மதுரையில்
உள்ள தாதா குறித்த கதை என்றால் ரத்தமும் அரிவாளுமாகவே வன்முறைக் காடாக
இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துப் போவது ஜிகர்தண்டாவின் பலம். தாதா
சேது குறித்து எச்சரித்து எல்லோரும் பயமுறுத்த நாயகன் சித்தார்த் மதுரைக்குப்
புறப்பட்டு வரும்போது கிளம்பும் ஆர்வம் படம் முழுவதும் நீடிக்கிறது.
சேதுவாக
நடித்திருக்கும் பாபி சிம்ஹாதான் கதையின் நாயகனாகிறார். தாதாவைப் போல
மிரட்டவேண்டும், அடியாட்களிடம் அதட்டுவது என்று பயப்படவைக்கும் அதே வேளையில்,
கிணற்றுக்குள் ஆட்டம்போடுவது உட்பட ஒரு நகைச்சுவை நடிகருக்கான தன்மையும்
வெளிப்படவேண்டிய பாத்திரத்தை அநாயசமாக கையாள்கிறார் சிம்ஹா. தியேட்டரின்
கழிப்பறையில் அவர் என்று நினைத்து வேறொருவன் சுடப்பட்டு, அடியாட்கள் வந்து
நின்றவுடன் வேறு கழிப்பறையைத் திறந்து உள்ளே நுழையும் காட்சி ஒன்று போதும்.
இயக்குநரின் திறமைக்கும் சிம்ஹாவின் நடிப்புக்குமான சாட்சி அந்தக் காட்சி. நாயகன்,
தளபதி, காட் ஃபாதர் என்று உதாரணப் படங்களை அடுக்கும்போது அரங்கம் கொள்ளாத
வெடிச்சிரிப்பு. இந்த இடத்திலிருந்து சேது பாத்திரம் ஒரு தாதாவிலிருந்து பவர்
ஸ்டார் போல ஆகிறது. இயக்குநர் இந்தப் பாத்திரத்தை இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாம்
என்றாலும் சேது தன் நடிப்பில் அனைத்தையும் துடைத்தெறிகிறார்.
சித்தார்த்துக்கு
நிறைய ஆர்வம், கொஞ்சம் பயம் கலந்த இயக்குநர் பாத்திரம் பொருந்துகிறது. நிறைவாக
செய்திருக்கிறார். தாதா மனம் இளகுவதும் மென்மையான சித்தார்த் தாதா போல் இறுதிக்காட்சியில் விஜய் சேதுபதியை மிரட்டுவதுமான மாற்றத்துடன் படம் முடிகிறது. சிறிது நேரமே வந்தாலும் நாசரும் விஜய் சேதுபதியும்
ரசிக்க வைக்கிறார்கள். லட்சுமி மேனனுக்கு அவ்வளவாக காட்சிகள் இல்லை. லட்சுமி மேனன்
பாத்திரம் இல்லாமலேயே இந்தப் படம் நிறைவாக இருக்கும். கதாநாயகி என்றொருவர்
இருக்கவேண்டும் என்பதற்காகவே வருகிறார். நடிப்புப் பயிற்சி தர வரும் நிஜ அரங்க
கலைஞரான குரு சோமசுந்தரம் நடிப்பின்மூலம் வெகுவாக ஈர்க்கிறார். மதுபானக்கடை
காட்சியின் ராமச்சந்திரனும், சித்தார்த்தின் நண்பராக வந்து பயந்து பயந்து சாகும்
கருணாகரனும், அந்த பிட் படம் பார்ப்பவரும் ரசிக்க வைக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன்
வழக்கம்போல் பின்னணி இசையிலும் பாடல்களிலும் படத்திற்கு வலுவூட்டுகிறார்.சில
காட்சிகளில் கத்திரி வைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
புத்திசாலித்தனமான வசனங்கள், காட்சிகள் என்று வித்தியாசமாக யோசிக்கும் இயக்குநர்
கார்த்திக் சுப்புராஜ் கவர்கிறார்.
(நன்றி : இந்தியா டுடே)
No comments:
Post a Comment