Tuesday, December 24, 2013

விதிகளுள் அடங்குமா காதல்?

"எல்லோரும் நினைப்பதுபோல என் உடல் பெண் தன்மையுடன் இல்லை. ஆண் உடல்தான். ஆனால் பெண்கள்பால் ஈர்ப்பில்லை. ஆண்களின்பால் ஈர்க்கப்படுகிறேன். அவ்வளவுதான்” என்கிறார் 38 வயதாகும் விநோத் பிலிப். 

”கல்லூரி காலத்தில் என் தோழி ஒருத்தி தன் சமபாலின ஈர்ப்பு குறித்து வெளியே சொல்ல முடியாமல் தன் கேர்ள் பிரண்ட்டுடன் தான் வெளியே சென்றதை பாய் பிரண்டுடன் சென்றதாக மாற்றி எங்களிடம் சொல்வாள்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த லெஸ்பியன் ஒருவர். இப்படித்தான் அவர்களை வைத்திருக்கிறது சமூகம். ஏற்கனவே அவர்களை வித்தியாசமானவர்களாக பார்க்கும் போக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மேலும் நிலைமையை மோசமாக்கியுள்ளது. சென்னையைப் பொருத்தவரை 7,000 பேருக்கு மேல் சமபாலின ஈர்ப்பு கொண்டவர்கள் உள்ளதாக அவர்கள் டிசம்பர் 15 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு அவர்களை வெகுண்டெழச் செய்திருக்கிறது. சமபாலின ஈர்ப்பு என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

இவை ஒரு பக்கமிருந்தாலும் இத்தீர்ப்பு சென்னை மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளில் வாழும் சமபாலின ஈர்ப்பு கொண்டவர்களை அச்சம்கொள்ள வைத்திருக்கிறது. “முன்பெல்லாம் வாரத்துக்கு ஐம்பது அழைப்புகள்வரை கவுன்சிலிங் மையத்துக்கு வரும். தீர்ப்புக்குப் பின் இரண்டு மூன்று அழைப்புகளாக குறைந்திருக்கின்றன. நிலவும் அச்சத்தையே இது காட்டுகிறது” என்கிறார் சமபாலின ஈர்ப்புடைய ஆண்களுக்கான சென்னை தோஸ்த் அமைப்பைச் சேர்ந்த விக்ராந்த் பிரசன்னா. சென்ற ஆண்டு சமூக ஊடகங்களில் பலரை தொடர்புகொண்டு அவர்களை தனியே வரச்செய்து படங்கள் எடுத்து அதை வைத்து அவர்களை மிரட்டுவது தொடர்பான புகார்கள் பல வந்ததாகவும் இப்படிப்பட்ட பிளாக் மெயில்கள் இனி அதிகரிக்கும் என்கிறார் விக்ராந்த். கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தங்களின் பாலியல் ஈர்ப்பை அறிந்துகொண்ட சக மாணவர்கள் தங்களை தவறாக பயன்படுத்துவதை புகாராக சொல்பவர்கள் உண்டு. இனி அப்படிப்பட்ட புகார்களை வெளிப்படையாக தர யாரும் முன்வரமாட்டார்கள்என்று பல விளைவுகளை அடுக்குகிறார் விக்ராந்த்.

இத்தீர்ப்பு மூலம் விவாகரத்துகள் பெருக வாய்ப்புண்டு. ஏனெனில் தண்டனைக்குரிய குற்றத்தில் ஈடுபட விரும்பாமல் தங்கள் இயற்கைக்கு மாறாக ஒருவரை மணந்துகொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக விவாகரத்துகள் அதிகமாகக்கூடும். அத்துடன் தங்கள் பிள்ளை சமபாலின ஈர்ப்புடைய பிள்ளை தனக்கிருக்கிறது என்பதையே அவமானமான நினைக்கும் பெற்றோர் இப்போது அவர்களை சட்டப்படியான குற்றவாளியாகப் பார்க்கத் தொடங்குவதால் அவர்கள் மீதான வன்முறை அதிகரிக்கும். குறிப்பாக லெஸ்பியன் பெண்களுக்கு இதில் பிரச்சனைகள் அதிகம். “திருமண வாழ்வில் பெண்மீது வன்முறை செலுத்தும் ஆணுக்கு எதிராக குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் புகார் அளித்தால், கணவன் மிக எளிதாக அவளை லெஸ்பியன் என்று சொல்லி குற்றவாளியாக்கி தான் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இது பெற்றோருக்கும் பொருந்தும். எஸ்.சி/எஸ்.டி. சட்டம், சிறுபான்மையினருக்கான சட்டங்கள் இப்படி எல்லா சட்டத்தின்படியும் புகார் தந்தால் எளிதாக இப்படியொரு குற்றச்சாட்டைச் சொல்லி எதிர்புகார் தரலாம். மேலும் காவல்துறை இதைவைத்து எப்படிவேண்டுமானாலும் பணம் பார்க்கும்” என்கிறார் பெண்ணிய செயற்பாட்டாளரான அனுஷா. 

சென்னையில் இச்சமூகத்தின் நிகழ்வுகளுக்கு பெரிதாக கார்ப்பரேட் நிறுவனங்கள் விளம்பரதாரராக இருப்பதில்லை. ஏனெனில் இங்குள்ள இச்சமூகத்தினர் அதை விரும்பவில்லை என்கிறார் அனுஷா. ஆனால் பல பன்னாட்டு நிறுவனங்களில் ஏராளமான சமபாலீர்ப்பு கொண்டவர்கள் பணியாற்றுகிறார்கள். அத்தகைய நிறுவனங்களுக்கு உலகளாவிய கொள்கைகள் இருப்பதால், அவர்களுடைய வேலைக்கு நிறுவனத்தால் ஆபத்து ஏதும் ஏற்படாது. ஆனால், சக பணியாளர்கள் இந்தியர்களே எனும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் இவர்களை அசூயையாக பார்க்ககூடும். இது அவர்களுக்கு பணியாற்றும் இடத்தில் பெரும் உளவியல் நெருக்கடியைத் தரக்கூடும். ”இந்த நெருக்கடி தற்கொலைகளுக்கும் கூட இட்டுச்செல்லும் ஆபத்துள்ளது” என்கிறார் அனுஷா. அத்துடன் வருங்கால வைப்பு நிதிக்கான நியமனதாரராக சமபாலின துணை ஒருவரை ரத்த சம்பந்தம் இல்லாத உறவாக இருந்தாலும் கொடுக்க முடிந்தது. ஆனால் இத்தீர்ப்புக்குப் பின் நிறுவனங்கள் அதையும் ஏற்காது.

தமிழகம் முழுவதுமிருந்து வீடுகளைவிட்டு வெளியேறி வருபவர்கள் தங்க என்று பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை. நண்பர்களின் வீடுகளில்தான் இவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். இனி அப்படித் தங்கவைக்கவும் பலர் யோசிக்கக்கூடும். சட்டப்படி இவர்களுக்கான ஒரு தங்குமிடத்தை ஏற்படுத்துவதும் முடியாது எனும்போது அவர்கள் போக்கிடம் இன்றி தவிக்க நேரிடும் என்று இச்சமூகத்தினர் அச்சப்படுகின்றனர். இந்தத் தீர்ப்புக்கு முன்னர், சட்டத்தில் கூட ஆண்களைப் பற்றிய குறிப்புகள் இருக்குமே தவிர லெஸ்பியன் பெண்கள் பற்றிய குறிப்புகள் இல்லாமலிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் பெண்களையும் இணைத்தே சொல்லப்பட்டிருக்கிறது என்பதால் லெஸ்பியன் பெண்களுக்கான கட்டாயத் திருமணங்கள் அதிகரிக்கும். அவர்களின் மணவாழ்க்கையும் பாழாகும் என்பது இவர்களின் வாதம். பல ஜோடிகள் பிரிந்துவிடும் அபாயமும் உண்டு. குறிப்பாக தன் ஈர்ப்பைச் சொல்லவும் அஞ்சும் தன்மை இனி வந்துவிடும். இருபாலின ஈர்ப்பாளர்களுக்கும் (Bi-sexual) சமபாலின ஈர்ப்ப்பாளர்களுக்குமான உறவு முற்றிலும் உடைந்துபோகும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் இருபாலின ஈர்ப்பாளர்களுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. வசதியுடையவர்கள் சமபாலின ஈர்ப்பு அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் சென்று குடியேறக்கூடும். ஆனால் வாய்ப்பற்றவர்களின் நிலைமைதான் கேள்விக்குறி.

ஓரினம்.நெட் என்கிற இணையதளத்தின் ஒரு தன்னார்வலராகவும் பயோமெடிக்கல் அறிவியல் மருத்துவரான டாக்டர் ராமகிருஷ்ணனிடம் பேசியபோது ”. எச்.ஐ.வி தடுப்புக்கான ஆணுறைகளை வழங்குவது, பாதுகாப்பு வழிமுறைகள் தருவது என்று சமூகத்தினர் மத்தியில் வந்து சொல்லித் தந்த சுகாதார பணியாளர்களுக்கு இனி வேலை இல்லை.சர்வதேச எய்ட்ஸ் சொசைட்டி இந்திய குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றத்தீர்ப்புமீதான தன் அதிருப்தியை கடிதம் மூலம் தெரிவித்திருக்கிறது” என்கிறார். 

பிறப்பால் உடலால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் உள்ளவர்கள் திருநங்கைகள். அதுபோலவே பிறப்பால் உடலால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் உள்ளவர்கள் திருநம்பிகள். ,அத்தகைய ஒரு திருநம்பியான ஜோவின், "என் வீட்டிலுள்ளவர்கள் நான் பிறப்பால் பெண் ஆனால் எண்ணத்தால் ஓர் ஆண். பெண் மீதுதான் எனக்கு விருப்பம் வருகிறது. அதனால் நான் திருநம்பி என்று புரிந்துகொண்டனர். ஆனால் இனி என்னைப் போல வீட்டில் தன்னைக் குறித்து வெளிப்படுத்தும் ஒருவரை சமபாலின ஈர்ப்பாளர் என்று புரிந்துகொள்ளக்கூடும்  ஒருவேளை சட்டத்துக்கு பயந்துதான் திருநம்பி என்று பொய் சொல்வதாக சந்தேகம் வரக்கூடும். இது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கப்போகிறது. திருநங்கைகளையும் இப்படித்தான் சந்தேகப்படுவார்கள்” என்கிறார் ஜோவின். 

நிறங்கள் அமைப்பைச் சேர்ந்த சங்கரி. “பொதுச்சமூகத்தை நோக்கி நான் ஒன்று கேட்க விரும்புகிறேன். எங்கள் எல்.ஜி.பி.டி.(LGBT - Lesbian Gay Bi-sexual and Transgenders) சமூகம் வெளியே வந்து வெளிப்படையாக போராடுகிறது. பொதுச்சமூகம் என்கிற பெயருக்குள் எத்தனை சமபாலின ஈர்ப்புகொண்டவர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். வெளியில் வந்து போராட தைரியம் இல்லாதவர்கள். ஆசனவாய் புணர்ச்சி, வாய்வழி புணர்ச்சி என்பதெல்லாம் கணவன் - மனைவிக்கு இடையில் கூட தவறு என்று சொல்கிறது இத்தீர்ப்பு. இதை எதிர்த்து போராட நீங்கள் யாரும் முன்வரமாட்டீர்களா? ” என்று கொதிப்புடன் கேட்கிறார். தமிழகத்து சம்பாலின ஈர்ப்பாளர்களை வைகோவின் அறிக்கை புண்படுத்தியிருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. “அவர்களை ஈனப்பிறவிகள் என்று சொல்லும் வைகோ அவர்களின் வாக்குகள் வேண்டாம் என்று சொல்லட்டும் பார்க்கலாம். சுயமரியாதை, பெரியார் என்று சொல்லும் அவர் மீதிருந்த மதிப்பு  குறைந்துவிட்டது” என்கிறார் செயற்பாட்டாளர் ஸ்ரீஜித்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? “இது பொதுப்பட்டியலில் இருப்பதால், மத்திய அரசோ மாநில அரசு இதில் திருத்தங்கள் செய்யலாம்.எப்படி இந்து திருமணச் சட்டத்தில் தமிழகத்தில் மட்டும் சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடி ஆகுமென திருத்தம் கொண்டுவரமுடிந்ததோ அதே முன்னுதாரணத்தைக்கொண்டு தமிழகத்தில் மட்டும் திருத்தம் கொண்டுவரலாம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத்தலைவருக்கு அனுப்பினால் அவர் அனுமதி தரலாம். தரவில்லையென்றாலும் மீண்டும் தீர்மானம் இயற்றி அனுப்பினால் அவர் ஒப்புதல் தந்துதான் ஆகவேண்டும். இந்த ஒரு வழி இருக்கிறது” என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம். இப்போதைக்கு தமிழகத்தில் இந்தத் திருத்தம் வரவேண்டுமென எல்.ஜி.பி.டி. சமூகத்தினர் முதல்வரிடம் கோரிக்கை வைத்துக் காத்திருக்கிறார்கள். 

(நன்றி : இந்தியா டுடே)

யார் வகுத்த விதியில் 
எங்கள் காதல் அடங்கும்
எந்த மேகலையின் சுரபியில்
மனத்தீ அடங்கும்

- இன்குலாப்

Tuesday, December 10, 2013

பேரறிவாளன் : தூக்கிலடப்படவேண்டுமா?

மரணத்தின் அறைக்குள் தள்ளி அவரை தூக்குக் கயிற்றுக்காக காத்திருக்கச் செய்தது சட்டம்.   பட்டயப்படிப்பு முடித்திருந்த அந்த இளைஞருக்கு ஒருபோதும் சட்டம் பழிவாங்கும் என்று அதற்கு முன் அறிந்தவரில்லை. சட்டத்தைக் காப்பவர்களே தங்கள் பேனாவை தவறாக பயன்படுத்தி, வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையே ஊசலாடச் செய்வார்கள் என்று அறிந்திருக்கவில்லை. அந்த இளைஞர் பேரறிவாளன் என்கிற அறிவு.
தூக்குதண்டனை பெற்றபின் கடந்த 14 ஆண்டுகளாக, தூக்குக் கொட்டடிக்கு அழைத்துப் போகும் கால்கள் தன் சிறைக் கம்பிகளுக்கு வெளியே ஒருவேளை வந்துநிற்கக்கூடுமோ என்கிற எண்ணத்துடனேயே ஒவ்வொரு காலையும் விடிகிறது. 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ராஜீவ் காந்தியை வெடிகுண்டு மூலம் கொன்ற சிவராசனுக்கு பேட்டரி வாங்கித் தந்ததற்காக கைது செய்யப்பட்டவர்.


ராஜிவ் காந்தியும் இன்னும் 18 பேரும் தனு என்கின்ற மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட அதே நேரம் அறிவும் அவருடைய நண்பர்களும் திரையரங்கம் ஒன்றில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.  அப்போது விடுதலைப் புலிகளால் கவரப்பட்டிருந்த பல தமிழ் இளைஞர்களில் அறிவும் ஒருவர். ராஜிவ்காந்தியை கொல்ல திட்டமிட்டு சென்னையில் தங்கியிருந்த சிவராசனுடன் அறிவுக்கு பழக்கம் இருந்தது.  ஆனால் அந்த பேட்டரிகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பது அறிவுக்கு தெரியாது. 

ஆறு மாதங்களுக்கு முன்னால், சிறைக் காவலர்கள் பேரறிவாளனிடம் ஒரு கடிதத்தை அளித்தனர்.  ”என்னை மரண தண்டனையிலிருந்து விடுவிக்க தன்னாலான சட்டரீதியான உதவிகளைச் செய்வதாகவும் தன்னை வழக்கறிஞர்கள் மூலம் தொடர்புகொள்ளும்படியும் அக்கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. கீழே தியாகராஜன், ஐபிஎஸ். என்று கையொப்பம் இருந்தது.. என் வாக்குமூலத்தை பதிவு செய்த அதே தியாகராஜன் தான் இவர் என்பது உறைக்கவில்லை. ஒரு வாரம் கழித்து நன்றி கடிதம் எழுத அமர்ந்தபோது இந்தக் கையொப்பம் மிகவும் பழக்கமானதாய் இருக்கிறதே என்று யோசித்தபோது சட்டென்று நினைவுக்கு வந்தது. உடனடியாக வழக்கறிஞர்களை அனுப்பினேன்” என்று வேலூர் சிறையில் அவரைக் காணச் சென்றபோது இந்தியா டுடேயிடம் கூறினார்.

அப்போது சிபிஐ அதிகாரியாய் இருந்த அவர் அறிவுடைய வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்து சமர்ப்பித்துவிட்டதாக வழக்கறிஞரக்ளிடம் தெரிவித்தார் தியாகராஜன். பனி ஓய்வு பெற்றபின் பின்னாளில் மன உறுத்தல் ஏற்பட்டு செய்த தவறுக்கு பரிகாரம் தேட விரும்புவதாகவும் கூறினார்.

அதே சமயம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நிறுவிய மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கம் மரண தண்டனை எதிர்ப்புக்கான ஓர் ஆவணப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தது.  அந்தப்படத்துக்காக தியாகராஜ கேமிராவின் முன் நின்று உண்மையைச் சொல்ல தயாராய் இருந்தார். பேரறிவாளன் வாக்குமூலத்தை நான் தான் பதிவு செய்தேன். சட்டப்படி வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பதிவு செய்யவேண்டும். ஆனால் பொதுவாக நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. ’9 வால்ட் பேட்டரியை நான் தான் வாங்கித்தந்தேன். ஆனால் அது என்ன காரணத்துக்கு பயன்படப்போகிறது என்று எனக்குத் தெரியாது’ என அறிவு கூறினார். எதற்காக பயன்படப்போகிறது என்பது தெரியாது என்கிற பகுதியை மட்டும் நீக்கிவிட்டு வாக்குமூலத்தை பதிவு செய்தேன். நான் அதை பதிவு செய்திருந்தால் வழக்கின் போக்கு திசை மாறியிருக்கும்” என்கிறார் தற்போது ஒடிஷாவில் பிஜூ பட்நாயக் காவல்துறை அகாடமியில் பணியாற்றும் தியாகராஜன்.இந்தியா டுடே தொடர்புகொண்டு அன்றைக்கு அப்படி செய்வதற்கான நிர்பந்தங்கள் இருந்தனவா என்று கேட்டபோது மறுத்தார். ‘’எனக்கு அழுத்தங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஒரு வழக்கு அதன்போக்கில் போய்க்கொண்டிருக்கும்போது அதற்கு எதிர்மறையான ஒரு விஷயத்தை செய்யக்கூடாது என்று எண்ணும் காவல்துறை அதிகாரியாக அன்றைக்கு இருந்தேன். சரியாகச் சொல்வதானால் எனக்கு அன்றைக்கு தர்ம சங்கடமான நிலைமை. ஒப்புதல் வாக்குமூலம் என்பதே குற்றத்தை ஒப்புக்கொள்வதுதான். ஆக, எதற்கு பேட்டரி என்று எனக்குத் தெரியாது என்று அறிவு கூறியதை எழுதினால், அதில் குற்றமில்லை என்றாகும். ஆகவே இந்த விஷயத்தை நான் விட்டுவிட நினைத்தேன். அறிவுக்கு சாதகமாகவும் இல்லாமல் பாதகமாகவும் இல்லாமல் இப்படி பதிவு செய்தேன். ‘பேட்டரியை நான் தான் வாங்கித்தந்தேன்’ என்பதோடு நிறுத்திக்கொண்டேன். காரணம் தெரியும் என்றோ தெரியாது என்றோ நான் எழுதவில்லை.” என்றவர் மேலும் தொடர்கிறார்.” ஒரு வித மொழிமயக்கம் வரும் வகையில்தான் அதை நான் எழுதியிருந்தேன். அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும்போது, எப்படி வேண்டுமானலும் பொருள் கொள்ளலாம். இது புலன்விசாரணையின் முக்கிய சான்றாக மாறிவிட்டது அதன் அடிப்படையில்தான் தண்டனைகள் வழங்கப்பட்டன.. காவல்துறை விசாரணைக்கு உண்மையாக இருக்கவேண்டுமா அல்லது சட்டப்படி வரிக்கு வரி எழுதவேண்டுமா என்கிற தொழில் சார்ந்த தடுமாற்றம் வந்தபோது இந்தத் தவறு நேர்ந்தது.” என்கிறார்.

இன்னொரு விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் தன் புத்தகம் ஒன்றில் விசாரணை சரியாக நடைபெறவில்லை என்று கூறியிருந்தார். இப்போது ரகோத்தமனிடம் தியாகராஜனின் கருத்து குறித்து கேட்டபோது ‘’தியாகராஜன் கூறுவது சரியல்ல. பல்வெறு விஷயங்களை வைத்துத்தான் நாங்கள் பேரறிவாளன் குறித்து ஒரு முடிவுக்கு செய்தோம். குறுக்கு விசாரணையின்போதோ அல்லது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலோ இதை தெரிவிக்காமல் இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படி கூறுவதற்கு எந்த சட்ட மதிப்பும் கிடையாது.. வழக்கு என்பது முடிந்து போன விஷயம்” என்கிறார் ரகோத்தமன். 

சிபிஐ விசாரணைக்கு தலைமை தாங்கிய டி.ஆர். கார்த்திகேயன் “இது மிகவும் அபத்தமானது. மறுவிசாரணை என்பதற்கு வழி கிடையாது. அப்படி ஒன்று நடக்குமானால் சிறிய விஷயங்களில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் இந்திராகாந்தி, மகாத்மா காந்தி படுகொலை வழக்குகளையும் மீண்டும் விசாரிக்கச் சொல்லி கேட்பார்கள். தியாகராஜனுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டது. பெறப்பட்ட வாக்குமூலங்கள் பல முறை சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 3 திறமையான நீதிபதிகள் நியாயமான தீர்ப்பு வழங்கியுள்ளனர். அரசியல் செய்ய நினைக்கிறார்கள்” என்கிறார். 

குறுக்கு விசாரணையின்போது யாருமே அறிவின் வாக்குமூலம் குறித்த குறிப்பான கேள்வியை தன்னிடம் கேட்கவில்லை என்கிறார் தியாகராஜன். “இக்கேள்வி என்னிடம் கேட்கப்படவே இல்லை. உண்மையில் வாக்குமூலத்தில் அறிவு சொன்னதை எழுதாமல் விட்டது குறித்த கேள்வி என்னிடம் கேட்கப்படும் என்று நான் எதிர்ப்பார்த்திருந்தேன்.” என்கிறார்.

பேரறிவாளனின் வழக்கறிஞர் பிரபுவிடம் இந்தியா டுடே கேட்டபோது “தடா சட்டத்தின் கோளாறு இதுதான். தடா சட்டத்தின்கீழ் இந்த வழக்கு நடந்தது. 313 பிரிவின்படி எழுப்பப்படும் கேள்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஆம்/இல்லை என்றுதான் பதில் அளிக்க அனுமதிக்கப்படுவார். ஆகவே வேறு எதுகுறித்தும் நீதிமன்றத்தில் பேச வாய்ப்பே இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு அதன் அடிப்படையிலேயே வழக்கு நகர்ந்தது. அப்போது அந்த வாக்குமூலத்தையே யாரும் கேள்வி கேட்க தடாவில் இடமே இல்லை.” என்கிறார்.சரி. வழக்கு முடிந்துவிட்ட நிலையில் தியாகராஜனின் இப்போதைய கருத்து எப்படி எடுத்துக்கொள்ளப்படும்? “Dead man walking theory என்று ஒரு தியரி உண்டு. அதாவது ஒரு மனிதன் இறந்துவிட்டான் எனக்கருதி இவன் தான் கொன்றான் என்று இன்னொருவனையும் சிறைக்கு அனுப்பிவிட்டபின் பத்தாண்டுகள் கழித்து இவ்வளவுநாள் நான் வெளிநாட்டில் இருந்தேன் என்று கொல்லப்பட்டதாக கருதப்பட்டவன் வந்து நிற்பான். அப்போது உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருந்தாலும் அதை மறுபரீசலனை செய்யவேண்டுமில்லையா? உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது என்பதற்காக சிறைவாசம் அனுபவிக்க முடியுமா? இப்படியான மறுவிசாரணை முறைகள் ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உண்டு. அப்படி ஒன்றை இங்கும் ஏற்படுத்தவேண்டும்.” என்கிறார். 

“அது மட்டுமல்லாமல். ராஜீவ் கொலைச் சதி குறித்து விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட Disciplinary Monitoring Agency (MDMA) இன்னமும் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. மே 7ம் தேதி சிவராசனுக்கும் பொட்டுஅம்மானுக்குமான உரையாடலில் சிவராசன், தனு, சுபா தவிர வேறு யாருக்கும் விஷயம் தெரியாது என்று கூறியபின், மறுநாளிலிருந்து சம்பவம் நடந்த 21ம் தேதி வரை வேறு யாருக்கெல்லாம் விஷயம் தெரியவந்தது என்பது குறித்த விசாரணை ஏன் நடத்தப்படவில்லை என்று சிபிஐயிடம் கேட்கிறது MDMA.. சிபிஐ இதற்கு இன்னும் பதில் அளிக்கவில்லை. இப்படி விடுபட்ட பகுதிகளை விசாரிக்கவேண்டுமென கோருகிறோம். இந்த MDMA விசாரணையில் தியாகராஜனை சேர்க்கவேண்டும்.” என்கிறார்.

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய கே.டி.தாமஸை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது சட்டம் தவறு செய்துவிட்டது என ஒப்புக்கொண்டார். “ நானும் மற்ற நீதிபதிகளும் ராஜீவ் காந்தி கொஅலை வழக்கின் இறுதித்தீர்ப்பை அளிப்பதற்கு முன்னால் எங்கள் கையிலிருந்த அத்தனை விவரங்களையும் சரிபார்த்துவிட்டுத்தான் அளித்தோம். ஆனால் விசாரணை அதிகாரி ஒருவர் முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு மாறாக இப்போது கூறியதாகச் சொல்கிறீர்கள். விசாரணை அதிகாரியும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டவர் என்பதை நினைவில் வையுங்கள். பல முறை குறுக்கு விசாரணை செய்யப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் தன்னுடைய கருத்தில் உறுதியாய இருந்துவிட்டு பின்னாளில் அவர் எப்படி மாற்றிச் சொல்ல முடியும்?. ஆனால் சட்டப்படி சாத்தியமில்லை என்பதால் எந்த நீதிமன்றமும் இதை அனுமதிக்காகது. இப்போது நான் சொல்ல விரும்புவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் தூக்கிலிடப்படக்கூடாது. ஆனால் 14 ஆண்டுகள் அவர்கள் ஆயுள் தண்டனைக்கு ஈடான சிறை தண்டனை அனுபவித்துவிட்டனர். தினம் மரணத்தை எதிர்ப்பார்த்திருக்கின்றனர். இப்போது எப்படி அவர்களை தூக்கிட முடியும்? சட்டப்படி ஒருவருக்கு ஒரு குற்றத்துக்கு இரு தண்டனை கூடாது என்பது என் கருத்து. அரசியல் சட்டப் பிரிவு 21 படி இது தவறு. அவர்கள் மூவரும் விடுதலை செய்யப்படவேண்டும்” என்கிறார்.

கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே மூவர் தூக்கை நிறுத்த நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. 2011 ஆகஸ்டில் இவர்களின் கருணை மனு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நிராகரித்தபின் செப் 9 2011 என்று தூக்குக்கு நாள் குறிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் இவர்களின் மனு நிலுவையில் உள்ளது. 

கருணை மனுவை பைசல் செய்ய 11 ஆண்டுகள் ஆனதால் தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்று மூவரும் கோரினர். ஒருவேளை தேர்தலுக்கு முன்னால் மூவரின் மனுக்களும் தள்ளுபடியானால் என்ன நடக்கும்? புல்லரின் கருணை மனுவை இந்த ஆண்டு ஏப்ரலில் தள்ளுபடி செய்தது.  8 ஆண்டுகள் கழித்து அவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ”இது நடந்து 7 மாதங்கள் ஆனபின்னும் புல்லர் தூக்கிலிடப்படவில்லை. இது சட்ட விவகாரம் மட்டுமல்ல. நடைமுறை அரசியலும் உள்ளது. ஆகவே தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மூவரின் மனுக்களும் இதேபோல தள்ளுபடி செய்யப்பட்டால் இவர்களின் கதி என்ன என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை” என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே. ராஜேஷ் குப்தா.

இவ்வளவும் நடக்கும்போது தியாகராஜனுக்கு தன் மனசாட்சி உறுத்தியதையும் நெருடலையும் தாங்க முடியவில்லை என்கிறார். ”அறிவுக்கு மரண தண்டனை கிடைக்கும் என நான் நினைத்தே பார்க்கவில்லை. நெருடலாகவும் மனம் அமைதியில்லாமலும் இத்தனை ஆண்டுகள் இருந்தது. அவருக்கு நாள் குறிக்கப்பட்டதும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களை உற்று கவனித்து வந்தேன். ஏதாவது ஒரு வகையில் இந்த மரண தண்டனை இல்லாமல் போய்விடாதா என்று பார்த்தேன். புல்லரின் கருணை மனு நிராகரிக்கப்பட்டப்பட்டு, இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததாலேயே தூக்கிலிடக்கூடாது என்று கூற முடியாது என்று மனு தள்ளுபடி ஆனவுடன் நான் இப்போதாவது பேசியே ஆகவேண்டும் என்று நினைத்தேன்.  ஒருவேளை தானாகவே அறிவுக்கு ஆயுள் தண்டனை கிடைத்திருந்தால் கூட நான் வாயைத் திறந்திருக்கமாட்டேன். பணி ஓய்வுக்குப் பிறகு எனக்கு பேச்சு சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அதை பயன்படுத்திக்கொள்கிறேன். நான் பேசுவதால் என்னுடைய நேர்மை, சிபிஐ, நீதித்துறை, காவல்துறை என்று அனைத்தும் களங்கப்படும் என்று தெரியும். அதன் விளைவுகளும் தெரியும். அதனால்தான் மௌனம் காத்தேன். ஆனால் இனியும் முடியாது என்பதால் பேசினேன்” என்கிறார் தியாகராஜன்.

*

சட்டப்படி இனி என்ன நடக்கும் என்றெல்லாம் விவாதங்கள் எங்கெங்கும் நடந்துகொண்டிருக்க, சென்னையில் குடியிருக்கும் 66 வயதான அந்தத் தாய் மட்டும் வாராவாரம் சென்னையிலிருந்து வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு தன் மகனுடன் சில மணித்துளிகளாவது பேசுவதற்காக வந்து போகிறார். ஏதாவது அதிசயம் நிச்சயம் நிகழும் என்று நம்புகிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள். ”22 ஆண்டுகளாக சிறைக்கும் வீட்டுக்குமாய் பயணம் செய்திருக்கிறேன். வாராவாரம் என் மகனை போய் பார்த்துவிடுவேன். இத்தனை ஆண்டுகளில் பத்து முறைதான் அறிவை பார்க்காமல் இருந்திருக்கிறேன். எனக்கு சட்டம் தெரியாது. ஆனால் என் கண்ணீருக்கு இன்றைக்கு தியாகராஜன் மூலம் ஒரு விடிவுகாலம் பிறந்திருக்கிறது. அவன் விடுதலை ஆவான். அவனுக்காக காத்திருக்கும் எங்கள் வீட்டுக்குள் அவன் நுழைவான் என்று நாங்கள் காத்திருக்கிறோம்.” என்கிறார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள்.

வேலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்துக்குள் நுழைந்து வாயிலை நெருங்க நெருங்க. சிறைவாசிகள் தங்கள் உறவினர்கள் நண்பர்களுடன் உரையாடும் சத்தம் பலமாகக் கேட்டது. சிறைக்கதவுகள் மெல்ல திறக்க உள்ளே நுழைந்தவுடன் கையிலிருக்கும் பணம் மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் காவலர்களிடம் ஒப்படைத்தவுடன் அந்த அறைக்குள் சென்றேன். ஒரு நீண்ட மேஜையின் ஒரு முனையில் ஒரு காவலர் வயர்லெஸ் கருவியுடன் அமர்ந்திருக்கிறார். மறுமுனையில் சிறைவாசிகளுக்கான வெள்ளை உடையில் அமர்ந்திருந்தார் பேரறிவாளன். புன்னகையுடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்டார் அறிவு.

“என்னை பூஸ்டர் என்றுதான் அழைப்பார்கள். நான் வாலிபால் ப்ளேயர். உங்களுக்குத் தெரியுமா? வைகோவை கைது செய்து இங்கே வைத்திருந்தபோது அவர் பூஸ்டராக என் எதிரணியில் இருப்பார்” என்று சிரிக்கிறார். 

”சக சிறைவாசிகள் எல்லோரும்..அண்ணே! விடுதலை ஆகப்போறீங்க என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என்னைப் பார்க்கவரும் நண்பர்கள் ‘உன் சுதந்திரம் போய்விட்டது. நீ நினைத்த இடத்துக்குச் செல்ல முடியவில்லை. உன் இளமைக்காலத்தை சிறை தின்றுவிட்ட்து. அடைபட்டுக் கிடக்கிறாய்’ என்றெல்லாம் வருந்துவார்கள். ஆனால் எனக்கு அதிலெல்லாம் வருத்தமில்லை. பேரறிவாளன் எதையாவது சொன்னால் மக்கள் நம்பவேண்டும். ‘அவனா? அவன் ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்றவனாச்சே?’ என்று சொல்வது மாதிரி கொடுமை எதுவுமில்லை. என் நம்பகத்தன்மையும் ஒரு குடிமகனாக என்னுடைய சிவில் உரிமைகள் பறிபோவதும்தான் என்னுடைய வருத்தம்” என்கிறார். இதையும்கூட புன்னகையுடன் தான் கூறுகிறார் அறிவு.

“கவிதைகள் எழுதுவதுண்டு. இலக்கியவாதி ஆகவேண்டும் என்பதற்காக கவிதை எழுதும் நிலையில் நான் இல்லை. மனப்போராட்டங்களை, கோபத்தையெல்லாம் கவிதையில் கொட்டிவைப்பேன். தவறு செய்தவன் தண்டனையை குறைக்கச் சொல்லலாம். தவறு செய்யாதவன் என்னை விடுதலை செய்யுங்கள் என்றுதான் கேட்கவேண்டும். ஆனால் எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால், தண்டனையை குறையுங்கள் என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு. கருணை மனு நீட்ட வைத்ததுதான் எனக்கு நேர்ந்த கொடூரமாக நினைக்கிறேன்.” என்றார்.

’’அறிவு..! நேரமாச்சு” என்கிறார் சிறைக்காவலர் ‘இதோ முடிச்சுக்குறேன் சார்” என்று சொல்லிவிட்டு மீண்டும் திரும்பி தொடர்கிறார். சிறைக்குள்ளிருந்தே இக்னோ பல்கலைக்கழகத்திலிருந்து பி.சி.ஏ. பட்டம் பெற்றிருக்கிறார் அறிவு. “கலையும் கல்வியும் இல்லையென்றால் நான் சிறைக்குள் எப்படி இருந்திருப்பேன் என்றே தெரியவில்லை. பாட்டு, நடனம், கீபோர்ட் என்று எல்லாவற்றிலும் ஆர்வம் உண்டு. எல்லாமும் சிறைக்குள் நடக்கும் நிகழ்ச்சிகளிலேயே செய்தாகிவிட்டது. இப்படி ஏதாவது சிறைக்குள்ளும் செய்துகொண்டிருப்பதுதான் என்னை துடிப்புடன் இருக்க வைக்கிறது.” என்று கூறிவிட்டு அறிவு மீண்டும் இருள் நிரம்பிய சிறைக்கூடத்தை நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கினார் .

(நன்றி : இந்தியா டுடே)

Friday, November 15, 2013

படிக்கக் கூடாத கடிதம்

அன்புள்ள பிரீதம்,

எனது அன்பு முத்தங்கள். நேற்றோடு 79 முறை சிறையில் கம்பிகளுக்கு அப்பால் இருந்து என்னை பார்த்துச் சென்றாய். இப்போது எந்த நாளையும் விட நேற்றைய தினம் உனது வருகை என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது. நேற்றோடு நமக்கு திருமணம் நடந்து 4 ஆண்டு கள் ஆகிவிட்டன. நமது திருமண நாளை நினைவுபடுத்தாமலேயே என்னை நீ பார்த்துச் சென்றாய். எனக்கு நினைவு இருந்த போதும் அதை உனக்கு சொல்லுகிற தைரியம் இல்லாத தால் நானும் உன்னிடம் பேசவில்லை. இனி மேல் அடிக்கடி நீ என்னை சிறையில் வந்து சந் திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.சிறைக்கு வந்த சில வாரங்கள், தினந்தோறும் நீயோ, நமது உறவினர்களோ என்னைப் பார்க்க வரவேண்டும் என்று நான் ஏங்கியிருக்கிறேன். சில நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரைச் சொல்லி என்னை சந்திக்க வேண்டுமென்று அவர்களிடம் வேண்டிக் கொள்ள உனக்குக் கூறி யிருந்தேன்.

உனக்கு நினைவிருக்கிறதா, வாரம் இருமுறை சந்திப்பதற்கு வாய்ப்பிருந்தும் போன ஆண்டின் ஒரு வாரத்தில் ஒரு நாள் நீ வராத போது நான் மிகவும் துடித்துப் போனேன். அடுத்த முறை சந்தித்த போது நான் அழுவதைப் பார்த்து என்னிடம் ஏன் என்று கேட்டாய்? நான் அதற்கு பதிலேதும் சொல்லவில்லை. அம்மா மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டிருந்ததையும் அவர்களோடு நீ இருந்ததையும் நீ எனக்குச் சொல்லவில்லை. ஆனால், பின்னர் வழக்கறிஞர் மூலம் அதை நான் தெரிந்து கொண் டேன். ஆனால், இப்போது நான் சிறையிலிருந்து வெளிவரும் வரை என்னைப் பார்க்க வராமல் இருந்தால் நல்லது என்று தோன்றுகிறது. என்னைப் போல இன்னும் 146 பேர் என் னோடு பணிபுரிந்தவர்கள் ஒரு வருடத்திற்கு மேலாக இந்த சிறைச் சாலைக்குள் தான் இருந்து கொண்டிருக்கிறோம். அவர்களில் பலரது அம்மா வோ, மனைவியோ அவர்களை வாரா வாரம் சந்திப்பதில்லை.

நிரந்தர வருமானமற்று போன தால் குழந்தைகளை படிக்க வைக்க, பெற் றோரை மருத்துவரிடம் கவனிக்க என்று எத்த னையோ செலவுகளுக்காக வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் சிறைச் சாலைக்கு வருவது என்பது ஒரு நாள் உணவை இழக்க வேண்டும் என்பதோடு இன்னொரு நாள் உணவுக்கான பணத்தை பயணத்தில் இழக்க வேண்டியிருக்கிறது.சிறையில் இருப்பவர்களுக்கு வெளியிலிருப் பவர்கள் அடிக்கடி பார்த்துவிட்டு செல்வது ஒரு மிகப்பெரிய ஆடம்பரம். என்னோடு வேலை செய்து இப்போது சிறையில் இருக்கிற இதர 146 பேரில் பலருக்கும் உறவினர்களை பார்க்கும் இந்த வாய்ப்பு இல்லாத போது அந்த ஆடம்பரத்தை நான் அனுபவிப்பது ஒரு அந்நியப்பட்டுப் போன உணர்வை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் அனைவரும் என்னைப்போலவே 25க்கும் 30க்கும் இடைப்பட்ட வயதினர். சிலருக்கு திரு மணமாகவில்லை. பலருக்கும் கைக்குழந் தைகள் இருக்கிறார்கள்.உனக்கு நினைவிருக்கும், சிறைச்சாலைக்கு வந்த சில நாட்களில் நீ என்னைப் பார்க்க வந்த போது மிகப்பெரிய தைரியத்தோடும் தெம்போடும் உனக்கு ஆறுதல் சொன்னேன். விரைவில் ஜாமீனில் வெளியே வந்துவிடுவேன். என் மீது போடப்பட்ட வழக்குகள் பொய் என்பதை நிரூபிப் பேன்.

பொய் வழக்குப் போட்டவர்களை சட்டத் தின் முன்னாள் நிறுத்துவேன் என்று உன்னிடம் கூறியிருந்தேன். நான் சிறைக்கு வரும் முன்பாக அந்த தொழிற்சங்கத்தில் நான் உறுப்பினர் இல்லை. அவர்கள் மீது எனக்கு வெறுப்பு இருந்த தும் கிடையாது. ஆனால், இன்று அந்த தொழிற் சாலையின் வாயிலுக்கு முன்னாள் ஓங்கி வளர்ந்த ஒரு கம்பத்தை நட்டு அதன் உச்சியில் பட்டொளி வீசி பறக்கும் சங்கத்தின் கொடியை பறக்கவிட்டு தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவது போல தொழிலாளர்கள் அனைவரும் தொழிற் சாலைக்கு செல்லும் முன் அதற்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று கனவு காண ஆரம் பித்திருக்கிறேன். இப்போது என்னுடைய ஒரே கனவாக அது மட்டுமே இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் (நான் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நிர் வாகம் என்னை அவர்கள் நிறுவனத்திலிருந்து டிஸ்மிஸ் செய்துவிட்டது) மனித வளத்துறை பொது மேலாளர் அவானிஷ் தேவ் இறந்து போன அன்றைய தினத்தில் எத்தனை பதற்றத்தோடு இருந்தேன் என்பதை நீ அறிவாய்.

எனது சொந்த சகோதரனை பறிகொடுத்தது போன்ற உணர்வில் நான் இருந்தேன்.அப்போது சங்கத் தலைவர்களாக இருந்தவர் கள் கூட அவரைப் பற்றி நல்லவிதமாகவே பேசி னார்கள். அவர் தொழிலாளர்களுக்கு ஆதரவான வர் என்பதால் நிர்வாகம் கூட அவர் மீது கோப மாக இருந்ததாக ஒரு பேச்சு உண்டு. இப்போது அவருடைய பிரதேப் பரிசோதனை அறிக்கை மர்ம முடிச்சுகளால் சூழப்பட்டிருக்கிறது. அவரை அடித்து கொன்று எரித்ததாக எல்லா பத்திரிகை களும் செய்திகள் வெளியிட்டன. நானும் கூட உண்மை என்று நம்பியிருந்தேன். இப்போது காலில் சில காயங்களைத் தவிர வேறு காயங்கள் உடம்பில் இல்லை என்றும் மூச்சுத் திணறல் மற்றும் தீக்காயங்களால் இறந்து போனார் என்றும் வெளிப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளைப் பற்றி எனக்குத் தெரியும். தொழில் தகராறுக்காக அவர்கள் யாரையும் கொல்லத் துணியமாட் டார்கள். அப்படி எல்லாம் நடந்தால் இந்த நிறு வனத்தில் எத்தனையோ கொலைகள் நடந் திருக்க வேண்டும். இந்த நல்ல மனிதரை கொல் வதற்கு நிச்சயம் தொழிலாளிகள் துணிந்திருக்க மாட்டார்கள்.நம் திருமணம் முடிந்து ஒரு வார காலம் முடிந்த பிறகு உனது வீட்டிற்கு விருந்திற்காக வந் திருந்தேன். உனது உறவுக்காரர்களை எல்லாம் அழைத்து வந்து உனது அப்பா பெருமை பொங்க எனது மருமகன் மாருதி சுசுகியில் வேலை செய்கிறார். அது ஒரு ஜப்பான் நிறுவனம். நல்ல சம்பளம். கவுரமான வேலை என்று குறிப்பிட்டார்.அப்போது, உங்கள் குடும்ப உறுப்பினர் களிடமும் உறவினர்களிடமும் ஒரு பெருமிதம் தொற்றிக் கொண்டதை உணர முடிந்தது. அடுத்த நாள் நான் கடைவீதிக்குச் சென்றபோது சில இளைஞர்கள் தாங்கள் மாருதி சுசுகி நிறு வனத்தில் பணிக்குச் சேர முடியுமா? என்னால் அதற்கு உதவ முடியுமா என்றெல்லாம் கேட் டார்கள்.

சில சிறார்கள் கூட, அந்த நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டுமென்றால் என்ன படிக்க வேண்டும் என்றெல்லாம் கூட கேட் டார்கள். நான் அவற்றிற்கெல்லாம் ஏதோ பதில் சொல்லிவிட்டு வந்தேன்.நிறுவனத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். 48 நிமிடத்தில் ஒரு கார் உற்பத்தியாகி வெளியே வந்துவிடும். எனவே, சில நொடி களைக் கூட விட்டுக் கொடுப்பதற்கு நிர்வாகம் அனுமதிக்காது. ஆனால் பிரீதம், ஒரு மனிதன் டீ குடிக்கக் கூட உட்கார முடியாது.ஆனால் கூட எங்கள் மேலதிகாரிகள் டீ குடிக்கிற இடத்தில் வேலை சம்பந்தமாக ஆணைகளை பிறப்பிப்பார்கள். அது ஒன்றும் புதிய விசயம் கிடையாது, எங்களுக்குப் பழகிப் போன ஒன்றுதான்.துரதிர்ஷ்டமான அந்த ஜூலை 17 ஆம் தேதி ஒரு தொழிலாளி பாவம் அவன், என்ன சிரமத்தில் இருந்தானோ அவனிடமிருந்த மனிதன் சற்று தலையைத் தூக்கி மேலதிகாரியிடம் இந்த 7 நிமிடம் டீ குடிப்பதற்கான எங்கள் நேரம். இப் போது எதுவும் சொல்லாதீர்கள் என்று கூறியிருக் கிறான். உலகம் முழுவதும் பெருமிதத்தோடு தங்கள் கார்களை ஓடவிட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஒரு நிறுவனத்தின் சூப்பரவைசரிடம் அப்படியெல்லாம் பேசக் கூடாது என்கிற நியதி பாவம் அந்த தொழிலாளிக்கு தெரிந்திருக்க வில்லை. அப்படி கேள்வி கேட்டதற்காக அந்த தொழிலாளியை சாதியைச் சொல்லி அந்த சூப்பிர வைசர் திட்டிவிட்டார். இது அனைத்து தொழி லாளிகளின் முன்பு நடந்து, அனைத்து தொழி லாளிகளும் அவமான உணர்வை அனுபவித் தார்கள். இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது சம்பந்தப்பட்ட சூப்பிரவைசர் மீது நட வடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவமானப்பட்ட தொழிலாளி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதை யொட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பின்பு இதுவரை நாங்கள் சிறையிலிருக்கிறோம்.ஆகஸ்ட் 1 ஆம் தேதி 2012 இல் போலீஸ் 10 பேரை கைது செய்தது. அவர்களில் சங்கத் தலைவர்களும் அடங்குவர். அவர்களை போலீஸ் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய வில்லை. போலீஸ் தேடுகிறது என்று தெரிந்ததும் அவர்களாகவே காவல்நிலையத்திற்கு போனார்கள். பிரீதம், காக்கி உடையைப் போட்ட பிறகு காவல்துறையினர் மனித குணங்களை கழற்றி வைத்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். சரணடைந்த அந்த தொழிலாளிகளை காவல் துறையினர் வாயிலும் நெஞ்சிலும் பூட்ஸ் கால் களால் மிதித்ததையும், அது அவர்களின் கடமை யைப் போல செய்ததையும் என் வாழ்நாளில் அதை மறக்கமாட்டேன்.அதன் பிறகு நானும் கைது செய்யப்பட்டேன் இப்போது 147 பேரில் காசநோயால் பாதிக்கப் பட்ட ஒருவரைத் தவிர மீதி அனைவரும் சிறைக்குள் தான் இருக்கிறோம். நான் கைது செய்யப்பட்ட போது சங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்ட மற்றவர் களும் நான் எதற்காக கைது செய்யப்பட்டேன் என்று கேட்டார்கள். ஏனென்றால், அவர்களுக் குத் தெரியும் நான் சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவன் அல்ல. தொழிற்சங்கத் தலை வர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விமர்சித்து அவர்களுக்கு ஆதரவாக பேசியதற்காகவே நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். சிறைக்குள் வந்த பல நாட்களில் எனக்கு உறக்கமே பிடித்ததில்லை. நான் சிறைக்குள் வந்ததை விட, இதர 146 பேருடன் எந்த வகை யிலும் தொடர்பில்லாத நான் சிறையிலடைக்கப் பட்டதை அவமானமாக கருதினேன். ஆனால், பிரீதம் இப்போது இவர்களோடு இருப்பதற்காக, அவர்களின் துயரங்களில் பங்கெடுத்ததற்காக, அவர்களின் ஒருவனாக நிர்வாகமும் போலீசும் சொல்வதற்காக நான் பெருமைப்படுகிறேன்.

இந்த ஒரு காரணத்திற்காகத் தான் அவர்களுக்கு மறுக்கப்பட்ட வார இருமுறை உறவினர்கள் சந்திப்பு என்கிற ஆடம்பரத்தை நான் அனுபவிக் கக் கூடாதஎன்பதற்காகவே நீ இனிமேல் என்னைப் பார்ப்பதற்கு சிறைக்கு வரவேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். பிரீதம், நேற்று வரை நாங்கள் சிறைக்கு வந்து 15 மாதங்கள் முடிந்துவிட்டன. ஆனால், இன்று வரையிலும் எங்களுக்கு பெயில் கிடைக்க வில்லை. நம் நாட்டில் சட்டத்தின் முன் அனை வரும் சமம் என்பதை பெருமிதத்தோடு பிரகட னப்படுத்தி நமது நாட்டின் நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நமது நாட்டின் தாலுகா முதல் தலைநகரம் வரை பல படிநிலை நீதிமன்றங்களிலும் தினந்தோறும் தீர்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நமது நீதி வழங்கும் முறை, ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாத என்று வலியுறுத்திக் கொண்டிருக் கின்றது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப் பட்டவர்கள் கூட மேல்முறையீடு செய்து இடைக்காலத்தில் பெயிலில் வெளியே வரு கிறார்கள். ஆனால், 147 பேர் 15 மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் சிறைச் சாலைக்குள்ளே இருக்கிறோம். அன்று ஒரு சகோதரி தன்னுடைய அண்ணனை பார்க்க வந்திருந்த போது நீதிபதி களுக்குத் தெரியாதா, 147 பேர் சேர்ந்து ஒரு மனி தனைக் கொண்டிருப்பார்களா என்றெல்லாம் கேள்வி கேட்டார். இதற்கு எனக்கு விடை தெரியவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் முன்பு ஓராண்டு காலம் சிறையிலடைக்கப்படுவதற்கு நமது சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை.எனக்கு நமது அரசியல் சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. இப்போதும் கூட அதன் மீதான நம்பிக்கையை நான் முழுவதுமாக இழந்துவிடவில்லை. அரசியல் அதிகாரத்தி லிருப்போர் அவ்வப்போது சட்டம் தன் கடமை யைச் செய்யும் என்று முடங்கிக் கொண்டே இருக்கிறார்கள். பிரீதம், மாருதி சுசுகி தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டமட்டில் சட்டம் தன் கடமையைச் செய்திருந்தால், இந்த நிகழ்வுகள் எதுவுமே இல்லாமல் போயிருக்கும். தொழிலாளர்கள் விசயத்தில் கடமையைச் செய்யாத சட்டம், மாருதி சுசுகி நிறுவனத்திற்காக 147 குடும்பங் களின் வாழ்க்கையை சிதைத்துக் கொண்டிருக் கிறது. இது அவானிஷ் தேவ் இன் கொலைக்காக இத்தனை கடுமையாக நடந்து கொள்வதாக நான் நினைக்கவில்லை.

மாருதி சுசுகி நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கான சட்டப்படியான உரிமை யைக் கோரியதற்காகவும் சங்கம் வைக்க முயற் சித்ததற்காகவும் கொடுக்கப்பட்ட தண்டனை. இந்தியாவில் செயல்படும் எந்த ஒரு பன் னாட்டு நிறுவனத்திடமும் தொழிற்சங்கம் வைப்ப தற்கு எவனும் துணியக் கூடாதஎன்பதற்கான எச்சரிக்கை. இந்தியாவில் இருக்கக் கூடிய அந்நிய தூதரங்கள் அந்தந்த நாட்டு சட்டங்களின் படி செயல்படும். ஆனால், இந்தியாவில் செயல் படும் எந்த நாட்டு நிறுவனமும் எந்த நாட்டு சட்டங்களையும் மதிக்காது.நம்முடைய அரசியல் சட்டம் முடமாக்கப் பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் வீடு, மனைவி, மக்கள், சுகம், செல்வம் அனைத் தையும் இழந்து நம் முன்னோர்கள் பெற்ற சுதந் திரம், அந்நிய நிறுவனங்களிடம் செயலற்று நிற் பதைப் பார்க்கிற போது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அந்த பிரகடனம் கண் கள் பிடுங்கப்பட்டு, செவிப்பறைகள் கிழிக்கப் பட்டு, குரல்வளை நெறிக்கப்பட்டு, தேகம் எங்கும் குருதி வழிய குற்றுயிராய் கிடப்பதை நான் உணர்கிறேன்.பிரீதம், இப்போது என் மனதில் ஒரே ஒரு நோக்கத்தைத்தான் பிரதானமாக வைத்திருக் கிறேன். நேற்று உனக்குப் பின்பு வேறொருவரை பார்க்க வந்திருந்த ஒருத்தர் சொன்னார், மாருதி சுசுகி நிறுவனத்தின் வாயில் முன்பாக பறந்து கொண்டிருக்கும் சங்கத்தின் கொடி அழுக் கடைந்து, கந்தலாகி படபடத்துக் கொண்டிருப்ப தாகக் கூறினார். அதை சொல்கிறபோது நாடாளு மன்றமும் சட்டமன்றங்களும் நீதிமன்றங்களும் குற்றுயிரும் குலையிருமாய் துடித்துக் கொண் டிருக்கும் ஒரு மனிதனை ஏதோ ஒரு விசுவாசத் தால் ஏதோ ஒரு பயத்தால் ஏதோ ஒரு நிர்ப்பந்தத் தால் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.ஒரு சங்கம் வைக்க முயற்சித்ததற்காக நாங்கள் 146 பேர் சிறையிலிருப்பது மட்டுமல்ல, 3200 பேர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நிரந்தரத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி, அப்ரண்டிஸ் என எல்லா தொழி லாளிகளும் அடக்கம். இவர்களுடைய எல்லா குடும்பங்களும் தெருவில் தான் நின்று கொண் டிருக்கின்றன. இவர்களுக்கு பதிலாக புதிய தொழிலாளர்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தியிருக்கிறதாம்.

ஒருவேளை நாங்கள் 147 பேரும் கொலைக் குற்றத்திற்காக உள்ளே இருக் கிறோம் என்றால் இந்த 3200 பேரும் எதற்காக வெளியேற்றப்பட்டார்கள். தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்ததற்காக. எனவே, இது அவானிஷ் தேவ் கொல்லப்பட்டதற்கான தண்ட னை அல்ல. தொழிற்சங்கம் அமைக்க முற்பட்ட தற்கான எச்சரிக்கை.பிரீதம், எனக்கு ஒரு கனவிருக்கிறது. நான் வெளியே வருவேன். நாடாளுமன்றத்தாலும், சட்டமன்றத்தாலும் நீதிமன்றங்களாலும் கை விடப்பட்ட அழுக்கடைந்து கிழிந்து படபடத்துக் கொண்டிருக்கும் அந்தக் கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்வேன். தேசியக் கொடியை வணங்குவதுபோல் தொழிலாளிகள் தங்கள் சங்கக் கொடியை பெருமிதத்தோடு வணங்கச் செய்வதற்கான பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.பிரீதம், கிழித்தெறியப்பட்டு, கீழே கண் டெடுக்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தின் அந்தப் பக்கத்தை பத்திரமாக வைக்கிறேன். அதை, அதன் ஆன்மாவை பாதுகாக்கும் முயற்சி யில் இதர தொழிலாளர்களையும் இணைத்துக் கொண்டு நான் போராட வருவேன். முன்பிருந் தது போன்ற குருட்டுத் தனமான பக்தியின் அடிப் படையில் அல்ல. ஒரு அரசியல் சட்டம் தன் நாட் டின் அத்தனைக் குடிமக்களையும் பாதுகாக்க வேண்டும் என்கிற உண்மையான அர்த்தத்தில்.என்னைப் போன்று கணவனையோ, மகனையோ, தந்தையையோ, சிறையில் கடந்த ஓராண்டு காலமாக பார்த்துக் கொண்டிருக்கிற எல்லோருக்கும் சொல், நிச்சயமாக ஒரு நாள் நமது நியாயங்களை நமது அரசியல் சட்டம் உத் தரவாதப்படுத்தும். ஒருவேளை அது இயலாமல் போனால், புதியதொரு அரசியல் சட்டத்தை இந்தியாவின் அனைத்து மக்களையும் சமமாக மதிக்கிற சட்டத்தை நாம் உருவாக்குவோம்.

பிரீதம், இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன் பாக மிகப்பெரும் சுமைகளை உனக்கு விட்டு வந்திருப்பதற்காக நான் வருந்துகிறேன். நான் சிறைக்கு வந்த பிறகு அம்மாவுக்கும் உனக்கு மான பிணக்குகள் கூட தீர்ந்திருப்பதாக அம்மா கூறினார். அவர்களை தன் மகளைப் போல பார்த்துக் கொள்வதாக அம்மா குறிப்பிட்டார். உன் தாய், தந்தையர் உனக்கு உதவ முயற்சித்த போது அதை மறுத்துவிட்டதாகவும் அம்மா என்னிடம் சொன்னார். நீ பக்குவப்பட்டிருப்பதையும் தைரியம் அடைந்திருப்பதையும் நான் உணர்கிறேன். சிறை யிலிருக்கும் 146 பேரையும் வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில் பல தொழிற்சங்கங் கள் போராடிக் கொண்டிருக் கின்றன. அவர்களது முயற்சியில் உன்னையும் இணைத்துக் கொள். வாரா வாராம் என்னைப் பார்ப்பதை விட வாரத் தில் ஒரு நாளாவாது அந்த முயற்சியில் பங்கெடுப் பதையே நான் பெருமை யாகக் கருதுகிறேன்.

அன்புடன்
ஜிதேந்தர்

தமிழில் : க.கனகராஜ்

Tuesday, November 12, 2013

காவல் சீர்திருத்தச் சட்டம் பலன் தருமா?

தமிழ்நாட்டில் தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் மட்டும் 36 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் 8 மரணங்களும் கடந்த 3 மாத காலத்தில் 6 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. காவல்துறை பொதுமக்களுடன் நட்பு பாராட்டுவதில்லை. ஒரு வீட்டின் காவல்காரரைப் பார்த்து வீட்டுக்காரர் பயப்படும் விநோதம் போன்றது இது. ஏன் இந்த அச்சம்? காவலர்களுக்கு உள்ள அதிகாரம்தான். அதிகாரங்கள் சரியாக பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்கிற கேள்விக்கு விடைசொல்லுவதாக காவல்நிலைய மரணங்கள் அதிகரித்துள்ளன. என்கவுண்ட்டர்கள், காவல்நிலைய மரணங்கள், விசாரனை கைதிகளை சித்திரவதை செய்தல், சிறையில் பாலியல் வன்முறை என்று எதுவுமே தமிழகத்துக்கு புதிதில்லை. இப்படியொரு சூழலில்தான் தமிழக அரசு சட்டமன்றத்தில் ஓர் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி அதன்மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடத்திய விவாதத்தை முற்றிலும் புறந்தள்ளி மசோதாவை நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது. செப்டம்பர் 2013ல் தமிழக அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது.  சட்டமன்றக் கூட்டத்தொடர் இப்போதைக்கு இல்லை எனும் நிலையில் அதற்காக காத்திருக்க இயலாது எனும்போது அசாதாரணமான, எதிர்பாராத, அவசரமான நிலைமை ஏற்பட்டால் மாநில ஆளுநர்  அரசமைப்பு சாசனத்தின் 213வது பிரிவின் கீழ் அவசரச் சட்டம் பிறப்பிக்கலாம். அப்படியான அவசரம் எதுவுமே இல்லாத நிலையில் அவசரச்சட்டத்தை ஏன் இயற்றவேண்டும் என்பதே மனித உரிமை அமைப்புகளின் கேள்வியாக உள்ளது. எந்த ஒரு அவசரச் சட்டத்தையும் 6 வார காலத்துக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி மசோதாவாக அறிமுகம் செய்து சட்டமாக்கவேண்டும் என்பது விதி.

இந்த அவசரச் சட்டம் ஏன் இயற்றப்பட்டது? இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர காலத்தில் காவல்துறையினரின் அத்துமீறல்கள் நடந்ததையடுத்து ஜனதா ஆட்சிக்காலத்தில் தேசிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டு அவை பல அறிக்கைகளை அளித்தன. ஆனால் ஆட்சி மாறி மீண்டும் இந்திரா ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அறிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. ஆணையமும் முடிவுக்கு வந்தது. அந்த அறிக்கைகளின் பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்று கோரி 1996ல் பிரகாஷ் சிங், என்.கே.சிங் என்கிற முன்னாள் காவல்துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதன்பின் நீதிமன்றம் ரிபெய்ரோ தலைமையில் குழு அமைத்தது. 2000-ல் பத்மநாபய்யா குழு அமைக்கப்பட்டது. 2006-ல் சொலி சொராப்ஜி குழு அமைக்கப்பட்டது. இக்குழுக்கள் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கைகள் அளித்தாலும் அவை கிடப்பில் போடப்பட்டன. அந்த வழக்கு விசாரணை முடிந்து 2006ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு மாநில அரசும் 7கட்டளைகளை நிறைவேற்றி ஒரு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் இயற்றவேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழகம் உட்பட சில மாநிலங்கள் உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை.

இந்நிலையில்தான் மே 2013ல் உச்ச நீதிமன்றம் தானாகவே பீகார் மற்றும் ஹரியானாவில் நிகழ்ந்த காவல்துறை அத்துமீறல்கள் குறித்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது பிரகாஷ் சிங் வழக்கில் எந்தெந்த மாநிலங்களெல்லாம் உச்ச நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பார்த்து அக்டோபர் 22 அன்று அடுத்தகட்ட விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ”அந்த நிலையில்தான் நீதிமன்ற அவமதிக்குப்புக்கு ஆளாகமல் தப்பிக்கவே அவசரம் அவசரமாக காவல்துறை சீர்திருத்தங்கள் சட்டத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு.  ஆனால் தேதி குறிப்பிடப்படாமல் அக் 22 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. ” என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன். 

சட்டமன்றத்தில் இதுகுறித்து அக்டோபர் 30 அன்று விவாதம் நடந்தபோது எதிர்க்கட்சிகளான சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்றவை கடுமையாக எதிர்த்தன. ”உச்ச நீதிமன்றத்தின் 7 கட்டளைகளில் 6 கட்டளைகள் உச்ச நீதிமன்றம் கூறியதற்கு நேரெதிராக உள்ளன. ஒரேயொரு கட்டளை மட்டுமே சரியாக பின்பற்றப்பட்டிருக்கிறது’’ என்கிறார்  ஹெச்.ஆர்.எஃப். அமைப்பின் நிறுவனர் ஆஸி  ஃபெர்னாண்டஸ்.

அதென்ன 7 கட்டளைகள்? 
1. மாநில பாதுகாப்பு ஆணையம் ஒன்றை உருவாக்க வேண்டும். இந்த ஆணையம் மாநில அரசு காவல்துறை மீது அரசு நிர்வாகம் தேவையற்ற செல்வாக்கு செலுத்தாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இந்த ஆணையத்தின் நோக்கம். துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், வல்லுநர்கள் போன்றோர் இந்த ஆணையத்தில் இருக்கவேண்டும் என்பது விதி.  “பாதுகாப்பு ஆணையத்தின் இந்த நோக்கம் குறித்து குறிப்பிடப்படவில்லை. மாநில ஆணையங்களின் தலைவர்களை உறுப்பினரகளாகப் போட்டிருப்பதும் ஏற்கத்தக்கதல்ல” என்று சட்டமன்றத்தில் பேசினார் மனித நேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா. 

2. காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தகுதி அடிப்படையில் வெளிப்படையான முறையில் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும், அவரது பதவிக்காலம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாகவே இருக்க வேண்டும் என்கிறது கட்டளை.

3.அதுபோலவே மாவட்ட அளவில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளின் பதவிக்காலமும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாக இருக்கவேண்டும் என்கிறது கட்டளை. “ஆனால் எழுத்துபூர்வமாக பதிவு செய்யப்படவவேண்டிய பிற நிர்வாக அடிப்படைகளின்பேரில் அவரை பணியிலிருந்து விடுவிக்கலாம் என்று கட்டளை 2 மற்றும் 3 இரண்டிலும் சட்டம் சொல்கிறது. இது தவறான முறையில் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்கிறார் ஜவாஹிருல்லா.

4. காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மற்றும் புலனாய்வு பணிகளையும் பிரிக்கவேண்டும் என்பது கட்டளை. இப்போது இவை இரண்டும் ஒன்றாக உள்ளன. ஒரு காவல்நிலையத்தில் இரண்டுக்கும் தனித்தனி காவலர்கள் இருக்கவேண்டும் என்பது இதன் பொருள். ‘’இதை மட்டும்தான் தமிழக அரசு முறையாகப் பின்பற்றி இருக்கிறது’’ என்கிறார் ஆஸி ஃபெர்னாண்டஸ்

5. காவல்துறை கண்காணிப்பாளர் நிலைக்குக் கீழ் உள்ள காவல்துறையினரின் இடமாறுதல்,, பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பணிகள் தொடர்பான மற்ற விஷயங்களை முடிவு செய்யவும், காவல்துறை கண்காணிப்பாளர் நிலைக்கு மேல் உள்ளவர்கள் குறித்த இதே விஷயங்களில் பரிந்துரை செய்யவும், காவல்துறை நிர்வாக வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் கட்டளை. ‘’ஆனால் இந்த அதிகாரத்தை புதிய சட்டத்தின் மூலம் மாநில அரசே எடுத்துக்கொண்டுவிட்டது. இது உச்ச நீதிமன்றத்தின் கட்டளையை மீறுவதாகும்’’ என்கிறார் ஹென்றி திபேன்.

6. காவல் நிலைய மரணம், பலத்த காயம் அல்லது காவலின்போது வன்புணர்ச்சி போன்ற கடுமையான தவறுகள் தொடர்பாக காவல்துறை துணை கண்காணிப்பாளர் நிலைக்கு மேல் உள்ள அதிகாரிகள் அல்லது மாநில அளவிலான அதிகாரிகள் மீதான பொது மக்களின் புகார்கள் குறித்து விசாரிக்க முறையே மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் ஒரு காவல்துறை புகார்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம். ‘’ஆனால் இந்த ஆணையத்தின் உறுப்பினராக காவல்துறை அதிகாரியான டி.ஜி.பி.யையே நியமித்திருக்கிறது மாநில அரசு. பின் எப்படி பொதுமக்கள் புகார் அளிக்க முன்வருவார்கள். அத்துடன் அங்கீகாரம் பெற்ற நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் பிரமாண பத்திரம் பெற்றுவந்து புகார் செலுத்தவேண்டும் என்பது சாமான்ய மக்களை சோர்வடையச் செய்யும் நடைமுறை. இப்படியான நடைமுறைகளை பின்பற்றச் சொன்னால் காவல்துறையினரின் மீது புகார் கொடுக்க ஒருவரும் முன்வர மாட்டார்கள்” என்கிறார் ஆஸி ஃபெர்னாண்டஸ்.

7வது கட்டளை மத்திய அரசுக்கு என்பதால் மாநில அரசு அதில் ஒன்றும் தலையிடுவதற்கில்லை. சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் இந்த விதிமீறல்களையெல்லாம் பட்டியலிட்டு, அதில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பது உட்பட எல்லாவற்றையும் எழுத்துப்பூர்வமாக அளித்தேன். ஆனால் முதல்வர் அவை எதையும் கணக்கில் கொள்ளாமல் நிராகரித்துவிட்டார். அவர்கள் பெரும்பான்மை என்பதால் சட்டமும் நிறைவேறிவிட்டது’’ என்கிறார் ஜவாஹிருல்லா. 

காவல்துறையினர் இது குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டபோது அவர் ‘’இது குறித்து விவரங்கள் ஏதும் தெளிவாகத் தெரியவில்லை. ஆகவே கருத்து சொல்லமுடியாது’’ என்று ஒதுங்கிக்கொண்டார். முன்னாள் காவல்துறை அதிகாரியான நாஞ்சில் குமரன் ஐ.பி.எஸ். “இத்தகைய முக்கியமான சீர்திருத்த சட்டத்தை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து விவாதித்து மாவட்டந்தோறும் கூட்டங்கள் நடத்தி மக்களின் கருத்தை அறிந்தபிறகே சட்டமாக்க வேண்டும்.” என்கிறார். பொதுமக்களின் கருத்துகேட்கப்பட்டிருக்கவேண்டும் என்று அழுத்தமாகச் சொல்கிறார் முன்னாள் டி.ஜி.பி. கே.ஆர்.ஷியாம் சுந்தர். அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்றால் சட்ட மசோதாவை ஒரு அனைத்துக்கட்சிக் குழுவுக்கு அனுப்பியிருக்கவேண்டும். அதில் உள்ள ஓட்டைகள் சரிசெய்யப்பட்டிருக்கும். ஒருவேளை அது நடந்திருந்தால் மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இனி தடுக்கப்பட்டிருக்கும்.’’ என்கிறார். மாநில உள்துறை செயலாளரை தொடர்புகொள்ள முயன்றும் இறுதி வரை முடியவில்லை.

‘’இச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம். உச்ச நீதிமன்ற விசாரணையில் தமிழக அரசு இச்சட்டத்திற்கு பதில் சொல்லியே தீரவேண்டும்’’ என்கிறார் ஹென்றி திபேன்.

(நன்றி : இந்தியா டுடே)


Sunday, November 10, 2013

ஒரு காட்சி, ஒரு நடனம், ஒரு காதல்

ஒரு படத்தின் காட்சி இத்தனை உயிரோட்டமாய மனதைக் கவர்கிறது என்றால் அந்தக் காட்சி உணர்வுபூர்வமாய் இருக்கிறது எனலாம். ‘தில் தோ பாகல் ஹை’ இந்திப் படம் வந்த புதிதில் அதை நான் பார்த்திருக்கிறேன். ஒரே ஒரு முறை பார்த்த மாதுரி தீக்‌ஷித்தின் அந்த கதக் நடனம் மனதிலேயே நின்றது. இப்போது யூ டியூபில் அவ்வபோது அதை எடுத்துப் பார்ப்பதுண்டு. எத்தனை அழகான காட்சி. ஷாருக்கானும் மாதுரியும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். மாதுரியின் கைகளின் அந்த அபிநயமும், முகபாவமும், நளினமும் அந்த நடனத்தை அற்புதமாக்குகின்றன. சற்றும் சளைக்காமல் கைகளால் தாளமிசைக்கும் ஷாருக்கின் துள்ளல் இந்தக் காட்சிக்கு அழகு சேர்ப்பது. மேலிருந்து பாயும் ஒளிவெள்ளத்தில் ஒரு வெள்ளை தேவதையாய் மாதுரி..இத்தனை அழகாய், நளினமாய், புன்னகைக்கும் ஒரு நடிகை...உள்ளத்தை கொள்ளை கொள்ளும் நடன அசைவுகள்...மாதுரியின் திறமைக்கு எல்லை இல்லை. ஒரு முறை ஓவியர் எம்.எஃப்.உசேன் கூறினார். ‘நான் என் கை விரலை எவ்வள்வு எளிதாக அசைக்கின்றேனோ அது போல மாதுரி தன் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நடனத்தின்போது எளிதாக அசைக்கும் திறன் பெற்றிருக்கிறார். இது எல்லோருக்கும் வராது” என்றார். உண்மைதான். அதனாலேயே எம்.எஃப். உசேன் மாதுரியின் தீவிரமான விசிறியானார்.

நடன இயக்குநர் என்று ஒருவர் இருக்கிறாரா அல்லது இவரே தானாக ஆடுகிறாரா என்கிற சந்தேகம் வரும்படி ஒரு நடனத்தை இப்படி அனுபவித்து ஆடுவது என்பது எல்லோருக்கும் வந்துவிடாது. ஒரு சிலர் நடன அசைவு ஒரு மாதிரியும் முகபாவம் வேறாகவும் இருந்து நடனத்தைக் கெடுக்கும். அல்லது முகபாவமே இல்லாமல் ஆடுவதும் உண்டு. ஆனால் இந்தப் பாடலுக்கான பாவமும் உணர்ச்சியும் இப்படித்தான் இருக்கமுடியும் என்பது போல முகத்தில் எத்தனை விதமான வெளிப்பாடுகள் மாதுரிக்கு. இந்த நடனம் மட்டுமல்ல. ‘ஹம் ஆப்கே ஹெய்ன் கோன்’ படத்தின் பாடல்களை கவனியுங்கள். அதில் ஒரு பாடலில் சல்மான்கானைப் பார்த்து தன் தாயின் தலைக்குப் பின்னால் மறைந்துகொண்டு பார்ப்பார். அந்தக் கண்களில் ஒளிரும் காதல்..மாதுரி ஒரு மிகச் சிறந்த நடிகை என்பதைச் சொல்லும்.

தில் தோ பாஹல் ஹை படம் முழுவதும் எல்லா பாடல்களிலுமே மாதுரியின் நடனம் கொடிகட்டிப்பறக்கும் என்றாலும் இந்த கதக் மிகவும் விசேஷம். ஏனெனில் இந்தக்காட்சியின் பின்னாலுள்ள காதல். தன்னை மறந்து இசைக்கு நடனமாடி சட்டென்று உணர்ந்து நின்று உயர்த்திய தன் கரங்களை இறக்கிக்கொண்டு கூந்தலை அவிழ்த்து..தன் பையை எடுத்துக்கொண்டு சலங்கை சத்தத்துடன் வெளியேறும் அந்தக் காட்சி..என்ன சொல்வது? அந்த வெள்ளை தேவதை சென்றபின் அந்த ஒளிவெள்ளத்தின் வெற்றிடத்தை நோக்கிய ஷாருக் ‘மாயா’ என்று பெயர் சொல்லிவிட்டு அந்த இடத்தை நோக்கிச் சென்று கைகளை நீட்டிக்கொண்டு நிற்கும் காட்சியில் மறைந்துள்ள காதல் வெளிப்படும் இடம். இந்தக் காட்சியின் இயக்குநருக்கு, நடன இயக்குநருக்கு, இசையமைப்பாளருக்கு எல்லோருக்குமாய் நன்றி சொல்லத் தோன்றுகிறது.


Friday, November 08, 2013

அம்மா உன்னை நான் கண்டதில்லை-ஜோதி பாபுரே லஞ்சேவருக்கு அஞ்சலி

ஜோதி பாபுரே லஞ்சேவர்- மராத்திய தலித் எழுத்தாளரான இவர், இன்று காலை காலமானதாக மும்பையிலிருந்து எழுத்தாளர் அம்பை தெரிவித்திருக்கிறார்.  அவருடைடய நினைவாக தலித் முரசு 2003 மே இதழில் வெளியான அவருடைய மராத்திய கவிதையின் மொழியாக்கம் இதோ. தமிழாக்கம் செய்தவர் சுபா. நன்றி சுபா!

ஜோதி பாபுரே லஞ்சேவர்

அம்மா உன்னை நான் கண்டதில்லை 

உன்னை நான் என்றுமே கண்டதில்லை

அம்மா
தங்க சரிகையிட்ட புத்தம் புது
ஈரக்கல் பட்டு சேலையில்
உன் கழுத்தோடு
தங்கக் காசு மாலையுடன்
உன் மணிக்கட்டுகளில்
வளையல்களுடனும் சங்கிலிகளுடனும்
உன் காகளில் ரப்பர் செருப்புகள் அணிந்துகொண்டும்
உன்னை நான் கண்டதில்லை

அம்மா
கூலியாட்கள் கூட்டத்துடன்
சாலைகளை ரிப்பேர் செய்தபடி
உன் வெற்றுக் கால்கள்
எரியும் நிலத்தின் மீது பற்றி எரிய
முட்களடர்ந்த கருவேல மரத்தின் கிளைகளில்
உன் குழந்தை
ஏதொ ஒரு துணியில் தூங்க
தார்ச்சட்டிகளை சுமந்த
உன்னை நான் கண்டேன்

உன் தலையில் மண் கூடைகள்
கால்கள் இலைகளாலும்
கந்தல்களாலும் சுற்றப்பட்டிருந்தன
தினக்கூலிக்காய்
நீ அடிமைப்பட்டிருக்கையில்
தத்தித்தத்தி ஓடி வந்த உன்
அம்மணக் குழந்தையை முத்தமிட்ட
உன்னை நான் கண்டேன்

ஏரியில் அணை கட்ட உதவினாய்
சங்கிலித் தொடராய் உன் பின்னே
கண்ணீரை வடித்துக்கொண்டு வந்த
குழந்தைக்கு வியர்வைகலந்த முத்தமிட்டு
உன் அடி வயிற்றை பிசைந்தபடி
தாகத்தால் வதைக்கப்பட்டு
உனக்கே உதடுகள் வறளுகையில்
உன்னை நான் கண்டேன்.

வண்டி வண்டியாய் தலை மீது
சிமெண்டையும் மண்ணயும்
சுமந்து கொண்டு
கவனமாய்
கர்ப்பம் தரித்து வீங்கிப்போன
உன் கால்களை பதித்தபடி
அழகிய புதுமனையின் உயரே
நீ மூங்கில் சாரத்தில் ஏறும்போது
உனதென்று சொல்ல நான்கு சுவர் கொண்ட
இருப்பிடம் இல்லாமல்
உன்னை நான் கண்டேன்

மாலை மங்கும் நேரத்தில்
மார்போடு குழந்தையை அணைத்து
உன் முந்தானையின் சின்ன முடிச்சை
அவிழ்த்தாய்
கொஞ்சம் எண்ணையும் உப்பும் வாங்க
பளபளத்த சின்னக்காசு ஒன்றை சேமித்தாய்
என் சின்னஞ்சிறு உள்ளங்கையில்  வைக்க
“போய் ஏதாச்சும் வாங்கித் தின்னு
அம்பேத்கரப்போல பெரிய படிப்பு படி
நான்தான் கூடைகளை சுமக்கிறேன்”
என்று சொன்ன உன்னை நான் கண்டேன்

உன் உடம்பை கட்டைகளாக எரித்துக் கொண்டும்
அடுப்பில் எரிபொருளாய் ஒரு கத்தை
உலர்ந்த கரும்புச் சக்கையை
கொளுத்திக் கொண்டும்
எல்லோருக்கும் நான்கு பக்ரிகளை பங்கிட்டு
நீ மட்டும் அரை பட்டினியாய்
ஒரு சின்ன துண்டை உன் சேலையில்
பிறகு சாப்பிடவென முடிந்தபோது
உன்னை நான் கண்டேன்

பாத்திரங்கள் தேய்த்தாய்
துணிமணிகள் துவைத்தாய்
நான்கு வெவ்வேறு வீடுகளில்.
இருந்தும் மிச்சம் மீதிகளை
ஏற்க மறுத்தாய்
சுயமரியாதையுடன்
ஏழுமுறை  கிழிந்த
எண்ணில்லா சின்னச் சின்ன தையல்கள்
போட்டு வைத்த
உன் கந்தல் சேலையால் உன்னை நீ
தன் மானத்துடன் போர்த்திக் கொண்டாய்.
உன்னை நான் கண்டேன்.

ஊர்ச்சந்தையின் நட்ட நடுவில்
உன் மீது காமப்பார்வை
வீசத்துணிந்தவர்களின்
ஆத்தாளையும்
அக்காளையும்  ஏசிய
உன்னை நான் கண்டேன்

முந்தானை சுருளை தலைமீது வைத்து
கனமான பழக்கூடைகளை சுமந்தாய்
மக்கள் நெரிசலில்
உன் மீது இடிக்க துணிந்தவர்களை
செருப்பை தூக்கி மிரட்டிய
உன்னை நான் கண்டேன்

மலையென தூக்கிச் சுமந்த
உன் வேலைகளை செய்தபின்
நாளின் முடிவில் நான் பார்க்கையில்
வீடு நோக்கி திரும்பிய உன் கால்கள்
இருளை கூறிட்டன
குடி போதையில் வந்த உன் புருசனை
கோபத்தோடு வெளியேற்றிய
உன்னை நான் கண்டேன்

 புடவையை இடுக்கிக்கொண்டு
நீண்ட நெடும் பயணத்தில்
முன்னே நடந்தாய்
”நாம் நமது பெயரை மாற்ற வேண்டும்”
என்று முழக்கமிட்டபடி
சுரீரென்று போலீஸ் லத்தியை தாங்கி
தலை நிமிர்ந்தபடி
சிறைக்குச் சென்ற
உன்னை நான் கண்டேன்

போலீஸ் துப்பாக்கிக்கு பலியான
உன் ஒரே மகனிடம்
நீ பீமனுக்காக செத்தவண்டா
உன் உசிருக்கு அர்த்தத்தை
தேடிக்கிட்டடா ராச”
என்றாய்
உனக்கு இரண்டு அல்லது மூன்று மகன் கள்
இருக்க மேலும் பாக்கியம் செய்திருந்தால்
நீ மீண்டும் போரிட்டீருப்பாய்
என்று போலீசை எதிர்த்து  பேசின
உன்னை நான் கண்டேன்

உன் மரணப்படுக்கையில்
உன் கடைசி வினாடிகளை
எண்ணிக்கொண்டு
குப்பை சத்தகள் பொறுக்கி
அலைந்து திரட்டிச் சேமித்த பணத்தை
பொதுச் சேவைக்கு நன்கொடையாக்கிய
உன்னை நான் கண்டேன்

”ஒற்றுமையாய் இருங்க
பாபாசகேப்புக்காக போரிடுங்க
அவர் நினைவா ஒரு சின்னம் கட்டுங்க.”
என்றபடி  உன் கடைசி மூச்சுடன்
“ஜெய் பீமா,” என்ற வார்த்தைகள்
உன் உதட்டோடு ஒலிக்க
உன்னை நான் கண்டேன்.

புத்தம்புது ஈரக்கல் சேலைக்காய்
ஜெபமாலையை உருட்டிக்கொண்டு
உன்னை நான் என்றுமே கண்டதில்லை.

அம்மா உன்னை நான் கண்டேன்

***
  
The English Version... not the one I translated but something that's close can be found at the following link
http://roundtableindia.co.in/lit-blogs/?tag=jyoti-lanjewar

-Shuba
 http://shubasblog.blogspot.in

Thursday, October 31, 2013

’இணைய’ சாதிகள்

சமூக வலைத்தள ஊடகங்களாகிய ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை இன்றைக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துபவை என்றும் ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடியதாகவும் உள்ளது. ஒரு திரைப்படம் வெளியானால் கூட ஃபேஸ்புக்கில் அதற்கு என்ன எதிர்வினை என்பதில் திரைத்துறையினர் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட சமூக வலைத்தளங்களில் உண்மையில் ஆக்கபூர்வமாக ஏதாவது நடைபெறுகிறதா அல்லது வெறும் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படுகின்றவா என்கிற ஆராய்ச்சியில் இறங்கினால், இவற்றை ஆக்கபூர்வமாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவே உள்ளனர். குறிப்பாக சமூக வலைத்தளத்தில் இயங்கும் பெரும்பாலான தமிழர்களின் உளவியல் ஆபத்தானதாக உள்ளது.

முன்பொரு காலம் இருந்தது. தெருக்களிலும், ஊர்ப்பெயர்களிலும் உள்ள சாதிப் பெயர்களை அகற்றிய காலம் அது. நபர்களின் பெயருக்குப் பின்னாலும் சாதியைப் போடுவது இழிவென கருதப்படும் தமிழ்நாட்டின் இந்த நிலைக்கு பெரியார் உட்பட பல சீர்த்திருத்தவாதிகள் சாதி ஒழிப்புக்காக போராடியிருக்கின்றனர். அதன் காரணமாக வெளிப்படையாக சாதிவெறியைக் காட்டுவது தவறு என்றிருந்தது.ஆனால் இன்றைக்கு மிக பூதாகரமாக சாதிவுணர்வு வெளியே வர சமூக ஊடகங்கள்  ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. நன்கு படித்த வேலையில் இருக்கும் ஓர் தமிழ் இளைஞன் ஓர் அரசியல் கட்சியின்பால், ஒரு சமூக இயக்கத்தின்பால், ஒரு திரைப்பட கலைஞரின்பால் ஈர்க்கப்படுவதை புரிந்துகொள்ள முடியும். தேடல் உருவாகும் வயதில் அந்தத் தேடலுக்கான ஒரு வடிகாலாய் ஏதோ ஒன்றை நினைத்து அதில் ஈடுபடுவதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் தன் சாதியின் பின்னால் அணிவகுக்கும் ஆபத்தான போக்கில் இளைஞர்கள் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி குழுக்கள் வலைத்தளங்களில் இயங்குகின்றன. அவற்றில் உறுப்பினர்களாக எந்த கூச்சமும் இன்றி இந்த படித்த தலைமுறை இயங்குகிறது. . தன் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்கிறது. இப்படி எல்லாமும் செய்யும் இந்த இளைய தலைமுறை தனக்கான அடையாளமாய் சாதியைத் தாங்கிப் பிடிப்பது அதிர்ச்சிகரமானது. இந்த திடீர்ப் போக்குக்கு என்ன காரணம்?

சமூக வலைத்தளங்களை உற்றுநோக்குபவரும் திரைப்பட இயக்குநருமான  ராம் ‘’உலகமயமாக்கலின் வீழ்ச்சி இது. சாதி மதம் என்று நம்மை குழு குழுவாகப் பிரித்துவிட்டது உலகமயமாக்கல். பெரியாரை நவீனமயமாக்கலுடன் தொடர்புபடுத்தலாம். நவீனமயமாக்கல் உற்பத்தியை அதிகரித்தது. அது தொழிற்துறையுடன் தொடர்புடையாதகவும் இருந்தது. ஆனால் உலகமயமாக்கல் உற்பத்தியை விட சேவைத்துறைக்கு முன்னுரிமை கொடுக்கிறது. அது இயல்பாகவே தனி சாதி, தனிக்குழு , தனி மதம் என்பதில் போய் முடிகிறது. நிலவுடைமை சமுதாயத்தின் கூறுகளாகவே சாதி இன்றைக்கு இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகவே சாதியை மீட்டுருவாக்க முனையும் முயற்சிகளைப் பார்க்கிறோம். இனி தேசம், தேசியம் என்கிற சொற்களுக்கு அர்த்தமில்லாமல் போகும்.  சாதி போன்ற தனித்தனி அடையாளங்கள்தான் கலாசாரம் என்று பார்க்கப்படும். நிலைமை இன்னும் மோசமாகும்’’ என்கிறார்.

சாதியரீதியான அணிதிரட்டலை சமூக வலைத்தளங்கள் மிக இயல்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கின்றன. எப்படி பழைய நண்பர்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒன்று திரட்ட முடிகிறதோ அதுபோலவே தன் சாதியைச் சார்ந்தவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவரை அடையாளம் காண்பதும், தன்னுடன் இணைத்துக்கொள்வதும் எளிதாக உள்ளது. முன்பெல்லாம் சாதிக்காரர்களை திரட்ட மாநாடுகளும் கூட்டங்களும் நடந்தன. இப்போது சமூக ஊடகங்கள் அவற்றை மிகவும் எளிதாக்குகின்றன. இணையதளத்தில் இயங்கும்  ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியே கூட்டங்கள் நடைபெறுகின்றன. சாதி வெறி அவர்களை தனிப்பட்ட தாக்குதல்களிலும், பாலியல்ரீதியான சொல்லாடல்களை பயன்படுத்துவதிலும் ஈடுபடவைக்கின்றன.

‘’வெளியில் சொல்ல வெட்கப்பட்ட சாதி அடையாளத்தை இன்றைக்கு தமிழர்கள் பெருமையாக போட்டுக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொருத்தவரை வேலை பார்க்கும் இடத்தில் அல்லது வேறு ஒரு பொதுவெளியில் சாதிப் பெயரைச் சொல்லி ஒருவரை திட்டிவிட்டுப் போய்விட முடியுமா? அப்படிச் செய்தால் பலருக்கு பதில் சொல்லவேண்டும். அது கேவலம் என்கிற பார்வை இங்கே ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சாதி அடையாளத்தை வெளிப்படுத்தி சோதனை செய்துபார்க்கும் கடைசி முயற்சியாக சமூக ஊடகங்களை சாதியவாதிகள் பயன்படுத்துகிறார்கள். முகமூடிகளை பயன்படுத்திக்கொண்டு எந்த சாதியினரையும் மதத்தினரையும் இகழும் வசதி இங்கே இருக்கிறது. சமுதாயத்தின் உண்மை முகம் இங்கே வெளிப்படுகிறது’’  என்கிறார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

‘’ஒரு உதாரணம் சொல்கிறேன். பொது வாழ்க்கையில் தமிழ்த்தேசியவாதிகள் திராவிட இயக்கங்களை இணைத்துக்கொண்டுதான் எல்லா இயக்கங்களையும் முன்னெடுக்கின்றனர். ஆனால் சமூக ஊடகங்களில் மட்டும் தமிழ்தேசியவாதிகள் தொடர்ந்து திராவிட இயக்கங்களை திட்டுவதையும் தாக்குவதையும், அவர்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்று செயல்படுவதையும் பார்க்க முடிகிறது. ஆக வெளியில் வேறு மாதிரி செயல்பட்டாலும் அவர்களின் உள்ளத்தில் உள்ளதை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்திவிடுகிறார்கள். ஆக சமூக ஊடகங்கள் அடிமனதில் உள்ளவற்றை வெளிச்சம்போட்டுக் காண்பிக்க ஓர் இசைவான இடமாக இருக்கிறது. ஆணாதிக்கவாதிகள் பெண்களுக்கு எதிராகவும், சாதியவாதிகளும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒழித்துக்கட்டவேண்டும் என்கிற எண்ணத்தில் வெளியில் குறைவாகப் பேசினாலும் சமூக ஊடகங்களில் அதிகமாக எழுதுகின்றனர். சமூகத்தை பிரதிபலிப்பதை விட சமூக ஊடகங்கள் சமூகத்தின் அகமனதை திறந்து காட்டுகின்றன எனலாம். இது ஆரோக்கியமான போக்கு அல்ல.’’ என்கிறார்.

சமூக ஊடகங்களில் சாதிரீதியான அணிதிரட்டல் என்பதை ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் ஒடுக்கும் சாதியினருக்கும் ஒரே அளவுகோல் வைத்துப் பார்க்ககூடாது என்கிறார் எழுத்தாளர் பாமரன். ‘’அச்சத்திலும் பாதுகாப்பின்மை காரணமாகவும் ஒன்றாகச் சேரும் ஒடுக்கப்படும் சாதியினரையும், அச்சுறுத்த ஒன்றாக சேரும் ஆதிக்க சாதிக்காரர்களையும் ஒன்றாகப் பார்க்கக்கூடாது. இது மதங்களுக்கும் பொருந்தும். உளவுத்துறைக்கு சமூக ஊடகங்கள் மிகப்பெரிய உதவி புரிகின்றன. ஆதிக்க சாதி அடையாளத்துடன் நூறு பேர் வந்தால், அதில் பாதி உளவுத்துறையின் வேலை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏற்கனவே சாதிரீதியாக பிரிந்துகிடக்கும் தமிழ்ச்சமூகத்தை மேலும் பிரித்தாளும் சூழ்ச்சியை அதிகாரம் செய்யும். என்னை கோபப்படுத்தவேண்டுமென்றால் எந்தப் பெயரில் வரவேண்டும், என்ன சொல்லி திட்டவேண்டும் என்பதையும் உளவுத்துறை அறியும். சாதியவாதிகள் பாதி உளவுத்துறை பாதி என்றுதான் சமூக ஊடகங்களின் சாதிய மோதல்களை பார்க்கவேண்டும். அப்படிப் பார்க்க நாம் தவறுகிறோம் என்று நினைக்கிறேன்’’ என்கிறார் பாமரன்.

”இணையத்தில் இருக்கிறார்கள் என்பதாலேயே அவர்கள் அறிவால் நவீனமானவர்கள் என்று கூறமுடியாது. கௌரவக் கொலைகளை, சாதிய வன்முறைகளை ஆதரிப்பவர்களாகவும், சாதிமறுப்பு திருமணங்களை எதிர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நமக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற எண்ணம் வேறு. சாதிக்கு எதிரானவர்களை இழிவு செய்கிறார்கள். அவர்களை நட்புப் பட்டியலில் இருந்து நிக்கி ப்ளாக் செய்யவேண்டும். நிலைமை மோசமானால் காவல்துறைக்கும் செல்லலாம். அனைவரும் சமம் என்னும் ஜனநாயக நாட்டில் அவர்கள் செயல்பட இடமில்லை. நாஜிக்களுக்கு எதிராக ஐரோப்பாஅவில் எழுச்சி உண்டானது போல இங்கும் உருவாக வேண்டும்’’ என்கிறார் தலித் ஆதரவு கருத்துக்காக ட்விட்டரில் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதால் காவல்துறையில் புகார் அளித்த எழுத்தாளர் மீனா கந்தசாமி. அவரது புகார் மீது இதுவரை நடவடிக்கை ஏதுமில்லை.

சாதியவாதிகள் ஒருபுறம் சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் தொடர்ந்து ஜனநாயகவாதிகளும் முற்போக்கு இயக்கங்களும் எதிர்வினை ஆற்றுவதையும் காண முடிகிறது. ஆனால் இவர்களின் உரையாடலில் உள்ள நாகரிகமும் பண்பும் சாதிய அடையாளங்களுடன் வருபவர்களிடம் இல்லை. கெட்டவார்த்தைகள் மூலம் ஒருவரை கோபமடையச் செய்யும்போது உரையாடலின் தரம் குறைகிறது. எதிர்வினை ஆற்றுபவர்கள் பலர் அத்துடன் உரையாடுவதை நிறுத்திக்கொள்வதால் சாதியவாதிகள் சுதந்திரமாகவும் எதிர்க்குரலற்றும் சுதந்திரமாக உலவுவதைக் காணமுடிகிறது. சாதிகொரு குழு உள்ளதுபோன்றே சாதி ஒழிப்புக்கென்றும் குழுக்கள் உள்ளன என்றாலும் அப்படிப்பட்ட குழுக்களும், தனிநபர்களும் குறைவானவர்களே. 
சமூக ஊடகத்தில் எழுத, எழுத்தாளராகவோ, அறிவுஜீவியாகவோ, அறிவாளியாகவோ இருக்கவேண்டுமென்கிற அவசியம் இல்லை. சாமானிய மக்களும் எழுதலாம் என்பதே சமூக ஊடகங்களின் சிறப்பு. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்படும்போது அதற்கென சட்டங்கள் தேவை என்கிறார் திண்டுக்கல் எம்.எல்.ஏ. பாலபாரதி. ’’ஒரு பொதுமேடையில் ஒரு தலித் குறித்து தவறாக சாதிப்பெயர் சொல்லித் திட்டினால் எப்படி பி.சி.ஆர். வழக்கு போடமுடியுமோ அதுபோலவே சமூக ஊடகத்தில் எழுதினாலும் போடவேண்டும். கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் எதைவேண்டுமானாலும் எழுத முடியுமா என்ன? ’’ என்கிறார் பாலபாரதி.

நன்றி: இந்தியா டுடே

Thursday, October 10, 2013

மறைக்கப்பட்ட சகாப்தங்கள் - இந்திய சினிமா நூற்றாண்டு விழா

சினிமா நூற்றாண்டு விழா நடந்து முடிந்திருக்கிறது. பல்வேறு முணுமுணுப்புகள், சர்ச்சைகள், கருத்துவேறுபாடுகள் இவற்றுடன் கடந்த இந்த விழாவின் காட்சிகள் அனைத்தையும் தமிழக மக்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். திரைத்துறை பிரபலங்கள் பலரையும், சினிமா வரலாற்றில் மிக முக்கியமானவர்கள் பலரையும் விட்டுவிட்டதாகவும் சரியான முறையில் கௌரவப்படுத்தவில்லை என்பதும் பலருடைய வாதமாக இருக்கிறது. முழுவதும அரசியல் விழாவாக நடந்த இவ்விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார். கேரள முதல்வர் உம்மன் சாண்டி கலந்துகொண்டார். கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் வரவில்லை. 1916ம் ஆண்டு தமிழின் முதல் சினிமாவான கீசகவதம் வெளியானதை வைத்து கணக்கிட்டால் 2016ல்தான் தமிழ்சினிமா நூற்றாண்டு வரும். இப்போது கொண்டாடப்பட்டது இந்திய சினிமாவின் நூற்றாண்டு. ஆனால் இந்திய சினிமாவை இவ்விழா பிரநிதித்துவப்படுத்தியதா என்பது கேள்விக்குறி. குறைந்தபட்சம் தமிழ் சினிமாவை சரியான முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை என்பதே பலரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. 

திரையில் தோன்றும் முகங்களுக்கு மட்டுமே இங்கே மதிப்பு அளிக்கப்படுகிறது; திரைக்குப் பின்னாலிருக்கும் கலைஞர்களை புறக்கணிப்பது சரியல்ல என்கிறார் திரைப்பட விமர்சகர் தியோடர் பாஸ்கரன்.  ’’இதுவும் இன்னொரு சினிமா கலை நிகழ்வாக மட்டும் முடிந்துபோனது. சினிமாவின் தரத்தை மேம்படுத்த அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. சினிமாவை பாதுகாக்க திட்டங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. சினிமாவின் மிகச் சிறந்த முன்னோடிகளை மறந்து, சிறந்த தமிழ்ப் படங்களை மறந்து வெறும் அரசியல் விழா எதற்கு? ஏதாவது விமர்சித்தால் இந்தக்கட்சிக்கு ஆதரவானவர் என்று முத்திரைகள் வேறு குத்தப்படுகிறது. கட்சிக்கு அப்பாற்பட்டு, தன் வசனம் மூலம் சினிமாவுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய கருணாநிதியை ஏன் மறந்தார்கள்? வெறும் நடிகர்கள் மேல் மட்டும்தான் கவனம் இருக்கிறது. ஆரம்பகால இயக்குநர்கள் ஒரு படத்தை எடுக்க என்ன பாடுபட்டிருப்பார்கள் தெரியுமா?’’ என்று வினவும் தியோடர் பாஸ்கரன் பிரிட்டிஷ் காலத்தில் ஆங்கிலேயர்களின் ஒடுக்குமுறையையும் தணிக்கையையும் தாண்டி படமெடுத்து தமிழ் சினிமாவை வளர்த்ததில் அன்றைய இயக்குநரகளுக்கு இருக்கும் பங்கை யாரும் அங்கீகரிக்கவில்லை என்று வருத்தப்படுகிறார். ராஜா சாண்டோ, நடராஜ முதலியார், ஏ.நாராயணன் போன்றோரின் சிறப்புகளை இந்த நூற்றாண்டுவிழாவின் மூலம் இன்றைய தலைமுறை அறிந்துகொள்ளச் செய்திருக்கவேண்டாமா என்கிறார். ’’இத்தனை ஆண்டுகளில் தேசிய விருது கிடைத்தது காஞ்சிவரம், மறுபக்கம் ஆகிய படங்களுக்குத்தான். சிறந்த இயக்குநர் விருது அகத்தியனுக்கும் லெனினுக்கும்தான் கிடைத்தது. ஆனால் இதுகுறித்து ஒரு குறிப்பும் இல்லை. அஞ்சல் துறை தமிழ் சினிமாவில் இதுவரை 50 பேருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்திருக்கிறது. இதுபோன்ற அரிய தகவல்களை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய விழாவாக நடந்திருக்கவேண்டிய விழா இது. நடனம், பாடல்கள் எல்லாம் சினிமாவின் கூறுகள்தான். ஆனால் அவை மட்டும் சினிமா அல்ல எனும்போது ஏன் இந்த விழாவில் இவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம்?’’ என்கிறார் தியோடர் பாஸ்கரன். இதையே எடிட்டர் லெனினும் கேட்கிறார். ‘’சினிமாவில்தான் நடனமும் பாடல்களும் வருகிறதே. இந்த மேடையிலும் அதேதானா? 20 நாட்கள் ரிகர்சலுக்கு ஆகும் செலவு எவ்வளவு? ஏன் இப்படி வீணாக செலவழிக்கவேண்டும்? அரசு அளித்த 10 கோடியில் என்ன செலவுகள் செய்யப்பட்டன என்று கணக்கு யாராவது சொல்வார்களா என்ன?’’ என்கிறார் கோபமாக.

தமிழ்சினிமா எப்போதுமே நாயக பிம்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்த விழாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அதற்குள்ளும் கூட பழைய நடிகர்களுக்கு உரிய முக்கியத்துவம் இல்லை என்கிறார் தியோடர் பாஸ்கரன். ‘’நடிப்புத் தொழிலை கேவலமாக நினைத்த காலத்தில் இந்தத் தொழிலை ஏற்றுக்கொண்டு சினிமாவின் வளர்ச்சிக்கு உதவியவர்களுக்கு உரிய மரியாதை தரவேண்டாமா?’’ என்கிறார். கலை இயக்குநர் டிராட்ஸ்கி மருதுவும் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார்.  ‘’இந்த சினிமா விழா தன்னிச்சையாக நடக்கவில்லை.  நடிகர்களை மட்டும் முன்னிறுத்துவது சரியான முறை அல்ல. திரைக்குப் பின்னால் உழைக்கும் மற்ற துறையினரை ஏன் கண்டுகொள்ளவே இல்லை. சினிமா என்றால் நடிகர்கள் மட்டும் இல்லையே? ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், கலை இயக்குநர்கள் என்று ஒரு படத்தின் வெற்றிக்கு உழைப்பவர்களை மறந்துவிட்டு இது என்ன விழா? ‘’ என்கிற டிராட்ஸ்கி மருது புதுமைப்பித்தன், வாசன் போல திரைத்துறைக்கு பங்களிப்பு செய்தவர்களையும் ஏதோ ஒரு வகையில் கௌரவித்திருக்கவேண்டும் என்கிறார். ”சினிமாவுக்கு வந்து சிறப்பான பங்களிப்பைச் செய்த ஜெயகாந்தன் போன்றோரை ஏன் அழைக்கவில்லை? சிறந்த படங்களை பாதுகாத்து வைக்க இங்கே எந்த ஏற்பாடும் இல்லை. அதற்காக ஏதாவது திட்டங்கள் இந்த நூற்றாண்டு விழாவில் அறிவிக்கப்பட்டதா? சினிமா குறித்த புத்தகங்களை சேமிக்கும் ஒரு அருங்காட்சியகம் இல்லை. சங்கீதத்துக்கும் இலக்கியத்துக்கும் இருப்பது போன்றதொரு ஆவணப்படுத்தும் ஏற்பாடு ஏன் சினிமாவுக்கு இல்லை?’’ என்று கேட்கிறார் தியோடார் பாஸ்கரன். உண்மையில் சினிமாவை ஆவணப்படுத்தி வைக்க அரசு எந்த ஈடுபாடும் காட்டவில்லை. பாலுமகேந்திராவின் வீடு, சந்தியாராகம் போன்ற படங்களின் மாஸ்டர் காப்பி வீணாகிவிட்டதாகக் கூறினார் பாலுமகேந்திரா. புத்தகங்களைக் காப்பாற்ற இருக்கும் நூலகங்கள் போல திரைப்படங்களைக் காப்பாற்ற எந்த ஏற்பாடும் இல்லை. சிறை படத்தின் இயக்குநர் ஆர்.சி.சக்தியை அண்மையில் சந்தித்த தியோடர் பாஸ்கரன் அவருடைய தற்போதைய நிலை குறித்து கவலைப்பட யாருமில்லை என்கிற சூழலில் இந்தக் கொண்டாட்டங்களுக்கு பதில் அவர்களுக்கான திட்டங்கள் எதையாவது இந்த 10 கோடியை வைத்து செய்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகிறார். அண்மையில் இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் துணை இயக்குநர்களுக்கு ஊதியத்தை முறைப்படுத்த பரிந்துரைக்கப் போவதாக அறிவித்திருந்ததையடுத்து வறுமையில் வாடும் துணை இயக்குநர்களின் மீட்சிக்கும் வழி ஏதும் அறிவிக்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பும் பொய்யானது. திரைப்பட ஆய்வு நூல்களை எழுதி தேசிய விருது பெற்ற அறந்தை நாராயணன், தியோடர் பாஸ்கரன், ஜீவானந்தன், ரூபா சுவாமிநாதன் ஆகியோரையும் இவ்விழா புறக்கணித்திருக்கிறது.

‘’தமிழர் வாழ்வியலை தமிழ் சினிமா எப்படி எல்லா காலத்திலும் காண்பித்தது என்பது குறித்த புரிதலை இந்த விழாவின் மூலம் இச்சமூகத்திற்கு விளக்க கிடைத்த வாய்ப்பு தவறவிடப்பட்டது. ஒருவருக்கு ஒருவர் தாஜா செய்வதுதான் இங்கே நடந்திருக்கிறது. திமுக, அதிமுக என்று மட்டுமே சுருக்கிப் பார்க்க முடியுமா சினிமாவை?’’ என்கிறார் டிராட்ஸ்கி மருது.

’’இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. பாரபட்சமாக நடக்கிறது. சினிமாவுக்காக கடுமையாக உழைத்த நாங்கள் என்ன முட்டாள்களா? என் தாத்தா இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.சுப்பிரமணியம். அவர் பிலிம் சேம்பரை தோற்றுவித்தவர்களில் ஒருவர். என் தந்தை புகழ்பெற்ற நடன இயக்குநர். 50 ஆண்டுகளாக 1600 படங்கள் வரை நடன இயக்கம் செய்திருக்கிறார். அவருடைய பெயரை நடன இயக்குநர்கள் சங்கம் விருதுக்காக பரிந்துரை செய்து அனுப்பியதாக விழா ஏற்பாட்டாளர்களிடமிருந்து கடிதம் வந்தது. விருது பெற தயாராக வருமாறு தகவல் வேறு வந்தது. ஆனால், விழாவுக்கு அழைப்பு கூட இல்லை’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் காயத்ரி ரகுராம். நடன இயக்குநர்கள் பிருந்தா, கலா ஆகியோரும் இவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. கலா கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சி நடத்துவதுதான் புறக்கணிப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது

‘’கோளாறுகள் அனைத்திற்கும் பிலிம் சேம்பரையும், தயாரிப்பாளர் கவுன்சிலையும்தான் கேள்வி கேட்கவேண்டும்.  இந்த வயதிலும் கருணாநிதி எழுதுகிறார். வைரமுத்து, பா.விஜய், அப்துல் ரகுமான் போன்ற அவருக்கு நெருக்கமானவர்கள் கூட அவரை புறக்கணித்தது குறித்து கேள்வி கேட்கவில்லை. நான் கேயாரிடம் கேட்டால், அந்த ஆட்சியிலும்தான் விழா நடந்தது என்கிறார். அது ஒன்றும் நூற்றாண்டு விழா இல்லையே? ஆட்டம் பாட்டம் என்று  10 கோடி அரசுப்பணம் வீணானதுதான் மிச்சம். நான் சினிமாக்காரன் மட்டுமில்லை. பொறுப்புள்ள மனிதனாக என்னால் பல கேள்விகளைக்கேட்க முடியும். 10 கோடியை இதற்குத் தந்ததற்கு ஏதாவது ஒரு பகுதியில் சரியான முறையில் சாலைகளைப்போட செலவு செய்திருந்தால் உருப்படியாய் இருந்திருக்கும்’’ என்கிறார் லெனின்.

(நன்றி : இந்தியா டுடே)
Wednesday, October 02, 2013

இறந்தபின்னும் துயரம்

மனிதக் கழிவுகளை மனிதனே சுமக்கும் அவலம் நீடித்துவரும் நிலையில், அந்த துப்புரவுப் பணியை அருந்ததியின தலித் மக்கள்தான் செய்துவருகிறார்கள். அவர்களில் யாரேனும் இறந்தால் அடக்கம் செய்ய இடுகாடு கூட இல்லாமல் அல்லாடுவது ஒரு சமூக வன்முறை. 40 ஆண்டுகாலமாக இடுகாட்டுக்கான போராட்டத்தில் இருக்கின்றனர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் வசிக்கும்  சுமார் 70 குடும்பங்கள். மாவட்ட நிர்வாகம் தொடங்கி தலைமைச் செயலகம் வரை அரசிடம் பல முறை புகார் மனுக்கள் அளித்தும் இடுகாடு வசதி ஏற்படுத்தப்படவில்லை என்று கூறி வடுகபாளையம் கிராமமக்கள் சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு  செப் 13 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இத்தனை நாட்களாக அங்கிருந்த ஒரு புறம்போக்கு நிலத்தையே இடுகாடாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அந்த இடம் ஊரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. மழைக் காலங்களில் அந்த இடத்தை பயன்படுத்தமுடியாது. அருகில் உள்ள கால்வாயிலிருந்து தண்ணீர் ஊறி அங்கே கால்வைக்க முடியாது. அந்த சமயங்களில் 8 கி.மீ. சுற்றிக்கொண்டுதான் இடத்தைச் சென்றடைய முடியும். அதற்கும் வந்தது வினை. அரசு இனி அந்த இடத்தை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டது. அப்படியென்றால் இடுகாட்டுக்கென்று தனியே இடம் ஒதுக்கித் தாருங்கள் என்று கேட்டபின், தலித் மக்கள் குடியிருப்புக்கு அருகிலேயே ஓரிடத்தை இடுகாட்டுக்கென ஒதுக்கியது. ’’ஆனால் தலித் மக்கள் அந்த இடத்தை இடுகாடாக பயன்படுத்துவதை ஆதிக்கசாதியான கவுண்டர் சாதியில் உள்ள சிலர் அனுமதிக்கவில்லை.’’ என்கிறார் போராட்டக்குழுவில் இருக்கும் லோகநாதன். பிரச்சனை ஆனவுடன் பெருந்துறை வருவாய் வட்டாட்சியர், காங்கேயம் சட்டமன்ற உறுப்பினரும் வந்து இடத்தை பார்வையிட்டு மறு உத்தரவு வரும்வரை யாரும் இடத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துவிட்டுச் சென்றனர். ’’ஆனால் ஆதிக்கசாதி தரப்பைச் சேர்ந்த டி.கே.பெரியசாமி என்பவரின் தூண்டுதலின்பேரில் அந்த இடத்தில் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் அந்த இடத்தை குளமாக மாற்றவும் முயற்சி நடக்கிறது. அப்படியென்றால் நாங்கள் இடுகாட்டுக்கு எங்கே செல்வது’’என கேட்கின்றனர் தலித் மக்கள்.

மே மாதம் 15ம் தேதியன்று முருகன் என்பவர் இறந்துவிட, அவரை புதைக்கக்கூடாது என்று தகராறு ஆகிவிட, தலித் மக்கள் பிணத்துடன் சென்று சாலை மறியலில் அமர்ந்தனர். காவல்துறை பிணத்தை கைப்பற்றி முன்பு பயன்படுத்திவந்த இடுகாட்டில் வைத்து அடக்கம் செய்துவிட்டு ஒரு பெண் உட்பட தலித் மக்கள் 35 பேர் மீது அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டி முதல் தகவல் அறிக்கை போடப்பட்டதாக ஊர்மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் 26 பேரை விசாரணை செய்ய அழைத்துச் சென்று சிறையில் அடைத்தது காவல்துறை.

இந்த வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், இடுகாட்டு வசதி செய்து தருமாறும் கோரியே மக்கள் பலவிதத்திலும் போராடிவருகின்றனர். இது குறித்து காவல்துறை ஆய்வாளர் சிவகுமாரிடம் பேசியபோது ‘’வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து நான் முடுவெடுக்கமுடியாது. அரசாங்க மேலதிகாரிகள் உத்தரவு போட்டால் வாபஸ் பெற தயார்.’’ என்கிறார். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆனபின்னும் தலித் மக்களுக்கு மட்டும் செத்தால் புதைக்க நாதியில்லாத நாடாகவே இந்தியா இருக்கிறது என்பது மட்டும் முகத்தில் அறையும் உண்மை. 

Friday, September 27, 2013

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்தில் சாத்தியமா?

நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்டபின், மஹாராஷ்டிர அரசு மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அரசு கொண்டுவரும் சட்டங்கள் பலவற்றில் பொதுமக்களின் கருத்தை ஒட்டியே இருக்கும். ஆனால் இந்த சட்டத்தைப் பொறுத்தவரை பொதுக்கருத்துக்கு மாறாகவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.  ஜோதிராவ் பூலே, அம்பேத்கர் போன்ற முன்னோடிகளின் சீர்த்திருத்தக் கருத்துக்களும், தபோல்கரின் உயிர்த்தியாகமும் இந்த சட்டத்தை அங்கே சாத்தியமாக்கி இருக்கின்றன. ‘’தமிழக மக்கள் மஹாராஷ்டிர மக்களை விட முற்போக்கானவர்கள்தான். அங்கேயே மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் சாத்தியமென்றால் இங்கே ஏன் முடியாது?’’ என்கிறார் திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

கடவுள் மறுப்புக்கொள்கையும் மூடநம்பிக்கைகளுக்கும் சாதியத்துக்கும் எதிரான பெரியாரின் பிரச்சாரமும் தமிழகத்தை ஒரு முற்போக்கு மாநிலமாக்கியது. அவருடைய சுயமரியாதை இயக்கம் ஜோசியம், ஜாதகம் உட்பட பல மூடநம்பிக்கைகளுக்கு எதிராக களமிறங்கி போராடியது. ஆகவே பெரியார் இயக்கங்கள் தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் வரவேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றன. ‘’மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். அரசியலமைப்புச் சட்டத்தின் 51ஏ - எச் பிரிவு மக்களின் விஞ்ஞான மனோபாவத்தையும், மனிதத்தன்மையையும், கேள்விகேட்கும் திறனையும், சீர்த்திருத்தத்தையும் வளர்க்கவேண்டும் என்கிறது. ஆகவே மத்திய மாநில அரசுகளுக்கு இத்தகைய சட்டத்தைக் கொண்டுவரும் கடமை இருக்கிறது. மேலும் மூடநம்பிக்கைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். பொருள், பணம், நேரம் என்று இழந்திருக் கிறார்கள். ஆகவே இதுவே சரியான நேரம்’’ என்கிறார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கலிபூங்குன்றன்.  2009ல் தி.மு.க. ஆட்சியிலிருந்தபொது பேராசிரியர் மா.நன்னன் தலைமையிலான சமூக சீர்த்திருத்தக்குழுவில் பங்கேற்றிருந்ததாகவும் மூடநம்பிக்கை ஒழிப்பு உட்பட பல திட்டங்களை அரசுக்கு அப்போது அளித்ததாகவும் ஆனால் அதற்குள் அ.தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்றுவிட்டதாகவும் தெரிவித்தார்   கலிபூங்குன்ற ன்.

இடதுசாரிகளும் இந்தச் சட்டத்திற்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கி இருக்கின்றனர். ‘’மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்தி இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன். ஆனால் வலதுசாரிகளிடமிருந்து இச்சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு வரக்கூடும். பெரியார் இயக்கங்கள், இடதுசாரிகள், தி.மு.க. ஆகியவை இச்சட்டம் தமிழ கத்தில் வரவேண்டும் என்கின்றன."மத்திய மாநில அரசுகள் இச்சட்டத்தை இயற்றவேண்டும். அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத் திட்டம் பள்ளி - கல்லூரிப் படிப்பில் இணைக்கப்பட வேண்டும்’’ என்று கோரியிருக்கும் கருணாநிதி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51ஏ-எச் குறித்தும் குறிப்பிட் டிருக்கிறார்.

ஆனால், தி.மு.க. இப்படி கோரியிருந்தாலும், அதன் சொந்த கட்சி உறுப்பினர்களே மூடநம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு உள்ளனர். மாநில மாவட்ட தலைவர்கள் அளவில் இலலை என்றாலும் கீழ்மட்டத்தில் உள்ள் தொண்டர் களிடையே அத்தகைய மனப்பாங்கு காணப்படுகிறது. அண்ணா துரையும் கருணாநிதியும் தங்கள் பகுத்தறிவுப் பேச்சுக்கள், திரைப்படங்கள்-நாடகங்கள், எழுத்துக்கள் என்று சாத்தியபப்பட்ட அனைத்து வழிகளிலும் பிரச்சாரம் செய்தனர்.  இப்போதுகூட நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கான பிரச்சாரம் அது.  தி.மு.க. தன் பகுத்தறிவு பிரச்சாரத்தால் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இப்போது கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களே கடவுளை வழிபட கோவிலுக்குச் செல்கிறார்கள். அவருடைய மஞ்சள் துண்டு குறித்து பலரும் விமர்சித்தும் அதை எடுக்கவில்லை. தி.மு.க.வின் தொலைக்காட்சி சேனல்களில் அறிவியலுக்கு எதிரான புராணங்கள் எல்லாம் ஒளிபரப்பாகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் அவருக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்று கூறியிருக்கிறார். முன்பெல்லாம் தி.மு.க.வின் அடிப்படை உறுப் பினர்கள்கூட கடவுள் நம்பிக்கை உண்டு என்று சொல்வதற்குக் கூட தயங்கிய காலம் ஒன்று இருந்தது. புட்டபர்த்தி சாய்பாபா சென்னை வந்தபோது தன் வாயிலிருந்து லிங்கம் எடுத்து திமுக தலைவர் துரைமுருகனுக்குத் தந்தார். தயாளு அம்மாள் சாய்பாபாவின் கால்களைத் தொட்டு வணங்கியது சர்ச்சைக்குள்ளானது.

முதல்வர் ஜெயலலிதா மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டுவருவாரா? ‘’ஜெயலலிதாவின் சொந்த நம்பிக்கைகள் அவரை அதற்கு அனுமதிக்காது. ஆனால் அவர் என்ன செய்வார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதிரடியாக ஏதாவது செய்யவேண்டும் என்பதற்காக கொண்டுவந்தாலும் வரலாம். அவருடைய குணநலனை அடிப்படையாக வைத்துச் சொல்கிறேன். ஆர்வத்தை வைத்து அல்ல’’ என்கிறார் கொளத்தூர் மணி. பெரியாரின் கொள்கைகளில் இருந்து விலகிப்போய்விட்டதாக தி.மு.க. மீது விமர்சனங்கள் இருந்தாலும் அது வெகுதூரம் போய்விடவில்லை என்பதற்கான சான்றுகள் சில உண்டு. முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் கோயில் திருவிழா ஒன்றில் தீமித்ததை ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று வர்ணித்தார் கருணாநிதி. தி.மு.க.காரர்கள் யாரும் நெற்றியில் திருநீறு இடக்கூடாது என்றார். 

முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அதன் பகுத்தறிவுக்கு ஒவ்வாத தன்மைக்குப் பெயர் போனது. சில மாதங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சகம் தமிழகத்தின் முக்கிய கோயில்களில் மழைவேண்டி யாகம் நடத்தச் சொல்லி உத்தரவிட்டது. அதன்படியே பல கோயில்களிலும் யாகம் நடந்ததை பகுத்தறிவு இயக்கங்கள் கண்டித்தன. ‘’மாணவர்களுக்கு தொடக்கப்பள்ளியிலேயே மரம் வளர்த்தால் மழை வரும் என்று சொல்லிக்கொடுத்துவிட்டு இங்கே அரசு தன் குடிமக்களை தவறாக வழிநடத்துகிறது. இது அறிவியலுக்கு ஒவ்வாத செயல்’ என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.

அதிமுக அமைச்சர்களும் தொண்டர்களும் மதம் தொடர்பான சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அதிகரிக்கும்போது தமிழக மக்களும் ஊடகங்களும் அதற்கு தகுந்த எதிர்வினை புரிந்திருக்கின்றன. முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ஒவ்வோர் ஆண்டும் அமைச்சர்களே மண்சோறு சாப்பிடுவது, தேர் இழுப்பது, அலகு குத்திக்கொள்வது, காவடி எடுப்பது, தீச்சட்டி ஏந்துவது போன்றவற்றில் ஒவ்வோர் பிப்ரவரி 24ம் முதல்வர் பிறந்தநாளின்போது ஈடுபடுவது சகஜமான காட்சிகள்.  அமைச் சர்களான கோகுல இந்திரா மண்சோறு உண்டதும், ப.வளர்மதி தீச்சட்டி ஏந்தியதும் தமிழ்நாட்டில் அதிசயங்கள் இல்லை. அதுபோலவே ஜெயலலிதா குருவாயூர் கோயிலுக்கு குட்டி யானையை காணிக்கையாய் அளித்ததும். ஜெயலலிதா தன் ஜோசியரைக் கேட்காமல் எதுவும் செய்வ தில்லை என்று சொல்லப்படுகிறது. முன்பு ஆட்சியிலிருந்தபோது, மகாமக குளத்தில் குளித்தால் நல்லது என்கிற மூடநம்பிக்கையில் லட்சம் மக்கள் கூடும் கும்பகோணத்துக்குச் சென்று, நெருக்கடியால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதை தமிழக மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.

தான் மீண்டும் பதவிக்கு வந்ததால் கோயிலுக்குக் காணிக்கையாய் தன் நாக்கை வெட்டி நேர்த்திக்கடன் நிறைவேற்றிய  தன்னுடைய ’பக்தை’க்கு அரசு வேலை அளித்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சென்ற வாரத்தில் வெளியிடப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் ஆணை ஒன்று வியப்பை அளிப்பதாய் இருந்தது. கோயில் சொத்துக்களில் நாத்திகர்களுக்கு உரிமையில்லை என்றது அந்த ஆணை. அதாவது கோயில் நிர்வகிக்கும் சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் நாத்திகர்களின் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கிடையாது என்பதே அந்த ஆணை. சுய மரியாதை திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநிலத்தில் இப்படியொரு ஆணை!  ‘’இந்து சமய அறநிலையத்துறை என்பது நீதிக்கட்சி ஆட்சியில் கோயிலின் கணக்குவழக்குகளைப் பார்த்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு துறை. அதற்கு மேல் அதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இப்படியொரு ஆணையை பிறப்பிப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே விரோதமானது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இது ஒன்றும் நேபால் போல இந்து நாடு அல்ல’’ என்கிறது திராவிடர் கழகம்.

‘திராவிட இயக்கங்களுக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது’’ என்கிறார் எழுத்தாளர் பாமரன். திராவிட கட்சிகள் மட்டுமல்ல, பகுத்தறிவுக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதில் எல்லா கட்சிகளூம் போட்டி போடுகின்றன. எதிர்க்கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் பெரியார் பிறந்தநாளில் அவருடைய படத்துக்கு பூஜை செய்த செய்திகள் வந்தன. இந்து மக்கள் கட்சி, அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் சுப. உதயக்குமார் ‘நாசமாய் போக வேண்டும்’ என்று மிளகாய் அரைத்து செய்வினை வைத்தது. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கூச்சனூர் சனீஸ்வரர் கோயிலுக்கு சனிப்பெயர்ச்சிக்காகச் சென்று வழிபட்டார்.

தமிழகத்தின் இப்படியான அத்தனை மூடநம்பிக்கைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் பெரியார் இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்களும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவரவேண்டும் என முனைப்புடன் இருக்கின்றன. ‘’ஒத்த கருத்துடைய இயக்கங்களை ஒன்று திரட்டி தமிழக அரசை நிர்பந்திப்போம்’’ என்கிறார் ஸ்டீபன் நாதன். ‘’தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’’ என்கிறார் கொளத்தூர் மணி. ‘’தமிழக அரசு செய்யுமா என்பதைவிட, செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவோம்’’ என்கிறார் கலிபூங்குன்றன்.

திமுகவின் கருத்தையறிய முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டபோது "இயல்பாகவே பகுத்தறிவாளர்கள் மூட நம்பிக்கைகள் ஒழிக்கப்படவேண்டும் என்று விரும்புவார்கள். பெரும்பாலான ஆத்திகர்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. ஏனெனில் கடவுள் நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் வெவ்வேறானவை. நரபலி போல இன்னொரு உயிரை சித்தரவதை செய்யும் மூடநம்பிக்கைகளை ஆத்திகவாதிகூட ஏற்றுக்கொள்ளமாட்டார். இதுபோன்றவற்றையெல்லாம் தடுக்கும் சட்டம் கொண்டு வருவது நல்லதுதானே? ஆனால் அது அதிமுக ஆட்சியில் நடக்காது. கோயில் சொத்துக்களில் நாத்திகர்களுக்கு பங்கில்லை என்று அறிவித்த அ.தி.மு.க. அரசா கொண்டுவரும்? பெரியாரின் சீர்த்திருத்தக் கருத்துக்களான பெண்களுக்கு சொத்துரிமை, சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்தது போன்றவற்றை தி.மு.க. தான் செய்தது. அதுபோலவே கலைஞர் விதைத்திருக்கும் இந்த விதையை அவரே மரமாக்குவார் என்று நம்புகிறேன்’’ என்றார்.

அ.தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சமரசத்திடம் பேசியபோது ‘’ போன ஆட்சியில் ஆடு-கோழி பலியிட தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆனால் அதை பெரியாரிஸ்டுகளே ஏற்றுக் கொள்ளவில்லை. மக்களின் நம்பிக்கையில் கைவைக்கிறார்கள் என்று எதிர்த்தார்கள். இரணியன் - பிரகலாதன் காலத்திலிருந்தே சமூகம் இரண்டு தரப்பாகத்தான் இருக்கிறது. பெரியாரும் ஆன்மீகவாதிகளும் ஒரே சமூகத்தில் இருந்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும் புத்தர் மாதிரி யாராவது வந்து அவர்கள் கருத்தைச் சொல்வார்கள். ஒரு சிலர் அவர்களை பின்பற்றுவார்கள். மூடநம்பிக்கை எது என்பது அவரவர்தான் தீர்மானிக்கமுடியும். ஒவ்வொருவருக்கும் மூடநம்பிக்கை மாறும். இதையெல்லாம் சட்டம் போட்டு தடுக்க முடியாது. அப்படிப் போடவேண்டிய அவசியமும் இல்லை’’ என்கிறார்.

நன்றி : (இந்தியா டுடே)

Monday, September 23, 2013

ஒரு பக்க நீதி - பெண்களின் பாதுகாப்பு குறித்த நீதிபதி கிருபாகரனின் கருத்து

பெருகி வரும் பாலியல் குற்றங்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்கும் போக்கு பொதுச்சமூகத்தில் அதிகமாக இருக்கிறது. பெண் அணியும் உடை சரியில்லை; அவள் சென்ற நேரம் சரியில்லை; அவள் சென்ற இடம் சரியில்லை; என்று எல்லாவற்றையும் பெண்கள் மீது பழிபோட்டுவிடுவது தவறு செய்த ஆண்களை தப்பவிடுவதற்கு சமம். சாமானியர்கள் இப்படி சிந்திப்பதில் வியப்பில்லை. ஏனெனில் காலங்காலமாக அனைத்து பாலினத்தவருக்கும் ஊட்டப்படும் ஆணாதிக்கத்தின் விளைவுதான் இது. ஆனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரனும் இதே கருத்தை தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. நாடு முழுவதுமிருந்து பெண்ணியவாதிகள் இவருடைய கருத்துக்கு கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் பெண்களுக்கான நீதிமன்றத்தை திறந்துவைத்துப் பேசிய நீதிபதி கிருபாகரன் ‘’வீட்டில் மனைவி, சகோதரியை விரும்பும் ஆண் வெளியில் செல்லும்போது மிருகமாகி பெண்கள் மீதான பாலியல் வன்முறையைச் செய்கிறான்’’ என்று அத்தோடு நிறுத்தாமல் அடுத்துப் பேசியதே சர்ச்சைக்கு வழிவகுத்திருக்கிறது. ‘’ஆண்கள் மட்டுமே நடக்கும் தவறுகளுக்கு காரணம் என்று சொல்ல முடியாது. சில சூழல்களில் பிரச்சனை வரும் என்று தெரிந்தே ஏன் அந்தச் சூழலுக்குச் சென்று தானாக மாட்டிக்கொள்ள வேண்டும்? டில்லி மாணவி தவறான நேரத்தில் பயணம் செய்ததும் அக்குற்றம் நிகழ காரணம். பெண்கள் தாங்களே சிக்கலை வரவழைத்துக்கொள்ள வேண்டாம்.’’ என்றார்.

இந்தச் செய்தி வெளிவந்தவுடன் பெண்ணியவாதிகளும், பெண்கள் இயக்கங்களும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தன. அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உ.வாசுகி நீதிபதி கிருபாகரனுக்கு கண்டனக் கடிதம் எழுதினார். இந்தியாவின் முதல் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரலான இந்திரா ஜெய்சிங், நீதிபதிகள் ஆணாதிக்கக் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று அறிவுரை வழங்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவத்திக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ’’நீதிமன்றங்களில் கூட பெண் வழக்கறிஞர்கள் வழக்கு நடத்தும்போது சில சமயங்களில் ஆண் நீதிபதிகள் ஆணாதிக்கத்துடன் பேசுவதும்,  ஒரு வேளை நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவற்றை பெண் வழக்கறிஞர்கள் பொறுத்துக்கொள்வதும் நடக்கிறது’’ என்று நீளும் அக்கடிதத்தின் நகல் சட்ட அமைச்சர் கபில் சிபலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

பெண் வழக்கறிஞர்களை மரியாதையாக நடத்தும் நீதிபதி கிருபாகரன் பொது இடத்தில் இன்னும் கூடுதலான சமூக அக்கறையுடன் பேசியிருக்க வேண்டும் என்கிறார் வழக்கறிஞர்  அருள் மொழி. ‘’சில நீதிபதிகள் பெண்கள் குறித்து மோசமான கமெண்ட்டுகளை சொல்வதும் ஆனால் அவர்களே பெண்கள் குறித்த வழக்கில் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்வதும் உண்டு. அதுபோலவே பெண்களுக்கு ஆதரவாக உள்ள சிலர் தீர்ப்பில் பாதகமாகச் சொல்வதும் உண்டு. நீதிபதி பொது இடத்தில் கருத்து தெரிவிக்கையில் பிரச்சனையின் வீரியத்தை தெரிந்துகொண்டு கருத்து தெரிவிப்பது நல்லது. பொதுச் சமூகத்தில் வெளிப்படும் ஒரு மேம்போக்கான கருத்தை நீதிபதி பிரதிபலித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான கருத்துக்களால், நீதிமன்றத்தில் பெண்களுக்காக நல்ல தீர்ப்புகளைச் சொல்லும்போது அவை எடுபடாமல் போகும் வாய்ப்பும் உள்ளது’’ என்று இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.

’’பெண்களுக்கான நீதிமன்றத்தை திறந்துவைத்துப் பேசும் நீதிபதி! அச்சமில்லாமல் பெண்கள் தங்கள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து புகாரளிக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, தவறான நேரத்தில் வெளியே போகாதே என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? இந்திய அரசியலமைப்புச் சட்டம் நம்மை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் எந்த நேரத்திலும் பயணம் செய்யும் உரிமையை வழங்கி இருக்கிறது. ஆனால் இதை மறுக்கும் வகையில் நீதிபதி பேசியிருக்கிறார். இது குற்றவாளிகளுக்கு துணை போகும் பேச்சு. பெண்கள் பொது இடத்துக்கு தைரியமாகச் செல்லும் வகையில் அந்த இடத்தை பாதுகாப்பாக ஆக்கித்தருவது சமூகத்தின் கடமை. ஆனால் ஓரிடத்துக்கு, இந்த நேரத்தில் போகாதே என்று கூறுவது அபத்தம். பெண்கள் செல்போன் வைத்துக்கொள்ளகூடாது. சூரிய அஸ்தமனத்துக்குப் பின் வெளியே வரக் கூடாது போன்ற கருத்துக்கள் எல்லாமே பெண்ணின் உரிமையான தகவல் தொடர்பை பாதிக்கின்றன.’’ என்று உ.வாசுகி இந்தியா டுடேயிடம் தெரிவித்தார்.

டில்லி, மும்பை சம்பவங்களில் ஊடகங்கள் கூட அப்பெண்கள் ஆண் நண்பருடன் வெளியில் சென்றதாகவே தெரிவிக்கின்றன. ‘நண்பர்’ என்று சொல்லாமல் ‘ஆண் நண்பர்’ என்று கூறுவதன் மூலம் பொதுமக்களின் உளவியலுக்குள் இந்தப் பெண்கள் அங்கே இன்னொரு ஆணுடன் சென்றது தவறு என்கிற கருத்தை மறைமுகமாக கொண்டு சேர்க்கின்றன. ஒரு தோழியோடு அப்பெண்கள் போயிருந்தால் ‘பெண் நண்பருடன்’ என்று எழுத மாட்டார்கள் அல்லவா? இப்படியான செய்திகள் வெளிவருவதும், நீதிபதி கூறியது போன்ற கருத்துக்களும் பொதுமக்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும். பிரச்சனைகளை உலகுக்குச் சொல்லும் ஊடகங்களும், நீதித்துறை ஜாம்பவான்களும் பெண்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் ஜாக்கிரதையாக சமூகப் பொறுப்புடன் தெரிவிக்கவில்லையெனில் கடுமையான கண்டனங்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

(நன்றி : இந்தியா டுடே)

Sunday, September 15, 2013

ஆடை கட்டுப்பாடு

தமிழகத்தின் கலை அறிவியல் கல்லூரிகளில் இனி மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு கொண்டு வரப்போவதாக உயர்கல்விக்கான கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இன்றைய மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜீன்ஸ் மற்றும் டி-சர்டுகளை அணியக்கூடாது என்கிற கட்டுப்பாட்டை மாணவர்கள் வரவேற்கவில்லை. இந்திய மாணவர் சங்கம்(எஸ்.எஃப்.ஐ) இந்த முடிவை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால் மாணவர் காங்கிரஸ், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ஆகிய மாணவர் அமைப்புகள் இதை வரவேற்றிருக்கின்றன. மாணவர் காங்கிரஸ் செயலாளர் சுனில் ராஜாவை இந்தியா டுடே தொடர்புகொண்டபோது ''இதை வரவேற்பதால் எங்களை குறுகிய மனப்பான்மை உடையவர்கள் என்கிறார்கள்.  பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருக்கத்தான் சீருடை கொண்டுவரப்பட்டது. அதுபோலத்தான் இதையும் பார்க்கவேண்டும். கிராமப்புறத்தில் இருந்து நகருக்கு வந்து படிப்பவர்கள், நகரில் அணியும் ஸ்லீவ்லெஸ், டி-சர்ட், ஜீன்ஸ் போன்றவற்றைப் பார்த்து தாழ்வு மனப்பான்மை கொள்ள் வாய்ப்பு உண்டு. நகரங்களிலிருந்து கிராமப் பகுதி கல்லூரிகளில் இடம் கிடைத்துச் செல்பவர்கள் இந்த உடைகளை அணிந்தால் அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பார்கள். அத்துடன் நம் கலாசாரத்தின்படி உடை அணிவதை ஏன் எதிர்க்கவேண்டும்?'' என்கிறார்.

ஜீன்ஸ் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் அணியும் உடை என்பதையே மறுக்கிறார் எஸ்.எஃப்.ஐ.யின் மாநிலத் தலைவர் ராஜ்மோகன். ''ஏழை மாணவர்களுக்கு ஜீன்ஸ்தான் வசதி. வாரம் ஒரு முறை துவைத்தால் போதும். ஆனால் பேண்ட் - சர்ட் போட்டால் தினமும் மாற்றவேண்டி இருக்கும். ஜீன்ஸ் அணியக்கூடாது என்று சொல்வதன் மூலம் அவர்களுக்கு சிரமம்தான் ஏற்படுகிறது. இந்தியாவில் வேறெந்த உயர்கல்வி நிறுவனத்திலோ, பல்கலைக்கழகத்திலோ இப்படி நடைமுறை கிடையாது. உடைக்கும் அறிவுக்கும் தொடர்பு இல்லை. இது பிற்போக்குத்தனமான நிலப்பிரபுத்துவத்தனத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம்.'' என்கிறார்.

எஸ்.எஃப்.ஐ. நிர்வாகிகள் கல்லூரி கல்வி இயக்ககத்துக்குச் சென்று சமப்ந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து உடைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். மாணவர்கள் இப்போது கண்ணியமாகத்தான் உடை உடுத்துகிறார்கள்; எங்கேயோ இருக்கும் விதிவிலக்குகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்தையும் கட்டுப்படுத்தக்கூடாது என்கிறது எஸ்.எஃப்.ஐ.

சென்ற ஆண்டு இதேபோல பெண் ஆசிரியர்களுக்கு மட்டும் உடைககட்டுப்பாடு கொண்டு வந்தது தமிழக அரசு. சேலை மட்டுமே அணிந்து வரவேண்டுமென்றும் சுடிதார் அணிந்து வரக்கூடாது என்றும் சுற்றறிக்கை எல்லா பள்ளிகளுக்கும் வந்தது. அதை மீறி சுடிதார் அணிந்து வந்தவர்களுக்கு மெமோ கொடுத்த சம்பவங்களும் நடந்தன. இதற்கான எதிர்ப்பு என்பது சிறிய அளவிலேயே இருந்தது. ஆனால் மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இந்த உடைக்கட்டுப்பாடு மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதைக் காண முடிகிறது. சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ''இது எங்கள் தனிமனித சுதந்திரத்தில் தலையிடும் செயல். இதை அனுமதிக்கமுடியாது'' என்கிறார் காட்டமாக.

எது நாகரிகம், எது கலாசாரம் எது கண்ணியம் என்கிற கேள்விகள் எல்லாமே வரையறுத்துக் கூற முடியாதவை. நீ இதைத்தான் உண்ண வேண்டும் என்று ஒருவருடைய உணவு விஷயத்தில் எப்படி கட்டுப்படுத்த முடியதோ அதுபோலவேதான் உடை விஷயத்திலும் ஒருவரை கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணரவேண்டும். தனக்கு எந்த உடை வசதியோ அந்த உடையை அணிவதில் வேறெவரும் தலையிடுவதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. ''உடையினால்தான் தவறுகள் நிகழ்கின்றன என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தவறு செய்பவர்கள் எந்த உடையிலும் தவறு செய்வார்கள். அதிகாரிகளின் அறிவிப்புடன் இதை நிறுத்திக்கொள்ளவேண்டும். மறுபரிசீலனை செய்து உடைக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அரசை கேட்கிறோம். அப்படியும் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றாலும் மிகப்பெரிய அளவில் மாநிலம் தழுவிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம்'' என்கிறார் ராஜ்மோகன்.

இந்தித் திணிப்பு, கல்விக்கட்டண உயர்வு, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு என்று சமூக அக்கறையுடன் சமூகம் சார்ந்த விஷயங்களுக்காக போராடிவந்த மாணவர்களை இன்றைக்கு தங்கள் தனிமனித உரிமைகளுக்காக போராடவேண்டிய நிலைக்கு அரசு தள்ளியிருக்கிறது.

(நன்றி : இந்தியா டுடே)