Wednesday, September 10, 2014

ஆட்டத்தை மாற்றியவர்கள் - புதிய பாதையில் தமிழ் சினிமா

மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கு தமிழ்க் கவிதை மாறிய காலகட்டம்போல் இன்றைய தமிழ் சினிமா இருக்கிறது என்கிறார் திரைப்பட விமர்சகர் ராஜன் குறை. புதிய இளைய இயக்குநர்களால் நிரம்பி வழிகிறது கோடம்பாக்கம். புதிதாக சிந்திக்கிறார்கள். கருத்து, காட்சி என அனைத்துமே புதுமை. எழுபதுகளின் இறுதியில் பாரதிராஜாவின் வருகை தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு இட்டுச் சென்றது. அதன்பின் மணிரத்னம் அதை வேறொரு தளத்துக்கு இட்டுச் சென்றார். தொண்ணூறுகள் தமிழ் சினிமாவின் தேக்ககாலம் எனலாம். தமிழ் சினிமா முற்றிலும் அடையாளம் இழந்துபோய் புற்றீசல் போல மசாலா படங்கள் வந்து குவிந்த காலம் அது. தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான பாலாவின் சேது தமிழ் சினிமாவை மீட்டது. அவரைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல், செல்வராகவன், அமீர், வெற்றிமாறன், வசந்தபாலன், பாண்டிராஜ், சசி குமார், சிம்புதேவன், சுசீந்திரன், வெங்கட்பிரபு என்று பல இளைஞர்கள் தமிழ் சினிமாவின் முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்கள். அர்த்தமுள்ள படங்கள் வரத்துவங்கின. ஆனாலும் இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களிடம் துணை இயக்குநர்களாக பணியாற்றியவர்கள்தான்.



கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா இன்னுமொரு கட்டத்தைத் தாண்டியுள்ளது. எவரிடமும் துணை இயக்குநராக இல்லாத இயக்குநர்களின் வருகை திரைப்படத்தின் வரையறைகளை புரட்டிப்போட்டது. ஒருபுறம் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று அவர்களின் ரசிகர்களுக்கான படங்களும் வந்து வெற்றிபெற்றாலும் புதிய ஊற்றாய் புறப்பட்ட இளம் இயக்குநர்களின் படை ஒவ்வொரு படத்தின்மூலமும் ரசிகர்களை அசரடித்தனர். தண்ணீரே வந்து சேராத கடைமடைப் பகுதி விவசாயிக்கு காவிரியில் நுரைபொங்க ஓடும் நீரைப் பார்த்தால் ஏற்படும் அதே உணர்வில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர். நல்லவர்கள் மட்டும்தான் நாயகர்கள் என்பதை தமிழ் சினிமா உடைத்தது. அத்துடன் ஒரு பெரிய நாயகன் இருக்கவேண்டும். மிக அழகான கவர்ச்சியான கதாநாயகி வேண்டும்; கண்டிப்பாக டூயட் இருக்கவேண்டும்; ஒரு கவர்ச்சிப் பாடல் இருக்கவேண்டும்; இப்படி பலவேண்டும்களை துணிச்சலுடன் வேண்டாம் என்று புதிய இயக்குநர்கள் புறக்கணித்தனர். திரைக்கதையில் கவனம் குவிந்தது. அட்டக்கத்தி தினேஷ் போல தலித் பையன் ஒருவன் கதாநாயகன், ஒரு சுமார் மூஞ்சி குமாரு, ஒரு குழந்தையை கடத்துபவன், ’என்ன ஆச்சிஎன்று சொன்னதையே படம் முழுவதும் சொன்னாலும் சலிக்கவைக்காத நாயகன், எண்பதுகளின் கேமிராவுடன் அலைபவன், கண் தெரியாதவன், சீர்திருத்தப்பள்ளியில் படித்தவன், திருடன், ஒரு மதுரை தாதா, குறும்பட இயக்குநர்கார் ஓட்டுனர், வேலைவெட்டி இல்லாமல் கிராமத்துக்குள் வருத்தப்படாமல் சுத்துபவன் என்று அண்மைக்காலமாக திரையில் உலவும் வித்தியாசமான முகங்களில் இது வரை புறக்கணிக்கப்பட்ட முகங்களும் அடங்கும்.

நம்ம நாலு பேர்ல நீங்க மட்டும்தான் ஹீரோன்னு யாராவது சொன்னாங்களா பாஸுஎன்று மூடர் கூடம் திரைப்படத்தில் சென்றாயன் கேட்பது ஒட்டுமொத்த தமிழ்சினிமாவின் நாயக பிம்பத்தை உடைக்கும் ஒற்றைக் கேள்வி. பிறரை ஏமாற்றும் எவரையும் ஏமாற்றலாம் என நீதி சொல்லும் சதுரங்கவேட்டை, பகுத்தறிவை மிக நாசூக்காக பிரச்சாரமின்றி சொல்லும் முண்டாசுப்பட்டி, வடசென்னையின் சேரி நாயகனை கண்முன் நிறுத்தும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என எல்லாமே புதுசுதான்.

இயக்குநர்  பாண்டி ராஜ்எங்கள் காலத்தில் ஓர் இயக்குநரை சந்திக்கச் சென்றால் முடியவே முடியாது. அவர் போகும் இடங்களுக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து, அவர் பார்வையில் படும்படி நின்று கெஞ்சி அப்புறம்தான் நம்மை ஏறெடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் இப்போது கதை அப்படியல்ல. தகவல் தொடர்பு மிக எளிதாகிவிட்டது. வாட்ஸ் அப்பில் ஒரு குறும்படத்தை அனுப்பிப் பார்க்கச் சொல்கிறார்கள். காரில் போகும் ஒரு சிறிய பயணத்தில் அதைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் கூப்பிட்டு சேர்த்துக்கொள்ளும் காலம் இது. நாளைய இயக்குநர் போன்ற நிகழ்ச்சிகள் பெரும் துணை புரிகின்றன. திரைப்படத்தின் glamour, grammer இரண்டையும் புதியவர்கள் உடைக்கிறார்கள். இது ஆரோக்கியமான ஒன்றுஎன்கிறார்.

இந்தப் படங்களின் பேசுபொருள் ஒருபோதும் காதலாக இல்லை. படத்தில் காதல் ஒரு அங்கமாக வந்தாலும் இவை எதுவுமே காதல் படங்கள் இல்லை. சொல்லப்போனால்அடுத்த வேளை சோற்றுக்கு வழியிருப்பவர்கள் காதலைப் பற்றி யோசிக்கலாம்என்கிறது மூடர்கூடம். ஒரு படி மேலேபோய் நாயகன் காதலியை ஒரு வேலை ஆகவேண்டும் என்பதற்காக காதலிப்பதுபோல் நடிக்கிறான்; எல்லாவற்றுக்கும் மேலே தமிழ் பேசுபவர்களே நடிகர்களாக இருக்கிறார்கள். “பாடல் காட்சிக்கு மட்டும் கதாநாயகி வேண்டும் என்றால் வெளிமாநிலங்களிலிருந்து அழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நடிக்க அதிக காட்சிகள் இருக்கையில் தமிழ் பேசும் நாயகிதான் தேர்வாக இருக்கவேண்டும்என்கிறார் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குநர் கோகுல். குறிப்பாக புதுமுகங்களே பெரும்பாலும் நடிக்கின்றனர். ” புது முகங்களை வைத்து எடுப்பதால் படத்துக்கு ஃப்ரெஷ்னஸ் கிடைக்கிறது. ஆடிஷன் வைத்துதான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ரிகர்சல் நடத்திவிடுகிறோம். ஜிகர்தண்டா படத்துக்கு வொர்க்‌ஷாப் நடத்தினோம் இது புதுமுக நடிகர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது” என்கிறார் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

இந்தப் புதிய இயக்குநர்களின் வரவு உற்சாகமளிப்பதாகச் சொல்கிறார் சுசீந்திரன். “வாயை மூடிப் பேசவும் படம் போல டயலாக் இல்லாமல் ஒரு முயற்சி புதிதுதான்.  பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பார்த்து வியந்தேன். புதிய எண்ணங்கள். ஆனால் இந்த வகை படங்களில் உணர்வுகள் குறைவாக உள்ளன என்பதை ஒரு சிறிய குறையாகப் பார்க்கிறேன். பார்வையாளரை உணர்ச்சிவயப்படுத்தும் தருணங்கள் ஒரு படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவிடும். ஆனால் இதையெல்லாம் மீறி புதியவர்கள் ‘அட’ போட வைக்கிறார்கள்” என்கிறார்.

இப்போதெல்லாம் யாரும் இன்னொரு பாரதிராஜாவாகவோ அல்லது இன்னொரு மணிரத்னமாகவோ வரவேண்டும் என்று உறுதி ஏற்று வருவதில்லை. அவரவர் தனித்திறமையுடன் தனக்கான பலத்தை கண்டுபிடித்து அதற்கேற்ற திரைக்கதையை எழுதுகிறார்கள். புதியவர்கள் யாரிடமும் துணை இயக்குநராக இல்லாமல் குறும்படங்க்ளை எடுத்து அதை தயாரிப்பாளரிடம் போட்டுக்காண்பித்து வாய்ப்பை பெறுகிறார்கள். “துணை இயக்குநராக பணிபுரியும்போது யாரும் வகுப்பு எடுப்பதில்லை. பார்த்துப் பார்த்து அனுபவத்தின்மூலம்தான் ஒரு படம் எடுக்கும் விதத்தை கற்றுக்கொள்ள முடிகிறது. அதையே நேரடியாக குறும்படங்கள் எடுத்து அனுபவம் பெற்று வருவதும் ஒரு வகையில் சிறப்பான விஷயம்தான்” என்கிறார் பாண்டி ராஜிடன் துணை இயக்குநராக இருந்த மூடர் கூடம் இயக்குநர் நவீன்.

துணை இயக்குநராக பணியாற்றாமல் முதல் படம் கொடுக்கும் பாரம்பரியத்தை அண்மைக்காலத்தில் ஆரண்ய காண்டம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தொடங்கி வைத்தார். ”நான் உட்பட அப்படியானவர்களிடம் அயல்நாட்டுப் படங்களின் தாக்கம் உண்டு. ஆனால் காப்பி அடிப்பது வேறு. மரபான பாணியில் இல்லாது கண்டதை கேட்டதை வைத்து படமெடுப்பதாலேயே இப்படங்கள் மரபுகளை உடைபப்தாக உணர்கிறேன். இந்த புதிய அலைக்குக் காரணமே அயல்நாட்டுப் படங்களின் தாக்கமும், வித்தியாசமாக சிந்திப்பதும்தான்.” என்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ”நிறைய படவிழாக்கள் நடக்கின்றன. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறை பல கல்லூரிகளில் வந்துவிட்டது. முன்பெல்லாம் அறிவுஜீவிகள்தான் அங்கு போவார்கள். ஆனால் இப்போது சாதாரண ரசிகர்களும் படவிழாக்களுக்குச் செல்கின்றனர். ஆகவே காப்பி அடித்தால் மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்” என்கிறார் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் இயக்குநர் அனீஸ்.

“நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்கள் துணை இயக்குநர்களாக இல்லாவிட்டாலும் 15 ஆண்டுகள் சினிமாவை உற்றுநோக்கி அதிலேயே உழன்றிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு உகந்ததுபோல ஒரு கோடி செலவில் ஒரு படத்தை எடுத்துவிட முடிவது சாதகமான விஷயம். அதனாலேயே பெரிய ஸ்டார்களை போடமுடியாது. எங்களுக்கேற்ற மாதிரி புதுமுகங்களை தேர்வுசெய்வதால் நாங்கள் நினைக்கும் நேரத்தில் அவர்களால் வரவும் முடியும்” என்கிறார் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத்.

ஆனால் மூத்த இயக்குநரான பாக்கியராஜின் கருத்தோ வேறுமாதிரி இருக்கிறது. ”இவர்கள் களப்பயிற்சி ஏதுமின்றி சினிமாவைப் பார்ப்பதுமூலமாகவே படம் எடுக்கிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஆனால் இதுவே சினிமாவுக்கான இலக்கணம் அல்ல. முதல் படத்தில் வெற்றி பெறுகிறார்கள். அடுத்தடுத்த படங்களை பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்.

படங்களில் உதட்டசைத்து இப்போதெல்லாம் யாரும் பாடுவதில்லை. கதையின்போக்கில் பாடல் வருகிறது. அல்லது பாடலுக்குள் கதை நகர்கிறது என்பதால் பாடல்காட்சியில் எவரும் எழுந்துபோக முடியாது. “உதட்டசைத்து பாடுவதென்றால் ஆடுகளம் படத்தில் வரும் ஒத்தச் சொல்லாலே போன்ற பாடலை வைக்கலாம். வெற்றிமாறன் போல அதைச் சரியாகச் செய்யமுடியுமென்றால் செய்யலாம். இல்லையெனில் பின்னணியில் மட்டும் பாடல் ஒலிப்பதுபோல் வைக்கலாம்” என்கிறார் சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி.

பழைய மரபுகளை உடைத்தெறிகிறார்கள் புதியவர்கள். போகிறபோக்கில் ஒரு லிவிங் டூகெதர் ஜோடியை பீட்சாவில் எந்தச் சலனமும் ஆர்ப்பாட்டமுமின்றி காண்பித்துவிட்டுப் போகிறார் கார்த்திக் சுப்பாராஜ். ஆனால் பெரிய இயக்குநர்களின் படங்களில் இவை எல்லாமே ஒரு பெரிய புரட்சி போல் காண்பிக்கப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். புதியவர்களுக்கு முன்னோடியான செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனிக்காக நாயகன் ஒரு குளியலறையில் பல் துலக்குவதும், அருகே நாயகி மேற்கத்திய கழிவறையில் அமர்ந்திருப்பதுமான போஸ்டர் ஏற்படுத்திய சலசலப்பை மறந்துவிட முடியாது.

”புதிய இயக்குநர்களிடம் ஹாலிவுட் இயக்குநர்களின் பாதிப்பு உள்ளதை உணரமுடிகிறது. வெகுஜன சினிமாவுக்குள் ஒரு இணை சினிமாவை இதன்மூலம் நிகழ்த்திக்காட்ட முடிகிறது. புதிய இயக்குநர்கள் நிறைய படங்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வாசிப்பு பழக்கமும் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போதைய படங்கள் அனைத்துமே பணம், க்ரைம், த்ரில்லர் என்கிற வகைகளுக்குள் அடக்கிவிடலாம். இதில் நல்லவன் கெட்டவன் இல்லை. ஹீரோயிசம் கிடையாது. ப்ளாக் காமெடி உண்டு. மக்களை 3 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருக்கும் அதே சமயத்தில் வணிக சினிமாவுக்குள் ஒரு மாற்று முயற்சி என்கிற வகையில் கதாநாயகத்தன்மையை உடைக்கும் இப்படங்களை வரவேற்க வேண்டும்” என்கிறார் அட்டகத்தி இயக்குநர் பா.ரஞ்சித்.

ஆனால் இப்படங்கள் அனைத்துமே ஏ செண்டர் படங்களாக அமைவதன் காரணம் என்ன? “அனைத்து செண்டரிலும் ஹிட்டாகும் படத்துக்கான கதை எழுத வேண்டும் என்று ஆரம்பித்தால் பிரச்சனைதான். ஜிகர்தண்டா படத்தில் சில காட்சிகள் மாஸ் ஆக இருக்கு என்றார்கள். இதெல்லாம் தானாக அமைவதுதான். ஸ்க்ரிப்டுக்கு நேர்மையாக இருப்பதுதான் வெற்றிக்கு சிறந்த வழி.” என்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

இன்னொரு மாற்றம் படங்களுக்கு வைக்கப்படும் பெயர்கள். எண்கணித ஜோதிடப்படி பெயர்கள் வைக்கும் அதே சினிமாவில்தான் மிக அழகான பெயர்கள் படங்களுக்கு வைக்கப்படுகின்றன. சதுரங்க வேட்டை, மஞ்சப்பை, குக்கூ, பூவரசம் பீப்பி, ஜிகர்தண்டா, முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் என்று யாரும் யோசிக்காத புதுப்புது பெயர்கள்என்று சிலாகிக்கிறார் ஒரு துணை இயக்குநர்.

புதியவர்கள் படங்களுக்கான விளம்பரம் செய்யும் யுக்தியும் வித்தியாசமாகவே உள்ளது. ”ப்ரமோஷனில் புதிய உத்திகளைக் கையாள வேண்டியிருக்கிறது முண்டாசுபட்டி படத்துககு புதுமையான வகைகளில் ப்ரமோஷன் செய்தது நல்ல பலனளித்தது.” என்கிறார் முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார். கார்ட்டூன் போல வித்தியாசமான போஸ்டர்கள் முண்டாசுப்பட்டியை நோக்கி ரசிகர்களை வரச் செய்தன. “மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்தில் ஒரு குதிரையின்மீது நாயகன் அமர்ந்திருப்பது போல படம்போட்டுஇதற்குத்தானே ஆசைப்பட்டாய்என்று விளம்பரம் செய்தோம். இது மக்களுக்குப் பிடித்திருந்ததுஎன்கிறார் கோகுல். ஆனால் வெறும் விளம்பரங்களை மட்டும் நம்பி மக்கள் வருவதில்லை. “இந்த ஆண்டு நல்ல படம் என்று சொல்லப்பட்ட அனைத்து படங்களும் ஓடியிருக்கின்றன. ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. புதுமையான முயற்சிகளை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். கமர்ஷியல் படங்கள், மசாலா படங்கள் மட்டுமே வேண்டும் என்று ரசிகர்கள் கேட்பதில்லை.” என்கிறார் ராம்குமார். ”ப்ரமோஷனுக்காக யோசித்த விஷயம் படத்தில் சீனாக வைக்கும் அளவுக்கு நன்றாக இருக்கும். சீனாக யோசித்து படத்தில் வைக்க முடியாததை பிரமோஷனுக்கு பயன்படுத்துவதும் நடக்கும்.” என்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குநர் பொன்ராம்.

இந்தப் புதியவர்கள் சமூக வலைதளங்களை காத்திரமாக பயன்படுத்துகிறார்கள். சில சமயம் சாதகமாகவும் சில சமயம் பாதகமாகவும் முடிகிறது இவ்விமர்சனங்கள். “சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுதுவதை யாரும் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருப்பதால் முழுக் கதையையும் சில நேரங்களில் படத்தின் மையமான் ட்விஸ்டையும் எழுதிவிடுகிறார்கள்என்கிறார் பொன்ராம். “முன்பு அதில் ஒரு கண்னியம் இருந்தது. இப்போதெல்லாம் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். ஆகவே அவற்றை முழுமையாக நம்பமுடியவில்லைஎன்கிறார் ஹரிதாஸ் இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன்.

ராஜுமுருகனின் குக்கூ பார்வையற்றோரின் காதலையும், ஜி.என்.ஆர். குமாரவேலின் படமான ஹரிதாஸ் ஒரு சிறுவனுக்கும் அப்பாவுக்குமான கதையாகவும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கோச்சடையான் வித்தியாசமான அனிமேஷன் முயற்சியாகவும்., அட்லீயின் ராஜா ராணி தம்பதிகளுக்கிடையேயான உறவுச் சிக்கலைப் பேசுவதாகவும், கிருத்திகா உதயந்தியின் வணக்கம் சென்னை வெற்றிகரமாக ஓடியும் கவனத்தைக் கவர்ந்தன.

இன்றைய இயக்குநர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அயல் நாட்டு படங்களைக் கண்டு அதன் பாதிப்பில் நம் மண்ணுக்குப் பொருந்துவதான கதையை எழுதி படமாக்குபவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பண்ணையாரும் பத்மினியும், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்போல அயல்நாட்டுத்  தாக்கங்கள் இல்லாத ஆனால் வேறுபட்ட கதைகள். ஆனால் இவ்விரு வகை இயக்குநர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முந்தைய தமிழ் சினிமா இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இவர்கள் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் மண்ணின் மனம் வீழும்அட்டகத்திபோன்ற படங்கள் அல்லது எந்த மொழிக்கும் பொருந்தும்ஆரண்ய காண்டம்போன்ற படங்கள். இரண்டுமே ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடுவதாய் இருப்பது ஆரோக்கியமான விஷயம்

(நன்றி : இந்தியா டுடே)

1 comment:

  1. Anonymous11:22 pm

    Varutha padaadha valibar sangam maatru cinemavaa :D

    ReplyDelete