Thursday, July 25, 2013

வீட்டுவேலை தொழிலாளர்களுக்கான சங்கங்கள்

சங்கம் அமைப்பது என்பது தொழிலாளர்களின் உரிமை. ஆனால் வீடுகளில் வேலை செய்பவர்களும் தொழிலாளர்களே என்று பலர் உணர்வதில்லை. ஆனால் சென்னையை அடிப்படையாகக் கொண்டு வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களைக் கொண்ட சங்கங்கள் அவர்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கின்றன. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பிற தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் போன்று அல்ல. பணியிடம் என்பது இவர்களுக்கு வீடுதான். வீட்டு எஜமானர்களே ஊதியம் அளிப்பவர்களாக உள்ளனர். தொழிற்சாலைகளிலோ நிறுவனங்களிலோ பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணியிடங்களில் உருவாகும் சிக்கல்களை கையாள சட்டங்களும் விதிமுறைகளும் உண்டு. ஆனால் இவர்களின் பணியிடம் இன்னொருவரின் வீடாக இருப்பதால் அங்கே ஒரு தொழிலாளர் சந்திக்கும் பிரச்சனை வெளியில் தெரியாது. எடுத்துக்காட்டாக ஒரு பெண் தொழிலாளி, அவர் வேலை செய்யும் வீட்டு எஜமானரால் பாலியல் வன்முறைக்கு ஆளானால் அது வெளியே தெரியாமல் போய்விட வாய்ப்புண்டு. ‘’நான் முன்பு வேலை செய்த வீட்டிலுள்ளவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதை அவருடைய மனைவியிடம் நான் புகார் சொன்னபோது அவர் அதை நம்பவே இலலை. நான் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். இப்படி பல இடங்களில் நடந்திருக்கிறது’’ என்கிறார் பெயர் கூற விரும்பாத ஒரு பெண் தொழிலாளி. 

உடல்நலம் சரியில்லை என்றாலோ, ஏதாவது அவசரம் என்றாலோகூட விடுப்பு எடுக்கமுடியாத சூழலில் இருக்கிறார்கள் வீட்டுவேலை செய்பவர்கள். ’’நாங்களும் மனிதர்கள்தானே? எங்களுக்கும் ஏதாவது அவசர வேலை இருக்காதா என்ன? விடுப்பு எடுத்தால் மறுநாள் கன்னாபின்னாவென்று திட்டு வாங்கவேண்டி வரும்’’ என்கிறார். 

வேலைக்குச் சேர்க்கும்போது ஒரு பேச்சு, சேர்ந்தபின்பு ஒரு பேச்சு என்றிருக்கும் எஜமானர்கள் அதிகம். அதாவது வேலைக்கு சேரும்போது, பாத்திரம் துலக்குவது, வீடுகூட்டுவது, துணி துவைப்பது ஆகிய வேலைகளை செய்தால் போதும் என்று கூறிவிட்டு, வேலைக்கு வரத் தொடங்கியதும் குளியறையை சுத்தம் செய்வது போன்ற கூடுதல் வேலைகளைக் கொடுப்பது போன்றவை நடக்கின்றன. வெறும் வாய்மொழி ஒப்பந்தத்தை மட்டும் செய்துகொண்டு வேலைக்கு ஒப்புக்கொண்டு வருபவர்களை கூடுமானவரை பிழிந்தெடுத்து அவர்கள் உழைப்பைச் சுரண்டும் வேலையை பலர் செய்துகொண்டிருக்கின்றனர். 

வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களை உள்ளடக்கிய அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் நிறுவனர் கீதாவிடம் இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ‘’வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான கையெழுத்து இயக்கம் ஒன்றை தமிழகத்தில் நடத்துகிறோம். தேசிய அளவில் ஜூலை 31 அன்று ஒரு பேரணி நடத்தவிருக்கிறோம். வீட்டு வேலை தொழிலாளர்கள் குறித்த கொள்கையை மத்திய அரசு சட்டமாக விரைவில் மாற்றவேண்டும் என்று கோருகிறோம். தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக  தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சட்டத்தின்கீழ் வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்களை 1999ல் கொண்டுவந்தது தமிழக அரசு. 2006ல் அவர்களுக்கென்று தனி நலவாரியமும் அமைக்கப்பட்டது’’ என்றார்.  

நலவாரியத்தின்மூலம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அதுகூட இன்னமும் செய்யப்படவில்லை என்கிறார் கீதா. மகப்பேறு காலத்தில் 6,000 ரூபாய் வழங்குவது, விபத்து நிவாரணம், இயற்கை மரண நிவாரணம் என்று ஒரு சில விஷயங்களுக்கு நலவாரியம் பயன்படுகிறது. விழுப்புரம் மாட்டத்தில் இந்த நலவாரியத்தில் பதிவு செய்யப் போனால் சாதிச் சான்றிதழ் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார் கீதா. மூன்று விதமான வீட்டுவேலை தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பகுதிநேரமாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று மணிநேரம் செய்பவரக்ள். முழுநேரமாக 8 மணி நேரம் வரை வீட்டுவேலை செய்பவர்கள். லிவ் இன் என்று சொல்லக்கூடிய வகையில் வீடுகளில் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்பவர்கள் ஆகிய மூன்று பிரிவுகள் உண்டு. இதில் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்பவர்கள் அதிகமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். ‘’ஏஜென்சி மூலமாக வேலைக்குச் சென்றவர்களிடம் பொருளாதாரரீதியாக அந்த ஏஜென்சிக்கள் அவர்களின் சம்பளத்தில் செய்யும் சுரண்டல்கள் அதிகம். அப்படி சென்னை சைதாப்பேட்டையில் ரகுபதி என்பவர் நடத்திய ஏஜென்சியில் இப்படி முறைகேடுகள் நடந்து அதற்கெதிராக போராட்டங்கள் நடத்தினோம்’’ என்கிறார் கீதா. 

குழந்தைகளை வீட்டுகளுக்கு வைத்துக்கொள்ளும் கொடுமையும் நடக்கிறது. குழந்தைத்தனம் மாறாத முகத்துடன் எஜமானரின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு பாதுகாக்கும் அவர்களையும் காப்பாற்ற சரியான நடவடிக்கை இல்லை. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து வீடுகளில் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் பதிவு செய்யப்படுவதில்லை.வீடுகளில் அவர்கள் துன்புறுத்தப்படுவது, கொத்தடிமைகளாக நடத்தப்படுவது போன்ற மனித உரிமை மீறல்களும் நடைபெறுகின்றன. 

வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்தியிடம் பேசியபோது ‘’நான் சி.பி.எம். கட்சியின் தென் சென்னை மாவட்ட அலுவலகத்திலும் வேறு சில வீடுகளிலும் வேலை செய்கிறேன். சில வீடுகளில் அவ்வபோது சாப்பாடு, டீ போன்றவை கொடுப்பார்கள். பெரும்பாலும் ஃபிரிட்ஜில் வைத்த சாப்பாடு கொடுப்பார்கள். ஆனால் இவற்றையெல்லாம் சம்பளத்தில் கழித்துக்கொள்வார்கள்.  வீடுகூட்டும்போது அப்படியே ஒட்டடையும் அடிக்கக் கூடாதா என்று கேட்பார்கள். அதற்கு தனியாக கூலி தரவேண்டும் என்கிற உண்மை உறைக்கவே உறைக்காது. எங்கள் சங்கத்தின் உதவிகேட்டு ஒரு பெண் வந்தார். அவர் மீது திருட்டுப் பட்டம் கட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் அவர் வேலை செய்த வீட்டு உரிமையாளர். உண்மை என்னவெனில் அவருடைய பாலியல் இச்சைக்கு இணங்க மறுத்ததால் இப்படிச் செய்திருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்தது. இப்படி பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்கிறார்.

வீட்டுவேலை என்பது பல நாடுகளில் தொழிலாளர் நலத்துறையின் கீழ் வருகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பு வீட்டுவேலையை ஒரு வேலையாக அங்கீகரித்திருக்கிறது. 2002ல் வீட்டுவேலை செய்பவர்கள் அருகில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அரசு கூறியபோது ’நாங்கள் என்ன கிரிமினல்களா?’ என்று கேட்டு அதை கடுமையாக எதிர்த்தன் காரணமாக அந்த நிலை தமிழ்நாட்டில் ஏற்படவில்லை என்கிறார்  தமிழ்நாடு வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த கிளாரா. வீட்டு வேலை செய்பவர்களுக்கு தனித்தட்டு, டம்ளர், தண்ணீர் அதிகம் கலந்த பாலில் காபி கொடுப்பது என்று தீண்டத்தகாதவர்கள் போலவே முதலாளிகள் நடத்துவதுண்டு.கிராக் க்ரீமின் விளம்பரமொன்றில் ‘’முகத்தைப் பார்த்தா ராணி, காலைப் பார்த்தால் வேலைக்காரி’ என்று ஒரு விளமபரம் வந்தது. இந்த விளம்பரத்தை எதிர்த்து போராட்டங்கள் பல நடந்தன. பத்தாயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி அதை அந்த நிறுவனத்துக்கு அனுப்பியபின் அந்த விளம்பரம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது என்கிறார் கிளாரா. 

முதலில் சங்கம் வைக்கும் அனுமதியை அரசிடம் கோரியபோது ‘’நீங்கள் உற்பத்தி தொழிலாளர்கள் அல்ல;  தொழிற்சங்கம் வைக்க முடியாது’ என்றது அரசு. ஆனால் சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் ஏற்கனவே இருந்தது. அவர்களும் எதையும் உற்பத்தி செய்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு இருக்கிறதே என்று வாதாடியபின் சங்கம் வைக்கும் அனுமதி கிடைத்தது. ’’நாங்கள் உற்பத்தி தொழிலாளர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் வேலைகளைப் பார்க்க முதுகெலும்பாய் இருந்து உதவுவது நாங்கள்தான்’’ என்கிறார் கிளாரா. குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் தொடர்பாக பல போராட்டங்கள் இதுவரை நடந்துவிட்டன.  மாவட்டங்களில் ஒரு மணிநேரத்துக்கு 35 ரூபாயும் சென்னை நகரில் 50 ரூபாயும் நிர்ணயிக்கவேண்டும் என்று இந்த சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறது.  ’’இது குறித்துப் பேச அப்போதைய அமைச்சர் செல்லபாண்டியை சந்திக்கச் சென்ற எங்களிடம் ‘பழைய சோத்துக்கும், பழைய துணிக்கும் கூட, போராட்டமெல்லாம் பண்ணி வேட்டு வைக்கிறீங்க’ என்று அவர் சொன்னதை மறக்க முடியுமா? அமைச்சரே இப்படி பேசினால், சாமானிய மக்கள் எங்களை எப்படியெல்லாம் பேசுவார்கள்? இப்போது நிலைமை மாறி இருக்கிறது. வீட்டு வேலை செய்பவர்களும் தேவையில்லாமல் முதலாளிகளின் குடும்ப விஷயங்களில் தலையிடுவதில்லை. எங்கள் மூலம் செல்பவர்கள் முதலாளிகளிடம் ஒப்பந்தம் போட்டுத்தான் செல்கிறார்கள். ஒரு மாத தீபாவளி போனஸ், விடுப்பு எடுக்கும் உரிமை என்று மரியாதையாக நடத்தும் போக்கு அதிகரித்திருக்கிறது. சங்கம் வந்தபின்புதான் இந்த மாற்றங்கள் எலலாம்’’ என்கிறார் கிளாரா.

(இந்தியா டுடே இதழில் வெளிவந்தது)

Thursday, July 11, 2013

கொல்லும் சாதிளவரசனின் மரணம் தமிழக மக்களின் மனங்களை உலுக்கிவிட்டிருக்கிறது. காதல் திருமணம் புரிந்த ஒரே ஒரு காரணத்துக்காக இளமையிலேயே அகால மரணம் அடைந்த இளவரசனுக்காக ஜூலை 4 மதியம் செய்தி கேட்டவுடன் பதறிய நெஞ்சங்கள் அதிகம்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக ஜூலை 1 அன்று திவ்யாவும் இளவரசனும் திவ்யாவும் ஆஜரானபோதுதான் திவ்யா இப்படிச் சொன்னார் ‘’அம்மா எப்போது விரும்புகிறாரோ அப்போது நான் இளவரசனுடன் வாழ்கிறேன்’’. இளவரசனுக்கு இந்த வார்த்தைகளில் ஓரளவு திருப்தி ‘’திவ்யா யாரையும் காயப்படுத்தவில்லை. திவ்யா கூறிய வார்த்தைகள் எனக்கும் சாதகமானவை. அவங்க அம்மாவுக்கும் சாதகமானவை. இருக்கட்டும். அம்மா கூட ஒரு வருஷம் இருக்கட்டும். நான் விட்டுப்போன படிப்பை முடிக்கிறேன். வேலைக்குப் போறேன். அப்புறம் எத்தனை நாள்தான் அடஞ்சு கிடக்க முடியும்? நிச்சயமா மீண்டும் நாங்க சேர்வோம். அவங்க அம்மாவுக்கும் மனசாட்சி இருக்குமில்லையா? நம்ம பொண்ணு வாழ்க்கை நம்மால வீணாயிடுச்சேன்னு நினைச்சு அனுமதி கொடுப்பாங்க’’  - இளவரசன் இந்தியா டுடேயிடம் தெரிவித்த வார்த்தைகள் இவை. 

ஜூலை 2 அன்று திவ்யாவும் இளவரசனும் நீதிமன்றத்துக்கு வரவேண்டியதில்லை என்பதால் இளவரசன் கிளம்பி ஊருக்குச் சென்றுவிட, திவ்யா நீதிமன்றத்துக்கு வந்து ஊடகங்களின் முன் ஆஜராகி ‘நேற்று நான் அப்படி சொல்லவில்லை. இளவரசனின் வழக்கறிஞர் தவறாகக் கூறிவிட்டார். நான் அம்மாவோடுதான் இருக்கப் போகிறேன். இளவரசனுடன் வாழப்போவதில்லை’’ என்றார். இதை எப்படி எதிர்கொண்டார் இளவரசன்? ‘’இப்படி சொன்னப்புறம் என்ன செய்றது. படிக்கிறேன். வேலைக்குப் போறேன். இப்போதைக்கு திவ்யாவை தொந்தரவு செய்யவேண்டாம். அங்கேயே இருக்கட்டும். வேலைக்குப் போனபின் நாங்க மீண்டும் சேர்வோம்’’ என்று கூறியதாக இளவரசனின் தந்தை இளங்கோ கூறுகிறார். ‘’எங்களுக்கு தைரியம் சொன்னான். அவன் தற்கொலை செய்துக்குற ஆளில்லை. இது கொலைதான்..அடிச்சு சொல்றேன்.’’ என்கிறார். ‘’எம்.பி.சி. பையன் இவனோட ஃபிரண்ட் ஒருத்தன் கூப்பிட்ட்டான்னு சொல்லிட்டுத்தான் என் அக்கா வீட்டில் தகவல் சொல்லிட்டு பல்சர் பைக்கை எடுத்துக்கிட்டுப் போனான். 11 மணிக்குப் போனான். ஒன்றரை மணிக்கெல்லாம் அவன் உடம்பு ரயில்வே டிராக் கிட்ட கிடப்பதைப் பார்த்திருக்காங்க. அந்தப் பக்கமா போன டிரெயின் டிரைவர் ரயில்வே போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கார். டிரெயின்ல அடிபட்டதா தகவல் கொடுக்கல. ஒரு பாடி டிராக் ஓரமா கிடக்குதுன்னு தகவல் கொடுத்திருக்கார். எனக்கும் தகவல் வந்துச்சு.’’ என்கிறார் இளங்கோ.

போஸ்ட்மார்ட்டம் செய்வதில் பெரும் குழப்படியே நடந்திருக்கிறது என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச் செல்வன். ‘’போஸ்ட் மார்ட்டம் செய்கையில் நாங்கள் சொல்லும் டாக்டர்களையும் இணைத்துச் செய்யவேண்டும் என்று கேட்டோம். எஸ்.பி. ஆஸ்ரா. கர்க்கும் ஒப்புக்கொண்டார். ஆனால் பெற்றோரிடம் கையெழுத்து பெறாமலேயே அவசரம் அவசரமாக போஸ்ட் மார்ட்டம் நடந்தது. வழக்கறிஞர் சங்கர சுப்பு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு 11 மணிக்கு வரவிருக்கும் நிலையில் காலையிலேயே எதற்காக போஸ்ட் மார்ட்டம் செய்யவேண்டும்?’’ என்கிறார் இதனால் இளவரசனின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இளவரசனின் வழக்கை விசாரிப்பது ரயில்வே காவல்துறை. கட்டமைப்பு வசதிகள் இல்லாத இந்தத் துறை புலனாய்வு செய்வதில் அனுபவம் இல்லாதது. எனவே வழக்கை அவர்கள் விசாரிக்கக் கூடாது என்பது அவர்களின் வாதமாக இருந்தது. ரயில்வே டி.எஸ்.பி ராஜேந்திரனை புலனாய்வு அதிகாரியாகக் கொண்டு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரிலேயே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது. இளவரசன் தரப்பு கேட்டுக்கொண்ட மருத்துவர்கள் வந்து சேர, அதற்குள்ளாகவே போஸ்ட் மார்ட்டம் நடத்தப்பட்டது அறிந்து உறவினர்கள் கொதித்தனர்.  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கர சுப்பு அளித்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இளவரசனின் உடலை பதப்படுத்தி வைககவேண்டுமென்றும், போஸ்ட் மார்ட்டத்தின்போது எடுக்கப்பட்ட விடியோ பதிவை பார்த்து அதில் திருப்தி இல்லாவிட்டால் மீண்டும் போஸ்ட் மார்ட்டம் நடத்தலாம் என்றும் கூறியது.

ஐந்து கோரிக்கைகளை இளவரசன் தரப்பு வைத்தது.
 1. ரயில்வே காவல்துறை வழக்கை விசாரிக்கக் கூடாது. பயிற்சி பெற்ற ஒரு குழு இதை விசாரிக்கவேண்டும்.
 2. இளவரசனுக்கும் திவ்யாவுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறிய சூழலில் காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பு அளித்திருந்தால் அவர்களை திவ்யாவும் இளவரசனும் பிரிந்திருக்கவே வாய்ப்பில்லை. எனவே கடமை தவறிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 3. ஆட்கொணர்வு மனு ஒன்றி வரம்பை மீறி நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் அவர்கள் இருவரையும் பாதித்தது. சம்பந்தப்பட்ட நீதிபதிகள் மீது தலைமை நீதிபதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 4.  144 தடை உத்தரவு என்கிற பெயரில் அஞ்சலி செலுத்த வருபவர்களையும், கட்சித்தலைவர்களையும் அனுமதிக்காமல் தடுக்கக்கூடாது. 
5. இளவரசனின் குடும்பம் உடைமைகளை இழந்து, மகனை இழந்து தவிக்கிறது. இவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோரிக்கைகளை உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் முன்வைத்தனர். 

இதனிடையே ராணுவத்தில் பணிபுரியும் இளவரசனின் சகோதரர் திரும்பி வரும் வரை காத்திருப்பது என்றும், விடியோவை போட்டுப்பார்த்து திருப்தியானால் உடல் அடக்கம் நடக்கும் என்றும் இல்லையெனில் மீண்டும் போஸ்ட் மார்ட்டம் செய்வது என்றும் முடிவானது. 

இளவரசனின் மரணம் ஒரு தற்கொலை என்றே முதலில் செய்திகள் பரப்பப்பட்டன. பல ஊடகங்களிலும் அவ்வாறே செய்திகள் வந்தன. திவ்யாவின் முடிவால் மனமுடைந்து இளவரசன் சாவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்றே அவை கூறின. ஆனால், ரயில்வே தண்டவாளத்துக்கு அருகே கிடந்த இளவரசனின் உடலைப் பார்க்கையில் எழும் கேள்விகளும் பதில் இல்லை. ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட உடல் போல இல்லை அந்த உடல். மடிப்பு கலையாத உடையுடன், தலையில் மட்டும் அடிபட்டு, மூளை சிதறி அருகில் பையுடன், சிகரெட், மதுப்புட்டியுடன் கிடந்தது இளவரசனின் உடல். இளவரசனின் மரணத்தில் மர்மம் உள்ளது என்றும் அது தற்கொலை அல்ல என்றும் கொந்தளிக்கிறார்கள் இளவரசனின் உறவினர்கள். 

அது கொலையோ தற்கொலையோ, எதுவாக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். ஏனெனில் தற்கொலைக்குத் தூண்டுதலும் குற்றமே. சென்ற ஆண்டு மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க சித்திரைத் திருவிழாவில் காடுவெட்டி குரு பேசியதும், அதன் தொடர்ச்சியாக தர்மபுரி பகுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் பேசிய சாதிவெறிப்பேச்சுகளே தர்மபுரி வன்முறைகளுக்குக் காரணம் என்பது ஊரறிந்த ரகசியம். இப்போது இளவரசன் – திவ்யா பிரிவு, இளவரசன் மரணம் என்று எல்லாவற்றிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் பங்கு உள்ளது. ஆனால் அன்புமணி ராமதாஸ் ‘இளவரசனின் மரணம் வருந்தத்தக்கது. ஆரம்பத்திலிருந்தே நாங்கள் கூறுகிறோம். அவர்கள் இருவருக்கும் இடையில் யாரும் தலையிட வேண்டாம். நாங்கள் ஒருபோதும் அவர்கள் விவகாரத்தில் தலையிட்டதில்லை’’ என்றார். ஆனால் இளவரசன் – திவ்யா வழக்கில் ஆஜரானது பா.ம.க. வழக்கறிஞர் பாலுவும் மற்ற பா.ம.க. வழகறிஞர்களும்தான். 

இதற்கிடையே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் இளவரசன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். 

வழக்கறிஞர் சங்கரசுப்பு, ‘‘இளவரசன் நண்பர் பெயரில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இளவரசன் மரணத்தில் சந்தேகம் உள்ளது. கோவை அல்லது சேலம் மருத்துவமனையில் நாங்கள் விரும்பும் டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மை தெரியவரும். தர்மபுரி எஸ்.பி.யுடன் இன்று காலை போனில் தொடர்பு கொண்டு பிரேத பரிசோதனை நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்தோம். அவர் அதை நிராகரித்துவிட்டு அவசரம் அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. இளவரசன் மரணத்தை பற்றி அது கவலைபடவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார். இதே கருத்தையே முன்வைக்கிறார் சிந்தனைச் செல்வன். 144 தடையுத்தரவு மாவட்டத்தில் போடப்பட்டுள்ளதால் அஞ்சலி செலுத்த வருபவர்கள் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வந்த புரட்சி பாரதம் தலைவர் பூவை. ஜெகன்மூர்த்தியை கைது செய்தது காவல்துறை. அவரை கைது செய்த சிறிது நேரத்தில் கைதை எதிர்த்து சென்னை உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஜூலை 4 அன்று மாலை வேளச்சேரியில் பத்திரிகையாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ‘’ரயிலில் அடிபட்டு இறந்ததாகச் சொல்லப்படுவதில் பலத்த சந்தேகம் நிலவுகிறது. அந்த சமயத்தில் ரயில் எதுவும் அந்தப் பக்கத்தில் வந்ததாகத் தெரியவில்லை. குர்லா எக்ஸ்பிரஸ் கோவையிலிருந்து 12 மணிக்குப் புறப்படுகிறது. இளவரசனின் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரமும் இந்த ரயில் வந்த நேரமும் ஒப்பிட்டுப்பார்க்கையில் சந்தேகம் வருகிறது. அவரை அடித்துத்தான் கொன்றிருக்கவேண்டும்’’ என்று தன் சந்தேகத்தை தெரிவித்தார். திவ்யாவின் தாய் தேன்மொழி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் திவ்யா – இளவரசன் தரப்பில் ஆஜரானவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த். ஆனால் இன்றைக்கு திவ்யா அம்மாவுடன் இணைந்ததால், அவர் இளவரசன் தரப்பு வழக்கறிஞராகிவிட்ட விநோதம் நிகழ்ந்தது. ஆட்கொணர்வு மனு என்பது ஆளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டபின் வேண்டாத வேலைகளுக் கெல்லாம் பயன்படக்கூடாது என்கிறார் ரஜினிகாந்த்.

 ‘’ஆட்கொணர்வு மனுதான் திவ்யாவின் தாய் தாக்கல் செய்தார். திவ்யாவை
ஆஜர்படுத்தியாயிற்று. ஆனால் மீண்டும் மீண்டும் அந்த மனுவை வைத்தே
திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரிக்கும் வேலையைச் செய்தார்கள். சாதிவெறியர்களுக்கு நீதிமன்றம் துணை போனது என்றுதான் சொல்லவேண்டும். நீதிபதிகள் தனி அறையில் திவ்யாவிடம் பேசினார்கள் ஜூலை 1 அன்று. திவ்யா கண்ணீருடன் ‘அம்மா விரும்பினால் இளவரசனுடன் வாழ்வேன்’ என்று கூறினார். இது நீதிமன்றக் குறிப்புகளில் பதிவாகி உள்ளது. யார் வேண்டுமானாலும் அதை சரிபார்த்துக்கொள்ளலாம். ஆனால் மறுநாள் திவ்யாவோ இளவரசனோ ஆஜராகத் தேவையே இல்லை. அதனால் இளவரசன் தர்மபுரிக்குச் சென்றுவிட்ட நிலையில்,தேவையில்லாமல் திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைத்துவந்தார் பா.ம.க. வழக்கறிஞர்கள் அழுத்தம் கொடுத்து நிர்பந்தித்து திவ்யாவை ஊடகங்களிடம் வேறு மாதிரி பேசவைத்தனர். ‘இளவரசனுடன் இனி வாழப் போவதில்லை’ என்று அவர் தெரிவித்தார். அப்போது நான் தான் ஊடகங்களுக்கு தவறாக தகவல் கொடுத்ததாகவும் கூறினார். எல்லாமே நிர்பந்தத்தினால் வந்த வார்த்தைகள். நீதிமன்றக் குறிப்புகளில் பதிவான ஒரு விஷயத்தை கொஞ்சமும் தயக்கமில்லாமல் பொய்யாகப் பேச வைத்தார்கள் பா.ம.க.வினர். இதற்கு மறுநாள் இளவரசனின் மரணம் நிகழ்ந்திருக்கிறது. இளவரசனின் மரணம் கொலைதான். தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை. தலையில் மட்டும் காயம். இடது கையில் சிறிதளவு காயம். அவ்வளவுதான். ரயிலில் அடிபட்டால் இப்படி இருக்காது. அருகிலேயே மது பாட்டில் இருப்பதெல்லாம் பார்த்தால் கொண்டுவந்து வைத்தது போலவே உள்ளது. மிகவும் தைரியமான தன்னம்பிக்கை உடைய இளவரசன் தற்கொலை செய்துகொள்வார் என்பதை நம்ப முடியாது. அவருடைய உடலைப் பார்க்கையில் யாருக்குமே நடந்தது என்ன என்பதை யூகிக்க முடியும். ஆட்கொணர்வு மனுவை விவகாரத்து மனுபோல பாவிக்கக் கூடாது. இது நீதிமன்றமும் சாதியவாதிகளும் சேர்ந்து செய்த கொலை.’’என்கிறார் ரஜினிகாந்த்.

இளவரசனின் மரணத்தை அடுத்து தொலைக்காட்சிகளில் விவாதங்களும், இருவர் சந்தித்துக்கொண்டால் அதுகுறித்தே பேசுவதுமாக இந்த மரணம் பாதிப்புகளை உண்டாக்கி உள்ளது. இளவரசனின் மரணத்துக்கு எது காரணம்? அப்பட்டமான சாதிவெறி. தர்மபுரி மாவட்டத்தில் காதல் சாதிமறுப்பு திருமணங்கள் ஒன்றும் புதிதல்ல. இப்போதுகூட திவ்யா – இளவரசன் திருமணத்துக்குப் பின்பு கூட சில காதல் திருமணங்கள் நடந்தேறி இருக்கின்றன. கொண்டம்பட்டியைச் சேர்ந்த நேதாஜி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வன்னிய சாதி பெண்ணை மணம் புரிந்ததால் ஊருக்குள் நுழைய முடியாமல் வெளியூரில் மனைவியுடன் வசிக்கிறார். இன்று வரை அவர் எந்த ஊரில் இருக்கிறார் என்று அவருடைய குடும்பத்துக்கே தெரியாது. தர்மபுரி வன்முறையின்போது அவருடைய வீடு குறிவைத்து தாக்கப்பட்டது. அப்போது ஒரு பத்திரிகையில் வெளியான தாயின் புகைப்படத்தைப் பார்த்து அவரைத் தொடர்புகொண்டு கதறினார் நேதாஜி. இவரைப் போல இளவரசனும் திவ்யாவும் எங்காவது வெளியூரில் சென்று வாழ்ந்திருந்தால், தர்மபுரிக்கு வராமலேயே இருந்திருந்தால் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழ்ந்திருப்பார்கள். சென்னையிலும் பெங்களூரிலும் வாழ்ந்த இவர்கள் பொருளாதார வசதி இல்லாத காரணத்தால் வெளியூரில் தங்கும் வசதி இன்றி இளவரசனின் பெற்றோருடன் வந்து தங்கியுள்ளனர். உள்ளூரிலேயே இருந்தது சாதியவாதிகளுக்கு வசதியாகிவிட்டது. 

கையில் பணமில்லாமல், இளவரசனும் திவ்யாவும் வழக்குக்காக சென்னை வரை இருசக்கர வாகனத்திலேயே வந்தார்கள் என்று இளவரசனின் பெற்றோர் தெரிவித்தனர். அந்தளவுக்கு பொருளாதார வசதியின்றி இருந்தவர்களுக்கு பணம் மட்டும் இருந்திருந்தால் எங்கோ கண்காணாத இடத்தில் வசித்து உயிருடனாவது இருந்திருப்பார்கள். ஆனால் இன்றைக்கு இளவரசன் உயிருடன் இல்லை. திவ்யாவுக்கு நிம்மதி இல்லை. தந்தையை ஏறகனவே இழந்து மன அழுத்தத்திலிருக்கும் திவ்யாவுக்கு இளவரசனின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். ஆனால் அவருக்கு இந்தச் செய்தி போய்ச் சேர்ந்ததா என்பதே கேள்விக்குறி. சாதியவாதிகளின் பிடியில் சிக்கியிருக்கும் திவ்யா என்கிற இளம்பெண்ணை மீட்பது என்கிற நோக்கிலேயே வழக்கறிஞர் வைகை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இளவரசன் தன் இறுதி முயற்சியாக திவ்யா, அவருடைய தாய் தேன்மொழி, அவருடைய சகோதரன் என்று அனைவருக்குமாக சேர்த்து அவர்களை மீட்க வேண்டும், உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இளவரசனிடம் இந்தியா டுடே எடுத்த முந்தைய பேட்டியிலும் கூட திவ்யாவின் தாய் தேன்மொழி நிர்பந்திக்கப்படுகிறாரென்றும், பா.ம.க.வைச் சேர்ந்த சாதியவாதிகளின் பிடியில் சிக்கியே அவர் தனக்கு கிடைக்கவேண்டிய காவல்துறை வேலையைக் கூட கிடைக்கவிடாமல் செய்தார் என்றும் தெரிவித்திருந்தார். ‘’’ இந்தளவுக்கு ஆகும்னு யாருக்குத் தெரியும். நான் பிறந்த சாதிதான் இவங்களுக்குப் பிரச்சனையா போச்சு. இவ்வளவு செய்றவங்க எதையும் செய்வாங்க.’’ என்று இளவரசன் முந்தைய பேட்டியில் கூறியிருந்ததே ஒரு வாக்குமூலமாகி நிற்கிறது. இளவரசனின் மரணம் தற்கொலையா கொலையா என்கிற விவாதங்களையெல்லாம் மீறி அவரைக் கொன்றது சாதியே.

படங்கள்: ராஜசேகர்

(இந்தியா டுடே இதழுக்காக எழுதியது)


Wednesday, July 03, 2013

வெற்றி யார் பக்கம்?

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பது தொடர்பான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. 5 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்பது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளதற்கு நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வரும் ஜூலை 3ல் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தொழிலாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன. நெய்வேலியில் வேலை நிறுத்தம் நடந்தால், மின்சாரத் தேவைகளுக்கு நெய்வேலியை நம்பியிருக்கும் தமிழகம் மட்டுமல்லாது, பிற மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும். ஏற்கனவே மின்வெட்டின் பிடியில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாடு மேலும் பாதிப்புக்குள்ளாகும். இது தமிழக அரசுக்கு நெருக்கடியாக மாறும் என்கிற சூழலில்தான் தமிழக அரசு என்.எல்.சி.யின் ஐந்து சதவிகித பங்குகளை தானே வாங்கிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. 

தனியாருக்கு விற்கநேர்ந்தால் தொழிலாளர்களிடையே அமைதியின்மை ஏற்படும் என்றும் அதன்காரணமாக உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தனியாருக்கு விற்பதை பிரதான கட்சிகள் அனைத்தும் எதிர்க்கின்றன. தி.மு.க., ம.தி.மு.க. இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் என்று அனைத்து கட்சிகளும் தனியாருக்கு விற்கும் இந்த முடிவை எதிர்க்கும் சூழலில் அரசின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

தமிழக அரசு மே 23 அன்று மத்திய அரசுகு எழுதிய கடிதத்தில் தனியாருக்கு விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிதற்கு, மத்திய அரசிடமிருந்து மறுபரிசீலனை செய்ய இயலாது என்று பதில் கடிதம் வந்ததாக ஜெயலலிதா தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு என்.எல்.சியின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கான அனுமதியை அளித்தது. அதன்பின் மீண்டும் தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனாலும் பலன் இல்லை. இந்நிலையில்தான் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் என்கிற அஸ்திரத்தை எய்திருக்கின்றன. இதனால் தமிழக அரசு கவலைகொண்டிருக்கிறது என்பது ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது. 

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளுக்கு எப்போதும் எதிராக இருக்கக்கூடிய இடதுசாரி கட்சிகள் இம்முடிவை கடுமையாக எதிர்க்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இந்தியாடுடேயிடம் பேசியபோது ‘’தானே 5 சதவிகித பங்குகளை வாங்கிக்கொள்வதாகக் கூறும் தமிழக அரசின் அறிக்கைகூட  பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்றுதான் தொடங்குகிறது. எங்கள் முதல் நோக்கம், என்.எல்.சி.யின் பங்குகள் தனியாருக்குப் போகக் கூடாது என்பது. என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனம் மட்டுமல்ல, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனமும் கூட. ஆகவே லாபத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டிய அவசியம் என்ன?  5,70,000 கோடி ரூபாய் முதலாளிகளுக்கு வரிச்சலுகை கொடுத்துவிட்டு, என்.எல்.சி.பங்குகளை தனியாருக்குக் கொடுப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.  ஒரு உடனடி தீர்வாக வேண்டுமானால் மாநில அரசு பங்குகளை வாங்கிக்கொள்ளும் முயற்சியை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் தொலைநோக்கில் இது சரியான தீர்வாகாது.’’ என்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழக அரசே 5 சதவிகித பங்குகளை வாங்கும் முடிவை வரவேற்கிறது.

ஏற்கனவே சில ஆண்டுகளாக5 சதவிகித பங்குகளை விற்பதன் மூலம் அரசுக்கு 466 கோடி ரூபாய் கிடைக்கும். நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கவே தனியாருக்கு பங்குகளை விற்க முடிவை எடுத்ததாக மத்திய அரசு கூறுகிறது. இது மத்திய அரசுக்கு ஒரு பெரிய தொகை அல்ல என்பது தொழிலாளர்களின் வாதமாக இருக்கிறது. செபி என்றழைக்கப்படும் இந்திய பங்குச் சந்தை வாரிய விதிமுறைகளின்படி என்.எல்.சியின்  மேலும் 5 சதவீத பங்குகளை பொதுப் பங்குகளாக விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பி. சுரேந்தர் மோகன் இந்தியா டுடேயிடம் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களின் 10 சதவீத பங்கு பொதுப்பங்குகளாக இருக்க வேண்டும் என்பது செபியின் விதிமுறை. ஆனால், இப்போது என்.எல்.சியின் 6.54 சதவீத பங்குகள் மட்டுமே பொதுப் பங்குகளாக உள்ளது. எனவே, அந்த 10 சதவீதத்தை எட்டும் வகையில் மேலும் 5 சதவீத பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் அவர். ’’இம்முடிவை மேற்கொள்ளாவிட்டால் செபியின் பட்டியலில் இடம்பெற முடியாமல் போய்விடும் என்கிற அச்சத்தின் காரணமாகவே இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. தமிழக அரசே பங்குகளை வாங்கிக்கொள்வது தொடர்பாக பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்கிறார் சுரேந்திர மோகன்.

மூன்று காரணங்களுக்காக தமிழக அரசு என்.எல்.சி.யின் பங்குகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புக்கொள்ளக்கூடாது என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகிறார்கள். 1. அது சட்ட வரம்பிற்கு உட்பட்டதாக இருப்பினும், செபியின் நோக்கமே வர்த்தகத்தில் பங்குகளுக்கான சந்தையை அதிகப்படுத்துவதுதான் எனும்போது, தமிழக அரசு வாங்கிவிட்டால் அதற்கு சாத்தியமில்லை. 2. இதை முன்னுதாரணமாக வைத்து பல மாநிலங்களும் இதுபோன்ற சூழல் எழும்போது இதையே செய்வார்கள். 3. தமிழக அரசு 466 கோடி செலவு செய்து பங்குகளை வாங்கவேண்டும். மாநிலத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கையில் தமிழக அரசு இதற்காக செலவு செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்.

ஆனால் சி.பி.ஐ(எம்) கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனோ ‘’செபியின் முடிவுகள் ஒன்றும் தன்னிச்சையானதல்ல. செபி அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்ட ஒரு அமைப்பு. அரசு நினைத்தால் விதிகளை மாற்ற முடியும். அதுவே ஒரு விதியை உருவாக்கி, அந்த விதியை மீறாமல் இருக்க நான் பங்குகளை விற்கிறேன் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. ஆகவே செபியின் விதியை மாற்ற வேண்டும்’’ என்கிறார்

சென்ற திமுக ஆட்சியின்போதும், 22-6-2006 அன்று நெய்வேலி பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்யும் முடிவினை மத்திய அரசு அறிவித்தது. தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த முடிவை எதிர்த்தவுடன் அரசு எடுத்த முடிவில் பின்வாங்கியது. இந்த முறையும் அதே ஒற்றுமையை கடைபிடித்து அரசை பின்வாங்க வைக்கமுடியும் என்று நம்புகிறார் என்.எல்.சி. - சி.ஐ.டி.யு. தொழிற்சங்கச் செயலாளர் வேல்முருகன். ‘’தனியாருக்கு பங்குகளை விற்பது தொடர்பாக தொழிலாளர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கிறது. தமிழக அரசே பங்குகளை வாங்கிக்கொள்ளவேண்டும் என்கிற கருத்திலும் எங்களுக்கு உடன்பாடில்லை. என்.எல்.சி.யின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதும், தமிழக அரசுக்கு விற்கப்படுவதும் ஒன்றுதான். ஐயாயிரம் கோடிக்கும் அதிகமாக தனியார் முதலாளிகளிடம் வரிச்சலுகை அறிவித்துவிட்டு, வெறும் 466 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு நாங்கள் மக்களுக்கு சேவை செய்வோம் என்று சொல்லும் மத்திய அரசை எதிர்க்க வேண்டாமா? ஏன் முதலாளிகளிடம் வரிவசூல் செய்து அந்தப் பணத்தில் மக்கள் சேவை செய்யவேண்டியதுதானே? மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால் ஜூலை 3 அன்று காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும்’’ என்கிறார்.

பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுவது என்பது தொழிலாளர்களின் பணிப்பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது. தனியாருக்கு பங்குகளை விற்பனை செய்வது என்பது என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கையின் முதல்படியாக இருக்கக்கூடும் என்கிற அச்சம் தொழிலாளர்களிடையே நிலவுகிறது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் ஆபத்து என்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியுடன் இருக்கின்றன. தனியார் மயமானால் உற்பத்தியாகும் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும். பொதுத்துறை ஒன்று தனியார்மயமானால் பொருளாதார இழப்பு மக்களுக்குத்தான். அத்துடன் சமூக நீதி என்கிற கோட்பாடு அடிபட்டுவிடும் என்று பெரியாரிய இயக்கங்கள் அஞ்சுகின்றன.  தனியார்மயமானால் அங்கே வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. எனவே சமூக நீதிக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கிறது திராவிடர் கழகம்.

நவரத்னங்கள் என்றழைக்கப்படும் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கமாட்டோம் என்று தொழிலாளர்கள் ஒருபுறமும், மத்திய அரசு இன்னொரு புறமும் உள்ளன. இந்தப் போட்டியில் வெல்லப்போவது அரசா தொழிலாளர்களா என்பதை நாடு உற்றுநோக்கிக்கொண்டிருக்கிறது.

(இந்தியா டுடேவுக்கு எழுதிய கட்டுரை)

Monday, July 01, 2013

யானைகள் பாதையில் மனிதர்கள் அட்டகாசம்

கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகே சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. மேகங்கள் தலைக்கு மேலே பயணித்துக்கொண்டிருந்தன. தென்மேற்குப் பருவக்காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. ஆனால் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு அருகேயுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களோ இவற்றை ரசிக்க முடியாத அளவுக்கு பீதியில் இருக்கிறார்கள். 

இப்போதெல்லாம் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வயல்வெளிகளை அழித்ததாக அடிக்கடி செய்திகள் வருகின்றன.  மனிதர்களும் கொல்லப்படுகிறார்கள் என்பது மிகவும் துயரமான விஷயம். ஆனால் ஊடகங்கள் எப்போதுமே ‘யானைகள் அட்டகாசம்’ என்றே செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் உண்மை என்னவெனில் யானைகள் தங்கள் இடங்களையும், தங்கள் வழித்தடங்களையும்தான் பயன்படுத்துகின்றன. மனிதர்களாகிய நாம்தான் நகரமயமாதல் என்கிற பெயரிலும், கட்டடங்கள் என்கிற பெயரிலும் பொக்கிஷமாக பாதுகாக்கப்படவேண்டிய காடுஅக்ளை அழித்துக்கொண்டிருக்கிறோம். அதனால் காட்டு விலங்குகள் தங்கள் வாழிடத்தையும் பாதையையும் இழந்து வேறு வழியின்றி ஊருக்குள் வருகின்றன.

கோவை மாவட்டத்தின் யானைகள் வழித்தடத்தில்தான் அனைத்து மத நிறுவனங்களும், ஆன்மீக குருக்களின் மடங்களும், கல்வி நிறுவனங்களும், ரியல் எஸ்டேட் நிலங்களும் உள்ளன. சின்னாம்பதி மலைகிராமத்தை நோக்கி என் பயணம் தொடங்கியது. சின்னாம்பதிக்கு அருகில் மாவுத்தம்பதியில் ஹிமாலயா டெவலப்பர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் ஏஜென்சி பெரிய அளவிலான இடத்தை மலைச்சரிவுக்கு மிக அருகே வளைத்துப் போட்டிருக்கிறது. மலைகளை அடுத்துள்ள காட்டுப்பகுதி ரிசர்வ்ட் ஃபாரஸ்ட் எனப்படும் காப்புக் காட்டுப்பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது. காட்டுப்பகுதி தொடங்குவதைக் குறிக்கும் எல்லைக்கல் ஒன்று நடப்பட்டிருக்கும். எல்லையில் இருந்து 150 மீட்டர்கள் வரை Buffer Zone  இடைதாங்குமண்டலம் என்றழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் எந்த கட்டடமும் கட்டப்படக்கூடாது. இப்பகுதியில் எந்த மாற்றமும் செய்யப்படக்கூடாது என்பது விதி. ஆனால் ஹிமாலயா டெவலப்பர்ஸ் நிறுவனம் விதிகளை மீறி 150 மீட்டர் இடைவெளி விடாமல் தனது வேலியை காப்புக்காட்டு எல்லைக்கு அருகிலேயே போட்டுள்ளது. சுற்றுச்சுவர் மற்றும் வேலிகளால் வழக்கமான பாதை மறுக்கப்படும் யானைகள் தடுமாறுகின்றன. குழப்பமடைந்து ஊருக்குள் வருவதால் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன.

யானைகள் வழித்தடம் என்பது என்ன? யானைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. அவை நகர்ந்துகொண்டே இருப்பவை. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஒவ்வொரு இடமாக நகரும் யானைகள் வழக்கமாக ஒரே வழியையே பின்பற்றுகின்றன. ஒரு யானையை இந்த ஆண்டு ஓரிடத்தில் பார்த்தால் அடுத்த ஆண்டும் அதே யானையை அதே இடத்தில் பார்க்கலாம். அந்த அளவுக்கு யானைகள் துல்லியமாக தனது வழித்தடத்தைப் பேணுவதுண்டு. ஆகவே யானைகள் பயன்படுத்தும் பாதைகளும், அவற்றை ஒட்டிய பகுதிகளும் யானைகள் வழித்தடம் என்று அழைக்கப்படுகின்றன.

சின்னாம்பதிக்கு அருகில் உள்ள கிராமம் மொடமாத்திக்காடு. அங்கே மே 21 அன்று பாலசுப்பிரமணியம் என்கிற விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரழந்தார். அவருடைய வீட்டுக்குச் சென்றபோது மொத்த குடும்பமும் நடந்ததை விவரித்தனர். 500 குடும்பங்கள் இந்த ஊரில் வாழ்கின்றனர். இப்போது அத்தனை குடும்பங்களும் அச்சத்தில் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சக்திவாய்ந்த டார்ச் லைட் உள்ளது. அதன் விலை 3,500 ரூபாய். யானைகள் இரவில் வரும்போது அந்த டார்ச்சை அதன் முகத்துக்கு நேரே அடித்தால் யானைகள் பின்வாங்கிவிடுவதுண்டு. ஆனால் பாலசுப்பிரமணியத்தின் தாய் ராமாத்தாள் ‘’நாங்க இங்கே 40 வருஷமா இருக்கோம். இப்போ யானைங்க எல்லாம் பேட்டரி போட்டா (டார்ச் அடித்தால்) திரும்பிப் போறதில்ல..எதுத்துக்கிட்டு வருது. எங்களுக்கு இது புரியலை. இப்போ கொஞ்ச காலமாத்தான் இந்த யானைங்க இப்படி ஆளை அடிக்குதுங்க” என்கிறார். அருகில் உள்ள முருகம்பதி பழங்குடி கிராம மக்கள்தான் இவர்களைக் காப்பாற்ற வருகிறார்கள்.

விவசாயக் குடும்பம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவர் இரவுநேரத்தில் வயலை காவல் காக்கின்றனர். யானைகள் வந்துவிட்டால் உடனே வனத்துறைக்கு தகவல் தருகின்றனர். தீயணைப்புப் படைபோல , வனத்துறையில் யானை விரட்டும் படை ஒன்று உள்ளது. மாலை வேளைகளிலும் இரவு நேரங்களிலும் இவர்களது செல்போன்கள் அடித்தபடியே உள்ளன. யானைகளை காட்டுக்குள் மீண்டும் விரட்டுவதற்காகச் செல்வதற்கென்றே ஒரு விசேஷ வாகனத்தை வைத்திருக்கிறது வனத்துறை. ஒவ்வொரு மாலையில் இந்தப் படை பட்டாசுகளுடனும் விசேஷ டார்ச் லைட்டுகளுடனும் தயாராய் காத்திருக்கிறது. இந்த டார்ச் லைட்டுகள் ஒரு கி.மீ. தொலைவுக்கு ஒளிதரக் கூடியவை. யானை விரட்டும் படையுடன் காடுகளைச் சுற்றிய ஓரிரவில் அவர்களுடைய பணியின் சிரமம் விளங்கியது. ஒரு கிராமத்திலிருந்து அழைப்பு வருகிறது. உடனே படை அங்கே விரைந்துசென்று தேடுதல் வேட்டையைத் தொடங்குகிறது. யானைகள் கூட்டமாகவோ தனியாகவோ வருவதுண்டு. யானையைக் கண்டவுடன் வாகனத்திலிருந்து பட்டாசுகளை வெடித்து, டார்ச் லைட்டை பயன்படுத்திய யானைகளை மீண்டும் காட்டுக்குள் அனுப்புகின்றனர்.  யானைகளும் அவர்களுக்குக் கட்டுப்படுகின்றன. சில யானைகள் இவர்களைத் துரத்துவதும் உண்டு. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலைதான் இந்தப் படையில் உள்ளவர்களுக்கு. இதற்கென்றே விசேஷப் பயிற்சி பெற்ற படை இது. ஓரிடத்தில் பணியில் இருக்கும்போதே திடீரென்று இன்னொரு பகுதியில் இருந்து அழைப்பு வருகிறது. உடனே அங்கே விரைகிறது படை. இப்படியே இரவு முழுதும் கழிகிறது. மதுக்கரைக்கு அருகே கேரளாவுக்குச் செல்லும் சாலையில் மாலை மற்றும் இரவுகளில் சாவகாசமாக வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையோரங்களில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த பயணிகளை எச்சரித்து உடனே புறப்படச் சொல்கிறார்கள். இந்தச் சாலை தற்போது யானைகள் அடிக்கடி குறுக்கிடும் சாலையாகிவிட்டது. சாலையைக் கடந்து எதிர்புறம் உள்ள சுந்தராபுரத்துக்குச் செல்கின்றன யானைகள். அவை திரும்பும் வரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அவ்வபோது நெரிசல் ஏற்படுவது இங்கே சகஜமாகி விட்டது. ஒருமுறை வடவள்ளி பேருந்து நிலையத்துக்கே வந்து சென்றன யானைகள். 
வனத்துறை அளிக்கும் தகவல்படி ‘’350 -400 யானைகள் சீசன் என்று அழைக்கப்படும் அக்டோபரிலிருந்து மார்ச் மாதம் வரை கோவைப் பகுதியில் இருக்கும். மற்ற நேரங்களில் ஏறத்தாழ 80 யானைகள் இருக்கலாம்’’

ஈஷா யோகா நிறுவனம் போன்ற ஆன்மிக நிறுவனங்கள் மின்வேலியை அமைத்திருப்பதால், அவற்றைத் தொடும் யானைகள் இறந்துபோகின்றன அல்லது ஆத்திரமடைந்து எதிர்படும் மனிதர்களைத் தாக்குவதால் மனித உயிர்களும் பலியாகின்றன.  பூண்டியில், வெள்ளயங்கிரி மலை அருகில் ஆன்மீக குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் உள்ளது.இங்கே மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களோ, விலங்குகளோ அவற்றைத் தொட நேர்ந்தால்? மேலும் நீலியாறு என்கிற எப்போதும் வற்றாத ஓடை ஈஷா மையத்தி பின்புறம் ஓடுகிறது.  இதன் நீர் முழுவதையும் ஈஷா மையம் அருகிலேயே ஒரு கிணற்றைத் தோண்டி உறிஞ்சிவிடுகிறது.  ஹாக்கா (Hill Area Conservation Authority (HACA)) என்றழைக்கப்படும் மலைத்தள பாதுகாப்புக் குழுவிடம் மலையடிவாரப் பகுதிகளில் ஏதேனும் கட்டடங்கள் கட்டவேண்டுமென்றால் அனுமதி பெறவேண்டும். மலைகளுக்கும் காடுகளுக்கும் மிக அருகே இருக்கும் ஒரு சில கிராமங்கள் இக்குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கோவையின் உள்ளூர் திட்டக் குழுமம் (Town and Country Planning) ஈஷா மையத்துக்கு அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டு 5.11.2012 அன்று நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில் ‘’2.11.2012 அன்று பணிகள் நடைபெறும் இடத்தைப் ஆராய்ந்தபின்னர், 60 கட்டட பிளாக்குகள் கட்டப்பட்டுள்ளன என்றும், 34 பிளாக்குகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் கண்டறியப்பட்டது. இவற்றுக்கெல்லாம் அனுமதி பெறப்படவில்லை. ஆகவே பணிகளை நிறுத்துமாறும், இந்த நோட்டீஸ் பெற்ற  3 நாட்களுக்குள் அனுமதி கோரி விண்ணப்பிக்கவேண்டும். தவறும்பட்சத்தில் Town and Country Planning Act 1971 பிரிவு 56 & 57 படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

வனத்துறையும் 8.2.12 தேதியிட்ட தனது கடிதத்தில் ‘’ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு அரசு அனுமதி பெறாத நிலையில் பெரிய அளவிலான புதிய கட்டிடங்களை கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவது தெரிய வருகிறது. அரசு ஆணைக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் எல்லாவித கட்டிடப் பணிகளையும் உடனடியாக நிறுத்தவும் ஹாக்கா சட்டத்தின்படி உரிய அனுமதி பெற்று பின்பாக கட்டிடப்பணிகளை தொடரவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.

வனச்சரக அலுவலர் எம்.எஸ். பார்த்திபன் 19.01.12 அன்று மாவட்ட வன அலுவலருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

1. சாடிவயலுக்கும் தானிக்கண்டிக்கும் இடையேயான யானைகள் வழித்தடத்தில் ஈஷா மையம் அமைந்துள்ளது.

2. ஈஷா மையம் இங்கே அமைக்கபப்ட்டபின், லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்துபோகிறார்கள். காட்டுப் பாதையை அவர்கள் பயன்படுத்துவதால், காட்டு விலங்குகளும் காடுகளும் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், நூற்றுக்கணக்கான பணியாட்களும், கனரக வாகனங்களும், எந்திரங்களும் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவதால், காட்டு விலங்குகளுக்கும், யானைகள் வழித்தடமும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

3. இயற்கையான் காட்டு மரங்கள் அழிக்கப்பட்டு, ஈஷா மையத்தின் மரங்கள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன.

4. மின்வேலி அமைக்கப்பட்டிருப்பதால், யானைகள் வருகையில் பாதை குழம்பி வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பயிர்கள் நாசமாகின்றன. உடமைகளுக்கும் மனித உயிர்களுக்கும் இழப்புகள் ஏற்படுகின்றன.

மலைப் பகுதிகளில் ரிசர்வ்ட் ஃபாரஸ்டுகள் என்று அழைக்கப்படும் காப்புக்காடுகளின் எல்லையில் ஒரு கல் நடப்பட்டிருக்கும். அந்த எல்லைக் கோட்டில் இருந்து 150 மீட்டர் buffer zone என்றழைக்கப்படும் இடைதாங்கு மண்டலம் என்றழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்தில் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக்கூடாது என்பது விதிமுறை. ஆனால் ஈஷா மையம் ஏறத்தாழ 30 கட்டடங்களை இந்த இடைதாங்கு மண்டலத்தில் கட்டியிருக்கிறது.

‘’1994 -2011 வரை கட்டப்பட்ட 32,855.80 மீட்ட்டர் கட்டிடங்களுக்கு மட்டும் ஊராட்சியின் அனுமதி பெற்றுள்ளதாக ஈஷா அறக்கட்டளையினரால் தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஈஷா மையத்தின் பரப்பளவு 4,27,700 சதுர மீட்டர். காப்புக் காட்டின் எல்லையில் இருந்து 1.70 மீட்டரில் தொடங்கி, 473 மீட்டர்கள் வரை கட்டிடங்கள் உள்ளன.  இவை யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளன என்பதால் மனித - விலங்கு முரண்பாடு ஏற்படுகிறது. ஆண்டுதோறும்  நடைபெறும் மகாசிவராத்திரி விழாவுக்கு சுமார் 2 லட்சம் பேர் வருவதால், வாகனத்தின் இரைச்சல், திருவிழாவுக்கு பயன்படுத்துக்கும் ஒளி/ஒலி அமைப்பினால் அருகில் உள்ள போலாம்பட்டி பிளாக் -2 ஒதுக்கு வனத்தினும் வாழும் யானைகளின் இயல்பு வாழ்க்கைக்கு அதிக இடையூறு ஏற்பட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறி பக்தர்களை தாக்கத் தொடங்கினால், அந்த பெரிய சேதத்தை குறைந்த எண்ணிக்கையிலுள்ள வனப்பணியாளர்களால் தடுப்பது என்பது இயலாத காரியமாகும்’’ என்று கோவை மாவட்ட வன் அலுவலர்  ஹாக்காவுக்கு எழுதிய  17.08.2012 தேதியிட்ட கடிதத்தில் தெரிவிக்கிறார்.

ஆனால் ஈஷா பணிகளை முடித்துவிட்டு 2012 டிசம்பரில் கட்டடத்தைத் திறந்துவிட்டது. இந்தியா டுடேவிடம் ஈஷா மையத்தின் செய்தித் தொடர்பாளர் ‘’நாங்கள் 6 துறைகளில் இருந்து அனுமதி பெறவேண்டும். 5 துறைகளில் பெற்றுவிட்டோம். ஒரு துறையில் மட்டுமே அனுமதி பெறவில்லை. பொறாமை கொண்டவர்கள் எங்களைக் குறித்து தவறான பிரசாரம் செய்கிறார்கள்’’ என்றார்.

போலுவாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் சதானந்தம் ‘’அவர்கள்பாட்டுக்கு கட்டிடங்களாகக் கட்டுகிறார்கள். இதை எதிர்த்து ஒரு தீர்மானத்தை பஞ்சாயத்து சார்பில் கொண்டு வரலாம் என்று முயன்றால் அன்றைக்கு உறுப்பினர்கள் வருவதில்லை. உறுப்பினர்கள் இல்லாமல் எப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றமுடியும். ஈஷா எப்படியோ அவர்களை சரிக்கட்டி விடுகிறது. எங்கள் அமைப்பு சிறிய அமைப்பு.  ஈஷா மையத்தை எதிர்க்கும் அளவுக்கு சக்தி கிடையாது. அவர்களுக்கு பெரிய அளவில் தொடர்புகள் உண்டு. என்ன செய்வது? எதுவும் இயலவில்லை.’’ என்கிறார்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தின் மீது ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. ‘’ அனுமதி பெறாமல் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டங்களை உடனடியாக இந்திய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி இந்த வழக்கை தொடர்ந்துள்ளோம். தமிழ்நாடு முழுதும் மின்வெட்டில் இருளில் தவிக்கையில் ஈஷா மையத்துக்கு மட்டும் 24 மணிநேர தடையில்லா மின்சாரம் ஏன் எனக்கேட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு கேள்வி எழுப்பியுள்ளோம்’’ என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்.

ஈஷா மையத்துக்கு மிக அருகில் உள்ள தாணிக்கண்டி கிராமத்தில் அண்மையில் யானை தாக்கியதில் உயிரழந்த ஒருவரின் மனைவி செல்வியை சந்தித்தபோது, ‘’அவர் போனபின்னாடி எனக்கு எதுவுமே இல்ல. ஒரு நாள் முழுக்க அவர் வீடு திரும்பலை. மக  வீட்டுல தங்கிட்டாருன்னு நினைச்சேன். காலைல 6 மணிக்கு யானை அடிச்சு செத்துட்டாருன்னு சேதி வருது. இங்க ரொம்ப காலமா இருக்கோம். ஆனா இப்பத்தான் கொஞ்ச நாளா இந்த மாதிரி அதிகம் நடக்குது’’ என்று கண்ணீருடன் கூறினார்.

ஈஷா மட்டுமல்ல, அம்ருதானந்தமாயி நிறுவனமும் தன் பங்குக்கு சூழலைக் குலைக்கிறது. அவர்கள் கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற்றிருக்கிறார்கள். ஆனால் அப்படி அனுமதி பெறுகையில் ஹாக்கா தெளிவாகவே காடுப்பகுதியை ஒட்டிய 150 மீட்டர் இடைதாங்கு மணடலத்தில் எந்த கட்டுமானமும் கூடாது என்று விதிமுறை விதித்தும் அதை மீறி பிரம்மாண்டமான நீர்த் தொட்டி ஒன்றைக் கட்டியிருக்கிறது அம்ருதா நிறுவனம். அம்ருதா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தேவை பூர்த்திசெய்ய இந்த நீர்த்தொட்டி பயன்படுகிறது. காட்டுப் பகுதி எல்லைக்கல்லுக்கு ஒரு மீட்டர் கூட இடைவெளியில்லாமல் சூரிய சக்தியில் இயங்கும் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் யானைகள் வழித்தடம் என்பதால் போனால் போகிறதென்று யானைகளுக்கென ஒரு நீர்த்தொட்டியைக் கட்டியிருக்கிறது இந்நிறுவனம். ஒரு யானை ஒரு நாளைக்கு 200 மீட்டர் நீர் குடிக்கும். ஆனால் இந்த நீர்த்தொட்டியில் உள்ள நீரோ பழங்காலத்தில் நிரப்பப்பட்டதுபோல் காட்சியளித்தது. புழுக்களூம் பாசியுமாக இருக்கும் அந்தத் தண்ணீர் ஒரே ஒரு யானையின் நீர்த்தேவையைக் கூட பூர்த்தி செய்யாது. வனத்துறை 19.4.2013 தேதியில் இடைதாங்குமண்டலத்தை பராமரிக்காதது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை.  அம்ருதா நிறுவனத்தினரிடம் தொடர்புகொண்டபோது, உயர் அதிகாரிகள் தொடர்புகொள்வார்கள் என்கிற பதில் கிடைத்தது. ஆனால் அவர்கள் ஒருபோதும் தொடர்புகொள்ளவில்லை.

நிறுவனத்துக்கு வடக்குப் பகுதியிலும் அம்ருதா தற்போது காட்டை அழித்து தற்போது அந்த இடம் சமவெளியாய் மரங்களற்று காட்சியளிக்கிறது. இதற்கு சற்று தூரத்தில் உள்ள ஒரு பெரும்பகுதி நிலத்தின் சொந்தக்காரர் யாரென்று தெரியவில்லை. ஆனால் மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு நிலத்தை சமப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இந்தப் பகுதி வழக்கமாக யானைகள் கீழிறங்கி வரும் இடம். ‘’இந்த வழி தடைபட்டா, யானைங்க குழம்பி நேரடியா டவுனுக்குள்ள வந்துடும். கொஞ்ச நாளைக்கு முன்னால கூட ஒரு நேவி ஆபீசரையும், ஒரு வயசான பாட்டியையும் யானை கொன்னுடுச்சு. அதனால் எல்லோரும் பயத்தில் இருக்காங்க’’ என்கிறார் ஒரு வனத்துறையைச் சேர்ந்த ஒரு யானை கண்காணிப்பாளர்.

ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடக்கும் ரேகிண்டோ நிறுவனம் பேரூர், செட்டிப்பாளையம், மதுக்கரை மற்றும் தீத்திப்பாளையம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி கோவை ஹில்ஸ் கோல்ஃப் மற்றும் கண்ட்ரி கிளப், ஒருங்கிணைந்த டவுன்ஷிப்,  ஐ.டி. சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற பெயரில் திட்டம் தீட்டி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆயிரம் ஏக்கரில் சில ஹாக்காவின் கட்டுப்பாடிலும், சில இடங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமலும் இருக்கின்றன. ஆனால் ரேகிண்டோ பெறவேண்டிய இடங்களுக்கும் கூட அனுமதி பெறவில்லை. ஒரு பெரும் பகுதி மலைச் சரிவு கோல்ஃப் மைதானமாக மாற்றப்பட்டுவிட்டது. இது ஒரு முக்கியமான யானைகள் வழித்தடம். ஆகவேதான் வனத்துறையே யானைகளுக்கென்று ஒரு நீர்த்தொட்டியை இங்கே வைத்திருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அளித்த கள ஆய்வறிக்கையில் ‘’இந்தப் பகுதி தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிகமுள்ள பகுதி. சிறுகுன்றுகளுக்கு மிக அருகில் உள்லது. போலுவாம்பட்டி காப்புக் காடுகளும் அருகில் உள்ளன. யானைகள் இவ்வழியாக அடிக்கடி வந்துசெல்லும். மனித நடமாட்டம் இப்பகுதியில் பாதுகாப்பில்லை. அத்துடன் இப்பகுதி நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி. அத்துடன் நிலத்தடி நீர் குறைந்துபோவதற்கும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் நீரின்றி சிரமத்தில் உள்ள்னார். இது ஓடைப் பகுதி என்பதால் வருவாய்த் துறையும் விண்ணப்பத்தை நிராகரித்துள்லது. எனவே புவியியல் சமநிலையைப் பேணவும், விவசாயிகள் நலன் கருதியும், நீரை பாதுகாக்கவும், யானைகளை பாதுகாக்கவும் இந்தத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் ரேகிண்டோ நிறுவனமோ இந்தியா டுடேவிடம் ‘’வனத்துறை, சுரங்கம் மற்றும் பொறியியல் துறை, வேளாண் துறை ஆகியவற்றிடம் அனுமதி பெற்றுவிட்டோம்’’ என்கிறது.

அதிர்ச்சியான வகையில் கட்டப்பட்டிருப்பது இண்டஸ் பொறியியல் கல்லூரிதான். இக்கல்லூரி ஆலந்துறைக்கு அருகில் உள்ள கலியமங்கலத்தில் உல்ளது. சரியாக மலைச்சரிவு முடியும் இடத்தில் கல்லூரியின் சுற்றுச்சுவர் தொடங்குகிறது. வனத்துறை எச்சரிக்கையை அடுத்து சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. இங்கே காப்புக்காட்டின் எல்லைக் கல் இருக்குமிடமே கல்லூரி வளாகத்தின் உட்பகுதியில்தான் என்பது அதிர்ச்சியான செய்தி. ஒருவேளை இடைதாங்கு மண்டலம் பராமரிக்கவில்லை என்கிற அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தால் கல்லூரியின் பெரும்பகுதி இருக்காது.

மத்துவராயபுரத்தில் உள்ள சின்மயா சர்வதேச உறைவிட பள்ளியின் பின்பகுதிக்கு யானைகள் அன்றாடம் வந்துசென்று பாதையை உருவாக்கியுள்ள காட்டுப் பகுதியில் சென்றால்தான் காட்டுப் பகுதியில் எல்லைக் கல்லை காண முடியும். அந்தக் கல்லில் இருந்து ஒன்றிரண்டு மீட்டர் இடைவெளியில் சுற்றுச்சுவர் துவங்குவது 150 மீட்டர் இடைதாங்கு மண்டலம் பராமரிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. பஞ்சாயத்துத் தலைவரான குணா ‘’இந்தச் சுற்றுச்சுவர் கட்டியது கூட பஞ்சாயத்துக்கு தெரியாது. வனத்துறைக்கு இதுகுறித்து புகார் கடிதம் எழுதியிருக்கிறோம்’’ என்கிறார்.

சின்மயாவுக்கு அருகிலேயே உள்ளது காருண்யா பல்கலைக்கழகம். இடை தாங்கு மண்டலம் சரியாகவே பரமமரிக்கப்படுகிறது. ஆனால் சூழலியல் ஆர்வலரும் ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளருமான சிவா கூறுகையில் ‘’இங்கே 7,500 மாணவர்கள் படிக்கிறார்கள். அடர்ந்த வனப்பகுதியை பாழக்க இது ஒன்றே போதும். கல்லூரி விடுதி இங்கேதான் உள்ளது. எல்லா கழிவுகளும் குப்பைகளும் மலைக்கு மிக அருகில் கொட்டப்படுகின்றன. இப்பல்கலைக்கழகம் ஒரு சட்டக்கல்லூரியை நிர்மாணிக்க இருக்கிறது. அது இடை தாங்கு மண்டலத்தில்தான் வர இருக்கிறது’’ என்கிறார். காருண்யா பல்கலைக்கழக தலைமைப் பொறியாளர் சுதாகர் ‘’ நாங்கள் தவறிழைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ஆகவே ஒவ்வொரு அடியையும் பார்த்துதான் வைக்கிறோம். யாரும் எங்களை குறை சொல்லிவிடக் கூடாது. கழிவுகளுக்கு வேறு வழி கண்டுபிடித்து விட்டோம். தினமும் சாடிவயலில் உள்ள இரண்டு யானைகளுக்கான தீவனத்தை நாங்கள் தான் எங்கள் செலவில் அளிக்கிறோம். இப்போது சட்டக்கல்லூரி வருவது குறித்த அறிவிப்புப் பலகை மட்டுமே வைத்திருக்கிறோம். நீங்கள் கேட்டுவிட்டதால் அதையும் நாளைக்கே எடுத்துவிடுகிறோம். உண்மையில் கல்லூரியை எங்கே கட்டுவது என்று இன்னமும் நாங்கள் முடிவு செய்யவில்லை’’ என்றார்.

தொண்டாமுத்தூருக்கு அருகேயுள்ள அட்டுக்கல்லில் பெரும்பகுதி வேலியிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம். ‘’பெரிய பெரிய பாறைகள் சிறு கற்களாக நொறுக்கப்பட்டு ஏறத்தாழ 13 லாரி அளவுக்கான லோடு கொட்டி வைக்கபப்டுள்ளது. காப்புக்காடுகள் அருகில் உள்ளன.  ஹாக்காவிடம் அனுமதி பெறப்படவில்லை. எனவே இப்பகுதி சீல் வைக்கப்படுகிறது என்கிறது மாவட்ட ஆட்சியரின் ஆணை.பாறைகளை உடைப்பது மட்டுமல்ல, மணற்கொள்ளையும் அருகில் உள்ள சிறிய ஓடைகளில் நடக்கிற்து. இது புவியியல் சமத்தன்மையை பாதிபப்துடன் காட்டு விலங்குளின் நீர்த்தேவைக்கும் பாதிப்பு உண்டாகிறது.

அடுத்து மேட்டுப்பாளையம் பகுதி. ஊட்டி பிரதான சாலையில் உள்ள புகழ்பெற்ற பிளாக் தண்டர் தீம் பார்க்கில் மறுபுறத்தில் இடைதாங்கு மண்டலம் பராமரிக்கப்படாமல் எல்லைக்கல்லில் இருந்து சில மீட்டர் தொலைவில் சுற்றுச்சுவர் இருக்கிறது. பல கட்டடங்களுக்கு அனுமதியும் பெறவில்லை. தீம் பார்க்குக்கு அருகிலேயே உள்ள சச்சிதானந்த ஜோதி உறைவிடப் பள்ளிக்குச் செல்ல ஒரு பழங்குடி கிராமத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். புகழ்பெற்ற ஊட்டி-மேட்டுப்பாளையம் ரயில் பாதைக்கு வெகு அருகே இருக்கும் இப்பள்ளியிலும் இதே கதைதான். இடைதாங்கு மண்டலத்தில் பல கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. இங்கும் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. யானைகள் இந்த ரயில்பாதையில் செல்வதை அடிக்கடி காணலாம் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். 

ஆனைக்கட்டி சுற்றுலா தளத்துக்கு அருகில் உள்ள தோலாம்பாளையத்தில் சிவா டெவலபர்ஸ் மலைச்சரிவுக்கு மிக அருகே நீச்சல்குளம், கிளப் ஹவுஸ், ஸ்பா செண்டர் போன்றவற்றை கட்டி சுற்றிலும் வேலி போட்டிருக்கிறது. எல்லைக்கல்லில் இருந்து இங்கும் ஒரு மீட்டர் தொலைவிலேயே வேலி போடப்பட்டிருந்தது என்பதை சொல்லவும் வேண்டுமா? ஊள்ளூர் திட்டக்குழுமம் 18.02.2013 அன்று அளித்த நோட்டீஸில்,’’இந்த இடத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை. ஆகவே இந்நிலத்தை முன்பு கட்டுமானப் பணிகளுக்கு முன்பு இருந்ததுபோன்ற நிலைக்கு 30 நாளைக்குள் மாற்ற வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. ஆனால் சிவா டெவலபர்ஸ் நீதிமன்றத்துக்குச் சென்று இதற்கு தடையுத்தரவு பெற்று வழக்கு நிலுவையில் உள்ளது.

மாவட்ட ஆட்சியர் கருணாகரனை தொடர்புகொண்டபோது ‘’நிர்வாகம் அத்துமீறுபவர்களுக்கு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. சட்டப்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

வனத்துறை உயர் அதிகாரி ஒருவர் ‘’அனுமதி கோரி யாரவாது விண்ணப்பித்தால் ஹாக்கா எங்கள் கருத்தைக் கேட்கும். திட்டம் வரவுள்ள இடம் யானைகள் வழித்தடத்தில் அமைந்திருந்தால், அதை நிராகரிக்கச் சொல்லி அறிக்கை அனுப்புவோம். அதையும் மீறி கட்டுமானப் பணிகள் நடந்தால், நாங்கள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்குவோம். அவ்வளவுதான் எங்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆகவேதான் நிறுவனங்கள் எங்களை மதிப்பதில்லை. பணிகளை நிறுத்தச் சொல்லி உத்தரவிடுவோம். ஆனால் சீல் வைப்பது, இடிப்பது போன்ற அதிகாரங்கள் எங்களுக்குக் கிடையாது. நாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் செய்த்கொண்டே இருக்கிறார்கள்.’’ என்று ஆதங்கப்பட்டார்.

DTCP எனப்படும் உள்ளூர் திட்டக்குழுமத்துக்குத்தான் கட்டிடங்களை சீல் செய்யவும், இடிக்கவும் அதிகாரம் உண்டு. அதன் இயக்குநர் சபாபதி ‘’சின்மயா பள்ளி இருக்குமிடம் ஹாக்காவுக்குக் கீழ் வருவதால் உள்ளூர் பஞ்சாயத்தில் பெற்ற் அனுமதி பெற்றிருந்தாலும் ஹாக்காவிடமும் பெறவேண்டும் என்று கூறிவிட்டோம். ஆனால் சின்மயா நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறது. அதற்கு நாங்கள் பதிலும் அளித்துவிட்டோம். ஈஷாவும், இண்டஸ் கல்லூரி குறித்தும் புகார்களையும் அனைத்து விவரங்களையும் சென்னையில் உள்ள எங்கள் ஆணையருக்கு அனுப்பிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கிறோம். தாமரா ரிசார்ஸ் இந்த மாத எல்லை வரை நேரம் கேட்டிருக்கிறார்கள்’’ என்றார்.

உள்ளூர் திட்டக்குழுமத்தின் ஆணையர் ஏ.கார்த்திக் ‘’அனுமதி பெறாத கட்டிடங்கள் குறித்து எங்களுக்கு எந்த புகார் வந்தாலும் நாங்கள் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்’’ என்றார். 

அப்போதைய மாநில வனத்துறை அமைச்சர் பச்சைமால் ‘’எல்லாமே பட்டா நிலங்களாகத் தெரிகின்றன. பொதுவாக பட்டா நிலங்கள் யானைகள் வழித்தடத்தில் வராது. ஒருவேளை யானைகள் அங்கே சென்றிருக்கலாம். 20 கோடி ரூபாய் ஒதுக்கு அகழிகள் அமைத்து யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கும் பணிகள் நடந்துவருகின்றன’’ என்றார்.

ஆண்டுதோறும் கோயில்யானைகளுக்கு முதுமலையில் முகாம் நடத்தும் தமிழக அரசுக்கு காட்டு யானைகள் மீது மட்டும் அக்கறையில்லையா என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வினவுகிறார்கள். ஆன்மிகத்தைவிட, கல்வியை விட உயிர்வாழ்தல் மிகவும் முக்கியம். காட்டுக்குள் இருக்கவேண்டிய யானைகளை பழக்கி கோயில் யானைகளாக்கி ஊருக்குள் வாழும் யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு வாரம் மட்டும் காட்டை கண்ணில் காட்டுவதும், காட்டு யானைகள் தங்கள் நிலப்பகுதியை இழந்து ஊருக்குள் வருவதும் இங்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய விநோதங்கள்.

கோவையின் ரம்மியமான குளிர்க்காற்றுடன் கூடிய இதமான வானிலையை அனுபவித்துக் கொண்டாடுவதற்காக ஆன்மிக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும், ரியல் எஸ்டேட்காரர்களும் குவிந்ததில் மூச்சு திணறுவது கோவையின் சூழல் மட்டுமல்ல. இயற்கையான காடுகளும் விலங்குகளும் மனிதர்களும்தான்.


List of Institutions violated the rules by not getting NOC for constructions (Got through RTI dated 22.01.2013)

1.
Karunya University, Coimbatore – 641 114
Got for one part
2
Evangeline Matriculation Higher Secondary School, Coimbatore - 641114
Did not get NOC
3
Karunya International Residential School, Coimbatore - 641114
Did not get NOC
4
Chinmaya International Residential School, Coimbatore – 641114
Did not get NOC
5
Isha Yoga Center, Velliangiril Foothills, Coimbatore - 641114
Did not get NOC
6
Isha Home School, Velliangiri Foothills, Coimbatore
Did not get NOC
7
Isha Vidhya Matriculation School, Sandegoundenpalayam, Coimbatore – 641 109
Did not get NOC
8
Tamara Resorts, Perumal Kovil pathy, Coimbatore - 641101
Did not get NOC
9
Guruvayurappan Institute of Management, Navakkarai, Coimbatore – 641105
Did not get NOC
10
SAN International Business School, Mavvuthampathy, Coimbatore – 641105
Applied
11
AVC – Saranya, Arya Vaidya Pharmacy, Mavuthampathy, Navakarai, Coimbatore – 641105
Did not get NOC
12
Sri Venkateswara College of Computer Applications and Management, Ettimadai, Coimbatore – 641105
Did not get NOC
13
Kovail Hills Golf and Country Club, Integrated Feeder Township, IT SEZ, by RAKINDO developers Pvt. Ltd, Perur Chettipalayam village
Did not get NOC
14
V.L.B. Janaki ammal college of Engineering and Technology, Kovaipudur, Coimbatore – 641 042
Did not get NOC
15
V.L.B. Janakiammal Polytechnic College, Kovaipudur, Coimbatore – 641 102
Did not get NOC
16
Satchidanda Jothi Nikethan, Kallar, Mettupalayam – 641 305
Refused NOC
17
Black Thunder Theme park private Limited, Odanthurai Village, Mettuppalayam – 641 305
Did not get NOC
18
Avinashilingam University For Women, thadagam post, Coimbatore – 641 108
Applied
19
Kari Kubel Instititue for Development Education, Mangarai, Coimbatore – 641 108
Did not get NOC
20
Ayurveda Hospital & Arya Vaidya Pharmacy Training, Mangarai, Coimbatore – 641 017
Did not get NOC