Thursday, April 01, 2010

ஆம்! இப்போதிருக்கும் நானாக.... நான் செதுக்கப்பட்டேன்..


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்  கலைஞர்கள் சங்கத்தின்பால் நான் கொண்ட ஈடுபாடு என்னை சமூக அக்கறை உள்ள நபராக மாற்றியது.   தமுஎகச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.என்னை செதுக்கிய உளிகள் அவை. 

ஒரு சிற்பத்தை மேலும் அழகுபடுத்தும் மற்றோர் உளியாக வந்தது காலக்கனவு. அண்மையில்  “காலக்கனவு”நாடகம் நூலாக வெளிவந்தது. அதில் இடம்பெற்ற என்னுடைய கட்டுரை இது. 

இனி... எனது அனுபவங்கள்...

குஜராத்தில் ஓவியர் சந்திரமோகனை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தாக்கி, அவருடைய ஓவியங்களை சிதைத்த அராஜகத்தைக் கண்டித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு கண்டனக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலைத்துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அதில் அ. மங்கையும் ஒருவர். நான் அங்கே ஒரு பாடல் பாடினேன். நிகழ்ச்சி முடிந்தபின் மங்கை என்னிடம் “ஒரு நாடகம் போடப்போகிறேன். அதற்கான வேலைகள் துவங்கும்போது நாடகத்தில் பங்கு கொள்ள அழைக்கிறேன்” என்று கூறி என் கைபேசி எண்ணை வாங்கினார். 

அதன்பின்  மங்கை காணாமல் போனார் நெடுநாளைக்கு. நானும் சரி அவ்வளவுதான் போலிருக்கிறது என்று இருந்துவிட்டேன். திடீரென்று ஒரு நாள் மங்கையிடமிருந்து அழைப்பு. ஒரு நாளில் நாங்கள் கூடினோம். மங்கை, ரேவதி தவிர குழுவில் யாரையும் எனக்கு அறிமுகமில்லை. பொன்னியையும் கல்பனாவையும் அன்றுதான் சந்தித்தேன். எனக்கு உள்ளுக்குள் ஒரு நினைவு. “எனக்கு நடிப்பு நாடகம் இதெல்லாம் வருமா? எதை வைத்து மங்கை நான் நடிப்பேன் என்று முடிவு செய்தார்?” என்று குழப்பம். பள்ளி கல்லூரியில் நடித்தது தவிர நாடகத்தில் நடித்ததில்லை. முதல் நாள் பரஸ்பர அறிமுகங்கள். வ.கீதாவின் எழுத்து, அவரது மேடைப்பேச்சு எனக்கு பரிச்சயம். ஆனால் அவருடன் பேசியதில்லை. பெரியாரியலுக்கு அவர் புரிந்த அளப்பரிய சேவை குறித்து அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தேன். அன்றுதான் அவருடனும் அறிமுகமாகிறேன்.  

எங்கள்  கையில் காகிதங்கள் திணிக்கப்பட்டன. “இதுதான் முதல் அத்தியாயம். இதை ஒவ்வொருத்தர் ஒரு பாரா படிங்க!” என்று மங்கை சொல்ல எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாடகம் என்றால் ஸ்கிரிப்ட் இல்லையே. இங்கே கீதா எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட் நாடக வடிவத்தில் இல்லையே என்று புதிதாய் குழப்பம். அடுத்த முறை வரும்போது இதை நன்றாகப் படித்துப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. “உனக்கு ஏதாவது புரியுதா?” என்று கண்களால் கேட்டுக்கொண்டு “இல்லையே” என்று பதிலும் சொல்லிக்கொண்டு கலைந்தோம். 

பின்  வந்த நாட்களில் கொஞ்சம்  கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. இது நாடகம்தான். ஆனால் நாடகமில்லை என்பது புரிந்தது. இதில் கையாளப்பட்ட உத்தி மிகவும் புதிதாக இருந்தது. பார்வையாளர்களோடு ஒருவராய் நாடக மாந்தர்களும் அமர்ந்துகொண்டு அவரவர் இடத்திலிருந்து பேசத்துவங்குவோம்.  

நான்  அப்போது கணினித்துறையில்  மென்பொருள் வல்லுனராக பணியாற்றி வந்தேன். அதிகமாக என்னால் விடுமுறை எடுக்க முடியாது என்பதற்காக வார இறுதி நாட்களில் மட்டுமே ஒத்திகை வைத்துக்கொள்வோம். அதிலும் நான் வார இறுதி நாட்களில் எங்காவது வெளியூரில் ஒரு நிகழ்ச்சியை வைத்துக் கொண்டிருப்பேன். அது போலவே ரேவதியும். பொன்னி ஒவ்வொரு முறையும் பெங்களூரிலிருந்து வரவேண்டும். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் இருந்துகொண்டு ஒன்றுகூடுவதற்கு மிகவும் சிரமப்பட்டோம். எல்லோரும் சென்னையில் இருக்கும் தேதியைக் கண்டுபிடிப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் சமாளித்து எங்கள் ஒத்திகை வாரமொரு மேனியும் நாளொரு வண்ணமுமாக வளர்ந்தது. இந்த நாட்களில் நாங்கள் மிக அன்னியோன்யமாகிப் போனோம். எல்லோரும் சேர்ந்து மங்கைக்கும் கீதாவுக்கும் பட்டப்பெயர் வைப்பது, கேலி செய்வது என மகிழ்ச்சியும் குதூகலமுமாகக் கழிந்தது. எங்கள் ஒத்திகை நடைபெற்ற தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கதவுகள் எங்களுக்காக ஒவ்வொரு வார இறுதியிலும் திறக்கப்பட்டன. 

ஒத்திகையின்போது எனக்குள் இருந்த குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி நான் தெளிவடையத்தொடங்கினேன். “நமக்கும் நடிப்பு வருமோ?” என்று முதன்முறையாக நினைத்தேன். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பெண்ணியம் தொடர்பான புரிதலை அறிந்துகொள்வதற்காகவும், மேம்படுத்தவும் அவ்வபோது எங்களுக்குள் உரையாடல் நிகழும். வட்டமாக அமர்ந்து எங்கள் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். இவையெல்லாம் நாடக ஒத்திகையின் ஒரு பகுதியாகவே நடந்து கொண்டிருந்தது. பிரதியைக்கொடுத்து ஒவ்வொருவருக்குமான வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது என்ற பேச்சே இல்லை. அதோடு மட்டுமல்லாமல் நாங்கள் ஒருமுறை பேசிய வசனத்தையே அடுத்த முறை பேசும்போது வேறு மாதிரி கூடப் பேசினோம். அந்த சுதந்திரம் எங்களுக்கு இருந்தது. ஏனெனில் கீதாவின் அந்தப் பிரதி எங்களோடு இரண்டற கலந்துவிட்டிருந்தது. 

முத்துலட்சுமியும், மூவலூர் ராமாமிர்தமும்  என்னோடு உரையாடினார்கள். சுப்புலட்சுமியும், கிரேஸும் கனவில் வந்தார்கள். தேவதாசிப்பெண்களின் கண்ணீர் என் விழிகள்  வழியே வந்தது. கிறிஸ்துவ  மிஷினரி பெண்கள் எங்கள் வடிவில் கைகளின் பைபிளோடு காடு, மலை, சமவெளி, வயல்வெளி எங்கும் சுற்றித் திரிந்து சனாதன இந்து மதத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்து கிறிஸ்துவத்தை வளர்க்கத் தொடங்கினார்கள். கே.பி.சுந்தராம்பாள் எங்கள் அபிநயங்களில் வாழ்ந்தார். சித்தி ஜுனைதாபேகம் பொன்னியின் பாங்கு ஒலியின் பின்னணியில் என் குரல் வழியே பெண்ணியம் பேசினார். மார்சீலை அணிய பெண்கள் கண்ட போராட்டத்தின் வெற்றி எங்களின் முகங்களில் பிரதிபலித்தது. வேட்டி கட்டி தலையை கிராப் வைத்த மணலூர் மணியம்மா, கே.பி.ஜானகியம்மா போன்றவர்கள் எங்களுக்கு வழிகாட்டினார்கள். மணியம்மாவின் அந்த வேட்டியை நாங்கள் சுற்றிக்கொண்டு கையில் செங்கொடியோடு நிற்கும் காட்சியில் உடல் சிலிர்த்துப்போகும். பெரியார் வளர்த்த பெண்களாக குஞ்சிதம், நீலாவதி, இந்திராணி, கண்ணம்மாள், அன்னபூரணி, ராமமிர்தம்மாள், மரகதவல்லி, ரெங்கநாயகி, விசாலாட்சி, பொன்னம்மாள், சுந்தரி, அஞ்சுகம், சிவகாமி, மேரி, மகாலட்சுமி, மஞ்சுளா பாய், வள்ளியம்மை, சுலோசனா, சிதம்பரம்மாள், மீனாட்சி, கிரிஜாதேவி, பினாங்கு ஜானகி, ஜெயசேகரி, ஆண்டாள் அம்மாள் ஆகியோர் எங்கள் நால்வரிலும் கூடு விட்டு பாய்ந்து வாழ்ந்தார்கள். 

‘தோளோடு தோள் இணைந்து சிறை வரைக்கும்’ என்று வில்லுப்பாட்டு மெட்டில் தோழர் இன்குலாப் இடதுசாரிப் பெண்களைப் பற்றி எழுதிய பாடல் எங்கள் தேசிய கீதமானது. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட சில மனசஞ்சலங்களின்போது இந்தப் பாடல் வரிகளை ஒரு முறை பாடினால் ஏற்படும் நெஞ்சுறுதியும் மனவலிமையையும் வேறு எதுவும் எனக்குத் தரவில்லை. இதையே ஒருமுறை ரேவதியும் கூறியபோது வியப்பு மேலிட்டது. இந்தப்பாடலை ஒரு தொலைபேசி அழைப்பில் எழுதி தொலைபேசியிலேயே வாசித்துக் காண்பிக்க, அதை எழுதிக்கொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒரு தேவதாசிப்பெண்ணாக மாறி நான் நடிக்க வேண்டிய  காட்சி ஒன்று உண்டு. அந்த வலியையும் துயரத்தையும் “நான் இழந்த வாழ்க்கையை நாணம் விட்டு சொல்லவா..? என்ற பாடல் காத்திரமாக சித்தரித்தது. அதைப் பாடும்போது நான் காண்பிக்க வேண்டிய முகபாவங்களுக்காக எனக்கு மங்கை அளித்த பயிற்சி மறக்க முடியாதது. ஒரு பெண் எத்தனையோ முறை ஆண்களால் பேருந்து போன்ற இடங்களிலும், தனியான இடங்களிலும் பாலியல் தொல்லைகள் எதிர்கொண்டிருப்பாள். அதுபோன்ற அனுபவங்களை மீண்டும் நினைத்துப் பார். கண்களை மூடிக்கொள்” என்று எனக்குக் கூறிய அவர் மற்றவர்களைக் கொண்டு என்னை பாதிக்காத வகையில் மிக மென்மையாக லேசாக கைகள் பட்டும் படாமலும் என்னை தொடச்சொன்னார். எனக்கு அந்தக் காட்சியில் நான் என்ன செய்ய வேண்டும் எனப் புரிந்தது. அந்தக் காட்சிக்காக பார்த்தவர்கள் என்னைப் பாராட்டும் ஒவ்வொரு முறையும் இந்த ஒத்திகைக் காட்சி என் கண் முன் நிழலாடும். ஒவ்வொருவருக்கு உள்ளும் இருக்கக்கூடிய திறமையை வெளிக்கொணருவதற்கு சில சமயம் அன்பாகவும் சில சமயம் கோபமாகவும் மங்கை நிறைய முயற்சிகள் எடுத்தார்.  

என்னால் மறக்க முடியாத நாடகத்தின் முதல் அரங்கேற்றம் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஏற்பாடானது. நாடகத்தின் முதல் குரலாக பேராசிரியை சரஸ்வதியின் குரலைக் கேட்டபோது  இதயம் படபடவென அடித்துக்கொண்டது. நாடகம் முடிகையில் ஏதோ உன்மத்த நிலையை அடைந்ததுபோலிருந்தது. ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தும்போது, “இவள் பெரியாரால் சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கப்பட்ட தம்பதியரின் மகள்” என்று மங்கை என்னை அணைத்துக்கொண்டு கூறியபோது என் பெற்றோர் சபையை வணங்க, அத்தனை கூட்டத்தின் முன் கண்ணீர் பெருக்கடுக்க, சொல்லவொண்ணாத உணர்வுகளின் குவியலாய் நின்றிருந்தேன்.  
அதன்பின்  முக்கிய நகரங்களான மதுரை, திருச்சி, சேலம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், புதுச்சேரி, புதுடில்லி போன்ற இடங்களில் எங்கள் நாடகம் நடந்தேறியது. மதுரையில் மட்டும் நான்கு முறை நிகழ்த்தியிருக்கிறோம். நிறைய பத்திரிகைகளில் நாடக விமர்சனங்கள் வெளிவந்தன. தெரிந்தவர்கள், தமிழ்ச்சூழலில் இயங்கும் அறிவுஜீவிகள் என பலரும் வெவ்வேறு ஊர்களில் வந்து நாடகத்தைப் பார்த்தனர். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அனுபவம். சேலத்தில் நாடகம் பார்த்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா “எனக்குள் குற்றவுணர்வை உண்டாக்குகிறீர்கள்!” என்றார். இதுபோல ஆண்களின் மனதிற்குள் மாற்றத்தை அல்லது சலசலப்பையாவது காலக்கனவு ஏற்படுத்தியதை கண்கூடாக என்னால் அனுமானிக்க முடிந்தது. ஆண்களின் நிலை இது என்றால் மதுரையில் பாத்திமா கல்லூரியில் ஒரு மாணவி நாடகம் குறித்து கருத்து சொல்ல ஒலிவாங்கிமுன் வந்தபோது கண்ணீர் விட்டு “இத்தனை ஆண்டுகளுக்கு முன்னரே எப்படிப்பட்ட பெண்களெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்” என நெகிழ்ந்து நின்றாள்.  

காலக்கனவுக்கு விமர்சனங்களும் வந்தன. எங்கள் முதல் அரங்கேற்றம் முடிந்தவுடனேயே, குறிப்பாக இடதுசாரி இயக்கப் பெண்கள் குறித்த அதிக அளவிலான தகவல்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவள் என்ற முறையில் எனக்கு இது பெரிய மனநெருக்கடியைக் கொடுத்தது. இனம்புரியாத அழுத்தமாக உணர்ந்தேன். இடதுசாரி இயக்கப் பெண்கள் குறித்த பதிவுகள் இருந்தாலும் அவர்களின் குரல்களில் ஒலித்த உரையோ கட்டுரையோ அதிகம் கிடைக்கப்பெறவில்லை. நான் தேட ஆரம்பித்தேன். எங்காவது ஒரு குரல் கிடைக்காதா என ஏக்கத்தோடு தேடினேன். கிடைக்கவில்லை. இறுதியில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் கைகொடுத்தார். அவர் செய்தது காலக்கனவைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான உதவி என்று நினைக்கிறேன். ருக்மிணி அம்மாவின் ஒரு உரையை அவர் எடுத்துக்கொடுத்தார். ஆனால் நாங்கள் நாடகத்திற்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்துக்குள் இல்லாமல் மிகப் பிந்தைய காலத்தில் அவர் பேசியது அது. அதனால் அதை நாடகத்தில் இணைக்க முடியவில்லை. கே.பி.ஜானகியம்மாவின் நாட்குறிப்பில் இருந்து மணலூர் மணியம்மா மன்னார்குடியில் ஒரு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை எடுத்துக் கொடுத்தார். மிக முக்கியமான பேச்சு அது. எங்கள் இரண்டாவது மேடையில் அதை இணைத்துக் கொண்டோம். காலக்கனவின் சிறப்பே இப்படி எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம். அதன் வடிவம் அப்படி.  

ஒவ்வொரு மேடைக்கு முன்னும் மங்கை  அடையும் டென்ஷனைப் பார்த்து நாங்கள் அவருக்கு Hyper No. 1 என்று பெயர் வைத்தோம்.  முழுதும் பெண்கள் மட்டுமே இருந்த எங்கள் குழுவில் ஒரே ஆணாக இருந்தது ஸ்ரீஜித். எங்கள் நாடகத்தின் மேடை வடிவமைப்பாளர். அதை மேடை என்று சொல்ல முடியாது. நடிப்பிட வடிவமைப்பாளர் எனலாம். கொஞ்சகாலத்திலேயே ஸ்ரீஜித் ஒரு ஆண் என்பது மறந்துபோனது. அந்த அளவுக்கு காலக்கனவோடு ஸ்ரீஜித்துக்கு ஈடுபாடு உண்டு. 

ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்பும் ஒருமுறையாவது ஒத்திகை பார்க்கவேண்டும். சில சமயங்களில் எங்களுக்கு அதற்குக்கூட நேரமில்லாமல் ஓடும் ரயிலில் ஒத்திகை பார்த்திருக்கிறோம். அதன்பின் தெரிந்த சினிமா பாட்டு, இயக்கப் பாட்டு எல்லாம் பாடி தூங்க நள்ளிரவாகிவிடும்.  

ஒவ்வொரு முறையும் நாடகம் முடிந்தபின் நாங்கள் எப்படி செய்தோம் என பட்டியலிடுவார் மங்கை. அதில் குறைகள் நிறைகள் எல்லாம் இருக்கும். அநேகமாக ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்னும் எனக்கு சோதனையாக சளி பிடித்து தைலத்தோடு அலைந்து கொண்டிருப்பேன். ”எப்படி பாடுவது?”   என்ற பதைபதைப்பு இருந்துகொண்டே இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் எப்படியோ சமாளித்து வந்திருக்கிறேன். சாதாரண நாட்களில் எனக்கு உடல்நலமில்லாமல் போனால் “நாடகம் போடலையே! ஏன் உனக்கு உடம்பு சரியில்லாமல் போகுது?” என்று பிறர் கேட்கும் அளவுக்குப் போனது.  

ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும். என்னை காலக்கனவுக்கு முன், காலக்கனவுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ஒரு நாடகப்பிரதி பார்வையாளனை சென்றடைவதற்கு முன்னால் முதலில் நடிப்பவரைச் சென்றடைய வேண்டும். நடிப்பவரை நாடகம் முதலில் அரசியல்படுத்தவேண்டும். காலக்கனவு அந்த வேலையைச் செய்தது. கீதாவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். முதலில் அந்தப் பிரதி படிக்கும்போது இதில் நடிப்பதற்கு நமக்கு தகுதியிருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது “இருக்கிறது” என்று என்னால் முழுமனதோடு எனக்கு நானே கூட சொல்லிக்கொள்ள முடியவில்லை. பெண்ணியம் குறித்த புரிதல்கள் இருந்தாலும், அதைக் கடைபிடிக்க ஆசைப்பட்டாலும், அதுவே எனது விருப்பமாக இருந்தாலும் கூட, சில புற–அக சூழல்களுக்குள் அடைபட்டு நான் கிடப்பதை உணர்ந்தேன். வீட்டில் என்ன சொல்வார்களோ, பெற்றோர் என்ன சொல்வார்களோ, இந்தச் சமூகம் என்ன சொல்லுமோ என்று நினைத்து நினைத்தே எத்தனையோ விஷயங்களில் நான் மௌனம் சாத்தித்திருப்பதும் சமரசம் செய்து கொண்டிருப்பதும் எனக்குப் புரிந்த்து.

திருமணத்தின்போது  தாலி வேண்டாம் என்ற என் பிடிவாதம்  எடுபடவில்லை. என் விருப்பத்திற்கு  மாறாக தாலி அணியும் சடங்கு நடந்தது. என் பெற்றோருக்கு பெரியார் திருமணம் செய்து வைத்தார். ஆனாலும் அவர்களின் திருமணத்திலும் தாலி இருந்தது. ஆகவே என் கோரிக்கை மணமகனைத் தவிர மற்றவர்களால் புறந்தள்ளப்பட்டது. எனக்கும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்ற உணர்வு இருந்ததால் கசப்போடு  போராட்டத்தைக் கைவிட்டேன். நான் தேர்ந்தெடுத்தவரை திருமணம் செய்துகொள்வதற்காக என் பெற்றோருடனும் மணமகன் வீட்டாருடனும் நான் செய்துகொண்ட சமரசம் அது எனச் சொல்லலாம்.  

ஒவ்வொரு முறை ஒத்திகையிலும் பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் குறித்த  காட்சியில் நடிக்கும்போதும்  குற்றவுணர்வு என்னை ஆட்கொண்டது. என் குற்றவுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றியது. ஒருநாளில் தாலியை கழற்றி வைத்தேன். இது ஏதோ ஒரே நாளில் நடந்தது என்றும் நான் சொல்ல மாட்டேன். இந்த மாற்றம். குற்றவுணர்வுக்கு ஆளாகி அதன் விளைவாக மன உளைச்சலுக்குட்பட்டு ஒரு கட்டத்தில் நடந்தது அது.  ஆனால் அதன்பின் மனநிறைவாய் உணர்ந்தேன். இப்போது யோசித்துப் பார்த்தால் எப்படி நாம் அப்படி இருந்தோம் என்று நினைத்தால் வியப்பாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது. 

இது ஒரு  உதாரணம்தான். இதுபோல எத்தனையோ உண்டு. இன்று இருக்கும்  ‘நான்’ ஆகிய என்னை செதுக்கியது காலக்கனவு. ஆனால் இதற்கு நான் நிறைய விலை கொடுக்க வேண்டியிருந்தது. பல கேள்விகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. போராட வேண்டியிருக்கிறது. போராட்டத்தில் நிறைய இழக்க வேண்டியிருக்கிறது. இழப்புகளுக்காக சில சமயம் வருந்தவேண்டியும் உள்ளது. ஆனால் நேர்மையும், உண்மையும், திருப்தியும் தரும் மனநிறைவுக்கு முன் அது தரும் கலக மனப்பான்மைக்கு முன் எதுவும் சாதாரணம்தான்!



15 comments:

  1. நல்ல பதிவு..நன்றி.......

    ReplyDelete
  2. காலக்கனவு நல்ல நினைவுகளை தந்துள்ளது. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Anonymous12:49 pm

    //எனக்கும் யாரையும் புண்படுத்தக்கூடாதென்ற உணர்வு இருந்ததால் கசப்போடு போராட்டத்தைக் கைவிட்டேன். //

    இவ்வாறாகத் தான் வாழ்வில் பலரும் ஒரு சமரச நிலையை ஒரு சிரு புள்ளியில் ஆரம்பித்து, பின் மீள முடியாத சுழியில் சிக்கி புதைந்து போகிறார்கள்.

    நீங்கள் மீண்டு விட்டீர்கள் என்று சொல்வது பாராட்டுக்குரியது.

    உங்களைப் பற்றிய நல்லதொரு அறிமுகம். வாழ்த்துகள்.

    நண்பன் ஷாஜி.

    ReplyDelete
  4. [[[ஆனால் நேர்மையும், உண்மையும், திருப்தியும் தரும் மனநிறைவுக்கு முன் அது தரும் கலக மனப்பான்மைக்கு முன் எதுவும் சாதாரணம்தான்!]]]

    சத்தியமான வார்த்தைகள்..!

    நாடகத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். அடுத்து எங்கே இயக்கப் போகிறீர்கள் என்பதைச் சொன்னால் நலமாக இருக்கும்..!

    ReplyDelete
  5. Great...!!! Please write more..!!!

    ReplyDelete
  6. மேய்ப்பர்களும் சமூகமும் எங்கள் மீது பூசிய சாயத்தைச் சுரண்டிவிட்டு துரு ஏறா காப்பைப் பூசிக்கொள்ளவதிலேயே வாழ்வின் பெரும்பகுதி கழிந்து விடுகிறது. உங்கள் பதிவினில் மனிதன் தன்னை வளப்படுத்திக்கொள்ள தன்னுடனும் சுற்றத்துடனும் முரண்பட்டு வேதனைகளையும் வலிகளையும் தாண்டி வரவேண்டும் என்பதினை பதிவு செய்தமை இன்னும் இச்சூழலில் சமரசத்திற்கும் மாற்றத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டு திணறுபவைகளுக்கு உங்கள் அனுபவத்தின் பதிவும் பகிர்வும் ஊக்கமாக இருக்கும்.

    “ ஆனால் இதற்கு நான் நிறைய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. பல கேள்விகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது எதிர்த்து நிற்க வேண்டிய... இழப்புக்களுக்கு வருந்த வேண்டியுமுள்ளது”

    யார் யார் தன்னைத்தானே செதுக்கிக்கொள்கிறார்களோ அவர்கள் யாவரும் இந்தப்புள்ளியைக் கடக்காமல் அது அவர்களுக்குச் சாத்தியப்படாது. தொடர்ந்தும் போராடுவதும் வேதனைகளை அறுவடை செய்வதும் முடிந்துவிடப்போவதும் இல்லை. ”ஆனால் நேர்மையும் உண்மையும் திருப்தியும் தரும் மன நிறைவிற்குமுன் அது தரும் கலக மனப்பான்மைக்குமுன் எதுவும் சாதாரணம் தான்”
    This is the driving force in search of truth!

    தேவா

    ReplyDelete
  7. மிகவும் உணர்ச்சிகரமாகவும் நேர்மையாகவும் எழுதப்பட்ட பதிவு... நானும் இடதுசாரி இயக்கங்களில் இருந்தவன், கல்லூரிக்காலங்களில் தெருமுனை நாடகங்கள் மற்றும் பிரச்சாரங்களில் ஈடுபட்டவன் என்ற முறையில்.. எனது அந்த நாட்களை மீண்டும் பார்ப்பதாக இருந்தது. புரட்சி என்கிற கருத்தியல் ஒரு உடலுக்குள் புகுந்துவிட்டால் அது பௌதீக சக்தியாகத்தான் மாறிவிடுகிறது.

    வாழ்த்துக்கள் தோழர்.

    ReplyDelete
  8. செந்தழல் ரவி, மதுரை சரவணன், நண்பன் ஷாஜி, சண்முகநல்லையா - மிக்க நன்றி.

    உண்மைத்தமிழன் - அடுத்த முறை நாடகம் உண்டா என்பதே நிச்சயமாகத் தெரியவில்லை. இருந்தால் கண்டிப்பாக சொல்கிறேன்.

    தேவா! உங்கள் வார்த்தைகள் உரமூட்டுகின்றன.

    ஜமாலன் தோழர்! மிக்க நன்றி! உங்கள் சொற்கள் இன்னும் எழுதவேண்டும் என்ற தாகத்தை ஊட்டுகின்றன.

    ReplyDelete
  9. தேவா! நீங்கள் ஸ்விஸ் தேவாவா? இல்லையெனில் வேறு எங்கு இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  10. Anonymous10:32 pm

    கவினுக்கு நீங்கள் நினைத்தது சரிதான் நான் சுவிஸ் தேவா தான்.

    உங்கள் பதிவுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றி தோழர் தேவா!

    நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  12. hai...kavin.nalama...oru nadakakkariyaka maarivittai.nadaka anubavam thantha uruthi thodarattum.

    ReplyDelete
  13. நன்றி கருணா தோழ்ர்! நாடகக்காரியாகவெல்லாம் மாறிவிடவில்லை. ஒரு நாடகம் தானே முழுமையாக நடித்திருக்கிறேன்? அதிலும் அதை நடிப்பு என்று சொல்ல முடியாது. கவினாகவே தானே அதில் வந்தேன். வேறு ஒரு கதாபாத்திரமாக மாறும் வாய்ப்பு அதில் குறைவு. அப்படி இருக்கையில் என்னை நாடகக்காரி என்று சொல்வது கொஞ்சம் மிகைதான். நான் கத்துக்குட்டி தோழர். இப்போதுதான் கற்றுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  14. மன்னிக்கவும் ஜாதி பற்றி பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். கம்பம் பள்ளதாக்கு பகுதி (அ) தற்போதைய தேனி மாவட்டத்தில் உள்ள எங்கள் சமூகத்தினர் திருமணங்களில் கடந்த 100 ஆண்டுகளாக தாலி எனும் வேலி மணமகளுக்கு இல்லை. வெறும் மாலை மாற்றுதலுடன் எளிமையாக திருமணம் முடிந்து விடும்...

    ReplyDelete
  15. பிரசன்னா ராஜன்!

    இந்தக் கேள்வியை கேட்பதற்கு என்னை மன்னிக்கவும். ஆனால் எந்த சமூகத்தில் அப்படி ஒரு நல்ல பழக்கம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அச்சமூகத்தின் பெயரைக் கேட்கிறேன்.

    ReplyDelete