Wednesday, August 21, 2013

மணமாகி 17 ஆண்டுகள், 2 குழந்தைகள் - மறுபடியும் விளையாட்டுத்துறையில் பதக்கம் அள்ளும் கீர்த்தனா

திருமணம் பெண்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை உருவாக்குகிறது என்று வியப்பாக இருக்கிறது.  பல பெண்கள் தங்கள் திறமைகளை மறந்துவிட்டோ, மறைத்துக்கொண்டோ மணவாழ்க்கையில் ஈடுபடுகிறார்கள். குடும்பம், கணவன், குழந்தைகள் என்று வாழ்க்கை பாதையும் அப்படியே மாறிவிடுகிறது.  பலருக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் காலமும் தளமும் அதன்பின் வாய்ப்பதில்லை. அவற்றை தேடுவதுமில்லை. ஆனால் விதிவிலக்காக இதோ வந்திருக்கிறார் கீர்த்தனா. மணமாகி 17 ஆண்டுகளுக்குப் பின் மூத்த மகன் பொறியியல் கல்லூரியிலும், இளையமகன் பத்தாம் வகுப்பிலும் இருக்க மீண்டும் தன் பாதைக்குத் திரும்பியிருக்கிறார். அண்மையில் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த ஓபன் அத்லெடிக் போட்டிகளில் 100 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் இரண்டாமிடம் பெற்றார். அக்டோபர் 16 முதல் 27ம் தேதி வரை பிரேசில் நாட்டில் 35 - 90 வயதானவர்களுக்காக நடைபெறவுள்ள போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்கிறார்.  சீனாவில் நடந்த ஏசியாட் போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட கீர்த்தனாவுக்கு ஸ்பான்சர் கிடைக்காததால் கலந்துகொள்ளவில்லை. ‘’ஸ்பான்சர் பெறுவதுதான் மிகவும் கஷ்டமான காரியம். கொழும்பு செல்ல எனக்கு பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 20,000 அளித்தது. அதே நிறுவனம் பிரேசில் செல்வதற்கும் ஸ்பான்சர் செய்வதாகக் கூறியுள்ளது’’ என்கிறார்.கீர்த்தனா.  

பெங்களூருவில் வசிக்கும் கீர்த்தனா மதுரையில் தன் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்தவர். படிக்கிற காலத்தில் விளையாட்டுத்துறையில் கால் பதித்து பல பதக்கங்களையும்  பரிசுகளையும் பெற்றவர். மதுரை இ.எம்.ஜி. யாதவா பெண்கள் கல்லூரியில் 1991-94ல் பி.ஏ.(வரலாறு) பயின்ற கீர்த்தனா மாவட்ட, மாநில, தேசிய அளவிலான தடைதாண்டும் போட்டிகள் பலவற்றில் பதக்கங்கள் பெற்றவர். 1995ல் பிஜிடிசிஏ முடித்தார். ஸ்ரீதருடனான அவருடைய காதல் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன் கீர்த்தனாவின் பெயர் கிறிஸ்டினா. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா, இந்துவான ஸ்ரீதரை மணந்துகொள்ள மதம் மாறி கீர்த்தனாவானார்.  கணவருடைய வீட்டில் அவர் விளையாட்டுத்துறையில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆகவே தன் கனவுகளை கைவிட்டுவிட்டு சாதாரண குடும்பத் தலைவியாக இரு குழந்தைகளுக்குத் தாயானார். இடையில் அவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தபோதும், அவர் கர்ப்பம் தரித்திருந்ததால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. வருமான வரித்துறையும் அவருக்கு வேலைதர முன்வந்தது. ஆனாலும் ஒரு சில காரணங்களால் கீர்த்தனா அந்த வேலைக்கும் செல்லவில்லை. 

கீர்த்தனாவின் தந்தை மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்திலும் தாய் நர்ஸாகவும் பணிபுரிந்தனர். விளையாட்டுக்காக விசேஷ உணவுகள் எதையும் உட்கொண்டதில்லை என்கிறர் கீர்த்தனா. ‘தினமும் முட்டை எடுத்துக்கொள்வேன். மற்றபடி வழக்கமான உணவுதான்’ என்கிறார். புனித ஜோசப் பள்ளியில் பயின்றபோது அவருக்கு உடற்கல்வி ஆசிரியராக இருந்த அன்னத்தாய் இவரை மிகவும் ஊக்குவித்ததாகக் கூறுகிறார். ‘’என்னுடைய பயிற்சியாளர் அழகு மலை எனக்கு பெரும் உந்துசக்தியாக இருந்தார். அவர் தான் நான் விளையாட்டுத்துறையில் ஆர்வம் வர காரணமானவர். தினமும் மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தின் பயிற்சிக்குப் போய்விடுவேன். மைதானத்தை 10 முறை சுற்றிவருவது, ஸ்ட்ரெட்சிங், டைமிங் செக், பளு தூக்குதல் என்று விதவிதமான பயிற்சிகள் உண்டு. வாரம் ஒரு முறை, அருகில் இருக்கும் ஏதாவது  10 கி.மீ. தொலைவிலுள்ள இடத்துக்கு ஓடிச் சென்று திரும்பி வருவேன். எல்லோரும் உறங்கிக்கொண்டிருக்கும் அதிகாலையில் நான் மட்டும் ஆளரவமற்ற சாலையில் ஓடுவது சுகமாக இருக்கும். சில சமயம் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள கம்பிகளை ஸ்ட்ரெட்சிங் செய்ய பயன்படுத்துவேன்’’ என்கிறார் கீர்த்தனா.

இரு குழந்தைகளுக்குப் பின் தற்போது 39 வயதாகும் கீர்த்தனா தன்னுடைய மறுவரவுக்கு காரணம் தன் கணவரே என்கிறார். ‘’என் கணவர்தான் என் கனவுகள் நிறைவேற வேண்டுமென்று என்னை வற்புறுத்தி மீண்டும் மைதானத்துக்கு அழைத்து வந்தவர். என் நண்பர்களுக்கும் என் வளர்ச்சியில் பெரும்பங்கு உண்டு. உடல் பருமனை குறைக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருபபர். நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். தினமும் காலை 5 மணிக்கு பயிற்சிக்கு சென்றுவிடுவேன். ஒருவேளை நான் தூங்கிவிட்டால் என்னை என் கணவர்தான் எழுப்புவார்.’’ என்கிறார்.  தற்போது ஸ்ரீதர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். 
17 ஆண்டுகள் கழித்து மைதானத்தில் இறங்கிய அனுபவம் எப்படி? ‘’படிக்கிற காலத்தில் இருந்ததுபோலவே இப்போதும் அதே வேகம் இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் பல ஆண்டுகள் பயிற்சி இன்றி இருந்துவிட்டு பழைய வேகத்தை எதிர்ப்பார்ப்பது தவறு என்று புரிந்தது. 6 மாதங்கள் கடுமையாக உழைத்தேன். காலை 5 மணி முதல் 6.45 வரை மைதானத்தில் பயிற்சிகள் செய்வேன். என் பழைய பயிற்சியாளர் அழகு மலையிடம் அலைபேசியில் அழைத்து வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்வேன். பெங்களூருவில் என் கணவருடன் பணிபுரிபவரும் தடகள் வீரருமான ஆண்டனியும் எனக்கு பெரும் உதவியாக இருக்கிறார். அவரும் பிரேசில் போட்டிகளில் கலந்துகொள்கிறார்.’’ என்கிறார். ஆனாலும் மாணவியாய் இருந்த காலத்தின் வேகத்தை பெறமுடியவில்லை என்று கூறும் கீர்த்தனா வீட்டுவேலைகளுக்கென்று பணியாளர் யாரையும் வைத்துக்கொள்ளவில்லை. எல்லா வேலைகளையும் அவரே செய்கிறார்.

பிரேசிலில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் பங்குபெறுகிறார். ஏன் தடைதாண்டும் போட்டிகளில் இத்தனை ஆர்வம்? ‘’எனக்கு அதுதான் நன்றாக வரும். பயிற்சியும் உண்டு. அப்படியிருக்கையில் வேறு ஏதாவது பிரிவில் சென்று ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’’ என்கிறார்.
தங்கமும் வெள்ளியும் குவிக்கும் தாயை பிள்ளைகள் எப்படிப் பார்க்கிறார்கள்? ‘’என் இரு மகன்களுக்கும் என் குறித்து பெருமை. கொழும்புவில் 100 மீட்டர் பிரிவில் பதக்கம் வென்றாலும் 400 மீட்டர் பிரிவில் பங்குகொள்ளவில்லை என்று என் மூத்த மகன் கோபப்பட்டான். எனக்கு ஓட முடியாத அளவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததைச் சொன்னவுடன் தான் சமாதானமானான். ‘பக் மில்கா பக்’ இந்திப் படத்தைப் பார்க்கச் சொல்லி கேட்டுக்கொண்டே இருக்கிறான்.  விளையாட்டு வீரர் குறித்த அந்தப் படத்தைப் பார்த்தால் எனக்கு உந்துதலாக இருக்கும் என்கிறார். பார்க்கவேண்டும்’’ என்கிறார்.

மீண்டும் தடகளத்துக்கு வந்தபின் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றார். கர்நாடகா சார்பாக விளையாடும் கீர்த்தனா கோலாரில் நடந்த மாநில தடகள போட்டிகலில் 100 மீட்டர் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் கீர்த்தனா 100 மீட்டர் தடைதாண்டும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றார்.  4க்ஷ்400 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

39 வயது பெண் போல் இல்லாமல் இளமையாக இருக்கிறார் கீர்த்தனா. இவரது இளமைத் தோற்றத்தைப் பார்த்த போட்டி ஏற்பாட்டாளர்கள் கொழும்புவில் இவரைப் பார்த்து ‘’தலைமுடிக்கு டை அடிக்கிறீர்களா?’’ என்று கேட்டிருக்கிறார்கள். ‘’எனக்கு ஒரு முடி கூட நரைக்காதது அவர்களுக்கு சந்தேகத்தை உண்டுபண்ணிவிட்டது. நான் இளையவளாக இருப்பேனோ என்று எண்ணி என்னை விசாரித்தனர். என்னுடைய பாஸ்போர்ட்டைக் காண்பித்தும், என் போனில் எப்போதுமிருக்கும் என் மகன்களின் படங்களையும் காண்பித்தபின் தான் நம்பினார்கள்.’’ என்கிறார்.

மாணவ பருவத்தில் இவருடைய வழிகாட்டியாக இருந்த பழம்பெரும் தடகள வீரர் பார்த்தசாரதி அண்மையில் பெங்களூருக்கு ஒரு போட்டிக்கு வந்திருந்தபோது கீர்த்தனா என்று அழைக்கப்பட்டதால் அடையாளம் தெரியாமல் பேசாமலிருந்திருக்கிறார். ‘’நான் அவரிடம் சென்று பழைய கிறிஸ்டினா தான் நான் என்று சொல்ல அவருக்கு ஒரே ஆச்சரியம். மேலும் பல வெற்றிகளை நான் பெறவேண்டும் என்று வாழ்த்தினார்.  சீக்கிரமே கல்யாணம் செய்துகொண்டதால் நான் பல சாதனைகளை செய்யமுடியாமல் போய்விட்டது என்று இப்போதெல்லாம் அடிக்கடி தோன்றுகிறது. சாதித்தபின் திருமணம் செய்துகொண்டிருக்கலாம். ‘’ என்று ஆதங்கப்படுகிறார். சிறுவயது நினைவுகளில் மூழ்கும்போது கீர்த்தனாவின் பேச்சில் மின்னல் தெறிக்கிறது.  ‘’1988ல் திமுகவின் மாநாடு ஒன்று திருச்சியில் நடந்தது. அப்போது மதுரையிலிருந்து திருச்சி வரை நானும் இன்னும் சில நண்பர்களும் மாநாட்டு ஜோதியை ஏந்தியவாறு ஓடி கலைஞர் கையில் கொடுத்தோம். என் அப்பா இதுபோன்ற பல வாய்ப்புகளை எனக்கு உருவாக்கித் தந்திருக்கிறார். அம்மாவுக்கு விளையாடு, பதக்கம் குறித்து அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் நான் பதக்கம் வாங்கினால் சந்தோஷப்படுவார்’’ என்கிறார்.

ஷைனி வில்சன், அஸ்வினி நாச்சப்பா, பி.டி.உஷா ஆகியோர் இவருடைய முன்மாதிரிகள். கீர்த்தனாவின் உறவினர்களும், அவருடைய கணவரின் உறவினர்களும் பிரேசில் போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்து கூறுகிறார்கள். இப்போது கீர்த்தனா கர்நாடகாவின் சொத்து. அவருடைய வார்த்தைகளில் சொல்வதானால் கீர்த்தனா கர்நாடகாவின் செல்லப்பிள்ளை.  இப்போதைக்கு கீர்த்தனாவின் ஒரே இலக்கு பிரேசில் போட்டிகள்தான். அதன்மூலம் தன் மகன்கள் தாய் குறித்து காணும் தங்கக் கனவுகளை நிஜமாக்குவதே அவருடைய குறிக்கோள்.

நன்றி : இந்தியா டுடே

Monday, August 19, 2013

அதிகாரம் Vs ஒரு திரைப்படம்

மதராஸ் கஃபே பற்றிய பேச்சு வந்துவிட்டது. இப்போது தலைவா வெளியாகப் போகிறது. எதற்கு இப்போது இந்தக் கட்டுரை என்று கேட்கலாம். ஆனால் தலைவா குறித்து எழுதவேண்டிய தேவை இருக்கிறது.

சினிமாவிலிருந்து ஆட்சியதிகாரம் செலுத்த வந்த காலம் போய் சினிமாவை ஆட்சி செய்வதாக ஆட்சியதிகாரம் மாறியிருக்கிறது. தற்போது தலைவா 20ம் தேதி வெளியாகும் என்று செய்தி வந்துவிட்டது. விஜய் முதல்வருக்கு நன்றி கூறியிருக்கிறார். எதற்கு நன்றி கூறியிருக்கிறார்? இந்த நன்றியின் பின்னணி என்ன?

தலைவா - எப்போது வரும் என்கிற கேள்வியைவிட எல்லோர் மனதில் தொக்கி நினறது பின்வரும் கேள்விகள்தான். ஏன் அந்தப் படத்துக்கு இத்தனை சிக்கல்கள்? என்ன காரணம்? யார் காரணம்? தலைவா அரசியல் படமா? அதில் வரும் வசனங்கள் காரணமா? அல்லது படத்தின் கேப்ஷனாக வரும் ‘டைம் டு லீட்’ என்கிற வார்த்தைகள் காரணமா? அல்லது உண்மையில் திரையரங்கங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததா? அதனால்தான் பயந்து திரையரங்க உரிமையாளர்கள் அரசு பாதுகாப்பு அளித்தால்தான் படத்தை திரையிடுவோம் என்று பின்வாங்கினார்களா?

என்ன தான் நடந்தது? வெள்ளித்திரைக்குப் பின்னால் நடக்கும் திரைமறைவு வேலைகள் தான் என்ன? இவை எதுவும் சாமான்யர்களுக்கு தெரியவில்லை. ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் எந்த சக்திக்கு அடிபணிந்து இந்தப் படத்தை திரையிட மாட்டோம் என்றார்கள்? உண்மையில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததா? அப்படி மிரட்டல் வந்திருந்தால் காவல்துறைக்கு விஷயம் சென்றிருக்கவேண்டும். அல்லது உளவுத்துறை எச்சரித்திருக்கவேண்டும். காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் மிகத் தெளிவாக தனது அறிக்கையில் ‘’திரையரங்கங்களில் தலைவா படத்தை திரையிடாமல் இருப்பதற்கும் காவல்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’’ என்று அறிவித்துவிட்டார். 

இந்த அறிவிப்பு நமக்குச் சொல்வது என்ன? ஒரு வெடிகுண்டு மிரட்டல் வந்தால் முதலில் போக வேண்டிய இடம் காவல்துறைதானே? காவல்துறைதானே இந்த விஷயத்தில் அறிவுரை கூறி படத்தை திரையிட வேண்டாம். ஒருவேளை அப்படி திரையிட்டால் உங்கள் சொந்த ரிஸ்க் அது என்று கூறியிருக்கவேண்டும். ஆனால் காவல்துறை தனக்குத் தொடர்பில்லை என்று கையை விரித்துவிட்டதால், இந்த வெடிகுண்டு மிரட்டல் என்பது உண்மையில் வந்ததா என்கிற சந்தேகம் எழுகிறது. வெடிகுண்டு மிரட்டல் உண்மையிலேயே வந்திருந்தால் அதில் தொடர்புடைய இயக்கம் எது? அல்லது எந்த தனிநபர் இதில் தொடர்புடையவர்? அல்லது அது அனாமதேய மிரட்டலா? தொடர்புடைய இயக்கம் இதுதான் என்று கூறாமல், தொடர்புடைய நபரின் பெயரையும் கூறாமல், அனாமதேய மிரட்டல் என்றும்கூட கூறாமல், வெறுமனே மிரட்டல் மிரட்டல் என்று திரையரங்க உரிமையாளர்கள் மிரண்டுபோய் கூறுவது ஏன்? ஒரு அனாமதேய மிரட்டலுக்கு பயந்து ஒரு பெரிய படத்தை திரையிட மறுக்கும் அளவுக்குத்தான் நம் திரையரங்க உரிமையாளர்கள் இருக்கிறார்களா? தனக்குப் பிடிக்காத நடிகர் ஒருவரின் படத்தை திரையிடாமல் செய்ய ஒரு அனாமதேய மிரட்டல் போதுமே அப்படியெனில்?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாத முட்டாள்கள் அல்ல தமிழக மக்கள். கடந்த பல ஆண்டுகளாக அரசியலையும் சினிமாவையும் உற்றுநோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் பின்னே உள்ள அரசியலை விளங்கிக்கொள்ளலாம். ஆனால் இவ்விஷயத்தில் நிலவும் அமைதிதான் சகித்துக்கொள்ள முடியாதது. விஸ்வரூபம் படத்துக்கு அரசு விதித்த தடைக்கான சூழல் வேறு. அந்தத் தடையை இஸ்லாமிய இயக்கங்கள் விரும்பின. ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் தலைவா படத்துக்கு எந்த இயக்கமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தடை கோரவில்லை. சொல்லப்போனால் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதை சுட்டிக்காண்பித்தபின் காட்சிகள் சில வெட்டப்பட்டு, சில வசனங்கள் வெட்டப்பட்டு படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. . ஆக படத்தில் ஆட்சேபகரமான காட்சிகள் இருக்கின்றன என்றால் அதை வெட்டவும் தயங்காதவர்தான் விஜய். அப்படி இருக்கையில் இந்தப் படத்தின் காட்சிகளுக்காகவே இந்த மறைமுகத் தடை என்பது நகைச்சுவையே. சொன்னால் அவற்றை வெட்டிவிட்டு படத்தைத் திரையிடவே இயக்குநர் விஜய்யாக இருந்தாலும் நடிகர் விஜய்யாக இருந்தாலும் செய்வார்கள் என்று நம்ப இடமிருக்கிறது. துப்பாக்கி விவகாரத்துக்குப் பின் அதற்கு பிராயச்சித்தமாக விஜய் ஒரு படத்தில் இஸ்லாமியராக நடிப்பார் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வேறு உறுதிமொழி அளித்தார். அதே எஸ்.ஏ. சந்திரசேகரால்தான் இப்போது விஜய் படத்துக்கும் பிரச்சனை நேர்ந்ததாக சினிமா வட்டாரம் தெரிவிக்கிறது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்கிற ரீதியில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியதும், விஜய்யின் பிறந்தநாள் விழா ஒரு கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டு அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு ஷோபா திருமண மண்டபத்தில் நடத்தப்பட்டபோது அவர் பேசியவை ஆட்சியாளர்களின் காதுகளை எட்டி கோபத்தைக் கிளப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சட்டமன்ற உறுப்பினரே நேரடியாக திரையரங்கங்களை மிரட்டியதாக திரைப்படத் துறையில் பேச்சு இருக்கிறது. மேலிடத்திலிருந்து நேரடியாக தலைவாவுக்கு நெருக்கடி தரும்படியான உத்தரவு வந்ததாகவே சினிமாத் துறையில் பேசப்படுகிறது. திரைத்துறையினர் இதுகுறித்து பெயர் குறிப்பிட்டு வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். எதுதான் உண்மை என்பதை அறிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க இணை செயலாலர் திருச்சி ஸ்ரீதரை தொடர்புகொண்டபோது ‘’தலைவா 23ம் தேதி நிச்சயமாக வெளிவரும். தமிழக முதல்வரின் நல்லாசியுடனும், அரசின் ஒத்துழைப்புடனும் வரும்’’ என்று மட்டும் கூறினார். திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இதுகுறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க மறுக்கின்றனர்.

படத்துக்கு சென்சார் போர்ட் யூ சான்றிதழ் அளித்திருக்கிறது. ஆனால் தமிழக அரசு நியமித்திருக்கும் குழுவோ  திரைப்படத்தின் தலைப்பு தமிழில் இருந்தாலும், 'யூ’சான்றிதழ் பெற்றிருந்தாலும், தமிழ் இளைஞர்களைப் பாதிக்கும் வகையில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளதாலும், திரைப்படத்தில் ஆங்கில மொழிக் கலப்பு உள்ளதாலும், இத்திரைப்படம் வரி விலக்கிற்குத் தகுதியானது அல்ல என பரிந்துரை செய்துள்ளது. அப்படியெனில் எப்படி சென்சார் போர்ட் யூ சான்றிதழ் கொடுத்தது? இதில் தமிழக அரசின் குழு கூறுவது சரியா? அல்லது சென்சார் போர்ட் அதிகாரிகளின் தீர்ப்பு சரியா?

விஜய் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் திரும்பத் திரும்ப அரசும் தமிழக முதல்வரும் படம் வெளியாக உதவவேண்டும் என்று கோரிக்கை வைப்பதைப் பார்த்தாலே தெரியவில்லையா வெடிகுண்டு மிரட்டல் என்கிற விஷயம் எந்த அளவுக்கு உண்மை என்று.? ஒரு நேரடி பகைக்காக ஒரு படத்தை முடக்குவது என்பது எந்த வகையில் சரி? யாரும் தடைகோராத ஒரு படத்தை சொந்த பகை அல்லது ஈகோவுக்காக வெளியாகவிடாமல் தடுப்பதை ஒரு படைப்புக்கு விடப்படும் சவால் எனலாம். தமிழ்நாட்டில் அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த தலைவா பட விவகாரம். அந்தப் படம் ஒரு மசாலா படமாகவே இருந்துவிட்டுப்போகட்டும். ஆனால் அந்தப் படம் என்ன காரணத்துக்காக வெளிவரவிடாமல் காரியங்கள் நடக்கின்றன என்று யோசித்தால் ஒரு படைப்பாக அது வெளிவருவதற்குரிய உரிமையை யாரும் தடுக்க முடியாது என்கிற வகையில் தமிழக அறிவுஜீவிகள் மத்தியில் இது குறித்த கவலைகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை வெகுஜன மக்கள் ரசிக்கும் விஜய்யின் படம்தானே என்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம். ஆனால் கமல்ஹாசனுக்காக கருத்துச் சுதந்திரம் பேசியவர்கள்கூட இயக்குநர் விஜய்யின் கருத்துச் சுதந்திரத்துக்காக பேசவில்லை. 

விஸ்வரூபம் பிரச்சனையில் கமலுக்காக திரண்ட கலையுலகம் விஜய்க்காக திரளவில்லை. ஆங்காங்கே சிம்பு, தனுஷ், நயன் தாரா, உதயநிதி என்று ஒரு சில குரல்கள் மட்டுமே இணையத்தில் கேட்டன. தேசிய ஊடகங்களில் இது குறித்து விவாதங்கள் இல்லை. ‘India's shame' என்றோ ‘கலாசார பயங்கரவாதம்’ என்றோ சொல்லாடல்கள் இல்லை. கருத்துரிமை குறித்த பேச்சே எழவில்லை. ஏனெனில் கமலுக்கு எதிராக இருந்தவை சிறுபான்மையான இஸ்லாமிய அமைப்புகள் இருந்தன; இப்போது ‘ம்தரஸ் கஃபே’ படத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பையும் இதனுடன் ஒப்பிட முடியாது. எந்த எதிர்ப்பும் வராத யாரும் தடை கோராத ஒரு படத்துடன் விஸ்வரூபத்தையும் மதராஸ் கஃபேயையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடக் கூடாது.

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு அப்போது இஸ்லாமியர்கள் பக்கம் இருந்தாலும், பெரும்பான்மைவாதம் பலர் மனங்களில் வேலை செய்தது. ஆனால் இப்போது தலைவா படத்துக்கு எதிராக நிற்பது யார்? சர்வ வல்லமை பொருந்தியவர்கள் என்பதால் பலர் வாய்திறக்காமல் இருக்கின்றனர். இந்த மௌனம் அல்லது கண்டுகொள்ளாமை அல்லது பயம் அதிகாரத்தைப் பார்த்து வருகிறது. ஆக, அதிகாரமோ ஆட்சியோ இருந்தால் எவர் வாயையும் மௌனிக்க வைக்க முடியும் என்கிற உண்மை மிக மிக கசப்பாக கண்முன் நிற்கிறது. இன்றைக்கு தலைவா என்கிற படமாக இருக்கலாம். நாளைக்கு வேறு ஒரு படமாக இருக்கலாம். அல்லது ஒரு புத்தகமாக இருக்கலாம். ஒரு கட்டடமாக இருக்கலாம். அதிகார தீவிரவாதம் எவர் மீது வேண்டுமானாலும் பாயலாம். இப்போது அமைதியாய் இருந்ததுபோலவே அப்போதும் எல்லோரும் அமைதியாய் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு அமைதியும் எதில் போய் முடியும்? 

ஊரறிந்த ரகசியமொன்றை ஒருவருக்கொருவர் கிசுகிசுப்பதை விட்டுவிட்டு உரக்க அரசுக்கு எதிராக குரல்கொடுக்க முனைபவர்கள் வெகு சிலரே. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற இந்த நிலை மிக மிக ஆபத்தானது. ஜனநாயகத்துக்கு விரோதமானது. விஜய் என்கிற கலைஞர் மசாலா படத்தை தரக்கூடியவராகவே இருக்கட்டும். ஆனால் ஆட்சியதிகாரத்தின் பெயரால் அவருக்கு இழைக்கப்படும் அநீதியை அறிவுலகம் பார்த்துக்கொண்டிருக்குமானால் அது மிகப்பெரிய தவறு. தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்சியதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்துவது என்பது அழிவின் ஆரம்பம். அரசுக்கு எதிரான குரல்கள் எழுவதை அரசு விரும்புகிறதோ இல்லையோ அப்படி குரல் கொடுத்துவிடாமல் ஜாக்கிரதையாக அடக்கிவாசிக்க நினைக்கும் நாம் ஜனநாயகமான சுதந்திர நாட்டின் அடிமைகள்தானோ?

Monday, August 12, 2013

எங்குதான் செல்லும் இந்தக் காதல்?

சீனிவாசன் - பிரதிபா ஜோடிக்கு திருமணமானது 2012 அக்டோபரில். ஒடிஷாவில் வாழ்ந்த அவர்களை ஆட்கொணர்வு மனு ஒன்றைப் போட்டு பிரதிபாவின் பெற்றோர் சென்ற வாரம் மதுரை நீதிமன்றத்துக்கு வரவத்தனர். தர்மபுரி திவ்யாவைப் போலவே  பிரதிபா கணவனுடன் தான் இருப்பேன் என்று கூறிவிட, நீதிமன்றம் பிரதிபாவின் பெற்றோரிடம் தம்பதியின் வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட்டு அனுப்பினர். திவ்யா வழக்கை நீட்டித்தது போல் நீட்டிக்காமல் உடனடியாக தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

காதல் திருமணங்கள் தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால் அண்மைக் காலமாக காதலர்களும், புதுமண தம்பதிகளும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். தனிமனித உணர்வான காதலையும், மண வாழ்க்கையையும் காப்பாற்றிக்கொள்ள சட்டத்தையும், காவல்துறையையும், நீதிமன்றங்களையும் எதிர்நோக்கி இருக்கும் அவல நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. பெண்ணின் வீட்டிலிருந்து ஆட்கொணர்வு மனு போடுவதும் பெண் நீதிமன்றத்தில் வந்து ஆஜராவதும் காதலர்கள் காவல்துறையில் பாதுகாப்பு கோருவதும் சர்வசாதாரண காட்சிகளாகிவிட்டன. 

தனிமனித உணர்வில் நீதிமன்றத்தின் தலையீடு கட்டாயம் என்று உண்டாக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழல் ஆரோக்கியமானதுதானா?  காதல் இப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நீதிதேவதையின் கட்டப்பட்ட கண்களுக்குள்ளாக ஒளியைத் தேடிக்கொண்டிருக்கிறது.  இப்போது சேரனின் மகள் தாமினி விஷயமும் நீதிமன்றத்தில் உள்ளது. 18 வயதுக்குட்பட்ட காதலர்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் கையாளலாம்; ஆனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் காதல் குறித்த வழக்குகளை நீதிமன்றம் இனி எடுக்கப்போவதில்லை என்று அறிவிப்பது நல்லது என்கிறார் அஜிதா. ‘’ஒரு பெண் காதலிக்கட்டுமே என்ன தவறு என்று பெற்றோரும் விடுவதில்லை. ஆறு மாதமோ, ஒரு வருடமோ கழிந்தால் அவன் சரியானவனா என்று அவளே கணிப்பாள். ஆனால் அதற்கு வாய்ப்பு தராமல் ‘நீங்கள் இருவரும் பேசக்கூடாது’’ என்று தடைவிதிப்பது சரியல்ல. அதுதான் பிரச்சனையை சிக்கலாக்கும். ஒருவனையே காதலிக்கவேண்டும், அவனையே கைபிடிக்கவேண்டும், கற்போடு இருக்கவேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையிலேயே பெண் காதலித்தால் பதறுகிறார்கள்.அவளுக்கு ஒரு காதலுக்கு மேல் வர வாய்ப்பில்லை என்று அவர்களாகவே முடிவு செய்துகொள்கிறார்கள். எல்லா பிரச்சனைகளும் இதிலிருந்துதான் துவங்குகின்றன’’ என்கிறார் அஜிதா.

இளவரசன் - திவ்யா விவகாரத்துக்குப் பின் மட்டும் தமிழகத்தில் பல காதல்கள் நீதிமன்றத்துகு வந்திருக்கின்றன. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச் செல்வி - விமல்ராஜ் தம்பதி தங்கள் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சை காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  கடலூரை சேர்ந்த சௌமியா - அம்பேத்ராஜன் தம்பதி, விழுப்புரம் மாவட்டம் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கனிமொழி - வேல்முருகன் தம்பதியும், நீடாமங்கலத்தைச் சேர்ந்த கீதா - ராமச்சந்திரன் தம்பதியும் பாதுகாப்பு கேட்டு காவல்துறையை நாடியவர்கள். இவை எல்லாமே இளவரசன் - திவ்யா பிரிவுக்குப் பின்னர் நிகழ்ந்தவை. தர்மபுரி மாவட்டம் வேப்பமரத்தூரு சுரேஷ் - சுதா தம்பதிக்கு வித்தியாசமான பிரச்சனை. மணமாகி ஒரு குழந்தையும் ஆனபின் ஊரில் உள்ள சாதி பஞ்சாயத்தில் சுதாவின் சாதிச் சான்றிதழைக் கேட்டிருக்கிறார்கள். தர மறுத்திருக்கிறார் சுரேஷ். சுதா ஒரு தலித் என்கிற தகவலை வேறு வழிகளில் பெற்றுக்கொண்டவர்கள் இவர்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்திருக்கின்றனர். இப்போது பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். 

‘’சாதிய உணர்வு கொண்டவர்கள் முன்பு அடக்கி வாசித்தார்கள். இப்போது ராமதாஸ் போன்றவர்கள் கொடுத்த தைரியத்தில் மிக வெளிப்படையாக தங்கள் சாதிய உணர்வை முன்னிறுத்துகிறார்கள். சாதி பஞ்சாயத்துக்களை கட்டுப்படுத்தும் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும். அப்போதுதான் அச்சம் இருக்கும். இப்போது ராமதாஸ் மீது அரசு நடவடிக்கை எடுத்ததால், சாதியவாதிகள் வெளிப்படையான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தம்பதிகளை அச்சுறுத்துவது போன்ற ரகசிய செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் காண முடிகிறது. இப்படி சாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதும் நீதிமன்றம், காவல்துறை தலையிட வேண்டியிருப்பதும் வருந்தத்தக்க நிலைதான். நம் சமூகத்தை 50 ஆண்டுகள் பின்னிழுத்துச் சென்றது போல் உள்ளது’’ என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி.

(நன்றி : இந்தியா டுடே)
Tuesday, August 06, 2013

கூடங்குளம் - மக்கள் மீதான வழக்குகள் - ‘மற்றும் பலர்’ விடுபடுவார்களா?

இடிந்தகரையைச் சேர்ந்த கிஷன் பாலிடெக்னிக் படித்து வந்த மாணவன். 2012 செப்டம்பர் 10 அன்று கூடங்குளம் அணு உலை முற்றுகைப் போராட்டத்தில் காவல்துறை கண்ணீர்ப்புகை வீசியது. பலரை கைது செய்தது. அன்றைக்கு நடந்த களேபரங்களுக்கிடையில் சிக்கி ஒரு வீட்டில் பயத்தில் ஒளிந்துகொண்டிருந்த கிஷனை காவல்துறை கைது செய்தது. சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்ட கிஷன் சில நாட்கள் கழித்து பிணையில் வந்தான். ’’நாங்க அணு உலை வேணாம்னு உண்ணாவிரதம் இருந்தோம். அரசாங்கத்துக்கு எதிராக போராடினோம். அது எப்படி தேச துரோகம்? நிஜமாவே எனக்குத் தெரியல. கைது பண்ணின பின்னால் மன உளைச்சல் அதிகமாச்சு. படிக்க முடியலை. இப்போ அப்பாகூட சேர்ந்து கடல் தொழிலுக்குப் போறேன்.’’ என்கிறான்.

படிக்கும் வயதில் ஒரு மாணவனை படிக்கவிடாமல் கடலுக்கு துரத்தியது எது? கடந்த ஆண்டு செப்டம்பரில் காவல்துறை ஊருக்குள் நுழைந்ததை அடுத்து நடந்த நிகழ்வுகளால் பள்ளிகளுக்குச் செல்ல முடியவில்லை மாணவர்கள். இடிந்தகரை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டது. பேருந்து இல்லை. உணவுப்பொருட்கள் இல்லை என்று ஒரு சகஜமான நிலைமை இல்லாமல் இருந்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் மற்ற மாணவர்கள் கல்வியைத் தொடர, கிஷனுக்கு மட்டும் ஏன் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலைமை? காவல்துறை போட்ட வழக்கும், கைது நடவடிக்கையும், சிறைவாசமும் கிஷனை மீன்பிடி தொழிலுக்கு அனுப்பிவிட்டது.

கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் அந்தப் பகுதி மக்கள் மீது போடப்பட்டுள்ள இதுபோன்ற வழக்குகளை திரும்பப் பெறுமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அணு உலை திறக்க தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது தமிழக அரசு மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கவேண்டும் என்று கூறியது உச்ச நீதிமன்றன். மேலும் 15 பரிந்துரைகள் செய்திருந்தது. அதையெல்லாம் நிறைவேற்றிவிட்டுத்தான் அணு உலை திறக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தது. சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கவேண்டும் என்பது உட்பட 15 கோரிக்கைகளை நிறைவேற்றச் சொல்லியிருந்தது உச்ச நீதிமன்றம். ஆனால் இவற்றை நிறைவேற்றாமலேயே அணு உலை செயல்படத் தொடங்கியதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு வழக்குகளை திரும்பப் பெறப்போவதில்லை என்று கூறியது. மனுவை தள்ளுபடி செய்தாலும் சென்னை உயர் நீதிமன்றம் வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து என்ன நினைக்கிறார்கள் கூடங்குளம் பகுதி மக்கள்?

வழக்கு தொடுக்கப்பட்டவர்களில் வயது முதிர்ந்தவர் குட்டப்புளியைச் சேர்ந்த சந்திரபோஸ். இவருக்கு வயது 71. ’’வயசான காலத்துல கூடங்குளம் போலிஸ் ஸ்டேஷன்ல போய் கையெழுத்து போடுறேன். நோய் வேற ஒரு பக்கம். ஒரே அலைச்சல். நான் படிக்காத பாமரன். என்மேல் என்னென்ன கேஸ் இருக்குன்னுகூட எனக்கு தெரியாது’’ என்கிறார் முதியவரான சந்திரபோஸ்.

கொலை முயற்சி, தேசத்துரோகம், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தது, அரசுக்கு எதிரான யுத்தம் என்று விதவிதமான வழக்குகள். இப்படி 325 விதமான வழக்குகளில் எல்லோரையும் கைது செய்திருக்கிறது அரசு. ஒரே பகுதியைச் சேர்ந்த  2,27,000 பேர் மீது வழக்கு போடுவது உலகில் வேறெங்காவது நடந்திருக்குமா என்பது சந்தேகமே. 2012 மார்ச் மாதத்திலும் செப்டம்பரிலும் இரண்டு முறை கைதுகளும் வழக்கு போடுவதும் நடந்தன. குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டது உட்பட 266 பேரை கைது செய்தது காவல்துறை. இதில் 186 பேர் ஆண்கள். 51 பேர் பெண்கள். சிறுவர்கள் 4 பேர். இளைஞர்கள் 24 பேர். மனநலம் பாதித்த ஒருவரையும் கூட கைது செய்தது காவல்துறை.

‘’இப்படி எல்லாம் நடக்குமா என்றுகூட புதிராக இருக்கும் வகையில் இங்கே பல விஷயங்கள் நடந்துள்ளன. எடுத்துக்காட்டாக கணேசன் என்பவரின் மீது வழக்கு தொடுத்து கைது செய்தது காவல்துறை. அவரை பிணையில் எடுத்து 50 நாட்கள் அவர் காவல்நிலையத்தில் கையெழுத்து போட்ட நிலையில் மீண்டும் 25 வழக்குகளில் கைது செய்தது. அவரை பிணையில் எடுத்தால் மீண்டும் வேறு வழக்குகளில் கைது செய்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. ஆகவே கைது செய்தால் எல்லா வழக்குகளிலும் கைது செய்துகொள்ளட்டும் என்கிறோம். நினைத்து நினைத்து கைது செய்து சித்தரவதை செய்வதை காவல்துறை தொடர்ந்து செய்கிறது’’ என்கிறார் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக்குழுவில் இருக்கும் முகிலன். ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கையிலும் குற்றம்சாட்டப்பட்டவரின் பெயருடன் சேர்த்து ‘மற்றும் பலர்’ என்று 2000 பேர் அல்லது 150 பேர் என்றுதான் இருக்கிறது. ஆகவே எப்போதுவேண்டுமானாலும் யாரைவேண்டுமானாலும் இந்த ‘மற்றும் பலர்’ என்கிற வகைக்குள் கொண்டுவந்து விடலாம் காவல்துறை என சுட்டிக்காட்டுகிறார் முகிலன்.

போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் சுந்தரி, செல்வி, சேவியரம்மா உள்ளிட்டோரை திருச்சி சிறையில் அடைத்தது அரசு. அங்கே அவர்களை நடத்திய விதம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்கிறார்கள் இந்தப் பெண்கள். ‘’6 மாசம் ஜெயிலில் இருந்தோம். இப்போதும் ஸ்டேஷன்ல கையெழுத்து போடுறோம். நான் மாவட்ட கலெக்டரை கடத்தியதாக வழக்கு போட்டிருக்கிறார்கள். யாராவது நம்புவார்களா? நான் கோர்ட்டில் நீதிபதியிடம் கேட்டேன். ஒரு சாதாரண மனுஷியான நானே மாவட்ட கலெக்டரை கடத்திவிட முடியுமென்றால், அந்தளவுக்குத்தான் அவருக்கே பாதுகாப்பு. அப்படியென்றால் இந்த அரசாங்கம் எப்படி எங்களைப் போன்ற சாமான்ய மக்களை காப்பாற்றும் என்று கேட்டேன்.’’ என்கிறார் சுந்தரி.

லூர்துமாதா ஆலயத்துக்கு முன்னால் சட்டவிரோதமாக கூடியது, அணு உலைக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியது, கலைந்து போக மறுத்தது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது என்று அநேகமாக பல முதல் தகவல் அறிக்கைகளிலும் இவை இடம்பெற்றுள்ளன. ’’பொது மக்களாகிய நாங்கள் அத்தனை பேரும் அங்கேதான் இருக்கையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது என்று வழக்கு தொடுப்பது எப்படி சரியாகும்’’ என்கிறார்கள் பகுதி மக்கள். மக்கள் மீது மட்டுமல்லாமல் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்கும் வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன் போன்ற தலைவர்கள் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு இந்த விஷயத்தில் மௌனம் காப்பதில் வியப்பில்லை என்கிறார் இடிந்தகரையில் மளிகைக் கடை வைத்திருக்கும் ஆண்டனி கெபிஸ்டன் ஃபெர்னாண்டோ. ’’வழக்குகளை வாபஸ் பெறச் சொல்லி நீதிமன்றம்தான் உத்தரவிட்டிருக்கிறது. அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இப்போது அரசு எதுவும் செய்யாது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீனவ மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுகிறோம் என்று அறிவித்து மீனவ மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று ஒருவேளை திட்டமிடலாம். இது தெரியாதா என்ன? அத்துடன் அரசு போட்ட வழக்குகளை வாபஸ் பெற்றாலும், தனியாரை வைத்து போட்ட பல வழக்குகள் உள்ளன. அவற்றை என்ன செய்வது’’ என்று கேட்கிறார்.

அரசு தரப்பு என்ன செய்யப் போகிறது என்று அறிய உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டியை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது கூடங்குளம் வழக்குகள் தொடர்பான கேள்விகள் என்றவுடனேயே பிறகு தொடர்புகொள்வதாகக் கூறியவரை பிறகு தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த இதழ் அச்சேறும் வரை அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

(Courtesy : 'India Today')