Saturday, August 04, 2012

டீச்சர்களுக்கும் டிரஸ்கோட்


மீபத்தில் கல்வித் துறையின் அறிக்கை ஒன்று கவனம் ஈர்த்தது. அதில் 'ஆசிரியர்கள் - ஆசிரியைகள் கண்ணியக் குறைவாகவும், மாணவ-மாணவிகள் இடையே ஏற்றத்தாழ்வையும், மனச் சலனத்தையும், தாழ்வுமனப்பான்மையையும், மரியாதைக் குறைவையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், குருவன்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கணித ஆசிரியை முத்துச்செல்விக்கு ஒரு மெமோ அளிக்கப்பட்டு இருக்கிறது. மெமோவுக்குக் காரணம்? பள்ளிக்கு அவர் சுடிதார் அணிந்துவந்தது. என்ன தொடர்பு இவை இரண்டுக்கும்? 

 மெமோ பெற்ற பிறகும் விடாமல் சுடிதார் அணிந்து பள்ளிக்குச் செல்லும் முத்துச்செல்வியைச் சந்தித்தேன். ''எங்கள் பள்ளிக்குக் கூடுதல் உதவிக் கல்வி அதிகாரி வந்தபோது சுடிதார் அணிந்திருந்தஎன்னிடம், 'இது என்ன கோலம்? இனிமேல் சேலையில்தான் வர வேண்டும்’ என்றார். அப்படியான அரசு ஆணை எதுவும் இல்லை என்பதால், நான் அவர் ஆணையின்படி செயல்படவில்லை. ஆனால், இதை மையமாகவைத்து என்னைப் பழிவாங்குகிறார்கள். அந்த மெமோவில், '5, 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் தெரியவில்லை என்பதாலும், நீங்கள் சுடிதார் அணிந்து வருவதாலும் உங்கள் மேல் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று கேட்டிருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுத்தல் தெரியவில்லை. ஆனால், எட்டாம் வகுப்புக் கணித ஆசிரியருக்கு எந்த மெமோவும் அளிக்கப்படவில்லை. நான் இந்தப் பள்ளியில் சேர்ந்தே ஆறு மாதங்கள்தான் ஆகின்றன. அதற்கு முன் மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர்களும் அதே பள்ளியில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கும் மெமோ தரப்படவில்லை. என்னிடம் மட்டுமே விளக்கம் கேட்டிருப்பது, நான் சுடிதார் அணிந்து வருவதற்காகப் பழிவாங்கும் செயல்தானே? மெமோவில் முக்கால்வாசி உடைபற்றியும் இரண்டே இரண்டு வரிகள் மாணவர்களுக்கு வகுத்தல் தெரியாததுகுறித்தும் வருகின்றன. ஆண் ஆசிரியர்கள் முன்பெல்லாம் வேட்டிதான் அணிந்து வந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் பேன்ட்-ஷர்ட்டுக்கு மாறிவிடவில்லையா? எங்களை மட்டும் இன்னமும் சேலை கட்டச் சொல்லி நிர்பந்திப்பது என்ன நியாயம்? மேல்நிலை வகுப்பு மாணவிகளுக்குச் சீருடையாக முன்பு பாவாடை- தாவணி இருந்தது. ஆனால், கண்ணியமான உடை என்பதாலேயே இப்போது சுடிதாரைச் சீருடையாக்கி இருக்கிறது அரசு. மாணவிகளுக்குக் கண்ணியமாக இருக்கும் ஆடை, ஆசிரியைகளுக்குப் பொருந்தாதா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சுடிதார்தானே அணிகிறார்கள். என்னிடம் கேள்வி எழுப்பும் அதிகாரிகள் அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியுமா?'' என்று கேட்கிறார் முத்துச்செல்வி.

கல்வித் துறையின் கட்டாயத்தை விடுவோம். சேலை உடுத்துவது ஆசிரியைகளுக்கு ஏன் அவஸ்தையாக இருக்கிறது? இது தொடர்பாக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சிலர் நம்மிடம் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

''அரசின் அறிக்கையில் 'மனச் சலனம்’ என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. எந்த ஆடை மனச் சலனத்தை ஏற்படுத்தும் என்பது வகுப்புகளுக்குச் செல்லும் எங்களுக்குத்தானே தெரியும்? இதைச் சொல்லவே சங்கடமாக இருக்கிறது... ஆனால், சொல்லியாக வேண்டிய அவசியமும் இருக்கிறது. சேலை கட்டி நிற்பதால் வகுப்பறையில் நாங்கள் படும் அவஸ்தையை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. என் சக ஆசிரியை ஒருவர் திரும்பி நின்று போர்டில் எழுதிக்கொண்டு இருந்தபோது, மாணவன் ஒருவன் செல்போனில் அவரைப் படம் பிடித்துவிட்டான். அந்தப் படம் இணையத்திலும் பரவிவிட்டது. மன உளைச்சலில் அவர் அந்தப் பள்ளியைவிட்டே விலகிவிட்டார். நானும் பல சமயங்களில் அந்த அவஸ்தையை எதிர்கொள்ள நேர்கிறது. இதனாலேயே பாடம் நடத்துவதில் இருந்து கவனம் விலகி, ஆடை கண்ணியத்தைக் காப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டியதாக இருக்கிறது!'' என்கிறார் ஓர் ஆசிரியை.

கவிஞர் செல்மா பிரியதர்ஷனும் ஆசிரியைகளின் ஆதங்கத்துக்கு ஆதரவாக, ''நான் பத்து ஆண்டுகளாகக் கிராமப்புற அரசுப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன். என் மனைவி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். வகுப்பறை யில் பதின்பருவ மாணவர்கள் முன்னால், சேலை அணிந்து கரும்பலகையைப் பயன்படுத்துவதில் உள்ள அசௌகரியங்களை அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். சேலையைவிட சுடிதார்தான் பாதுகாப்பானது என்று கருதும் ஆசிரியைகள் பலர் உடைக் கட்டுப்பாடு காரணமாகவே சேலை அணிந்துவருகின்றனர். ஆசிரியர்கள் எளிமையாக, கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்கிற ஆலோசனை வரவேற்கத்தக்கதே. ஆனால், எந்தப் பணியிலும் தங்கள் பணிச்சூழலுக்கு ஏற்றவாறு உடையைத் தேர்ந்தெடுத்து அணியும் ஜனநாயக உரிமை இருக்கிறதுதானே!'' என்று கருத்துத் தெரிவிக்கிறார்.

பெண்களுக்கு இந்தப் பிரச்னை என்றால், ஆண்களுக்கோ விநோதமான சிக்கல். ''நான் ஒரு முறை வேட்டி அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்றேன். அப்போது என்னை அழைத்து, 'தமிழாசிரியர்தான் வேட்டி அணிந்து வர வேண்டும். நீங்கள் இனிமேல் இப்படி வரக் கூடாது’ என்றார் தலைமை ஆசிரியர். இதை நான் எங்கு சென்று புகாராகப் பதிவது?'' என்கிறார் அந்த ஆசிரியர்.

சமூகச் செயற்பாட்டாளராகவும் இருக்கும் ஆசிரியை ஒருவர், ''அரசுக்கு எதிராக ஏதாவது பேசினால் வேலைக்கு ஆபத்து என்ற அச்சத்தினாலேயே பலர் வாய் மூடி இருக்கிறார்கள். கருத்துச் சுதந்திரத்துக்குக் கொஞ்சமும் இடம் இல்லை. அடிமைகள்போல் இருக்கும் எங்களை மேலும் நசுக்கும் இந்த அறிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாங்கள் அணியும் உடைகளை அரசு தீர்மானிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நவீன வன்முறையின் மூலம் நினைத்ததைச் சாதிக்க நினைக்கிறது அரசு. ஆசிரியர்களுக்கும் சமூகப் பொறுப்பு உணர்வு இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எதை உடுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தும் அளவுக்கு நாங்கள் அறிவு மழுங்கிக்கிடப்பவர்கள் அல்ல. பொதுவான அறிக்கையாக இருந்தாலும், மறைமுகமாகப் பெண்களை அச்சுறுத்தும் இந்த ஆணாதிக்க அறிக்கையை அரசு திரும்பப் பெற வேண்டும்'' என்கிறார் அழுத்தமாக.

கரும்பலகையில் எழுதும்போது கவனம் முழுவதும் முதுகு தெரிகிறதா... இடுப்புப் பகுதி வெளியே தெரியாமல் இருக்கிறதா என்பதிலேயே இருந்தால், பாடம் எப்படி ஒழுங்காக எடுக்க முடியும்? ஒரு சாக்பீஸ் கீழே விழுந்தால்கூட உடனே குனிந்து எடுக்கத் தயக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட சேலை தேவைதானா என்பது ஆசிரியைகளின் கேள்வி. இரு சக்கர வாகனத்தை ஓட்ட, பேருந்து பிடிக்க என்று எல்லாவற்றுக்கும் பொருத்தமான உடை சுடிதார்தான். இதே தமிழ்நாட்டில்தான் கல்லூரிகளில், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியைகள் சுடிதார் அணிந்து பணிக்கு வருகிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் மட்டும் சுடிதார் அணிய ஏன் தடை?  ஆசிரியர் களின் உடைகுறித்துக் கவலைப்பட்டு கலாசாரக் காவலர் அவதாரம் எடுக்கும் அரசுக்கு, பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிவறைகள்கூட இல்லாமல் பெண்கள் படும் அவஸ்தைகள் கண் ணுக்குத் தெரியவில்லையா? சிறுநீர் கழிக்கக்கூட புதர் மறைவையும் திறந்தவெளிக் கழிப்பிடங்களையும் பெண்கள் நாடும் அவல நிலைகுறித்து என்றேனும் இதுபோலக் கவலைப்பட்டு இருக்கிறதா?

''ஆசிரியர்கள் டிப்-டாப்பாக இருக்கக் கூடாது!''
ந்த விவகாரம் தொடர்பாக அரசுத் தரப்பின் விளக்கத்தை அறிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிவபதியைத் தொடர்புகொண்டபோது, ''அந்த அறிக்கை குழந்தைகளுக்கு... மாணவர்களுக்குத்தான். நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டு கேள்வி கேட்குறீங்க!'' என்று பதில் அளித்து அதிரவைத்தார். உடனே, அருகில் இருந்த கல்வித் துறை இயக்குநர் மணியிடம் முழு விவரம் கேட்டுத் தெரிந்துகொண்டவர், மணியிடமே அலைபேசியைத் தந்தார். ''அது ஒரு பொதுவான அறிக்கை. ஒரு நாளிதழில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஓர் ஆசிரியரின் படம் வந்தது. அந்தப் படத்தில் அவர் சினிமா ஹீரோபோல டிப்-டாப்பாக இருந்தார். ஓர் ஆசிரியர் அப்படி எல்லாம் இருக்கக் கூடாது. அதனால்தான் இப்படி ஓர் அறிக்கை வெளியிட நேர்ந்தது'' என்றவர், மீண்டும் அமைச்சரிடம் அலைபேசியைத் தந்தார். ''நாகரிகமான முறையில் டிரெஸ் பண்றவங்களுக்கு எதுக்குக் கோபம் வரணும்? அந்த அறிக்கை அதிருப்தியை உண்டாக்கி இருக்குனு சொன்னவங்கள்லாம் நாகரிகமா டிரெஸ் பண்றவங்க கிடையாதுபோல இருக்கு!'' என்றவர், பதில் கேள்வியன்று கேட்டார். ''ஒரு டீச்சர் மாணவனைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாங் களே? இது மாதிரியெல்லாம் நடக்குதா இல்லையா? இப்படி ஒழுக்கம் இல்லாதவங்களா இல்லாம, ஒரு ரோல் மாடலா இருக்கணும்னுதான் இப்படி ஓர் அறிக்கை. இதுல கோபப்பட எதுவும் இல்லை!'' என்று முடித்துக்கொண்டார்.

4 comments:

  1. நல்லதொரு அலசல்...
    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. ஆசிரியர் களின் உடைகுறித்துக் கவலைப்பட்டு கலாசாரக் காவலர் அவதாரம் எடுக்கும் அரசுக்கு, பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கழிவறைகள்கூட இல்லாமல் பெண்கள் படும் அவஸ்தைகள் கண் ணுக்குத் தெரியவில்லையா? சிறுநீர் கழிக்கக்கூட புதர் மறைவையும் திறந்தவெளிக் கழிப்பிடங்களையும் பெண்கள் நாடும் அவல நிலைகுறித்து என்றேனும் இதுபோலக் கவலைப்பட்டு இருக்கிறதா? மிகச்சரியான கேள்வி..அரசிடம் இருந்து பதில் வராது..முத்துச்செல்வி அவர்கள் சுடிதார் அணிந்து வந்ததில் தவறேதும் இல்லை...பெண்கள் மட்டுமே பயிலும் பள்ளியாக இருந்தால் சாரி கட்டுவதில் எந்த பிரச்சனையும் இல்லை..ஆனால் இருபாலரும் படிக்கும் பள்ளியில் ஆசிரியைகள் சுடிதார் அணிய அரசு அனுமதிக்க வேண்டும். வேண்டுமானால் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி கலரில் (அம்மாவிற்கு பிடித்தமான கலர் மாணவிகளுக்கு யூனிபார்மாக இருப்பது போல பச்சைக்கலர்) அணியச்சொல்லலாம்..திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் 1995-லேயே பாவாடை தாவணியில் இருந்து மாணவிகளின் நலன் கருதி சுடிதாருக்கு அரசைக்கேட்காமலேயே மாற்றிவிட்டோம். அனைத்து பெற்றோர்களும் வரவேற்றார்கள்..

    ReplyDelete
  3. Anonymous5:54 am

    என்னக் கொடுமை இது !!! அதாவது ஆசிரியர்களுக்கு உடை நடைமுறைகள் தேவை தான். எனக்கு அதில் மாற்றுக் கருத்து இல்லை .. ஆனால் அதனை எப்படி வரையறை செய்வது என்பது தான் இங்கு பிரச்சனையே.

    ஒரு ஆசிரியர் பிகினியில் வந்து பாடம் நடத்த முடியாது தான் .. ஆனால் கண்ணியமான உடை எது வேண்டுமானாலும் அணியலாம். சேலை மட்டும் தான் அணிய வேண்டும் என்பதே இவர்களின் பிற்போக்குத் தனங்களை காட்டிவிடுகின்றன. சொல்லப் போனால் சேலையை விட சுடிதார் தான் கண்ணியமான உடை என நான் நினைக்கின்றேன். ஏன் ஆசிரியர்கள் பாவாடை, சட்டைகள் கூட அணியலாம் .. அதற்கும் மாணவருக்கு கணக்கு வரவில்லை என்று முடிச்சு போடுவதை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை .. !!!

    உடைக் கொள்கை தேவை ஆனால் இவர்கள் சொல்லும் சேலை மட்டும் என்பது வேடிக்கையாக உள்ளது. அதற்காக சொல்லும் காரணம் மாணவர்களின் கணக்கு வரவில்லை என்பது கொடுமையில் கொடுமை .. !!

    //'தமிழாசிரியர்தான் வேட்டி அணிந்து வர வேண்டும். நீங்கள் இனிமேல் இப்படி வரக் கூடாது’ //

    இது என்னடா கொடுமையில் கொடுமையாக இருக்கின்றது ... !!!

    ஆசிரியர் டிப் டாப்பாக இருக்கக் கூடாதா .. என்னடா நடக்குது தமிழ் நாட்டில் .. !!! என்ன சொல்றதேனு தெரியல எனக்கு !!!

    ReplyDelete
  4. என்ன கொடுமை இது!
    இந்த கட்டுரையை படிக்கும் பொது எனக்கு என் கல்லூரி வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.
    நான் படித்த கல்லூரியில் பணியாற்றிய ஒரு விரிவுரையாளர் சுடிதார் அந்ததர்காக ஒழுங்குமுறை குழுவில் (discipline committee) நிக்க வைத்து வசைபாடி புடவை மட்டும் தான் கட்டிவரவெண்டும் என்று வர்புறுத்தினார்கள்
    ஒரு கட்டத்துக்கு மேல் அந்த விரிவுரையாளர் என் கல்லூரியை விட்டே சென்றுவிடார்.
    என் துறையில் நன்றாக பாடம் சொல்லி கொடுக்கும் நல்ல விரிவுரையாளார் அவர்.
    புடவை சுடிதார் சண்டையில நல்ல விரிவுரையாளாரை இழந்துவிட்டேன்.

    ReplyDelete