Wednesday, April 14, 2010

பறவைகளை அண்டாத வாழ்வில்..






அவளுக்கு தொலைவிலிருந்து காணும்போது மட்டுமே
பறவைகள் அழகு!
அருகில் நெருங்கிவிட்டாலோ
மேனியெங்கும் மின்னலாய் அச்சம் பரவி
நகக்கண்ணின் ஊடாக வழிந்தோடும்.

அவளின் நினைவடுக்குகளில் ஒரு காட்சி..
பால்குடி மாறா பருவத்தில் ஒரு நாள்..
உண்ண மறுத்து கண்ணயர்ந்த ஒரு தருணத்தில்
நாசியிலும் நெற்றியிலும் வலியுணர்ந்து
கழுத்தில் பிறாண்டும் நகமுணர்ந்து
திடுமென விழிக்கையில்..
மிக அருகில்... மிக மிக அருகில்...அண்மைக்காட்சியாய்...
தாதிப்பெண் ஏவிய
ஒரு கோழியின் தலை.
அதிர்ந்தலறிய அவளின்  மழலைக் குரலோடு
சுருதிபேதமாய் கோழியின் கூக்குரலும் கலந்தது.
அன்று தொடங்கி...
அவள் உண்ண மறுக்கும்போதேல்லாம்
காது குடையும் கோழி இறகு
தாதிப்பெண்ணின் மிரட்டல் ஆயுதமானது.
உணவுக்கு பதில் அச்சத்தை ஊட்டினாள் தாதி.
கையகல கோழிக்குஞ்சும் சிட்டுக்குருவியும் மைனாவும் கூட
அவளுக்கு மரணபயத்தை அளிக்க..
ஒரு காகம் தலைக்கருகில் பறந்த நாள்
அவள் சுரத்தில் விழுந்தாள்.
அண்டை வீட்டின் கோழிக்குஞ்சுகளை
இரைக்கு தூக்கிச்சென்ற கழுகினத்தால்
அவள் அடைந்தது அருவருப்பின் உச்சம்!
இறந்த காகத்தின்  உடலை மிதித்த நாளில்
உண்ணவில்லை அவள்...
கருமைநிறம் கண்டபோதெல்லாம்
காகம் மிதித்ததாய் பீதி கொண்டாள்.
பறவை பொம்மைகள்  அவளிடம் என்றைக்குமிருந்ததில்லை.
கோழி இறைச்சியை தொட்டதே இல்லை.
ஆட்டிறைச்சி என்றெண்ணி உண்ட ஒரு நாளில்
உண்மை தெரிந்தபின்
உள்ளே சென்றதெல்லாம் வெளியே வந்தது
இவளின் அச்சத்தை பிறர் எள்ளிநகையாட..
இவளோ..அச்சப்படுவதற்கு அச்சப்படவேயில்லை.
பறவைகளை அண்டாத வாழ்வு அவளுடையது..

அவளுக்கு திருமணம்..
இத்தனை நாள் சேர்த்து வைத்த
மொத்த குடும்பத்தின் சேமிப்பனைத்தும்
அவளுக்கு சீருமாகவும் மணமகனுக்கு தங்கச்சங்கிலியாகவும் மின்ன..
ஊர்கூடி உறவினர் புடைசூழ மணமுடித்தபின்..
கடைக்கண்ணால் தன் வாழ்கைத்துணையை பார்க்க..
மிக அருகில்...  மிக மிக  அருகில்... அண்மைக்காட்சியாய்..
ஆறடி உயரத்தில்
பெயர் தெரியாத பறவை!

- கவின் மலர்

நன்றி -உயிர்மெய் சிறப்பிதழ் (2009-2010)



1 comment:

  1. //அண்மைக்காட்சியாய்..
    ஆறடி உயரத்தில்
    பெயர் தெரியாத பறவை!//

    அச்சமும்.... அப்டித்தானே... கவிதை நல்லாயிருக்குங்க....

    ReplyDelete