Tuesday, August 05, 2014

சதுரங்க வேட்டை - புதுவித காய் நகர்த்தல்

’குற்றவுணர்வு ஏற்படுத்தாத எச்செயலையும் செய்யலாம்’ என்று புதிய நீதியை அருளும் படத்தில் நாயகன் நடராஜ் பணத்துக்காக பிறரை ஏமாற்றும் தொழிலை கைகொள்பவர். பாம்புக்கு இளைய தளபதி விஜய் என்று பெயர் வைப்பதில் தொடங்கி, ஒரு ஆபரேஷனை முடித்தபிறகு செல்போனை எறியும் பாணி, எம்.எல்.எம். நிறுவனத்தில் மக்களை ஏமாற்ற பேசும் பேச்சு என மிக நிறைவாகவே நடித்திருக்கிறார். எம்.எல்.எம். காட்சிகள் அத்தனை சுவாரஸ்யம். நகைச்சுவை பொங்கும் வசனங்கள்தான் படத்தை முழுவதும் ஆள்கின்றன.’சொல்லும் பொய்யில் கொஞ்சம் உண்மை இருந்தால்தான் நம்ப முடியும்’, ’ஒருவனை ஏமாற்ற அவனுடைய ஆசையைத் தூண்டவேண்டும்’, ’பணம்தான் உலகில் கிளிஷே ஆகாத ஒரே விஷயம்’ போன்ற வசனங்களை ரசிக்க முடிகிறது என்றாலும் ‘க்ளிஷே’ போன்ற சொற்கள் சாதாரண மக்களுக்குப் புரியுமா என்ன? படம் தொடங்கி முடியும்வரை பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் சிரிப்பொலி எனச் செல்வதால் பல வசனங்களைக் கேட்க முடியாமல் போகிறது. 



படத்தின் இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு நடிகரும் சோடை போகாமல் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷாட்களும், கதை சொல்லும் பாணியும் ‘மூடர் கூடம்’ படத்தை நினைவுபடுத்துகின்றன. சியான் ரோல்டனின் பின்னணி இசை பேசுகிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் ரைஸ் புல்லிங் கலசத்தை செய்யும் காட்சியில் ஜெண்டை மேளமும் மேற்கத்திய இசைக்கருவிகளும் கொண்ட கலவையாக ஒரு பின்னணி இசையில் அசத்துகிறார். ஒளிப்பதிவு ப்ளாக் ஹியூமர் படத்துக்கேற்ப தன் பங்குக்கு தன் வேலையைச் செய்கிறது. விறுவிறுப்பான படத்தொகுப்பு படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. மூடநம்பிக்கைகொண்ட ஒருவனிடம் நூறு கோடியை கறக்க ஜோசியக்காரரை ரைஸ்புல்லிங் கலசம் குறித்து அறியச் செய்ய கண்டுபிடிக்கும் வழி சுவாரஸ்யம். மிகப் புதியதாய் யோசித்திருக்கிறார் இயக்குநர். இப்படியும் நூதனமாக ஏமாற்ற முடியுமா என்று வியப்பிலாழ்த்துகிறார். ‘காமன்மேன் குண்டு வைக்கும்போது ஏமாத்துறவனுக்கு துப்பாக்கி எங்கே விற்கும்னு தெரியாதா?’ என்று கமலையே கிண்டலடிக்கும் வசனத்திற்கு திரையரங்கத்தில் ஏக வரவேற்பு.

நாயகியாக வரும் இஷாரா நாயர் அன்பே உருவாக வருவதற்கும் காவல் நிலைய காட்சிக்கும் தொடர்பிருக்கிறதா இயக்குநரே? காவலர்கள் அவர்கள் பாணியில் அடித்து விசாரிக்க, எதுவுமே பதில் சொல்லாமல் அத்தனை அடியையும் வீரத்துடன் தாங்கிக்கொள்கிறார் நடராஜ். அடுத்து வரும் ஒரு காவலர் அவரிடம் அன்பாக உணவுதந்து விசாரிக்கும்போது ‘போடா பொட்டை’ என்கிறார். அன்பு காட்டும் ஆணுக்கு பொட்டை என்று பட்டமளித்து பெண்களையும் திருநங்கைகளையும் காயப்படுத்துகிறது படம். ஒரு நல்ல படத்தில் ஏன் ஒரு துளி விஷம்?

எனினும் சதுரங்க வேட்டையில் ராஜா, ராணி, யானை, குதிரை என வெட்டி வீழ்த்திவிட்டு இயக்குநர் வெற்றிபெறுகிறார். ஆடுகளத்தில் வெல்கிறது சதுரங்க வேட்டை.

(நன்றி: இந்தியா டுடே)

1 comment: