Friday, June 04, 2021

எஸ்.பி.பியும் நானும்

 

  • கவின் மலர் -

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்கிற பெயர் எப்போது எனக்கு அறிமுகமானது என யோசித்துப் பார்க்கிறேன். நினைவில் இல்லை. அவருடைய எந்தப் பாடலை முதன்முதலில் கேட்டேன் எனவும் நினைவில் இல்லை. மிக மெல்லிய ஞாபகமாக அந்தக் குரலின் இனிமை காதில் பாய்ந்தது நான் குழந்தையாய் இருந்தபோது எப்போதோ கேட்ட ‘ வாசமில்லா மலரிது’ அல்லது ‘இது ஒரு பொன் மாலைப் பொழுது’ அல்லது ‘ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள்’ அல்லது வேறு ஏதோவொரு பாடலோ, சரியாகத் தெரியவில்லை. நான் பிறப்பதற்கு முன்பிருந்தே பாடிக்கொண்டிருக்கும் அவரது குரல் எந்த நொடியில் என் செவிகளை வந்தடைந்தது என அறுதியிட்டுக் கூற இயலவில்லை. 

குழந்தைப் பருவத்திலிருந்தே திரையிசைப்  பாடல்களோடுதான் வளர்ந்தேன். பாடல் கேட்காத நாள் என ஒன்று இல்லை. அப்படி இருக்கையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் என்கிற பெயரும் அந்தக் குரலும் என் மனதில் குடிகொண்டுவிட்டதில் வியப்பொன்றுமில்லைதான். 

ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை பள்ளி ஆண்டுவிழாக்களில் நடனம் ஆடுவதுண்டு. இப்போது கணக்கெடுத்துப் பார்த்தால் எல்லா பாடல்களும் ஏறக்குறைய எஸ்.பி.பி. பாடியதாகத்தான் இருக்கிறது. 

அப்போதெல்லாம் டேப் ரிக்கார்டர் எங்கள் வீட்டில் இல்லை. வானொலிப் பெட்டியில் பாடல் கேட்பதோடு சரி. எங்கள் உறவினர் ஒருவர் சவூதியில் இருந்து டேப் ரிக்கார்டர் எடுத்து வந்திருந்தார். அது ஒரே ஒரு வாரம் எங்கள் வீட்டில் இருந்தது. அப்போது என் தந்தை என்னை சில பாடல்களைப் பாடச் சொல்லிக் கேசட்டில் பதிவு செய்தார். அப்போது பாடிய பாடல்களில் ஒன்று ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’. நான் அப்போது ஒன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

ஒலியின் துல்லியத்தோடு என் காதில் முதலில் விழுந்த பாடல் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ பாடல்தான். எங்கள் வீட்டுக்கு அருகில் குடியிருந்த சுரேஷ் என்கிற அண்ணனின் வீட்டில் பெரிய ஸ்பீக்கர்கள் கொண்ட நவீன டேப் ரெக்கார்டர் இருந்தது. அதில் பாடல்களை சத்தமாக வைத்துக் கேட்பார். அப்படி அவர் கேட்கும்போது வந்து காதில் விழுந்த அந்தப் பாடலில் இசையிலும்,ஒலிநயத்திலும் வியந்துபோன நான் மயங்கியது அந்தக் குரலில்தான். பேக் பைப்பர் கதையில் வருவது போல அந்தப் பாடல் வந்த திசை நோக்கிச் சென்று அவர் வீட்டுக்குப் போய்விட்டேன். பாடலை ஒரு முறை மீண்டும் போடச் சொல்லிக் கேட்டுவிட்டு வந்தேன். 

எஸ்.பி.பி. என் குழந்தைப் பருவத்தின் செவிகளை நிறைத்தவர். அவரும் ஜானகியும் சேர்ந்து பாடிய பாடல்களில், அதிலும் இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒலித்த பாடல்களைக் கேட்காத நாள் இல்லை. அவர் தமிழ்ச் சமூகத்தின் ஆண் குரலாகவே ஒரு கட்டத்தில் மாறி இருந்தார். இசையமைப்பாளர் எவராக இருந்தாலும் குரல் அவருடையதாக இருந்தது.

ஒரு பெண்ணுக்கு ஏன் எஸ்.பி.பியை அவ்வளவு பிடிக்கிறது? நானறிய அவருடைய அந்த பருமனான உடலைத் தாண்டி, வயதைத் தாண்டி அவர்மீது அவர் குரல் மீது காதல்கொண்ட பல பெண்களைப் பார்க்க முடிகிறது.  அந்தக் குரலுக்கு, உருவத்தை கண்களில் இருந்து மறையச் செய்யும் சக்தி இருக்கிறது. 74 வயதிலும்  அவர் பாடுகையில் அவர் உருவம் மறைந்து ஓர் இளைஞனின் குரல் நம்மோடு உறவாடுகிறது. அந்தக் குரலுக்கு நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உருவம் தந்துகொள்ளலாம். திரையிலோ மேடையிலோ நின்று பாடும் 74 வயது கனத்த சரீரம் மறைந்துபோகும் மாயாஜாலத்தை அந்தக் குரல் செய்துவிடும். 

பெண்கள் அவர் குரலில் தன் காதலனைக் கண்டார்கள். தன் தந்தையைக் கண்டார்கள். தன் சகோதரனைக் கண்டார்கள். ‘நான் சிகப்பு மனிதன்’ திரைப்படத்தில் ‘வெண்மேகம் விண்ணில் நின்று’ என்று ஒரு பாடல். இளையராஜாவின் இசையில் பாசமிக்க ஓர் அண்ணனாக எஸ்.பி.பி. உருகுகையில் என் பால்யத்தில் இல்லாத என் அண்ணனை நினைத்து மனம் விம்மியிருக்கிறது. ‘தங்க நிலவே உன்னை உருக்கி’ என ’தங்கைக்கோர் கீதத்’தில் அவர் பாடுகையில். அந்த கையறு நிலை நம் மனதைத் தைக்கும்.’என் தங்கச்சி படிச்சவ’ படத்தில் கங்கை அமரன் இசையில் அவர் பாடிய ‘ நல்ல காலம் பொறந்துடுச்சு’ டி.ராஜேந்தரின் அநேக பாடல்களில் வரும் அண்ணன் பாடும் பாடல்கள் என எஸ்.பி.பி. தங்கைக்காக பாடிய பாடல்களின் பட்டியல் நீளும். ’அண்ணன் ஒரு கோயில் என்றால்’ என அந்தப் பட்டியலின் முதல் பாடலை வெகுகாலத்திற்கு முன்பே பாடத் தொடங்கிவிட்டவர் அவர். எண்பதுகளில் வந்த திரைப்படங்களில் நாயகனுக்கு ஒரு தங்கை இருப்பாள். அவளை வில்லன் பாலியல் வன்புணர்வு செய்துவிடுவான் அல்லது கொன்றுவிடுவான். அதற்குப் பழிவாங்க நாயகன் புறப்படுவதுதான் மிச்ச கதை. இப்படி பல படங்களில் அண்ணன் பாடுவதற்கென்றே பாடல்களை எஸ்.பி.பியிடம் கொடுத்திருப்பார்கள். இப்படி பால்யத்தில் மட்டுமல்ல என் கல்லூரிப் பருவம் வரை அண்ணன் இல்லாத குறையை எஸ்.பி.பியே தீர்த்தார் என்பேன். 

அண்ணனாக ஒலிக்கும் குரலொன்று அடுத்த பாடலிலேயே காதலனாக உருமாறும் அதிசயத்தைக் காணவேண்டுமென்றால் அது எஸ்.பி.பியிடம் மட்டுமே முடியும். ’சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ படத்தில் வரும் ‘ஒரு காதல் தேவதை இரு கண்கள் பூமழை’ பாடலில் வரும் சரணத்தை அவர் பாடும் விதத்தில் காதலிக்காதவர்களுக்கும் காதலிக்கும் ஆசையை உண்டாகும்.  மென்மைக்குப் பெயர் போன பெண் குரலைவிட மென்மையாக ஒலிக்கும் ஆண்குரல் அவருடையது. இந்தப் பாடலே அதற்கு சாட்சி. ‘ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை’ பாடலில் ’மனம் தாளாமல் துடித்திடும் ஓசை’ யில் அந்த ‘தாளாமல்’ என்கிற சொல்லை உச்சரிக்கும் விதம் இருக்கிறதே. ‘அந்தி மழை பொழிகிறது’ பாடலில் வரும் ‘தனிமையிலே வெறுமையில் எத்தனை நாளடி இளமயிலே’ என்கிற வரியில் வரும் ‘எத்தனை’ என்கிற சொல்லை பல பாடகர்கள் பாடக் கேட்டாலும் அவரைப் போல பாட முடியவில்லை. எஸ்.பி.பியின் மகத்துவத்தை அவர் பாடிய பாடலை வேறு யாரேனும் பாடிக் கேட்கும்போதுதான் அறிய முடியும்.

இணையம் முழுதும் அவர் பாடிய மேடை நிகழ்ச்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. அவை ஒவ்வொன்றுமே பாடகர்களுக்கு பாடம்தான். எப்படி ஒலிவாங்கியை பயன்படுத்தவேண்டும், எவ்வளவு தொலைவில் வைத்திருக்கவேண்டும், எப்படி மக்கள் முன் தன்னை முன்வைக்கவேண்டும் என அவரிடம் ஏராளமாக கற்றுக்கொள்ள இருக்கின்றன.

சிறுவயதில் எனக்கு பாடல் பாட வரும் என பிறர் கண்டுணர்ந்து சொன்னபோது எல்லோருக்கும் வருவதுபோல எனக்கும் பின்னணிப் பாடகி ஆகவேண்டுமென்ற கனவு இருந்தது. என் கல்லூரிப் பருவத்தைத் தாண்டியும்கூட அந்த ஆசை இருந்தது.  எஸ்.பி.பி.யோடு இணைந்து என்றாவது ஒரு நாள் டூயட் பாடுவேன் என அவ்வப்போது நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் பின்னணிப் பாடகியாகும் ஆசையெல்லாம் இல்லாமல் போனாலும் அவரோடு டூயட் பாடும் ஆசை மட்டும் இப்போதும் உண்டு, நிறைவேறாதெனத் தெரிந்தும்கூட. 

என் பால்யத்தை இசைகொண்டு நிரப்பியவர்கள் இளையராஜா, எஸ்.பி.பி, ஜானகி ஆகியோர்தான். ’விழியிலே மலர்ந்தது’ பாடலை என் தந்தை நன்றாகப் பாடுவார். அவர் இன்னிசைக் கச்சேரி குழு வைத்திருந்தவர். அந்தப்  பாடலை அவர் பாடியே முதலில் கேட்டேன். பின்னொரு நாளில் வானொலிப்பெட்டியில் இந்தப் பாடல் ஒலித்தபோது, யாரிது, அப்பாவைவிட நன்றாகப் பாடுவது என்றுதான் வியப்பு தோன்றியது. அறியா வயதில் இந்தியில் வந்த ‘டிஸ்கோ டான்ஸர்’ பாடல்களையும் தமிழில் வந்த ‘பாடும் வானம்பாடி’யையும் ஒப்பிட்டு ’தமிழில்தான் நல்லாருக்கு’ என்று பேசிக்கொண்டதற்குக் காரணம் அந்தப் படத்தில் பாடல்களை எல்லாம் பாடியது எஸ்.பி.பி என்பதால்தான் என்பதை பல ஆண்டுகள் கழித்தே உணரமுடிந்தது. 

‘சின்னப்புறா ஒன்று’,’ தேவதை இளந்தேவி’, கூட்டத்துல கோயில் புறா’, ‘மடைதிறந்து தாவும்’ என அவர் பாட்டுக்கு பாடிக்கொண்டே இருந்தார். நாம் சொக்கிப்போய்க் கிடந்தோம். அவருக்குப் பிடித்த பாடகராக அவர் முகமது ரஃபியைச் சொல்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் குருவை மிஞ்சிய சிஷ்யனாகவே இருந்தார். இப்படிச் சொல்வது ரஃபியை குறைத்துச் சொல்வதாகாது. ஏனெனில் இந்தியாவிலேயே எஸ்.பி.பி. போல உணர்வுப்பூர்வமாகப் பாடக்கூடியவர்கள் வேறோருவர் இல்லை எனலாம். 

ஒவ்வொரு புது வருடப் பிறப்புக்கும் தேசியகீதம் போல இரவு 12 மணிக்கு ‘இளமை இதோ’ என ஒலிக்கும் குரல் அவருடையது அல்லவா?  கமல்ஹாசனுக்கும் ரஜினிகாந்துக்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைக்க எப்படி இளையராஜாவும் ஒரு காரணமோ அது போலவே எஸ்.பி.பியும் ஒரு காரணம் என்பதை ஒப்புக்கொள்வதில் தயக்கமிருக்காது பலருக்கும். ‘இளமை இதோ’ பாடல் நாயக வழிபாட்டை அப்பட்டமாக வைத்த பாடல். அந்தப் பாடலுக்குப் பின் கமல்ஹாசன் பார்க்கப்பட்ட விதம் வேறாகவே இருந்திருக்கும் என அனுமானிக்கிறேன். அந்தக் குரல் அதற்கு மிகவும் உதவியிருக்கிறது. ரஜினியின் நாயக பிம்பத்தை கட்டியெழுப்ப எஸ்.பி.பியின் குரல் பெரும் கருவியாக இருந்திருக்கிறது. 

சற்றே கம்பீரமாக ஓங்காரக் குரலில்தான் டூயட்டையும் சோகப்பாடலையும் கூட பாடவேண்டும் என்றிருந்தது தமிழ் சினிமாவின் நியதி. இதற்கு நடுவில் ஏ.எம்.ராஜா, பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோரின் மெல்லிய குரலில் நீட்சியாகவே முதலில் வந்து சேர்ந்தார் எஸ்.பி.பி. அந்தக் குரலில் ஆரம்பகாலத்தில் இருந்த ஒரு வெகுளித்தனத்தைத் துறந்து மெல்ல மெல்ல முதிர்ச்சி பெற்று ஒரு முழுமையான கதாநாயக்க் குரலாக மாறிக்கொண்டிருக்கையில்தான் இளையராஜாவின் வருகை தமிழ் சினிமாவில் நடந்தது. அவர்கள் ‘நான் பேச வந்தேன்’, ‘ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்’ எனத்தான் தொடங்கினார்கள். ஆனால் ஒரு நாற்பதாண்டு காலம் தமிழ் சினிமா வரலாற்றில் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்று அன்று அவர்கள் இருவருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.  ‘அவனுக்காக நான் பிறந்தேன்; எனக்காக அவன் பிறந்தான்’ என்று எஸ்.பி.பியே சொல்லுமளவுக்கான பிணைப்பு தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் அவர்களுக்குள் இருந்தது. ஒரு பாடகருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையிலான இந்த அபூர்வப் பிணைப்பு வேறெங்கும் பார்த்தறியாதது. இந்தக் கூட்டணியின் வெற்றி பிரம்மாண்டமானது. இந்த வெற்றிக்கூட்டணி பல படங்களை ஓடவைத்தது. எண்பதுகளில் வந்த மோகன் திரைப்படங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 

பெண்களுக்கு எப்போதுமே கலைஞர்களைப் பிடிக்கும். அதிலும் குறிப்பாக நிகழ்த்துக்கலைஞர்களை கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும் . அதனால்தான் பல பெண்களுக்கும் எண்பதுகளில் பிடித்த நாயகனாக மோகன் இருந்தார். பெரும்பாலும் பாடகனாகவே நடித்த மோகனின் படங்களை ராஜாவும் எஸ்.பி.பியும்தான் ஓடவைத்தார்கள்.  எனக்கும் என் பால்யத்தில் பிடித்த நடிகர் யாரெனக் கேட்டால் மோகன் என்று சொல்லி இருக்கிறேன். காரணம் வேறெதுவும் இல்லை பாடல்கள்தான் என்பதெல்லாம் பின்னாளில்தான் விளங்கின. அதில் ராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும்தான் அதிக பங்கிருந்தது; மோகனுக்கு கொஞ்சம்தான் என விளங்கிக்கொள்ள நான் கொஞ்சம் வளர்ந்து பெரியவளாகவேண்டி இருந்தது. அந்த சூட்சும்ம் புரிந்தபின் என் அபிமான நாயகனாக மோகன் இல்லை. என் அபிமானம் எல்லாம் ராஜாவின்மீதும் எஸ்.பி.பியின் மீதும் மாறியது. 

எங்கள் வீட்டுக்கு அருகில் எனக்கு மிகவும் நெருக்கமான அக்கா ஒருவர் இருந்தார். அவர் எல்லா அக்காக்களையும் போலவே அவரும் காதலித்தார். இப்போது போன்ற தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லாத காலகட்டத்தில் அவர்கள் கடிதம் மூலம் மட்டுமே பேசிக்கொண்டனர். ஆனால் அன்றாடம் எஸ்.பி.பி.யின் குரல் மூலம் அவர்களின் மனங்கள் பேசிக்கொண்டிருந்தன. அக்கா ஒரு விளையாட்டை அவ்வப்போது விளையாடுவார். வானொலியில் மாலைவேளையில் வரும் திரையிசை நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது பாடல் என்னவென்றுப் பார்ப்போம் என்று சொல்லி காத்திருப்பார். அது காதல் பாடலாக இருந்துவிட்டால் அவருக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடும். சோகப்பாடல் என்றால் அவரும் சோகமாகிவிடுவார். அவரைப் பொறுத்தவரை அந்த வானொலியில் அவருடைய காதலரேதான் பாடுகிறார். முதன்முதலில் அவர் இந்த விளையாட்டை விளையாடுகையில் ‘தெற்கத்திக் கள்ளன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொட்டு வச்சுப் பார்க்கப்போறேன்’ பாடலை எஸ்.பி.பி. பாடினார். உடனே அத்தனை மகிழ்ச்சி அக்காவுக்கு. வரிசையாய் சில நாட்களுக்கு எஸ்.பி.பி. சந்தோஷமாகவே பாடிக்கொண்டிருந்தார். ஒரு நாள் இன்றைக்கு இரண்டாவது பாடல் என்று சொல்லிக் காத்திருந்தார் அக்கா. எஸ்.பி.பி. ‘உன்னை நினைசே பாட்டு படிச்சேன்’ என காதல் தோல்வி பாடலைப் பாட அவர் கண்ணில் கண்ணீர். தன் காதலரே பாடுவது போல் அவர் உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்பட்டதைக் கண்டேன். அநேகமாக அவர் ஓர் எண் சொன்னால் அதற்கு முந்தைய பிந்தைய பாடல்களை ஜேசுதாஸோ மலேசியா வாசுதேவனோ பாடினாலும் அவர் சொன்ன எண்ணில் பாடுவது பெரும்பாலும் எஸ்.பி.பி.யாகவே அமைந்துவிடும். ஆகவே இந்தக் குரலில் காதலனின் குரலையே கண்டார் அக்கா. இப்படி எத்தனை எத்தனை அக்காக்கள்!

பெண்களின் உலகத்தில் தன்னையும் அறியாமல் எஸ்.பி.பி. தன் குரல் மூலம் உள்நுழைந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். என் பள்ளித் தோழி சுஜாதா ‘மலையோரம் வீசும் காத்து’ பாடலைப் பற்றிப் பேசியது இப்போதும் என் நினைவில் இருக்கிறது. ‘குத்தாலத்துத் தேனருவி சித்தாடைதான் கட்டாதா’ என்கிற சரணத்தை மட்டும் அந்தக் குரலுக்காகவே போட்டுப் போட்டு கேசட் தேய்ந்து போனதைச் சொல்வாள்.  எங்களுக்கெல்லாம் தினம் எப்படி சாப்பிடுகிறோமோ அது போல அவரின் பாடல்கள்.  அவர் சிம்மாசனம் அவர் இறக்கும் வரையில் மட்டுமல்ல, இறந்தபின்னும் இப்போதும் எப்போதும் நிரந்தரம்தான். 

அவர் மரணித்தபின் ஏறத்தாழ ஐம்பது நாட்களுக்குப் பின்னும்கூட அவருடைய பாடல்களையும் மேடை நிகழ்ச்சிகளையும் தினமும் பார்ப்பது வாடிக்கையாகிவிட்டது. வேறு வேலைகள் செய்துகொண்டிருந்தாலும் பின்னணியில் ஏதோ ஒரு பாடலோ மேடை நிகழ்ச்சியோ ஓடிக்கொண்டிருக்கும். சில நாட்களுக்கு முன்னால் சிங்கப்பூரில் நடந்த Noise& Grains இசை நிகழ்ச்சியை பின்னணியில் ஓடவிட்டு நான் வேறு வேலை செய்துகொண்டிருந்தேன். எஸ்.பி.பியும் சித்ராவும் ரம்பம்பம் ஆரம்பம் பாடிக்கொண்டிருந்தார்கள். அந்தக் குரலில் வழியும் இளமைத் துடிப்பையும் ஆரவாரத்தையும் குறும்பையும் ரசித்தவாறே வேலைசெய்துகொண்டே திடீரென கணினித் திரையைப் பார்த்தபோதுதான் உறைத்தது 74 வயது முதியவர் இந்தப் பாடலை பாடிக்கொண்டிருக்கிறார் என. என் பள்ளிப் பருவத்தில் நான் அந்தப் பாடலைக் கேட்டபோது எப்படிப் பாடினாரோ அதைவிட ஒரு படி கூடுதலான துள்ளலோடு எழுபதுகளில் பாடும் அதிசயம் அவர் ஒருவர்தான்.

என் பள்ளி கல்லூரி பருவங்களில் இந்தி திரைப்பட இசையை பெரிதும் விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘ஹம் ஆப்கே ஹேன் கோன்’ திரைப்பட்த்தின் கேசட்டை எல்லா பாடல்களையும் எஸ்.பி.பி பாடினார் என்பதற்காகவே வாங்கினேன். கேட்டுக் கேட்டுத் தேய்ந்து இரண்டாவது கேசட் வாங்கிய இந்திப் படங்களின் பட்டியலில் ‘சாஜன்’, ‘மைனே பியார் கியா’ போன்ற படங்கள் உண்டு. 

பல பாடகர்களால் Refined ஆக மட்டுமே பாட முடிந்திருக்கிறது. ஆனால் எஸ்.பி.பிக்கு கிராமத்தானுக்குப் பாடவேண்டுமெனில் கிராமத்தானாகவே மாறி பாட முடிந்திருக்கிறது. ‘கும்பக்கரை தங்கையா’ திரைப்படத்தில் வரும் ‘பாட்டு படிக்கும் குயிலே’ பாடலையும் ’தெய்வ வாக்கு’ திரைப்படத்தில் வரும் ‘ ஒரு பாட்டால சொல்லி அடிச்சேன்’ பாடலையும் கேட்டுப் பாருங்கள். பாடலுக்கு இடையில் எஸ்.பி.பி சிரிப்பார். நாம் சொக்கிப் போவோம். சிரிப்பிலும் பல்வேறு சிரிப்புகளை காண்பித்தவர். மகிழ்ச்சிச் சிரிப்பு, பரிகாசச் சிரிப்பு, எகத்தாளச் சிரிப்பு, விரக்தி சிரிப்பு, விரகதாப சிரிப்பு, காதல் சிரிப்பு என விதவிதமாகச் பாடலுக்கிடையில் சிரித்தவர்.  முக்கியமாக மீட்டருக்குள் சிரிக்கத் தெரிந்தவர்.

நான் காரைக்கால் பண்பலையில் அறிவிப்பாளராக சில காலம் பணியாற்றினேன். மகிழ்ச்சியான காலம் அது. நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் எனக்குப் பிடித்த பாடல்களை விரும்பிக் கேட்டதாகச் சொல்லி ஏதாவது சில பெயர்களை அறிவித்து ஒலிபரப்புவதுண்டு. எத்தனை முறை ’எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியது’ என்று அறிவித்திருப்பேன்!

கல்லூரி முடித்தவுடன் அப்போது சென்னைக்கு வந்த புதிது. ஒரு விடுதியில் தங்கி இருந்தேன். அம்மா என்னைப் பார்க்க சென்னைக்கு வந்திருந்தார். காமராஜர் அரங்கத்தில் எஸ்.பி.பி பங்கேற்றுப் பாடும் ஒரு கச்சேரி இருப்பதாக நாளிதழ்களில் வெளிவந்த விளம்பரம் பார்த்தேன்.  குறிப்பிட்ட நாளில் அம்மாவை அழைத்துக்கொண்டு நிகழ்ச்சிக்குச் சென்றேன். முதன்முதலில் அவர் குரலை நேரில் கேட்கிறேன். அந்த உணர்வைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. அந்த அரங்கமெங்கும் நிர்ம்பி வழிகிறது அவர் குரல்.  அத்தனை அடர்த்தியாய் அதே சமயம் இனிமையும் மாறாமல் எத்திசையிலும் ஒலித்த அவருடைய குரல் தந்த பிரமிப்பு இன்னமும் நினைவில் இருக்கிறது. பல பாடகர்கள் பாட, இடையிடையே அவ்வப்போது வந்து அவர் பாடினார். நிகழ்வை முழுவதும் பார்த்துவிட்டு வந்து மறுநாள் எங்கள் ஊரான நாகப்பட்டினத்துக்கு அம்மாவோடு சென்றுவிட்டேன்.  அன்று மின்னஞ்சல் பார்க்க ப்ரவுஸிங் செண்டர் சென்றபோது சண்முகராஜை பார்த்தேன். ஒரு சிரிப்போடு நான் மின்னஞ்சலை திறக்கும் வரை காத்திருந்தான் அவன். அவனிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. “நான் உன்னைப் பார்த்தேன். எஸ்.பி.பி. நிகழ்ச்சியில்” என்று ஒற்றை வரியோடு தொடங்கியது அந்த மின்னஞ்சல். உடனே திரும்பிப் பார்த்து ”கதை விடக்கூடாது”  என்றேன். நாகப்பட்டினத்தில் இருக்கும் ஒருவன் சென்னையில் எப்படி நிகழ்ச்சியில் பார்த்திருக்கமுடியும் என்று தோன்றியது. எஸ்.பி.பி நிகழ்ச்சி என்பதால் எப்படியும் நான் போயிருப்பேன் என யூகித்து சும்மா சொல்கிறது இந்த ஜீவன் என நினைத்தேன். ஆனால் வரிசையாக அன்று எஸ்.பி.பி பாடிய பாடல்கள் அந்த மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு பாடலுக்கும் என் முகம் காட்டிய உணர்வுகளையும் சொன்னவுடன் ஆடிப் போய்விட்டேன். நாளிதழ்களில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அம்மா சென்னைக்கு சென்றிருப்பதால் எப்படியும் அம்மாவை நான் எஸ்.பி.பி நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வேன் என்று யூகித்து, நாகப்பட்டினத்தில் இருந்து 325 கிமீ பயணித்து சென்னை வந்து நானறியா வண்ணம் என்னைப் பார்த்ததை அறிந்தபோது அடைந்த உணர்வுக்கு என்ன பெயர் வைப்பது! 

இப்படி எஸ்.பி.பி என் வாழ்வின் பல்வேறு நேரங்களில் மறக்கமுடியாதபடி உடனிருந்திருக்கிறார். அவர் அறியமாட்டார். இப்படி எத்தனை பேரின் வாழ்வில் அவர் ஒரு நண்பனைப் போல, காதலனைப் போல, கணவனைப் போல சகோதரனைப் போல, தந்தையைப் போல, மகனைப் போல இருந்திருக்கிறார் என்பதை அவர் முழுமையாக உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

அன்றைக்கு சென்னை வரை வந்து எஸ்.பி.பியோடு சேர்த்து என்னையும் பார்க்கவந்த சண்முகராஜைத்தான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் காதலித்த காலத்தில் எஸ்.ஜானகி அவர்கள் திரையில் பாடத் தொடங்கி 42 ஆண்டுகள் ஆனதையொட்டி நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு நண்பர்கள் சிலரோடு சென்றோம்.  நிகழ்ச்சிக்கு எஸ்.பி.பி வந்திருந்தார். முன்பு தனித்தனியாக எஸ்.பி.பி.யின் குரலைக் கேட்ட நாங்கள் அன்று சேர்ந்து கேட்டோம்.  அன்றைக்கு எஸ்.பி.பியின் குரல் தனித்த இனிமையில் இருந்தது. 

அதன்பின் மண வாழ்க்கையில் எத்தனை பாடல்களை சேர்ந்து கேட்டிருப்போம்! இளையராஜாவின், எஸ்.பி.பியின் நிகழ்ச்சி என்றால் எப்போதுமே முதல் ஆளாய் சென்றுவிடுவோம்.. எஸ்.பி.பியையோ ஜானகியையோ இளையராஜாவையோ பற்றிப் பேசிக்கொள்ளாத நாளே இல்லை. அதன் பின் காலங்கள் மாறின. காட்சிகளும் மாறின. நாங்கள் மணவிலக்கு பெற்றோம். ஆனாலும் நெருங்கிய நண்பர்களாக எங்கள் நட்பு தொடர்ந்தது.

’மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலின் தொடக்கத்தில் வரும் எஸ்.பி.பியின் அந்த ஆலாபனையை மறக்க முடியுமா? மணமாகியும் உடலாலும் மனதாலும் சேராமல் ஒரே வீட்டில் தனித்தனியே வாழும் இணையர் விவாகரத்துக்கு விண்ணப்பித்த சூழலில் இப்பாடல் இடம்பெறும். மகிழ்ச்சி கூடாது. பிரிந்துவிட்டது போன்ற அதிக துயரமும் கூடாது. ஏமாற்றம், விரக்தி, சோகம் எல்லாம் கலந்த கலவை. அதே நேரம் இரத்தல் தொனியும் லேசாக வேண்டும். குறிப்பாக சோகத்தை பிழியக் கூடாது. அந்த ஹம்மிங்கை கேட்டுப் பாருங்கள். அத்தனை உணர்வுகளும் கலந்திருக்கும்.  இப்படிப் பாட இனி எவரிருக்கிறார்? இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் இதே சூழலில் நானும் சண்முகராஜும் இருந்ததுதான் பிரிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நிழலாடும். 

என் தோழியின் குழந்தை  மூன்று வயது ஆரண்யா எப்போதும் என்னோடு இருப்பவன்.  அவன் வீட்டில் இருப்பதை விட என் வீட்டில்தான் அதிகமிருப்பான். அல்லது நான் அவன் வீட்டில் இருப்பேன். தூங்கும் நேரத்தில் அவனுக்கு ‘ஆயர்பாடி மாளிகையில்’ பாடவேண்டும். ஏறக்குறைய அன்றாடம் அவனுக்கு நான் அந்தப் பாடலைப் பாடி தூங்கவைத்துக்கொண்டிருந்தேன்.  

2019ஆம் ஆண்டு ஒரு நாள் அந்தத் துயரச் செய்தி எனக்கு வந்து சேர்ந்தது. சண்முகராஜ் காலமான செய்தி அது. அன்று இறுதி நிகழ்வுகளுக்குச் சென்று சண்முகராஜை புதைத்துவிட்டு வந்த அன்று இரவு, ஆரண்யா வழ்க்கம்போல ‘ஆயர்பாடி பாடு கவின்’ என்றான். 

‘ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்

மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ - அவன்

வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்

ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ’

இந்த வரிக்கு மேல் என்னால் பாட முடியவில்லை. அழத் தொடங்கினேன். குழந்தைக்கு ஏதோ புரிந்தது. அதன்பின் பத்து நாட்களுக்கு அந்தப் பாடலை பாடச் சொல்லி கேட்கவே இல்லை.  அதன்பின்னர் அந்தப் பாடலை பாடத் தொடங்குகையில் இனம்புரியாத துயரம் வந்து தொண்டையை அடைக்கத் தொடங்கியது.  அந்தப் பாடலை எஸ்.பி.பியின் குரலில் கேட்கவும் முடியாமல் இருந்தது.  காலம் எல்லாவற்றுக்கும் மருந்தை வைத்திருக்கிறது இல்லையா? கொஞ்சம் கொஞ்சமாக ‘ஆயர்பாடி’ பாடலை பழையபடி பாடத் தொடங்கி இருந்தேன். 

செப்டம்பர் 25 ஆம் தேதி எஸ்.பி.பி நம்மைவிட்டுச் சென்று விட்டார். நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். பித்து பிடித்தவள் போலானேன். எஸ்.பி.பிக்கு சாவு கூட வருமா? அந்த உடலும் மண்ணுக்குள் போகுமா? வேதனை இப்போது வரை  அரித்துத் தின்கிறது. எஸ்.பி.பி கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் செல்கிறார். நான் தொலைக்காட்சியில் பார்க்கிறேன். அவ்வளவுதானா? இனி இந்தக் குரல் ஒலிக்காதா? 

ஆரண்யா மீண்டும் இரவில் உறங்கும் நேரத்தில் வந்து ‘ஆயர்பாடி பாடு கவின்’ என்றான். “……ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் ஆராரோ” என்கிற வரியோடு அன்றும் அழத் தொடங்கினேன். ஆரண்யாவுக்கு இந்த முறை புரிந்ததா எனத் தெரியவில்லை. அவனை ஏமாற்றக்கூடாதென மறு நாள் இரவு என் அலைபேசியில் யூ டியூபில் எஸ்.பி.பி.யின் குரலில் அந்தப் பாடலை எடுத்து ஒலிக்கவிட்டேன். நான் எப்படி ‘விழியிலே மலர்ந்தது’ பாடலை முதன்முறையாக எஸ்.பி.பி பாடியதை வானொலியில் கேட்டபோது ‘என் அப்பாவைவிட நல்லா பாடுறாரே யாரிவர்?’ என்று வியந்ததுபோலவே ஆரண்யாவும் ‘கவினைவிட இந்தப் பாடலை நல்லா பாடும் இவர் யார்?” என்று புருவம் உயர்த்தி என்னைப் பார்த்தான். 

”இவர் எஸ்.பி.பி. இவர்தான் இந்தப் பாட்டைப் பாடினவர்” என்றேன். 

“இவர் பாடி உனக்கு மொபைல்ல அனுப்பினாரா? அதைக் கேட்டுத்தான் நீ எனக்குப் பாடினியா?” என்றான்.

“ஆமாம். எஸ்.பி.பிதான் எனக்கு பாடி அனுப்பினார். அதைக் கேட்டுத்தான் நான் பாடினேன் உனக்கு” என்றேன்.  

அப்படி குழந்தைக்காக சொன்னேன் என்றாலும் அது உண்மைதானே?