நம் பக்கத்து மாநிலமான கேரளத்தில், பள்ளி மாணவர்களுக்கான வினாத்தாளில் 'கேரளத்தின் நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படும் பாலக்காட்டின் வரைபடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாவட்டத்தில் உள்ள ஓடைகள், வயல்கள், நதிகள் என்று அனைத்து விவரங்களும் அந்த வரைபடத்தில் இருக்கின்றன. தேர்வில், 'கேரளத்தின் நெற்களஞ்சியம் என்று பாலக்காடு அழைக்கப்படுவதற்கான மூன்று காரணங்களை மேற்கண்ட வரைபடத்தில் இருந்து கண்டு அறிந்து எழுதவும்!’ என்பது கேள்வி. இந்தக் கேள்விக்கு விடையைப் பாடப் புத்தகத்தில் இருந்து மாணவர்களால் எழுத முடியாது. சொந்தமாக யோசித்துதான் எழுத வேண்டும்.
இப்படி ஒரு வேறுபட்ட கல்விமுறையை நோக்கி நம் பக்கத்து மாநிலமான கேரளம் நகர்ந்துகொண்டு இருக்க, தமிழகமோ இன்னமும் முதற்படியில்கூட ஏறாமல் நிற்கிறது. சமச்சீர் கல்விக்கான முதல் படியாக அனைத்து மாணவர்களுக்குமான பொதுப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடந்த முயற்சிக்கு, புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் அ.தி.மு.க. அரசு, முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது. சமச்சீர் கல்விக்கான சட்டத் திருத்த மசோதாவும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்ட நிலையில், சமச்சீர் கல்வி கூட்டு நடவடிக்கைக் குழு ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தி, அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. தீர்மானத்தில் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, எஸ்.எஸ்.ராஜகோபாலன், அ.மார்க்ஸ், பேராசிரியர் கல்யாணி, பேராசிரியர் திருமாவளவன், பா.செயப்பிரகாசம், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் கையெழுத்திட்டு உள்ளனர். ஆனால், அரசு இதுபற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. தனது முடிவில் உறுதியாக நிற்கிறது!
அரசு முடக்கியுள்ள பொதுப் பாடத்திட்டப் பாட நூல்கள் நான்கு கட்டங்களைத் தாண்டி வெளியிடப்பட்டன என்பதை நினைவு படுத்திக்கொள்வது நல்லது.
1.தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி இயக்ககத்தில் நூற்றுக்கணக்கான வல்லுநர்கள் ஊதியம், பிரதிபலன்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இரவு பகலாக உழைத்து உருவாக்கிய பாடத் திட்டம் இது. ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், ஓரியன்டல், அரசுப் பள்ளிகள் என நான்கு வகையான பாடத்திட்டங்களையும் ஆய்வுசெய்து, அவற்றை மத்திய பாடத் திட்டத்தோடு ஒப்பிட்டு, 'தேசியக் கல்வித் திட்டம் 2005’-ன் வழிகாட்டுதலின்படி, ஒரு வரைவுப் பாடத்திட்டத்தை உருவாக்கி வலை தளத்தில் வெளியிட்டனர்.
2. கல்வியாளர்களும், கல்விசார் அமைப்புகளும் இணைந்து பாடத்திட்டத்தின் மீதான, விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். அவர்களின் ஆலோசனைகளையும் கணக்கில்கொண்டே பொதுப் பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது.
3. பள்ளிக் கல்வித் துறையின் உயர் அதிகாரிகளையும் கல்வியாளர்களையும்
4 வகை பள்ளிகளின் ஆசிரியர் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாகக்கொண்ட பொதுக்கல்வி வாரியத்தால், பாடத்திட்டம் மீண்டும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டே ஏற்பு அளிக்கப்பட்டது.
4. இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களையும் கல்வியாளர்களையும் கொண்ட குழுவால் பாடநூல்கள் எழுதப்பட்டு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப் பட்டன.
இந்நிலையில், தமிழ்நாட்டின் கல்வித் துறையை மீண்டும் பல ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியாகவே பாட நூல்கள் முடக்கத்தைப் பார்க்கிறார்கள் கல்வியாளர்கள். இத்தனை வல்லுநர்கள் சேர்ந்து உருவாக்கிய பாடநூல்களைத் திரும்பப் பெறும் முடிவை எடுப்பதற்கு முன் கல்வியாளர்கள் யாரையும் அரசு கலந்தாலோசிக்கவில்லை என்பது முக்கியமான குற்றச்சாட்டு.
பாடநூல்கள் தரமானதாக இல்லை என்கிறது அரசு. தரத்தை நிர்ணயம் செய்வது யார் என்பதே இப்போதைய கேள்வி. கல்வியாளர்களும் வல்லுநர்களும்கொண்ட குழுவா? அல்லது அமைச்சரவையா? தரத்தை யார் நிர்ணயிப்பது?
தடைக்குக் காரணம் எதுவாக இருந்தாலும், இனி இந்த ஆண்டு இந்தப் பாடத்திட்டம் கிடையாது என்றாகிவிட்ட நிலையில், இனி என்ன செய்வது? இந்த இடைவெளியைப் பயன்படுத்தி கல்விமுறையிலேயே மாற்றம் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால், குறைந்தபட்சம் இந்த இடை வெளியைப் பயன்படுத்திக்கொண்ட ஆறுதலாவது மக்களுக்குக் கிடைக்கும்.
அடிப்படை மொழி, கணிதம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வது குழந்தைகளுக்குப் பெரிய சவாலாக உள்ளதாகக் கூறுகிறது 'அஸர் 2010’ அறிக்கை (Annual Status of Education Report) கூறுகிறது. இந்திய அளவில் கேரளத்துக்கு அடுத்தபடியாகக் கல்வியில் இரண்டாம் இடம் பெற்றிருக்கிறது தமிழ்நாடு என்று நாம் பெருமைப்பட்டுக்கொண்டு இருக்க, அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் 69% பேர் இரண்டாம் வகுப்புப் பாடத்தை வாசிக்கவே சிரமப்படுகின்றனர் என்கிறது இந்த அறிக்கை!
இந்த நிலைக்கு காரணம் வகுப்பறை, பிள்ளைகளின் தண்டனைக் கூடமாக இருப்பதே! இதனை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அழுது அடம் பிடிப்பதைத் தானே பார்க்க முடிகிறது? குழந்தைகளுக்கும் உரிமைகள் உண்டு என்பதை நாம் மறந்து விடுகிறோம். பிரம்போடு வகுப்பறைக்கு வரும் ஆசிரியர்களே அதிகம் இருக்கின்றனர். நாமக்கல்-ராசிபுரம் பகுதிகளில் உள்ள பல பள்ளிகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் என்பதற்காகவே, மாணவர்களுக்கு மதிப்பெண் குறைந்துபோனால் கொடுக்கப்படும் தண்டனை கள் மனித உரிமை மீறலாக இருப்பதாகக் குற்றச்சாட்டு உண்டு. இத்தகைய தண்டனைகள் ஐ.நா. சபை வெளியிட்ட சித்ரவதைத் தடுப்புப் பிரகடனத்துக்கு எதிரானது. இந்தப் பள்ளிகளைக் கண்காணிக்க மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள்கொண்ட ஒரு குழு அமைக்க வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் குறித்து எந்நேரமும் இந்தக் குழுவிடம் புகார் தெரிவிக் கலாம் என்கிற நிலை இருக்க வேண்டும். புகார்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
தேர்ச்சி விகிதத்தை வைத்து ஒரு பள்ளியின் தரத்தை நிர்ணயம் செய்யும் முறை மாற வேண்டும். ஏனெனில், மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே இங்கே வகுப்பறை வன்முறைகள் நடக்கின்றன. வகுப்பறை என்பது இங்கே அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறது. கேள்வி கேட்கும் குழந்தையை ஒழுங்கீன முத்திரை குத்தி ஒதுக்கும் போக்கு இருப்பதை மாற்றியாக வேண்டும். கல்வி கற்பது என்பது ஓர் இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டு இருக்கும் செயல்வழிக் கற்றல் முறை குறிப்பிட்ட அளவுக்கு இதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறதுஎன்றே சொல்ல வேண்டும். ஆசிரியர் - மாணவர் உறவுமுறை இறுக்கம் தளர்ந்து இருப்பதை ஓரளவுக்குக் காண முடிகிறது. ஆனால், உயர்நிலைப் பள்ளி அளவில் மீண்டும் பிரம்பு முறை கல்வியே ஆள்கிறது. விளையாட்டு முறையில் குழந்தைகள் கல்வி கற்பதுதான் அவர்களைச் சிறந்த அறிவாளிகளாக்கும் என்று அறிவியல் சொல்கிறது. மெக்காலே கல்வி முறையைப் பின்பற்றும் நம் பள்ளிகளோ அவர்களை ஒரு மனப்பாடம் செய்யும் எந்திர மாகவே மாற்றிவைத்திருக்கிறது. புரிந்து கொண்டு எழுதும் மாணவனுக்குக் கிடைப் பதைவிட, மனப்பாடம் செய்து புத்தகத்தில் உள்ளதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைக்கும் மாணவர்களுக்குத்தான் அதிக மதிப்பெண் கிடைக்கிறது. வினாத்தாள்கள் முதலில் கேரளத்தை முன் மாதிரியாகக் கொண்டு மாற்றப்பட வேண்டும். வழக்கமான ஒரு மதிப்பெண் கேள்வி, சுருக்கி எழுதுக, விரித்து எழுதுக என்று புளித்துப்போன வினாத்தாள் முறையை நீக்கிவிட்டு, கல்வி யாளர்களின் ஆலோசனைகளையும் உலக அளவில் உள்ள முன் மாதிரிகளையும் அடிப் படையாகக் கொண்டு ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட வேண்டும். இதற்கென்றும் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். இதைச் செய்தால் நம் பிள்ளைகளை இந்த மனப்பாடக் கல்வி முறையில் இருந்து காப்பாற்றலாம். ஆனால், அரசியலுக்கு அப்பாற்பட்ட குழுவாக இந்தக் குழுக்கள் இருத்தல் அவசியம்.
பொருளாதார அடிப்படையில் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதற்காகவே காமராஜர் சீருடைத் திட்டத்தை மாணவர்களுக்குக் கொண்டுவந்தார். இது சீருடையில் மட்டும்அல்லாது, பாடத்திட்டம், பள்ளியின் கட்ட மைப்பு வசதிகள் போன்ற அனைத்து விஷயங் களிலும் செயல்படுத்தப்படும் நிலைமை வந்தால் தான் சமச்சீர் கல்வி முழுமை பெறும்.. தமிழகம் என்றைக்கு இந்த நிலையை எட்டும்?
20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதே உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஆசிரியர்-மாணவர் விகிதம். இங்கேயோ 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பது அனுமதிக்கப்பட்ட விகிதம். ஆனால், 70 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதே உண்மை நிலை. ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள் இன்னும் இருக்கின்றன. தங்கள் பிள்ளைகள் இந்த நொடி பள்ளியில் எந்த மூலையில் இருக்கிறார்கள் என்று பெற்றோர் கண்டறிந்து கொள்ளும் வகையில் மிக நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் பள்ளிகள் இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் உண்டு. இந்தச் சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைய அரசு என்ன செய்யப்போகிறது?
இப்படி விடை தெரியாத பல கேள்விகள் இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளுக்குக் கல்வியாளர்களுக்கும் கல்வியில் அக்கறை கொண்டோருக்கும் கடும் பணி காத்திருக்கிறது!
நன்றி: - ஆனந்த விகடன்