Saturday, November 14, 2009

கலகம் விளைவிக்கும் கஸ்பா

நன்றி: தலித் முரசு

‘கஸ்பா' என்ற தலைப்பைப் பார்த்தவுடன் புருவத்தை உயர்த்தவே தோன்றியது. அது ஓர் அரபுச் சொல்லாக இருக்கக்கூடும் என்பது புரிந்தது. மற்றபடி, அதன் பொருள் என்னவாக இருக்கும் என்று பல வித யூகங்களோடு முன்னுரையை வாசிக்கத் தொடங்கியபோது, இக்கவிதைத் தொகுப்பின் சொந்தக்காரரான யாழன் ஆதி, "கஸ்பா'விற்கு விளக்கம் தருகிறார் : ""கஸ்பா என்பது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள ஒரு முக்கியமான தலித் பகுதி. இது ஓர் அரபு மொழிச் சொல். எல்லா தலித் பகுதிகளைப் போலில்லாமல் பல தன்மைகளில் வேறுபட்டு இருக்கிறது "கஸ்பா'. இம்மண்ணின் பண்பாடு என்பது, பொதுப்புத்திக்கு நேர் எதிரான வேர்களையுடையது. பவுத்தத்தின் கூறுகளை உள்ளடக்கியது. இந்துத்துவ பண்பாட்டைக் கிஞ்சிற்றும் உள்வாங்காமல், அதற்கு எதிராகக் கலகம் விளைத்தது. கஸ்பாவின் வரலாற்றை சாதி ஒழிப்பு வரலாற்றோடும் ஒட்டியே நோக்க வேண்டும். சுற்றியிருக்கும் பல தலித் கிராமங்களுக்கு பாதுகாப்பானதாக கஸ்பா இருந்தது.''

இந்நூல் பேச வரும் செய்தி என்ன என்பது, அதன் தலைப்பிற்கான பொருள் விளக்கத்தைப் புரிந்து கொண்ட நொடியிலேயே தெரிந்து விடுகிறது. தலித் மக்களின், குறிப்பாக வேலூர் மாவட்டம் கஸ்பாவில் வாழும் தலித் மக்களின் பிள்ளைப் பருவ வாழ்க்கை, நூல் நெடுக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மாட்டிறைச்சி தலித்துகளின் வாழ்வின் ஓர் அங்கமாகவே இருப்பதை, யாழன் ஆதி தனது வார்த்தைகளின் மூலம் பல இடங்களில் பதிவு செய்கிறார்.

ஒரு கவிதையில் அரச மரம், அம்பேத்கர் சிலை, பெரிய கோயில், பஜனைக் கோயில், கீழ்த் தெரு, வறுத்த கரி, வீரம் – இவைதான் எங்கள் தாயின் வரைபடம் என்கிறார். எல்லா சாதிகளிலும் இருக்கும் விதிவிலக்குகளை கருத்தில் கொள்ளாமல் பார்த்தால், சாதி வேறுபாடுகளின்றி சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பெண்களின் நிலை இதுதான் என்ற உண்மை அறைகிறது.

”உழைப்பின் காய்ப்புகள் உரமேற்றிய
எங்கள்
கைகளில்
வறுமையின்
சிராய்ப்புகள் என்றுமுண்டு
எனினும்
வாழ்வின்
தடங்களை
வரைந்து கொண்டேதான்
இருக்கின்றன
எங்கள் தூரிகைகள்”


என்று ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் இடைவிடாத வாழ்க்கைப் போராட்டத்தை அழகாகச் சொல்கிறது நூல்.

”மேடையேறி
பெரியார் படம் போட்ட பந்தலில் நின்று
கடவுளைத் திட்டுவோம்
மாரியாத்தா கோயிலில்
மின் இணைப்பு எடுத்துக் கொண்டு!”


இந்தக் கவிதையில் சொல்ல வந்த கருத்துக்கு மாறுபட்ட கருத்தே மனதில் பதிவதுபோல் தோன்றுகிறது. கடவுளைத் திட்டுவதற்குக் கூட மாரியாத்தாதான் துணை செய்கிறாள் என்று ஆத்திகர்கள் பொருள் சொல்லக்கூடும்.

”மாரியாத்தா கோயிலில்
மின் இணைப்பு எடுத்துக் கொண்டு
மேடையேறி
பெரியார் படம் போட்ட பந்தலில் நின்று
கடவுளைத் திட்டுவோம்”


என்றிருந்திருந்தால், மாரியாத்தா கோயிலில் மின் இணைப்பு எடுத்துக் கொண்டு, கடவுளையே நாங்கள் திட்டுவோம் என்ற நாத்திக கர்வம் இன்னும் தெளிவாக வெளிப்பட்டிருக்கும். கஸ்பாவிற்கு விளக்கம் கொடுத்தது போல் "ஜவுர் ஜெட்டாதான் இருக்கிறோம்” போன்ற பதங்களுக்கும் சொல்விளக்கம் அளித்திருந்தால், பிற மாவட்டத்துக்காரர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். ஏனோ சில கவிதைகள் வெறும் அனுபவப் பதிவுகளாகவே இருப்பது போல் தோன்று வதைத் தவிர்க்க முடியவில்லை.

தெருவெல்லாம் மாட்டுத்தோல் தொங்கும் என்று காரணம் கூறி, தெருவிற்குள் வர மறுக்கும் சாதி இந்துக்களின் வீட்டுப் பிள்ளைகள், தங்களோடு ஒன்றாக "லெதர் பாக்டரி'யில் வேலை பார்ப்பதைக் கூறும்போது, தொழில் நுட்பத்தால் சாதிய வேறுபாடுகளை வென்றெடுக்க முடிந்ததையும், அவர்களின் சாதி அகம்பாவம் தங்கள் ஊரைவிட்டு வெளியேறி, நகருக்குள் பணி நிமித்தம் செல்லும்போது உடைந்தாக வேண்டிய கட்டாயத்தை – மகிழ்ச்சியோடும் எள்ளலோடும் கூறி உவகைப்படுகிறார் ஆசிரியர்.

குழந்தையாய் இருந்த போதும் சரி, இப்போதும் சரி, தனது ஊர் அரசமரத்தை அண்ணாந்தே பார்க்க வேண்டி இருப்பதைக் கூறும்போது, இயற்கை மீதான நூலாசிரியரின் வியப்பு வெளிப்படுகிறது. கிறித்துவர் என்றாலும் கூடவே சாதியைஇந்து மதத்திலிருந்து எடுத்துக் கொண்டு போன கொடுமையையும், குழந்தைப் பருவத்தின் சின்னச்சின்ன மகிழ்ச்சிகளையும், ஊர்கூடித் தேரிழுக்கும்போது விளையும் விழாக்கால கொண் டாட்டங்களையும் நினைவு கூர்கிறார்.

”யூசிமாஸ்” வகுப்புக்குச் சென்று கணக்கு கற்றுக் கொள்ளும் இந்தக் காலத்து நகர்ப்புற ”பீஸ்ஸா” குழந்தைகள் பார்த்தே அறியாத அய்ஸ் குச்சிகளை வைத்து கணக்கு சொல்லிக்கொடுத்த சின்ன வயது ஆசிரியை குறித்த நினைவுகளை வாசிக்கும்போது, அவரவருக்கு நினைவுகள் மலர்வதைத் தவிர்க்க இயலாது.

கவிதைகளில் இரண்டு வகை உண்டு. பிறரது அனுபவங்களை எழுத்தில் கொண்டு வருவது ஒரு வகை; தனது அனுபவங்களை எழுத்தில் வடிப்பது இரண்டாவது வகை. யாழனின் ”கஸ்பா” இரண்டாவது வகையாகவே தெரிகிறது. ஒரு தலித் அல்லாதவரின் வாழ்வில் இத்தகைய அனுபவங்கள் நேர சாத்தியமே இல்லை. அதிலும் ”கஸ்பா” மண் வீரம் செறிந்த போராட்டத்தைத் தனது வரலாறாகக் கொண்டிருக்கிறது. ஆதிக்க சாதிகளுக்கு எதிராகப் போராடிய வீரர்களை விளைவித்த பூமி அது. அதனால் இயல்பாகவே இந்நூலின் ஓரிடத்திலும் தாழ்வு மனப்பான்மையோ கழிவிரக்கமோ வெளிப்படவில்லை.

”பாரடா! நான் ஒரு தலித்” என்று மார் தட்டி, நெஞ்சு நிமிர்த்தும் தன்னம்பிக்கையும் கர்வமும் வெளிப்படுவது மிக முக்கியமானது. அவலத்தை சொல் லும் ஆக்கங்களை விட, இத்தகைய ஆக்கங்கள் தலித் மக்களின் போராட்டங்களை மற்றுமொரு தளத்திற்கு இட்டுச் செல்லும்.