவும்
சொல்ல முடியாது” என்றார். “வேலூர் காவல்துறைக்கும் சென்னை காவல்துறைக்கும்
தெரியாமல் ஆயுதப் பயிற்சியை நத்தம் இளைஞர்கள் பெற்றார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார்
துடி இயக்கத்தின் காப்பாளர் கிறிஸ்துதாஸ் காந்தி. ”எங்கள் இயக்கம் இதுவரையில்
தலித் மக்களின் கல்விக்காக மட்டுமே பாடுபடும் ஓர் இயக்கம். ஆயுதப் போராட்டத்தில்
முற்றிலும் நம்பிக்கை இல்லாத இயக்கம். தேவையில்லாமல் ஒரு தலித் இயக்கத்தை நக்சல்
இயக்கம்போல சித்தரிப்பதன் மூலம் தலித்துகளுக்காக வேறெந்த அமைப்பும்
வேலைசெய்யக்கூடாது என்கிற எச்சரிக்கையை விடுக்கிறது காவல்துறை. இது வன்மையாக
கண்டிக்கத்தக்கது.” என்றார்.
இளவரசனின்
தந்தை இளங்கோவிடம் பேசியபோது “காவல்துறை. ஊரில் எல்லோரும் பதட்டத்தில்
இருக்கிறார்கள். யாரை எப்போது கைது செய்வார்கள் என்றே தெரியாமல் ஆண்கள் ஊருக்கு
வெளியே இருக்கிறார்கள். ஒரு நினைவஞ்சலி செலுத்த முயன்றால் தேசிய பாதுகாப்பு சட்டம்
போடுவது எந்த ஊரில் நடக்கும்?” என்றார். “இமானுவேல் சேகரனுடைய நினைவிடம்போல
இளவரசனுடைய நினைவிடம் தலித் மக்கள் ஆண்டுதோறும் வந்து அஞ்சலி செலுத்தும் இடமாக
மாறிவிடக்கூடாது என்று நினைக்கிறது காவல்துறை. அதனால்தான் இவ்வளவு செய்கிறது.
அஸ்ரா கர்க் தன் தலைமையிலான மாவட்டத்தில் நக்சல் இயக்கம் இல்லை என்று பிரச்சாரம்
செய்வதற்காகவே அரக்கோணத்திலும் சென்னை மெரினா கடற்கரையிலும் ஆயுதப் பயிற்சி நடந்ததாகக்
கூறுகிறார். நத்தம் கிராமத்திலிருந்து 50 பேரை அழைத்துக்கொண்டு வெளியேறி பயிற்சி
தரும்வரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டாக கிராமத்தில்
காவல்துறை குடியிருக்கிறதே? பிரிட்டிஷ் இந்தியாவில் கூட 144 தடைச் சட்டம் இவ்வளவு
நாட்கள் எங்கும் நீடித்ததில்லை. ஆண்டுக்கணக்கில் நீட்டிப்பது உரிமை மீறல். அதை
முதலில் திரும்பப் பெறவேண்டும்” என்கிறார் கிறிஸ்துதாஸ் காந்தி.
இது
குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் கள ஆய்வுக்குச் சென்று வந்த குழு
அண்மையில் விடுத்த அறிக்கை கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறது:1. நத்தம்
கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது
கைப்பற்றப்பட்டது? ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை? 2.கடந்த பல மாதங்களாக நத்தம் கிராமத்துக்கு
தீவிரவாதிகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும்
காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன்
இளவரசன் நினைவு நாள் வரும் வரை காத்திருந்தனர்? 3. இளவரசன் சமாதிக்கு அருகில்
கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது சமாதிக்கு வருபவர்களை
மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி
அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா? 4.மெரீனாவிலிருந்து ஆறு கி.மீ
தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா?
தருமபுரி காவல்துறை ஒரு வேளை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத்
துறைகளைக் கிண்டல் செய்கிறதா?
இக்கேள்விகளுக்கு
விடைதேடி தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்கை தொலைபேசியில் இரு முறை தொடர்புகொண்டபோதும் தானே அழைப்பதாகக் கூறியவர். இந்த இதழ் அச்சேறும் வரை தொடர்புகொள்ளவே இல்லை.
(நன்றி: இந்தியா டுடே)
சென்ற ஆண்டு மரணமடைந்த....?
ReplyDelete