Thursday, April 22, 2010

சல்யூட்!!!

அந்தச் சிறுவனுக்கு பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று ஆசை. அப்பா லாரி ஓட்டுனர். வீட்டில் ஐந்து பிள்ளைகள். எல்லோரையும் படிக்க வைக்க அப்பாவால் முடியவில்லை. வீட்டின் வறுமையைப் பார்த்து அவனே ஐந்தாம் வகுப்பு வரை படித்தது போதும் என்று முடிவு செய்து விட்டான்.  புத்தகத்தை சுமக்க வேண்டிய அவன், குடும்பத்தின் வறுமைநிலையைப் போக்க தன்னால் இயன்ற வரை உழைக்க வேண்டும் என்கிற முடிவோடு ஐஸ் கம்பெனிக்கும், பேனா நிப்பு தயாரிக்கும் தொழிற்சாலைக்கும் சென்று வேலை பார்த்தான்.

இப்படி கொஞ்ச காலம் கழிந்தபின் அம்மா கொடுத்தனுப்பிய ஒரு மஞ்சள் பையில் இரண்டு கால்சட்டைகளும் இரண்டு சட்டைகளும் அடங்கிய ஒரு மஞ்சள் பையோடு சென்னைக்குப் பயணமானான். அங்கு ஒன்பது ஆண்டுகள் பெரம்பூரில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்தான். பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு க்ரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை.

அதன்பின் 1990ம் ஆண்டு சாத்தூருக்குத் திரும்புகிறான். திரும்பவும் அங்கே 1996 வரை ரேசன் கடையில் தினக்கூலியாக பணி. துள்ளி விளையாட வேண்டிய குழந்தைப் பருவத்தையும், பள்ளிப் பருவத்தையும் இழந்து நின்ற அந்தச் சிறுவன் பெயர் மாரிமுத்து. அன்று சிறுவனாக இருந்த மாரிமுத்துவிற்கு இப்போது வயது 40. மாரிமுத்து தற்போது நெடுஞ்சாலைத்துறையின் சாலை ஆய்வாளர் (ரோடு இன்ஸ்பெக்டர்) என்றால் நம்ப முடிகிறதா? கூடிய விரைவில் இளநிலை பொறியாளராக பதவி உயர்வும் பெறவிருக்கும் மாரிமுத்து எப்படி திடீரென இந்த நிலைக்கு உயர முடிந்தது?

 “சென்னையிலிருந்து திரும்பி ரேஷன் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு நாளைக்கு ஐம்பது அறுபது ரூபாய் கிடைக்கும். மிகவும் சிரமமாக இருந்தது. இடையில் எனக்கு திருமணம் ஆகிவிட்டிருந்தது. இரண்டு பெண்கள், ஒரு பையன் என மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டனர். அப்போதுதான் தமிழக அரசு சாலைப் பணியாளர்கள் நியமனம் தொடர்பாகக் கொடுத்திருந்த விளம்பரத்தில் ஐந்தாவது வரை படித்திருந்து நல்ல உடல்வாகு இருந்தால் போதும் என்றிருந்தது. அந்தப் பணிக்கு விண்ணப்பித்தேன். வேலையும் கிடைத்துவிட்டது.

நான் சென்னையில் சிறுவயதில் மளிகைக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது என்னுடைய சம்பளத்தை அம்மாவுக்கு மணியார்டர் அனுப்பும்போது அம்மாவை நாலு வார்த்தை நலம் விசாரித்து எழுதவோ,  கடிதம் எழுதவோ முடியாது. கோணல் மாணலான கையெழுத்தோடு பிழையாக வேறு எழுதுவேனோ என்கிற தாழ்வு மனப்பான்மையால் என் முதலாளியிடமோ அல்லது போஸ்ட் ஆபீஸுக்கு வரும் யாரிடமாவதோ கெஞ்சி இரண்டு வரி எழுதச் சொல்லி மணியார்டர் அனுப்புவேன். இது போன்ற சமயங்களிலும், ஸ்கூலுக்குச் செல்லும் மாணவர்களைப் பார்க்கும்போதும் படிக்காமல் போயிவிட்டோமே என்ற ஏக்கம் வந்து அலைக்கழிக்கும். அந்த ஏக்கம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அதனால் சாலைப்பணியாளராய் வேலைக்குப் போனாலும் எப்படியாவது படிக்கணும் என்கிற வெறி மட்டும் இருந்தது. எட்டாம் வகுப்புத் தேர்வுக்கு 32 ரூபாய் கட்டணம் கட்டி விண்ணப்பித்து நானே வீட்டில் படிக்கத் தொடங்கினேன்.  என்னை அப்போது கிண்டலாக பார்த்தவர்கள் நிறைய பேர் உண்டு. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் படிக்கப் போறியா.. இதெல்லாம் ஆகாத கதை என்றார்கள் சிலர். ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படித்தேன். எட்டாம் வகுப்பு பாஸ் செய்ததும் பத்தாம் வகுப்புத்தேர்விற்கு விண்ணப்பித்தேன்.  அதிலும் தேர்ச்சி பெற்றவுடன், பன்னிரண்டாம் வகுப்புத்தேர்வு எழுதினேன்.

இதற்கெல்லாம் நடுவில் 2002ல் சோதனையாக நான் உட்பட பத்தாயிரம் சாலைப்பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள். அப்போது நாங்கள் அத்தனை பேரும் சிரமப்பட்டோம். நான் சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்தேன். எங்களுக்கு வேலை மீண்டும் கிடைக்க பல போராட்டங்களையும் வழக்குகளையும் நடத்தினோம். நாற்பத்தோரு மாதங்கள் வேலையின்றி சிரமப்பட்டோம். இந்த போராட்ட காலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் எங்கள் சங்கமும் குடும்பச் செலவுகளுக்கு உதவின.

இப்படி ஒரு பக்கம் போராட்டங்கள் தொடர்ந்தாலும், நான் இன்னொரு பக்கம் படித்துக்கொண்டே வந்தேன். எல்லா வகுப்பிலுமே நான் முதன் முறை அட்டெண்ட் பண்ணியவுடன் பாஸ் செய்யவேயில்லை. கணக்கில் 4 மார்க் கூட வாங்கியிருக்கேன். எனக்கு சிறுவயதில் படிக்காமல் போன ஏக்கம் இருந்ததாலோ என்னவோ பெயில் ஆனாலும் பெரிதாகக் கவலைப்படமாட்டேன். அந்த பாடங்களை மீண்டும் ஒரு முறை படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததே என்று சந்தோஷம்தான் பட்டிருக்கிறேன். விடாமல் பாஸ் செய்யும் வரை திரும்பத் திரும்ப தேர்வு எழுதினேன். ப்ளஸ்டூ பாஸ் செய்ததும் அந்த சர்டிபிகெட்டை பெற நான் தேர்வு எழுதிய பள்ளியில் அந்தப் பள்ளி மாணவர்களோடு வரிசையில் நின்றபோது கண்ணீர் பொங்கியது எனக்கு. மறக்கமுடியாத நிமிடங்கள் அவை. அதன்பின் நேரடியாக எம்.காம் படிப்புக்கு விண்ணப்பித்தேன்.  இப்போது நான் எம்.காம் பட்டதாரி. 2008ல் நான் பட்டம் வாங்கினேன்.என்கிறார் மாரிமுத்து.

மீண்டும் அரசு பத்தாயிரம் சாலைப்பணியாளர்களையும் பணியிலமர்த்தியது. அதன் பின் அரசாங்கம் இவரது படிப்பிற்குப் பரிசாக இவருக்கு சாலைப்பணியாளரிலிருந்து சாலை ஆய்வாளராக பதவி உயர்வு அளித்தது. சாலைப்பணியாளர் பணியில் கடும் உடல் உழைப்பை செலுத்த வேண்டி வரும். சாலைகள் அமைத்தல், தார் ஊற்றுவது உட்பட பல வேலைகள் உண்டு. சாலை ஆய்வாளருக்கு இந்த வேலைகளை மேற்பார்வை செய்யும் பணியோடு, புதிய சாலைகள் அமைத்தால் அவற்றிற்கான உத்தேச செல்வுத்திட்டத்தை அளித்தல், தினமும் நடக்கும் பணிகள் குறித்த விவரங்களை சரிபார்த்தல் போன்ற பணிகளும் உண்டு.

இவர் தனியாக எந்த டுட்டோரியல் காலேஜிலோ, டியூஷனோ போகாமல் சொந்த முயற்சியில் தான் இவ்வளவு படித்திருக்கிறார் என்பது வியப்பான செய்தி. “அக்கவுண்டன்ஸி படிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன். ஆனால் சிறு வயதிலிருந்தே வியாபாரக் கணக்கு போட்டு பழக்கமானதாலோ என்னவோ.. எளிதில் பிடித்துக்கொண்டேன். எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் என் பிள்ளைகள் எனக்கு ஆசிரியராக இருந்ததுதான். கணக்கு பாடமெல்லாம் என் பிள்ளைகள் எனக்கு சொல்லித்தந்தனர். அவர்களோடு நானும் அமர்ந்து ஒன்றாகப் படிப்பேன். வயது குறைந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எனக்கு ஆசிரியர்களே!என்கிறார் நெகிழ்ச்சியோடு.

தற்போது மாரிமுத்து விருதுநகரில் வசிக்கிறார். விருதுநகரின் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரடு முரடான சாலைகளில் பயணித்தால் வருகிறது முத்துராமலிங்கம் நகர். அங்கே பழைய சிவகாசி சாலைக்கருகில் உள்ள ஆனைக்குழாய் தெருவில் இருக்கிறது மாரிமுத்துவின் வீடு. மனைவி புவனேஸ்வரி மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். மூத்தமகள் முருகேஸ்வரி வெளியூரில் பதினொன்றாம் வகுப்பும், அடுத்த மகன் சக்திவேல் 10ஆம் வகுப்பும், கடைக்குட்டி மகாலட்சுமி 9ஆம் வகுப்பும் படிக்கிறார்கள்.

நான் மாநிலத்திலேயே முதலாவதாக வருவேன் – மகாலட்சுமி, பி.எல்., ஐ.ஏ.எஸ்”  என வீட்டு சுவற்றில் சாக்பீஸில் கிறுக்கி வைத்திருக்கிறாள் மகாலட்சுமி. “அப்பா இந்த வயதிலும் படிக்கிறாங்க. அதனால நாங்களும் நல்லா படிக்கணும்னு குறியா இருக்கிறோம்என்கிறாள் மகாலட்சுமி.

மதுரை மருத்துவக்கல்லூரியில் உடல்தானத்திற்கு எழுதிக்கொடுத்திருக்கிறார். மாரிமுத்து. இவரைப் பார்த்து இவரது மனைவியும் குழந்தைகளும் கூட உடல்தானத்தில் ஆர்வமாய் இருக்கிறார்கள்
.
“நாகப்பட்டினத்தை சுனாமி தாக்கியபோது பல குழந்தைகள் பெற்றோரை இழந்தார்கள். அவர்களில் இரண்டு குழந்தைகளையாவது தத்தெடுத்து படிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் எங்க வீட்டு கஷ்டத்தில் அந்தப் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று புரியவில்லை. அத்னால் மனபாரத்தோடு அந்தத் திட்டத்தை கைவிட்டோம்.என்றார் மாரிமுத்துவின் மனைவி புவனேஸ்வரி வேதனையோடு.

குடிசை வீடாக இருந்ததை இந்தியன் வங்கியில் கடன் பெற்று கான்கிரீட் வீடாக மாற்றிக் கட்டியிருக்கிறார் மாரிமுத்து. ஒரு சைக்கிள் இருக்கிறது. எங்கே போவதாக இருந்தாலும் சைக்கிளில்தான் செல்கிறார். அரசாங்கம் அவருக்கு சைக்கிள் அலவன்ஸ் கொடுக்கிறது.

“முக்கியமான ஒரு விஷயம் சொல்ல வேண்டும். இடையில் மது, சிகரெட் பழக்கம் எனக்கு அதிகமானது. என் மனைவி என்னுடைய இந்த நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டார். சில வருஷங்கள் ரொம்ப மோசமான நிலைமையில் இருந்தேன். படிக்கத் தொடங்கியதும், எங்கள் சாலைப்பணியாளர் சங்கத் தொடர்புகள் ஏற்பட்டதும் என் வாழ்க்கையை மாற்றின. கொள்கைப்பிடிப்பு வந்தது. நமக்கும் பொறுப்பிருக்கிறது. இப்படி இருக்கக்கூடாது என உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவற்றிலிருந்து விடுபடத் தொடங்கினேன். இப்போது நான் முழுமையான மனிதனாக இருக்கிறேன். மனநிறைவாக இருக்கிறேன். எப்படி வாழக்கூடாது என்பதற்கும் நானே உதாரணமாக இருந்தேன். அவற்றிலிருந்து மீண்டு வந்து எப்படி வாழவேண்டும் என்பதற்கும் நானே உதாரணமாக இருக்கிறேன்.என்கிறார் மாரிமுத்து.

தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்விற்கு விண்ணப்பித்திருக்கிறார் மாரிமுத்து. மாரிமுத்துவின் கல்விதாகம் எம்.காம். படிப்போடு நின்று விடவில்லை. மதுரையில் உள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக்கில் மாலைநேரத்தில் டிப்ளமோ பயில்கிறார். இதில் தேர்ச்சி பெற்றவுடன் இவருக்கு இளநிலை பொறியாளர் பதவி காத்திருக்கிறது.

“நான் இழந்த கல்வியை கற்றுக்கொண்டே இருப்பேன். மரணம் வரை மாணவனாக இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசைஎன்கிறார் மாரிமுத்து.

சல்யூட் மாரிமுத்து சார் !!!

நன்றி: புதிய தலைமுறை

11 comments:

  1. மரணம் வரை மாணவனாக இருக்கவேண்டும்
    என்பதுதான் என் ஆசை " என்று சொன்ன
    மாரிமுத்துவின் உற்சாகம் அற்புதமானது !

    ReplyDelete
  2. மாரிமுத்து தோழர் ஒரு உற்சாகமான ஆள். அவர்கள் வேலை கேட்டு போராட்டம் நடத்திய காலத்தில் செய்தி சேகரிக்க செல்வேன். மனுசன் கொஞ்சம் கூட வருத்தமே இல்லாமல், வெற்றி பெறுவோம் என்ற உறுதியோடு பேசுவார். அவரிடம் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. கட்டுரை மூலம் அவரை சந்தித்து மகிழ்ச்சி

    ReplyDelete
  3. உற்சாகமூட்டும் பதிவு. நன்றி!

    //நான் இழந்த கல்வியை கற்றுக்கொண்டே இருப்பேன். மரணம் வரை மாணவனாக இருக்கவேண்டும் //

    ரியலி சல்யூட் மாரிமுத்து சார்.

    ReplyDelete
  4. எஸ்.எஸ்.ஜெயமோகன், சிவப்ரியன்

    நன்றிகள் பல.

    உங்களுடன்..

    என்ன கவாஸ்கர் இது? இந்தப் பேரில் வந்தவுடன் ஒன்றும் புரியவில்லை. பேஸ்புக் பார்த்தபின் தான் இது நீதான் என்று புரிந்தது.

    ReplyDelete
  5. marimuthu story is a emotional story..He is a living example for hard work and struggle

    ReplyDelete
  6. அன்பு கவின்

    மிக அருமையான நேர்காணல். அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். எங்கே துவங்கி எப்படி வளர்த்து எங்கே முடிப்பது என்று நேர்த்தியாகச் செய்து வழங்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    வாழ்வின் போராட்டத்தில் சந்திக்க வேண்டியிருக்கும் சவால்களையும்,நம்பிக்கை வெளிச்சத்தையும் மிகச் சிறப்பாக அளிக்கிறது இந்தப் பதிவு.

    எனக்கு ஒரே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. "இரவுகள் உடையும்" ஆவணப் படத்தை எங்காவது கொண்டு வந்திருப்பீர்களோ என்று. அதையும் தக்க முறையில் இணைத்திருந்தீர்களானால், தனி நபர் வெற்றியில் ஒரு பொது வெற்றியும், பொதுப் போராட்டத்தில் விடிவு காணும் தனி நபரின் வாழ்க்கையும் தரிசிக்கக் கிடைத்திருக்கக் கூடும்.

    வாழ்த்துக்கள் கவின்

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  7. GREETINGS FROM NORWAY! GREAT EXAMPLE TO MY TAMIL BROTHERS AND SISTERS WHO MISSED EDUCATION DURING THEIR YOUNG LIFE!
    NEVER GIVE UP!EDUCATION IS THE KEY TO SURVIVE IN THE FUTURE WORLD!

    KAVIN!THIS IS WONDERFUL INTERVIEW!PLEASE INTRODUCE MORE TAMLS WHO SHOWED FINE EXAMPLE TO OUR TAMIL COMMUNITY TOWARDS PROGRESS/UNITY!

    ReplyDelete
  8. தோழர்க்ள் விமலா வித்யா, எஸ்.வி.வேணுகோபாலன், சண்முகநல்லையா!

    மிகவும் நன்றி!

    உண்மை தான்! தோழர் மாரிமுத்துவின் கதை உத்வேகத்தை அளிக்கக்கூடியது. அவர் தனது இல்லத்திற்கு “வெண்மணி இல்லம்” என்று பெயர் வைத்திருப்பது கூடுதல் தகவல்.

    எஸ்.வி.வி தோழர்!

    “இரவுகள் உடையும்” ஆவணப்படம் வெளியிடப்பட்ட சமயத்தில் பார்த்தேன். தோழர் சண்முக ராஜாவின் பெயர் நினைவில் இருக்கிறது இன்னமும். ஆனால் ஏனோ மாரிமுத்து தோழர் அத்திரைப்படத்தில் வந்தது கவனத்தில் இல்லை. நெடுநாட்களாகி விட்டதில்லையா? சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வருத்தமாக இருக்கிறது. ச்ட்டிக்காட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  9. anbulla kavin
    mika arumaiyana arimukam.
    latha

    ReplyDelete
  10. லதா!

    நன்றிகள் பல.

    ReplyDelete
  11. Anonymous11:18 pm

    Very nice. Motivating to read and study more not for money, but for learning

    ReplyDelete