நேர்மையாக,
மனிதாபிமானத்துடன் வாழவேண்டும் என நினைக்கும் ஒரு மனிதனின் கதை. பிறருடன்
தேவையில்லாத பிரச்சனைகள் வேண்டாம் என நினைத்து சின்னச் சின்ன விஷயங்களுக்கு
ஒதுங்கிப்போகும் சலீமை பெரிய விஷயங்களுடன் மோத விடுகிறது வாழ்க்கை. அதில் அவனுக்கு
எந்தத் தயக்கமும் இல்லை.
முதல்
பாதியில் பணக்கார தனியார் மருத்துவமனை எப்படி நோயாளிகளிடம் சுரண்டுகிறது என்பதைக்
காட்டுகிறது. ஆனால் இக்காட்சிகள் அனைத்தும் சலீமை நல்லவனாகக் காட்டுவதற்காக என்கிற
அளவுடன் நின்றுபோய்விடுவதால் அக்காட்சிகளுக்கான அழுத்தம் இல்லை. நேர்மைக்க்குப்
பரிசாக வேலையை விட்டு வெளியேற்றப்படும் நொடியிலிருந்து சலீம் வேறொருவனாகிறான்.
அந்த நொடியிலிருது படம் வேறொரு பாதைக்குச் செல்கிறது.
நாயகனாக
வரும் விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தைப் போலவே இதிலும் அமைதியான சாகசக்காரனாக
வருகிறார். இஸ்லாமியர் வேடம் கச்சிதமாய்ப் பொருந்துகிறது. நடிக்கிறாரா இல்லையா
என்பது புரியாத மாதியான அமைதியான நடிப்பு. விஜய் ஆண்டனியின் முதல் படமான ‘நான்’
படத்தின் மருத்துவக் கல்லூரி மாணவனான சலீம் இந்தப் படத்தில் மருத்துவர். ’நீ எந்த
இயக்கம். அல்கொய்தா?சிமியா?’ என்று காவல்துறை அதிகாரி அடுக்க, நிதானமாக ‘சலீம்
என்கிற பெயரைப் பார்த்ததும் இப்படியெல்லாம் கற்பனை செய்றீங்களா? வேணும்னா என் பேர்
விஜய் என்றோ ஆண்டனி என்றோ வைச்சுக்கோங்க’ என்று சொல்லும் இடத்தில் கைத்தட்டலில்
அதிர்கிறது திரையரங்கம் தமிழ் சினிமா இயக்குநர்கள் தேய்வழக்காக மீண்டும் மீண்டும்
நிறுவ முயலும் ஒன்றை இந்த வசனம் உடைப்பதோடு மட்டுமல்லாமல் பொதுபுத்தியையும் கேள்வி
கேட்கிறது.
சலீம் ‘நோ
பார்க்கிங்கில்’ வண்டியை விடுபவர்கள் குறித்து இந்தியன் தாத்தா பாணியில்
பேசும்போது இன்னும் எத்தனை சினிமாக்களில் நேர்மையில் இலக்கணமாக இதையே பார்ப்பது
என்கிற சலிப்பு வருகிறது. கதாநாயகியாக வரும் அக்ஷாவின் ஆரம்ப காட்சிகள்
அலுப்பூட்டுகின்றன. சலீம் இத்தனை நல்லவனாக இருப்பது வாழ்க்கைக்கு உதவாது என்று
பொருமும் காட்சியில் மட்டும் மிளிர்கிறார்.
அமைச்சர் தவபுண்ணியமாக வரும் மனோகர், காவல்துறை அதிகாரியாக வரும் அபிஷேக்,
இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் என்று அனைவரும் சிறந்த பாத்திரத் தேர்வுகள். விஜய்
ஆண்டனியின் பாடல்கள் இனிமை. பின்னணி இசையும் படத்தொகுப்பும் படத்துக்கு
வலுவூட்டுகின்றன. ’நான்’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படத்தைப் பார்க்கலாம்.
மூன்றாம் பாகத்தை எதிர்நோக்கவைக்கிறது இறுதியில் போடப்படும் அந்த ‘தொடரும்’.
(நன்றி : இந்தியா டுடே)
(நன்றி : இந்தியா டுடே)
No comments:
Post a Comment