Wednesday, September 10, 2014

ஆட்டத்தை மாற்றியவர்கள் - புதிய பாதையில் தமிழ் சினிமா

மரபுக்கவிதையிலிருந்து புதுக்கவிதைக்கு தமிழ்க் கவிதை மாறிய காலகட்டம்போல் இன்றைய தமிழ் சினிமா இருக்கிறது என்கிறார் திரைப்பட விமர்சகர் ராஜன் குறை. புதிய இளைய இயக்குநர்களால் நிரம்பி வழிகிறது கோடம்பாக்கம். புதிதாக சிந்திக்கிறார்கள். கருத்து, காட்சி என அனைத்துமே புதுமை. எழுபதுகளின் இறுதியில் பாரதிராஜாவின் வருகை தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு இட்டுச் சென்றது. அதன்பின் மணிரத்னம் அதை வேறொரு தளத்துக்கு இட்டுச் சென்றார். தொண்ணூறுகள் தமிழ் சினிமாவின் தேக்ககாலம் எனலாம். தமிழ் சினிமா முற்றிலும் அடையாளம் இழந்துபோய் புற்றீசல் போல மசாலா படங்கள் வந்து குவிந்த காலம் அது. தொண்ணூறுகளின் இறுதியில் வெளியான பாலாவின் சேது தமிழ் சினிமாவை மீட்டது. அவரைத் தொடர்ந்து பாலாஜி சக்திவேல், செல்வராகவன், அமீர், வெற்றிமாறன், வசந்தபாலன், பாண்டிராஜ், சசி குமார், சிம்புதேவன், சுசீந்திரன், வெங்கட்பிரபு என்று பல இளைஞர்கள் தமிழ் சினிமாவின் முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார்கள். அர்த்தமுள்ள படங்கள் வரத்துவங்கின. ஆனாலும் இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களிடம் துணை இயக்குநர்களாக பணியாற்றியவர்கள்தான்.



கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா இன்னுமொரு கட்டத்தைத் தாண்டியுள்ளது. எவரிடமும் துணை இயக்குநராக இல்லாத இயக்குநர்களின் வருகை திரைப்படத்தின் வரையறைகளை புரட்டிப்போட்டது. ஒருபுறம் ரஜினி, கமல், விஜய், அஜீத் என்று அவர்களின் ரசிகர்களுக்கான படங்களும் வந்து வெற்றிபெற்றாலும் புதிய ஊற்றாய் புறப்பட்ட இளம் இயக்குநர்களின் படை ஒவ்வொரு படத்தின்மூலமும் ரசிகர்களை அசரடித்தனர். தண்ணீரே வந்து சேராத கடைமடைப் பகுதி விவசாயிக்கு காவிரியில் நுரைபொங்க ஓடும் நீரைப் பார்த்தால் ஏற்படும் அதே உணர்வில் தமிழ் சினிமா ரசிகர்கள் உள்ளனர். நல்லவர்கள் மட்டும்தான் நாயகர்கள் என்பதை தமிழ் சினிமா உடைத்தது. அத்துடன் ஒரு பெரிய நாயகன் இருக்கவேண்டும். மிக அழகான கவர்ச்சியான கதாநாயகி வேண்டும்; கண்டிப்பாக டூயட் இருக்கவேண்டும்; ஒரு கவர்ச்சிப் பாடல் இருக்கவேண்டும்; இப்படி பல ‘வேண்டும்’களை துணிச்சலுடன் வேண்டாம் என்று புதிய இயக்குநர்கள் புறக்கணித்தனர். திரைக்கதையில் கவனம் குவிந்தது. அட்டக்கத்தி தினேஷ் போல தலித் பையன் ஒருவன் கதாநாயகன், ஒரு சுமார் மூஞ்சி குமாரு, ஒரு குழந்தையை கடத்துபவன், ’என்ன ஆச்சி’ என்று சொன்னதையே படம் முழுவதும் சொன்னாலும் சலிக்கவைக்காத நாயகன், எண்பதுகளின் கேமிராவுடன் அலைபவன், கண் தெரியாதவன், சீர்திருத்தப்பள்ளியில் படித்தவன், திருடன், ஒரு மதுரை தாதா, குறும்பட இயக்குநர்,  கார் ஓட்டுனர், வேலைவெட்டி இல்லாமல் கிராமத்துக்குள் வருத்தப்படாமல் சுத்துபவன் என்று அண்மைக்காலமாக திரையில் உலவும் வித்தியாசமான முகங்களில் இது வரை புறக்கணிக்கப்பட்ட முகங்களும் அடங்கும்.

“நம்ம நாலு பேர்ல நீங்க மட்டும்தான் ஹீரோன்னு யாராவது சொன்னாங்களா பாஸு” என்று மூடர் கூடம் திரைப்படத்தில் சென்றாயன் கேட்பது ஒட்டுமொத்த தமிழ்சினிமாவின் நாயக பிம்பத்தை உடைக்கும் ஒற்றைக் கேள்வி. பிறரை ஏமாற்றும் எவரையும் ஏமாற்றலாம் என நீதி சொல்லும் சதுரங்கவேட்டை, பகுத்தறிவை மிக நாசூக்காக பிரச்சாரமின்றி சொல்லும் முண்டாசுப்பட்டி, வடசென்னையின் சேரி நாயகனை கண்முன் நிறுத்தும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என எல்லாமே புதுசுதான்.

இயக்குநர்  பாண்டி ராஜ் “எங்கள் காலத்தில் ஓர் இயக்குநரை சந்திக்கச் சென்றால் முடியவே முடியாது. அவர் போகும் இடங்களுக்கெல்லாம் அவரை பின் தொடர்ந்து, அவர் பார்வையில் படும்படி நின்று கெஞ்சி அப்புறம்தான் நம்மை ஏறெடுத்துப் பார்ப்பார்கள். ஆனால் இப்போது கதை அப்படியல்ல. தகவல் தொடர்பு மிக எளிதாகிவிட்டது. வாட்ஸ் அப்பில் ஒரு குறும்படத்தை அனுப்பிப் பார்க்கச் சொல்கிறார்கள். காரில் போகும் ஒரு சிறிய பயணத்தில் அதைப் பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் கூப்பிட்டு சேர்த்துக்கொள்ளும் காலம் இது. நாளைய இயக்குநர் போன்ற நிகழ்ச்சிகள் பெரும் துணை புரிகின்றன. திரைப்படத்தின் glamour, grammer இரண்டையும் புதியவர்கள் உடைக்கிறார்கள். இது ஆரோக்கியமான ஒன்று” என்கிறார்.

இந்தப் படங்களின் பேசுபொருள் ஒருபோதும் காதலாக இல்லை. படத்தில் காதல் ஒரு அங்கமாக வந்தாலும் இவை எதுவுமே காதல் படங்கள் இல்லை. சொல்லப்போனால் ’அடுத்த வேளை சோற்றுக்கு வழியிருப்பவர்கள் காதலைப் பற்றி யோசிக்கலாம்’ என்கிறது மூடர்கூடம். ஒரு படி மேலேபோய் நாயகன் காதலியை ஒரு வேலை ஆகவேண்டும் என்பதற்காக காதலிப்பதுபோல் நடிக்கிறான்; எல்லாவற்றுக்கும் மேலே தமிழ் பேசுபவர்களே நடிகர்களாக இருக்கிறார்கள். “பாடல் காட்சிக்கு மட்டும் கதாநாயகி வேண்டும் என்றால் வெளிமாநிலங்களிலிருந்து அழைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு நடிக்க அதிக காட்சிகள் இருக்கையில் தமிழ் பேசும் நாயகிதான் தேர்வாக இருக்கவேண்டும்” என்கிறார் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இயக்குநர் கோகுல். குறிப்பாக புதுமுகங்களே பெரும்பாலும் நடிக்கின்றனர். ” புது முகங்களை வைத்து எடுப்பதால் படத்துக்கு ஃப்ரெஷ்னஸ் கிடைக்கிறது. ஆடிஷன் வைத்துதான் நடிகர்களைத் தேர்ந்தெடுக்கிறோம். ரிகர்சல் நடத்திவிடுகிறோம். ஜிகர்தண்டா படத்துக்கு வொர்க்‌ஷாப் நடத்தினோம் இது புதுமுக நடிகர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது” என்கிறார் ஜிகர்தண்டா இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

இந்தப் புதிய இயக்குநர்களின் வரவு உற்சாகமளிப்பதாகச் சொல்கிறார் சுசீந்திரன். “வாயை மூடிப் பேசவும் படம் போல டயலாக் இல்லாமல் ஒரு முயற்சி புதிதுதான்.  பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் பார்த்து வியந்தேன். புதிய எண்ணங்கள். ஆனால் இந்த வகை படங்களில் உணர்வுகள் குறைவாக உள்ளன என்பதை ஒரு சிறிய குறையாகப் பார்க்கிறேன். பார்வையாளரை உணர்ச்சிவயப்படுத்தும் தருணங்கள் ஒரு படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திவிடும். ஆனால் இதையெல்லாம் மீறி புதியவர்கள் ‘அட’ போட வைக்கிறார்கள்” என்கிறார்.

இப்போதெல்லாம் யாரும் இன்னொரு பாரதிராஜாவாகவோ அல்லது இன்னொரு மணிரத்னமாகவோ வரவேண்டும் என்று உறுதி ஏற்று வருவதில்லை. அவரவர் தனித்திறமையுடன் தனக்கான பலத்தை கண்டுபிடித்து அதற்கேற்ற திரைக்கதையை எழுதுகிறார்கள். புதியவர்கள் யாரிடமும் துணை இயக்குநராக இல்லாமல் குறும்படங்க்ளை எடுத்து அதை தயாரிப்பாளரிடம் போட்டுக்காண்பித்து வாய்ப்பை பெறுகிறார்கள். “துணை இயக்குநராக பணிபுரியும்போது யாரும் வகுப்பு எடுப்பதில்லை. பார்த்துப் பார்த்து அனுபவத்தின்மூலம்தான் ஒரு படம் எடுக்கும் விதத்தை கற்றுக்கொள்ள முடிகிறது. அதையே நேரடியாக குறும்படங்கள் எடுத்து அனுபவம் பெற்று வருவதும் ஒரு வகையில் சிறப்பான விஷயம்தான்” என்கிறார் பாண்டி ராஜிடன் துணை இயக்குநராக இருந்த மூடர் கூடம் இயக்குநர் நவீன்.

துணை இயக்குநராக பணியாற்றாமல் முதல் படம் கொடுக்கும் பாரம்பரியத்தை அண்மைக்காலத்தில் ஆரண்ய காண்டம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா தொடங்கி வைத்தார். ”நான் உட்பட அப்படியானவர்களிடம் அயல்நாட்டுப் படங்களின் தாக்கம் உண்டு. ஆனால் காப்பி அடிப்பது வேறு. மரபான பாணியில் இல்லாது கண்டதை கேட்டதை வைத்து படமெடுப்பதாலேயே இப்படங்கள் மரபுகளை உடைபப்தாக உணர்கிறேன். இந்த புதிய அலைக்குக் காரணமே அயல்நாட்டுப் படங்களின் தாக்கமும், வித்தியாசமாக சிந்திப்பதும்தான்.” என்கிறார் தியாகராஜன் குமாரராஜா. ”நிறைய படவிழாக்கள் நடக்கின்றன. விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் துறை பல கல்லூரிகளில் வந்துவிட்டது. முன்பெல்லாம் அறிவுஜீவிகள்தான் அங்கு போவார்கள். ஆனால் இப்போது சாதாரண ரசிகர்களும் படவிழாக்களுக்குச் செல்கின்றனர். ஆகவே காப்பி அடித்தால் மிக எளிதாக கண்டுபிடித்துவிடுவார்கள்” என்கிறார் திருமணம் என்னும் நிக்காஹ் படத்தின் இயக்குநர் அனீஸ்.

“நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றவர்கள் துணை இயக்குநர்களாக இல்லாவிட்டாலும் 15 ஆண்டுகள் சினிமாவை உற்றுநோக்கி அதிலேயே உழன்றிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு உகந்ததுபோல ஒரு கோடி செலவில் ஒரு படத்தை எடுத்துவிட முடிவது சாதகமான விஷயம். அதனாலேயே பெரிய ஸ்டார்களை போடமுடியாது. எங்களுக்கேற்ற மாதிரி புதுமுகங்களை தேர்வுசெய்வதால் நாங்கள் நினைக்கும் நேரத்தில் அவர்களால் வரவும் முடியும்” என்கிறார் சதுரங்க வேட்டை இயக்குநர் வினோத்.

ஆனால் மூத்த இயக்குநரான பாக்கியராஜின் கருத்தோ வேறுமாதிரி இருக்கிறது. ”இவர்கள் களப்பயிற்சி ஏதுமின்றி சினிமாவைப் பார்ப்பதுமூலமாகவே படம் எடுக்கிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஆனால் இதுவே சினிமாவுக்கான இலக்கணம் அல்ல. முதல் படத்தில் வெற்றி பெறுகிறார்கள். அடுத்தடுத்த படங்களை பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்.

படங்களில் உதட்டசைத்து இப்போதெல்லாம் யாரும் பாடுவதில்லை. கதையின்போக்கில் பாடல் வருகிறது. அல்லது பாடலுக்குள் கதை நகர்கிறது என்பதால் பாடல்காட்சியில் எவரும் எழுந்துபோக முடியாது. “உதட்டசைத்து பாடுவதென்றால் ஆடுகளம் படத்தில் வரும் ஒத்தச் சொல்லாலே போன்ற பாடலை வைக்கலாம். வெற்றிமாறன் போல அதைச் சரியாகச் செய்யமுடியுமென்றால் செய்யலாம். இல்லையெனில் பின்னணியில் மட்டும் பாடல் ஒலிப்பதுபோல் வைக்கலாம்” என்கிறார் சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமி.

பழைய மரபுகளை உடைத்தெறிகிறார்கள் புதியவர்கள். போகிறபோக்கில் ஒரு லிவிங் டூகெதர் ஜோடியை பீட்சாவில் எந்தச் சலனமும் ஆர்ப்பாட்டமுமின்றி காண்பித்துவிட்டுப் போகிறார் கார்த்திக் சுப்பாராஜ். ஆனால் பெரிய இயக்குநர்களின் படங்களில் இவை எல்லாமே ஒரு பெரிய புரட்சி போல் காண்பிக்கப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். புதியவர்களுக்கு முன்னோடியான செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனிக்காக நாயகன் ஒரு குளியலறையில் பல் துலக்குவதும், அருகே நாயகி மேற்கத்திய கழிவறையில் அமர்ந்திருப்பதுமான போஸ்டர் ஏற்படுத்திய சலசலப்பை மறந்துவிட முடியாது.

”புதிய இயக்குநர்களிடம் ஹாலிவுட் இயக்குநர்களின் பாதிப்பு உள்ளதை உணரமுடிகிறது. வெகுஜன சினிமாவுக்குள் ஒரு இணை சினிமாவை இதன்மூலம் நிகழ்த்திக்காட்ட முடிகிறது. புதிய இயக்குநர்கள் நிறைய படங்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் வாசிப்பு பழக்கமும் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போதைய படங்கள் அனைத்துமே பணம், க்ரைம், த்ரில்லர் என்கிற வகைகளுக்குள் அடக்கிவிடலாம். இதில் நல்லவன் கெட்டவன் இல்லை. ஹீரோயிசம் கிடையாது. ப்ளாக் காமெடி உண்டு. மக்களை 3 மணி நேரம் தங்கள் பிடியில் வைத்திருக்கும் அதே சமயத்தில் வணிக சினிமாவுக்குள் ஒரு மாற்று முயற்சி என்கிற வகையில் கதாநாயகத்தன்மையை உடைக்கும் இப்படங்களை வரவேற்க வேண்டும்” என்கிறார் அட்டகத்தி இயக்குநர் பா.ரஞ்சித்.

ஆனால் இப்படங்கள் அனைத்துமே ஏ செண்டர் படங்களாக அமைவதன் காரணம் என்ன? “அனைத்து செண்டரிலும் ஹிட்டாகும் படத்துக்கான கதை எழுத வேண்டும் என்று ஆரம்பித்தால் பிரச்சனைதான். ஜிகர்தண்டா படத்தில் சில காட்சிகள் மாஸ் ஆக இருக்கு என்றார்கள். இதெல்லாம் தானாக அமைவதுதான். ஸ்க்ரிப்டுக்கு நேர்மையாக இருப்பதுதான் வெற்றிக்கு சிறந்த வழி.” என்கிறார் கார்த்திக் சுப்பாராஜ்.

”இன்னொரு மாற்றம் படங்களுக்கு வைக்கப்படும் பெயர்கள். எண்கணித ஜோதிடப்படி பெயர்கள் வைக்கும் அதே சினிமாவில்தான் மிக அழகான பெயர்கள் படங்களுக்கு வைக்கப்படுகின்றன. சதுரங்க வேட்டை, மஞ்சப்பை, குக்கூ, பூவரசம் பீப்பி, ஜிகர்தண்டா, முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் என்று யாரும் யோசிக்காத புதுப்புது பெயர்கள்” என்று சிலாகிக்கிறார் ஒரு துணை இயக்குநர்.

புதியவர்கள் படங்களுக்கான விளம்பரம் செய்யும் யுக்தியும் வித்தியாசமாகவே உள்ளது. ”ப்ரமோஷனில் புதிய உத்திகளைக் கையாள வேண்டியிருக்கிறது முண்டாசுபட்டி படத்துககு புதுமையான வகைகளில் ப்ரமோஷன் செய்தது நல்ல பலனளித்தது.” என்கிறார் முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம்குமார். கார்ட்டூன் போல வித்தியாசமான போஸ்டர்கள் முண்டாசுப்பட்டியை நோக்கி ரசிகர்களை வரச் செய்தன. “மவுண்ட் ரோட்டில் ஜெமினி மேம்பாலத்தில் ஒரு குதிரையின்மீது நாயகன் அமர்ந்திருப்பது போல படம்போட்டு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்” என்று விளம்பரம் செய்தோம். இது மக்களுக்குப் பிடித்திருந்தது “ என்கிறார் கோகுல். ஆனால் வெறும் விளம்பரங்களை மட்டும் நம்பி மக்கள் வருவதில்லை. “இந்த ஆண்டு நல்ல படம் என்று சொல்லப்பட்ட அனைத்து படங்களும் ஓடியிருக்கின்றன. ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது. புதுமையான முயற்சிகளை ஏற்கத் தொடங்கிவிட்டார்கள். கமர்ஷியல் படங்கள், மசாலா படங்கள் மட்டுமே வேண்டும் என்று ரசிகர்கள் கேட்பதில்லை.” என்கிறார் ராம்குமார். ”ப்ரமோஷனுக்காக யோசித்த விஷயம் படத்தில் சீனாக வைக்கும் அளவுக்கு நன்றாக இருக்கும். சீனாக யோசித்து படத்தில் வைக்க முடியாததை பிரமோஷனுக்கு பயன்படுத்துவதும் நடக்கும்.” என்கிறார் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குநர் பொன்ராம்.

இந்தப் புதியவர்கள் சமூக வலைதளங்களை காத்திரமாக பயன்படுத்துகிறார்கள். சில சமயம் சாதகமாகவும் சில சமயம் பாதகமாகவும் முடிகிறது இவ்விமர்சனங்கள். “சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுதுவதை யாரும் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றிருப்பதால் முழுக் கதையையும் சில நேரங்களில் படத்தின் மையமான் ட்விஸ்டையும் எழுதிவிடுகிறார்கள்” என்கிறார் பொன்ராம். “முன்பு அதில் ஒரு கண்னியம் இருந்தது. இப்போதெல்லாம் தங்களுக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். ஆகவே அவற்றை முழுமையாக நம்பமுடியவில்லை” என்கிறார் ஹரிதாஸ் இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன்.

ராஜுமுருகனின் குக்கூ பார்வையற்றோரின் காதலையும், ஜி.என்.ஆர். குமாரவேலின் படமான ஹரிதாஸ் ஒரு சிறுவனுக்கும் அப்பாவுக்குமான கதையாகவும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கோச்சடையான் வித்தியாசமான அனிமேஷன் முயற்சியாகவும்., அட்லீயின் ராஜா ராணி தம்பதிகளுக்கிடையேயான உறவுச் சிக்கலைப் பேசுவதாகவும், கிருத்திகா உதயந்தியின் வணக்கம் சென்னை வெற்றிகரமாக ஓடியும் கவனத்தைக் கவர்ந்தன.

இன்றைய இயக்குநர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்று அயல் நாட்டு படங்களைக் கண்டு அதன் பாதிப்பில் நம் மண்ணுக்குப் பொருந்துவதான கதையை எழுதி படமாக்குபவர்கள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பண்ணையாரும் பத்மினியும், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்போல அயல்நாட்டுத்  தாக்கங்கள் இல்லாத ஆனால் வேறுபட்ட கதைகள். ஆனால் இவ்விரு வகை இயக்குநர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. முந்தைய தமிழ் சினிமா இயக்குநர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்களாக இவர்கள் உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் மண்ணின் மனம் வீழும் ‘அட்டகத்தி’ போன்ற படங்கள் அல்லது எந்த மொழிக்கும் பொருந்தும் ‘ஆரண்ய காண்டம்’ போன்ற படங்கள். இரண்டுமே ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடுவதாய் இருப்பது ஆரோக்கியமான விஷயம். 

(நன்றி : இந்தியா டுடே)

Wednesday, August 20, 2014

வலுப்படுத்தவேண்டிய வன்கொடுமை தடுப்புச் சட்டம்

அண்மையில் சென்னை பல்கலைக்கழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. பா.ம.க. வழக்கறிஞர் பாலு சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஒரு தரப்பு சட்டம் வலுப்பெறவேண்டுமென கேட்பதும் மறுதரப்பு சட்டம் ரத்து செய்யப்படவேண்டுமென கோருவதுமே இச்சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.


“பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதிகள் தலித் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சுதந்திரம் பெற்றபிறகும் ஆதிக்க சாதி நில உடைமையாளர்கள் தலித் மக்களை இழிவாகவே நடத்திவந்தனர். இதற்கு 1959 ராமநாதபுரம், 1968ல் கீழ் வெண்மணி  என்று பல கொடூரங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பழங்குடியின மக்கள்மீதான பெரும் வன்முறை வாச்சாத்தி சம்பவம். 2012ல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருந்தும் தர்மபுரியில் தலித்துகளின் ஊர்கள் கொளுத்தப்படுகின்றன. இச்சட்டங்களை இன்னும் வலுப்படுத்தவேண்டும் என்றுதான் இத்தகைய சம்பவங்கள் நமக்குச் சொல்கின்றன என்கிறார் வன்கொடுமை தடுப்புச் சட்ட வரைவை தயார் செய்த குழுவில் இருந்த பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.

1955ல் தலித் மக்கள் மீதான கொடுமைகளை தடுப்பதற்கென குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டம் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதால் 1989ல் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தை மேலும் வலுவாக்கவேண்டுமென பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசு பிப்ரவரி மாதம் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இப்போதுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து வலுவாக்கும் விதத்தில் அச்சட்டம் இருந்தது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கும் இச்சட்டத்தை தலித் மக்கள் வரவேற்கிறார்கள்.

“1997ல் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 7 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டனர். இது சாதியப் படுகொலை என்பது ஊரறிந்த உண்மை. ஆனால் இது அரசியல் படுகொலை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சட்டம் இருந்தும் அது சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. ஆகவே இச்சட்டம் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக செயல்படுகிறதா என்று கண்காணிக்க மாநில அளவிலான 25 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவர் முதல்வர். எத்தனை முறை இக்குழு கூட்டப்பட்டப்பட்டுள்ளளது என்கிற அறிவிப்பு கூட இதுவரை இல்லை” என்கிறார் எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர்.

வழக்கறிஞர் பாலு ஏன் இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்கிறார்? இச்சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது இவருடைய வாதம். இவருடைய மனு என்ன சொல்கிறது. “1953இல் இயற்றப்ப்ட்ட சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம் தீண்டாமையைக் கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தண்டிக்கிறது. ஆனால் 1989இல் இயற்றப்பட்ட எஸ்/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் மீது தீண்டாமையை கடைபிடிக்கும் மற்றவர்களை மட்டுமே தண்டிக்கிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. தலித்துகளிலேயே உட்பிரிவுகளில் ஒரு பிரிவை மற்றொரு பிரிவு ஒதுக்குகிறது. இந்த தீண்டாமையை தண்டிக்க வழியில்லை. எனவே இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது”

”ஆடு நனையுதென்று ஓநாய் ஏன் அழவேண்டும்?” என்று கேட்கிறார் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளரும் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவருமான சாமுவேல் ராஜ். “பாலுவின் மனு சொல்வதுபோல தலித் உட்பிரிவுகளுக்குள் உள்ள தீண்டாமையை தண்டிக்க வழியில்லை என்றால் இச்சட்டத்தை மேலும் வலுப்படுத்தி அதற்கென்று பிரிவுகளை சேர்க்கத்தானே சொல்லவேண்டும்? அதைவிட்டுவிட்டு ரத்து செய்யச் சொல்வது இவர்களுடைய நோக்கத்தை அப்பட்டமாகக் காண்பிக்கிறது. தலித்துகளுக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு தமிழகத்தில் இருப்பது போல இதற்கும் சட்டத்தில் மாற்றம் கேட்டு போராடவேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு ஏன் ரத்து செய்யச் சொல்லவேண்டும்?  ‘1955 சட்டம்தான் தீண்டாமைக்கு எதிராக இருக்கிறது. 1989 சட்டம் வன்கொடுமைகளுக்காகவே பேசுகிறது. ஆகவே 1955 சட்டம்தான் அரசியல் சாசனத்துக்குட்பட்டது’ என்பது பாலுவின் வாதம்.  இச்சட்டத்தின்படி போடப்பட்ட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே இது பொய்வழக்கு என்கிறது அவருடைய மனு. இதற்கு யார் காரணம்? காவல்துறையும் அரசும்தான் காரணம். அவர்கள்தான் சாதி உணர்வின் காரணமாகவோ அல்லது ஆதிக்க சாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டோ தலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இப்படியுள்ள நிலையில் மேலும் இச்சட்டத்தை வலுப்படுத்தவே கோருவோம். பாலுவின் மனுவுக்கு எதிர்மனுவை நாங்களும் தாக்கல் செய்துள்ளோம்” என்கிறார் சாமுவேல்ராஜன்.

தமிழகத்தில் கடந்த 2012ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் 2,00,474 வழக்குகள் உட்பட மொத்தம் 7,44,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வெறும் 1647 வழக்குகள்தான் பதிவாகின. மொத்த வழக்கில் 0.22 சதவிகிதம்தான். 2012ம் ஆண்டு இறுதியில் இச்சட்டதின்கீழ் நீதிமன்றத்தில் 4039 வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவற்றில் 119 வழக்குகளுக்கு மட்டும்தான் தண்டனை கிடைத்துள்ளது. தண்டனையின் சதவிகிதம் 17.7தான் என்கிறது எவிடென்ஸ் அமைப்பின் அறிக்கை.

”தீண்டாமை, வன்முறை என்பதுபோல மேல்மட்ட அளவில் பணியாற்றும் நிறுவனங்களில், கல்வி நிறுவனங்களில் தலித் என்பதால் பாகுபாடு காண்பிக்கும் போக்கு அதிகளவில் உள்ளது. பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பதவிக்கெல்லாம் தலித்துகள் எப்படியெல்லாம் நூதனமான முறையில் ஒதுக்கப்படுகிறார்கள் தெரியுமா? முறைப்படி நேர்முகத் தேர்வுக்கு அழைக்காமல் இருக்க முடியாது. அழைத்துவிட்டு தலித்தைவிட குறைவான தகுதியுடையவரை தேர்ந்தெடுத்துக்கொள்வது சர்வசாதாரணமாக நடக்கிறது. இப்படியான நுட்பமான தீண்டாமையை கையாள ஒரு சட்டம் வேண்டாமா? வன்கொடுமை தடுப்புச் சட்டம் மேலும் வலுவாக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம்” என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

“சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம அபாயகரமானது. எந்த ஒரு குற்றத்திலும் நிரூபிக்கும் பொறுப்பு அரசு மற்றும் காவல்துறையிடம்தான் உள்ளது. ஆனால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்மீது அந்த பொறுப்பு சுமத்தப்படுகிறது. உதாரணமாக இரண்டு வாகனங்கள் மோதி அதனால் தகராறு ஏற்பட்டால்அதில் ஒருவர் தலித்தாக இருந்தால் என் சாதியை வைத்து என்னைத் திட்டினார் என்று சேர்த்துச் சொல்லிவிடுகிறார். குற்றம்சாட்டப்பட்டவர்தான் அவரைதான் அப்போதுதான் முதன் முதலில் பார்க்கிறேன் என்றும் அவரது சாதி தனக்கு தெரியாது என்றும் நிரூபிக்க வேண்டும்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பதியப்படும் வழக்குகளுக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. புகார் கொடுத்தால் கண்டிப்பாக காவல்துறையினர் எஃபிஐஆர் பதிவு செய்தாக வேண்டும்,. அதைச் செய்ய மறுக்கும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்படும் புகாரில் உண்மைத்தன்மையை சோதிக்காமல் எஃபிஐஆர் பதிவு செய்துவிடுகிறார்கள்” என்று இந்தியா டுடேயிடம் தெரிவித்தார் பாலு.

“தலித் மக்கள் சட்டத்தின்மீது நம்பிக்கை இழக்கும்வண்ணம்தான் இதுவரை இச்சட்டம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முதல் தகவல் அறிக்கைக்கும் குற்றப்பத்திரிகைக்கும் முரண்பாடுகள் ஏதும் இருந்தாலே வழக்கு நிற்காது. இப்படி பல வழக்குகளில் ஆதிக்க சாதிகளுக்கு சாதகமாக நடந்துகொள்ளும் காவல்துறையை எத்தனை வழக்குகளில் பார்த்திருப்போம். புகார் கொடுத்த தலித் மீதே எதிர்புகார் கொடுக்க வைத்து மனதளவில் அவர்களை சோர்ந்துபோகச் செய்யும் வழிமுறையையும் தொடர்ந்து காண்கிறோம். இவற்றுக்கெல்லாம் தீர்வு சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தவறிழைத்தவர்கள் வெளியேறாதவாறு வலுவாக்கவேண்டும். அதை இந்த அவசரச் சட்டம் செய்திருக்கிறது” என்கிறார் சாமுவேல் ராஜன்.

வழக்குகளை பதிவு செய்யாமை, புலன் விசாரணையில் தாமதம், கைது நடவடிக்கைகளிலும்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் தாமதம், நீதிமன்ற விசாரணையில் தாமதம் என்று அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க அவசரச் சட்ட திருத்தம் உதவுமென்று தலித் மக்கள் நம்புகிறார்கள். அண்மைக் காலமாக அடிக்கடி நடைபெறுகிற ஆனால் புதிய வடிவங்களிலான வன்முறைகள் தொடர்பாகவும் புகார் பதிவு செய்ய பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு இச்சட்டம் உதவும் என்று அவசரச் சட்டம் கூறுகிறது.

வழக்கறிஞர் பாலுவின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. குடியரசுத் தலைவர் பிறப்பித்த அவசரச் சட்டத்தை ரத்து செய்யும் சக்தி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உண்டா என்பதுதான் இப்போதைய கேள்வி.  சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாலுவின் மனுவுக்கு இடையீட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். “நாடாளுமன்ற நிலைக்குழுவுக்குச் சென்றுவிட்ட ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து எதுவும் செய்துவிட முடியும் என்று நினைப்பது அறியாமை. தெரிந்தே இதைச் செய்வதால் இவ்விஷயத்தை வைத்து ஒரு விவாதத்தைக் கிளப்பி அரசியல் ஆதாயம் தேட முயல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. இப்படித்தான் தலித் அல்லாதோர் கூட்டணி, காதல் திருமண எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்தனர். இப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு பிரச்சாரம் செய்கின்றனர்.  இதில் தேர்தல் கணக்கும் வாக்கு வங்கி அரசியலும் உண்டு. இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு அம்பலப்படுத்தவே இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது” என்று இந்தியா டுடேயிடம் தெரிவித்தார் திருமாவளவன்.

என்ன சொல்கிறது அவசரச் சட்டம்?
  • தண்டனைக்குரிய குற்றச்செயல்கள் பட்டியலில் தலை-மீசை வழித்தல், நீர்ப்பாசன உரிமைகளை மறுத்தல், கையால் துப்புரவு பணி செய்ய வைத்தல், டலித்துகள் வேட்புமனு தாக்கல் செய்வதை தடுத்தல் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன
  • இந்திய குற்றவியல் சட்டத்தின்கீழ் தலித்துகளுக்கு எதிரான பொதுவான குற்றங்கள் சில சேர்க்கபப்ட்டுள்ளன
  • கால விரயத்தை தவிர்க்கும் நோக்குடன் குற்றங்களை விரைந்து விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றங்களையும் சிறப்பு அரசு வழக்குரைஞர்களையும் நியமிக்க வழிசெய்யப்பட்டுள்ளது.
  • குற்றங்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இரண்டு மாதங்களில் வழக்கை முடிக்க தனி நீதிமன்றங்களுக்கு அதிகாரம்
  • மிரட்டல்களிலிருந்து சாட்சிகளைக் காப்பாற்றும் வகையில அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பல முக்கிய உரிமைகள் சேர்க்கபப்ட்டுள்ளன
  • அனைத்து மட்டங்களிலும் அரசு ஊழியர்கள் தலித்துகளை வேண்டுமென்றே புறக்கணித்தால், கடமை தவறியவர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது (உதாரணம்: எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுத்தல்)
  • குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதிக்கப்பட்டவரை முன்பே தெரியும் என்றால் பாதிக்கப்பட்டவரின் சாதியை முன்பே அறிவார் என்றே நீதிமன்றம் கருதவேண்டும.
(நன்றி : இந்தியா டுடே)

Monday, August 11, 2014

ஜிகர்தண்டா

மதுரையில் உள்ள தாதா குறித்த கதை என்றால் ரத்தமும் அரிவாளுமாகவே வன்முறைக் காடாக இருக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துப் போவது ஜிகர்தண்டாவின் பலம். தாதா சேது குறித்து எச்சரித்து எல்லோரும் பயமுறுத்த நாயகன் சித்தார்த் மதுரைக்குப் புறப்பட்டு வரும்போது கிளம்பும் ஆர்வம் படம் முழுவதும் நீடிக்கிறது.


சேதுவாக நடித்திருக்கும் பாபி சிம்ஹாதான் கதையின் நாயகனாகிறார். தாதாவைப் போல மிரட்டவேண்டும், அடியாட்களிடம் அதட்டுவது என்று பயப்படவைக்கும் அதே வேளையில், கிணற்றுக்குள் ஆட்டம்போடுவது உட்பட ஒரு நகைச்சுவை நடிகருக்கான தன்மையும் வெளிப்படவேண்டிய பாத்திரத்தை அநாயசமாக கையாள்கிறார் சிம்ஹா. தியேட்டரின் கழிப்பறையில் அவர் என்று நினைத்து வேறொருவன் சுடப்பட்டு, அடியாட்கள் வந்து நின்றவுடன் வேறு கழிப்பறையைத் திறந்து உள்ளே நுழையும் காட்சி ஒன்று போதும். இயக்குநரின் திறமைக்கும் சிம்ஹாவின் நடிப்புக்குமான சாட்சி அந்தக் காட்சி. நாயகன், தளபதி, காட் ஃபாதர் என்று உதாரணப் படங்களை அடுக்கும்போது அரங்கம் கொள்ளாத வெடிச்சிரிப்பு. இந்த இடத்திலிருந்து சேது பாத்திரம் ஒரு தாதாவிலிருந்து பவர் ஸ்டார் போல ஆகிறது. இயக்குநர் இந்தப் பாத்திரத்தை இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாம் என்றாலும் சேது தன் நடிப்பில் அனைத்தையும் துடைத்தெறிகிறார்.

சித்தார்த்துக்கு நிறைய ஆர்வம், கொஞ்சம் பயம் கலந்த இயக்குநர் பாத்திரம் பொருந்துகிறது. நிறைவாக செய்திருக்கிறார். தாதா மனம் இளகுவதும் மென்மையான சித்தார்த் தாதா போல் இறுதிக்காட்சியில் விஜய் சேதுபதியை மிரட்டுவதுமான மாற்றத்துடன் படம் முடிகிறது. சிறிது நேரமே வந்தாலும் நாசரும் விஜய் சேதுபதியும் ரசிக்க வைக்கிறார்கள். லட்சுமி மேனனுக்கு அவ்வளவாக காட்சிகள் இல்லை. லட்சுமி மேனன் பாத்திரம் இல்லாமலேயே இந்தப் படம் நிறைவாக இருக்கும். கதாநாயகி என்றொருவர் இருக்கவேண்டும் என்பதற்காகவே வருகிறார். நடிப்புப் பயிற்சி தர வரும் நிஜ அரங்க கலைஞரான குரு சோமசுந்தரம் நடிப்பின்மூலம் வெகுவாக ஈர்க்கிறார். மதுபானக்கடை காட்சியின் ராமச்சந்திரனும், சித்தார்த்தின் நண்பராக வந்து பயந்து பயந்து சாகும் கருணாகரனும், அந்த பிட் படம் பார்ப்பவரும் ரசிக்க வைக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் வழக்கம்போல் பின்னணி இசையிலும் பாடல்களிலும் படத்திற்கு வலுவூட்டுகிறார்.சில காட்சிகளில் கத்திரி வைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும். புத்திசாலித்தனமான வசனங்கள், காட்சிகள் என்று வித்தியாசமாக யோசிக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கவர்கிறார். 

(நன்றி : இந்தியா டுடே)



திருமணம் என்னும் நிக்காஹ்

காதல் கதை என்றெண்ணி திரையரங்கத்துக்கு வருபவர்களுக்கு அதற்கு நேர்மாறான கதை இது என்பதை முதல் சில காட்சிகளிலேயே உணர்த்திவிடுகிறார் இயக்குநர். ரயில் பயணத்துக்காக ஒரு பொய் சொல்லப்போக அந்தப் பெயரிலேயே நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் ஜெய்யும் நஸ்ரியாவும் ஒருவருக்கொருவர் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாமலேயே முஸ்லிம் என்று எண்ணிக்கொண்டு ஒருவரையொருவர் கவர ஏதேதோ செய்கிறார்கள். 



நாயகனையும் நாயகியையும் ஒரே சாதியாக ஏன் காட்டவேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதிலும் நஸ்ரியாவுக்கும் ஜெய்க்கும் அந்த அய்யங்கார் பாத்திரம் பொருந்திப்போகவில்லை. எனினும், அய்யங்கார் வீடு எப்படி இருக்கும் என்பதை அச்சு அசலாக அப்படியே திரையில் வடித்திருக்கிறார்கள். அதுபோலவே ஜெய் இஸ்லாம் குறித்து தெரிந்துகொள்வதற்காக வரும் முஸ்லிம் பெரியவர் வீட்டின் காட்சிகளும் அசலாக இருக்கின்றன. 

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் தமிழ் சினிமாவில் அவர்களுக்கான நியாயம் சின்னச் சின்ன வசனங்களின் மூலம் சொல்லப்படுகின்றன. முஸ்லிம் பெரியவரின் வீட்டில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் மேட்ச் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது போன்ற சில காட்சிகள் நுட்பமானவை. ஜெய்யும் அவருடைய சகோதரரும் சேனல் மாற்றுகையில் முஸ்லிம் பாடல்களும் அய்யங்கார் பாடல்களுமாக ஓடிக்கொண்டிருப்பது ரசிக்க வைக்கும் காட்சி. இப்படி ஆரம்பத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தும் படம் பின்னால் திரைக்கதையில் பலமில்லாமல் தொய்வடைகிறது. ரயிலில் நஸ்ரியாவை விடியோ எடுக்கும் ஒருவன் அவருக்கே மேலதிகாரியாக வருவதை இடைவேளையில் ஒரு பெரிய திருப்பம் போல் காண்பிப்பதால் நாம் ஏதோ பெரிதாக எதிர்ப்பார்த்தால் அதுவும் ஒன்றுமில்லாமல் போகிறது. 

எல்லோரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். சில காட்சிகளை கிளைமாக்ஸுக்காக படம்பிடித்துவிட்டு அவற்றை இயக்குநரே வெட்டிவிட்டதுபோல தெளிவில்லாமல் தொக்கி நின்று அப்படியே முடிகிறது படம். படத்தின் மிகப்பெரிய ஆறுதல் ஜிப்ரானின் இசை. பாடல்கள் அனைத்தும் இனிமை. அதிலும் அந்த பரதநாட்டியப் பாடலை படமாக்கிய விதமும் பாடலும் அழகு. ஒளிப்பதிவு படத்துக்கு பலம். 

திருமணம் எனும் நிக்காஹ் என்கிற பெயர் ஏற்படுத்தும் தாக்கத்தை படம் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

(நன்றி: இந்தியா டுடே)

Tuesday, August 05, 2014

சதுரங்க வேட்டை - புதுவித காய் நகர்த்தல்

’குற்றவுணர்வு ஏற்படுத்தாத எச்செயலையும் செய்யலாம்’ என்று புதிய நீதியை அருளும் படத்தில் நாயகன் நடராஜ் பணத்துக்காக பிறரை ஏமாற்றும் தொழிலை கைகொள்பவர். பாம்புக்கு இளைய தளபதி விஜய் என்று பெயர் வைப்பதில் தொடங்கி, ஒரு ஆபரேஷனை முடித்தபிறகு செல்போனை எறியும் பாணி, எம்.எல்.எம். நிறுவனத்தில் மக்களை ஏமாற்ற பேசும் பேச்சு என மிக நிறைவாகவே நடித்திருக்கிறார். எம்.எல்.எம். காட்சிகள் அத்தனை சுவாரஸ்யம். நகைச்சுவை பொங்கும் வசனங்கள்தான் படத்தை முழுவதும் ஆள்கின்றன.’சொல்லும் பொய்யில் கொஞ்சம் உண்மை இருந்தால்தான் நம்ப முடியும்’, ’ஒருவனை ஏமாற்ற அவனுடைய ஆசையைத் தூண்டவேண்டும்’, ’பணம்தான் உலகில் கிளிஷே ஆகாத ஒரே விஷயம்’ போன்ற வசனங்களை ரசிக்க முடிகிறது என்றாலும் ‘க்ளிஷே’ போன்ற சொற்கள் சாதாரண மக்களுக்குப் புரியுமா என்ன? படம் தொடங்கி முடியும்வரை பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் சிரிப்பொலி எனச் செல்வதால் பல வசனங்களைக் கேட்க முடியாமல் போகிறது. 



படத்தின் இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு நடிகரும் சோடை போகாமல் நடித்திருக்கின்றனர். படத்தின் ஷாட்களும், கதை சொல்லும் பாணியும் ‘மூடர் கூடம்’ படத்தை நினைவுபடுத்துகின்றன. சியான் ரோல்டனின் பின்னணி இசை பேசுகிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் ரைஸ் புல்லிங் கலசத்தை செய்யும் காட்சியில் ஜெண்டை மேளமும் மேற்கத்திய இசைக்கருவிகளும் கொண்ட கலவையாக ஒரு பின்னணி இசையில் அசத்துகிறார். ஒளிப்பதிவு ப்ளாக் ஹியூமர் படத்துக்கேற்ப தன் பங்குக்கு தன் வேலையைச் செய்கிறது. விறுவிறுப்பான படத்தொகுப்பு படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. மூடநம்பிக்கைகொண்ட ஒருவனிடம் நூறு கோடியை கறக்க ஜோசியக்காரரை ரைஸ்புல்லிங் கலசம் குறித்து அறியச் செய்ய கண்டுபிடிக்கும் வழி சுவாரஸ்யம். மிகப் புதியதாய் யோசித்திருக்கிறார் இயக்குநர். இப்படியும் நூதனமாக ஏமாற்ற முடியுமா என்று வியப்பிலாழ்த்துகிறார். ‘காமன்மேன் குண்டு வைக்கும்போது ஏமாத்துறவனுக்கு துப்பாக்கி எங்கே விற்கும்னு தெரியாதா?’ என்று கமலையே கிண்டலடிக்கும் வசனத்திற்கு திரையரங்கத்தில் ஏக வரவேற்பு.

நாயகியாக வரும் இஷாரா நாயர் அன்பே உருவாக வருவதற்கும் காவல் நிலைய காட்சிக்கும் தொடர்பிருக்கிறதா இயக்குநரே? காவலர்கள் அவர்கள் பாணியில் அடித்து விசாரிக்க, எதுவுமே பதில் சொல்லாமல் அத்தனை அடியையும் வீரத்துடன் தாங்கிக்கொள்கிறார் நடராஜ். அடுத்து வரும் ஒரு காவலர் அவரிடம் அன்பாக உணவுதந்து விசாரிக்கும்போது ‘போடா பொட்டை’ என்கிறார். அன்பு காட்டும் ஆணுக்கு பொட்டை என்று பட்டமளித்து பெண்களையும் திருநங்கைகளையும் காயப்படுத்துகிறது படம். ஒரு நல்ல படத்தில் ஏன் ஒரு துளி விஷம்?

எனினும் சதுரங்க வேட்டையில் ராஜா, ராணி, யானை, குதிரை என வெட்டி வீழ்த்திவிட்டு இயக்குநர் வெற்றிபெறுகிறார். ஆடுகளத்தில் வெல்கிறது சதுரங்க வேட்டை.

(நன்றி: இந்தியா டுடே)

Wednesday, July 23, 2014

அத்துமீறுகிறதா காவல்துறை?

சென்ற ஆண்டு மரணமடைந்த தர்மபுரி நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனின் முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்வுக்காக ஊர் மக்கள் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 6 பேரையும் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்த்தில் கைது செய்திருக்கிறது தர்மபுரி மாவட்ட காவல்துறை. அவர்கள் உள்ளூரில் உள்ள வன்னிய சாதி தலைவர்களைக் கொல்லும் நோகக்த்தில் தலைமறைவாய் இருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரிடம் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்று காவல்துறை குற்றம் சாட்டுகிறது. ‘துடி’ இயக்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்ததாகவும் அவர்கள் அரக்கோணத்திலும், சென்னை மெரினா கடற்கரையிலும் ஆயுதப் பயிற்சி எடுத்தார்கள் என்றும் காவல்துறை கூறுகிறது.

அரக்கோணத்தில் ஆயுதப் பயிற்சி எடுத்ததாக தர்மபுரி மாவட்ட காவல்துறை கூறுவதுகுறித்து அரக்கோணம் உள்ள வேலூர் மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் இந்தியா டுடே பேசியபோது “இத்தகவலை உறுதிப்படுத்தவேண்டும். உறுதிப்படுத்தாமல் என்னால் எதுவும் சொல்ல முடியாது” என்றார். “வேலூர் காவல்துறைக்கும் சென்னை காவல்துறைக்கும் தெரியாமல் ஆயுதப் பயிற்சியை நத்தம் இளைஞர்கள் பெற்றார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார் துடி இயக்கத்தின் காப்பாளர் கிறிஸ்துதாஸ் காந்தி. ”எங்கள் இயக்கம் இதுவரையில் தலித் மக்களின் கல்விக்காக மட்டுமே பாடுபடும் ஓர் இயக்கம். ஆயுதப் போராட்டத்தில் முற்றிலும் நம்பிக்கை இல்லாத இயக்கம். தேவையில்லாமல் ஒரு தலித் இயக்கத்தை நக்சல் இயக்கம்போல சித்தரிப்பதன் மூலம் தலித்துகளுக்காக வேறெந்த அமைப்பும் வேலைசெய்யக்கூடாது என்கிற எச்சரிக்கையை விடுக்கிறது காவல்துறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என்றார்.

இளவரசனின் தந்தை இளங்கோவிடம் பேசியபோது “காவல்துறை. ஊரில் எல்லோரும் பதட்டத்தில் இருக்கிறார்கள். யாரை எப்போது கைது செய்வார்கள் என்றே தெரியாமல் ஆண்கள் ஊருக்கு வெளியே இருக்கிறார்கள். ஒரு நினைவஞ்சலி செலுத்த முயன்றால் தேசிய பாதுகாப்பு சட்டம் போடுவது எந்த ஊரில் நடக்கும்?” என்றார். “இமானுவேல் சேகரனுடைய நினைவிடம்போல இளவரசனுடைய நினைவிடம் தலித் மக்கள் ஆண்டுதோறும் வந்து அஞ்சலி செலுத்தும் இடமாக மாறிவிடக்கூடாது என்று நினைக்கிறது காவல்துறை. அதனால்தான் இவ்வளவு செய்கிறது. அஸ்ரா கர்க் தன் தலைமையிலான மாவட்டத்தில் நக்சல் இயக்கம் இல்லை என்று பிரச்சாரம் செய்வதற்காகவே அரக்கோணத்திலும் சென்னை மெரினா கடற்கரையிலும் ஆயுதப் பயிற்சி நடந்ததாகக் கூறுகிறார். நத்தம் கிராமத்திலிருந்து 50 பேரை அழைத்துக்கொண்டு வெளியேறி பயிற்சி தரும்வரை காவல்துறை என்ன செய்துகொண்டிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டாக கிராமத்தில் காவல்துறை குடியிருக்கிறதே? பிரிட்டிஷ் இந்தியாவில் கூட 144 தடைச் சட்டம் இவ்வளவு நாட்கள் எங்கும் நீடித்ததில்லை. ஆண்டுக்கணக்கில் நீட்டிப்பது உரிமை மீறல். அதை முதலில் திரும்பப் பெறவேண்டும்” என்கிறார் கிறிஸ்துதாஸ் காந்தி.

இது குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையில் கள ஆய்வுக்குச் சென்று வந்த குழு அண்மையில் விடுத்த அறிக்கை கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறது:1. நத்தம் கிராமத்தில் தலித்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது எனில் எப்போது அது கைப்பற்றப்பட்டது? ஏன் பத்திரிகையாளர்கள் அப்போது அழைக்கப்படவில்லை?  2.கடந்த பல மாதங்களாக நத்தம் கிராமத்துக்கு தீவிரவாதிகள் வந்து செல்வதும் நத்தம் தலித் இளைஞர்கள் ஆயுதப் பயிற்சி எடுப்பதும் காவல் துறைக்குத் தெரியுமெனில் ஏன் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் இளவரசன் நினைவு நாள் வரும் வரை காத்திருந்தனர்? 3. இளவரசன் சமாதிக்கு அருகில் கடந்த ஓராண்டாக சி.சி.டி.வி காமரா பொருத்தப்பட்டுள்ளது சமாதிக்கு வருபவர்களை மட்டுமின்றி ஊருக்குள் வந்து செல்பவர்களையும் அது படமெடுக்கும். ஆயுதப் பயிற்சி அளித்தவர்கள் வருகையை அது படம் எடுக்கவில்லையா? 4.மெரீனாவிலிருந்து ஆறு கி.மீ தொலைவில் கடற்கரையில் ஒரு ஆயுதப் போராட்டக் குழு ஆயுதப் பயிற்சி எடுக்க முடியுமா? தருமபுரி காவல்துறை ஒரு வேளை மாநகரக் காவல்துறை மற்றும் இதர கண்காணிப்புத் துறைகளைக் கிண்டல் செய்கிறதா?

இக்கேள்விகளுக்கு விடைதேடி தர்மபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கர்கை தொலைபேசியில் இரு முறை தொடர்புகொண்டபோதும் தானே அழைப்பதாகக் கூறியவர். இந்த இதழ் அச்சேறும் வரை தொடர்புகொள்ளவே இல்லை. 

(நன்றி: இந்தியா டுடே)

Monday, July 14, 2014

பொன்னியின் செல்வன்

மதுரையின் டி.வி.எஸ். லட்சுமி சுந்தரம் அரங்கம் நிரம்பி வழிந்தது. கல்கியின் பொன்னியின் செல்வனை மேடையில் கண்டுவிட துடித்தனர். எழுதப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவுபெறும் இந்த வேளையில் மேஜிக் லேண்டன் குழுவினரின் உருவாக்கத்தில் கல்கியின் வரலாற்றுப் புகழ் பெற்ற நாவல் மேடை வடிவம் கண்டிருக்கிறது. 1999ல் மேடையேறிய இந்த நாடகத்தை இந்த ஆண்டு மீண்டும் மேடையேற்றியுள்ளனர். அப்போது சின்ன பழுவேட்டரையாக நடித்த பேராசிரியர் மு.ராமசாமி இப்போது பெரிய பழுவேட்டரையராக நடிக்கிறார். அப்போது நடித்த நாசர் இப்போது இல்லை. இப்படி சிற்சில மாற்றங்கள்




தோட்டாதரணியின் பிரம்மாண்டமான மேடை அமைப்பு முதலில் பார்வையாளர்களை உள்ளிழுக்கிறது. முதல் காட்சியிலேயே பல கால எந்திரத்தில் பயணித்து பல நூற்றாண்டுகளைத் தாண்டிவிட முடிகிறது. பொன்னியின் செல்வன் என்கிற மகத்தான காவியத்தை வாசித்தவர்களுக்கு நாவலின் நிகழ்வுகள் ஒரு திரைப்படம் போல கண்முன் நகரும் அதிசய அனுபவத்தை அடைந்திருப்பர். அந்த அதிசய அனுபவத்தை மேடையிலும் எதிர்ப்பார்த்துச் செல்பவர்களுக்கு நாவல் தரும் கற்பனைக் காட்சிகள் இன்னும் உவப்பாக இருக்கக்கூடும். ஏனெனில் அப்படியான ஒரு கதையை மேடையில் கொண்டு வருவதென்பது சவாலானது. திரைப்படமாகும் சாத்தியம் வேண்டுமானால் அதிகமாக இருக்கிறதே ஒழிய நாடக மேடைக்கே உள்ள  சில வரையறைகள் பிரம்மாண்டத்தை காட்சிப்படுத்த இயலாத ஒன்றுதான்.. ஆனாலும் பொன்னியின் செல்வன் நாடகத்தை நாம் கண்கொட்டாமல் பார்க்கிறோம். ஒரு காட்சியும்கூட அலுப்புத் தட்டாமல் விறுவிறுவென்று செல்கிறது நாடகம். 

கடலில் சுழிக்காற்று ஏற்படுவது ஓர் அத்தியாயம் முழுவதும் நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியினை எவ்வாறு மேடையில் கொண்டுவரப்போகிறார்கள் என்கிற ஆவல் பார்வையாளர்களுக்கு இருந்தது. ஒரு பெரும் கூட்டமான மனிதர்களை வைத்து சுழிக்காற்றையும் கடலின் கோரத்தாண்டவத்தையும் அபிநயிக்க வைத்திருப்பது புத்திசாலித்தனம். அவர்களுடைய கரங்களின் அபிநயத்தில் சிறு சிறு அலைகளாக வெண் நுரை பொங்குவதையும் கடலில் கப்பல் காற்றில் அலைக்கழிந்து ஆடுவதையும் காண முடிகிறது. பிரமிக்க வைத்த காட்சி இது.  அருள் மொழி வர்மனை ஏன் மறைத்து வைத்திருக்கிறீர்கள் என்கிற கேள்வியுடன் நாகப்பட்டினம் சூடாமணி விஹாரத்தை மக்கள் முற்றுகையிடும் காட்சிக்குப் பின் வரும் கடல் பொங்கி ஊருக்குள் வரும் காட்சியை நாடகத்தில் வைக்காமல் விட்ட புத்திசாலித்தனமும் பிரமிக்கவே வைக்கிறது.  இப்போது நாம் சுனாமி என்று அழைக்கும் கடற்கோள் குறித்த வர்ணனைகளை மிகத் துல்லியமாக கல்கி தந்த அத்தியாயம் அது. 

எந்தெந்த அத்தியாயங்களை எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிற தேர்வு மிகச் சரியாகவே இருக்கிறது. அதுபோலவே நடிகர் தேர்வும். ஆதித்த கரிகாலனின் வருகைக்குப் பின் மேடை நிறைவானதாக மாறுகிறது. பிரபுமணி அத்தனை இயல்பாக நடிக்கிறார் எனினும் பசுபதியின் பாதிப்பிலேயே நடிக்கிறார். நந்தினியாய் வரும் மீரா கிருஷ்ணனின்  குரலும் கம்பீரமும் மறக்கவியலாதது. இயல்பிலேயே சாகசக்காரியாய் கல்கியால் வர்ணிக்கப்பட்ட கோடிக்கரை பூங்குழலியாக நடித்த காயத்ரி ரமேஷின் உடல்மொழி அந்த பாத்திரத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. மிக அநாயசமாக சுவர்களில் தாவி ஏறுவதும், ஓடுவதுமாக வீரமகள் ஒருத்தியை கண்முன் நிறுத்துகிறார். 'அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்?' என்று பூங்குழலி பாடும் பாடலில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கவேண்டும் பின்னணி பாடிய பெண்.

வந்தியதேவனின் பாத்திரத்தை வர்ணிக்கையில் கல்கி இப்படிக் கூறுவார் “மஞ்சள் பூசிய முகத்தைப் பார்த்தாலே அவனுக்கு தலை கிறுகிறுத்துவிடும்”. அதை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறார் வந்தியதேவனாக நடித்த ஸ்ரீகிருஷ்ணா தயாள்.. கதாநாயகத்தனமும் வேண்டும். கொஞ்சம் கிறுக்குத்தனமும் சாகசமும் வீரமும் காதலும் மையலும் கொண்ட அந்த பாத்திரம் மேடையில் அப்படியே உலவுகிறது. 

பசுபதி வடிவமைத்த சண்டைக்காட்சிகள் கூடுதலாய் ஈர்க்கின்றன. உடைகள் வடிவமைத்திருக்கும் ப்ரீத்தி ஆத்ரேயாவுக்கு சிறப்பான நன்றியைச் சொல்லலாம். உயிரைக்கொடுத்து நடித்தாலும் வெளியே தெரியாமல் முகத்தையே முக்கால்வாசி மறைத்துவிடும் கிரீடங்கள் நகைகள் எலலாம் இல்லாமல் அளவான உடைகள். பானுவின் கச்சிதமான ஒப்பனை நடிப்பில், காதல் காட்சிகளில் வழியும் இனிமையான புல்லாங்குழல் இசை, இளவரசரின் வருகையை கட்டியம் கூறும் முரசு என்று இசைக்குழு நாடகத்துக்கு உயிர் தந்திருக்கிறது.  இடைவேளையில் வெளியே சென்றவர்களை வந்து முரசறைந்து உள்ளே வரும்படி கூறிய சமயோசிதத்தை மக்கள் ரசிக்கவே செய்தார்கள். 

வசனங்கள், குறிப்பாக ஈழப்போர் குறித்த உரையாடல்கள் சமகால அரசியலுடன் ஒத்துப்போகின்றன. பூங்குழலி அறிமுகமாகும் காட்சியில் கடல் நீலத்தில் தெரியும் அந்த ஒளி இன்னமும் கண்களில் நிற்கிறது. நேர்த்தியான ஒளியமைப்பு இன்னொரு பாத்திரமாகவே நாடகம் முழுவதும் கூடவே வருகிறது. 

மந்தாகினி இறக்கும் காட்சி துண்டாக முடிவதுபோன்ற உணர்வைத் தருகிறது. ஆழ்வாக்கடியான் நம்பி பாத்திரம்தான் இன்னும் கொஞ்சம் பூசினாற்போல் இருந்திருக்கவேண்டும். பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்காமல் நாடகம் பார்க்க வருபவர்களுக்கு கதைமாந்தர்கள் எந்தளவு மனதில் பதிவார்கள் என்பது சந்தேகமே. இடையிடையே இருவர் வந்து இக்கால உடையில் தோன்றி பார்வையாளர்களிடம் பேசுகிறார்கள். யானை உருவத்தை மேடையில் கொண்டு வரும்போது கால்களில் அணிந்திருக்கும் பேன் தெரிவது. அரேபியர்களை குறிக்கும் உடைக்காக ஷேக்குகள் அணிந்திருக்கும் முழு அங்கியை அணிந்து வருகிறார்கள். இப்படி சில குறைகள் இருந்தாலும் ஈர்க்கவே செய்கிறான் பொன்னியின் செல்வன்.

(நன்றி: இந்தியா டுடே)

Wednesday, July 09, 2014

மனிதநேய தரிசனம் - திருடன் மணியன்பிள்ளை

ரயில் தண்டவாளங்களுக்கு மிக அருகேயுள்ளது மணியன் பிள்ளை இப்போது வசிக்கும் வீடு. கேரளாவில்   தென்மேற்குப் பருவ மழை துவங்கிவிட்ட ஜூன் மாதத்தின் பிற்பகுதியில் மழைத்தூறலுடன் கொல்லம் அருகேயுள்ள இரவிபுரத்திலுள்ள அந்த வீட்டிற்குச் சென்றபோது குழந்தைமை பொருந்திய சிரிப்புடன் வரவேற்கிறார் மணியன்பிள்ளை.  தொலைக்காட்சியில் ஏதோ ஒரு சீரியல். வெளியே தடதடத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ரயில். ஓர் உரையாடலுக்குத் தயாராய் எதிரில் வந்து அமர்கிறார்.

யார் இந்த மணியன்பிள்ளை? “பதினேழு வயதுமுதல் இன்று வரையிலான என்னுடைய வாழ்க்கை முழுவதுமே பயத்தாலும் பாதுகாப்பின்மையாலும் உழன்றுகொண்டிருக்கிறது. இளமையை என்னால் அனுபவிக்க இயலவில்லை. மனைவியுடன் ஒருபோதுமே மன அமைதியாகப் படுத்துத் தூங்கியதுமில்லை. குற்றவாளிகளாலும் குற்றவாசனையுள்ளவர்களாலும் நிம்மதியாகத் தூங்க முடியாது. சிறைச்சாலைகளும் போலீசாரின் சித்திரவதைகளும் தந்த வியாதிகள்...” என்கிறார் ‘நான்’ என்கிற தலைப்பில் தன்குறித்து எழுதும் முன்னாளில் திருடனாயிருந்த மணியின்பிள்ளை. ஒரு நாள் திருடனை வாழ்நாள் திருடனாக்கியது காவல்துறை என்பதை தனது சுயசரிதையில் பல்வேறு வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் நமக்குச் சொல்கிறார். இவர் சொல்லச் சொல்ல மலையாளத்தில் ஜி.ஆர். இந்துகோபன் எழுதிய இவரது சுயசரிதை நூல் இன்றுவரை 6,000 பிரதிகள் விற்றிருக்கின்றன. அண்மையில் தமிழில் குளச்சல் முகமது யூசுப் மொழியாக்கத்தில் தமிழில் ’திருடன் மணியன்பிள்ளை’ என்கிற பெயரில் வெளிவந்தது. தமிழ் இலக்கிய வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்த இப்பிரதி குறித்து மலையாள இலக்கிய உலகில் நூல் வெளியான சமயத்தில் கனத்த மௌனம் நிலவியதாக மதுரையில் இந்த நூலுக்காக நடந்த விமர்சனக்கூட்டத்தில் பேசிய ஜி.ஆர்.இந்துகோபன் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதே கூட்டத்தில் வந்து பேசமுடியாமல் கண்ணீர் சிந்தியவாறே கூட்டத்தை நோக்கி கைக்கூப்பிய மணியன்பிள்ளையின் மனதில்  பொங்கும் மனிதநேயத்தை தரிசிக்கவேண்டுமெனில் நூலை வாசிப்பது ஒன்றுதான் வழி. இவர் திருடிய ஒரு வீட்டின் சிறுமி நீதிமன்றத்தில வந்து அழுததைப் பார்த்த அவர் சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுதி “மகளே! மாமா திருடியதை உனக்கே திருப்பித் தந்துவிடுவேன். இனி நீ நீதிமன்றத்துக்கு வரவேண்டாம். அழவும் வேண்டாம்” என்று ஒரு அக்குழந்தையிடம் பாவமன்னிப்பு கேட்கும் இடம் ஒன்றுபோதும்.

நூலில் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், சிறைத்துறையினர், பெரும்புள்ளிகள், அரசியல்வாதிகள் என்று பலர் குறித்தான உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் இதை எவ்வாறு எதிர்கொண்டனர்? “நீதிபதிகள் போன்ற வெகு சிலருடைய பெயர்களை மாற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். மற்றபடி என் உறவுக்காரர்கள் இதை விரும்பவில்லை. ஆனால் எனக்கு அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் இந்த நூல் வருவதற்கு முன்பிருந்தே இல்லை” என்கிறார் மணியன்பிள்ளை. நூல் வெளியானபின் காவல்துறை அவர்மீது இதுவரை 12 வழக்குகள் போட்டிருக்கிறது. அதில் 11 வழக்குகளில் மீண்டு ஒரே ஒரு வழக்கு மட்டும் நடந்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார் மணியன்பிள்ளை சகோதரியின் வீட்டில் வசிக்கிறார். சாலைகளில் பேருந்தில் ரயிலில் என்று செல்லும்போது மக்கள் அடையாளம் கண்டுகொண்டு வந்து பேசுவதைக் குறிப்பிடும் அவர் “மக்கள் என்னிடம் நீங்கள்தானா மணியன்பிள்ளை என்று கேட்டு அன்போடு அணைத்துக்கொள்கிறார்கள். என்ன வித்தியாசம் பாருங்கள்!” என்கிறார்.”நான் 95ல் வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டதால் இப்போது ஃபீல்ட் எப்படி இருக்கிறதென்று தெரியவில்லை.” என்று சிரிக்கிறார்.

ஒரு கச்சிதமான திரைக்கதை போல உள்ளது மணியன்பிள்ளையின் வாழ்க்கை. 65 வயதாகும் அவருடைய வாழ்வில் நிகழ்ந்தவற்றைவிட ஒரு சினிமா எதையும் பெரிதாகச் சொல்லிவிடப்போவதில்லை. அத்தனை திகில், திருப்பங்கள், வேதனைகள், மரணங்கள், உயரங்கள், பள்ளங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துவிட்ட அவரிடம் எல்லாமே அனுபவங்களாக எஞ்சி நிற்கின்றன. மணியன்பிள்ளையிடம் இந்த நூலில் உங்களுக்குப் பிடித்த பகுதி எது என்று கேட்டால் “அம்மா குறித்தவைதான்” என்கிறார். தன் பர்ஸில் நடிகை அமலாவின் சாயலில் இருக்கும் மனைவி மெஹருன்னிசா, தங்கை, தங்கையில் பிள்ளைகள் என்று குடும்பத்தினர் அத்தனை பேரின் புகைப்படங்களையும் பாஸ்போர்ட் அளவில் வைத்துக்கொண்டே போகுமிடமெல்லாம் செல்கிறார். மெஹருன்னிசாவை மணக்க முஸ்லிமாக மாறி யூசுப் பாட்சாவானார்.


இவருடைய நூலை பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டபோது அது ஒரு திருடனின் சுயசரிதை என்பதாலேயே நிராகரிக்கப்பட்டது. ஆனால் என்ன முரண்பாடு? அவருடைய கதை இன்று சினிமாவாகி உலகமே பார்க்கப்போகிறது.  ”பலர் என்னை பணம் சேர்க்கச் சொல்கிறார்கள் இனி சேர்த்து என்னதான் செய்யப்போகிறேன்? என் கதை சினிமாவாகப் போகிறது. அப்போது கொஞ்சம் பணம் கிடைக்கும். அதில் இரண்டு செண்ட் நிலம் வாங்கி ஒரு வீடு கட்டவேண்டும். இதுதான் ஒரேயொரு ஆசை எனக்கு. ” என்கிறார்.

26 திரைப்படங்களிலும் 30 நெடுந்தொடர்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் ‘வேட்டைக்காரன்’ படத்தில் சாமியார் வேடத்தில் நடித்த மணியன்பிள்ளைக்கு தமிழில் விஜய் படங்கள் என்றால் மிகவும் இஷ்டம். அழகாகப் பாடும்திறன் கொண்டவர் இப்போது உடல்நலம் சரியில்லை என்பதால் பாடுவதில்லை. மலையாளத்தில் மிகவும் பிடித்த இசையமைப்பாளர் ரவீந்திரன். தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தியில் பப்பிலஹரி என்று அடுக்குகிறார். தமிழில் தன் அபிமான பாடலென அவர் குறிப்பிடும் பாடல் இது. “குயிலைப் புடிச்சு கூண்டிலடைச்சு கூவச்சொல்லுகிற உலகம். இந்தப் பாட்டைக் கேட்டால் கண்ணீர் விட்டு அழுவேன். அப்படித்தானே என் வாழ்க்கையும். நிம்மதியில்லாத வாழ்க்கை. அதற்குக் காரணமும் நான் தான். வேறு யாரைச் சொல்ல முடியும் நான்” என்கிறார்.

வாழ்த்துங்கல் கிராமத்தின் ரயில்வே கேட்டை கடந்து வந்து அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்து ஆட்டோ ஏற்றிவிடுகிறார். தங்கும் விடுதிக்கு விரையும் ஆட்டோவிலிருந்து இறங்கியபின் பேசிய நூறு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் குறைத்துக்கொண்டு தொண்ணூறு ரூபாய் மட்டும் வாங்குகிறார் ஆட்டோ ஓட்டுநர். வியப்போடு புருவம் உயர்வதைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார். “நீங்கள் மணியன் அண்ணனின் விருந்தாளியல்லவாமணியன் அண்ணனுக்காக பத்து ரூபாய் குறைத்துக்கொண்டேன் அவரை எங்களுக்குப் பிடிக்கும். அவர் எப்போதும் கொழுத்தவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குத் தந்து உதவுவார்” என்கிறார். 

****

புத்தகத்திலிருந்து...
-------------------------------- 

பாட்டுப் பாடியே வலியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தால் அம்மா. எனது குழந்தைப் பருவத்து நினைவுகலில் செத்துக்கிடந்த நிறைய பாடல்களை மாஅ பாடிப்பாடி உயிரூட்டினாள். ஒருநாள், பெரிய அக்கா வரும்போது படுத்திருந்தபடியே அம்மா பாடிக்கொண்டிருந்தாள். ‘’என்னதான் முடியலைன்னாலும் பாட்டுக்கெல்லாம் ஒரு குறையுமில்லை,” அக்கா கேலி செய்தாள். பிறகு பாட்டுக் கேட்கவில்லை. தான் சொன்னதைக் கேட்டு அம்மா பாட்டை நிறுத்தியிருப்பாளென்று நினைத்து அவள் உள்ளே போனாள். அதற்குள் அம்மாவும் போய்விட்டாள். வாய் திறந்தபடியே இருந்தது. பாதி பாடல் அம்மாவின் உதடுகளில் தங்கியிருந்தது.

மணிக்குட்டன் தன் சட்டையைக் கழற்றி அவளிடம் கொடுத்தான். அதை அணிந்து அவள் தண்ணீரில் இறங்கி நின்று துணியை அவிழ்த்து அவனிடம் கொடுத்தாள். அவள் குளிக்கும்போது அவன் விலகியிருந்து அழுக்குத் துணுகளை ஒரு கல்லில் அடித்துத் துவைத்தான். அன்று அவன் செய்த வேலைகளைப் புரிந்துகொள்வதற்கான அறிவு எங்களுக்கில்லை. .....அன்று அவளிருந்த நிலைமை இப்போதும் என் கண்களில் நிற்கிறடு. அனாதைமையின் மனித பிம்பம். அவனை உதாசீனம் செய்யுமளவிலான தன்னம்பிக்கை அன்று அவளிடம் தென்படவே இல்லை. ...எங்கள் மனங்களிலிருந்து பங்களா மணிக்குட்டன் ஒருபோதுமே மாய்ந்துவிட முடியாது. ஒருபோதுமே! அவளுடைய உடுப்புகளை கல்லில் அவன் துவைத்துப் பிழிந்த அந்தக் காட்சி ஒன்றே போதும், இதற்குச் சான்று!

என்னுடைய இச்சிறு உடலானது ஒரு வீட்டினுள் நுழைந்துவிட்டால் பிறகு ஆட்சியதிகாரத்தின் எல்லாக் கட்டமைப்புகளும் ஓடி வருகின்றன மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள், உயரதிகாரிகள், தொழிட்நுட்பப் புலனாய்வாளர்கள், மக்கள் திரள், அவர்களை விரட்டியடிக்கும் போலீசார், அதிகாரவர்க்கத்தின் இந்தப் பதற்றம் நமக்குள் தோற்றுவிக்கும் மமதை, நான் உருவாக்கி வைத்த உற்சவம் கனஜோராக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதிலிருக்கும் அக மகிழ்ச்சி. இதுதான் ஒரு திருடனின் மனதினுள் செயல்படுகிற அம்சங்கள்.

***
என்னுடைய வழக்குகளுக்கு நானே வழக்கறிஞர். புதிதாக வந்த நீதிபதிகள் கேட்பார்கள்: “நீ ஏன் வக்கீல் ஏற்பாடு செய்யல? கேஸ்ல ஜெயிக்க வேண்டாமா?” நான் சொல்வேன்: “யுவர் ஹானர், நான் நிரபராதின்னு தெளிவுபடுத்த வேண்டிய தேவை ஏதோ ஒரு வழக்கறிஞரை விடவும் எனக்குத்தானே அதிகம்?”
என்னுடைய வழக்குகள் கொல்லம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிற நாட்களில், நீதிபதியாக இருந்த சுரேந்திரநாத பணிகர் கோட்டுப்போட்ட ஜூனியர் பையன்களிடம் சொல்வார்: “மதியத்துக்குப் பிறகு மணியன்பிள்ளையோட வழக்கு இருக்கு. சீக்கிரமாக சாப்பிட்டுட்டு வந்தீங்கன்னா வாதாடக் கத்துக்கலாம்.”

***

அப்போது ஜனதா கட்சியால் சட்டமன்றத் தொகுதிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த வேட்பாளர் நான். அன்று பிடிபடாமலிருந்திருந்தால் திருடர்கள் ஒற்றுமையுடன் வாழும் அரசியல் அரங்கில் நானுமொரு ‘விலைமதிக்க’ முடியாத அன்பளிப்பாகி இருப்பேன். அந்தத் தேர்தலில் ஞனதா கட்சிதான் அதிகாரத்திற்கு வந்தது. ‘சிறுபான்மை’ சமூகம் என்பதால் அமைச்சர்வையிலும் வாய்ப்புக் கிடைக்கும் என்று பேசிக்கொண்டார்கள்.

***
ஒரு வீட்டினுள் திருடுவதற்காக நுழைந்தேன். சமையல் கட்டின் கம்பியை வளைத்து உல்லே ஏறினேன். ஒரு கையில் கத்தி, மற்றொரு கையில் டார்ச். எதுவோ அசைவதுபோல் சத்தம் வந்தது. லைட் அடித்துப் பார்த்தேன். வெளிச்சம்பதிந்த இடம் ஒரு மூதாட்டியின் கண்கள். அதில் உலகத்திலுள்ள எல்லாத் தீவினைகளையும் ஒருசேரப் பார்த்துவிட்டதுபோன்ற பயம் தெரிந்தது. அந்த அம்மா நடுக்கத்துடன் துவண்டுகொண்டிருந்தார். வேதனையின் மெல்லிய சீகாரம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. பயம் ஒரு வனமிருகம்போல் அவரை வலைத்திருந்தது. எனக்கு என்னவோ போலாகிவிட்டது.
நான் மெதுவாகச் சொன்னேன்: “பயப்பட வேண்டாம்மா! நான் போயிடறேன்” வந்த வழியாக வெளியேறி, வீட்டின் மதில் சுவரில் சாய்ந்து நின்று வாய்விட்டு அழுதேன். இந்த அளவுக்கு மற்றவர்கள் பயந்து வெறுக்கிற துஷ்டனாக மாறிவிட்டேனே!இந்த இடத்தில் என்னுடைய அம்மாவாக இருந்திருந்தால்...மதிலில் தலியை முட்டி அழுதேன். பிறகு எல்லாமே தகர்ந்துவிட்டவன்போல் திரும்பி நடந்தேன்.

***
குழந்தைப் பருவத்து நினைவுகள் தீராத இரணங்களாகி விடும். வேதனைகளையும் அவமானஞ்களையும், நான்கைந்து வயதிலிருந்தே குழந்தைகள் மனதில் பாதுகாத்து வைத்திருப்பார்கல். பச்சை மனங்களை ஒருபோதும் புகைய வைத்து விடக்கூடாது

***

குட்டப்பனின் வாட்ச் ரிப்பேருக்கான சாதங்களிருக்கும் பெட்டியைச் சுமந்துகொண்டு ஐந்தாறு மாதங்கள் அவனுடன் திரிந்தேன். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் ஏறி வாட்ச் ரிப்பேர் செய்யணுமா என்று கேட்கும் வேலை என்னுடையது. நிறைய சொந்தக்காரர்கலின் வீடுகளுக்கும் சென்றேன். “குறவனோட பெட்டியை நாயர் பையன் சுமபப்தா?” இதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பட்டினி கிடக்கும்போது கூப்பிட்டு ஒரு பிடி சோற்றுப் பருக்கைத் தந்ததில்லை; நாலணா காசு தந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடு என்று சொன்னது கிடையாது. வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பராதி மட்டும் சொனனார்கள்.

***

இன்றெல்லாம் மூன்று நான்கு திருடர்களாக சேர்ந்து வருகிறார்கள். பயமுறுத்தித் திருடுகிறார்கள். பெண்களையும் தொந்தரவு செய்கிறார்கள். எவ்வளவு தைரியமுள்ள திருடனாக இருந்தாலும் சரி.வீட்டிலிருப்பவர்கள் பார்த்துவிட்டால் ஓடிவிடத்தான் வேண்டும். அது ஒரு மரியாதை. திருடனாகிவிட்டோம்தான். இருந்தாலும் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ளலாமா? வேண்டாமா?

****

உங்களுடைய வீடுகளில் இதுவரை திருடன் நுழையவில்லை என்பதற்காக நீஙக்ள் பலத்து பாதுகாப்பினுள் இருக்கிறீர்கள் என்று அர்த்தமில்லை. டிருடன் உஞ்கள் வீட்டை இன்னும் நோட்டமிடவில்லை. அவ்வளவுதான். உங்கள் வீடு அவனுடைய கவனத்தில் படவில்லை என்பது மட்டும்தான் உங்களுடைய பாதுகாப்பு. 

****
இந்தப் புத்தகத்தை உங்களால் சுவாரஸ்யமாக வாசிக்க முடியும். காரணம், நீங்கள் சட்டத்தின்கண்களில் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். ஆகவேதான் சில இடங்களில் உங்களால் சிரிக்கவும் முடிகிறது. எனுடைய கண்ணிரின் உப்பு கலந்த ஒரு கடல் இந்தப் புத்தகம். செய்துத் தீர்த்த பாவங்களின் ஆகமொத்த சாரம். ஒரு திருடனை ஊரிலோ வீட்டிலோ யாருமே வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள். 

(நன்றி: இந்தியா டுடே)


Tuesday, July 08, 2014

முண்டாசுப்பட்டி

பெயருக்கேற்றவாறு முண்டாசு அணிந்திருக்கும் ஆண்கள், நிழற்படம் எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கை, விண்கல்லின் ஒரு பகுதி விழுந்ததை வானமுனி என கடவுளாக்கி வழிபடும் மக்கள், பள்ளிக்கூடம் பக்கம் போனால் ரத்தக் காட்டேரி அடிக்கும் என நம்பும் அப்பாவிகள் என இந்த முண்டாசுப்பட்டியில் வாழ்பவர்களுக்கு ஒரு விதமான மூட நம்பிக்கைகள். இந்த மூட நம்பிக்கைகளை ஜல்லியாக்கி உடைத்து அதன் மேல் ஒரு ராஜபாட்டையைப் போட்டு கம்பீரமாக நடக்கிறார் இயக்குநர்.



இரண்டரை மணி நேரம் தன்னை மறந்து சிரிக்க உத்தரவாதம் உண்டு. திரையரங்கம் சில காட்சிகளில் சிரிப்பால் அதிர்வதால் அடுத்த காட்சியின் நகைச்சுவை தவற விடுகிறோம். திரைக்கதையிலும் வசனங்களிலும் இழையோடும் நகைச்சுவை படத்துடன் பார்வையாளர்களை ஒன்றச் செய்கிறது. ஒரு கட்டத்தில் ஒரு வசனத்தையும் தவற விடக்கூடாதென்று செவிகளைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறோம். அந்தளவுக்கான நகைச்சுவை விருந்து முண்டாசுப்பட்டி.

மனிதர்களின் மூட நம்பிக்கைகளை இதைவிட அழகாக யாரும் பகடி செய்துவிட முடியாது. கொஞ்சமும் பிரச்சார நெடியில்லாத ஒரு நாத்திகம் படத்தின் அடிநாதம். ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நாயகன், ஃபோட்டோ எடுத்தால் இறந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையுடைய ஊரில் வாழும் நாயகி என்று வித்தியாசமான இணை. படம் முழுவதும் விஷ்ணுவும் அவருடைய நண்பர் காளி வெங்கட்டும் செய்யும் கலாட்டாக்கள் களைகட்டுகின்றன. ஆனால் படத்தின் துவக்கத்தில் வரும் ஃபோட்டோ ஸ்டுடியோ காட்சிகள் மட்டும் சற்று மெதுவாக நகர்கின்றன. அந்தக் காட்சிகளை மட்டும் மற்றவற்றைப் போல புதிதாக யோசித்திருக்கலாம். பள்ளிக்கூடத்துக்கு படம் எடுக்கச் சென்றவுடனேயே பறக்கத் தொடங்கும் படம். இறுதிவரை தரையிறங்கவே இல்லை.

‘விடிஞ்சாலும் விடிஞ்சிரும்’ என்கிற படத்தில் நடிக்கும் முண்டாசுப்பட்டியைச் சேர்ந்த முனிஸ்கானாக நடிக்கும் ராமதாஸுக்-க்கு மட்டும் ஃபோட்டோ பிடித்தால் இறந்துவிடுவோம் என்கிற மூடநம்பிக்கை இல்லை. அவர் பண்ணும் அட்டகாசங்களில் முண்டாசுப்பட்டி மக்கள் மட்டுமல்ல பார்வையாளர்களும் கலகலத்துப் போகிறார்கள். மிகக் கூர்மையான வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம். ஆனால் அதே சமயத்தில் வசனமே இல்லாமல் பல காட்சிகள் சிரிப்பை அள்ளித் தெளிக்கின்றன. உதாரணமாக பறவையி ஒற்றைச்சிறகை நந்திதாவின் மேல் போடும் காட்சியில் அது வழிமாறி அவருடைய அப்பாவின் நாசி அருகே சென்று குறட்டை விடுகையில் மீண்டும் நந்திதாவுக்கே வரும் காட்சியைச் சொல்லலாம்.

இசையும் பாடல்களும் படத்தில் எங்கும் உறுத்தாதவண்ணம் வருகின்றன. ஆனால் விஷ்ணு நந்திதாவைப் பார்க்கும் ஆரம்பக் காட்சிகளில் வரும் பின்னணி இசை ‘நீர்ப்பறவை’ யின் ‘பற பற பறவையொன்று’ பாடலைப் போன்றே இருப்பது உறுத்தல். அதிலும் விஷ்ணு. இதிலும் விஷ்ணு. அதற்காகவாவது வேறு பின்னணி இசை முயன்றிருக்கலாம். சாவு வீட்டில் பாடப்படும் பாடலில் புதிய இசையமைப்பாளர் சியான் ரோல்டன் வெல்கிறார்.

80களில் நடப்பதாக வரும் கதையில் கலை இயக்குநரின் பங்குதான் அதிகம். வீடுகளில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் வைக்கக்கூடிய ஸ்டாண்ட், சுவர்க் கடிகாரம் முதல் கேமிரா, திரையரங்கம் வரை எல்லாமே பார்த்துப் பார்த்து கவனமாக செயல்பட்டிருக்கிறார்கள்.  வசனங்களில் 80களில் புழக்கத்தில் இல்லாமல் இப்போது மட்டுமே புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் சிலவும் வருகின்றன.

விஷ்ணுவைவிட அவருடை நண்பர் பாத்திரத்தில் வரும் காளிவெங்கட் கவர்கிறார். படத்தின் இறுதிக் காட்சி யூகிக்கக்கூடியதாக இருந்தாலும் அபாரமான க்ளைமாக்ஸ்தான். அதிலும் ஃபோட்டோ மூடநம்பிக்கை அற்ற ராமாதாசின் முகம் மட்டும் ஃபோட்டோவுக்குத் தெரிவதுடன் படம் முடிகிறது.

மனம் விட்டு சிரிக்க ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம் என்று சுருக்கி விடாதபடிக்கு உள்ளீடாக மூடநம்பிக்கைக்கு எதிரான படமாகவும் விளங்குகிறது. கலையும் அரசியலும் சரியான கலவையில் சேரும் படைப்பாகவும் மிளிர்கிறது.

(நன்றி : இந்தியா டுடே)