Friday, October 14, 2011

முகவரியற்றவள்

எங்குமிருப்பேன்
நேற்று அங்கே
இன்று இங்கே
நாளை எங்காவது
நான்கு சுவர்களும் மேற்கூரையும்
எனக்கானதல்ல

அணை கட்ட முயல்கிறாய்
பாதாளத்தில் தள்ளுகிறாய்
மணலைத் தின்று செரிக்கும் சமுத்திரமும்
புதையல்களோடு வருபவளும் நான்

கருமையைப் பூசுகிறாய்
கடுங்குளிர் காற்றைத் திருப்புகிறாய்
இருள்
துருவப் பறவை
இரண்டும் நான்

புனைவுகளைத் தின்கிறாய்
புதைகுழிக்குள் தள்ளுகிறாய்
கனவுகளின் தொழிற்சாலை
ஈர்ப்பு விசைத் தத்துவத்திற்கு சவாலும் நான்



சுவாசத்தைத் திருடுகிறாய்
இடுகாட்டில் தள்ளுகிறாய்
சகல உயிர்களுக்குமான மூச்சுக் காற்றும்
எகிப்தியப் பிரமிடுகளில் வாழ்பவளும் நான்

அனலைக் கக்குகிறாய்
கிழிந்த என் உடுப்புகளை எள்ளி நகையாடுகிறாய்
அணைக்க முடியா நெருப்பும்
நிர்வாணசாந்தி அடைந்தவளும் நான்

எனக்கு முகவரியளிக்க முயல்கிறாய்
புவிக் கோளத்தின் கானகங்களில் வேட்டையாடி
இறைச்சியையும் காய்கனிகளையும் கொணர்ந்து
கார்முகிலில் நீரெடுத்து
சூரியனின் தகிப்பில் உணவு சமைத்து
சந்திரனின் முதுகிலமர்ந்து உண்டு களித்து
வெண் பஞ்சு மேகப் பொதிகளில் உறங்கியெழுந்து
நட்சத்திரங்களுக்கிடையே அண்டவெளியில் தாவி விளையாடி
கோள்களுக்கிடையே ஊஞ்சல் கட்டியாடுகையில்
மின்னல் விழுதைப் பிடித்து மீண்டும் பூமிக்கு வந்து
இப்பிரபஞ்சத்தை இணைப்பவள் நான்
பிரபஞ்சம் முழுவதும் என் வாழிடம்

என் காலத்தைப் பறிக்காதே
நானொரு சகாப்தம்.

8 comments:

  1. \\அனலைக் கக்குகிறாய்
    கிழிந்த என் உடுப்புகளை எள்ளி நகையாடுகிறாய்
    அணைக்க முடியா நெருப்பும்
    நிர்வாணசாந்தி அடைந்தவளும் நான்//


    நல்ல வரிகள், நல்ல கவிதை.

    ReplyDelete
  2. அருமையான கவிதை தோழர். இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு கூடுதலாக புகழ்கிறேன்.

    ReplyDelete
  3. என்ன சொல்ல அன்புத்தோழர்.
    வரிவரியாய் தத்தகிடதத்தோம் என்று செருக்குக்கொள்ளவைக்கிறது கவிதை.
    பாரதி காரணத்தோடே நினைவுக்குவருகிறான்.
    நல்லா இருக்குதோழர்.
    வாழ்த்துக்கள் தோழர்.

    ReplyDelete
  4. Anonymous4:53 pm

    "minnal vizhuthai pidiththu..
    meendum poomikku vanthu".....

    -arputhamaana 'kuriyeedu"..-

    --jallipatty palanisamy.

    ReplyDelete
  5. இப்போது எழுதிவைத்துக் கொள்ளுங்கள்:
    திசைகள் யாவும்
    இந்தக் கவிதையைத்
    திரும்பிப் பார்க்கும்.

    ..
    சூரியனின் தகிப்பில் உணவு சமைத்து
    சந்திரனின் முதுகிலமர்ந்து உண்டு களித்து
    வெண் பஞ்சு மேகப் பொதிகளில் உறங்கியெழுந்து
    நட்சத்திரங்களுக்கிடையே அண்டவெளியில்
    தாவி விளையாடி
    கோள்களுக்கிடையே ஊஞ்சல் கட்டி..

    நான் அண்மையில் படித்த கவிதைகளில்
    இப்படி ஒரு கவிதை
    என் விழித்திரைகளில்
    பிரபஞ்சக் காட்சிகளை விரிய வைத்ததில்லை.

    வேறுக் கிரக தோழர்களுடன்
    சிறகுகள் உரச பறந்து திரிந்த
    கனவுகளைப் பரிசளித்தற்கு நன்றி.
    ://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=18509&Itemid=164

    ReplyDelete
  6. YES!! சகாப்தம் is right on!!

    ReplyDelete
  7. வணக்கம். தங்கள் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
    வாசிக்க http://blogintamil.blogspot.com.au/2014/09/blog-post_18.html
    நன்றி.

    ReplyDelete
  8. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/09/blog-post_18.html?showComment=1411012022369#c8444431922796668986

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete