Wednesday, April 14, 2010

தூற்று.காம்

ஊர்கூடி பார்த்திருக்க நடுத்தெருவில் வீழ்த்தி
எம் பெண்களை வல்லாண்ட உம்மைக் கண்டு
மறைவிடம் ஓடியொளிந்த நாய்கள்
பிறிதொருபோதும் உம்முன்னே வருவதற்கஞ்சிய குற்றத்திற்காக
கைகால்கள் கட்டப்பட்டு
பனிப்பாளத்தின் மீது கிடத்தப்பட்டிருக்கிறேன்
பிணமென விரைக்கும் உடலுக்குள் கடுத்தேறுகிறது சில்லிப்பு
நடுங்கிச் சரிகிறது உயிர்

தண்ணீர் கேட்டால் மூத்திரம் பெய்வதும்
வாயைத் திறந்தால் மலம் திணிப்பதுமே
நாகரீகக் கனவான்களாகிய உமது வாடிக்கையென்பதால்
பசிதாகம் குறித்து புகாரிடாமல் மயக்கத்தில் வீழ்கிறேன்

சித்திரவதைகளை உணராமலே செத்துவிடக்கூடாதென்ற பயத்தில்
பந்தம் கொளுத்தி என்தலையைத் தீய்த்து
பிரக்ஞையின் எல்லைக்குள் இழுத்துப் போடுகிறீர்கள் என்னை

விசேஷமாய் பயிற்சி எடுத்தக் காவலரைப் போன்ற ஒருவன்
என் கால்களில் லாடமடித்துக் கொண்டிருக்கிறான்
நகங்களைப் பிடுங்கி எடுத்துவிட்டு
என் பற்களையும் பிடுங்கும் அவசரத்தில்
குறடு ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னொருவன் கையில்
வன்மங்களை நவீனமாய் தணிக்கத் தெரிந்த மற்றையவன்
வயர்களை என்குறியில் சுற்றி மின்னதிர்ச்சிக் கொடுக்கிறான்

அடுக்களையிலிருந்து டப்பர்வேருடன் வந்த
உங்கள் மனைவி/மகள்/ சகோதரி/ யாரோ ஒருத்தி
இந்தக் கண்களா எம்மை ஏறெடுத்துப் பார்த்தவையென
பலவந்தமாய் இமைபிரித்துத் தூவுகிறாள் மிளகாய்ப்பொடியை

கொத்தியெறிந்தது போக நினைவில் எஞ்சியிருக்கும் என்னைத்தாளாது
புதிய கொலையாயுதங்களை தேடிக்களைத்த உமது வாரீசுகள்
கணினியின் விசைப்பலகை அதிர்ந்திடாத வண்ணம்
மென்மையாக பதிவேற்றத் தொடங்குகின்றனர்
என்மீதான அவதூறுகளை.


- ஆதவன் தீட்சண்யா
14.04.2010


****************

No comments:

Post a Comment