சென்றவாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. கண்ணகி-முருகேசன் வழக்கில் விரைந்து நீதி வழங்குமாறும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்கவேண்டுமெனக் கோரியும் மனு அளிக்கப்பட்டது. கண்ணகி-முருகேசன் வழக்கில் முருகேசனின் குடும்பத்திற்கு எஸ்சி/எஸ்டி சட்டப்படி அளிக்கவேண்டிய இழப்பீட்டுத் தொகையான 2 லட்சத்தை இதுவரை தமிழக அரசு வழங்கவில்லை. பிரேத பரிசோதனை முடிந்த உடனேயே இந்தத் தொகை வழங்கப்படவேண்டும். ஆனால் 11 ஆண்டுகளாகியும் வழங்கப்படவில்லை என்பதுடன் குற்றம்சாட்டப்பட்டோரும் சுதந்திரமாக உலவி வருகின்றனர்.
2003ஆம் ஆண்டில் தமிழகத்தையே அதிர வைத்த சாதிய வன்மத்தின் உச்சமான இரட்டைக் கொலைகள். கடலூர் மாவட்டத்தில் விருத்தாசம் அருகே உள்ள புதுக்கூரைப் பேட்டையியைச் சேர்ந்த படையாச்சி சாதியைச் சேர்ந்த கண்ணகியும் பறையர் சாதியைச் சேர்ந்த முருகேசனும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள். இருவரும் காதலித்து திருமணம் முடித்து அவரவர் வீட்டில் வாழ்ந்து வந்தனர். வீட்டில் விஷயம் தெரிந்து இருவரும் வெளியேறிவிட அவர்களைத் தேடிப் பிடித்து வந்து, ஊரார் கூடி நிற்க அந்த அவலம் அரங்கேறியது. 8.7.2003 அன்று காலை எல்லோர் முன்னிலையிலும் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் முருகேசனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது. கண்ணகி விஷம் குடிக்க பிடிவாதமாக மறுக்கவே அவருடைய காதிலும் மூக்கிலும் விஷத்தை ஊற்றி அவர்கள் இருவரும் பிணமானவுடன் உடல்கள் அவரவர் சாதி சுடுகாட்டில் எரிக்கப்பட்டன. இதைக் கண்ணால் கண்ட சாட்சிகள் அந்த ஊர் மக்கள். நடந்ததை கண்ணால் கண்ட முருகேசனின் சித்தியான சின்னத்தாயியும் அத்தை அமராவதியும் காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட அங்கு அவர்களின் முறையீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ”இருவரும் எரிக்கப்படுவதை காணச் சகியாமல் தொலைபேசி மூலம் போலிசுக்கு தெரிவித்த மனசாட்சியுள்ள யாரோ ஒரு படையாச்சி அங்கு மறைந்து வாழ்கிறார். யாரெனத் தெரிந்தால் கண்ணகிக்கு நேர்ந்த கதி அவருக்கும் நேரக்கூடும்.” என்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்று தகவல்கள் சேகரித்த உண்மை அறியும் குழுவில் சென்ற எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்’ என்கிற கட்டுரை. அங்கு வந்த காவலர் ஒருவர் எரியும் பிணத்தை காலால் தட்டிப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டார் என்கிறார் முருகேசனின் அத்தை அமராவதி.
அதன்பின் அவர்கள் காவல்நிலையத்துக்குச் சென்றபோது அவர்களுடைய புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன்பின் ஊடகங்களில் இந்தச் சம்பவம் வெளிவந்தபின் தமிழகம் அதிர்ந்தது. உண்மை அறியும் குழுக்கள் சென்றன. வழக்கறிஞர் பொ. ரெத்தினம் தனது குழுவுடன் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தன் சட்டப்போராட்டத்தைத் தொடங்கினார். அதன் விளைவாக இடையில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயிற்று. இது நடந்து 11 ஆண்டுகள் ஆயிற்று. இந்த பதினோரு ஆண்டுகளில் இந்த வழக்கு என்னதான் ஆனது?
”பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் அவலம் நிகழ்ந்தது. முருகேசனின் தந்தை உட்பட நால்வரை கொலைக்குற்றம் சாட்டியது காவல்துறை. அவர்கள்தான் முருகேசனுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாகச் சொன்னது காவல்துறை” என்கிறார் வழக்கறிஞர் ரெத்தினம். அதன்பின் மூவர் விடுவிக்கப்பட்டாலும் முருகேசனின் சித்தப்பாவான அய்யாசாமி மீது இன்னமும் குற்றச்சாட்டு அப்படியேதான் உள்ளது. சிபிஐ விசாரணையிலும் பல சிக்கல்கள் உள்ளதாக முருகேசன் தரப்பு குற்றம் சாட்டுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் சிபிஐ இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆதிக்க சாதியினருக்கு சாதகமாக நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
கண்ணகியின் தந்தை துரைசாமி புதுக்கூரைப்பேட்டையின் பஞ்சாயத்துத் தலைவர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டவுடன், தொடர்ந்து 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவருடைய பஞ்சாயத்துத் தலைவர் பதவி பறிக்கப்படும் என்பதைக் காரணம் காட்டி கடலூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி முனி ரத்னம் அவரை 23 நாட்களில் விடுவித்தார். ஆனால் முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவை 36 நாட்கள் வரை காவலில் வைத்திருக்க அனுமதித்தார் என்றும் மனு குற்றம்சாட்டுகிறது.
இந்த வழக்கில் வாதாடிய ரெத்தினம் இந்தியா டுடேயிடம் “11 ஆண்டுகளுக்கு முன்னால் 2 லட்சம் இழப்பீடு. இப்போது தந்தால் அதற்கான இன்றைய மதிப்பில் பார்த்தால் இன்னும் கூடுதல் தொகை வரும். ஆனால் இந்த 2 லட்சமும் கூட இன்னமும் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சி தரும் உண்மை” என்கிறார்.
முருகேசனின் சகோதரர் வேல்முருகன் இந்தியா டுடேயிடம் “. ஊள்ளூர் இன்ஸ்பெக்டர் சரியில்லை என்று சிபிஐயின் குற்றப்பத்திரிகை சொல்கிறாது. ஆனால் சிபிஐ இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கொலையாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார்.
பிரச்சனைக்குப் பின் தங்கள் சொந்த ஊரான குப்பநத்தத்தில் வசிக்கும் முருகேசனின் குடும்பத்தினர். முருகேசனின் இன்னொரு சகோதரர் பழனிவேல் “இப்போதும் ஆதிக்க சாதியினர் புதுக்கூரைப்பேட்டை காலனி மக்களை அடிமைகளாகத்தான் வைத்திருக்கின்றனர். அவர்களை எதிர்த்து யாராவது காவல்துறைக்குச் சென்றால் அவர்களின் வீடுகள் கொளுத்தப்படுகின்றன. அதற்கு பயந்துகொண்டு பலர் கண்ணகி-முருகேசன் வழக்கில் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்லாமல் உள்ளனர். பஞ்சாயத்துத் தலைவராக துரைசாமி இருப்பதால் அதிகாரமும் அவர்கள் கையில் உள்ளது” என்கிறார்.
முருகேசனின் தந்தை சாமிக்கண்ணுவிடம் பேசியபோது “சமாதானமாகப் போகச்சொல்லி இப்போதும் அவங்க தரப்பில் பேசுறாங்க.. நான் ஒத்துக்கமாட்டேன். என் பிள்ளையே போனப்புறம் என்னை பணத்தால வாங்கமுடியாது. அவங்களுக்கு தண்டனை வாங்கித் தரவும், எங்களுக்கு நஷ்ட ஈடு வாங்கித்தரவும் ரெத்தினம் சார்தான் உதவுறாங்க. அவரைத்தான் நம்பியிருக்கேன்” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
பஞ்சாயத்துத் தலைவர் மேலவளவு முருகேசன் கொலைவழக்கில் வழக்கறிஞர் ரெத்தினம்தான் கொலையாளிகளுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் பெற்றுத்தர போராடினார். இப்போது இந்த வழக்கும் இவர்வசம் இருப்பதால் கண்ணகியின் கணவர் முருகேனின் குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். மேலவளவு முருகேசனுக்கும் புதுக்கூரைப்பேட்டை முருகேசனுக்கும் பெயர் ஒன்றுதான். ஆனால் இரு வழக்குகளிலும் உள்ள ஒரு வேறுபாட்டை கவனிக்கவேண்டும் மேல வளவு முருகேசன் ஒரு தலித். அவர் பஞ்சாயத்துத் தலைவராக இருப்பதைப் பொறுக்கமாட்டாமல் ஆதிக்கசாதியினர் அவரை வெட்டி வீழ்த்தினர். இங்கே கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு ஆதிக்கசாதிக்காரர். இவரும் ஒரு பஞ்சாயத்துத் தலைவர்தான். ஆனால் இவர் பஞ்சாயத்துத் தலைவராக நீடிக்கவேண்டும் என்பதற்காக காவலில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார். ஒரே நாடு. ஒரே அரசியல் சாசனம். ஒரே மாநிலம். ஆனால் சாதிகள் வெவ்வெறு என்றால் நீதியும்கூட மாறும் அவலத்தின் சாட்சியாக காலமும் மக்களும் உள்ளதை யாராலும் மறுக்கமுடியாது.
No comments:
Post a Comment