சிந்துபாத் கதை, 1001 அரேபிய இரவுகள் கதை என்று பலப் பல கதைகளை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது, ஜெயலலிதா முடக்கிய சமச்சீர்க் கல்விக் கதை. 'இதோ வருது... அதோ வருது’ என்று எதிர்பார்த்து, புத்தகங்களுக்காக மாணவர்கள் காத்திருப்பதுதான் மிச்சம்!
ஜூலை 29 அன்று, மாணவர்களைப் போராட்டத்துக்கு அழைத்தது தி.மு.க. ஆங்காங்கே பள்ளிகளின் முன் போராட்டம் நடத்தி, சிலர் கைதானார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுவிடுவார்களோ என்கிற பயத்தில், அ.தி.மு.க. அரசு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது. பள்ளிகளைக் கண்காணிக்க, காவல் துறையினர் வேறு. இந்தப் போராட்டத்துக்கு எதிராக, மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் சென்னையில் போட்டி போராட்டம் நடத்தினார்கள்.
தி.மு.க-வின் போராட்டத்துக்குக் கிடைத்த ஆதரவை வைத்து சமச்சீர்க் கல்விக்கு ஆதரவு இல்லை என்று எண்ணிவிட முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில், தி.மு.க. அழைப்பு விடுத்த போராட்டத்தில் கலந்துகொண்டால் கதி என்னவாகும் என்பது தெரியாதா என்ன?
ஆரம்பத்தில் இருந்தே சமச்சீர்க் கல்வி கேட்டுப் போராட்டங்களை நடத்திவரும் இந்திய மாணவர் சங்கம், தி.மு.க. அழைப்பு விடுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. சங்கத்தின் மாநிலச் செயலர் கனகராஜிடம் காரணம் கேட்டபோது, ''தி.மு.க. தனது ஆட்சிக் காலத்தில், இந்த விஷயத்தில் ஒழுங்காக நடந்து இருந்தால் இவ்வளவு பிரச்னைகளுக்கே இடம் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளிலேயே இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கலாம். நிறைய அவகாசம் இருந்தது. அந்த நேரத்தை எல்லாம் வீணடித்தது தி.மு.க. அரசு. 2009 ஜூலையில் சமச்சீர்க் கல்வி கேட்டுப் போராடிய எங்கள் தோழர்கள் மீது தடியடி நடத்தியது தி.மு.க. அரசு. மறு நாள் சட்டமன்றத்தில் கலைஞர், 'சமச்சீர்க் கல்வியை உடனே கொண்டுவர முடியாது. யாரையும் பாதிக்காமல்தான் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும். பொறுமை காக்க வேண்டும்’ என்று பேசினார். யாரையும் பாதிக்காமல் என்றால், தனியார் பள்ளிகளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல்தான் சமச்சீர்க் கல்வியைக் கொண்டுவர வேண்டும் என்றுதானே பொருள்?
ஆக, எல்லாக் குளறுபடிகளையும் செய்து விட்டு, இன்றைக்கு அரசியல் ஆதாயத்துக் காக... சமச்சீர்க் கல்விக்காகப் போராடுகிறோம் வாருங்கள் என்று தி.மு.க. சொன்னால் நாங்கள் எப்படி இணைந்துகொள்வது?' என்றார் கனகராஜ்.
இது ஒருபுறமிருக்க, உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, புத்தகங்களை வழங்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் மேலும் கால அவகாசம் கேட்க, மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இப்படி இழுத்தடித்துக்கொண்டே இருப்பது கல்வித் துறையில் அனைவருக்கும் அலுப்பையும் ஆயாசத்தையும் தோற்றுவித்து இருக்கிறது. அரசு வழக்கறிஞர் திடீரென்று, 'தமிழக அரசுக்குச் சரியான ஆலோசனை சொல்ல யாரும் இல்லை. அதனால்தான் சமச்சீர்க் கல்விச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துவிட்டது. அதனால், நீதிமன்றத்தின் நேரமும் வீணாகிவிட்டது'' என்று பல்டி அடித்தது இன்னும் பயங்கரம்.
ஆனால், இப்படி ஸேம் சைடு கோல் அடிப்பதன் காரணத்தை சமச்சீர்க் கல்வியைத் தொடர்ந்து வலியுறுத்திவரும் பேராசிரியர் அ.மார்க்ஸிடம் கேட்டபோது, 'சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் விவாதித்துக் கொண்டுவரப்பட்ட சமச்சீர்க் கல்விக்கான சட்டத்தில் எந்த விவாதமும் இன்றி அ.தி.மு.க. அரசு திருத்தம் கொண்டுவந்ததை, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கண்டித்து உள்ளது. சமச்சீர்க் கல்வி வழக்கைப் பொறுத்தவரை, இதுவரை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் அளித்து வந்த தீர்ப்புகள் அத்தனையிலுமே சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அடிப்படையாக இருக்கிறது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தில் இருந்து தப்பிக்கவே தமிழக அரசு வழக்கறிஞரை இப்படிப் பேசவைத்து ஒரு நடைமுறைத் தந்திரத்தைக் கையாண்டு இருக்கிறது தமிழக அரசு. இதற்கிடையே தமிழக அரசு சமச்சீர்க் கல்வியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி பார்த்தால், இப்போது முடக்கிவைக்கப்பட்டுள்ள சமச்சீர்க் கல்விப் பாடப் புத்தகங்கள் தவிர, இதில் அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தகங் களை வாங்கி மெட்ரிக் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கலாம். ஒரு வகையில் இதைக் கேள்வி கேட்கவும் முடியாது. ஏனென்றால், பொதுப் பாடத் திட்டத்தின் கீழ்தான் இந்தப் பாடப் புத்தகங்களும் வருகின்றன. அதாவது, பாடத் திட்டம் பொது. ஆனால், பாடப் புத்தகம் பொது கிடையாது. அப்படி என்றால், அரசுப் பள்ளிகளில்
ஒரு பாடப் புத்தகமும், மெட்ரிக் பள்ளிகளில் ஒரு பாடப் புத்தகமும் வைக்க அரசே வழி வகுத்துக் கொடுக்கிறது. எப்படியோ ஒரு வகையில் மாணவர்களை இரண்டு வகையினராகப் பிரித்துவிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது' என்கிறார் அ.மார்க்ஸ்.
வர்க்க பேதமும் வர்ண பேதமும் ஏதோ ஒரு விதத்தில் தொடர வேண்டும் என்பதுதான் அரசின் ஆசையா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றே இப்போதைக்கு இந்த பேதம் களையும் அருமருந்து என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். தீர்ப்பு மருந்தாக அமையுமா அல்லது மேலும் மாணவர்களைச் சிக்கலுக்கு உள்ளாக்குமா என்பதே இப்போதைய கேள்வி!